கட்டுரைகள் 

முஹம்மது அல்கஸ்ஸாலி: ஓர் அறிமுகம்

Loading

[சீர்மை வெளியீடாக வரவிருக்கும் ‘இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்’ என்ற நூலுக்காக, நான் தொகுத்த நூலாசிரியர் அறிமுகத்தை கீழே தந்துள்ளேன். ‘அறப் நியூஸ்’ செய்திப் பத்திரிகையில் ஆதில் ஸலாஹி எழுதிய ஒரு கட்டுரைத் தொடரை பெருமளவு அடிப்படையாகக் கொண்டது இது.]

முஹம்மது அல்கஸ்ஸாலி அல்-சக்கா 1917-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் நாள் எகிப்தின் ‘நக்ல் அல்-இனப்’ எனுமொரு சிறு கிராமத்தில் பிறந்தார். புகழ்பெற்ற அல்-அஸ்ஹர் பல்கலைக் கழக அறிஞர்களான முஹம்மது அப்துஹூ, மஹ்மூத் ஷல்தூத் ஆகியோரும் கூட இக்கிராமத்தில் பிறந்தவர்களே. இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் அறிஞரெனப் போற்றப்படும் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபூ ஹாமித் முஹம்மது அல்கஸ்ஸாலி (எ) இமாம் கஸ்ஸாலி மீது கொண்ட பெருமதிப்பின் காரணமாகவே முஹம்மது அல்கஸ்ஸாலியின் தந்தை அவருக்கு இப்பெயரை சூட்டினார். பலரும் நினைப்பது போல், ‘அல்கஸ்ஸாலி’ என்பது அவரின் குடும்பப் பெயரல்ல.

முஹம்மது அல்கஸ்ஸாலி பிற்காலத்தில் இஸ்லாமியக் கல்வியில் அசாதாரண தேர்ச்சிபெற்று மிளிர்வதற்கு அவரது தந்தையின் அர்ப்பணிப்போடு கூடிய பங்களிப்பு மிக முக்கிய காரணியாகும். அவர் தனது மகனை அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையின் கீழான அலெக்ஸாந்திரியா மார்க்கக் கல்வி நிறுவனத்தில் சேர்த்தார். அங்கு இடைநிலைக் கல்வியை பூர்த்தி செய்த அல்கஸ்ஸாலி, வெகுஇளம் பிராயத்திலேயே திருக்குர்ஆனை மனனம்செய்து முடித்துவிட்டு அறபி மொழி, இலக்கிய பாடங்களை கற்பதில் ஈடுபட்டார். இடைநிலைக் கல்வியை நிறைவுசெய்த பிறகு, அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் உசூல் அத்-தீன் (இஸ்லாமிய மார்க்க அடிப்படைகள்) துறையில் இணைந்தார். திருக்குர்ஆன், ஹதீஸ், இறையியல் போன்ற பாடங்களில் சிறப்பறிவை ஈட்டுவதற்கான ஒரு துறையாகும் இது.

முஹம்மது அல்கஸ்ஸாலியின் ஆசிரியர்கள் சிலரின் பெயர்கள் பின்வருமாறு: இப்ராஹீம் கர்பாவி, அப்துல் அஸீஸ் பிலால், அமீன் ஃகூலி, அப்துல் வஹ்ஹாப் அல்-அஸ்ஸாம், முஹம்மது பஹீ, முஹம்மது மூசா, முஹம்மது அவ்தான், முஹம்மது ரய்யான், அப்துல்லாஹ் தர்ராஸ், முஹம்மது அபூ ஸஹ்றா, முஹம்மது கம்ராவி, அப்துல் வஹ்ஹாப் ஃகல்லாஃப், முஹம்மது ஹுசைன் மற்றும் மஹ்மூது ஷல்தூத்.

அலெக்சாந்திரியா கல்வி நிறுவனத்தில் மாணவராக இருந்த காலத்திலேயே முஹம்மது அல்கஸ்ஸாலி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் (அல்-இஃக்வான் அல்-முஸ்லிமூன்) நிறுவனரும் இருபதாம் நூற்றாண்டு இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் முக்கிய ஆளுமையுமான ஹசன் அல்-பன்னாவை சந்தித்தார். சந்தித்த நாள்முதலே அமைப்பில் உறுப்பினராகி விட்டார். பின்னர் நிறுவனக் குழு உறுப்பினராகவும் உயர்வுபெற்றார். 1950-களின் துவக்கம்வரை அமைப்பின் முதன்மைப் பிரச்சாரகர்களில் ஒருவராக விளங்கினார். தொடர்ந்து அமைப்பின் செய்தித்தாள்களில் எழுதியும், நிகழ்ச்சிகளில் உரையாற்றியும் வந்தார். அமைப்பின் எழுத்தாளர் நாயகமாக விளங்கினார்.

ஃபலஸ்தீனை ஆக்கிரமிக்க முயன்ற ஸியோனிஸ்டுகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தனது இளம் உறுப்பினர்கள் பலரை அனுப்பிவைத்தது. இதனால் எகிப்து அரசு அவ்வமைப்பின் உறுப்பினர்களைக் கூட்டம் கூட்டமாக கைது செய்து சிறையிலடைத்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஷெய்ஃக் அல்கஸ்ஸாலியும் (1951) அடக்கம். சிறைக்குள்ளும் அவர் கல்விக் குழாம்களை ஒழுங்குசெய்து நடத்தினார். தொழுகைகளுக்கு தலைமையேற்றார். மனிதத் தன்மையற்ற சிறைச் சூழ்நிலைகளை எதிர்த்து சிறைவாசிகளை ஒன்றுதிரட்டிப் போராடி சில அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டார்.

எகிப்தில் இராணுவ ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில், சகோதரத்துவ அமைப்பின் பல்வேறு தலைவர்கள் மத்தியில் முரண்பாடுகளை விதைப்பதன் மூலம் அதனைப் பிளவுபடுத்த ஜமால் அப்துல் நாசர் கடுமையாக முயன்றார். அமைப்பின் நாடாளுமன்றப் பிரிவு உறுப்பினர்கள் சிலரை தன்வசப்படுத்திக் கொண்டு, ஹசன் அல்-ஹுதைபியின் சட்டபூர்வ தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும்படி தூண்டினார். ஹசன் அல்-பன்னா அரசாங்க முகவர்களால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமைப் பதவியை ஏற்றவரே ஹசன் அல்-ஹுதைபி என்பதை நாம் இங்கு நினைவிலிருத்த வேண்டும்.

புதிய தலைவருடன் கருத்து முரண்பாடு கொண்ட சில முக்கிய பிரமுகர்களின் ஆதரவை சம்பாதிப்பதில் கிளர்ச்சியாளர்கள் வெற்றி பெற்றனர். இது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. இத்தகு பிரிவினைகள் அமைப்பின் இருப்பை அச்சுறுத்துவதை உணர்ந்த அல்-ஹுதைபி, ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைப்பிலிருந்து சிலரை வெளியேற்றினார். அதில் அல்கஸ்ஸாலியும் அடக்கம். இதைத் தொடர்ந்து தலைமைக்கு எதிராக கடுமையான விமர்சனத் தாக்குதல்களில் அல்கஸ்ஸாலி ஈடுபட்டு வந்தார். இறுதியில், அல்-ஹுதைபியுடன் தனது முரண்பாடுகளை கைவிட்டு இணக்கமானார். இஃக்வான் இயக்கம் பற்றி பொதுமக்களை எச்சரிக்க வேண்டும்; அதன் நெறிபிறழ்வுகள் பற்றி வானொலியில் உரையாற்ற வேண்டும் என்பது போன்ற அரசதிகாரிகளின் ஆணைகளுக்கு பணிய மறுத்ததால், ஓராண்டுக்கும் குறைவானதொரு காலம் இரண்டாம் முறையாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் இஸ்லாத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாக சமூக நீதியை கருதினார். சமூக அநீதியின் சகல அம்சங்கள் குறித்தும், அனைவருக்கும் நீதியை உத்தரவாதம் செய்வதில் திடவுறுதி கொண்ட இஸ்லாமிய விழுமியங்களின் பக்கம் திரும்புவதை வலியுறுத்தியும் மிக விரிவாக எழுதினார். புறக்கணிப்பு, சுரண்டல், ஒடுக்குமுறை என்பவற்றுக்கு ஆட்பட்ட ஒரு கிராமப்புறச் சூழலிலேயே தனது குழந்தைப் பருவத்தை செலவிட்டிருந்தார். நிலப்பிரபுக்களின் கரங்களால் எளிய விவசாயிகளுக்கு அநீதிகள் இழைக்கப்படுவது அங்கு அன்றாடக் காட்சிகள். இது போன்றவொரு சமூக-பொருளாதார சூழலைப் பார்த்து வளர்ந்ததே, ‘அவலம் நிறைந்த சூழ்நிலையில் சன்மார்க்கம் தழைப்பது சாத்தியமில்லை’ எனும் தீர்மானத்திற்கு அவர் பின்னாட்களில் வந்தடையக் காரணமாக அமைந்தது.

அவர் அழைப்புப் பணியில் ஈடுபடவாரம்பித்த காலத்தில் எகிப்து மன்னராட்சியின் கீழ் இருந்தது. முதலாளித்துவ அமைப்புமுறை வெகுமக்களை தீவிர வறுமைக்குள் தள்ளியிருப்பதை கண்ணுற்றார். பிரிட்டிஷ் காலனியவாதிகளால் இறக்குமதி செய்யப்பட்ட அந்த அமைப்புமுறையை அந்நிய வியாபாரிகள் பாதுகாத்து பேணிவந்தனர். மிகப் பெரும்பான்மை விவசாய நிலங்கள் சொற்பமான சிலரின் கைகளில் மாத்திரம் செறிந்து கிடந்ததால், எகிப்தின் பெரும்பான்மை கிராமப்புற மக்கள் தெளிவான அநீதியில் உழல்வதும் புலப்பட்டது. இச்சூழலில் தான் அவர் இஸ்லாமும் பொருளாதார நிலைமைகளும் (அல்-இஸ்லாம் வல் அவ்தா அல்-இக்திசாதிய்யா) என்ற தலைப்பில் தனது முதலாவது நூலை எழுதினார். பல்வேறுபட்ட பொருளாதார கோட்பாடுகளையும் அமைப்பு முறைகளையும் மதிப்பீடு செய்யும் ஒரு நூலல்ல அது. மாறாக அது இஸ்லாம் கோடிட்டு காட்டியுள்ள பொதுவான பொருளாதார கோட்பாடுகள் பற்றியும், அவை எவ்வாறு நவீன உலகுடனும் சகலருக்கும் சமூக நீதியை உத்தரவாதம் செய்வதுடனும் தொடர்பு கொண்டுள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யுமொரு ஆக்கமாகும். பொருளாதார யதார்த்தங்கள் பற்றியும், அவை எவ்வாறு மக்களின் வாழ்வைப் பாதிக்கின்றன என்பது பற்றியும் இஸ்லாமிய அணுகுமுறையை முன்வைத்த காரணத்தால் இந்நூல் பிரசுரமான சமயத்தில் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றது.

அவரின் இரண்டாவது நூலும் இவ்விவகாரத்தை ஒட்டியே அமைந்திருந்தது. எனினும் இம்முறை அது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சோஷலிச அமைப்புகள் பற்றி கலந்துரையாடியது. இஸ்லாம் மற்றெல்லா பொருளாதார தத்துவங்களில் இருந்து -குறிப்பாக கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவத்திலிருந்து- மிகத் தெளிவாக வேறுபடுவதை மூன்றாவது நூல் நிரூபிக்க முயன்றது. அல்கஸ்ஸாலி விளைவுவளம் மிக்க எழுத்தாளர். இந்த காலகட்டத்தில் அவர் ஏராளமான நூல்களை எழுதினார். அதிலொரு நூலை அரசியல் சர்வாதிகாரம் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாட்டை விளக்குவதற்கு ஒதுக்கினார். சன்மார்க்கமும் வாழ்வும் பற்றி சில சிந்தனைகள் (தம்மூலாத் ஃபில் தீன் வல் ஹயாத்) என்றொரு நூலையும், அதை தொடர்ந்து முஸ்லிமின் நம்பிக்கைக் கோட்பாடுகள் (அகீததுல் முஸ்லிம்) என்றொரு நூலையும், பிறகு முஸ்லிமின் ஒழுக்க மாண்புகள் (ஃகுலூக்குல் முஸ்லிம்) என்றொரு நூலையும் இயற்றினார்.

அல்கஸ்ஸாலி ஒரு கட்டத்தில் தனது நண்பர்களில் ஒருவரான ஃகாலித் முஹம்மது ஃகாலிதுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுக்கவேண்டி வந்தது. ஃகாலிதும் அல்-அஸ்ஹர் பட்டதாரியே. அவர் மாபெரும் பேச்சாளர். சக்திவாய்ந்த நடையில் எழுதுவதில் வல்லவர். அவர் குறிப்பிட்டதொரு காலம் (இஸ்லாத்தைக் குறித்த) சந்தேகத்தில் படிப்படியாக மூழ்கலானார். நமது துவக்கப் புள்ளி (மின் ஹுனா நபதாஉ) என்றொரு நூலை எழுதுவதில் சென்று அது முடிந்தது. அதிலவர் ‘தீவிர மதச்சார்பின்மைவாத’ நிலைப்பாட்டினை ஆதரித்து எழுதினார்.

அதில் அவர் இஸ்லாத்தின் ஆதார விழுமியங்கள் பலவற்றுக்கும் எதிராகச் சென்றார். தனது பழைய நண்பருக்கு மறுமொழி அளித்தாக வேண்டுமென்பதை ஷெய்ஃக் அல்கஸ்ஸாலி உணர்ந்தார். ஏராளமான கட்டுரைகளை பிரசுரித்து ஃகாலிதின் நெறிபிறழ்வையும் இஸ்லாத்தைக் குறித்த அவரின் பிழையான புரிதல்களையும் திரைகிழித்தார். இதில் முக்கியமாக புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்னவென்றால், சக்திவாய்ந்த எழுத்துப் பாணிகளை கொண்ட, தமது சுயசார்பையும் கருத்துச் சுதந்திரத்தையும் பெரிதும் மதித்த நேர்த்தியான இரண்டு எழுத்தாளர்களுக்கு நடுவே நடந்த மோதலாக இது இருந்தது. அதைத் தொடர்ந்து ஷெய்ஃக் அல்கஸ்ஸாலியின் கட்டுரைகள் அறிவை எங்கிருந்து பெறுவது (மின் ஹுனா நஅலம்) என்ற தலைப்பில் நூலாகப் பிரசுரம் செய்யப்பட்டன. ஃகாலிதுக்கு அல்கஸ்ஸாலி வழங்கிய மறுப்புரை, தனிநபர் தாக்குதலை விட்டும் இகழ்ச்சியை விட்டும் அகன்று இருந்தமையே அதன் தனித்துவப் பண்பாகும். தனது அறிவுத்துறை வாழ்வு நெடுகிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஷெய்ஃக் அல்கஸ்ஸாலி தனிநபர் தாக்குதலுக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் எப்போதும் சம்பந்தப்பட்ட விவகாரம் பற்றி எழுதுவாரேயன்றி, ஒருபோதும் தனிநபரை குறிவைத்து எழுதியதில்லை. மேலும் கூறுவதாயின், ஒரு கட்டத்தில் ஃகாலிதுக்கு வழங்கப்பட்ட அல்-அஸ்ஹர் பட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்று சிலர் வாதிட்ட போதும், அல்கஸ்ஸாலி அதனை ஆட்சேபித்து எழுதினார்.

எகிப்தில் மன்னராட்சி கவிழ்க்கப்பட்ட போது, உண்மைச் சீர்திருத்தங்களை கொண்டுவரும் நோக்கிலேயே சுதந்திர அதிகாரிகள்’ புரட்சியை நிகழ்த்தியுள்ளதாக அல்கஸ்ஸாலி நம்பினார். நாசர் மீது அவர் நன்னம்பிக்கை கொண்டிருந்தார். அவர் நல்லவரென்றும், மக்களுக்கு சேவைசெய்ய விரும்புபவரென்றும் நினைத்தார். எகிப்து மக்களின் வாழ்வை இஸ்லாமே வடிவமைக்க வேண்டுமென தாம் உண்மையிலேயே நம்புவது போன்றதொரு மனப்பதிவை உருவாக்குவதில் நாசர் அப்போது முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். ஆனால் உண்மையில் அவர் சமயவாதிகள் சிலரை தன்பக்கம் வளைத்துப் போட்டுக் கொள்வதன் மூலம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு பலத்தவோர் அடியினைத் தருவதற்கே விரும்பினார். நாசரை நம்பி ஏமாந்த பலருள் அல்கஸ்ஸாலியும் ஒருவர். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பிளவுபடுத்தும் தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக அல்கஸ்ஸாலியை இவ்வாறு நம்பும்படி செய்வதற்கு நாசரே விரும்பியிருக்க வாய்ப்புள்ளது.

இஸ்லாத்திற்கோ இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கோ நாசர் நண்பரல்ல என்பதை விரைவிலேயே அவர் விளங்கிக் கொண்டார். உண்மையில் நாசர் இஸ்லாத்தை சுரண்டவும், தனது குறிக்கோள்களுக்கு எப்போது நலன்பயக்கும் என்று நினைத்தாரோ அப்போது தனது சுயநலத்துக்காக அதனைப் பயன்படுத்திக் கொள்ளவுமே முயன்று கொண்டிருந்தார். எனவே, தனது நிலைப்பாடு இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக இருக்கவேண்டும் என்பதை அல்கஸ்ஸாலி உணர்ந்தார். எகிப்தின் சிறைகளில் இஃக்வான் கைதிகள் அனுபவித்த சித்ரவதைகளையும் படுகொலைகளையும் கேள்விப்பட்டு அவர் தாளாத மனவேதனையுற்றார். தனது இந்த நிலைப்பாட்டை நூல்களில் வெளிப்படுத்தவும் அவர் தயங்கவில்லை. அறபு தேசியவாதத்தின் உண்மை இயல்பு (ஹகீகத் அல்-கவ்மிய்யா அல்-அரபிய்யா) என்ற நூல் அதில் பிரதானமானது.

இந்தோனேசிய அதிபர் சுகர்னோவுக்கு கௌரவப் பட்டம் வழங்க அல்-அஸ்ஹரைப் பயன்படுத்திக் கொண்டபோதும் அல்கஸ்ஸாலி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் நாசரும் கூட்டாளி கமாலுத்தீன் ஹுசைனும் தமது புரட்சியை ‘இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சேவை புரியுமொரு கருவியாக ஆக்குவோம்’ என உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியில் அல்கஸ்ஸாலியும் பங்கெடுத்துக் கொண்டார். ஆயினும் பின்னாட்களில் நாசர் -முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்கும் இடையிலான பிரச்சினைகள் அனைத்திலும்- இஸ்லாத்தின் நலன்களுக்கு எதிராகவே நின்றார் என்பதை அல்கஸ்ஸாலி சுட்டிக்காட்ட தவறவில்லை.

1962-ஆம் ஆண்டு எகிப்திய அரசாங்கத்தினதும் சமூகத்தினதும் எதிர்கால திசைநெறி பற்றி கலந்தாய்வு செய்வதற்காக நாசரால் நியமிக்கப்பட்டோருள் ஷெய்ஃக் அல்கஸ்ஸாலியும் ஃகாலித் முஹம்மது ஃகாலிதும் அடங்குவர். பழைய நண்பர்கள் இருவரும் இப்போதும் எதிரெதிர் நிலைப்பாடுகளையே கொண்டிருந்தனர். என்றாலும், இரு வருமே நாசரின் சர்வாதிகாரத்தை திட்டவட்டமாக எதிர்த்தனர். ஃகாலித் தாராளவாத போக்குக்காக வாதிட்டார். அதே சமயம் அல்கஸ்ஸாலியோ, எகிப்து தனது தெளிவான உண்மை சுயசார்பினை வெளிப்படுத்த வேண்டுமென்றும்; சட்டமியற்றுதலில் சுயசார்பு உள்ளபோது மட்டுமே அது நடைமுறைச் சாத்தியமென்றும்; தனது மரபுகளில் எகிப்து தனித்தன்மை கொண்டதாக விளங்க வேண்டுமென்றும்; ஆண்களினதும் பெண்களினதும் நாகரிகம், உடை போன்றவற்றிலும் கூட அது பிரதிபலிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

மேற்கத்திய சமூகத்தின் ஒரு திரிந்த வடிவமாக இருந்து கொண்டு, எகிப்து உண்மையில் சுயசார்பு கொண்டதாக தொடருவதென்பது முடியாதவொரு காரியமென அல்கஸ்ஸாலி வாதிட்டார். அவருக்கும் நாசருக்கும் இடையே நேரடி மோதல் தோன்ற இது காரணமாயிற்று. நாசர் அப்போது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்க விரும்புபவர் போன்று தன்னைக் காட்டிக்கொள்ள முனைந்திருந்தார். அதையும் மீறி அரசாங்க ஆதரவாளர்களும் கம்யூனிஸ்டுகளும் அல்கஸ்ஸாலிக்கு எதிராக தீவிரமானதொரு தாக்குதலை தொடுத்தனர்.

கம்யூனிச சார்பு கொண்ட கேலிச்சித்திர ஓவியர் சலாஹ் காஹின், அல்-அஹ்ரம் என்ற முன்னணிச் செய்தித்தாளில் அல்கஸ்ஸாலியை நையாண்டி செய்து இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக தினமும் கேலிச்சித்திரங்கள் வெளியிட்டு வந்தார். எகிப்தியர்கள் மத்தியில் இது மாபெருமளவில் கோபத்தை மூட்டியது. 1962 ஜூன் 1 அன்று ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு அல்-அஸ்ஹரிலிருந்து மாபெரும் பேரணியொன்று அல்-அஹ்ரம் தலைமை அலுவலகத்தை நோக்கி கிளம்பியது. பேரணியினர் ஷெய்ஃக் அல்கஸ்ஸாலியை தங்களது தோள்களின் மீதமர்த்தி கொண்டு செல்ல விரும்பினர். எனி னும் அவர் அதனை மறுத்துவிட்டார். நிலைமை மென்மேலும் மோசமடைவதைக் கண்ட பதிப்பாளர்கள், தமதிந்த இழிவான தாக்குதலை நிறுத்திக் கொண்டனர்.

தன்னுடைய தவறை உணர்வதற்கு ஃகாலிதுக்கு பல ஆண்டுகள் பிடித்தன. இறைவனின் கிருபையால், பின்னாட்களில் அவர் தனது நிலைப்பாட்டை திருத்திக் கொண்டு, இஸ்லாத்துடன் பொருந்தாத கருத்துக்கள் அனைத்தையும் கைவிட்டு விட்டார்.

இஸ்லாத்தின் மீது ஷெய்ஃக் அல்கஸ்ஸாலி மகத்தான பற்றுணர்வு கொண்டிருந்தார். அவரது சகல எழுத்துக்களிலும், அவரின் சக்தி வாய்ந்த நடையிலும் இது பிரதிபலித்தது. அவரின் வலுவான வாதத் திறமையும் புலமைத்துவ அணுகுமுறையும் அவரின் எழுத்து நடையை செறிவூட்டி இருந்தன. அவரின் நூல்கள் அனைத்தையும் குறிப்பிடுவதோ, அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கக் குறிப்புகள் தருவதோ இங்கு சாத்தியமில்லை. தனது நீண்ட பணிக் காலத்தில் அவர் ஐம்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். எனினும் நாம் இங்கு அவரின் எழுத்துக்களிலிருந்து இரு முக்கிய கருப்பொருள்களை மட்டும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

அல்கஸ்ஸாலியின் ஆரம்ப நூல்களில் ஒன்று ஃபிக்ஹுஸ் சீறா என்பதாகும். நபிகள் பெருமானாரின் (ஸல்) வாழ்வு பற்றியவொரு ஆய்வு நூலிது. இதில் அல்கஸ்ஸாலியின் நுட்பமான இலக்கிய நடையழகையும், இஸ்லாமிய வாதத்தோடு பிணைந்த புலமைத்துவ அணுகுமுறையையும், வாழ்வு நெடுகிலும் நபிகளார் மீது பூண்டிருந்த மாளாக் காதலையும் காண முடியும். ஆகவே, நபிகள் பெருமானின் வாழ்வு பற்றிய அல்கஸ்ஸாலியின் அணுகுமுறையானது வழமையாக ஒரு வரலாற்றாசிரியர் செய்வது போல் சம்பவங்களைப் பதிவு செய்து, அவற்றை காலத்தாற் பின்னின்று பார்ப்பதாக அமையவில்லை. மாறாக, ஒவ்வொரு நிகழ்வையும் பகுப்பாய்வு செய்து, அதிலிருந்து பெறவேண்டிய படிப்பினை என்ன என்பது பற்றி ஒரு சுருக்கக் குறிப்பினை வழங்குவதாக அது அமைந்திருந்தது. இறை வழிகாட்டுதலால் நடந்தவை எவை? மனிதர் என்றளவில் நபிகளார் மேற்கொண்ட சுயதீர்மானங்கள் எவை? என்பவற்றை அவர் அடையாளம் காட்டுகிறார். இந்நூலில் அவர் நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் தூதுத்துவம் வரையிலும் மக்காவில் அவர்கள் அனுபவிக்க நேர்ந்த கஷ்ட காலங்களின் ஊடாகவும், பின்னர் மதீனாவில் ஈட்டப்பட்ட வெற்றிகளின் ஊடாகவும், இஸ்லாம் கோரும் நடத்தை தரங்களில் முஸ்லிம் சமுதாயம் சற்று சறுக்கியபோது அடைந்த பின்னடைவுகளின் ஊடாகவும் பயணம் செய்திருக்கிறார். நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் பலவும் நடந்தேறிய நகரமான மதீனாவில் வாழ்ந்த காலத்திலேயே அல்கஸ்ஸாலி இந்நூலை இயற்றினார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இத்துடன் தொடர்புடைய மற்றொரு அம்சம், சுன்னாஹ் மீது அவருக்கிருந்த பற்றுறுதி. சுன்னாஹ்வே குர்ஆனுக்கான விளக்கவுரை; குர்ஆனை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்பதை தீர்மானிப்பதும் அதுவே என்ற அடிப்படையின் மீதே அவரின் பற்றுறுதி அமைந்திருந்தது. அவர் சில ஹதீஸ்களை -அவை பழுதுடையவை என்பதாலோ, ஆதாரபூர்வ தன்மையில் குறைந்தவை என்பதாலோ- ஏற்க மறுத்தது தொடர்பாக அவரை சிலர் மிகக் கடுமையாக விமர்சிப்பதைக் காண்கிறோம். அவரின் நூல்களை வாசிக்கும் போது, சுன்னாஹ் மீது அவருக்கிருந்த உணர்வு பூர்வமான பற்றுதல் தெளிவாகப் புலப்படுகிறது. ஷெய்ஃக் யூசுஃப் அல்-கர்ளாவி பின்வரும் ஐந்து வாதங்களின் வழியாக, சுன்னாஹ்வின் விடயத்தில் முஹம்மது அல்கஸ்ஸாலியின் நிலைப்பாட்டினை சாரமாகத் தொகுத்து தருகிறார்:

1. ‘இஸ்லாத்தின் இரண்டாவது மூலாதாரம் சுன்னாஹ்’ என்ற விடயத்தில் அல்கஸ்ஸாலி ஒருபோதும் ஐயுற்றதில்லை. அவரின் நூல்களை வாசிக்கும் எவரும் இதனை ஒப்புக் கொள்ளமலிருக்க முடியாது.

2. ‘முஸ்லிம்கள் அனைவரையும் சுன்னாஹ் கட்டுப்படுத்தும்’ எனும் கோட்பாட்டை அவர் எப்போதும் வலுவாக ஆதரித்தார். சுன்னாஹ் மீது ஐயம் எழுப்புவோர் அனைவரையும் அவர் தனது நூல்களில் மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

3. மனிதப் பரிபூரணத்திற்கான உயர்தர முன்மாதிரியை நபிகளார் வழங்கிச் சென்றுள்ளார்கள் என்றும்; தமக்கு முந்தைய எல்லாத் தூதுச் செய்திகளையும், தமக்கு முந்தைய எல்லாத் தூதர்களின் மாண்புகளையும் இணைத்து ஓர் கூட்டு முழுமையை அவர்கள் தம்மில் கொண்டிருந்தார்கள் என்றும்; எனவே மனித குலம் பெறச் சாத்தியமானதிலேயே மிகச் சிறந்த முன்மாதிரியை நபிகளார் வழங்கிச் சென்றுள்ளார்கள் என்றும் அல்கஸ்ஸாலி நம்புகிறார்.

4. அவர் தனது நூல்கள், உரைகள், விரிவுரைகள் அனைத்திலும் ஏராளமான ஹதீஸ்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். அவரின் வாதங்கள் பெரும்பாலும் -வாய்மொழி அல்லது நடைமுறை- சுன்னாஹ்வின் மீதே அமைந்திருந்தன.

5. பிற அறிஞர்களால் ஆதார பூர்வமானவை என்று கருதப்பட்ட சில ஹதீஸ்களை அல்கஸ்ஸாலி ஏற்காமல் நிராகரித்திருக்கலாம். எனினும், அவை ஆதார பூர்வமானவையாக இருக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு அவர் தனது புலமைத்துவ ஆய்வின் அடியாகவே வந்தடைந்திருக்கிறார்.

அல்கஸ்ஸாலியின் எழுத்துக்களில் காணப்படும் மற்றுமொரு கருப்பொருள் திருக்குர்ஆனாகும். அவர் குர்ஆன் மீது கொண்டிருந்த காதலும், அதனை நிலையாக ஓதிவந்த பாங்கும் நாம் பின்பற்றுதற்கு உரியவொரு முன்மாதிரியாகும். அவர் தனது இளம் பிராயத்திலேயே குர்ஆனை மனனம் செய்திருந்தார். தினசரி ஓதுகை மூலம் தொடர்ந்து அதனை நினைவில் பேணி வந்தார். மனனமாக மேற்கோள் காட்டும் வேளைகளில் மிக அரிதாகவே பிழைகள் விட்டிருக்கிறார்.

வாசகர்களுக்கு கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு அவர் தனது ஆக்கங்களில் திருக்குர்ஆனையே வெகுவாகச் சார்ந்திருந்தார். அது மட்டுமின்றி, தனது பல நூல்களை பிரத்தேயகமாக குர்ஆனுக்கென்று ஒதுக்கியிருக்கிறார். குர்ஆனியச் சிந்தனைகள் (நஸராத் ஃபில் குர்ஆன்), அல்-குர்ஆனின் ஐம்பெரும் கருப்பொருள்கள் (அல்-மஹாவிர் அல்-ஃகம்சா லில் குர்ஆன் அல்-கரீம்) என்பவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவர் திருக்குர்ஆனின் ஐம்பெரும் கருப்பொருள்களென கீழ்வருவனவற்றை அடையாளம் காட்டுகிறார்:

1. இறைவனின் ஏகத்துவம்,

2. படைப்பாளனை அறிவதற்கான அத்தாட்சியாக அமையும் பிரபஞ்சம்,

3. கடந்தகால சமுதாயங்களின் வரலாறுகள்,

4. மீண்டும் எழுப்புதல், கேள்வி-கணக்கு, கூலி வழங்குதல்,

5. கல்வியூட்டல் மற்றும் சட்டவாக்கம்.

அல்கஸ்ஸாலி தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் அல்-தஃப்சீர் அல்-மவ்தூஈ லில் குர்ஆன் எனுமொரு நூலை இயற்றினார். அதனை அல்-குர்ஆனுக்கு கருப்பொருள் வழி விளக்கவுரை என்ற தலைப்பில் ‘இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இது பெறுமதி மிக்கவொரு நூலாகும். குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயமும் குறிப்பிட்டவோர் கருப்பொளை கையாளும் தனியொரு அலகு என்பதாக அதில் வாதிக்கிறார். திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியையும் ஆரம்பத்துடன் தொடர்புபடுத்திக் காட்டி, எவ்வாறு அவை ஒருபோதும் தமது கருப்பொருளிலிருந்து அகலுவதில்லை என்பதை நிறுவியுள்ளதுடன், அவற்றின் பகுதிகளை ஒன்றிணைக்கும் நூலிழைகள் எவையென்றும் அடையாளம் காட்டியுள்ளார். அவர் இந்நூலில் வெளிப்படுத்தியுள்ள அகப்பார்வை உண்மையிலேயே மகத்தானது.

குர்ஆனின் மிக நீண்ட அத்தியாயமான அல்-பகறாவும் கூட எவ்வாறு தனது கருப்பொருள் கட்டமைப்பில் மாறாத ஒத்திசைவை பெற்றுள்ளது என்பதை காலஞ்சென்ற ஷெய்ஃக் முஹம்மது அப்துல்லாஹ் தர்ராஸ் நிறுவியுள்ளதையும்; குர்ஆனை அணுகும் முறையைப் பொறுத்தவரை அன்னாரின் தாக்கம் தன்னில் பெருமளவு இருப்பதையும் அல்கஸ்ஸாலி நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். எனினும், குர்ஆனை அணுகும் முறையின் விடயத்தில் தனது முதலாவது ஆசான் ஹசன் அல்-பன்னா அவர்களே என்று பிறிதொரு இடத்தில் அல்கஸ்ஸாலி குறிப்பிடுகிறார்.

திருக்குர்ஆன் தொடர்பாக அல்கஸ்ஸாலியின் நுட்பமான அபிப்பிராயங்களுக்கு எடுத்துக்காட்டாக பின்வரும் மேற்கோளைக் குறிப்பிட முடியும். அதிலவர் இவ்வாறு எழுதியுள்ளார்:

“நான் குர்ஆனை வாசிக்கையில், இரு சூராக்களுக்கு இடையிலான அல்லது இரு வசனங்களுக்கு இடையிலான கால இடைவெளி உண்மையிலேயே மிக அதிகம் என்று சிலபோது எண்ணுவேன். இந்த இடைவெளி பற்றி வாசகருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டே அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதோ என்றெண்ணி வியப்புறுவேன். குர்ஆனின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் ‘வெற்றி’ என்ற அத்தியாயம் (சூரா நஸ்ரு), ‘நிராகரிப்பாளர்கள்’ எனும் அத்தியாயத்தை (சூரா காஃபிரூன்) தொட்டடுத்து வருகிறது என்பதை பார்க்கிறோம். இவற்றுள் இரண்டாவது மதீனாக் காலகட்டத்தின் ஏறத்தாழ இறுதியில் அருளப்பட்டது. அதே சமயம், முதலாவதோ மக்கா காலக்கட்டத்தின் துவக்கத்தில் அருளப்பட்டது. அதாவது, இவ்விரு அத்தியாயங்களுக்கும் இடையிலான காலஇடைவெளி இருபது ஆண்டுகளுக்கும் அதிகம். எனினும் நாம் குர்ஆனை வாசிக்கும் போது, அவற்றுள் ஒன்றிலிருந்து மற்றதுக்கு நகரும்போது இவ்விடைவெளி நொடிப்பொழுதில் கடந்து மறைகின்றது.

இஸ்லாம் புதியதொரு போக்காகத் தோன்றியிருந்த ஒரு காலத்தில், அதன் ஆதரவாளர்கள் கடுமையான நெருக்கடியிலிருந்த ஒரு காலத்தில், எதிரிகள் அதனைப் பிடிவாதமாக நிராகரித்துக் கொண்டிருந்த ஒரு காலத்தில் இவற்றுள் முதலாவது அத்தியாயம் (109-வது அத்தியாயம்) அருளப்பட்டது. முஸ்லிம் சமுதாயம் புரிய வேண்டியிருந்த தியாகங்களுக்கும், அதன் பாதையில் இடப்பட்ட தடைக் கற்களுக்கும் அப்பால், அதன் நடைமுறை ஐக்கியத்திற்கான கோட்பாடுகளை நிலைநிறுத்துவதே இந்த அத்தியாயத்தின் பாத்திரமாக இருந்தது.

அறிகுறிகள் அனைத்தும் இஸ்லாத்தின் அறுதி வெற்றியை குறிப்பால் தெரிவித்துக் கொண்டிருந்த மற்றொரு காலத்தில் இவற்றுள் இரண்டாவது அத்தியாயம் (110-வது அத்தியாயம்) அருளப்பட்டது. ஆரம்பத்தில் பகை மனப்பான்மை கொண்டிருந்த அறபுக் கோத்திரங்களெல்லாம் இப்போது இஸ்லாத்தின் பக்கம் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து கொண்டிருந்தன. இறைத்தூதரவர்கள் (ஸல்) தனது வாழ்வின் அந்திம காலம் நெருங்குவதை உணர ஆரம்பித்திருந்த காலமது. உலகின் மாபெரும் போர்க்கள நாயகர்களால் கூட இணையாக முடியாதவொரு ஜிஹாதிய வாழ்க்கை வாழ்ந்த நபியவர்கள் அப்போது அதிகமதிகம் இறைவனைத் துதிப்பது, மன்னிப்பை வேண்டுவது என மரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சுமந்திருந்த பாரத்தைச் சுமக்க முயன்றிருந்தால் மலைகளே கூட உடைந்து நொறுங்கியிருக்கும்!

இரு அத்தியாயங்களும் தெளிவாக வேறுபடும் இரு சித்திரங்களை முன்வைக்கின்றன: ஒன்று விதை விதைப்பதைச் சித்தரிக்கிறது. மற்றது அறுவடையைச் சித்தரிக்கிறது. இந்த வேறுபாட்டை நாம் உணர வேண்டும் என்பதுதான் இந்த குர்ஆனிய சூராக்கள் இவ்விதம் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமோ என்பதை எண்ணி நான் மீண்டும் வியப்பிலாழ்கிறேன்.”

பேரருளாளன் அல்லாஹ் முஹம்மது அல்கஸ்ஸாலியின் பிழைகளை பொறுத்தருளி, தனது நிகரில்லா கிருபையை அவர் மீது பொழிவானாக!

இயற்றிய நூல்கள்:

 1. ஆரம்ப வாழ்வு (الحياة الأولى)
 2. இஸ்லாமும் நமது பொருளாதார நிலைமைகளும் (الإسلام والأوضاع الإقتصادية)
 3. இஸ்லாமும் சோசலிச அமைப்புமுறைகளும் (الإسلام و المناهج الاشتراكية)
 4. இஸ்லாமும் அரசியல் அடக்குமுறையும் (الإسلام والاستبداد السياسي)
 5. கம்யூனிஸ்டுகள் மற்றும் முதலாளித்துவ வாதிகளின் அவதூறுகளுக்கு ஆளாகியுள்ள இஸ்லாம் (الإسلام المفترى عليه بين الشيوعيين والرأسماليين)
 6. நமது அறிதலின் துவக்கம் (من هنا نعلم)
 7. மார்க்கம் மற்றும் வாழ்வு குறித்த சிந்தனைகள் (تأملات في الدين والحياة)
 8. முஸ்லிமின் ஒழுக்க மாண்பு (خلق المسلم)
 9. முஸ்லிமின் நம்பிக்கைக் கோட்பாடு (عقيدة المسلم)
 10. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்துக்கு இடையில் தப்பெண்ணமும் சகிப்புத்தன்மையும் (التعصب والتسامح بين المسيحية والإسلام)
 11. நபிகளாரின் வாழ்வைப் புரிந்துகொள்ளல் (فقه السيرة)
 12. அழைப்பியலின் பேரணியில்… (في موكب الدعوة)
 13. மேற்கிலிருந்து வரும் இருள் (ظلام من الغرب)
 14. உங்கள் வாழ்வைப் புதுப்பியுங்கள் (جدد حياتك)
 15. இஸ்லாத்தில் இல்லாதவை (ليس من الإسلام)
 16. நமது இஸ்லாமியப் போராட்டத்தில் சத்தியத்தின் மைல்கற்கள் (من معالم الحق فى كفاحنا الإسلامى الحديث)
 17. இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளல் (كيف نفهم الإسلام)
 18. காலனித்துவம்: நலன்களும் பேராசையும் (الإستعمار أحقاد وأطماع)
 19. குர்ஆன் குறித்த சிந்தனைகள் (نظرات في القرآن)
 20. அல்லாஹ்வின் தோழமையில்: அழைப்பியல் மற்றும் அழைப்பாளர்கள் குறித்த ஆய்வுகள் (مع الله)
 21. இஸ்லாமிய உலகில் வேதத்தின் போராட்டம் (معركة المصحف فى العالم الإسلامي)
 22. ஓர் மார்க்கத்தின் போராட்டம் (كفاح دين)
 23. இஸ்லாமும் பயன்படுத்தப்படாத ஆற்றல்களும் (الإسلام والطاقات المعطلة)
 24. இஸ்லாத்தின் போதனைகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனத்திற்கும் மத்தியில் மனித உரிமைகள் (حقوق الإنسان : بين تعاليم الإسلام وإعلان الأمم المتحدة)
 25. இதுவே எங்கள் மார்க்கம் (هذا ديننا)
 26. வஞ்சகம்: அறபு தேசியவாதத்தின் உண்மை இயல்பும் அறபு மறுமலர்ச்சி என்ற வெற்றுப் புனைவும் (حقيقة القومية العربية وأسطورة العث العربى)
 27. இஸ்லாத்தின் உணர்வுசார் அம்சம் (الجانب العاطفي من الإسلام)
 28. கீழைத்தேயவாதிகளின் குற்றச்சாட்டுகளிலிருந்து இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டையும் இறைச்சட்டங்களையும் பாதுகாத்தல் (دفاع عن العقيدة والشريعة ضد مطاعن المستشرقين)
 29. பகுத்தறிவு மற்றும் உணர்வுகளுக்கு மத்தியில் இறைநம்பிக்கையின் அடித்தளங்கள் (ركائز الإيمان بين العقل والقلب)
 30. அகந்தையின் அறுவடை (حصاد الغرور)
 31. சிவப்பு ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்கும் இஸ்லாம் (الإسلام فى وجه الزحف الأحمر)
 32. சத்தியத்தின் ஏவுகணைகள் (قذائف الحق)
 33. பதினைந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய அழைப்பும் அதன் அணுகுமுறைகளும் (الدعوة الإسلامية في القرن الحالي)
 34. அறபு மற்றும் இஸ்லாமிய உலகில் அரசியல் நெறிபிறழ்வு (الفساد السياسي في المجتمعات العربية والإسلامية)
 35. இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவு, பிரார்த்தனை எனும் கலை (فن الذكر والدعاء عند خاتم الأنبياء)
 36. முஸ்லிம்களுக்கு மத்தியிலான கலாச்சார ஒற்றுமையின் சாசனம் (دستور الوحدة الثقافية بين المسلمين)
 37. இஸ்லாமிய வாழ்வின் பாதையில் வரும் பிரச்சினைகள் (مشكلات فى طريق الحياة الإسلامية)
 38. ஒரு அழைப்பாளனின் கரிசனைகள் (هموم داعية)
 39. இஸ்லாத்தைக் குறித்து நூறு கேள்விகள் (مائة سؤال عن الإسلام)
 40. நோய்களும் தீர்வுகளும் (علل وأدوية)
 41. அந்நிய நிலங்களில் இஸ்லாத்தின் எதிர்காலம் (مستقبل الإسلام خارج أرضه: كيف نفكر فيه؟)
 42. வாழ்க்கைக் கதை (قصة حياة)
 43. அறபுகள் மற்றும் முஸ்லிம்களின் இழிநிலைக்கான காரணம் (سر تأخر العرب والمسلمين)
 44. இங்கிருந்து எமது பாதை (الطريق من هنا)
 45. அக திறனின்மைக்கும் புற சதிமுயற்சிகளுக்கும் மத்தியில் தஃவாவின் போராட்டம் (جهاد الدعوة بين عجز الداخل وكيد الخارج)
 46. கசப்பான உண்மை (الحق المر)
 47. நம்முடைய இன்மையில் வளரும் பண்பாட்டுப் படையெடுப்பு (الغزو الثقافي يمتد في فراغنا)
 48. சங்கைமிகு குர்ஆனின் ஐம்பெரும் கருப்பொருள்கள் (المحاور الخمسة للقرآن الكريم)
 49. ஃபிக்ஹுத் துறையினருக்கும் ஹதீஸ் துறையினருக்கும் மத்தியில் நபிகளாரின் சுன்னாஹ் (السنة النبوية بين أهل الفقه وأهل الحديث)
 50. தேக்கநிலைக்கும் அந்நிய மரபுகளுக்கும் மத்தியில் பெண்கள் தொடர்பான விவகாரங்கள் (قضايا المرأة بين التقاليد الراكدة والوافدة)
 51. ஷரீஆ மற்றும் பகுத்தறிவின் அளவுகோளில் நமது அறிவுத்துறை பாரம்பரியம் (تراثنا الفكري : في ميزان الشرع والعقل)
 52. நாம் குர்ஆனை எவ்வாறு அணுக வேண்டும்? (كيف نتعامل مع القرآن)
 53. மிஷனரி பிரச்சாரகர்கள் குறித்து ஒரு எச்சரிக்கை (صيحة تحذير من دعاة التنصير)
 54. சங்கைமிகு குர்ஆனின் அத்தியாயங்களுக்கு கருப்பொருள் அடிப்படையிலான விளக்கவுரை நோக்கி (نحو تفسير موضوعي لسور القرآن الكريم)
 55. சுன்னாஹ்விலிருந்து சில புதையல்கள் (كنوز من السنة)
 56. பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முஸ்லிம் உலகின் நிலை (واقع العالم الإسلامي في مطلع القرن الخامس عشر)

Related posts

Leave a Comment