கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

பாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்!

Loading

2008-ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நடத்திய ஆயுத நடவடிக்கையில் பாட்லா ஹவுஸைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர். உயிரிழந்த மூவர் பின்வருமாறு: காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சி. ஷர்மா, ஆதிஃப் அமீன் (24), சாஜித் (17). இதில் மூன்றாமவர் சட்ட ரீதியில் மைனர் வயதினர். இம்மோதல் கொலை (என்கவுண்டர்) அச்சமயத்தில் காங்கிரஸ்-பாஜக கட்சிகளுக்கு நடுவே ஒரு பெரிய இழுபறிக்குக் காரணமானது. ஆதிஃப், சாஜித், ஷர்மா ஆகியோரின் கொலைகளைச் சூழ்ந்த கேள்விகள் இன்னும் விடையின்றி அப்படியே எஞ்சிநிற்கின்றன.

அதில் சில முக்கியக் கேள்விகள் பின்வருமாறு:

1. அண்மைக் காவல் நிலையத்திற்குத் தெரிவிப்பது உள்ளிட்ட எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படாததற்குக் காரணம் என்ன? காவல்துறை அதிகாரிகள் குண்டு துளைக்காத உடைகளை அணியாதிருந்தது ஏன்?

2. ‘உண்மையான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில்’ அவ்விளைஞர்களின் முதுகிலும் தலைப் பகுதியிலும் மட்டுமே காயம்பட்டிருப்பது எங்கனம்?

3. ஆதிஃப் பலவந்தமாகக் கீழே இருத்தப்பட்டு அவரின் நெற்றியின் முன்னும் பின்னும் குண்டுகள் பாய்ச்சப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வலுவாகத் தெரிவிக்கிறது. நடந்தது ‘உண்மையான என்கவுண்டர்’ எனில், போலீசார் அவ்விளைஞர்களை அடிக்க முற்பட்டது ஏன்?

4. ஆயுதம் எதுவும் கைப்பற்றப்படாதது ஏன்?

5. சம்பவ இடத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கைரேகை காணப்படாதது எங்கனம்?

இச்சம்பவத்துக்குப் பிறகு NHRC (தேசிய மனித உரிமைக் கழகம்) வெளியிட்ட அறிக்கை, டெல்லி காவல்துறை ஜோடித்த கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு  அமைந்திருந்தது. பத்தாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், இன்றும் பாட்லா வீதிகளில் படிந்துகிடக்கும் சாஜித், ஆதிஃப் அமீன், காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சி. ஷர்மா ஆகியோரின் குருதிக்கறை உண்மை மற்றும் நீதிக்கான கேள்விகளை எழுப்பிய வண்ணமிருக்கிறது. நாட்டின் தலைநகரில் வைத்து முஸ்லிம் உடல்கள் மீது நிகழ்த்தப்பட்ட இவ்வன்முறை வெறியாட்டத்தை நினைவூட்டும் நாளாகவே செப்டம்பர் 19 இந்திய அரசின் வரலாற்றில் பதிவாகும்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் முஸ்லிம் உடல் எப்போதும் அச்சத்துக்கும், நீடித்த வன்முறைக்கும் உரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. முஸ்லிம்களை மற்றமையாக்குவதிலும், வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதிலும் தங்களுக்குள்ள துணிவை நிரூபிப்பதில் அரசும் வலதுசாரிகளும் போட்டி போடுகின்றனர். நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் வகுப்புவாதக் கலவரங்கள் முஸ்லிம் சமூகத்தை இந்துத்துவ சக்திகளுக்கு முன்னால் பலவீனப்படுத்தியுள்ளன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளையமைப்புகளின் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டது முஸ்லிம் சமூகத்தை மற்றமையாக்குவதன் வெற்றியாக அமைந்தது.

9/11 சம்பவத்துக்குப் பிறகு திட்டமிட்ட முறையில் இஸ்லாமோ ஃபோபியா (இஸ்லாத்தின் மீதான, முஸ்லிம்களின் மீதான வெறுப்பு) கட்டமைக்கப்பட்டு உலகளவில் பரவலாக்கப்பட்டதை அனைவரும் அறிவர். உலகளாவிய தீவிரவாதம் பற்றிய பரப்புரை இந்தியாவில் மறுஅவதாரம் எடுத்ததும், அதையொட்டி இஸ்லாமோ ஃபோபியா கட்டமைக்கப்பட்டதும் பெருமளவு பாட்லா சம்பவத்தைக் கொண்டே நிகழ்த்தப்பட்டது. குலைநடுங்கவைக்கும் பல்வேறு தொடர் குண்டுவெடிப்புகளுக்கும் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் ஒரு பதிலடி போல் பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் முன்வைக்கப்பட்டது. அதேபோல், ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொல்லாதவர்களாகச் சித்தரிப்பதையும், விசாரணையின்றி நெடுநாட்கள் அவர்களைச் சிறையில் அடைப்பதையும் நியாயப்படுத்துவற்கும்; ஆஸம்கர், பாட்லா போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளை அபாயகரமானவையாகச் சித்தரிப்பதற்கும்; ஜாமியா மில்லியா இஸ்லாமியா போன்ற சிறுபான்மை நிறுவனங்களின் நற்பெயரைக் குலைப்பதற்கும் அது திரும்பத் திரும்பப் பயன்படுத்தபப்ட்டது.

ஊடக நிறுவனங்களுக்கு ஒரு பேசுபொருள், மெட்ரோ அறிவிப்புகள் என்பன தொடங்கி, நாட்டின் முற்போக்குக் கல்வி நிறுவனங்களெனச் சொல்லப்படுபவற்றில் ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ என்ற சிறப்புப் பாடம் கற்பிக்கப்படுவது வரை இது கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் —மதச்சார்பற்றவர்கள், மதச்சார்புள்ளவர்கள் எனும் வேறுபாடு இன்றி— எதிர்ப்போ எதிர்க் கேள்விகளோ இல்லாமல் இஸ்லாமோ ஃபோபியாவை பரப்பி வருகின்றனர்.

இன்று காங்கிரஸ் கட்சி தன்னை சிறுபான்மையினருக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் தானொரு பாதுகாவலன் எனச் சொல்லிக்கொள்கிறது. சாஜிதையும் ஆதிஃப் அமீனையும் நினைவுகூர்வது அரச வன்முறையையும், படுகொலைக்குப் பின்னாலுள்ள உண்மையையும் வெளிக்கொணர்வதில் ஏற்பட்ட கூட்டுத் தோல்வியையும் நினைவுபடுத்தும் ஓர் அரசியல் செயல்பாடாகும். முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல் என்ற வகையில் பாட்லா ஹவுஸ் விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்புவதில் மதச்சார்பற்ற சக்திகள் கூட்டுத் தோல்வி அடைந்துள்ளதாகவே நாம் கருதுகிறோம்.

பாட்லா ஹவுஸ் ‘என்கவுண்டர்’ என்பது தன்னியல்பான எதிர்வினை என்ற வகையில் அரசு நடத்திய தனியொரு தாக்குதல் சம்பவமல்ல. மாறாக, போலீஸ் அரங்கேற்றும் கொலைகள், போலி என்கவுண்டர்கள், புனையப்பட்ட வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களைச் சிறையிலடைத்தல் முதலான பல்வேறு அரச வன்முறைகளின் தொடரில் இதுவும் ஒன்று என்றே நம்புகிறோம். இன்றைய ஃபாசிச யுகத்தில் அக்கறை செலுத்தத்தக்க முதன்மை விவகாரமான ‘Muslim Question’-ஐப் புரிந்துகொள்ளும் விஷயத்தில், செல்வாக்குமிக்க செக்குலர் தரப்பு படுதோல்வி அடைந்துள்ளது. இப்போலி என்கவுண்டர் வழக்கு, உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் சட்டம் எனும் கருந்துளைக்குள் சென்று மாட்டிக் கொண்டதுடன், சட்டவாதக் குப்பையின் கீழேயே நிரந்தரமாகக் கிடக்கிறது.

பாரபட்சமற்ற நீதிவிசாரணைக்காக வைக்கப்பட்ட கோரிக்கை விஷயத்தில் அப்போது டெல்லியிலும் மத்தியிலும் இருந்த இரு அரசுகளுமே (முறையே NCT மற்றும் UPA) மிக அலட்சிய மனப்பான்மையையே வெளிப்படுத்தின. முஸ்லிம் இளைஞர்கள் அந்நியமாகும் பிரச்சினை கையாளப்பட வேண்டியதன் தேவை பற்றி வலியுறுத்திவரும் அரசு, என்கவுண்டர் தொடர்பாக முறையான நீதி விசாரணை நடத்த மறுக்கிறதென்றால், உரிமைகளையும் நீதியையும் காப்பதில் அரசாங்கத்திற்குள்ள உண்மையான அக்கறை பற்றி தீவிரமான கேள்விகள் எழுகின்றன.

(நன்றி: The Companion)

தமிழில்: நாகூர் ரிஸ்வான்

Related posts

Leave a Comment