கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்

நாத்திகர்கள் பலர் இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்து, இறைவன் இருப்பதற்கான எந்தவொரு அறிவியல் சான்றும் இல்லை என்று வாதிடுவர். ரிச்சர்ட் டாக்கின்ஸ், சாம் ஹாரிஸ், டேனியல் டெண்ட் போன்ற ‘புது நாத்திகர்கள்’, பட்டறிவுச் சான்று (empirical proof) இல்லாத எதுவொன்றையும் நம்புவது பகுத்தறிவுக்கு முரணானது என்றும், எனவே இறைவன் இருக்கிறான் என்று நம்பும் ஆத்திகர்கள் அனைவரும் பகுத்தறிவற்றவர்கள் என்றும் வாதிடுவர். ஆனால் இக்கூற்றுக்கு முரணாக, இப்பிரபஞ்சத்தில் அறிவியல் சான்று இல்லாத பல விசயங்கள் உண்மை என்பதாக நாத்திகர்கள், ஆத்திகர்கள் என இரு தரப்பாலும் நம்பப்படுகின்றன.

காலம் என்று ஒன்று இருக்கிறதா? நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம்? இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன என்பதை எப்படி வரையறுப்போம்?

இக்கேள்வி குறித்து சிந்தனையாளர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் விவாதித்துள்ளனர். காலம் என்பது அணுக்கள், பால்வெளி மண்டலம் போன்று பிரபஞ்சத்தின் ஒரு அடிப்படை அம்சம் எனச் சிலர் வாதித்துள்ளனர். வேறு சிலரோ, காலம் என்பது நம் அனுபவங்களை அடுக்குவதற்காக நம் மனதால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கட்டுமானம் மட்டுமே என்று வாதிடுகின்றனர்.

காலம், இப்பிரபஞ்சத்தின்  ஒரு அடிப்படைப் பரிமாணமாக அறிவியலால் கருதப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், நம்மால் அணுக்களையும் நட்சத்திரத்தையும் காண முடிவதைப் போல் காலத்தைக் காண முடியாது. அதை நம்மால் நிறுத்த முடியாது, மாற்றி அமைக்க முடியாது, அதன் மேல் பரிசோதனை செய்ய முடியாது, அல்லது நாம் அறிவியலின் மூலமாக அளக்கக்கூடிய பொருட்களை அணுகுவது போல் காலத்தை நம்மால் அணுக முடியாது.

உதாரணமாக, கடிகாரத்தின் முட்கள் நகர்வதைப் பார்க்கிறோம். எனில் நாம் காலஓட்டத்தைப் பார்க்கிறோம் தானே? நிச்சயம் இல்லை. நாம் காண்பது கடிகாரத்தின் முட்களைத்தானே தவிர, காலஓட்டத்தை அல்ல. கடிகாரம் உள்ளது என்பதற்கு நம்மிடம் பட்டறிவுச் சான்றுள்ளது என்பது உறுதி. ஆனால், காலம் என்பது —எது கடிகார முட்களையும் மற்ற அனைத்தையும் “முன்னே” நகரச்செய்வதாகக் கூறப்படுகிறதோ அது— காண முடியாதது, உணர முடியாதது.

கொஞ்சம் மெய்யியல் ரீதியாகப் பார்ப்போம். நிழற்படம், காணொளிப் பதிவு இவையெல்லாம் கடந்தகாலத்திற்கான பட்டறிவுச் சான்றுகள் இல்லையா?

சரி, நிழற்படம் என்பது என்ன? கொஞ்சம் பொறுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். அறுதியாகப் பார்த்தால், நிழற்படம் என்பது நிஜத்தை நேரடியாகப் பிரதிபலிக்கும் ஒன்று, ஓவியத்தைப் போன்றதல்ல. எனினும், “குறிப்பாக” கடந்தகாலத்தைப் பிரதிபலிக்கக்கூடியதாக  நிழற்படத்தை ஆக்குவது எது? நிழற்படத்திலோ காணொளிப் பதிவிலோ, கடந்த காலத்தை “உள்ளடக்கக்கூடிய” எந்த ஒரு உள்ளார்ந்த அம்சமும் இல்லை. நிழற்படம் கடந்த காலத்தைப் பிரதிபலிக்கிறது என்பதை அறியமுடிவது, நம்மிடமுள்ள கடந்தகால நினைவுகளை வைத்து மட்டுமே. நினைவு என்பதை ஒரு பட்டறிவுச் சான்றாகக் கொள்ள முடியாது. ஒரு நிழற்படம் கடந்த காலத்தைத்தான் பிரதிபலிக்கிறது என்பதை, என்ன நடந்தது என்பதாக நம் நினைவில் இருக்கிறதோ அதனுடன் ஒப்பிடுவதன் வழிதான் அறிந்துகொள்ள முடிகிறது. அல்லது, நாம் அவ்விடத்தில் அச்சமயம் இல்லாமல் இருந்திருந்தால், வேறு சந்தர்ப்ப சூழ்நிலைக் காரணிகளை கொண்டு அது உண்மையாகவே நிழற்படம்தானா அல்லது உண்மை போலவே அச்சு அசலாகத் தெரியும்படி கணினி மூலம் உருவாக்கப்பட்ட (Computer Generated Imagery – CGI) போலிப் படமா என மதிப்பிடுவோம்.

அடுத்ததாக, மற்றவற்றைக் காட்டிலும் நிழற்படம் என்பது கடந்த காலத்திற்கான வலுவான ஒரு சான்றாகக் கருதப்படுவது ஏன்?

இன்னும் சொல்வதென்றால், நிழற்படம் அல்லது காணொளிப் பதிவு இவையெல்லாம் உண்மையில் மீவியற்பியல் பொருட்களே (metaphysical objects). அப்படியென்றால் என்னவென்று விளங்கிக்கொள்ள இப்படிக் கற்பனை செய்து கொள்ளுங்கள்:

நீங்கள் ஒரு நபரிடம் ஒரு நிழற்படத்தைக் காண்பிக்கிறீர்கள், அவர் மனநிலைக் குறைபாடு கொண்டவர். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்றவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ள இயலாதவர். ஞாபக சக்தியை முற்றாக இழந்தவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த நபர் பட்டறிவுச் சான்றுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் ஒரு ஐயுறவுவாதி (skeptical empiricist) என்றும், காலம் என்ற ஒன்று இருப்பதற்கான வலுவான அத்தாட்சியைக் கோருகிறார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

நிழற்படம் எனும் கருத்துருவை எப்படி அவருக்கு விளக்குவீர்கள்? ஓவியங்களையும் கணினி மூலம் உருவாக்கப்பட்ட படங்களையும் நாம் எப்படி விளங்கிக் கொள்வோமோ அப்படித்தான் அவர் நிழற்படத்தை விளங்கிக் கொள்வார். எளிமையாகச் சொன்னால், கடந்தகாலம், காலம் போன்ற எண்ணக்கருக்களைப் பயன்படுத்தாமல் உங்களால் நிழற்படம் என்றால் என்ன என்பதை அவருக்குப் புரியவைக்க முடியாது. எனவே, நிழற்படம் போன்ற எண்ணக்கருக்களைக் கொண்டு காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாது. ஏனெனில் அவையே கூட காலம் என்ற ஒன்று இருக்கிறது எனும் கருதுகோளைச் சார்ந்தே இருக்கின்றன.

காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் நிரூபிக்கும் பேறு நமக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சூரியன், வானம் என்பவற்றைப் போன்றோ, அல்லது நுண்ணோக்கி மூலம் பார்க்க முடிகிற மூலக்கூறுகள் போன்றோ நம்மால் அறிந்து கொள்ள முடிகிற ஒரு பொருளல்ல காலம். அப்படியென்றால், பட்டறிவு வழியாக காலத்தை அறிய முடியாதா? இக்கேள்வியை ஒதுக்கிவிட்டு நம்மால் இப்படியொரு முடிவுக்கு வர முடியும்: “ஃபோட்டான்கள், கருந்துளைகள் போன்ற பௌதிகப் பொருட்களின் விசயத்தில் கேட்பதுபோலவே காலத்திற்கும் பட்டறிவுச் சான்று கேட்பது தெள்ளத் தெளிவான அறிவீனம்.”

இக்கணத்தில் தூய்மைவாதிகள் இப்படி வாதிடக் கூடும்: “காலத்தின் இருப்புக்கு பட்டறிவுச் சான்று இல்லாமலிருப்பது, அப்படியொன்று புறவயமாக இல்லாமல் இருப்பதன் அறிகுறிதான்; எனவே, காலம் என்பது ஒரு மாயையே அன்றி வேறில்லை.” ஆனால், மற்ற அனைவரும் அதைக் கடுமையாக மறுப்போம். காலம் போன்று எல்லோராலும் ஆழமாக உணரப்படுகிற ஒன்றின் இருப்பை எற்பதற்கோ மறுப்பதற்கோ பட்டறிவுச் சான்றுகளை மட்டுமே ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

அதுமட்டுமின்றி, நம்முடைய மனதின் செயல்பாட்டுக்கும் யதார்த்தம் என்பதை நாம் உணர்வதற்கும் மிக அடிப்படையாக உள்ள காலம் என்பது வெறுமனேயொரு மாயைதான் என்றால், நம்முடைய அறிதல் திறன்களையே நாம் பெருமளவு சந்தேகிக்க வேண்டியிருக்கும். வேறு வார்த்தைகளில் சொன்னால், காலத்தை மாயை எனச் சொல்வது யதார்த்தத்தையே மாயை எனச் சொல்வதற்கு இணையானது.

“யதார்த்தம் என்பது மாயை” — திருகப்பட்டஇவ்வாசகத்தை உங்கள் மனதில் ஒரு நொடி நிறுத்தி வையுங்கள். ‘தி மேட்ரிக்ஸ்’ திரைப்படத்தில் ‘இவ்வுலகம் ஒரு மாயை’எனச் சொல்வது போன்றதல்ல இது. ‘மாயை’ எனும் கருத்தாக்கமே ‘யதார்த்தம்’ என்பதோடு தொடர்புடைய ஒன்றுதான். எனவே, யதார்த்தத்தையே மாயை எனச் சொல்வது (குறைந்த பட்சம்) குழப்பகரமானது என்றே சொல்ல முடியும்.

காலம் என்ற கருத்தாக்கத்தை விளங்கிக் கொள்ள முடியாத பட்டறிவுவாதி ஒருவர்க்கும், இறைவன் மீதான நம்பிக்கையை விளங்கிக்கொள்ள முடியாத ஒருவர்க்குமான ஒப்புமை ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. இவ்வகையில்தான், பகுத்தறிவுள்ள ஆத்திகர்கள் (நாத்திக அளவுகோலின் படியான) சான்றுகள் இல்லாத ஒன்றை எப்படி நம்புகிறார்கள் என்பதை நாத்திகர்களால் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. இதனால்தான், இறைநம்பிக்கையாளர்கள் தமது “தெய்வீகம் பற்றிய மெய்யுணர்விலிருந்து” (sensus divinitatis) முகிழ்க்கும் பற்றுறுதியின் ஆழத்தையோ; அல்லது, தமது உலகத்தை வியாபித்திருக்கும், கட்டமைத்திருக்கும் அந்த தெய்வீகத்தையோ நாத்திகர்களுக்குப் புரியவைப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இரு தரப்புக்கும் நடுவேயுள்ள இப்பிளவுதான் ஒருவர் சொல்வதை மற்றவர் தவறாகப் புரிந்துகொள்வதற்கும் குழப்பத்திற்கும் காரணமாக அமைகிறது. சுருக்கமாகச் சொன்னால், பட்டறிவுவாதம் என்றால் என்ன என்பதையும், அதன் வரம்புகளையும் துல்லியமாகப் புரிந்துகொள்ளாததில் இருந்துதான் இவை உருவாகின்றன.

(நன்றி: Islam & Evolution)

தமிழில்: ஷான் நவாஸ்

Related posts

Leave a Comment