கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

LGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குதல்

இந்திய உச்ச நீதிமன்றம் ‘தன்பாலினச் சேர்க்கை’ தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவை இரத்து செய்து (2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதிசெய்து) உத்தரவிட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினர் இதை மிகவும் முக்கியமான, முன்னேற்றகரமான தீர்ப்பு எனக் கொண்டாடி வருகிறார்கள். மற்றவர்கள், இதை மிகப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்று என்று கூறி எதிர்வினை ஆற்றுகிறார்கள்.

இந்த விவகாரம் பல கோணங்களில் இருந்து விவாதிக்கப்படுகிறது. அனைத்தையும் இந்த ஒரே கட்டுரையில் உள்ளடக்குவது சாத்தியமற்ற வேலை. நாம் எந்த ஒன்றையும் ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்றால், அதை எந்த அடிப்படையில் செய்கிறோம் என்பதே அதில் தீர்மானகரமானது. எனவே இவ்விவாதத்தின் அடித்தளமாக அமைந்த முதன்மைக் கருதுகோள்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு அவை பற்றி என் கருத்தைச் சொல்வதோடு போதுமாக்கிக் கொள்ள நினைக்கிறேன்.

நாம் இங்கு கையாள வேண்டியிருப்பது இரண்டு விசயங்களை. ஒன்று தன்பாலின ஈர்ப்பு (Same-Sex Attraction: SSA). மற்றது தன்பாலினத்தாரோடு  பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது  (Same-Sex Encounters: SSE) அல்லது சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘தன்பாலினச் சேர்க்கை’. இதில் தன்பாலின ஈர்ப்பு என்பது தன்னளவிலேயே குற்றத்தன்மை கொண்ட ஒரு விசயமல்ல என்பதை முதலில் மனதிலேற்றிக்கொள்ள வேண்டும். இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத பெரும்பாலான மக்கள் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களைக் குற்றவாளிகள் போலவும், அருவெறுக்கத் தக்கவர்களாகவும், கேலிக்குரியவர்களாகவும் கருதி நடத்துவது முற்றிலும் பிழையானது, கண்டிக்கத்தக்கது.

அவர்களைக் கரிசனையோடு அணுகுவதும், புரிந்துணர்வோடு நடந்து கொள்வதும் அவசியம். இத்தகைய பாலியல் சாய்வு, பாலியல் ஈர்ப்பு அல்லது பாலியல் ஒருங்கிணைவு (Sexual Orientation) கொண்டவர்களுக்கு பொருத்தமான சகல வழிகளிலும் உதவிகரமாக இருக்க வேண்டியது நம் கடமை. அதேவேளை, அந்த இச்சையின் உந்துதலில் அவர்கள் தன்பாலினத்தாரோடு பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், அதை இயல்பானதாக ஏற்கச்சொல்லி வற்புறுத்துவதையும் நாம் ஒரு சமூகம் என்றளவில் எப்படி எடுத்துக்கொள்வது என்பதே இங்கு முதன்மைக் கேள்வி.

தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் வரலாற்றின் தொன்மைக்காலம் முதலே இருந்து வந்திருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. எனினும், அது இன்று போல் அவர்களின் அடையாளத்தை (identity) தீர்மானிக்கும் ஒன்றாக முன்னெப்போதும் இருந்ததில்லை. பாலியல் சாய்வின் அடிப்படையில் மனிதர்களை வகைப்படுத்தும் போக்கு மிகச் சமீபத்திய ஒன்று. தன்பாலினச் சேர்க்கை தொடர்பான நம் பார்வையைச் செதுக்குவதில் இதற்கு முக்கியப் பங்கிருக்கிறது. எனவே, இதைச் சரிவரப் புரிந்துகொள்வது அவசியம். பாலியல்தன்மை (Sexuality) தொடர்பாக இன்று வலுப்பெற்றுவரும் கண்ணோட்டத்தின்படி, ஒருவரின் பாலியல் சாய்வு (Sexual Orientation) என்பது அவருடைய அடையாளத்தின் இன்றியமையாத ஒரு பகுதி (essential identity) எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. இது தீவிர விவாதத்திற்குரியது.

பாலியல் சாய்வு என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதாலேயே, அது ஒருவரை வரையறை செய்யும் ஒன்றாகவும், அவர் தன்னை யார் என்று உணர்கிறார் என்பதைத் தீர்மானிக்கும் ஒன்றாகவும், மற்றவர்கள் அவரை எப்படி நடத்த வேண்டும் என்பதை முடிவுசெய்யும் ஒன்றாகவும் இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. ஆனால் இன்று அது அப்படித்தான் கட்டமைக்கப்படுகிறது. அதுதான் இவ்விவாதத்தின் திசையையே மாற்றியிருக்கிறது. இவ்வளவு காலமும் பாலியல் ஒழுக்கம் தொடர்பான ஒன்றாகப் பார்க்கப்பட்டுவந்த ஒரு பிரச்சினை, இப்போது ‘பாலியல் சிறுபான்மையினரின் உரிமைப் பிரச்சினை’ என்ற வடிவத்தை எடுத்திருப்பதன் பின்னணி இதுதான்.

வரலாற்றில் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் பற்றிய பதிவுகளைக் கூர்ந்து நோக்கினால், அது இன்றைய லிபரல் மேற்குலகு சித்தரிக்க விரும்புவதுபோல், ஒருவரின் சுயத்தை, அடையாளத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாக எக்காலத்திலும்  பார்க்கப்பட்டதில்லை எனக் கண்டுகொள்ள முடியும். இவ்வாறிருக்க, அத்தகைய உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு தன்பாலினச் சேர்க்கையை யாரேனும் சரி காணலாம் என்றால், சகோதர-சகோதரிகளுக்கு நடுவிலான பாலுறவு போன்றவற்றுக்குக் கூடத்தான் வரலாற்று ஏடுகளிலிருந்து பதிவுகளைக் கொண்டுவந்து கொட்ட முடியும். அதற்காக, அவற்றையும் முற்றிலும் இயல்பானவை, சரியானவை, இன்றைக்கும் பொருத்தமானவை என வாதிடுவது என்ன வகை அறிவுத்தரம் என்பதை எவரும் எளிதில் முடிவுசெய்து கொள்ளலாம்.

பாலியல் சாய்வை பாலியல் இச்சை என்பதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டுமென இன்று வாதிடப்படுகிறது. இரண்டுக்கும் இடையிலான நுட்பமான வேறுபாடுகள் பற்றிய விவாதத்துக்குள் நுழைவதைத் தவிர்த்துவிடுகிறேன். நடைமுறை ஒழுக்கவியலின் கண்ணோட்டத்தில் அது இச்சைகளின் தரத்தில் வைத்தே கையாளப்படும் என்பதைக் குறிப்பிடுவது மட்டுமே இங்கு போதுமானது.

இச்சைகள் —அவை பிறப்பிலேயே வந்திருந்தாலும், சந்தர்ப்ப சூழல்களால் உருவாகியிருந்தாலும், எவ்வளவு வலிமையானவையாக இருந்தாலும்— நம்முடைய அடையாளத்தின் மையக் கருவாக ஒருபோதும் அமைய முடியாது. உணவு, உறக்கம், உடலுறவு என எந்தவொரு இச்சையும் “நான் யார்?” என்பதை வரையறுக்கும் தீர்மான காரணியாக இருக்க முடியாது. நெறிப்படுத்தப்பட்டு, முறையான வழிகளில் தணித்துக் கொள்ளப்பட அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டிய இச்சைகள் அவை என்பது மட்டுமே அவற்றுக்குரிய இடமாக இருக்க வேண்டும்.

ஏறக்குறைய எல்லாப் பண்பாடுகளும் இவற்றை இதுநாள்வரை இவ்வாறே கையாண்டு வருகின்றன. ஆனால், நவீன மேற்குலகக் கண்ணோட்டம் இதை வேறுவிதமாகப் பார்க்கும்படி நம்மை நிர்பந்திக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தன்பாலின ஈர்ப்பு கொண்ட மக்கள் தொகுதியினரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்ததாகவும், நவீன மேற்குலகே அவர்களை விடுவிக்கவந்த மீட்பராகவும் நம்மை நம்பச் சொல்கிறது. அவ்வாதத்தின் அடிப்படைக் கருதுகோள்களை விசாரணைக்கு உட்படுத்துவதையே இக்கட்டுரையில் செய்ய முனைகிறேன்.

“தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் தன்பாலினத்தவர்களோடு பாலுறவுச் செயல்களில் ஈடுபடுவது அவர்களின் அடிப்படை உரிமை; அவர்களின் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது. மூடிய கதவுகளுக்குள்ளே இருவர் பாலுறவு வைத்துக்கொள்ளும் விசயத்தில் மூக்கை நுழைப்பதற்கும் அதை முறைப்படுத்தச் சொல்வதற்கும் மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என வாதிடுவதைப் பார்க்க முடிகிறது.

மேற்கத்திய லிபரல் சமூகங்களில் நடைமுறையிலிருக்கும் செக்குலர் சட்டங்களும் கூட மூடிய அறைகளுக்குள் நடக்கும் விசயங்களை முறைப்படுத்தவே செய்கின்றன. போதைப் பொருள் பயன்பாட்டை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் தனியறைகளில் தாம் விரும்பியதைச் செய்வதை அரசு ஏன் தடுக்கவோ முறைப்படுத்தவோ முயற்சிக்க வேண்டும்? உடனே, தன்பாலினச் சேர்க்கையையும் போதைப் பொருள் பயன்பாட்டையும் ஒப்பிட முடியாது என முண்டியடித்துக்கொண்டு வரவேண்டாம். இரண்டும் எல்லா வகையிலும் ஒன்று போலானவை என்று யாரும் சொல்லவில்லை. “தனிமனிதர்களின் அந்தரங்கத்தில் மற்றவர்களுக்கென்ன வேலை?” எனக் கேட்பதிலுள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டவே இவ்வுதாரணம். கணிசமான மக்கள் அது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கினால் சமூகத்தை அது பல வழிகளில் பாதிக்கவே செய்யும் என்பது புரிந்துகொள்ளக் கடினமான ஒன்றல்ல. எனவே, சமூகம் அதில் தலையிடத்தான் செய்யும்.

லிபரல் ஒழுக்கவியலின் படி, ஒரு பாலியல் செயல்பாடு அனுமதிக்கப்படுவதற்கு இரு அம்சங்கள் போதும்: ஒன்று, அது மூன்றாம் நபர் யாருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது (no-harm principle). அடுத்தது, அது பரஸ்பர ஒப்புதலின் (consent) பேரில் நிகழ வேண்டும். அவ்வளவுதான், வேறு அம்சங்கள் எதுவும் கருத்தில் கொள்ளப்படத் தேவையில்லை. இவ்விரு அடிப்படைகளிலுமுள்ள அக முரண்பாடுகள் அனைத்தையும் தத்துவார்த்தத் தளத்தில் வைத்து விரிவாகக் கட்டுடைக்கவும், முற்றாக நிர்மூலமாக்கவும் முடியும். எனினும், இக்கட்டுரைக்கென நான் தேர்ந்துகொண்ட சாதாரண மக்களின் தர்க்க மொழியோடு நிறுத்திக் கொள்வதே பொருத்தமெனக் கொண்டு தொடர்கிறேன்.

மேலே குறிப்பிட்ட போதைப் பொருள் பயன்பாட்டு உதாரணத்துக்குத் திரும்புவோம். போதைப் பொருள் பயன்பாடு போன்றவை மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கின்றன, தன்பாலினச் சேர்க்கையை அப்படிப் பார்க்க முடியுமா எனக் கேட்கலாம். “தீங்கு” என்றால் என்னவென்று நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதோடு தொடர்புடைய கேள்வி இது. உடலியல், மனோவியல், ஆன்மவியல், சமூகவியல் எனப் பல பரிமாணங்கள் கொண்ட பிரச்சினை இது. அறிவியல் ஆய்வுக் கூடங்களில் வைத்து மட்டுமே இதற்கு தீர்வுகண்டுவிட முடியாது. இதில் ஈடுபடுபவர்கள் இதனால் மகிழ்கிறார்களா என்பதுமே கூட இங்கு உரைகல் அல்ல. போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்கள் கூட அதன்வழி தாம் இன்பமடைகிறோம் என்றே சொல்கிறார்கள். போதைப் பொருள் பயன்பாட்டில் ஏற்படும் உடலியல் ரீதியான தீங்கை வேண்டுமென்றால் பலரும் புறவயமானது (objective) என நம்பலாம். அதை அப்படிப் பார்க்கக் கூடாது என்று தத்துவார்த்த ரீதியில் வாதிடமுடியும். சாதாரணமாகக் கருதி நாம் பின்பற்றிவரும் உணவு, மருந்துப் பழக்கங்களால் கூட நம் உடலுக்குத் தீங்குகள் ஏற்படவே செய்கின்றன. அதே போல்தான் இதுவும், அளவில் மட்டுமே வேறுபாடு என போதைப் பொருள் ஆதரவாளர்கள் வாதிட முடியும். வாழ்க்கை எப்படி வாழப்பட வேண்டுமென்ற உங்கள் கண்ணோட்டத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள் என அவர்கள் இதைப் புறந்தள்ள முடியும். அதேபோல் ஏனைய மன, ஆன்மிக, சமூகப் பரிமாணங்களில் அதன் தீங்கு தரும் இயல்பு பற்றியும் போதைப் பொருள் ஆதரவாளர்கள் வேறுவகையில் வாதிடும் சாத்தியம் இல்லாமலில்லை. எனவே, தன்பாலினச் சேர்க்கையில் தீங்கு எதுவும் இல்லை என்று  வாதிடுவது தாக்குப்பிடிக்காது.

தன்பாலினச் சேர்க்கையை நியாயப்படுத்துவதில் முன்வைக்கப்படும் மற்றொரு அடிப்படைக் கருத்தாக்கம், ஒப்புதல் அல்லது சம்மதம் (Consent) என்பதாகும். பாலுறவில் ஈடுபடுபடுவர்கள் பரஸ்பர ஒப்புதலோடு அதில் ஈடுபடுவதை இது குறிக்கிறது. பெற்ற தாய்-தந்தையுடன் மேற்கொள்ளப்படும் இன்செஸ்ட் (incest) வகை உறவில்கூட சம்மதம் எனும் அம்சம் இடம்பெற முடியும். தன்பாலினச் சேர்க்கையை ஆதரிப்பவர்கள் வரையறுக்கும்படியான எந்தவொரு “தீங்கும்” அதில் இருப்பதாகவும் கூற முடியாது. எனில், நாம் இன்செஸ்டையும் ஆதரிக்க வேண்டுமா? பரஸ்பரச் சம்மதத்தோடு செய்யப்படுவதாலேயே எந்தவொரு செயலையும் சரியானதாக, முறையானதாக, சட்டபூர்வமானதாக ஏற்க வேண்டுமா? இன்செஸ்ட் வழியாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு ரீதியில் பிரச்சினைகள் வரும், எனவே “தீங்கானது” என்ற அடிப்படையில் அதை ஏற்கமுடியாது என்றெல்லாம் வாதிட்டு நழுவ முடியாது. அவ்வாறு உண்மையில் தீங்கு வருமா என்பதேகூட இன்று தீவிர மறுபரிசீலனைக்கு உள்ளாகி வருகிறது. மட்டுமின்றி, குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லாமலோ, அதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையிலோ மேற்கொள்ளப்படும் அவ்வகை பாலுறவு நடவடிக்கைகளை என்ன செய்வது?

அதே போல், ஒரு பெண் உடை மாற்றுவதை, குளிப்பதை அல்லது உடலுறவு கொள்வதை அவர் அறியாத நிலையில் ஒருவர் ஒளிந்திருந்து கண்டு ரசிக்கிறார் (voyeurism); அதை நிழற்படமாகவோ காணொளிப் பதிவாகவோ எடுத்து மற்றவர்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்கவில்லை என வைத்துக் கொள்வோம். வெறுமனே செக்குலர் பொருளாயத நோக்கில் பார்த்தால், இதில் உடல்-மன ரீதியான எந்தவொரு தீங்கும் சம்பந்தப்படவில்லை என்பதே உண்மை. எனில் இது எவ்வகையில் பிழையானது? அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமல் செய்யப்படுவதால் இது முறையற்றது என வாதிடலாம். வறட்டுப் பொருளாயத நோக்கை உயர்த்திப் பிடிக்கும் இவர்களின் பார்வையில், தீங்கு எனும் அம்சத்தைத் தாண்டி, சம்மதம் என்ற அம்சத்திற்கு இருக்கும் முக்கியத்துவம்தான் என்ன?

வேறு சில வகைச் செயல்களில் சம்மதம் என்பதற்கு —நோக்கத்தின் அடிப்படையிலோ நடைமுறையின் அடிப்படையிலோ— எந்தப் பொருளும் இல்லை. போதுமான பாதுகாப்போடு செய்யப்படும் நெக்ரோஃபிலியா (பிணத்தைப் புணர்தல்), பேஸ்டியாலிட்டி (விலங்குகளைப் புணர்தல்) போன்றவற்றையெல்லாம் இவர்கள் வைத்திருக்கும் அளவுகோலில் எப்படி மதிப்பிடுவது? சம்மதம், தீங்கு போன்றவை இங்கு பிரச்சினைக்குரிய விவகாரங்கள் இல்லையெனும்போது, லிபரல் ஒழுக்கவியலைக் கொண்டு இவற்றை எப்படிப் பிழை காண்பது?

லிபரல் ஒழுக்கவியல் உரைகல்லாக முன்னிறுத்தும் இவ்விரு அம்சங்களை மட்டுமே கருத்தில் கொள்வதென்றால் பின்வரும் அனைத்துப் பாலியல் நடவடிக்கைகளையும் சரிகாண்பதைத் தவிர வேறு வழியில்லை (சாதாரண மக்களுக்கு இவை கடும் அருவெறுப்புணர்வை ஏற்படுத்தும் என்பதால் இவற்றை  மொழிபெயர்ப்பதைத் தவிர்க்கிறேன்): யூரோலாஜினியா (urolagnia), கார்ப்ரோலாஜினியா (coprolagnia), ஃபெட்டிஷிசம் (fetichism), ஸூஃபிலியா (zoophilia), எக்ஸிபிஷனிசம் (exhibitionism), சாடோ-மாசோச்சிசம் (sado-masochism), இன்னும் பல. இவற்றைக் கேட்ட மாத்திரம் குமட்டலை உணரும் மக்களையெல்லாம் வெறுப்பாளர்கள் (ஃபோபியர்கள்) என்றும், தம் நம்பிக்கைகளை பிறர் மீது திணிக்கும் அகங்காரிகள் என்றும் முத்திரை குத்திவிடலாமா?

தன்பாலின ஈர்ப்பு என்பது பிறப்பிலேயே வருவதா? அல்லது புறக் காரணங்களால் உருவாவதா என்பது பற்றி பல்வேறு வாதங்கள் வைக்கப்படுகின்றன, ஆய்வுகள் செய்யப்படுகின்றன. எனினும், இன்னது மட்டுமே காரணம் என்று யாராலும் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். இருவகைக் காரணிகளுக்கும் அவ்வவற்றுக்கே உரிய பங்கிருப்பதாகவே தெரிகிறது, ஒவ்வொரு நபரின் விசயத்திலும் ஒவ்வொரு விதத்தில். ஒற்றுமைகள் காணப்படுவது போல் வேற்றுமைகளும் நிஜம். பிரச்சினையின் சிக்கல்தன்மையை  விளங்கிக்கொள்ளாமல் இதில் ஏதேனுமொரு நிலைப்பாட்டை எடுத்துகொண்டு, அதற்காக வரிந்துகட்டிச் செய்யப்படும் விவாதங்கள் பொருளுள்ள முடிவு எதையும் எட்டப் போவதில்லை.

தன்பாலின ஈர்ப்பு பிறப்பிலேயே வருகிறதா சூழ்நிலைக் காரணிகளால் உருவாகிறதா என்பதை, ‘தன்பாலினச் சேர்க்கை’ அனுமதிக்கப்பட வேண்டுமா தடைசெய்யப்பட வேண்டுமா எனும் விவாதத்தில் முக்கியமான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், பிறப்பிலேயே வரும் குணம், இச்சை எதுவாக இருந்தாலும் அது அதன் போக்கிலேயே விடப்பட வேண்டுமென யார் வாதிட முடியும்? பிறப்பிலேயே வருவதாக இருந்தாலும் (எ.கா. எதிர்பாலின ஈர்ப்பு), புறக்காரணிகளால் பாதிப்புற்று வரும் பிறழ்வாக இருந்தாலும் (எ.கா. விலங்குகள் மீதான பாலியல் ஈர்ப்பு) மற்றெல்லா இச்சைகளைப் போலவே அவையும் நெறிப்படுத்தப்பட, ஒழுங்குசெய்யப்பட வேண்டியவைதானே தவிர, தம்மளவிலேயே தமது சரித்தன்மையையோ சட்டபூர்வத்தன்மையையோ தீர்மானிக்கும் காரணிகளாக அவற்றைக் கொள்ள முடியாது. இதேதான் தன்பாலினச் சேர்க்கைக்கும்.

சிலர் விலங்குகள், அசையாப் பொருட்கள், ஏன் சிறுவர்கள் மீது தமக்கிருக்கும் பாலியல் சாய்வுகூட பிறப்பிலேயே வருவது என்றுதான் கோருகிறார்கள். இன்னும் சொல்வதென்றால், திருமண வாழ்வில் உண்மையாக இராமல் துரோகமிழைக்கும் குணம் கூட மரபணுவிலேயே இருப்பதுதான் எனச் சில சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் கோருகின்றன. இந்தக் ‘கண்டுபிடிப்பை’ அடிப்படையாகக் கொண்டு, அத்தகையோரை extrasexuals என்றும், மற்றவர்களை எல்லாம் intrasexuals என்றும் அடையாளப்படுத்த வேண்டுமா? பிறன்மனை நோக்கும் அவர்களின் உரிமைக்காக Pride பேரணிகளும் உரிமைப் போராட்டங்களும் நடத்த வேண்டுமா? இதை எதிர்ப்போரையெல்லாம் extraphobes என்று முத்திரை குத்த வேண்டுமா?

தன்பாலின ஈர்ப்பு மிக இயல்பானது, மாற்ற முடியாதது, சொந்தத் தேர்வுக்கு அப்பாற்பட்டது, ஏன் ஆரோக்கியமானதும் கூட என்பது போன்ற கருத்துகள் இன்று நாற்புறத்தில் இருந்தும் மக்கள் மனங்களில் நிரப்பப்படுவதோடு அது ஒரு வாழ்க்கை முறையாக முன்வைக்கப்படுவது அவப்பேறானது. இந்நிலையில், அதன் அடிப்படைக் கற்பிதங்களைக் கேள்விக்கு உள்ளாக்குவதும், ஒரு முழுமைத்துவப் பார்வை கொண்டு இவ்விவகாரத்தைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதுமே நாம் செய்ய வேண்டியது.

தன்பாலினச் சேர்க்கை என்ற பிரச்சினை அசலில் அறநெறி (morality) தொடர்பானது. அறநெறி என்பது தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புகள் அனைத்துக்கும் வளைந்து கொடுப்பதற்காக இருப்பதல்ல. அவற்றை நெறிப்படுத்துவதற்காக இருப்பது. வெறும் பொருளாயத நோக்கில் பார்த்து வருவதும் அல்ல. எல்லாப் பண்பாடுகளும் அதை இந்த அடிப்படையிலேயே புரிந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. எனினும், சமீபத்திய நூற்றாண்டுகளில் மேற்குலகில் தோன்றிய சில சிந்தனைப் போக்குகள் தனிமனிதனையும் அவனது சுயத்தையும் (self) எல்லாவற்றை விடவும் மேலானதாக, நவீன கடவுளாக முன்னிறுத்த ஆரம்பித்ததில் இருந்தே இதில் குறிப்பிடத்தக்க திசைவிலகல் தொடங்கியது. (டார்வின் முதல் நீட்சே, ஃப்ராய்டு, வெபர் வரையான) நவீனத்துவத்தின் “தீர்க்கதரிசிகள்” அதுவரை அறநெறியின் மையக்கருவாக இருந்த இறைவனை (God) கொன்றுபோட்டுவிட்டு, அவ்விடத்தில் புதியவொன்றைக் கண்டுபிடித்து முன்னிறுத்தினார்கள்: எல்லாவற்றையும்விட உயர்ந்த, பரிபூரண இறையாண்மை கொண்ட மனிதனின் சுயம் (human self) என்பதுதான் அது.

மனிதனின் இயல்பான ஆசைகளையும் இச்சைகளையும் கட்டுப்படுத்தவோ முறைப்படுத்தவோ எவருக்கும் அதிகாரம் இல்லை; அவற்றைத் தீர்த்துக்கொள்ள எந்தத் தடையும் இருக்கக் கூடாது; சம்பந்தப்பட்ட தனிமனிதர்களின் சம்மதமும், (பொருளாயத வரையறையின் படியான) தீங்கு சம்பந்தப்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டாலே போதுமானது என்பது லிபரல்களின் வாதம். அடிப்படையில் இவ்விவகாரம் மனித உரிமை தொடர்பானது எனும் பார்வை இப்பின்னணியில் இருந்தே வலுப்பெற்று வளர்கிறது. இதுநாள்வரை ஏறக்குறைய எல்லா நாகரிகச் சமூகங்களாலும் அறநெறிக்கு முரணான ஓர் ஒழுக்கக்கேடு எனக் கருதப்பட்ட தன்பாலினச் சேர்க்கைகூட இவ்வகையிலேயே இன்று ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது.

எனினும், இக்கோட்பாடு கொஞ்சமும் ஒத்திசைவற்றது; அக முரண்பாடுகளின் குவியல். தன்பாலின ஈர்ப்பினால் எழும் உந்துதலின் பேரில் செயல்படக்கூடாது, அத்தகையவர்கள் சுயகட்டுப்பாடுடன் நடந்துகொள்வதுதான் அறநெறிக்கு உகந்தது என்று சொல்லப்பட்டால், அது மனிதன் மீதான ஒடுக்குமுறை, மனித சுயத்தை நசுக்குவது என்று லிபரல்கள் கொந்தளிக்கிறார்கள். எனில், சிறுவர்கள் மீது மட்டுமே பாலியல் ஈர்ப்பு கொண்டவர்கள் (பீடியோஃபைல்களில் ஒரு பிரிவினர்) என்ன செய்வது? அவர்கள் தங்கள் இச்சைகளைத் தணித்துக் கொள்ளக்கூடாது, வாழ்நாள் முழுக்க சுயகட்டுப்பாட்டுடன் தங்கள் ஆசைகளை ஒறுத்துதான் ஆகவேண்டுமென வலியுறுத்துவது மட்டும் மனிதன் மீதான, மனித சுயத்தின் மீதான ஒடுக்குமுறை இல்லையா? நசுக்குதல் இல்லையா?

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். விரிவஞ்சி இத்துடன் போதுமாக்கிக் கொள்வோம். எல்லாப் பண்பாடுகளும் ஏறக்குறைய கருத்தொருமித்த வகையில் ‘பாரதூரமான ஓர் ஒழுக்கக் கேடு’ எனக் கருதிவரும் ஒரு விசயத்தை, தலைகீழாகப் புரட்டிப்போடக் கிளம்பிய இவர்கள் நின்று பேசும் அடித்தளங்களின் லட்சணம் இதுதான். தமிழ்ச் சூழலில் நடக்கும் இவ்விவாதத்தில் தன்பாலினச் சேர்க்கையை ஆதரிப்பவர்களின் ஓட்டாண்டித்தனத்தைப் புரிந்துகொள்ள இதுவே போதுமென நினைக்கிறேன்.

இறுதியாக இதைச் சொல்லி முடிக்கிறேன். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தன்பாலின ஈர்ப்பைக் கொண்டிருப்பவர்களை சாராம்சத்திலேயே குற்றத்தன்மை கொண்டவர்கள் எனப் பார்ப்பது நியாயமற்றது. மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். இங்கு கரிசனையுடன் அணுகவேண்டியவர்கள் என நான் சொல்வது தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை மட்டுமே. இவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் பல கோணத்தில் அமைந்தவை. அக்கறையோடு ஆராய்ந்து கண்டடையப்படவும் பிரயோகிக்கப்படவும் வேண்டியவை.

தன்பாலின ஈர்ப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அத்தகையோர் மீது இழைக்கப்படும் உரிமை மீறல்களும், அவர்கள் சந்திக்கும் அவமானங்களும், அச்சத்தோடு வாழ நேரும் அவலங்களும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அவர்களைப் பற்றி பொது மக்களிடம் நிலவும் தப்பபிப்பிராயங்களைக் களைவதற்குக் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு மனவள ஆலோசனை, ஆன்மப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கியுதவ வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல், தன்பாலினச் சேர்க்கையை இயல்பானதென வாதிட்டு, அதை ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை முறையாக முன்வைத்து, சமூகத்தில் அதைப் பரப்பித் திரியும் தன்பாலினச் சேர்க்கையாளர்களையோ LGBT ஆதரவாளர்களையோ நாம்  கண்டுகொள்ளாமல் செல்ல முடியாது. அவர்கள் அறிந்தோ அறியாமலோ மாபெரும் தீமைக்கு வழிகோலுகிறார்கள். அடிப்படை வலுவற்ற அவர்களின் வாதங்கள் முற்றாக முறியடிக்கப்பட வேண்டும். சமூகத்தில் அவ்வகைக் கருத்தாக்கங்கள் பரவாமல் தடுக்க இயலுமான அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதே வேளை, தன்பாலினச் சேர்க்கையை எதிர்ப்போரெல்லாம் தன்பாலின ஈர்ப்பு கொண்டோரை வெறுப்பவர்கள், அவர்களை ஒடுக்குபவர்கள், அவர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளைச் சரி காண்பவர்கள் என்பதாகவும்; குறைந்த பட்சம் அவர்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்பதாகவும் ஒரு ஒற்றைப்படையான சித்திரத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பு எனும் பாலியல் சாய்வு  பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என்றும், அதன்படியே அவர்கள் பாலுறவுச் செயல்களில் ஈடுபடலாம் என்றும் ஊக்குவிப்பது மட்டுமே அவர்கள் மீதான கரிசனை எனும் புரிதலையே நாம் இங்கு கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அவர்கள்மீது கொள்ளும் உண்மையான கரிசனை,  செய்யக்கூடிய உண்மையான உதவி என்பது அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பை எப்படி நெறிப்படுத்தலாம், சுயகட்டுப்பாடுடன் கூடிய கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ அவர்களுக்கு எப்படி உதவலாம் எனச் சிந்திப்பதிலேயே இருக்கிறது எனக் கருதுகிறோம்.

இதைக்  காரணம் காட்டி, எங்களை தன்பாலின ஈர்ப்பு கொண்டோருக்கு எதிரிகளாகச் சித்தரிக்கும் முயற்சி நேர்மையானதுதானா எனும் கேள்வியை அப்படிச் செய்வோரின் மனசாட்சிக்கே விட்டுவிட்டு நிறைவு செய்கிறேன்.

Related posts

Leave a Comment