கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சையித் குதுப்: ஆளுமை உருவாக்கமும் குடும்பப் பின்னணியும்

Loading

[மலேசியா சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் உசூலுத்தீன் துறைப் பேராசிரியராரகப் பணியாற்றிவரும் தமீம் உசாமா எழுதிய Sayyid Qutb: Between Reform and Revolution என்ற நூலினை சீர்மை பதிப்பகத்துக்காக நூரிய்யா ஃபாத்திமா தமிழாக்கம் செய்துவருகிறார். மெய்ப்பொருள் வாசகர்களுக்காக நூலிலிருந்து ஒரு பகுதியை கீழே தருகிறோம்.]

1906ஆம் ஆண்டு மேல்-எகிப்தின் சிறியதொரு கிராமத்தில் பிறந்த சையித் குதுப்,  பருவ வயதை அடையும்வரை தன் சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தார். எனவே அந்த கிராமத்தின் பின்புலம், இயற்கை அழகைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் அவரது ஆளுமையின் உருவாக்கம், வளர்ச்சியில் அது எத்தகைய ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அறிந்துகொள்ள முடியும். இந்த அத்தியாயம் அவரது கிராமத்தின் புவியியல் அமைப்பை விவரிப்பதை விடுத்து, அதன் மற்ற முக்கிய அம்சங்கள் தொடர்பாகவே விவரிக்கிறது. பதிமூன்று வருடகால கிராம வாழ்க்கை அவரது சிந்தனை, நோக்கு, ஆன்மா, கருத்தியல் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவே அவரை உருவாக்கிய முதல் சூழமைவு.

ஒரு சிறந்த சிந்தனையாளர் அல்லது புரட்சியாளரின் சரிதையை எழுதும்போது அவரது ஆரம்பகால, இளமைக்கால வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தகூடியதாக இருந்த காரணிகளை ஆராய்வதும் கருத்தில்கொள்வதும் மிகவும் முக்கியமான அம்சமாகும். எனவே, சையித் குதுபுடைய வாழ்வின் ஆரம்பகால, அடுத்தடுத்த நிலைகளில் அவரது கிராமத்தின் ஈர்ப்பிற்குரிய விஷயங்கள்பற்றி தெரிந்துகொள்வது அவசியமானதாகும். அதாவது, சையித் குதுபுடைய ஆளுமைத் திறன் மேம்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய அவரது கிராமச் சூழல், அதன் காரணிகள் பற்றியே இங்கு குறிப்பிடுகிறோம். வகைவகையான காய்கறிகளையும் பழங்களையும் விளைவிக்கக்கூடிய பல தோட்டங்களைக் கொண்ட வளமான பசுமை நிலத்தின் மீது, நைல் நதியின் அருகே அமைந்திருந்த அக்கிராமம், பெரிய பரப்பளவிலான தோட்டங்களையும் சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொகையையும் கொண்டிருந்தது.

சையித்  குதுப், தான் கடந்துவந்த மூன்று விதமான விவசாயப் பருவகாலங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அக்கிராமத்தின் காலநிலை வருடந்தோறும் மாறக்கூடியதாக இருந்தது. மாறிமாறி வரும் காலநிலைகள் அக்கிராமத்தில் வசிக்கக்கூடிய  மக்களிடம், குறிப்பாக குழந்தைகளிடையே உளவியல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் இயல்பாகவே தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடத்தின்  பருவகால மாற்றத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்தவர்களாக அம்மக்கள் இருந்தனர். மாறிவரும் பருவநிலையானது இளம்வயதினரிடையேயும் முதியவர்களிடையேயும் உணர்வுரீதியான பெரும் தாக்கங்களை பல்வேறு வழிகளில் ஏற்படுத்தி இருந்தது.  மெய்யாகவே, அக்கிராமத்தின் மலைகள், குன்றுகளின் அழகானது தனித்தன்மை வாய்ந்ததாகவும் ரம்மியமாகவும் இருந்தது!

சையித் குதுப் தனது ஆறாம் வயதில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தார். ஒருசமயம்  பெருவெள்ளம் ஏற்பட்டு அப்பள்ளி மூன்று திசைகளிலும் நீரால் சூழப்பட்டு தீபகற்பம் போன்று மாறியது கண்டு, சையித் குதுப் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பள்ளியின் நான்காவது பக்கமோ கிராமத்தின் ஒரு சாலையுடன்  இணைக்கப்பட்டிருந்தது. அப்பள்ளியானது கிராமத்தின் ஒரு ஓரத்திலும் விவசாய நிலங்களின் வரப்பை ஒட்டியும் அமையப்பெற்றிருந்தது. அப்பள்ளியின் ஆசிரியர்கள் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து படகின் மூலம் பள்ளிக்கு வருவர். சையித் குதுப் வழக்கமாக பள்ளியிலிருந்து அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்.  பள்ளியைச் சுற்றியுள்ள இவ்வழகிய காட்சிகளைக் கண்டு மகிழ்வார். சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பின்னாளில் சையித் குதுபின் இலக்கிய, அறிவு வளர்ச்சியில் பங்களிப்புச் செய்த பல காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.

இரு மாதங்களாக அவ்வெள்ளம் நீடித்தது. மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் படகு வருவதும் போவதுமான காட்சிகள் அவருக்கு பிரம்மிப்பாக இருந்தது. வெள்ளத்தினால் நிலங்கள் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேலும், உயரமான மரங்கள் வலப்புறமும் இடப்புறமும் அசைந்தாடுவதும், அதிர்வதுமான காட்சிகள் சையித் குதுபின் மனதிலும், அழகுணர்ச்சியிலும், இயற்கையுடன் இயைந்து வாழும் உணர்விலும் தாக்கத்தை உண்டாக்கியது.

வெள்ள நீர் வடிந்ததும் விவசாயிகளும் அவர்களுடைய வேலையாள்களும் விதைப்பதற்கு நிலங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.  சையித் குதுபும் அவ்வழகிய காட்சியைக் காண அவருடைய தந்தையின் நிலத்தை நோக்கி விரைந்தார். விவசாயப் பணியின்போது வேலையாள்களோடு நகைச்சுவையுடன் பேசி மகிழ்வார். நிலங்களில் கால்நடைகள் மேய்வதைக் காண்பார்; மேலும், சிறுவர்களுக்கே உரிய ஈர்ப்புடனும் பண்புடனும் தோட்டங்களுக்குச் செல்வார். அங்குள்ள பறவைகள், வானம்பாடிகளின் பாடல்களில் மகிழ்ந்து, வாழும் இயற்கையை ரசித்தார்; தனது கற்பனைகளைத் திறந்து பிரபஞ்சத்தின் அழகினைச் செவிமடுத்தார்.

அந்த கிராமத்தின் தெருக்கள், சந்துகள் எல்லாம் பலன்தரக்கூடிய வானுயர்ந்த அழகிய மரங்கள் நிறைந்து காணப்பட்டன. இரு பெரிய பேரீச்சை மரங்கள் உட்பட, தெருக்களில் உள்ள அம்மரங்கள் காற்றில் அசைவது சையித் குதுபின் உணர்வுகளிலும் சிந்தனைப்போக்கிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.  இவ்வழகு அவரை மிகவும் கவர்ந்திருந்தது.  நல்ல நறுமணம் கமழகூடிய, அழகிய பூக்கள் நிறைந்த, நிழல் தரக்கூடிய இரண்டு பெரிய மரங்கள் அவரது பள்ளியில் இருந்தன. அப்பூக்களின் நறுமணம் கிராமத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காததாக இருந்தது.

சையித் குதுபின் கிராமம் இரு மலைகளுக்கிடையே விவசாய நிலங்கள் சூழ அமைந்திருந்தது. அக்கிராமத்தில் குறிப்பிட்டளவில் கிறிஸ்தவர்களும் வாழ்ந்து வந்தனர்; அவர்களுக்கென ஓர் தேவாலயமும், கிராமத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மலைகளுக்கிடையில் ஒரு கிறிஸ்தவ மடமும் இருந்தன. மேலே குறிப்பிடப்பட்ட கிராமத்தின் விளைநிலமானது அருகில் உள்ள பிற கிராமங்களுடன் ஒப்பிடும்போது நல்ல மண் வளத்தையும் ஈரப்பதத்தையும் கொண்டதாக இருந்தது. கிராமத்தின்  விவசாய நிலங்கள் விசாலமாக இருந்தபோதிலும் வேறு பெரிய சொத்துக்கள் எதுவும் அங்கு இருக்கவில்லை.

கிராமத்தில் உள்ள தொழிலாளர்கள் ஏழைகளாக இருந்ததால், அவர்களுக்கு அன்றாட வேலை தேவைப்பட்டது. அவர்களில் ஓருசிலர் சையித் குதுபின் வீட்டில் வேலை செய்தனர். அவ்வேலையாள்கள் சையித் குதுபின் தாய், தந்தையரை ‘சையிதீ’ (எஐமானரே) என்று அழைக்காமல் ‘அம்மீ’ (மாமா, மாமி) என்றே அழைத்தனர். அங்கு அவர்கள், தாங்கள் வேலையாள்கள் என்ற எண்ணமே எழாத ஒரு சகோதரத்துவச் சூழலை அனுபவித்தனர். சையித் குதுபின் குடும்பத்தினர், அவர்களை கூலியாள்கள்போல் நடத்தாமல் நண்பர்களாகவே பாவித்தனர். அவர்கள் சில சமயங்களில் வீட்டில் அல்லது வயல்வெளிகளில் வேலை செய்வார்கள். இன்னும் சில சமயங்களில் அழகிய பூத்தையல் (Embroidery) பயிற்சி அளிப்பார்கள். இரவில் அவரவர் வீட்டிற்குத் திரும்பிவிடுவார்கள்.

அவர்களின் வாழ்க்கைத் தரம் நன்றாகவும், பிற கிராம மக்களை ஒப்பிடும்போது நியாயமானதாகவும் இருந்தது. ஏழைகள் பதினைந்து  நாள்களுக்கு ஒருமுறையேனும் இறைச்சி உண்பவர்களாக இருந்தனர். பெரும்பாலான மக்கள் வாரத்திற்கு ஒருமுறை இறைச்சி உண்பவர்களாக இருந்தனர். வீட்டிலேயே நெய் தயாரிப்பது அம்மக்களிடையே பிரபலமாக இருந்தது. தர்பூசணி, முழாம்பழம், பேரீச்சை, மாதுளை, தாமரைப் பழம் (Lotus fruit), வெள்ளரி, நாட்டு ஆப்பிள், கரும்பு போன்றவற்றை உண்பவர்களாக இருந்தனர்.

கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறியதோ பெரியதோ சொந்த வீடு இருந்தது. மண்குடிசை வீடு என்றால் என்ன என்பதே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களின் வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் சுவர்கள் சுடாத செங்கற்களால் ஆகியிருந்தன. பெரும்பாலான வீடுகள் இரண்டு அல்லது மூன்று அடுக்குத் தளங்கள் கொண்டவையாகவோ, இன்னும் சில வீடுகள் அதற்கும் அதிகமாகவோ கொண்டிருந்தன. ஒரேயொரு தளம் கொண்ட வீடு என்பது அங்கு அரிது.

சையித் குதுபின் வீடு மிக அழகானதாகவும் விசாலமானதாகவும் இருந்தது. இதை சையித் குதுப், தன் உடன் பிறந்தவர்களைப் பற்றி பேசும்போது விவரித்துள்ளார். இருந்தபோதிலும் அவ்வீடு அவர்களின் குடும்பச் சொத்தாக நீண்ட நாள்கள் நிலைக்கவில்லை. சையித் குதுபின் தந்தை தன் வீட்டை கிராமத்தில் உள்ள ‘காப்டிக்’ கிறிஸ்தவர் ஒருவருக்கு விற்றுவிட்டார். வீட்டை வாங்கியவரின் இறப்புக்குப் பின் அவ்வீட்டின் பெரும்பான்மையான பகுதி சிதைந்துவிட்டது. அவரின் வாரிசுகள் அவருக்குப் பின் அக்கறையின்றி வீட்டை சரிவரப் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். மேலும், தவிர்க்க முடியாத சூழல்களின் காரணமாக சையித் குதுபுடைய குடும்பத்தின் பெரும்பான்மை விவசாய நிலமும் விற்கப்பட்டது. இது சையித் குதுப் உட்பட குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களின் இதயங்களிலும் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

சையித் குதுபின் பூர்வீகம்

சையித் குதுப் இப்றாஹீம் ஹுசைன் அஷ்ஷாதுலீ மேல்-எகிப்தின் அஸ்யூட்டில் உள்ள மூஷா எனும் கிராமத்தில் 1906ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பிறந்தார். சையித் குதுப் பற்றி விவரிப்பவர்கள் அவருடைய பரம்பரைபற்றி பேசும்போது அவர் எகிப்தியரா, இந்தியரா என்பதில் கருத்து வேறுபாடுகொள்வர். அவர்களில் பெரும்பான்மையோரின் கருத்து என்னவெனில், சையித் குதுபின் மூதாதையர்களில் ஒருவர் இந்தியாவிலிருந்து மக்காவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வந்ததாகவும், பிறகு அப்படியே மேல்-எகிப்தின் மூஷாவில் குடியேறிவிட்டதாகவும், எனவே அவர் இந்திய வம்சாவளிதான் என்றும் கூறுகின்றனர். மேற்கூறிய கருத்தை அபுல் ஹஸன் அலீ நத்வீயும் உறுதி செய்கிறார். தனது மூதாதையர்களின் பிறப்பிடமான இந்தியாவிற்கு வருகைதர விரும்புவதாக சையித் குதுப் தன்னிடம் கூறியதாக அபுல் ஹஸன் அலீ நத்வீ குறிப்பிட்டுள்ளார்.

சையித் குதுபுக்கு முந்தைய ஆறாம் தலைமுறை பாட்டனார் ஒருவர், இந்தியர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய பெயர் ‘அல்ஃபக்கீர் அப்துல்லாஹ்’. இதன் காரணமாகவே சையித் குதுபின் குடும்பத்தாரிடத்தில் இந்தியர்களின் முகச்சாயல் தென்படுகிறது என அவதானிக்கப்படுகிறது. மேலும், தனது ஆறாம் தலைமுறை மூதாதையர் ‘அல்ஃபக்கீர் அப்துல்லாஹ்’ இந்தியாவிலிருந்து வந்தவர் என்று சையித் குதுபே கூறியிருப்பதிலிருந்து நாம் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அவரின் சகோதரர் முஹம்மது குதுபோ இதனை மறுக்கிறார். மேலும், இது முற்றிலும் யூகத்தின் அடிப்படையிலான கருத்து என்றும் கூறுகிறார். ஆனால் ஸலாஹ் அப்துல் ஃபத்தாஹ் அல்ஃகாலிதீ சையித் குதுப், அபுல் ஹசன் அலீ நத்வீயிடம் குறிப்பிட்டதுபோல் சையித் குதுப் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றே தானும் நம்புவதாகக் கூறுகிறார்; இதுவே நிரூபிக்கப்பட்ட சான்றாகும். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சையித் குதுப், ‘இஸ்லாமே தன் பூர்வீகம்; கருத்தியல் ரீதியாக முஸ்லிம் என்பதே தன் தேசியம்’ என்று கருதுபவராக இருந்தார்.

சையித் குதுபின் குடும்பம்

சையித் குதுப் தன் குடும்பத்தைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, அவர்களது குடும்பம் மிகுதியான விவசாய நிலங்களைக் கொண்டிருந்ததன் காரணமாக செல்வந்தர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் கௌவரவமாக இருந்தது. அந்நிலங்கள் வாரிசுகளுக்கு மத்தியில் தாராளமாகப் பிரித்து வழங்கப்பட்டதால் நிலங்களின் அளவு குறைந்து இறுதியாக சையித் குதுபின் தந்தைக்கு அந்நிலங்களிலிருந்து குறைந்த அளவே கிடைத்தது. சையித் குதுபின் தந்தையே, குடும்பத்தின் தலைவராக இருந்ததால் தாராளத்தன்மையுடன் நடந்துகொள்வதன் மூலம் குடும்பத்தின் பெருமையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. இக்காரணத்தால் ஒரு கட்டத்தில் குறைவான பங்கு நிலத்தைத் தவிர வேறெதையும் அவர் கொண்டிருக்கவில்லை.

சையித் குதுப் தெரிவித்துள்ளபடி, அவரது தாயும்கூட தந்தையின் குடும்பத்தைப் போலவே வள்ளல் தன்மைகொண்ட ஓர் குடும்பத்தைச் சேர்ந்தவர். சையித் குதுபுடைய தந்தையின் குடும்பத்திற்கு என்ன நடந்ததோ அதுவே அவருடைய தாயின் குடும்பத்திற்கும் நிகழ்ந்தது. சையித் குதுபிற்கு இரு தாய்வழி மாமன்கள் இருந்தனர்; அவர்கள் இருவரும் கெய்ரோவில் உள்ள அல்அஸ்ஹரில் பட்டம் பெற்றிருந்தனர். எனவே, கிராமப்புறச் செல்வாக்கையும் தாண்டி சையித் குதுப் ஒரு கல்விச்சூழலில் வளர்க்கப்பெற்றார். அதுமட்டுமல்லாமல், நீண்ட நாள்களாக கெய்ரோவில் வசித்து வந்த அவரின் தாய்வழித் தாத்தாவும் பாட்டியும் கிராமத்திற்குத் திரும்பி, தம் வசதிக்குத் தகுந்தாற்போல வசதியான, முறையான ஏற்பாட்டுடனும் நல்ல அமைப்புடனும் பெருநகரங்களில் உள்ளது போன்ற ஒரு நவீன வீட்டைக் கட்டினர்; அவரிடமிருந்த செல்வத்தால் அவரின் நோக்கம் நிறைவேறியது. சையித் குதுப் இத்தகையவொரு சூழலிலேயே வளர்க்கப்பட்டார். அச்சூழல் அவரை ‘தானொரு தனிநபர் இல்லை, நன்மக்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருபவர்’ என்று உணரச்செய்தது.

இவ்வாறாக அறிவுசார் தூண்டுதலும் கிராமப்புறச் செல்வாக்கும் ஒருசேரப் பெற்றிருந்த நன்கறியப்பட்ட ஒரு குடும்பத்தின் மத்தியில் சையித் குதுப் வளர்ந்தார். கிராமத்தின் அனைத்துக் குடும்பங்களும், கிராம மக்கள் அனைவரும், சையித் குதுபின் தந்தையை மிகுந்த மரியாதையுடன்  தம் குடும்பத்தின் தலைவர்போல் கருதினர். கிராமத்தில் ஒருசிலர் சையித் குடும்பத்தில் உதவியாளர்களாக, காவலர்களாக, ஊழியர்களாக இருப்பர். அறுவடை வேலைக்காக தொலைதூரக் கிராமங்களிலிருந்தும் வெளிமக்கள் அக்கிராமத்திற்கு வருவர். கிராமத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அடிக்கடி சையித் குதுபின் குடும்பத்தைச் சந்திப்பர். கிராம மக்கள் அனைவரும் சையித் குதுபின் குடும்ப விசேஷங்கள் அனைத்திலும் கலந்துகொள்வர். பண்டிகைக் காலங்களில் பெருவிருந்துகள் அவர்கள் வீட்டில் நடைபெறும். மேலும், அப்போது திருக்குர்ஆன் ஓதப்படும். இவ்வாறான விசேஷங்கள் வருடத்தில் பலமுறை அங்கு நடைபெறும். எனவே, சையித் குதுப் ‘தன் குடும்பம், கிராமத்தில் உள்ள பிற குடும்பங்களைப் போல் அல்ல’ என உணர்வது ஒன்றும் அவருக்கு விசித்திரமானதாக இருக்கவில்லை. உண்மையிலேயே சையித் குதுபுடைய குடும்பம் மற்ற குடும்பங்களைக் காட்டிலும் வேறுபட்டே இருந்தது. அதன்வழிதான் பெருந்தன்மையும் நேர்மறை உணர்வும் சையித் குதுபிற்குள் விதைக்கப்பட்டன. இப்பண்புகள் வாழ்நாள் முழுவதும் அவருடன் தொடர்ந்தன.

சையித் குதுபின் தந்தை

சையித் குதுபின் படைப்புகளான ‘திஃப்லும் மினல் கரியா’ (கிராமத்திலிருந்து ஒரு சிறுவன்) புத்தகத்திலும், ‘மஷாஹிதுல் கியாமா ஃபில் குர்ஆன்’ (திருக்குர்ஆனில் மறுமைக் காட்சிகள்) புத்தகத்தின் சமர்ப்பணப் பகுதியிலும், உடன் பிறந்தவர்களுடன் இணைந்து எழுதிய ‘அல்அதுயாஃப் அல்அர்பஆ’ (நான்கு நிறமாலைகள்) புத்தகத்திலும் அவருடைய தந்தையைப் பற்றிய சில தகவல்கள் கிடைக்கின்றன.

சையித் குதுபின் தந்தை குதுப் இப்றாஹீம் விவசாயப் பின்புலம்கொண்ட, உயர்ந்த, புகழ்பெற்ற, கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய குடும்பத்திற்கு அவர் மிகவும் பக்கபலமாக இருந்தார். குடும்பத்தின் கொடைத் தன்மையை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு தாராளமாக செலவு செய்தார். செலவுகளைக் குறைக்க நினைத்தாலும் அது அவரால் இயலவில்லை; குடும்ப கௌரவத்திற்காக அனைத்துச் சிரமங்களையும் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் பெற்றிருந்த செல்வம் அக்குடும்பத்திற்கு தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் தாராளாமாக செலவுசெய்வதற்குப் போதுமானதாக இல்லை. எனவே, அவருடைய நிலங்கள் சிலவற்றை விற்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. அதிகப்படியான நிலங்களை அவர் விற்றுகொண்டே சென்றதால், அது இறுதியில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மீதமிருந்த நிலங்களையும் துண்டுதுண்டாக விற்றுகொண்டே சென்றார். இறுதியில், அவர்களுடைய குடும்பத்தின் பெரிய பாரம்பரிய வீட்டையும் விற்கும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டார்.

சையித் குதுபின் தந்தை தன்னுடைய பெருந்தன்மை, விருந்தோம்பல் பண்புகளால் நன்கு அறியப்பட்டவர். அவர் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தாராளாமாக செலவுசெய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் குடும்பத்தாரிடம் கஞ்சத்தனமாக நடந்துகொண்டதில்லை. குழந்தைகளின் தேவைகளையும் விருப்பங்களையும் எப்போதும் நிறைவேற்றிவைப்பார். இவ்வாறாக அவர் இரக்கம், கருணை குணமிக்கவராக இருந்தார்.

சையித் குதுபின் தந்தை தன்னுடைய சொத்துகளின் பங்குகளை மட்டுமல்லாமல் மனைவியின் சொத்துகளின் பங்குகளில் ஒரு சில பகுதிகளையும் விற்றுவிட்டார். இவ்வுண்மை அவரின் மரணத்திற்குப் பின் சையித் குதுபின் தாய்வழி மாமன்கள்மூலம் தெரியவந்தது. இச்செய்தி சையித் குதுபின் தாய்க்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. இதனால் ஏற்பட்ட தாயின் உணர்ச்சிகளை சையித் குதுப் பதிவு செய்துள்ளார். தந்தை இழந்ததை சையித் குதுப் மீட்டெடுக்க வேண்டுமென அவரது தாய் விரும்பினார். எனவே, அவர் சையித் குதுபை கெய்ரோவிற்கு அனுப்பி உயர்கல்வியைக் கற்குமாறும், பின் நல்ல வேலையில் சேர்ந்து போதுமான பணத்தைச் சம்பாதித்து, கிராமத்திற்குத் திரும்பி தந்தை இழந்த சொத்துகளை மீட்டெடுக்கும்படி கூறினார். எனினும், சையித் குதுப் பட்டம் பெற்ற பிறகும் தன்னுடைய பிற கடமைகள், பொறுப்புகள் காரணமாக கெய்ரோவிலேயே தங்கியது அவரது தாயின் லட்சியத்தையும் குறிக்கோளையும் அடைவதற்குத் தடையாக அமைந்துவிட்டது.

அவர்களின் வீட்டிலும் வயல்வெளிகளும் பல வேலையாள்கள் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். சையித் குதுபின் தந்தை, அவர்களை வேலையாள்களாக ஒருபோதும் நடத்தியதில்லை. மாறாக. அவர்களை சிறப்பு உதவியாளர்களாகக் கருதி மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தினார். அப்பணியாள்கள் கிராமத்தில் வசிப்பவர்களிலேயே மிகவும் ஏழ்மையானவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருசிலர் சையித் குதுப் குடும்பத்தின் தூரத்து உறவினர்களாகவும், ஒருசிலர் அண்டை வீட்டாரகவும் இருந்தனர். இவர்கள் வீட்டுக் காரியங்களுக்குப் பொறுப்பாகவும் இரவு-பகலாக வயல்வெளிகளில் உதவவும் நியமிக்கப்பட்டனர். பணியாள்கள் தன் முதலாளிக்கு அடிமை போன்று இருக்கும் வழக்கமான நடைமுறையை சையித் குதுபின் தந்தை ஒருபோதும் ஆதரித்ததில்லை. பணியாள்கள் தன்னை ‘எஜமான்’ என்று அழைப்பதை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. இளம் வேலையாள்கள் ‘ஹாஜி’ என்று தன்னை அழைப்பதிலேயே திருப்தியுற்றார்.

ஒவ்வொரு மழைக்காலத்திலும் தனது நிலங்களில் வேலை செய்ய வரும் வழக்கமான பணியாள்கள்மீது மிகவும் ஆழ்ந்த அனுதாபத்தைக் காட்டினார். அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வுணவு தன் குடும்பத்தினரின் உணவிற்குச் சமமாக, தரமாக இருப்பதை உறுதிசெய்துகோள்வார். பொதுவாக அக்கிராமத்தில் தன் பணியாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்குபவர்களுக்கு மத்தியில் சையித் குதுபின் தந்தை முற்றிலும் வேறுபட்டு தரமான உணவை அவர்களுக்கு வழங்கினார். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட வேண்டும் என்று பணியாள்கள் கோரிக்கை விடுத்தபோது  – அது அவர்களின் அன்றாட ஊதியத்தைவிட அதிகமாக இருந்தபோதும், சையித் குதுபின் தந்தை அதை ஏற்றுக்கொண்டர். அவர்கள் தொடர்ந்து அதிகமான உணவைப் பெற்றனர். அவர்களின் விருப்பங்கள் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு வருடமும் அவர்களின் வீட்டில் மீண்டும்மீண்டும் விசேஷங்களை நடத்துவது அவரது தந்தையின் நற்குணங்களில் ஒன்றாக இருந்தது. அவர்களின் வீட்டில் குர்ஆன் ஓதுதல் போன்ற விசேஷங்கள் வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறைகள் நடைபெறுவது வழக்கம் என சையித் குதுப் குறிப்பிட்டுள்ளார். ஆஷூரா தினம், இரு பெருநாள்கள், றஜபு மாதத்தின் 27ஆம் நாள் (மிஃறாஜு இரவு) ஷஅபான் மாதத்தின் 15ஆம் நாள் (பறாஅத் இரவு) போன்ற சிறப்பு தினங்களில் இறந்த தன் முன்னோர்களின் மறுவாழ்வு ஈடேற்றத்திற்காக, ‘காரீ’களை வீட்டிற்கு அழைத்து குர்ஆன் ஓதவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வேளை ‘காரீ’களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும், அதில் கலந்துகொள்பவர்களுக்கும் காலை, மதியம் குர்ஆன் ஓதி முடித்த பின் இரவு என மூன்றுவேளைக்கும் சிறந்த உணவை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சையித் குதுபின் தந்தை புத்திகூர்மையுள்ள நபராகவும் அரசியல், தேச விவகாரங்களில் பிரக்ஞைமிக்கவராகவும் இருந்தார். ‘அல்ஹிஸ்புல் வதனீ’ (Nationalist Party) வெளியிடக்கூடிய தினப் பத்திரிகை, ‘அல்லிவா (The Banner)  ஆகியவற்றின் வாசகர்களுள் ஒருவராக இருந்தார். ‘அல்ஹிஸ்புல் வதனீ’ கட்சியில் இணைந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றினார். மேலும், அக்கட்சியின் கிராம அளவிலான செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

சையித் குதுபின் தந்தை இணைந்த ‘அல்ஹிஸ்புல் வதனீ’ அரசியல் கட்சியானது எகிப்தின் ஆரம்பகாலக் கட்சிகளில் ஒன்றாகும். 1907ஆம் ஆண்டு முஸ்தஃபா காமில் என்பவரால் அக்கட்சி நிறுவப்பட்டது. இங்கிலாந்து அரசை கடுமையாக விமர்சித்து குரல் எழுப்பக்கூடிய அரசியல் கட்சிகளில் இதுவும் ஒன்றாக இருந்ததால் அதன் தேச, இஸ்லாமியச் சார்புநிலை என்பது வெளிப்படையாக இருந்தது. எகிப்தின் மேட்டுக்குடி மக்களையும் இஸ்லாமியச் சாய்வற்ற சீர்திருத்தவாதிகளையும் இக்கட்சி கொண்டிருந்தது. இப்போக்கு நீண்டநாள்களாக கட்சியில் தொடர்ந்தது.

சையித் குதுபின் தந்தை தன்னுடைய வீட்டை அரசியல் கூட்டங்கள் நடைபெறும் முக்கிய அரசியல் மையமாக மாற்றி இருந்ததால், அவர் அக்கட்சியின் துடிதுடிப்பான செயல்வீரராக இருந்தார். அவற்றில் வழக்கமான பொதுகூட்டங்களும் கட்சியின் நம்பிக்கையான உறுப்பினர்கள் மட்டுமே  கலந்துகொள்ளும் ரகசிய சந்திப்புகளும் அடக்கம். கூடுதலாக, மக்களின் சிந்தனைகளைச் சீர்திருத்தக்கூடிய மையமாகவும் அவர்களுடைய வீடு செயல்பட்டது. அரசியல், தேசியவாதம்குறித்த  உரைகளைக் கேட்பதற்கும், ‘அல்ஹிஸ்புல் வதனீ’யின் தினப் பத்திரிகையை வாசிப்பதற்கும், மேலும் அரசியல் பகுப்பாய்வின் மூலம் பயனடைந்துகொள்ள உதவும் உள்ளூர், சர்வதேசப் பத்திரிகைகளைப் படிப்பதற்காகவும் மக்கள் அவரது வீட்டிற்கு வருவர்.

1919 புரட்சியின்போது அக்கிராமத்தில் தனது தந்தையின் பங்களிப்புபற்றியும், புரட்சிக்கு ஆதரவாக அவர்கள் வீட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டங்கள்பற்றியும் சையித் குதுப் எழுதியுள்ளார். ‘அல்ஹிஸ்புல் வதனீ’ கட்சியுடன் தொடர்பில் இருந்த அக்கிராம மக்களுக்கு அவர்களுடைய வீடு ஒரு மையமாகச் செயல்பட்டது. சையித் குதுப் போன்ற சில இளம் திறன்மிக்க அறிஞர்கள், அவ்வீட்டில் நடைபெற்ற அத்தகைய கூட்டங்கள், உரைகள், கலந்துரையாடல்களில் பங்கு பெற்றுள்ளனர். அவருடைய வீட்டில் ரகசியச் சந்திப்புகளும் நடைபெற்றுள்ளன.

அதே சமயம், சையித் குதுபின் தந்தை ஆன்மீகரீதியாக மிக உறுதியாக, ஊக்கமிக்கவராக இருந்தார். அவருடைய இறைநம்பிக்கை மிக ஆழமானதாக இருந்தது. அவர்  தன் கடமையான தொழுகைகளை எப்போதும் கிராமத்தின் மையப் பள்ளிவாசலில் நிறைவேற்றுவார். சையித் குதுபும் பல சந்தர்ப்பங்களில் அவருடன் செல்வார். சையித் குதுப் பத்து வயதை அடைந்த பின், பள்ளிவாசலுக்கு தனியாகச் செல்ல ஆரம்பித்தார். மேலும், ஃபர்ளு தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதில் முழுக் கவனம் செலுத்தினார்.

கிராமத்தின் பெரும்பான்மையான மக்கள் ஹஜ் கடமையைச் செய்யாமல் இருந்த அக்காலகட்டத்தில் சையித் குதுபின் தந்தை ஹஜ்ஜை நிறைவேற்றியிருந்தார். எனவே, அவரை கிராமத்திலுள்ள இளம் வயதினர் ‘ஹாஜி மாமா’ என்றும் பெரியவர்கள் ‘ஹாஜியார்’ என்றும் அழைத்தனர். அவருடைய உறுதியான இஸ்லாமிய மார்க்கப் பற்றிற்கும், இறைதிருப்தியை விரைந்து தேடும் அவரின் பண்பிற்கும் சான்றாக இது மேற்கோள் காட்டப்படுகிறது. ஏழைகள், ஆதரவற்றவர்களுக்கு செலவு செய்வதிலும் ஸகாத் வழங்குவதிலும் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அதில் பயனடைந்தோர் வழக்கமாக, வீட்டில் அவருடன் அமர்ந்திருந்து அறுவடைக் காலங்களில் தானியங்கள் அல்லது உணவை தங்களுடைய பங்காக வாங்கிச் செல்வோர் ஆவர். சையித் குதுபின் தந்தை தன் நிலத்தில் வேலை செய்யும் பணியாள்கள்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். தன் பணியாளர்களுக்கு பிறருடைய விவசாய நிலங்களில் வேலை செய்யும் அவர்களுடைய நண்பர்கள் வாங்கும் கூலியைவிட அதிகமான கூலியை வழங்கினார். மற்றவர்களோடு ஒப்பிடும்போது ஆரோக்கியமான உணவையும் வழங்கினார்.

அவர்களின் வீட்டில் ஒவ்வொரு வருடமும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் ‘குர்ஆன் ஓதும் நிகழ்ச்சி’ முதன்மையான ஒன்றாகும். அந்நிகழ்வில் கிராமத்தில் உள்ள ‘காரீ’கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓதுவர். அதற்காக அவர்களுக்கு சிறந்த விருந்தும் அதனுடன் கௌரவ ஊதியமும் வழங்கப்பட்டது. சையித் குதுபின் தந்தை வழக்கமாக றமளான் மாதம் முழுவதும் அவர்களுடைய வீட்டில் ‘காரீ’களை அழைத்து குர்ஆனை ஓதச் செய்வார். மேலும், அதற்காக அவர்களுக்கு மிகப்பெரும் தொகையையும் சிறந்த உணவையும் வழங்குவார். வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இத்தகைய ஆன்மீக நிகழ்வுகளினால் மிகவும் மன மகிழ்வுற்றார். சையித் குதுபின் தந்தையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இத்தகைய குறிப்பிடத்தக்க பண்புகள் உண்மையில் சையித் குதுபிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. மேலும், அவை அவருடைய ஆன்மாவிலும் உணர்வுகளிலும் உறுதியாக நிலைநாட்டப்பட்டன; அவருடைய ஆளுமைத் திறனின் அம்சங்களையும் வடிவமைத்தன. தந்தையின் பண்புகளான பெருந்தன்மை, உறுதித்தன்மை, கௌரவம், இரக்க குணம், மேன்மை உணர்வு போன்றவை சையித் குதுபுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் நேரடித் தொடர்பில் இருந்தன.

சையித் குதுபின் தாய்

சையித் குதுபின் தாய் கண்ணியமும் மரியாதையும் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். சையித் குதுபின் தாய்வழிப் பாட்டனார் மிகப்பெரும் நிலத்திற்குச் சொந்தக்காரராக இருந்தார். மேலும், சையித் குதுபின் தாயுடைய இரு சகோதரர்களும் அல்அஸ்ஹரில் பட்டம் பெற்றிருந்தனர். இதுபோன்ற சமூக அந்தஸ்து, கல்வி நிலையைக் கொண்டிருந்த காரணத்தால் அவர்களின் குடும்பம் உயர்ந்த மரியாதையைப் பெற்றிருந்தது. சையித் குதுபின் தாய்க்கு நான்கு சகோதரர்கள்; அதில் இருவர் அறிவுத் தேடலில் முனைப்புடன் ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவரான ஹுசைன் உஸ்மானுடன் கெய்ரோவில் தங்கி இருந்தபோது, சையித் குதுபிடம் அவருடைய பண்புகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின.

குடும்பத்தின் சொத்துகளில் பெரும்பான்மையான பகுதிகள் விற்கப்பட்ட போதிலும் சையித் குதுபின் தாய் அதுகுறித்து கவலைகொண்டதில்லை. உண்மை, நம்பிக்கை, உறுதி, மரியாதை, கௌரவம் போன்ற உன்னதப் பண்புகளை அவர் கொண்டிருந்தார். தந்தை அல்அஸ்ஹரில் கல்வி கற்றவராகவும் ஆன்மீக உணர்வும் இறையச்சமும் உடையவராக இருந்ததனாலும், சகோதரர்கள் அல்அஸ்ஹரில் பட்டம் பெற்றவர்களாக இருந்ததனாலும் சையித் குதுபின் தாயிடம் மேற்கண்ட நற்பண்புகள் மிகுந்து காணப்பட்டன.

குர்ஆன் ஓதுதலைக் கேட்பது சையித் குதுபின் தாய்க்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அந்நேரங்களில் அவர் மிகவும் பணிவுடனும் தாழ்மையுடனும் இருப்பார். சையித் குதுபின் பாட்டனார், தன் மகளுக்காக சையித் குதுபை குர்ஆன் ஓதும்படி வற்புறுத்துவார். வீட்டில் குர்ஆன் ஓதும்போது ‘காரீ’களுக்குப் பின்னால் இருந்து அதை சையித் குதுபின் தாய் கவனிப்பார். சையித் குதுப், ‘அத்தஸ்வீருல் ஃபன்னீ ஃபில் குர்ஆன்’ (திருக்குர்ஆனில் கலை உருவகம்) என்ற தனது புத்தகத்தை தன் தாய்க்கு அர்ப்பணம் செய்யும்போது அதில் தன் தாயின் இத்தகைய குணாதிசயங்கள்பற்றி விளக்கியுள்ளார்.

சையித் குதுபின் தாய், றமளான் மாதம் முழுவதும் அவர்களின் வீட்டில் குர்ஆன் ஓதும்போது அதைக் கவனிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என சையித் குதுப் குறிப்பிடுகிறார். சையித் குதுபின் தாய்தான் அவரை ஊக்கப்படுத்தி அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து கிராமத்திலுள்ள ஆரம்பப் பள்ளிக்கு அனுப்பிவைத்தார். அவருடைய அன்னையின் உறுதுணையும் பிரார்த்தனையும்தான் அவரை குர்ஆன் மனனம் செய்ய வைத்தது. அவர் மரணித்தபோது சையித் குதுப் மிகுந்த துயரமடைந்தார். தன் தாயை மறக்கவும் அவரால் இயலவில்லை. தனது இளம் பருவத்தில் காலத்தில் தன் அன்னை தனக்கு விவரித்த பழமையான பல கதைகளை அவர் நினைவுகூர்ந்தார். தன்னுடைய அன்னையை அவர் மிகவும் உயர்வாக மதித்தார். அவர் இறைவனுக்காக ஸகாத்தை வழங்கினார். வீட்டிற்கு குர்ஆன் ஓத வரும் ‘காரீ’களுக்கும், அறுவடைக் காலங்களில் தங்கள் நிலத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் உணவை அவரே விரும்பித் தயாரிப்பார். அதில் மகிழ்ச்சியும் அடைவார். அவர் இத்தகைய விஷயங்களிலேயே தன்னை அதிகமும் ஈடுபடுத்திக்கொள்வார். இத்தகைய நற்காரியங்களின் மூலம் இறைவனுடனான நெருக்கத்தைப் பெறுவதாக எண்ணி மனமகிழ்ச்சி அடைவார்.

சையித் குதுபின் தாய் தன் பிள்ளைகளின் மனங்களில் முக்கியப் பண்புகளான ஈமான் (இறைநம்பிக்கை), தக்வா (இறையச்சம்) ஆகியவற்றை விதைப்பதில் மிகுந்த அக்கறையும் அதிகப்படியான கவனத்தையும் எடுத்துக்கொண்டார். மேலும், உண்மையான இறைநம்பிக்கையாளர்களின் அனைத்து அம்சங்களும் பண்புகளும் தன் பிள்ளைகளிடம் வெளிப்படுவதற்கான பயிற்சிகளையும் அவர்களுக்கு வழங்கினார். பிள்ளைகளில் மூத்தவர் சையித் குதுப் என்பதால் அவர்மீது மிகுந்த அக்கறை செலுத்தினார். எனவே, தனது நம்பிக்கை, விருப்பங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த நம்பிக்கைகுரியவராக சையித் குதுபைக் கருதினார். ஆகையால் ஈமான், தன்மானம், மரியாதை, பெருந்தன்மை, பொறுப்பை நிலைநாட்டுவது போன்ற பண்புகளின் அடிப்படையில் சையித் குதுபின் ஆளுமையைக் கட்டமைத்திட அவர் முயன்றார். சையித் குதுப் மீதான அவருடைய தாயின் எதிர்பார்ப்பு மிகுதியாக இருந்தது. 1940இல் அவர் மரணித்தபோது சையித் குதுப் அவருக்காக ஓர் இரங்கற்பாவை இயற்றினார்:

என் தாயே… நேற்றையை சம்பவம்போல் என் குழந்தைப் பருவக் கதைகளை கூறி, ஆரம்ப நாள்களைச் சித்தரித்து என் கண்களில் பதிவிட்டீர்கள்… நிச்சயமாக, நான் தனித்துவம் மிக்கவன் என்பதை என் ஆன்மாவிற்கு படம்பிடித்துக் காட்டினீர்கள்… உங்கள் எதிபார்ப்புகளை என்னிடம் தெரிவித்தீர்கள்…

சையித் குதுபின் உடன் பிறந்தவர்கள்

சையித் குதுபின் தந்தைக்கு இரு மனைவிகள். அவருடைய முதல் மனைவியின் மூலம் சில பிள்ளைகள் இருந்தனர். அவர்களுள் ஒருவரைப் பற்றி சையித் குதுப் குறிப்பிட்டுள்ளார். சையித் குதுபின் தாயான இரண்டாம் மனைவிக்கு, இரு மகன்கள், மூன்று மகள்கள். அவர்கள் நஃபீசா, சையித், ஆமீனா, முஹம்மது, ஹமீதா ஆவர்.

நஃபீசா குதுப்

சையித் குதுபைவிட மூன்று வயது மூத்தவரான நஃபீசா குதுப் முதல் பிள்ளையாவார். அவரைப் பற்றி அதிகமான தகவல்கள் ஏதும் தெரியவில்லை. அவரது பெயரைக் குறிப்பிடாமலேயே சையித் குதுப் அவரைப் பற்றி தன் புத்தகமான திஃப்லும் மினல் கர்யாவில் குறிப்பிட்டுள்ளார். நஃபீசா தனது மற்ற சகோதரிகள் போன்று இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. கெய்ரோ பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி மாணவரான அவரது மகன் றஅஃபாத் பக்ர் ஷாஃபிஈ, சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.  1965இல் இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை ஜமால் அப்துல் நாஸிர் சிறையில் அடைத்தபோது இச்சம்பவம் நடந்தது. போர் அமைச்சரான ஷம்ஸ் பதுறான் என்பவரின் அலுவலகத்தில் கூலிப்படைகளால் அவர் சித்திரவதை செய்யப்பட்டபோது ஷஹீதாகி தன் இறைவனிடம் மீண்டார். சகோதரிகளின் பிள்ளைகளில் சையித் குதுபிடம் அதிக பாசமாக இருந்தது இவர்தான் என்பதால் சையித் குதுபிற்கு மிகவும் பிடித்தவராக இருந்தார். இருவரின் குணநலன்களுக்கிடையில் மிகப் பெரிய ஒற்றுமை காணப்பட்டது. றஅஃபாத்தின் உடன் பிறந்த சகோதரரும் சிறைபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புவரை செல்லும் அளவிற்கு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். நஃபீசா குதுபும் தனது பங்கிற்கு சிறையில் சித்திரவதை அனுபவித்தார். நஃபீசா வயதானவராகவும் பலவீனமானவராகவும் இருந்தபோதிலும் எதிரிகள் அவரிடம் எவ்விதக் கருணையும் காட்டவில்லை. அவர் அறுபத்து ஐந்து வயதைத் தாண்டியவராக இருந்தார். அவரது மகன் றஅஃபாத்தின் ஷஹாதத்திற்குப் பின்தான் அதிகாரிகள் அவரை சிறையில் இருந்து விடுவித்தனர்.

சையித் குதுப்

தனது அன்னைக்கு சையித் குதுப்தான் மகன்களில் மூத்தவர் ஆவார். தன் தந்தையின் முதல் மனைவியின் மூலம் பிறந்த மூத்த சகோதரர் ஒருவரும் உள்ளார். அவரைப் பற்றி எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. சையித் குதுபின் ஆளுமை, கல்வி, பங்களிப்பு, போராட்டம், தியாகம்பற்றி விவரிக்க பின்னால் அதிகமான பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆமீனா குதுப்

சையித் குதுபைவிட இவர் இளையவர். இவர் நீண்ட நாட்கள் கிராமத்தில் வாழ்ந்தார். பிறகு கெய்ரோவிற்குச் சென்று திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு இலக்கியவாதி. சிறுகதைகள் எழுதும் கலை இவரை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. இலக்கியப் பத்திரிகைகளில் எண்ணற்ற உணர்வுபூர்வமான கதைகளை அவர் பிரசுரித்துள்ளார். அவருடைய கதைகள் வாழ்வு, இலக்கியம்மீதான இஸ்லாமிய அணுகுமுறைகள் நிறைந்தவையாகக் காணப்பட்டன. ‘அல்அத்யாஃப்  அல்அர்பஆ’ என்ற படைப்பை உருவாக்கும் கூட்டுமுயற்சியில் தன் உடன் பிறந்தவர்களுடன் ஆமீனாவும் பங்குகொண்டார். அல்அத்யாஃப்பின் அறிமுகப் பகுதியில் ஆமீனாவைப் பற்றி சையித் குதுப் குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறார்:

அந்த அமைதியான பெண் ஆமீனா கடந்த காலத்தில் வெளிப்படையான பெண்ணாக இருந்தார். அவர் ஒரு கவிஞர்; அவரது கருத்துக்களில் உணர்ச்சி வெளிப்பாடுகளைவிட தெளிவும் எளிமையும் மிகுந்து காணப்பட்டன, அவர் தன்னிடம் இல்லாத எதிர்காலத்தையும், திரும்பக் கிடைக்காத கடந்த காலத்தையும் கனவு காண்பதில் மூழ்கி இருப்பார்…

கதை எழுதும் கலையில் அவருகிருந்த நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், அவரது அச்சிடப்பட்ட இரு கதைத் தொகுப்புகள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. ‘ஃபீ  தய்யார் அல்ஹயாத்’ என்ற கதைகளின் தொகுப்பில் நாம் இதைக் காணலாம். அவருடைய இந்தக் கதைத் தொகுப்பை தன் இரு சகோதரர்களான சையித் குதுப், முஹம்மது குதுப் ஆகியோருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

என் அன்பான இனிய உள்ளம்கொண்ட சகோதரர்களே! இந்த கதைத் தொகுப்புகளை நான் உங்கள் இருவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். உண்மையில் அக்கதைகள் சிலவற்றில் பாலைவனத்தின் அலறல்கள் உள்ளன… நம்பகமான மைல்கற்களை நீங்கள் என் கண்களுக்குக் காட்டுவதற்கு முன்னால்… மேலும் ஒருசில வேறு கதைகளில், நீண்ட பாதையின் வளைவுகளில் தடுமாறும் படிகள் உள்ளன… நீங்கள் இருவரும் இதை என்னிடமிருந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்…

இச்சமர்ப்பணத்திலிருந்து அந்த நேரத்தில் தன்னுடைய இலக்குபற்றிய தெளிவு அவரிடம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மேலும், நீண்ட பாதையின் வளைவுகளில் அவர் எடுத்துவைத்த அடிகள் தடுமாற்றமாக இருந்தன. தன் சகோதரர்களுடனான பயணத்தில், இந்தத் தடுமாற்றம் அந்தப் பாதையின் வழிகளையும் அதன் அடையாங்களையும் பாதிப்பதாக இருந்தது. பிறகு அக்கடினமான பாதையைக் கடந்து, அதன் மேடுகளைத் தாண்டி, அதன் பயங்கரங்களையும் தீவிரங்களையும் எதிர்கொண்டார். அதில் தனக்கு நேர்ந்த  இன்னல்களையும் துயரங்களையும் ஏற்றுக்கொண்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். ஆனால், அவற்றை சகித்துக்கொள்வதில் உறுதியாக இருந்தார். சிறையிலிருந்து வெளியே வரும்போது முன்பு இருந்ததைவிட மேலும் ஈமானில் உறுதியாக இருந்தார். அவரின் இரண்டாம் கதைத் தொகுப்பான ‘ஃபித் தரீக்’ (பாதையில்) தனது சகோதரர் சையித் குதுப் எழுதிய ‘மஆலிம் ஃபித் தரீக்’ (மைல்கற்கள்) புத்தகத்தின் கருத்துகளைப் பிரதிபலிப்பாக இருந்தது

முஹம்மது குதுப்

முஹம்மது குதுப் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். இவர் தனது சகோதரர் சையித் குதுபைவிட பதிமூன்று வருடங்கள் இளையவர் ஆவார். முஹம்மது குதுப் தனது குழந்தைப் பருவத்தை கிராமத்திலேயே கழித்தார். அக்கிராமத்தின் அழகு, இயற்கைச் சூழல், அதன் காட்சிகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதன் அழகும் இயற்கையான காட்சிகளும் அவரது ஆன்மாவில் தாக்கத்தை ஏற்படுத்தின. இது அவருடைய உணர்வுகளையும் ஆர்வத்தையும் அழகு, மகத்துவத்தை நோக்கித் திறக்கச் செய்தது. பல சந்தர்ப்பங்களில் அவர் அடிக்கடி வயல்வெளிகள், பசுமையான தோட்டங்களைச் சுற்றி வந்து மரங்களின் நிழல்களில் ஆனந்தம் அடைவார். வானம்பாடிப் பறவைகளின் பாடல்களையும் சிட்டுக்குருவிகள் அதன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதையும் மிக உன்னிப்பாகக் கவனிப்பார். மேலும், பூக்களைப் பறித்து அதன் நறுமணத்தை நுகர்வார்.

சையித் குதுப் கெய்ரோவில் குடியேறியபோது முஹம்மது குதுப் தன் தாய், சகோதரிகளுடன் நகரத்திற்குக் குடிபெயர்ந்தார். அவர் தன் மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த பின் கெய்ரோ பல்கலைக்கழகத்தின் ‘குல்லியத்துல் ஆதாபி’யில் (கலைத் துறை) சேர்ந்தார். அவரோ அறபு மொழி மற்றும் இலக்கியத் துறையில் சேர விரும்பினார். ஆனால், சையித் குதுப் அவரை ஆங்கில மொழித் துறையில் சேர்த்து படிக்கச் செய்தார். இறுதியில் முஹம்மது குதுப் ஆங்கில மொழியில் இளநிலைப் பட்டத்தைப் பெற்றார். மேலும், கல்வி மற்றும் உளவியல் துறையில் பட்டயப் படிப்புச் சான்றிதழையும் பெற்றார். பட்டம் பெற்றபின் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தில் தனது பணிவாழ்வைத் தொடங்கினார்.

முஹம்மது குதுப், தஅவா (இஸ்லாமிய அழைப்பு) உடைய பாதையில் தன்னுடைய பங்களிப்பைப் தொடங்கியபோது, எகிப்தில் உள்ள அடக்குமுறையாளர்களின் சிறையில் முதலாவதாக 1954ஆம் ஆண்டும், பிறகு 1965இல் இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கச் சகோதரர்கள் சித்திரவதை செய்யப்பட்டபோதும் என இரு முறை அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட கஷ்டங்கள், சவால்களை சளைக்காமலும் உறுதியுடனும் எதிர்கொண்டார். கைது செய்யப்பட்டவர்களில் முன்னவராக இருந்த காரணத்தால் ‘அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார்’ என்ற வதந்தி பரவும் அளவிற்கு அதிகமான சித்திரவதை செய்யப்பட்டார். இத்தகைய இன்னல்களும் துன்பங்களும் அவருடைய நம்பிக்கையையும் உறுதியையும் அதிகப்படுத்தின. சிறையில் துன்பங்களும் துயரங்களும் நீடித்தன.

இலக்கியம், கலைகள்மீதான ஈர்ப்பையும் பிணைப்பையும் முஹம்மது குதுபின் ஆன்மாவில் அவரது சகோதரர் சையித் குதுப் விதைத்திருந்தார். முஹம்மது குதுப் கட்டுரைகள் எழுதினார். அவருக்கு நன்கு பரிட்சயமான இலக்கியப் பத்திரிகைகளான அல்உஸ்பூ (வாரம்), அர்ரிசாலா (தூது), அஸ்ஸகாஃபா (கலாச்சாரம்) ஆகியவற்றில் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். உணர்ச்சிபூர்வமான தொனியில் கவிதைகளையும் இயற்றியுள்ளார். வாழ்க்கைக்கும் இருத்தலுக்குமான ரகசியத்தை அவர் பரீட்சித்தும் ஆராய்ந்தும் புரிந்துகொண்டிருந்தார். சையித் குதுப்மீது அவர், அப்பாஸ் மஹ்மூது அல்அக்காதின் சீடராக இருந்த காலத்திலிருந்தே முஹம்மது குதுப் மிகுந்த பற்றுடன் இருந்தார்.

முஹம்மது குதுபின் உண்மையான ஆசிரியரான அவரது சகோதரர் சையித் குதுப், அவரது வாழ்விலும் ஆளுமையிலும் தெளிவான தடத்தைவிட்டுச் சென்றுள்ளார். முஹம்மது குதுப் தன் முதல் வெளியீடான ‘ஷஃக்ரியாத் ஷஹீறாத்’தை தன் சகோதரர் சையித் குதுபிற்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

என் சகோதரனே..! நீங்கள்தான் எனக்கு கற்கவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்தீர்கள். என் குழந்தைப் பருவத்தில் இருந்து என்மீது பொறுப்புடன் கவனம் செலுத்தி அன்பு காட்டினீர்கள். நீங்கள் எனக்கு தந்தையாகவும் சகோதரனாகவும் நண்பனாகவும் இருந்தீர்கள்… இப்புத்தகத்தை நான் உங்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்; இந்த மகத்தான மார்க்கத்தில் ஏதேனும் ஒன்றையேனும் என்னால் நிறைவேற்ற முடியும்…

முஹம்மது குதுபின் உரையாடல் பாணி சரளாமாவும், மென்மையாகவும், பிரகாசமானதாகவும் மேலும் ஓசையும் நயமும் தெளிவாகவும் இருக்கும். எதிரிகள் பற்றிய பகுப்பாய்விலும் கலந்துரையாடலிலும் புறநிலையாக இருந்து அவர்களின் கருத்திற்கு ஒரு முறையான வரையறையை வழங்குவார். பிறகு அதனை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இருந்து மறுத்தும் நிராகரித்தும் பேசுவார். முஹம்மது குதுப் அனைத்து விஷயங்களிலும் அவருடைய சகோதரர் சையித் குதுபிடமிருந்து பெரும் தாக்கத்தைப் பெற்றிருந்தார்.

முஹம்மது குதுப் புதிதாக ஏதும் கூறவில்லை என்று கருதப்பட்டாலும் சமகாலச் சிந்தனைகளை விளக்குவதில் திறமையானவர்; உண்மையில் அவர்  பயனுள்ள பல புதுமையான விஷயங்களைக் கூறியுள்ளார். இது அவருடைய எழுத்துக்கள்மூலம் வெளிப்படுகிறது. அவரது திறமைகளை விவரிப்பது அவரது படைப்புகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

உண்மையில் சையித் குதுப் தனக்குப் பிறகும் முஹம்மது குதுப் தன்னைப் பின்பற்றும் அளவிற்கு அவருக்கு பயிற்சி அளித்திருந்தார். முஹம்மது குதுப் தன்னுடைய இலக்கை பூர்த்தி செய்வார் என்றும் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தார். சையித் குதுப் தனது ‘தீவானுல் ஷாதீ அல்மஜ்ஹூல்’ எனும் கவிதை நூலைத் தொகுக்கும்போது, தஅவா உலகில் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் உச்சியில் இருந்த முஹம்மது குதுபிற்கு அதனை சமர்ப்பணம் செய்தார். இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்களின் பயிற்சியாளராகவும் சிந்தனையாளராகவும் முஹம்மது குதுப் கருதப்பட்டார். எகிப்திலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற இஸ்லாமியக் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆதாரபூர்வமான ஆய்வுகளைச் சமர்பித்தார். உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களுக்கு பல இஸ்லாமியப் பேருரைகளை ஆற்றியுள்ளார்.

ஹமீதா குதுப்

‘அல்அத்யாஃப் அல்அர்பஆ’ புத்தக ஆசிரியர்களில் இவர்தான் இளையவர். ‘அல் அத்யாஃப்’-ன் அறிமுகப் பகுதியில் சையித் குதுப் ஹமீதாவை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் தன் வாழ்வின் ஒரு பகுதியை கிராமத்தில் கழித்தார். பிறகு அவரது குடும்பம் நகரத்திற்குப் புலம்பெயர்ந்தபோது கெய்ரோவில் உள்ள தனது சகோதரர் சையித் குதுபுடன் சேர்ந்துகொண்டார். கெய்ரோவில் அவரது படிப்பை நிறைவுசெய்தார். இலக்கியத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார். ‘அல்அத்யாஃப் அல்அர்பஆ’ புத்தகத்தின் விவரிப்புகள்மூலம் அவருடைய கடந்த காலத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். அல் முஸ்லிமூன் (முஸ்லிம்கள்), அல்இஃக்வானூல் முஸ்லிமூன் (முஸ்லிம் சகோதரத்துவம்) போன்ற பத்திரிகைகளில் அவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

1954இல் இஃக்வான் இயக்கத்தினரின் கைது நடவடிக்கைக்குப் பின் ஹமீதா குதுப், ‘அல்அஃக்வாத் அல்முஸ்லிமாத்’ (முஸ்லிம் சகோதரித்துவம்) குழுவிற்கு பக்கபலமாக நின்று கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களைப் பாதுகாத்தும் அவர்களுக்கு உணவு, உடைமைகள் வழங்கியும் உதவி செய்தார். சையித் குதுப் சிறையிலிருந்தபோது ஒரு சில தூதுவர்கள்மூலம் இயக்கத்திற்குத் தேவையான சையித் குதுபின் வழிகாட்டுதல்களையும் பரிந்துரைகளையும் ஹமீதா பெற்றுக்கொண்டார். 1965இல் இஃக்வான் இயக்கத்தினர் துன்பம் அனுபவித்த காலகட்டத்தில் ஹமீதா குதுபும் தனது பங்கிற்கு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார். சையித் குதுபின் குடும்பத்திலேயே இவர் மட்டும்தான் குறுகியகால சிறைத் தண்டனை அனுபவித்தவர். பத்து வருட கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்ற ஹமீதா அல்ஹர்பீ, அல்ஃகனாத்திர் சிறைகளிலிருந்து ஆறு வருடம் நான்கு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

சையித் குதுப் பெற்ற பயிற்சி

சையித் குதுபின் தந்தை தனது மகனை ஒரு நல்ல, நேர்மையான மனிதராக மாற்ற வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பை சையித் குதுப் உணர்ந்துகொள்ளும் விதமாக அவருக்கு முறையான பயிற்சி அளிப்பதில் ஆர்வமாக இருந்தார். கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த சையித் குதுப், தான் பெற்ற அன்பை அவர்களிடமே திருப்பிச் செலுத்தி, அக்குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சி, பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் திருப்தியுறச் செய்தார். சையித் குதுபின் பெற்றோருக்கிடையில் எவ்வித சர்ச்சையோ கருத்து வேறுபாடோ விவாதமோ ஏற்பட்டதில்லை. குழந்தைகள் யாவரும் எப்போதும் மகிழ்ச்சிகரமாகவே இருந்தனர்; அவர்களுக்கிடையே பொறாமைக்கும் மனக்கசப்பிற்கும் இடமே இருந்ததில்லை.

சையித் குதுபின் தந்தை ஒருபோதும் அடித்துத் துன்புறுத்துவதன் மூலம் அவருக்கு பயிற்சி அளித்ததில்லை. உண்மையில் அவ்வேளைகளில் அவர் மிகத் தாராளமாக நடந்துகொண்டார். சையித் குதுப் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அன்றே பள்ளியிலிருந்து பாதியிலேயே வீட்டிற்கு ஓடி வந்தபோது குடும்ப உறுப்பினர்கள் அவரைக் கண்டித்தனர்; வேறுசிலரோ அவரை கேலியும் செய்தனர். ஆனால், அவர் தந்தையோ அவ்வாறு நடந்துகொள்ளாதது மட்டுமின்றி, அவருக்கு எதிராக ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை.

சையித் குதுபுடைய உடைகளின் தூய்மையைப் பேணவும்  பிற குழந்தைகளின் நடத்தைமூலம் அவரது ஒழுக்கம் கெட்டுவிடாமல் பாதுகாக்கவும் கிராமத்தில் உள்ள குழந்தைகளுடன் தெருக்களில் விளையாட அவரை அனுமதித்ததில்லை. சையித் குதுப் தன் நண்பர்களுடனோ, குடும்பத்தாருடனோ, தனியாகவோ கிராமப்புறப் பகுதிகளில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டிருந்தார். அவரது குடும்பம் அவரை அவதானித்துகொண்டிருந்ததே இதற்குக் காரணமாகும். அவரை ஒரு உறுதியான, பன்முகத்தன்மைகொண்ட, நேர்மையான மனிதராக உருவாக்கும் பொருட்டு அவரது நடவடிக்கைகள் முழுவதுமாகக் கண்காணிக்கப்பட்டன.

அவரது தந்தை, குடும்பத்தினர் அளித்த தீவிரமான பயிற்சியின் விளைவாக ஒரு உண்மையான, சிறந்த, நேர்மையான ஆளுமையாக சையித் குதுப் உருவானார். பள்ளிவாசலில் தொழுவதில் சிரத்தை, குர்ஆனை மனனம் செய்வதில் ஈடுபாடு, கிராமத்தில் உள்ள மற்ற இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியாகத் திகழ்தல் என்பவற்றிலும் அவர் கண்காணிக்கப்பட்டார்.

அவர் புத்தகப் பிரியராக இருந்தார். கிராம மக்களிடையே பயன்பாட்டிலிருந்த இரு புத்தகங்களில் தேர்ச்சிபெற்றவராக அவர் அறியப்பட்டிருந்தார். அவை ஜோதிடம் பற்றியவையாக இருந்தன. கிராம மக்கள் ஆர்வமாக அவரை அணுகி தங்களது அதிர்ஷ்டத்தை அறிந்துகொண்டனர். தனது இந்தச் சேவைகளுக்கு அவர் எந்தப் பணமும் பெற்றுக்கொள்ளாத காரணத்தால், கிராமப் பெண்கள் அத்தகைய புத்தகங்களை வைத்திருக்கும் பிறநபர்களைவிட சையித் குதுபிற்கே முன்னுரிமை அளித்தனர். மேலும், அவர் சிறுவயதினராக இருந்ததால் பெண்களும் யுவதிகளும் தங்கள் விருப்பங்கள், ரகசியங்கள், கவலைகள், அச்சங்களை அவரிடம் தெரிவிக்க தயக்கம் காட்டவில்லை.

ஒரு சமயம் பருவ வயதைத் தாண்டாத ஏழு இளம் பெண்கள் பள்ளிக்குள் நுழையும்போது ஒருசில மூத்த மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். அம்மாணவர்கள் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து விரும்பத்தகாத செய்கைகளையும் செய்தனர். சையித் குதுப் தன் குடும்பப் பாரம்பரியத்தில் உறுதியாக இருந்ததாலும் ஒழுக்கத்திற்குப் பெயர்பெற்றவராக இருந்ததாலும் இத்தகைய தகாத நடவடிக்கைகளைவிட்டும் அவர் தூரமாக விலகி இருந்தார். இவ்வாறு ‘தூரமாக இருப்பது’ என்பது ‘அவருக்கு அடுத்தவர்களை பற்றிய அக்கறை இல்லை’ என்பதற்கான அர்த்தம் அல்ல. பெண்களுக்கு எதிராக எந்தத் தாக்குதல் நடைபெற்றாலும் அவர் உடனடியாக அவர்களைக் காக்க அங்கு விரைவார். அவருடைய மாணவப் பருவ வாழ்வு முழுவதும் இந்தக் குணம் அவரிடம் இருந்தது.

சையித் குதுப் தன் குழந்தைப் பருவத்தில் இருந்தே மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். ஒழுக்கம், நெறிமுறைகளுக்கு முரணான ஒவ்வொரு செயல்களின் மீதும் அவர் வெறுப்படைந்தார். அவர் தன்னுடைய பெரும்பாலான நேரங்களை கிராமத்திலேயே கழித்தார். அவர் கூச்ச சுபாவமுடையவாரக இருந்தாலும் கிராம மக்கள் மத்தியில் குறைவாகவே அதை வெளிபடுத்துவார். அவர் குடும்பம் அவருக்கு அளித்த பயிற்சி உன்னதமானது. அவர் பிரபலமடைந்து கொய்ரோவிற்குப் பயணமான பிறகும்கூட அவரது உண்மை, நேர்மைத் தன்மைகளின் மீது அவர் பெற்ற பயிற்சியின் தாக்கம் இருந்தது.

ஒரு ஆதாரத்தின்படி, சையித் குதுப் தான் திருமணம் செய்ய உத்தேசித்திருந்த பெண்னை அநாகரிகமான நிலையில் அவளது வீட்டில் கண்டபோது மிகவும் அதிர்ச்சி அடைந்தார். சையித் குதுப் தனக்களிக்கப்பட்ட முதல் பயிற்சி ‘எப்பொழுதும் தூய்மையான சுழலைப் பேண வேண்டும்’ என்பதே என குறிப்பிட்டுள்ளார். கேளிக்கையான, பொழுதுபோக்கான வாழ்க்கை அவருக்குப் பொருந்தாது. எனவே, அவர் தனது வாழ்க்கையில் ஒருவகையான தீவிர விடாமுயற்சியை நோக்கி நகர்ந்தார். கவிதையும் கலைகளும் அவரது நோக்கையும் கற்பனையையும் சிக்கல்களில் இருந்து பாதுகாத்தன. இந்த அனைத்து மதிப்பீடுகளும் அவரை அவளை சந்தித்தபொழுது அவளிடமிருந்து தூரமாக்கி வைத்தன.

சையித் குதுப் நண்பர்களுடன் தனது அலுவலகத்தில் இருக்கும்போது அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தொலைபேசியில் அழைத்தார். அப்போது அவர் மிகவும் சங்கடமடைந்தார். உரையாடலின் முடிவில் தான் ஐந்து மணிக்குச் சந்திப்பதாக அப்பெண்ணிடம் கூறினார். அவரின் இந்த நடத்தை ‘அவர் சிறந்த ஒழுக்கமுடையவர்’ என்பதற்கும், ‘மற்றவர்களுக்கு, குறிப்பாக தன் நண்பர்களுக்கு மத்தியில் எவ்விதச் சந்தேகத்திற்கும் ஊகத்திற்கும் ஒருபோதும் இடமளித்ததில்லை’ என்பதற்குமான மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

Related posts

Leave a Comment