அறபு மலையாள இலக்கியத்தில் அறபுத் தமிழின் செல்வாக்கு
[14.03.2023 அன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற ‘அறபுத் தமிழ் இலக்கியங்கள்’ பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை]
ஆய்வு நோக்கம்
அறபு மலையாள இலக்கியத்தின் அடித்தளம் அறபுத் தமிழ் இலக்கியத்திலிருந்து எழுந்துள்ளதால் அதன் ஆய்வுகளை அறபுத் தமிழ் வரலாற்றிலிருந்து தொடங்க வேண்டும் என்பது அறபு மலையாள ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான வழிவகைகளை அறபுத் தமிழ் ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ‘அறபு மலையாள இலக்கியத்தில் அறபுத் தமிழின் செல்வாக்கு’ என்ற தலைப்பில் இந்த ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
ஆய்வுச் சுருக்கம்
அறபுத் தமிழுக்கும் அறபு மலையாளத்திற்கும் இடையேயான ஒற்றுமை என்பது இவ்விரு மொழிகளும் பிறந்த வரலாற்றுடன் மட்டுமன்றி பல நிலைகளிலும் ஒன்றுபட்டுள்ளது. இவ்விரண்டிற்கும் செழுமையான இலக்கிய மரபு உண்டு என்பதால் அவற்றை ஆய்வு செய்யும்போது அறபு மலையாள இலக்கியத்தில் அறபுத் தமிழ் மிகவும் செல்வாக்கு செலுத்தியிருப்பதை உணர முடியும். அவ்வகையில் அறபு மலையாளமும் அதன் செய்யுள் இலக்கியமும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஆய்வுச் சிக்கல்
அறபு மலையாளப் பாடல்களை இயற்றியவர்கள் பயன்படுத்திய தமிழ்ச் சொற்கள் நூல்களை மறுபதிப்புச் செய்பவர்களாலும் விளக்கவுரை எழுதுபவர்களாலும் சமஸ்கிருத உச்சரிப்புக்கு ஏற்றவாறு அல்லது நவீன மலையாளத்திற்கு ஏற்றவாறு திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. இப்பாடல்களில் பழந்தமிழிலிருந்து திரிந்த சொற்கள் காணப்படுவதால் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆய்வு முறையியல்
இங்கு கையாளப்படும் ஆய்வு முறையியல் என்பது இரண்டு இலக்கியங்களையும் ஒப்பீடு செய்யும் முறையாக இல்லை. அறபு மலையாள இலக்கியத்தில் அறபுத் தமிழின் செல்வாக்கு பற்றிய ஆய்வு என்பதால் அறபு மலையாள இலக்கியத்திலிருந்து மட்டுமே பாடல்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. தமிழ் செல்வாக்கு கூடுதலாக உள்ள பாடல்களிலிருந்து மட்டுமே மேற்கோள் காட்டப்படுகிறது.
திறவுச் சொற்கள்
அறபுத் தமிழ், அறபு மலையாளம், மாப்பிளப்பாட்டு, முஸ்லிம் தமிழ் இலக்கியம், மாப்பிள்ளை இலக்கியம், அறபு மலையாள இலக்கியம், அறபுத் தமிழ் இலக்கியம்
முன்னுரை
அறபு மலையாள இலக்கியம் என்பது கேரளாவின் மலபார் பகுதியில் தோன்றி வளர்ந்த மலையாள இலக்கியத்தின் கிளை இலக்கியமாகும். மலையாளமும் அறபும் தமிழும் கலந்த மொழிநடையிலிருந்து இவ்விலக்கியம் உருவெடுத்தது. இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலகட்டம்வரை செல்வாக்கு பெற்றிருந்த அறபு மலையாளத்தின் செழுமைக்கு இது சான்று பகர்கிறது. மலையாள இலக்கிய வடிவமைப்பிலிருந்து மாறுபட்டு நிற்கும் இவ்விலக்கியம் அறபுத் தமிழ் இலக்கியத்துடன் நெருங்கிய பிணைப்பைப் பெற்றுள்ளது. இதன் செய்யுள் இலக்கியம் ‘மாப்பிளப் பாட்டுகள்’ என்று அறியப்படுகிறது.
அறபு மலையாளம்
கேரளாவின் மலபார் பகுதி முஸ்லிம்களிடமிருந்து தோற்றம் பெற்றதால் இதை ’மாப்பிள மலையாளம்’ என்றும் கூறுவர். ‘மாப்பிள’ (மாப்பிள்ளை) என்பது மலபார் முஸ்லிம்களை மட்டுமன்றி தென் கேரளக் கிறிஸ்தவர்கள் சிலரையும் குறிக்கிறது. இவர்கள் தங்களை நஸறாணிகள் என்று கூறிக்கொள்வதால் ‘நஸறாணி மாப்பிள’ என்றும் அறியப்படுகின்றனர். எனினும் ’மாப்பிள்ளை’ என்பது பொதுவாக மலபார் பகுதி முஸ்லிம்களைக் குறிக்கும் சொல்லாக உள்ளது.
அறபு மலையாளம் மலபாரில் தோன்றி வளர்ந்தாலும் தென் தமிழ் நாட்டின் குளச்சல் முதல் தென் கர்நாடகாவின் மங்களூர் வரையிலான நிலப்பகுதியிலும் இலட்சத்தீவுகளிலும் செல்வாக்கு பெற்றிருந்தது. இது உருவான காலகட்டத்தை உறுதியாக வரையறுக்க இயலவில்லை. இஸ்லாம் கேரளாவில் பரவிய காலகட்டத்தில் தோன்றியிருக்கலாம் என்றும், ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம் என்றும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. மலையாள மொழி உருவாக்கம்பெற்ற வரலாற்றுடன் ஒப்பிடும்போது இக்கருத்துகள் பலவீனமானவையாகும். எனவே, அறபு மலையாள வரலாற்றிற்கும் மலையாள மொழி உருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மலையாள மொழியின் தோற்றம்
மலையாளம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நிலப்பகுதியைச் சுட்டிக்காட்டும் பெயராக இருந்தது. காலப்போக்கில் மொழியைக் குறிக்கும் பெயராக மாறிவிட்டது. பதினான்காம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கூறப்படும் ‘லீலாதிலகம்’ இம்மொழியை மலைநாட்டுத் தமிழ் என்றே குறிப்பிடுகிறது. மலையாள எழுத்தாளர்கள் இதைக் கொடுந்தமிழ் என்றும் குறிப்பிடுவர்.
கொடுந்தமிழுடன் சமஸ்கிருதம் கலக்கப்பட்டு உருவான மணிப்பிரவாளம் உயர் சாதியினரின் மொழியாக இருந்தது. மதத்திலும் அரசியலிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் சேர அரசின் மொழியாகவும் மாறியது. சமஸ்கிருத உச்சரிப்பிற்கு ஏற்றவாறு இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய எழுத்துமுறை மலையாளத்திலும் புகுத்தப்பட்டதால் அந்த எழுத்துமுறை மலையாளத்தை தமிழிலிருந்து தூரமாக்கியது. தமிழ் இலக்கண விதிமுறைகளுடன் சமஸ்கிருத நடைமுறை இணைக்கப்பட்டு மலையாள இலக்கணம் வரையறுக்கப்பட்டது. தமிழ் ஐந்திலக்கண மரபினைத் தழுவி எழுதப்பட்ட ‘லீலாதிலகம்’ முதல் மலையாள இலக்கண நூலாகக் கருதப்படுகிறது.
”பிராமண சமூகத்தினரின் கலப்பு மொழியும், எளிய மக்களின் மலைநாட்டுத் தமிழும் சில நூற்றாண்டுகள்வரை வேறுபட்டிருந்தாலும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் கிடைத்த முக்கியத்துவத்தால் இந்தக் கலப்பு மொழியானது மக்களின் பேச்சு மொழியில் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி துஞ்சத்து எழுத்தச்சன் காலத்தில் ஒன்றாகி மலையாளமாக உருவெடுத்தது” என்று மலையாள அறிஞர் இளம் குளம் குஞ்ஞன் பிள்ளை குறிப்பிடுகிறார்.1
மலையாளம் தமிழிலிருந்து தன்னை விடுவித்து சுதந்திர மொழியாக மாறிய காலகட்டம் கி.பி. பன்னிரண்டாக இருக்கலாம் என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது. எனினும், மலையாளம் தனி மொழியாக வளர்ச்சியடைந்து 500 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதே உண்மையாகும்.
மலையாளம் இளைய மொழியாக இருப்பதால் அறபு மலையாள வரலாற்றை மலையாள மொழி வரலாற்றுடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்வதே பொருத்தமாக இருக்கும்.
கேரளாவில் அறபுத் தமிழின் செல்வாக்கு
துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளத்தை செம்மைப்படுத்தி தனி மொழியாக மாற்றுவதற்கு முன்னரே அறபு மலையாள இலக்கியம் தோன்றிவிட்டது. எழுத்தச்சன் அத்யாத்ம இராமாயணம் எழுதுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முஹ்யித்தீன் மாலையை கோழிக்கோடு காழீ முஹம்மது அவர்கள் இயற்றியுள்ளார். மாப்பிள்ளை முஸ்லிம்களின் மொழிநடையாக மலையாள வட்டார வழக்குடன் தமிழ் கலந்த கலப்பு மொழி அப்பகுதியில் பேசப்பட்டு வந்ததால் இம்மொழிநடையைத் தழுவியே முஹ்யித்தீன் மாலை இயற்றப்பட்டுள்ளது.
அறபு மலையாளம் தோன்றுவதற்கு முன்னர் அறபுத் தமிழ் இங்கு நடைமுறையில் இருந்தது. மக்களின் பேச்சு வழக்கு மலைநாட்டுத் தமிழிலிருந்து மலையாளமாக மாறிய சூழலில் அறபு மலையாளமும் உருவெடுத்தது. எனினும், அறபுத் தமிழும் அறபு மலையாளமும் சிறிய வேறுபாடுகளுடன் ஒன்றிணைந்து பயணித்து வந்துள்ளன. அறபு மலையாளத்தில் காணப்படும் அறபுத் தமிழ் செல்வாக்கிற்கு இதுவே முன்னோடியாகும். மலையாளம் தமிழிலிருந்து விடுவிக்கப்பட்டு தனி மொழியாக மாற்றப்பட்ட பின்னர் அறபு மலையாளமும் காலப்போக்கில் மாறுதல்களை அடைந்தது.
அறபுத் தமிழ் வரலாற்றை எழுதுபவர்கள் மொழிவழி மாநிலங்கள் உருவான பிறகு உள்ள தமிழக வரலாற்றுடன் சுருக்கி எழுதுவதால் இதன் வரலாறும் மறைந்துவிடுகிறது. தென் கேரளாவில் எழுந்த அறபுத் தமிழ்ப் பாடல்களை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதற்கு இதுவும் காரணமாகும். இப்பகுதிகளில் அறபு மலையாளம் பரவியிருந்த போதும் பல ஊர்களிலும் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி அறபுத் தமிழிலும் கற்பிக்கப்பட்டு வந்தது. அறபு மலையாளமும் அறபுத் தமிழும் இணைந்த பாடநடைமுறையும் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம்வரை இந்நிலை நீடித்தது.
”மாப்பிள்ளை இலக்கிய மொழியின் வளர்ச்சியில் இலட்சத்தீவிற்கும் பங்குண்டு. தமிழகத்தின் காயல்பட்டினம், தேங்காய்பட்டினம் பகுதிகளும் இதில் அடங்கும். காதிரிய்யா தரீக்கத் தொடர்பான செயல்பாடுகள் கேரளாவிற்கு இந்த ஊர்களின் வழியாக நடைபெற்று வந்தன”.2 மாப்பிள்ளைக் கவிஞர்கள் பாடல்கள் இயற்றுவதில் புலமை பெறுவதற்காக இப்பகுதிகளுக்கு வந்துசென்ற குறிப்புகளும் உள்ளன.
ஸூஃபித் தமிழ்ப் புலவர்களின் நூல்கள் கேரளக்கரையில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியதால் அங்குள்ள இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுப்பது வழக்கமாக இருந்தது. தமிழ்ப் புலமை பெறவும் செய்யுள் இயற்றும் விதிமுறைகளைக் கற்கவும் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் உறுதுணையாக இருந்தனர். மாப்பிள்ளை இலக்கிய வளர்ச்சியில் இவர்களின் பங்களிப்பு இருந்ததால் அதன் தமிழ் மரபு காப்பாற்றப்பட்டது. மலையாள இலக்கியத்தில் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் இவ்விலக்கியம் தமிழ் மரபைப் பின்பற்றி பெருவளர்ச்சியடைந்தது. இதன் தமிழ்ச் செல்வாக்கு குறித்த ஆய்வுகள் கேரள ஆய்வாளர்களிடம் தற்போது முக்கியத்துவம் பெற்றவையாக மாறியுள்ளன. எனவே ’மாப்பிளப் பாட்டுகள்’ குறித்த ஆய்வுகளை தமிழ் நாட்டிலிருந்து தொடங்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.3
அறபுத் தமிழிலிருந்து அறபு மலையாளம் சுதந்திரமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டதா என்ற கண்ணோட்டத்தில் ஆய்வுகளை மேற்கொள்வது கட்டாயமாகும். தொடக்கத்தில் இரண்டு மொழிகளும் ஒன்றாகவோ அல்லது சிறிய வேறுபாடுகளுடனோ இருந்திருக்கலாம். அச்சக வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தில் எழுத்துமுறையில் வேறுபாடு வந்திருக்கலாம்.
அக்காலத்தில் அறபு மலையாளம் தெரிந்தவர்களால் அறபுத் தமிழை இலகுவாக வாசித்து விளங்க முடிந்தது. அறபுத் தமிழ் நூல்களை மொழிபெயர்க்காமல் அறபு மலையாள எழுத்துருவிலும் அச்சிட்டனர். முஹ்யித்தீன் மாலை போன்ற அறபு மலையாள நூல்கள் அறபுத் தமிழ் எழுத்துருவிலும் தமிழகத்தில் அச்சிடப்பட்டன.
வட கேரளாவின் காசர்கோடு மாவட்டத்திலுள்ள மொக்ரால் என்ற சிற்றூர் அறபுத் தமிழ் இலக்கியத்தையும் அறபு மலையாள இலக்கியத்தையும் போற்றி வளர்த்த ஊர்களில் ஒன்றாகும். இவ்வூர் அறபுத் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் நிறைந்த பகுதியாகத் திகழ்ந்தது. திருமணங்களிலும் பிற நிகழ்ச்சிகளிலும் இஸ்லாமியத் தமிழ்ப் பாடல்களை இன்னிசைத்து மகிழ்வது இவர்களின் வழக்கமாக இருந்தது. இங்கு நடைபெற்ற கவியரங்குகளில் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தமிழகத்திலிருந்து சென்று பாடல்களை அரங்கேற்றி வந்தனர். மங்களூரில் நடைபெற்ற கவியரங்குகளிலும் இவர்கள் பங்கெடுத்தனர். கலைகளை ஊட்டி வளர்த்த மொக்ராலில் வீட்டுக்கொரு கவி என்று சொல்லும் அளவிற்கு இவ்வூர் கவிஞர்களால் நிறைந்திருந்தது. இதனால் மொக்ரால் ’இஷல் கிராமம்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
மாப்பிள்ளைப் பாட்டின் தமிழ் மரபு
இயல் என்ற தமிழ்ச் சொல்லிருந்து ’இஷல்’ என்ற சொல் பிறந்ததாகக் கருதப்படுகிறது. மாப்பிள்ளைப் பாட்டின் விருத்தங்கள் பொதுவாக இஷல் என்றாலும் பாட்டின் அளவு, சந்தம், மட்டு, விருத்தம் முதலியன சேர்ந்த ஈணம் அல்லது தாளக்கட்டு பொதுவாக ’இஷல்’ என்று கூறப்படுகிறது. நாட்டுப்புறப் பாடல்களிலிருந்தும் அறபுப் பாடல்களிலிருந்தும் தமிழ்ப் பாடல்களிலிருந்தும் பல இஷல்களை மாப்பிள்ளைப் பாட்டு எடுத்துக்கொண்டது.
”அறபுத் தமிழில் எழுதப்பட்ட ஸக்கூம் படைப்போரை அடியொற்றி ’ஸக்கூம் படப்பாட்டு’ என்ற நூல் அறபு மலையாளத்தில் எழுதப்பட்டது. மகாகவி மோயின் குட்டி வைத்தியர் போன்ற பல மாப்பிள்ளைக் கவிஞர்களும் ஸக்கூம் படப்பாட்டிலிருந்து பல இஷல்களை எடுத்துக்கொண்டனர். தமிழிலிருந்து எடுக்கப்பட்ட தளர் விருத்தம், தொடர் விருத்தம், பகர விருத்தம், சிறு விருத்தம், வண்ணம், திருப்புத் தமிழ், தமிழ்ப் பதம் முதலிய இஷல்கள் இந்நூலில் உண்டு”.4
மலையாளக் கவிஞர்கள் சமஸ்கிருதச் சொற்களை அதிக அளவில் பயன்படுத்துவது நடைமுறையாக இருக்க, மாப்பிள்ளைக் கவிஞர்கள் தமிழ்ச் சொற்களை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர். மலையாள இலக்கியம் அறிந்திராத ஏரளமான தமிழ்ச் சொற்களை அறபு மலையாள இலக்கியத்தில் காண முடியும்.
”இறைவன், பரன், கோன், புகழ்ச்சி, வாழ்த்து, அரிகோர், வேந்தர், வரிசை, அண்டம், பொய், மெய், இன்பம், நெடில் (ஒட்டகம்), பட்டாங்கு, மகுடம், புவி, பார், நெறி, மரக்கலம், மடவி, கணவன், வள்ளல்” போன்ற நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
”மன்றாடுவீர், கூறினார், அவர் சொன்னார், கோன் அவன் பொறுக்கும், உரை கேட்டு, பொங்கியெழுந்து,போர் கழிந்து, இந்த தினம் தனில், மண்ணில் பிறந்து, இறைமனை எரிக்கக் கண்டு, அல்லும் பகலும்” போன்ற மலையாள உச்சரிப்பிற்கு மாறுபட்ட ஏராளமான சொற்றொடர்களையும் காண முடியும்.
முஸ்லிம் தமிழ் இலக்கியம் ஸூஃபி வழியில் வேரூன்றி இருப்பதுபோல் அறபு மலையாள இலக்கியமும் அதே மரபில் செல்கிறது. இதன் முதன்மையான காவியமாகக் கருதப்படும் முஹ்யித்தீன் மாலை கோழிக்கோடு காஜியாக இருந்த காழீ முஹம்மது அவர்களால் கொல்ல வருடம் 782இல் (கி.பி.1607) இயற்றப்பட்டது. மலையாள மொழியின் தந்தையாகக் கொண்டாடப்படும் துஞ்சத்து இராமானுஜ எழுத்தச்சன் அத்யாத்ம ராமாயணத்தை இயற்றுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முஹ்யித்தீன் மாலை இயற்றப்பட்டது. முஹ்யித்தீன் மாலையை தமிழ்ச் சுவை கொண்ட காவியம் என்பர்.
“முத்தும் மாணிக்கவும் ஒன்னாயி கோர்த்த போல்
முஹ்யித்தீன் மாலனெ கோர்த்தன் ஞான் லோகரே”
என்று மாலையின் காவிய மொழி பற்றி காழீ முஹம்மது அவர்கள் பாட்டில் கூறியுள்ளார்.
”பதினான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘லீலாதிலகம்’ தமிழ் மணியும் சமஸ்கிருத பவளமும் இணைந்த மணிப்பிரவாள காவியமாக இருப்பதுபோல் மலைநாட்டு மொழியான முத்தும் அறபி மொழியான மாணிக்கமும் கோர்க்கப்பட்டு உருவான காவியம்தான் முஹ்யித்தீன் மாலை” என்று மாப்பிள்ளை இலக்கிய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வள்ளிக்குன்னு அவர்கள் விளக்கமளிக்கிறார்.5
”பாலிலே வெண்ணபோல் பைத்தாக்கி சொல்லுன்னன்
பாக்கியம் உள்ளவர் இதினெ படிச்சோவர்”
(முஹ்யித்தீன் மாலை)
”நயினார் முஹம்மதில் நின்றே ஸலவாத்தும்
நல்ல ஸலாமும் வழங்கணம் நீ அல்லாஹ்”
(பதர் மாலை)
”உதி பகலில் ஒக்கயும் நல் நோம்பதும் புடித்தெ
உறங்கிடாதெ ராவில் நிண்டு தொழுதிடும் ஸதத்தெ”
(நஃபீஸத் மாலை)
”பிஸ்மி துதிப்பேரும் துதியும் ஸலவாத்தும்
வேதாம்பர்க்காக்கி அதினால் துடங்குவான்”
(ரிஃபாயி மாலை)
மேற்கண்ட பாடல்கள் மொழிநடையிலும் உச்சரிப்பிலும் இலக்கண அமைப்பிலும் மலையாள இலக்கியத்திலிருந்து மாறுபடுகிறது. அறபு மலையாள இலக்கியத்தை மலையாள இலக்கியமாக ஏற்றுக்கொள்ள மலையாள அறிஞர்கள் தயங்குவதற்கு இதுபோன்ற உதாரணங்களைக் கூறமுடியும்.
முஹ்யித்தீன் மாலைக்குப் பிறகு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகள் கழித்து குஞ்ஞாயின் முஸ்லியார் அவர்கள் இயற்றிய கப்பப்பாட்டு, நூல் மாலை, நூல் மத்ஹ் முதலியன மாப்பிள்ளை இலக்கியத்தை முஸ்லிம் தமிழ் இலக்கியத்திற்கு இன்னும் நெருக்கமாக்கின.
”கி.பி.1607இல் இயற்றப்பட்ட முஹ்யித்தீன் மாலையில் இருபது விழுக்காடு தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருக்க நூல்மாலையில் அது எண்பது விழுக்காடாக மாறுகிறது. இக்காலத் தமிழ் அறிஞர்களுக்கு புலப்படாததும் பயன்பாட்டில் இல்லாததுமான ஏராளமான தமிழ்ச் சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன. பிற சமுதாயக் கவிஞர்கள் அக்காலத்தில் வட்டார மொழியையும் சமஸ்கிருதத்தையும் தங்கள் பாடல்களில் பயன்படுத்தினர். ஆனால் குஞ்ஞாயின் முஸ்லியார் அறபுத் தமிழின் பரம்பரைத் தொடரில் தன்னை நிலைநிறுத்துகிறார். மாப்பிள்ளைச் சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்திய காதிரிய்யா தரீக்கத் தமிழ் வழியில் கேரளத்தை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.6
மாப்பிள்ளை இலக்கியத்தின் அடித்தளம் ஸூஃபி ஞானவழியில் கட்டமைக்கப்பட்டதால் தமிழக ஸூஃபிப் புலவர்களின் பாசறையில் இவ்விலக்கியம் வளம் பெற்றது. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றஹ்) அவர்களை முன்னிறுத்தி குஞ்ஞாயின் முஸ்லியார் இயற்றிய நூல் மாலையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். நூல் மாலை குறைவான மலையாளச் சொற்களுடன் தமிழ் நடையில் அமைந்துள்ளது.
”ஓதி ஓதி அறிந்ததே
உறவாலே ஊறி நிறைந்ததே
பூதி பூதி விளைந்ததே
புதுவாண்டெ போதம் அறிந்ததே
சாதிசேதி விரிந்ததே
சமயபொருள் வசிகண்டதே”
(குருவிடம் நன்கு படித்து விளங்கிக் கொண்டால் ஊற்றிலிருந்து நீர் ஊறி வருவது போன்று ஞானம் பெருக்கெடுக்கும். அதிலிருந்து பலவித ஞானங்கள் விளைந்து புதுமையான அறிவுகள் பிறக்கும். இதன்மூலம் உள்ளம் விசாலமாகி அகப்பொருளை அறிய முடியும்)
குஞ்ஞாயின் முஸ்லியார் நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடிய ‘நூல் மத்ஹ்’ என்ற காவியம் அறபுத் தமிழ் காவியமோ என்று கருதும் அளவிற்கு தமிழ் நடையில் உள்ளது. இந்நூலில் எண்பது விழுக்காட்டிற்கும் மேல் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதன் அறிமுகவுரை தமிழில் தொடங்குகிறது.
“ஆதிதன் அருளினால் பெருமான் வந்து அண்டம் ஏழும் கடந்து அர்ஷின்னு முடிநின்றே முஹம்மது நபியை காண்பதுக்கு என்னில் ஆசைக்கடல் பொங்கும். அதினால் இம்மத்ஹு நூல் மாலை பணிவதுக்கு அல்லாஹ்வே தாரும் உன்துணை காப்பு”
(அல்லாஹ்வின் அருளால் பெருமான் வந்து அண்டம் ஏழும் கடந்து அர்ஷ் வரை சென்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்கு எனக்கு ஆசைக்கடல் பொங்குகிறது. அதனால் இந்த நூல்மத்ஹ் மாலையை இயற்றுவதற்கு அல்லாஹ்வே துணை செய்வாயாக! நீயே காப்பு)
”மதனமணமுடி அழகும் நபியுட மத்ஹும் உரைசெய்து முடியுமோ
நதி இக்கடல் தனமறுத்து பலவகை தடித்து குடித்து உடன் ஒழுகுமோ
பதனம் புவிமலை உறவு பொரிப்பதும் பக ஒத்தெடுத்திடல் அடங்குமோ
மதத்தில் மழை சொரித்து அடங்கும் நபி குடமடித்தது ஒரு பொழுதடங்குமோ”
(மதனமணிமுடியின் அழகையும் நபி (ஸல்) அவர்களின் புகழையும் உரைசெய்து முடிக்க முடியாது. நதியிலிருந்தும் கடலிலிருந்தும் நீரைப் பருகுவதால் அவை வற்றிவிடாது. மலையிலிருந்து ஊற்றெடுத்து வரும் நீரைத் தடுத்துநிறுத்த முடியாது. பெருமழை பெய்து அடங்கும் என்றாலும் நபி (ஸல்) அவர்களின் புகழ் கீர்த்திக்கு ஒரு பொழுதும் வரையறை இல்லை)
(நூல் மத்ஹ்)
குஞ்ஞாயின் முஸ்லியார் இயற்றிய ’கப்பப்பாட்டு’ என்ற கப்பல் பாட்டு அன்றைய மக்களின் நடைமுறை மொழியில் இருந்தாலும் தமிழின் செல்வாக்கிற்கு இதில் பஞ்சமில்லை.
”நாயன் என்னுன்னி நடப்போவர் எல்லாம்
நன்னாயி நினந்து மனம் வோர்த்து காமீன்
மாயம் ஒழித்து மனம் வோர்த்து கண்டால்
மந்தம் ஒழித்தேற்றம் முந்தி நடக்காம்
காயம் முழுத்து கறுத்துள்ள சிந்தா
காலா களங்கம் ஒழித்து துளங்கும்”
(தங்களை நாயகர்களாகக் கருதி நடப்பவர்கள் நன்றாகச் சிந்தித்து மனதில் நிலைநிறுத்தவேண்டும். மனோ இச்சைகளை விட்டும் விலகி மனதை இறை சிந்தனையில் ஒருமுகப்படுத்தினால் பாவங்களை விட்டும் விலகி ஈடேற்றம் பெறலாம். உடல் இச்சைக்கு வழிப்பட்டு அதில் மூழ்கினால் உள்ளத்தில் கறுத்த பாவக் கறைகள் படிந்து களங்கப்படுத்தி அவனை அழித்துவிடும்)
(கப்பப்பாட்டு)
நூல் மத்ஹும் நூல் மாலையும் அறபுத் தமிழ்க் காவியமோ என்று சொல்லும் அளவிற்கு தமிழால் நிறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இதில் ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
அறபு மலையாள இலக்கியத்தைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு சென்றவர் மகாகவி மோயின் குட்டி வைத்தியர் ஆவார். இவருடைய பெரும்பாலான பாடல்களில் மலையாளச் சொற்கள் குறைவாகவும் தமிழ், அறபு மொழிச் சொற்கள் கூடுதலாகவும் இருக்கும். அத்துடன் இஷல் நயத்திற்காக சமஸ்கிருதம், ஃபார்ஸி, உருது, பியாரி முதலிய மொழிகளிலிருந்தும் சொற்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவர் முதலில் இயற்றிய ‘பதறுல் முனீர் ஹுஸ்னுல் ஜமால்’ என்ற காதல் காவியம் வரைமுறைகளுக்கு உட்பட்டு இயற்றப்பட்டிருப்பதால் அனைவரிடமும் புகழ் பெற்றுள்ளது. இக்காவியத்தின் தொடக்கம் முஸ்லிம் தமிழ் இலக்கிய நடையுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது.
”ஆதிதன் திருநாமத்தால் அடியன் இக்கவி துடர்த்தான்
நாதியான் புவி அமைத்தான் நாயனில் ஹம்து அணைத்தான்
காதிறின் திருபுறத்தால் ஹாத்திமுர்ரசூல் உதித்தான்
வேதியர்க்கவன் ஸலாத்தால் விரிகவெ ஸலாமுரைத்தான்”
(இறைவனின் திருநாமத்தால் இக்காவியத்தை அடியேன் தொடங்குகிறேன். இவ்வுலகைப் படைத்த நாயனான அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அந்த வல்லமையாளன் இறுதி நபி (ஸல்) அவர்களை உதிக்கச் செய்தான். அந்த நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்தும் ஸலாமும் உரைக்கிறேன்)
மோயின் குட்டி வைத்தியர் இயற்றிய ’பத்றுல் குப்றா’ என்ற ’பத்ர் கிஸ்ஸப்பாட்டு’ கேரளாவின் கலை நிகழ்ச்சிகளில் அதிகமாகப் பாடப்படுகிறது. காலனியாதிக்கப் போராட்டங்களில் இப்பாடல்களின் செல்வாக்கினைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள இதற்குத் தடை விதித்தனர். ’படப்பாட்டு’ என்ற படைப்போர் பாடல்கள் காலனியாதிக்க எதிர்ப்பாளர்களுக்கு உற்சாகத்தையும் காலனியாதிக்க ஆதரவாளர்களுக்கு அச்சத்தையும் அளித்ததே இதுபோன்ற ”படப்பாட்டுகள்” தடை செய்யப்படுவதற்கான முக்கியக் காரணமாகும்.
”வாழ்த்தும் முத்து அணி கூட்டத்தாச திருதருள்
மஹ்மூதர் நபி வாழுன்னே
வாழ்க்கையும் வரிசை தரும் குடைதீனும்
மார்க்கவும் வளர் வீசுன்னே
தீர்த்தும் பூக்கு அனில சுகம்கொண்டு அரிகோரும்’
தீன் தீன் அம்மதம் பேசுன்னே
தீரத்தில் கித்தாலின்றெ ஆயத்தானதும்
திருநபிக்கு இறங்கி வன்னே”
(அல்லாஹ் வாழ்த்தும் முத்து முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் மதீனாவில் வாழ்ந்து வருகின்றனர். அதிகாரமும் வரிசை மிகுந்த தீனுல் இஸ்லாம் மார்க்கமும் வளர்ந்து வருகிறது. அந்த தீனை உறுதியாகப் பின்பற்றி அந்த வசந்தத்தில் நபித்தோழர்களும் தீனை பரப்புவதை விடாது செய்து வந்தனர். இந்நிலையில் போர் தொடர்பான வசனம் நபி(ஸல்) அவர்ளுக்கு இறக்கப்பட்டது)
(பத்ர் கிஸ்ஸப்பாட்டு)
மோயின் குட்டி வைத்தியரின் ‘மலப்புரம் கிஸ்ஸப்பாட்டு’, ‘மதிநிதி மாலை’ போன்ற நூல்களிலும் இத்தகைய நடையைக் காணவியலும்.
”எத்தி நடந்தவர் மலயாளத்தில் இந்த கொடுங்கல்லூர் நகர் தானத்தில்
கத்தும் முடிவேந்தர் மணி தாஜுத்தீன் ஹாஜீ வசிய்யத்தும் குறியால் முந்தி
தெத்தாத் அரசர் சம்மதத்தால் இஸ்லாம் தீனை நடத்தினார் ஷரஅ நூலாம்
உத்தெ கொடுங்கல்லூர் முதல் மற்ற எல்லாம் ஓரோ தலம் நோக்கி பனா பைத்துல்லாஹ்”
(மலையாளக் கரையிலுள்ள கொடுங்கல்லூர் நகரத்தில் வந்திறங்கிய மாலிக் இப்னு தீனார் அவர்களின் தலைமையிலான குழுவினர் தாஜுத்தீன் (சேரமான் பெருமாள்) அவர்களின் இறுதி வேண்டுகோளை அரசரிடம் எடுத்துரைத்தனர். அரசரின் அனுமதியோடு கொடுங்கல்லூரிலிருந்து பல ஊர்கள் வரை இவர்கள் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து பள்ளிவாசல்களைக் கட்டினர்)
(மலப்புரம் கிஸ்ஸா)
”அறபுத் தமிழ்ப் பாரம்பரியத்திலிருந்து அறபு மலையாளம் ஆற்றல் பெற்றது என்பதற்கு பதினாறாம் நூற்றாண்டின் காழீ முஹம்மது அவர்கள் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மோயின் குட்டி வைத்தியர் வரை வந்த மாப்பிள்ளைக் கவிஞர்களின் படைப்புகள் எடுத்துக்காட்டுகளாக உள்ளன.7 இம்மரபு இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம்வரை நீடித்திருந்தாலும் நவீன மலையாளத்தின் சாய்மானத்தில் அறபு மலையாள இலக்கியம் அதன் உயிரோட்டமாக விளங்கிய தமிழ் மரபை இழந்தது.
முடிவுரை
மலையாள மொழியில் இல்லாத ஏராளமான பழந்தமிழ்ச் சொற்களும் தனிப்பட்ட உச்சரிப்புகளும் இலக்கண வேறுபாடுகளும் அறபு மலையாளத்தில் உண்டு என்பதற்கு அதன் இலக்கியம் சான்று பகர்கிறது. எனவே இவ்விலக்கியத்திற்கு உயிரோட்டமாக விளங்கிய அறபுத் தமிழ் குறித்த ஆய்வுகளை அறிஞர்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும். தமிழ் முஸ்லிம் புலவர்கள் ஏற்படுத்தியிருந்த வலுவான தொடர்புகளை மீண்டும் புதுப்பித்து வரலாற்றை மீட்க வேண்டும். மரபு சார்ந்த உறவுகளை வலுப்படுத்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
அடிக்குறிப்புகள்
- Kerala Charithram Sambavangaliloode (கேரள சரித்ரம் சம்பவங்ஙளிலூடெ, பி.சிவதாஸன்), பக்கம் 29
- Arabi-Malayalam Malayalathinre Classical Baavangal (அறபி மலயாளம் மலயாளத்தின்றெ கிளாசிக்கல் பாவங்ஙள்), பி.எ. அபுபக்கர், பக்கம் 59
- Vaidyaruda Kaavya Logam (வைத்யருட காவ்ய லோகம்), கெ.அபுபக்கர், பக்கம் 27
- Mappila Paatinre Verugal Thedi (மாப்பிளப்பாட்டின்றெ வேருகள் தேடி), ஹஸன் நெடியநாடு, பக்கம் 90
- Mappila Basha Arabi-Malayalathil Ninnu Shresta Malayalathilekku (மாப்பிள பாஷ அரபி மலையாளத்தில் நின்னு ஸ்ரேஷ்ட மலயாளத்திலேக்கு), பாலகிருஷ்ணன் வள்ளிக்குன்னு, பக்கம் 73
- Mappila Saahithyavum Malayala Baavanayum (மாப்பிள சாஹித்யவும் மலயாள பாவனயும்), வி. ஹிக்மத்துல்லாஹ் பக்கம் 80
- Mappila Saahithyavum Malayala Baavanayum (மாப்பிள சாஹித்யவும் மலயாள பாவனயும்), வி. ஹிக்மத்துல்லாஹ் பக்கம் 69
துணைநின்ற நூல்கள்
- Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu, Tayka Shuayb Alim,Imamul Arus Trust,Chennai. 1993,
- 155 Vaga Maulid Kitab (Arabi-Malayalam) (155 வக மவ்லிது கிதாப்), Ashrafi Book Center, Thirurangadi, Kerala
- Badrul Kubra (Arabi-Malayalam) (பத்றுல் குப்றா மகாகவி மோயின் குட்டி வைத்தியர்), C:H.Mohamed & Sons, Thirurangadi, Kerala.Hijri 1405
- Malappuram Kissappattu Mathinithi Maalai (Arabi-Malayalam), (மலப்புரம் கிஸ்ஸப்பாட்டு மதிநிதி மாலை, மகாகவி மோயின் குட்டி வைத்தியர்), C:H.Mohamed & Sons, Thirurangadi, Kerala., Hijri 1403
- Badrul Muneer Husnul Jamal (Arabi-Malayalam) (பத்றுல் முனீர் ஹுஸ்னுல் ஜமால், மகாகவி மோயின் குட்டி வைத்தியர்), C:H.Mohamed & Sons, Thirurangadi, Kerala.Hijri 1382
- Islam Valartha Tamil (இஸ்லாம் வளர்த்த தமிழ், ம.மு.உவைஸ்),உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,சென்னை, 1984
- Thengappattanamum Mappillai Paattugalin Vergalum (தேங்காய்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களும், தோப்பில் முஹம்மது மீரான்), எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, ஜூலை 2019
- Aarodum Chollathe (ஆரோடும் சொல்லாதெ, தோப்பில் முஹம்மது மீரான்-மலையாளம்), Islamic Publishing Bureau, Kozhikode, Kerala, September 2015
- Arabi-Malayalam Malayalathinre Classical Baavangal (அரபி மலயாளம் – மலயாளத்தின்றெ கிளாசிக்கல் பாவங்ஙள், பி.எ. அபுபக்கர்), Mahakavi Moyin Kutty Vaidyar Mappila Kala Academy , Kondotty, Kerala, September 2018
- Mappila Paatinre Verugal Thedi (மாப்பிளப்பாட்டின்றெ வேருகள் தேடி, ஹஸன் நெடியநாடு), Vachanam Books, Kozhikode, Kerala, 2017 February
- Mappila Saahithyavum Malayala Baavanayum (மாப்பிள சாஹித்யவும் மலயாள பாவனயும், வி. ஹிக்மத்துல்லாஹ்) Book Plus, Chemmad, Thirurangadi, Kerala, November 2017
- Mappilappattu Oraamuga Padanam (மாப்பிளப்பாட்டு ஒராமுக படனம், பாலகிருஷ்ணன் வள்ளிக்குன்னு), Poonkavanam Publications, Kozhikode, Kerala. July1999
- Mappila Baasha Arabi Malayalathil Ninnu Shresta Malayalathilekku (மாப்பிள பாஷ அரபி மலையாளத்தில் நின்னு ஸ்ரேஷ்ட மலயாளத்திலேக்கு),பாலகிருஷ்ணன் வள்ளிக்குன்னு, Vachanam Books, Kozhikode, Kerala, September 2018
- Arabi-Malayalam Paryaaya Nigandu (அரபி மலயாளம் பர்யாய நிகண்டு,இ.ஸெய்னுத்தீன்) State Institute Of Languages, Thiruvananthapuram, June 1992
- Badrul Kubra (பத்றுல் குப்றா- விளக்கம், பி.கெ.அலி மவ்லவி கொடக்கல்லு), Mahakavi Moyin Kutty Vaidyar Mappila Kala Academy, Kondotty, Kerala,2011 August
- Badrul Muneer Husnul Jamal (பத்றுல் முனீர் ஹுஸ்னுல் ஜமால் – விளக்கம், பி.கெ.அலி மவ்லவி கொடக்கல்லு), Mahakavi Moyin Kutty Vaidyar Mappila Kala Academy, Kondotty, Kerala, June 2011
- Malappuram Padappaattu Paadavum Padanavum (மலப்புரம் படப்பாட்டு பாடவும் படனவும், பாலகிருஷ்ணன் வள்ளிக்குன்னு), Mahakavi Moyin Kutty Vaidyar Mappila Kala Academy, Kondotty, Kerala, March 2016
- Kunjaayin Musliyarude Nool Madh Kavithayum Kaalavum (குஞ்ஞாயின் முஸ்லியாருடெ நூல் மத்ஹ் கவிதயும் காலவும்), பி.ஸக்கீர் ஹுஸைன், Mahakavi Moyin Kutty Vaidyar Mappila Kala Academy, Kondotty, Kerala, September 2014
- Nool Maala Mozhiyum Porulum (நூல் மால, மொழியும் பொருளும், பி.ஸக்கீர் ஹுஸைன்), Mahakavi Moyin Kutty Vaidyar Mappila Kala Academy, Kondotty, Kerala, October 2015
- Kappapaattu Oru Dhaarshaneeka Padanam (கப்ப்ப்பாட்டு ஒரு தார்ஸனீக படனம், பி.ஸக்கீர் ஹுஸைன்) Mahakavi Moyin Kutty Vaidyar Mappila Kala Academy, Kondotty, Kerala, September 2014
- Vaidyaruda Kaavya Logam (வைத்யருட காவ்ய லோகம், கெ.அபுபக்கர்), Islamic Publishing Bureau, Kozhikode, Kerala, February 2007
- Kerala Charithram Sambavangaliloode (கேரள சரித்ரம், சம்பவங்ஙளிலூடெ, பி.சிவதாஸன்), Chintha Publishers, Thiruvananthapuram, Kerala, ,Kottayam, August 2007
- Malayalam Maatravum Valarchayum (மலயாளம் மாற்றவும் வளர்ச்சயும், கெ.எம். பிரபாகர வாரியர்), Vallathol Vidhyapeedam Sukapuram, Kerala
- Baashaa Padanangal (பாஷா படனங்ஙள், M.R.ராகவ வாரியர்), Sahithya Pravathaka Co-Operative Soceity Ltd, Kottayam , Kerala, April 2013
- Malayalam Baashayum Saahithyavum (மலயாளம் பாஷயும் சாஹித்யவும்,எஸ்.ராஜசேகரன்),Chintha Publishers, Thiruvananthapuram, Kerala, December 2010
[நன்றி: Jamal Academic Research Journal: An Interdisciplinary, ’அரபுத்தமிழ் இலக்கியங்கள் – Arabu Tamil Literature’ சிறப்பிதழ், பக்.53-67]