கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பிறை பார்த்தல்: நபிமொழியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

புகழ்பெற்ற, ஸஹீஹான நபிமொழியொன்று:

“அதனை (அதாவது பிறையைக்) கண்டு நோன்பு வையுங்கள்; அதனைக் கண்டே நோன்பு நோற்பதை நிறுத்துங்கள். அது உங்கள் பார்வையை விட்டு மறைக்கப்பட்டுவிட்டால் (அம்மாதத்தின் நாள்களை) கணக்கிடுங்கள்!”

மற்றோர் அறிவிப்பில்,

“உங்களுக்கு அது மறைக்கப்பட்டால், ஷஅபானின் எண்ணிக்கையை முப்பதாகப் பூர்த்திசெய்யுங்கள்.”

“இந்த நபிமொழி ஒரு நோக்கத்தைச் சுட்டிக்காட்டி, அதற்கான சாதனத்தையும் குறிப்பிடுகின்றது” என இதுகுறித்து சட்ட அறிஞரால் கூற முடியும். நபிமொழியின் நோக்கத்தைப் பொறுத்தவரை அது மிகத் தெளிவானது. றமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்; அதன் ஆரம்பத்திலோ இறுதியிலோ ஒரு நாளைக்கூட வீணாக்கி விடக்கூடாது; அவ்வாறே ஷஅபான் ஷவ்வால் ஷவ்வால் போன்ற மற்றொரு மாதத்தின் நாளொன்றை நோன்பு நோற்க எடுத்துக்கொள்ளவும் கூடாது என்பதே அந்த நோக்கமாகும்.

பெரும்பான்மை மக்களின் சக்திக்குட்பட்ட, அவர்களின் மார்க்க விஷயத்தில் எவ்விதக் கஷ்டத்தையும் சங்கடத்தையும் உண்டுபண்ணாத சாதனமொன்றைக் கொண்டு மாதத்தின் தொடக்கத்தையும் முடிவையும் உறுதிப்படுத்துவதன் மூலமாகவே இந்நோக்கம் நிறைவு செய்யப்பட முடியும்.

வெற்றுக் கண்ணால் பார்ப்பதே அக்காலத்தில் அனைத்துப் பொதுமக்களுக்கும் சாத்தியமான, இலகுவான வழிமுறையாக இருந்தது. இதனாலேயே அதனைக் குறிப்பிட்டு நபிமொழி வந்துள்ளது. எழுதவோ கணக்கிடவோ முடியாத நிலையில் சமூகம் இருந்த அன்றைய நிலையில், வானவியல் கணிப்பீடு போன்ற வேறொரு வழிமுறை மூலமாகவே பிறை விஷயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தால், அது அவர்களைக் கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கும்.

அல்லாஹ் நபியவர்களின் சமுதாயத்தினருக்கு இலகுவானதை விரும்புகின்றானே தவிர கஷ்டத்தை விரும்பவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்கள்:

“நிச்சயமாக அல்லாஹ் என்னை இலகுபடுத்தும் போதகனாகவே அனுப்பினான். கஷ்டப்படுத்துபவனாக அவன் என்னை அனுப்பவில்லை.”

எனினும், இந்த நபிமொழியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முடியுமான இதனை விடப் பலமான மற்றொரு சாதனம் காணப்படுமாயின், அச்சாதனம் எவ்விதத் தவறோ அனுமானமோ பொய்யோ இன்றி உரிய மாதம் தொடங்கிவிட்டதைக் காட்டக் கூடியதாகவும், கஷ்டமின்றிப் பெறக்கூடியதாகவும், முஸ்லிம் சமூகத்தின் சக்திக்குட்பட்டதாவும் காணப்படுமாயின், பழைய வழிமுறையைப் பிடிவாதமாக பற்றிப் பிடித்துக்கொண்டு நபிமொழியின் நோக்கத்தை ஏன் நாம் அசட்டை செய்ய வேண்டும்?

அதிலும் இன்று முஸ்லிம் சமூகத்தில் பல விஞ்ஞானிகளும் வானியல், புவியியல், இயற்பியல் வல்லுநர்களும் சிறப்புத்தேர்ச்சி கொண்டோரும் சர்வதேச ரீதியாக உருவாகிவிட்ட பிறகும், மனிதன் சந்திரனுக்குச் சென்று அதில் இறங்கி நடந்து அதிலுள்ள பாறைகளையும் மண் மாதிரிகளையும் எடுத்துவருமளவு அவனது விஞ்ஞான அறிவு முன்னேறிவிட்ட பிறகும் ஏன் இவ்வாறு நாம் தேக்கமடைந்து நிற்க வேண்டும்?

வெற்றுக்கண்ணால் பார்ப்பதே பொதுவாக சமூகத்தால் முடியுமானதும் பொருத்தமானதுமான சாதனமாக இருக்கும் நிலையில், ஓரிருவர் தமது வெற்றுக் கண்களால் பிறையைக் கண்டதாகக் கூறும் செய்தியை வைத்து உரிய மாதம் தொடங்கிவிட்டதை ஏற்க முடியும் என நபிமொழி உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறிருக்கையில், எவ்விதத் தவறோ பொய்யோ ஊகமோ ஏற்பட முடியாததும், திட்டவட்டமான முடிவைத் தரக்கூடியதும், கிழக்கிலும் மேற்கிலும் வாழுகின்ற முழு முஸ்லிம் சமுதாயமும் ஒன்றுபட்டு ஏற்கக்கூடியதும், நோன்பு நோற்பதிலும் நோற்காமல் விடுவதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் நிரந்தரமாகவும் பல்வேறு தரத்திலும் காணப்படுகின்ற முரண்பாட்டை நீக்கக் கூடியதுமான ஒரு சாதனத்தை எவ்வாறு நாம் நிராகரிக்க முடியும்?

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையில் மூன்று நாள்கள் வித்தியாசப்படுமளவுக்குக்கூட இன்று இதுகுறித்த முரண்பாடு சென்றிருக்கிறது. ஆனால், இது பகுத்தறிவு ஏற்கக்கூடிய முரண்பாடல்ல. விஞ்ஞான ரீதியான தர்க்கமும் இதனை ஏற்காது, மார்க்க ரீதியான தர்க்கமும் ஏற்காது. இம்மூன்று நாள்களிலும் ஒன்று மட்டுமே சரியாக இருக்க முடியும் என்பதும், ஏனையவை தவறானவை என்பதும் விவாதத்திற்கு இடமற்ற உண்மையாகும்.

திட்டவட்டமான கணிப்பீட்டு முறையை (Definite Calculation) எடுத்துக்கொள்வதே இன்று மாதங்களை உறுதிப்படுத்துவதற்குப் பொருத்தமான சாதனமாகும். ‘மிகப் பொருத்தமான மதிப்பீட்டு முறை’ (கியாஸுல் அவ்லா) என்ற வகையில் இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, ‘வெற்றுக் கண்ணால் பார்த்தல்’ என்ற ஐயமும் இடம்பாடுகளும் சூழ்ந்த, குறைந்த திறன் கொண்ட சாதனமொன்றை நமக்குக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் நபிவழியானது அதைவிட உயர்ந்த திறன் கொண்ட சாதனமொன்றைப் பயன்படுத்துவதை மறுக்காது என்பதே இதன் பொருளாகும்.

நபிமொழியின் நோக்கத்தை முழுமையாகவும் நிறைவாகவும் அடைவதற்கு உதவக்கூடியதாக இப்புதிய சாதனம் உள்ளது. நோன்பு நோற்பதிலும், நோற்பதை நிறுத்துவதிலும், குர்பானி கொடுக்கும் நாளைத் தீர்மானிப்பதிலும் காணப்படுகின்ற கடுமையான கருத்து வேறுபாட்டிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை வெளியேற்றி, வணக்க வழிபாடுகளிலும் கிரியைகளிலும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒருமைப்பாட்டை நோக்கி அதனைக் கொண்டு செல்வதற்கு இச்சாதனம் நிச்சயம் உதவும். இந்த ஒருமைப்பாடுதான் அதன் மார்க்கத்தின் மிகக் குறிப்பான அம்சங்களோடும், வாழ்வோடும், ஆன்மிக இருப்போடும் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். இந்த வகையில், இவையனைத்தையும் சாதிக்கக்கூடிய சாதனமாக இத்திட்டவட்டமான கணிப்பீட்டு முறை உள்ளது எனலாம்.

எனினும், முதுபெரும் ஹதீஸ் துறை அறிஞரான அல்லாமா ஷெய்ஃக் அஹ்மது முஹம்மது ஷாக்கிர் (றஹ்) இவ்விவகாரத்தை வேறொரு கோணத்திலிருந்து அணுகியுள்ளார். பிறையைக் கண்ணால் பார்த்தல் என்பது ஓர் ‘இல்லத்’ உடன் தொடர்புபட்ட அம்சமாகும். அந்த ‘இல்லத்’தை நபிவழியே குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. எனினும், இப்போது அது இல்லாமல் போய்விட்டதால் அதனை அடிப்படையாகக் கொண்டு வந்த சட்டமும் இல்லாது போவது அவசியமாகிறது. எப்போதும் ஒரு சட்டம் அதற்குரிய ‘இல்லத்’ உடன் சம்பந்தப்பட்டே வரும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்தச் சிந்தனையின் அடிப்படையிலேயே வானவியல் கணிப்பீட்டின் மூலம் சந்திர மாதம் ஆரம்பிப்பதை உறுதிப்படுத்த முடியும் என்ற கருத்துக்கு அவர் வருகிறார்.

பலமும் தெளிவும் கொண்ட அவரது கூற்றை அப்படியே இங்கு தருவது பொருத்தமாக அமைய முடியும். ‘அவாயிலுஷ் ஷஹருல் அறபிய்யா’ என்ற தனது கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:

“இஸ்லாத்திற்கு முன்னரும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலும் வானவியல் கலைகளைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான அறிவை அறபிகள் பெற்றிருக்கவில்லை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எழுதவோ எண்ணவோ தெரியாத ‘உம்மீ’ சமூகமாக அவர்கள் இருந்தனர். எவராவது விதிவிலக்காக அவை பற்றி அறிந்து வைத்திருந்தாலும் அதுகூட மிக ஆரம்பமான அறிவாகவும், மேலோட்டமான ஒன்றாவுமே இருந்தது. அவதானம் அல்லது செவிவழிச் செய்தி மூலமாகப் பெறப்பட்ட அறிவாக அது இருந்ததேயன்றி, கணித விதிகளின் அடிப்படையில் அல்லது தெளிவான ஆரம்ப விதிகளை அடிப்படையாகக் கொண்ட திட்டவட்டமான ஆதாரங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட அறிவாக அது இருக்கவில்லை.

இந்த வகையில்தான் வணக்க வழிபாடுகள் விஷயத்தில் மாதங்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் மூலாதாரமாக அனைவரின் சக்திக்கும் உட்பட்ட அல்லது பெரும்பாலானோரின் சக்திக்குட்பட்ட திட்டவட்டமான வழிமுறையை நபியவர்கள் ஏற்படுத்தினார்கள். அதுவே வெற்றுக் கண்ணால் பிறை பார்க்கும் முறையாகும். இம்முறை மிகத் தீர்க்கமானதாகவும், அவர்களின் வணக்க வழிபாடுகள் மற்றும் கிரியைகளின் நேரங்களை சரியாக வரையறுப்பதாகவும் இருந்தது. அவர்களின் சக்திக்குட்பட்ட வகையில் உறுதியான முறைமையாகவும் அதுவே காணப்பட்டது. எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கப்பால் அல்லாஹ் நிர்ப்பந்திப்பதில்லை.

கணிதவியலையும் வானவியலையும் பற்றி எதுவும் அறியாதிருந்த அறபிகளிடம் அவற்றை அடிப்படையாகக் கொண்டே பிறைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறுவது சட்டவியலாளரின் ஞானத்திற்குப் பொருந்தாத விடயமாகும். அதிலும் அவர்களில் அதிகமானோர் நாட்டுப்புறத்தவர்கள். நகர்ப்புறச் செய்திகள் சில வேளைகளில் நெருங்கிய கால இடைவெளிகளிலும், பல சந்தர்ப்பங்களில் எப்போதாவதுமே அவர்களைச் சென்றடையும். இந்நிலையில், கணிதவியலையும் வானியவிலையும் கொண்டே பிறை உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தால் அது அவர்களைக் கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கும்.

கிராமப் புறங்களில் அதுபற்றி மிக அரிதாக அறிந்து வைத்திருந்தோரும் தமக்கு வந்த செவிவழிச் செய்தி மூலமாகவே அறிந்து வைத்திருந்தனர். நகர்ப்புறத்தில் இருந்தவர்களோ கணிதவியல் அறிவு பெற்றோரைப் பின்பற்றியே அவ்வறிவைப் பெற்றிருந்தனர். அத்தகையோரிலும் பெரும்பான்மையானவர்கள் அல்லது அனைவரும் வேதக்காரர்களாக இருந்தனர். பின்னர் முஸ்லிம்கள் உலகத்தை வெற்றிகொண்டனர்; விஞ்ஞானத்தின் கடிவாளத்தைக் கைப்பற்றினர்; அதன் எல்லாப் பிரிவுகளிலும் விரவிச் சென்றனர்; முன்சென்றோரின் அறிவியல் கலைகளை மொழிபெயர்த்தனர்; அவற்றில் தேர்ச்சி கண்டது மட்டுமன்றி அவற்றினுள் மறைந்திருந்த பல உண்மைகளையும் வெளிக்கொணர்ந்தனர்; தமக்குப் பின்வந்தோருக்காக அவற்றைப் பாதுகாத்தும் வைத்தனர். வானவியல், கோள்களின் இயக்கம், நட்சத்திரக் கணிப்பீடு முதலியவையும் அக்கலைகளுள் அடங்கியிருந்தன.

சட்ட அறிஞர்களிலும் ஹதீஸ் துறை வல்லுநர்களிலும் அதிகமானோர் வானவியல் தொடர்பான கலைகளை அறிந்திருக்கவில்லை. அல்லது, அவற்றின் சில அடிப்படைகளை மாத்திரம் அறிந்தவர்களாக இருந்தனர். அவர்களில் பலர் அல்லது சிலர் இக்கலைகள் பற்றி அறிந்திருந்தோரை நம்பாதவர்களாகவும் இருந்தனர். அவர்களிலும் சிலர் இக்கலைகளில் ஈடுபாடு கொண்டோரை வழிகேடர்கள் என்றும், நூதனவாதிகள் என்றும் குற்றம் சாட்டினர். இக்கலைகளில் ஈடுபடுவோர் தமக்கு மறைவான விஷயங்கள் (நட்சத்திர சாஸ்திரம்) பற்றிய அறிவிருப்பதாக சாதிப்பதற்கு அவற்றைக் கருவியாகப் பயன்படுத்துகின்றனர் என்பதே இக்குற்றச்சாட்டிற்கான அடிப்படையாக இருந்தது.

சிலர் உண்மையாகவே அவ்வாறு வாதிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இதன்மூலம், தமக்கும் தாம் சுமந்திருந்த அறிவுக்கும் அவர்கள் தீங்கிழைத்துக்கொண்டனர். சட்ட அறிஞர்கள் இவ்விஷயத்தில் மன்னிக்கத் தக்கவர்களாவர். இக்கலைகள்பற்றி அறிந்து வைத்திருந்த ஒருசில அறிஞர்களும் ஃபுகஹாக்களும்கூட மார்க்கத்தையும் சட்டத்தையும் பொறுத்தவரை அவைபற்றிய சரியான நிலைப்பாடு என்ன என்பதை வரையறுத்து அறிந்துகொள்ள முடியாதவர்களாயிருந்தனர். மட்டுமன்றி, அச்சத்துடனேயே அவைபற்றிய குறிப்புகளைத் தருபவர்களாகவும் இருந்தனர்.

பிரபஞ்சம் தொடர்பான விஞ்ஞானக் கலைகள் மார்க்கக் கலைகளைப் போன்று பரவல் அடைந்திருக்காத நிலையிலும், அவை தொடர்பான விதிகள் அறிஞர்களால் திட்டவட்டமாக வரையறுக்கப்படாதிருந்த நிலையிலும் மார்க்க அறிஞர்களின் நிலை இதுவாகத்தான் இருந்தது.

எனினும், மிகச் சிறந்ததும் பரந்ததுமான இந்த ஷரீஅத் நிலையானது; இந்த உலக வாழ்வுக்கு அல்லாஹ் விதித்திருக்கும் காலக்கெடு முடியும்வரை நிலைத்திருக்கக் கூடியது. அது எல்லாக் காலங்களுக்கும், எல்லாச் சமூகங்களுக்குமான சட்டவாக்கம். அந்த வகையில், புதிது புதிதாகத் தோன்றக் கூடிய நிலைமைகளைக் கையாள்வதற்குரிய நுணுக்கமான குறிப்புகளை குர்ஆன், நபிமொழி வசனங்களில் நாம் காண்கிறோம். முன்பிருந்தோர் அக்குறிப்புகளை அவற்றின் உண்மைநிலைக்கு மாற்றமாக விளக்கியிருந்தாலும், பின்னர் உறுதியான தகவல்கள் வருகின்றபோது, அவற்றுக்கேற்ப அக்குறிப்புகள் புரிந்துகொள்ளப்படவும் விளக்கமளிக்கப்படவும் முடியும்.

நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் இவ்விஷயம் பற்றி ஸஹீஹான நபிமொழிகளில் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமரின் அறிவிப்பொன்றை இமாம் புஃகாரீ பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:

“நிச்சயமாக நாம் எழுதவோ எண்ணவோ தெரியாத ‘உம்மீ’ சமூகமாக உள்ளோம். மாதமோ (தமது கையால் சைகை செய்து) இப்படி இப்படியாக உள்ளது. அதாவது, ஒருமுறை இருபத்தொன்பதாகவும் இன்னொருமுறை முப்பதாகவும் உள்ளது.”

இமாம் மாலிக் இதனை தனது அல்முவத்தாவிலும் அறிவிப்புச் செய்துள்ளார். புஃகாரீயும் முஸ்லிமும் ஏனையோரும் பின்வரும் சொற்களிலும் இதனை அறிவிப்புச் செய்துள்ளனர்:

“மாதம் என்பது இருபத்தொன்பதாகும். எனவே பிறையைக் காணும்வரை நோன்பு நோற்க வேண்டாம். அதனைக் காணும்வரை நோன்பு நோற்பதை நிறுத்தவும் வேண்டாம். அது உங்களுக்குத் தெரியாது போனால் அதனைக் கணிப்பீடு செய்யுங்கள்!”

நம்முடைய ஆரம்பகால அறிஞர்கள் இந்த நபிமொழியின் பொருளை சரியாக விளக்கினாலும் (தஃப்ஸீர்), அதனை விரித்துரைக்கும் (தஃவீல்) விஷயத்தில் தவறிழைத்துவிட்டனர். இவ்விஷயத்தில் அவர்கள் அனைவரின் அபிப்பிராயத்தையும் மொத்தமாக வெளிப்படுத்தக் கூடியதாக அல்ஹாஃபிழ் இப்னு ஹஜரின் பின்வரும் கூற்று காணப்படுகிறது:

“கணிப்பீடு (அல்ஹிஸாப்) என்பதன் மூலம் இங்கு நாடப்படுவது நட்சத்திரங்களையும் அவற்றின் அசைவுகளையும் பற்றிய கணிப்பீடாகும். அவர்கள் இவ்விஷயம் பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வைத்திருந்தனர். எனவேதான், நோன்பு மற்றும் ஏனைய வணக்கங்கள் பற்றிய தீர்ப்பு பிறையைக் கண்ணால் பார்ப்பதோடு தொடர்புபடுத்தப்பட்டது. நட்சத்திரங்களின் அசைவுபற்றி அறிந்துகொள்வதிலுள்ள சிரமத்தை நீக்குவதே இதன் நோக்கமாகும்.”

பின்னர் இவ்வறிவு பெற்ற சிலர் தோன்றினாலும் நோன்பு நோற்றல் தொடர்பான தீர்ப்பு பழையபடியே தொடர்ந்தது. மட்டுமன்றி, நபிமொழியின் வெளிப்படையான வசனப் போக்கு இத்தீர்ப்பை நட்சத்திரங்கள் பற்றிய கணிப்பீட்டுடன் தொடர்புபடுத்துவதை முற்றாக மறுப்பது போலவும் அமைந்திருக்கிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஹதீஸிலுள்ள ‘உங்கள் பார்வைக்கு அது தென்படாவிட்டால் எண்ணிக்கையை முப்பதாக பூரணப்படுத்துங்கள்!’ என்ற பகுதி இதனைக் காட்டுவதாய் உள்ளது. ‘கணிதவியல் அறிஞர்களிடம் அது பற்றிக் கேளுங்கள்!’ என அது குறிப்பிடவில்லை. காரணம், இவ்வாறு நோன்பு நோற்க வேண்டிய நாள்கள் பற்றிய தெளிவின்மையில் அதற்குக் கடமைப்பட்ட அனைவரும் சமமானவர்களே. எனவே, அவர்களுக்கு மத்தியிலிருந்து சர்ச்சையும் முரண்பாடும் இல்லாது போய்விடுகிறது.

எனினும், இவ்விஷயத்தில் நட்சத்திரங்களின் அசைவு பற்றிய அறிவுடையோரை நாடும் வழக்கத்தினையும் சிலர் கொண்டிருந்தனர். அவர்களே றாஃபிழாக்கள் ஆவர். சில ஃபுகஹாக்கள்கூட அவர்களின் இந்நிலைப்பாட்டுடன் உடன்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அல்பாஜீ கூறுகிறார்: “முன்னோர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் ஒருமித்த (இஜ்மாவான) நிலைப்பாடு இவர்களின் கருத்திற்கு எதிரான ஆதாராமாக உள்ளது.”

இப்னு பஸீஸா கூறுகிறார்: “இது பிழையான போக்காகும். நட்சத்திரவியல் கலையில் ஈடுபடுவதை ஷரீஅத் தடுத்துள்ளது. ஏனெனில், அது வெறும் ஊகமும் அனுமானமும் ஆகும். அதில் திட்டவட்டமான தன்மையோ, பெரும்பாலான சாத்தியப்பாட்டுத் தன்மையோ (ழன் ஆலிப்) கிடையாது. (இவ்வாறான நிலையிலுள்ள ஆதாரங்கள் சட்ட உருவாக்கத்தின் போது எவ்விதப் பெறுமானமும் அற்றவை.) அவ்வாறு திட்டவட்டமான தன்மையை அது கொண்டிருந்தால்கூட இங்கு செயற்படுத்துவதற்குச் சிரமமான ஒன்றாகவே அது அமைந்திருக்கும். ஏனெனில், அது பற்றி அறிந்தவர்கள் சொற்பமானவர்களே!”

ஆக, இங்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய அம்சம் பிறையை ‘கண்ணால் பார்த்தல்’ என்பதே தவிர நட்சத்திரக் கணிப்பீடல்ல என்ற இவ்விளக்கம் (தஃப்ஸீர்) சரியானதாயினும், இத்துறைபற்றி அறிந்தவர்கள் தோன்றிய பிறகும் கூட கண்ணால் பார்த்தலின் அடிப்படையிலேயே நோன்பு பற்றிய தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விரிவுரை (தஃவீல்) தவறானதாகும். ஏனெனில், இவ்விஷயத்தில் கட்புலனில் மாத்திரம் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டளையானது குறிப்பிட்டதோர் ‘இல்லத்’துடன் இடம்பெற்றதாகும். சமூகம் ‘எழுதவோ எண்ணவோ தெரியாத உம்மீ சமூகமாக இருந்தது’ என்பதே அந்த ‘இல்லத்’ (காரணம்). ஓர் ‘இல்லத்’தும் அதன் விளைவாக உருவான சட்டமும் (மஃலூல்) எப்போதும் இணை பிரியாதவை. ‘இல்லத்’ இருக்கும்போதே ‘மஃலூல்’ இருக்கும். ‘இல்லத்’ நீங்கிவிட்டால் ‘மஃலூலு’ம் இல்லாது போய்விடும்.

அந்த வகையில், சமூகம் தனது எழுத்தறிவற்ற ‘உம்மிய்யத்’ நிலையிலிருந்து விடுபட்டு எழுதவும் எண்ணவும் முடியுமான நிலையை அடையுமாயின், அதாவது முழு சமூகமும் இக்கலைகள் பற்றிய அறிவைப் பெற்று அதிலுள்ள படித்தவர்களும் பாமரர்களுமாக அனைவரும் மாதத்தின் தொடக்கத்தைக் கணிப்பிடுவதில் திட்டவட்டமான நிலைப்பாடொன்றை அடைந்திருப்பார்களாயின், கண்ணால் பார்த்து அறிந்துகொள்வது போன்ற ஒன்றாக அல்லது அதனை விடப் பலமானதொன்றாக இக்கணிப்பீட்டு முறையை அவர்கள் நம்பக்கூடிய நிலை ஏற்படுமாயின், அப்போது திட்டவட்டமான இவ்வழிமுறைக்குத் திரும்பி, பிறைகளை உறுதிப்படுத்தும் விஷயத்தில் கணப்பீட்டு முறையை மாத்திரம் எடுத்துக்கொள்வது கடமையாகி விடும்.

அதன் பிறகு இம்முறை மூலமாக அறிந்துகொள்வது சிரமமானது எனும் நிலை ஏற்படும்போது மட்டுமே கட்புலனைப் பயன்படுத்த முடியும். கணிப்பீட்டு நிபுணர்களிடமிருந்து உறுதியான தகவல்கள் எதனையும் பெற முடியாத வகையில் பாலைவனத்திலோ கிராமப்புறமொன்றிலோ இருப்பவர்களை இந்நிலைக்கு உதாரணமாகக் கூறலாம். கணிப்பீட்டு முறையைத் தடுக்கின்ற ‘இல்லத்’ நீங்கியதன் மூலம் அக்கணிப்பீட்டு முறைக்கு மீண்டு வருவது கடமையாவதால், பிறைகளைக் கணிப்பதற்கு மிகப் பொருத்தமான அக்கணிப்பீட்டு முறையை நாடுவதும், கண்ணால் பார்த்து அறிவதை அதற்கான சாத்தியப்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் விட்டுவிடுவதும் கடமையாகி விடுகிறது.

அந்த வகையில், மாதத்தின் உண்மையான ஆரம்பம் என்பது சூரிய மறைவிற்குப் பிறகு பார்வையை விட்டும் பிறை மறைகின்ற இரவாகும். ஒரே பார்வையில் இது உறுதிப்படுத்தப்பட்டாலும் போதுமானதே!

‘கடமைக்குட்பட்டவர்களின் நிலைமைகள் மாறுவதற்கேற்ப சட்டமும் மாறுபடும்’ என்ற எனது இக்கூற்று நூதனமான ஒன்றல்ல. ஏனெனில், இந்நிலை ஷரீஅத்தில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. அறிஞர்களும் ஏனையோரும் அதுபற்றி நன்கறிவர். நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இப்பிரச்சினையில் அதற்கான ஓர் உதாரணம் வருமாறு:

“அது உங்களுக்குத் தென்படாவிட்டால் அதனைக் கணிப்பிட்டுக்கொள்ளுங்கள்!” என்ற நபிமொழி வேறு வசனப் பிரயோகங்களிலும் இடம்பெற்றுள்ளது. “உங்களுக்கு அது தென்படாவிட்டால் எண்ணிக்கையை முப்பதாக பூரணப்படுத்துங்கள்!” என்பது அவற்றுள் ஒன்றாகும். இங்கு ‘கணிப்பிட்டுக் கொள்ளுங்கள்’ என வந்துள்ள சுருக்கமான அறிவிப்பை “எண்ணிக்கையை முப்பதாகப் பூரணப்படுத்துங்கள்”என்ற விரிவான அறிவிப்பைக் கொண்டு அறிஞர்கள் விளக்கியுள்ளனர். ஆனால் ஷாஃபிஈ மத்ஹபு இமாம்களுள் மகத்தானவராகவும், அவரின் காலத்திற்குரிய இமாமாகவும் மதிக்கப்பட்ட அபு ல் அப்பாஸ் அஹ்மது பின் உமர் பின் ஸுறைஜ் என்பவர் இவ்விரு அறிவிப்புகளையும் இணைத்து இவ்விரண்டும் இருவேறு நிலைமைகளுக்குரியவை என்று விளக்கியுள்ளார். “அதனைக் கணிப்பிட்டுக்கொள்ளுங்கள்” என்பது ‘சந்திரனின் நிலைகளுக்கேற்ப அதனைக் கணிப்பிட்டுக்கொள்ளுங்கள்’ என்ற பொருளைத் தருவதாகவும், அந்த வகையில் அல்லாஹ்வினால் இத்துறைபற்றிய அறிவு வழங்கப்பட்டவர்களுக்கான வழிகாட்டலாக இது உள்ளதெனவும், “எண்ணிக்கையை முப்பதாகப் பூரணப்படுத்துங்கள்” என்பது பொதுமக்களுக்கான வழிகாட்டலாக உள்ளதெனவும் அவர் விளக்குகிறார்.

எனது கூற்று ஏறக்குறைய இப்னு ஸுரைஜின் கூற்றுடன் நேருக்கு நேர் சந்திக்கிறது. எனினும் இருவரின் கூற்றுகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு யாதெனில், குறிப்பிட்ட மாதத்தின் பிறை மறைக்கப்பட்டு எவராலும் அதனைக் காணமுடியாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் நாடப்படக்கூடியதாக பிறைக் கணிப்பீட்டு முறையை அவர் ஆக்கியிருக்கிறார். அவரின் காலத்தில் இம்முறையை அறிந்தோர் குறைவாக இருந்ததாலும், அவர்களின் கூற்றிலும் கணிப்பீட்டிலும் நம்பிக்கை இல்லாதிருந்ததாலும், ஒரு பிரதேசத்தில் மாதப்பிறை உறுதிப்படுத்தப்பட்டாலும் அதுபற்றிய செய்திகள் ஏனைய பிரதேசங்களுக்குச் சென்றடைவது தாமதமாக இருந்ததாலுமே இக்கணிப்பீட்டு முறையைப் பயன்படுத்துவதை குறிப்பிட்ட சிலருக்குரியதாக அவர் ஆக்கினார்.

இதற்கு மாறான வகையில், நம்பத்தகுந்த நுணுக்கமான கணிப்பீட்டு முறையே பொதுவானதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதும், இக்காலத்தில் செய்திகள் விரைவாகச் சென்றடைவதற்கும் பரவுவதற்கும் வழியேற்பட்டுள்ளதால் அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இவ்வழிமுறையே கொள்ளப்பட வேண்டும் என்பதும் எனது கூற்றாக உள்ளது. இந்தவகையில், செய்திகள் சென்றடைய முடியாமலும், வானவியல் மற்றும் சூரிய சந்திர நிலைகள் பற்றிய நம்பத்தகுந்த அறிவு படைத்தோர் இல்லாமலும் உள்ள சொற்பமான சந்தர்ப்பங்களில் மட்டுமே கட்புலனில் தங்கியிருக்க வேண்டிய சூழல் தோன்றுகிறது எனலாம். எனது இந்நிலைப்பாடே மிக நியாயமான நிலைப்பாடென நான் கருதுகிறேன். இத்தலைப்பு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் பற்றிய பாதுகாப்பானதும் சரியானதுமான புரிதலுக்கு மிக நெருங்கியதாகவும் இந்நிலைப்பாடே உள்ளது.”

அல்லாமா ஷாக்கிர் அரை நூற்றாண்டுக்கு முன்னரே (ஹி.1357 துல் ஹிஜ்ஜா – கி.பி 1933 ஜனவரி) எழுதி வைத்திருப்பது இதுதான். அப்போது வானவியல்பற்றிய அறிவு இன்றுள்ள அளவு பாரிய வளர்ச்சியை எட்டியிருக்கவில்லை. இன்று அது அடைந்துள்ள வளர்ச்சி மூலமாக மனிதன் அண்டவெளிக்குப் பயணம் செய்யவும், சந்திரனை அடையவும் முடியுமாகியுள்ளது. இத்துறையில் தவறு நிகழ்வதற்கான சாத்தியப்பாடு நிமிடமொன்றுக்கு இலட்சத்தில் ஒரு தடவையே உள்ளது என்று கணிப்பிடப்படுமளவுக்கு மிக நுணுக்கமானதொரு கட்டத்தினை இவ்விஞ்ஞானம் எட்டியிருக்கிறது.

ஷெய்ஃக் ஷாக்கிர் (றஹ்) ஹதீஸ் துறை அறிஞராக இருந்துகொண்டுதான் இதனை எழுதியிருக்கிறார். அவர் தனது முழு ஆயுளையும் ஹதீஸ் துறைக்குப் பணிபுரிவதிலும், நபியவர்களின் ஸுன்னாவுக்கு உதவி புரிபவதிலுமே கழித்தார். அந்த வகையில், அவர் ஒரு தூய்மையான ஸலஃபீ; நூதனமாக உருவாக்குபவராக அன்றி பின்பற்றுபவராகவே இருந்தவர். எனினும், நமக்கு முன்னர் வாழ்ந்த ஸலஃபுகள் என்ன கூறினார்களோ அதிலேயே பிடிவாதமாகத் தேங்கி நிற்கும் ஒன்றாக ஸலஃபீ சிந்தனையை அவர் விளங்கியிருக்கவில்லை. மாற்றமாக, உண்மையான ‘ஸலஃபிய்யத்’ என்பது அந்த முன்னோர்களின் வழியைப் பின்பற்றிக்கொண்டும், அவர்களின் ஆன்மாவைப் பருகிக்கொண்டும், அவர்கள் தம் காலத்திற்கேற்ப இஜ்திஹாது செய்ததுபோன்று நாமும் நம் காலத்திற்குப் பொருத்தமான வகையில் இஜ்திஹாது செய்வதாகும் என்றுதான் அவர் விளங்கியிருந்தார். நமது யதார்த்தத்தை நமது மூளைகளால் கையாளவேண்டுமே தவிர, அவர்களின் மூளைகளால் அல்ல என்றும் அவர் விளங்கி வைத்திருந்தார். இதில் ஷரீஆவின் திட்டவட்டமான அம்சங்களையும், அதன் வரையறுத்த பொருளைத் தருகின்ற (முஹ்கமாத்) வசனங்களையும், முழு நிறைவான இலக்குகளையுமே நமக்குரிய வரையறைகளாகக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார்.

இது இவ்வாறிருக்க, இவ்வருடம் (ஹி.1409) றமளானில் மதிப்புக்குரிய ஷெய்ஃக் ஒருவர் எழுதியிருந்த நீளமான கட்டுரையொன்றை நான் வாசித்தேன். “நாம் எழுதவோ எண்ணவோ தெரியாத ‘உம்மி’ சமூகமாக இருக்கிறோம்” என்ற ஸஹீஹான நபிமொழியானது கோள் கணிப்பீட்டு முறையை மறுப்பதாகவும், முஸ்லிம் சமுதாயத்தில் அதற்கு எவ்விதப் பெறுமானமும் இல்லை என்பதைக் காட்டும் வகையில் அமைந்திருப்பதாகவும் அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார். இக்கருத்து சரியானதாயின், எழுத்தைப் பயன்படுத்துவதை மறுப்பதாகவும் அதன் பயன்பாட்டை செயலிழக்கச் செய்வதாகவும் கூட இந்த நபிமொழி பொருள்தர வேண்டும்.

ஏனெனில், சமூகத்தின் ‘உம்மிய்யத்’ பண்புக்கு ஆதாரமாக இரு விஷயங்களை இந்த நபிமொழி குறிப்பிடுகிறது. எழுதத் தெரியாதிருப்பதும் எண்ணத் தெரியாதிருப்பதுமே அவ்விரண்டுமாகும். எழுத்து என்பது இகழ்ச்சிக்குரிய விஷயம் என்றோ சமூகத்தில் விரும்பத்தகாததொரு விஷயம் என்றோ அன்றும் இன்றும் எவரும் கூறியதில்லை. இதற்கு மாறாக, அது ஓர் அவசியமான அம்சம் என்றே திருக்குர்ஆனும் நபிவழியும் இஜ்மாவும் எடுத்துக் காட்டுகின்றன. நபி (ஸல்) அவர்களே எழுத்தைப் பரப்பும் பணியை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தார்கள். அவர்களது சீறாவையும், பத்ரு யுத்தக் கைதிகள் தொடர்பான அவர்களின் நிலைப்பாட்டையும் பார்க்கும்போது இதனைத் தெளிவாக அறிய முடிகிறது.

‘நபி (ஸல்) அவர்கள் நட்சத்திரக் கணிப்பீட்டின் படி செயற்படுவதை நமக்குச் சட்டமாக்கவும் இல்லை; அதனைக் கருத்தில் கொள்ளுமாறு கட்டளையிடவுமில்லை. மாதத்தை உறுதிப்படுத்துவதில் பிறையைக் கண்ணால் பார்க்கும் முறையைப் பின்பற்றுமாறும் கருத்தில் கொள்ளுமாறும்தான் அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்’ என்றும் இது தொடர்பாகக் கூறப்படுவதுண்டு.
ஆனால், இக்கூற்றில் ஒரு வகைத் திரிபும் தவறும் உள்ளமை தெளிவு. இதற்கு இரு காரணங்கள் உள்ளன:

  1. சமூகம் எழுதவோ எண்ணவோ தெரியாத ‘உம்மீ’யாக இருக்கும் நிலையில், கணிப்பீட்டு முறையைப் பின்பற்றுமாறு ஏவுவது பகுத்தறிவு பூர்வமாகாது. எனவேதான் காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்தக்கூடிய வழிமுறையொன்றை அவர்கள் சட்டமாக்கினர். அது ‘கண்ணால் பார்த்தல்’ என்ற முறையாகும். இம்முறை அக்காலத்தில் வாழ்ந்த அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியமானதொன்றாக அமைந்திருந்தது. எனினும், இதனைவிட நுணுக்கமானதும், திட்டவட்டமானதும், தவறுகளையும் ஊகங்களையும் விட்டுத் தூரமானதுமான வேறொரு வழிமுறை காணப்படுமாயின் அதனைக் கருத்தில் கொள்வதைத் தடைசெய்யக்கூடிய வகையில் நபிமொழியில் எதுவும் இடம்பெறவில்லை.
  2. மேகம் சூழ்ந்திருக்கும் நிலையில் பிறைக் கணிப்பீட்டு முறையைக் கவனத்தில் கொள்ளுமாறு நபிமொழி உண்மையாகவே சுட்டிக் காட்டியுள்ளது. இமாம் புஃகாரீ தனது ‘அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்’ நூலில் நோன்பு பற்றிய பாடத்தில் இந்த நபிமொழியைப் பதிவுசெய்துள்ளார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமரும், பின்னர் அவரிடமிருந்து நாபிஃஉம், பின்னர் அவரிடமிருந்து மாலிக்கும் அறிவிக்கின்ற ‘அஸ்ஸில்ஸிலா அத்தஹபிய்யா’ (தங்கத் தொடர்வரிசை) என்ற பிரபலமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டதாக இந்த நபிமொழி உள்ளது. றமளான் மாதம்பற்றி நினைவுபடுத்திய நபியவர்கள் பின்வருமாறு கூறியதாக அதில் இடம்பெற்றுள்ளது: “பிறையைக் காணும்வரை நோன்பு நோற்காதீர்கள்; அதனைக் காணும்வரை நோன்பு நோற்பதை விட்டுவிடவும் வேண்டாம். அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் அதனை அளவிட்டுக் கொள்ளுங்கள்!”

‘அளவீடு’ அல்லது ‘அளவீடு செய்தல்’ என இங்கு விடுக்கப்பட்டுள்ள கட்டளைக்குள் பிறைக் கணிப்பீட்டு முறையும் உள்ளடங்க முடியும். அந்த வகையில், இம்முறையை சிறந்த விதமாகப் பயன்படுத்தி, உள்ளங்கள் சரியென்று திருப்தியோடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முடிவுக்கு வந்துசேர முடியுமானோர் இக்கணிப்பீட்டில் ஈடுபடலாம். நவீன காலத்தில் இக்கணிப்பீட்டு முறையானது திட்டவட்டமான அம்சங்களுள் ஒன்றாக மாறிவிட்டது. நவீன விஞ்ஞானம்பற்றிய மிகக் குறைந்த அறிவுபடைத்தோர்கூட அறிந்து ஏற்றுக்கொண்ட விஷயம் இது. தான் அறியாதிருந்த விஷயங்களையெல்லாம் தனது இரட்சகனிடமிருந்து கற்றுக்கொண்ட மனிதன் இத்துறையில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளான் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

திட்டவட்டமான வானவியல் கணிப்பீட்டு முறையை நாம் பயன்படுத்த வேண்டுமென பல வருடங்களுக்கு முன்னரேயே நான் அழைப்பு விடுத்திருந்தேன். பிறை தென்பட்டதை உறுதிப்படுத்துவதற்காக அல்லாவிட்டாலும் மறுப்பை உறுதிப்படுத்துவதற்காகவேனும் அதனை நாம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் நோன்பு ஆரம்பமாகும் தினம் தொடர்பாகவும், நோன்புப் பெருநாள் தொடர்பாகவும் ஏற்படுகின்ற பாரிய கருத்து வேறுபாட்டைக் குறைக்க முடியும். இம்முரண்பாடு சில முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் மூன்று நாள்களைக்கூட எட்டுவதுண்டு.

மறுப்பை உறுதிப்படுத்துவதற்காக வானவியல் கணிப்பீட்டைப் பயன்படுத்துதல் என்பதன் பொருள், நவீன காலத்தில் பெரும்பான்மை சட்ட அறிஞர்களின் அபிப்பிராயத்திற்கேற்ப கண்ணால் பார்த்துப் பிறையை உறுதிப்படுத்துவதேயாகும். எனினும், ‘தற்போதைய நிலையில் பிறையைக் கண்ணால் பார்ப்பது சாத்தியமில்லை. ஏனெனில், அடிப்படையிலேயே உலகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை இன்னும் பிறக்கவில்லை’ என இக்கணிப்பீடு கூறுமாயின், அந்நிலையில் பிறையைக் கண்டதாகக் கூறும் எவரது சாட்சியமும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது. ஏனெனில், இங்கு திட்டவட்டமான கணிதவியல் முறைமை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உண்மையானது அத்தகையோரது வாதத்தைப் பொய்யாக்கிவிடுகிறது. அது மட்டுமன்றி, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிறை பார்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளக் கூடாது; பிறையைக் கண்டதாக எவராவது சாட்சியமளிக்க விரும்பினாலும் ஷரீஅத் நீதிமன்றங்களோ ஃபத்வா நிலையங்களோ அல்லது மார்க்க விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களோ அதற்கு இடமளிக்கக் கூடாது.

இதுவே நான் திருப்தி கண்டு, பல்வேறு ஃபத்வாக்களிலும் பாடங்களிலும் விரிவுரைகளிலும் நிகழ்ச்சிகளிலும் பேசிவந்த கருத்து. பின்னர் இதே கருத்தை ஷாஃபிஈ மத்ஹபின் சட்ட அறிஞர்களுள் ஒருவர் விரிவாகவும் விளக்கமாகவும் தெரிவித்திருப்பதைக் காணும் வாய்ப்பு அல்லாஹ்வின் நாட்டத்தால் எனக்குக் கிடைத்தது. அவரே இமாம் தகிய்யுத்தீன் அஸ்ஸுபுகீ (மரணம் ஹி.756). இவர்பற்றிக் கூறும்போது, “இவர் இஜ்திஹாதின் தரத்தை அடைந்திருந்தார்” எனக் கூறுவர்.

கட்புலன் மூலம் பிறையைக் காண்பதற்கான சாத்தியப்பாட்டை வானவியல் கணிப்பீடு மறுக்குமாயின் அதைக் கண்டதாகக் கூறுவோரின் சாட்சியத்தை நிராகரித்துவிடுவது நீதிபதியின் கடமையாகும் என அஸ்ஸுபுகீ தனது ‘ஃபதாவா’வில் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகிறார்:

“ஏனெனில், வானியல் கணிப்பீடு திட்டவட்டமானது (கத்ஈ). சாட்சியமும் செய்தியும் ஊகங்களுக்கு இடமளிப்பவை (ழன்னீ). திட்டவட்டமானதைவிட ஊகத்துக்கிடமானதை முற்படுத்துவது எந்த வகையிலும் சரியன்று. திட்டவட்டமானவற்றோடு நேராக நின்று முரண்படுவதற்குகூட ஊகத்தினால் முடியாது.”

“எந்தவொரு வழக்கிலும் தன்னிடமுள்ள சாட்சியாளரின் சாட்சியத்தை அவதானித்துப் பார்ப்பது நீதிபதியின் பணியில் ஒரு பகுதியாகும். கட்புலனோ புலனுணர்வோ ஒரு சாட்சியத்தைப் பொய்யானது எனக் கூறுமெனில், அந்த சாட்சியத்தை அவர் நிராகரித்து விட வேண்டும்; அதை நம்ப வேண்டிய அவசியம் அவருக்கில்லை” என்றும் அஸ்ஸுபுகீ குறிப்பிடுகின்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“முன்வைக்கப்படும் வாதத்தின் நிபந்தனை யாதெனில், அதற்காகத் தரப்படும் சான்று புலன் ரீதியாகவும், பகுத்தறிவு ரீதியாகவும், ஷரீஅத் ரீதியாகவும் சாத்தியமான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதாகும். அந்த வகையில், பிறையைக் காண்பது சாத்தியமற்றது என வானியல் கணிப்பீடு திட்டவட்டமாகத் தெரிவிக்குமாயின் அதன் பிறகு அவ்வாறு கண்டதாகக் கூறுவது சாத்தியமற்றதாக மாறுகிறது. ஏனெனில், ஷரீஅத் சட்டம் அசாத்தியமானவற்றைக் கொண்டு தோன்றுவதில்லை.”

இந்நிலையில் சாட்சியாளர்கள் வழங்கும் சாட்சியத்தைப் பொறுத்தவரை, ஒன்றில் அது ஊகமாக அல்லது தவறாக அல்லது பொய்யாகக் கருதப்படும்.

ஸுபுகீ நம் காலம்வரை வாழ்ந்து, ஏற்கனவே நாம் குறிப்பிட்டதுபோன்று, வானவியல் துறை (அல்லது இத்துறை சார்ந்தோரால் குறிப்பிடப்படுவது போன்று வான சாஸ்திரம்) இன்று அடைந்துள்ள வளர்ச்சியையும் கண்டிருந்தால் நிலைமை எவ்வாறிருக்கும்?!

பிரபலமானவராகவும் ஷெய்ஃகுல் அஸ்ஹராகவும் இருந்த பேராசிரியர் ஷெய்ஃக் முஹம்மத் முஸ்தபா அல்முராஈ ஷரீஆ உயர் நீதிமன்றத்தின் தலைவராக இருந்தபோது அவரும் ஸுபுகீயின் கருத்தைப் போன்றதொரு கருத்தைக் கொண்டிருந்தார் என ஷெய்ஃக் ஷாக்கிர் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். அதாவது, வானவியல் கணிப்பீடு பிறை காண்பதற்கான சாத்தியப்பாட்டை மறுக்குமாயின் அதனைக் கண்டதாக சாட்சி கூறுவோரின் சாட்சியத்தை நிராகரிக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தை அவரும் கொண்டிருந்தார்.

ஷெய்ஃக் ஷாக்கிர் கூறுகிறார்:

“நானும் வேறு சில சகோதரர்களும் பேராசிரியர் அவர்களின் கருத்தோடு முரண்படுபவர்களாகவே இருந்தோம். ஆனால், அவர் சரியான நிலைப்பாட்டிலேயே இருந்தார் என இப்போது நான் தெளிவாகக் கூறுகிறேன். மட்டுமன்றி, வானவியல் கணிப்பீட்டின் மூலமே எல்லா நிலையிலும் பிறை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நான் கூறுவேன். இது பற்றி அறிந்து கொள்வது கஷ்டமான நிலையிலுள்ளோர் மாத்திரமே இதிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும்.”

தமிழில்: பீ.எம்.எம். இர்ஃபான்

(நன்றி: ஸுன்னாவை அணுகும் முறை, யூசுஃப் அல்கர்ளாவி, பூஸின் டெக்ஸ்ட்ஸ் வெளியீடு)

Related posts

Leave a Comment