இன்னும் எயிதுக!
”தாறுமாறா எழுதுவோம் தமிழை வளர்ப்போம்”
இப்படி ஒரு சுலோகம் (ஆங்கிலத்தில்: slogan) சிந்தையில் மின்னலடித்தது.
தாறுமாறாக எழுதினால் தமிழ் தகர்ந்து போகாதா என்று கேட்கத் தோன்றும். அது மொழியை நாம் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தது.
இது இலக்கியத்தில் வட்டார வழக்கு ஓங்கியிருக்கும் காலம். புனைகதை என்பது வட்டார வழக்கின்றி அமையாது என்பது தமிழே தனக்கு வகுத்துக்கொண்டுள்ள இலக்கணம் என்று கருதுகிறேன். அவ்வழி, மகத்தான கதையாளர்கள் பலர் இன்று இயங்கி வருகின்றனர், நாள்தோறும் தோன்றி வருகின்றனர் என்பது தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமிதம் என்றே உணர்கிறேன்.
இந்தச் சிந்தனை நேற்று மாலை மனத்துள் ஓடிற்று. இன்று காலை ஜெயகாந்தன் எழுதிய ‘தமிழும் தனித்தமிழும்’ என்னும் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அவர் சொல்கிறார்: “தமிழ் ஒரு மொழி. தனித்தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.”
எனக்கு இரண்டுமே வேண்டும். தனித்தமிழ் எங்கே இடம்பெற வேண்டும், வட்டார வழக்கு எங்கே இடம்பெற வேண்டும் என்கிற தெளிவு எனக்கு உண்டு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொண்டால் இடர்கள் மண்டும்.
தனித்தமிழ் அல்லது தூய தமிழ் என்பது சொற்பொழிவுக்கு அழகு. வட்டார வழக்கிலும் மேடையுரை ஆற்றுவதில் தப்பில்லை. ஆனால், மேடைகளில் செந்தமிழுக்கு உள்ள மதிப்பு ஒருநாளும் வட்டார வழக்குக்கு வாய்க்காது, இயல்பாகவே இது மக்களின் பொது மனத்தில் உணரப்படுகிறது. அதேபோல், தமிழறிஞர் எவரும் தம் அன்றாடப் புழக்கத்தில் செந்தமிழ் செப்புவதில்லை. செப்பினால் வீட்டிலேயே எடுபடாது.
”செப்பு மொழி பதினெட்டுடையாள்” என்றானே பாரதி. அதன் மூலம் அவன் பேச்சுமொழியைத்தான் குறிக்கிறான். மேடைப் பேச்சு அல்லது ஏடெழுத்து மொழியை அன்று.
எழுத்திலும்கூட ஒரு மொழியின் இவ்விரு நிலைகளும் எங்கெங்கே இடம்பெற வேண்டும் என்னும் இங்கிதம் இருக்கிறது. ’நாடக வழக்கு’ என்னும் பேச்சுத் தமிழ் அல்லது வட்டார வழக்கு புனைகதைகளுக்கானது என்றும், செந்தமிழ் சிவணிய நடை கவிதைக்கும் கட்டுரைக்கும் என்றும் புரிந்துகொள்ளலாம். கதைகளில் கோலோச்சும் பேச்சுத்தமிழ் ஏன் கவிதைகளில் சாதிக்க முடியவில்லை? ஏனெனில், அன்றாட வாழ்வில் நாம் கவிதைகளாகப் பேசுவதில்லை. என்ன இருந்தாலும், கவிதை என்பது செய்யப்படுவது — செய்யுள் — செயற்கை. எனவே அதில் தூய தமிழே துலங்குகிறது.
இந்த வரையறை இருப்பினும், ஒன்றுக்கு மற்றது தீண்டத் தகாததோ நேசிக்கக் கூடாததோ அல்ல. கட்டுரையில் அல்லது கவிதையில் எப்போதேனும் பேச்சு வழக்கும், புனைகதைகளில் அவ்வப்போது செந்தமிழுரையும் இடம் பெறுவதுண்டு. அதனை அக்கலை வடிவமே கோரும் இடங்களை கலைஞன் அறிவான்.
”புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” என்று தன் செய்யுளுள் வட்டார வடிவத்துக்கு இடம் தந்த ஔவை, அந்த ஓசையை ரசிக்காமலா அப்படிப் பாடினாள்?
”எட்டு லச்சுமியும் ஏறி வளருது” என்றும், “பழைய பயித்தியம் படீலென்று தெளியுது” என்றும் பாடுகிறான் பாரதியாரின் புதிய கோணங்கி. கவிதை என்பதற்காக குடுகுடுப்பைக்காரன் பண்டிதத் தமிழா பகர்வான்?
”பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளைப் / பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே” என்றும் அவன் பாடினான். போச்சே என்னும் பேச்சு வடிவம்தான் அந்த வரிகளைக் கூர்மை ஆக்குகின்றது. போயிற்றெ என்று போட்டுப் பாருங்கள். வேகம் குறைவது தெரியும்.
இனி, புனைகதையுலகில் பெரும் புலவர்கள் சாதிக்க முடியாமல் போவதற்குக் காரணம் அவர்களுக்கு வட்டார வழக்கே கைவருவதில்லை என்பதுதான். இதனால்தான், புகழ் பெற்ற தமிழறிஞரான மு.வரதராசன், வ.சுப.மாணிக்கம் போன்றோர் எழுதிய புனைகதைகள் (புதினம், சிறுகதை மற்றும் நாடகம்) எல்லாம் கலைத்தரம் குறைந்தவை என்றே மதிப்பிடுகிறோம்.
செந்தமிழில் எழுதப்படும் கட்டுரை நூற்களை மிக இலகுவாக வாசிக்க முடிந்த பேராசிரியர் பலரும் நவீன புனைகதைகளை வாசிக்க மிகவும் சிரமப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். நாஞ்சில், தூத்துக்குடி, நெல்லை, கொங்கு முதலிய வட்டாரங்களின் பேச்சுத் தமிழை அவர்கள் திக்கித் திணறி வாசிப்பதைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. “தமிழ தாறு மாறா எழுதுறானுங்க, கொல பண்றானுங்க” என்று பேச்சு நடையிலேயே அவர்கள் விமர்சனத் தீர்ப்பும் வழங்குகிறார்கள். வட்டார வழக்குகளை வாசிக்க இயலாமை என்பது நம் கையாலாகாத்தனம் என்றும், இன்று தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்களுள் பேச்சுத் தமிழ் வாசிப்பும் எழுத்தும் முதன்மையான ஒன்று என்றும் கருதுகிறேன்.
தூய தமிழ் என்பது எழுதுவதற்கும் வாசிபபதற்கும் எளிது; பேசுவதற்குக் கடினம். பேச்சுத் தமிழ் என்பது பேசுவதற்கு எளிது; எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் கடினம். பொது அனுபவத்தில் இப்படித்தான் இருக்கிறது.
செந்தமிழும் நாப்பழக்கம் என்றார் ஔவை. அதுபோல், வட்டாரத் தமிழ் என்பது எழுத்துப் பழக்கம், வாசிப்புப் பழக்கம். அது எழுதி எழுதியும் வாசித்து வாசித்தும் அடையப்பெற வேண்டிய திறமை.
எழுத்து என்பதே பேச்சின் ஓசையைக் கண்ணால் பார்த்து மனம் புரிந்து கொள்ளும்படி மனிதன் கண்டுபிடித்த குறியீட்டு முறைமைதான். இதில் தூயமொழிப் பேச்சு என்பது எழுத்தை மீண்டும் ஓசைப்படுத்துவதால் பிறந்ததாகவே இருக்க வேண்டும். ஒருவகையில், பேச்சு வடிவத்தை விட இது எளிதானது. எனவே மழுங்கிய மதியினர்தாம் இதனை உருவாக்கியிருக்க வேண்டும் என்று வாதிட இடம் உண்டு. மொழியின் செவ்வடிவம் ஆட்சித் துறைகளில்தான் அதிகம் பயன்படுகிறது என்பதைப் பார்க்கும்போது அந்த வாதம் வலுப்பெறுகிறது.
ஆனால், எவ்வளவு முயன்றாலும் எழுத்து வடிவம் என்பது பேச்சு மொழியின் தொனிப்புகளைத் துல்லியமாகக் காட்டிவிட முடிந்ததில்லை. அதில் எழுத்து என்பது ஒரு குறைப்பட்ட கருவியாகவே இருக்கிறது. பேச்சின் தொனிப்புகளை எந்த அளவு நெருங்கி வருகிறதோ அந்த அளவு வட்டார வழக்கைக் கையாளும் எழுத்துப் பிரதி வெற்றி அடைகிறது. ஆனால், அரை பாகை விலகலாவது இல்லாமல் அது முழுத் துல்லியம் காட்டவே இயலாது. ஏனெனில், பேச்சு இயற்கை, எழுத்து செயற்கை.
நான் மொழிபெயர்க்கும் கதைகளில் இடம் கருதி வட்டார வழக்கு மற்றும் செம்மை ஆகிய இரண்டு மொழி வடிவங்களையும் கையாள்கிறேன். காதலின் நாற்பது விதிகள், ஜின்களின் ஆசான், அஹில்லா ஆகிய நாவல்களையும், முல்லா நஸ்ருத்தீன் கதைத் தொகுப்புக்களையும் வாசித்தால் இதனை உணரலாம். (அனைத்தும் சீர்மை வெளியீடுகள்)
தற்போது மொழிபெயர்த்து வரும் அறபுச் செவ்வியல் கதைகளிலும் அதன் மாந்தர் வட்டார வழக்கிலேயே பேசுகிறார்கள். எனக்கு இது கைவருகிறதா என்று வாசகர்களை வைத்து அவ்வப்போது சோதித்துக் கொள்கிறேன். நேற்று, மடிக்கணினியில் பின்வரும் துணுக்குக் கதையைத் தட்டிக் கொண்டிருக்கும்போதே நல்ல வாசகரான இளம் பேராசிரியர் து.பிரபாகரனிடம் காட்டினேன். ‘நல்லா இருக்கு சார், எழுதுங்க சார்” என்றார் (’இன்னும் எயிதுக வாத்தியாரே!’ என்று அவர் வாழ்த்திவிட்டதாக மகிழ்ந்தேன்):
ஜுஹாவுக்கு இரண்டு மனைவியர். ஒரு மாலையில், அவர் அவர்களுடன் அமர்ந்து அவர்களின் சகவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, இருவரில் அவர் யாரை அதிகம் நேசிக்கிறார் என்று கேட்டு அவரைப் பிடிக்க வேண்டும் என்று இரண்டு பெண்மணிகளும் திட்டம் தீட்டினர்.
”ரெண்டு பேரையும் சமமாத்தான் நேசிக்கிறேன்,” என்றார் ஜுஹா.
அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. “அதெல்லாம் கெடையாது. இப்படியெல்லாம் நீங்க நழுவ முடியாது. இப்ப வசமா மாட்டீருக்கீங்க! தோ, அங்கினெ ஒரு கொளம் இருக்குதுல்ல. எங்க ரெண்டு பேத்துல யாரெ அதுல முழுகடிப்பீங்க? சொல்லுங்க, யாரெத் தூக்கி தண்ணீல வீசுவீங்க?”
ஜுஹா யோசித்தார். தன் இக்கட்டான நிலையை நினைத்தார். அப்புறம் சட்டென்று தன் முதலாம் மனைவியிடம் கேட்டார்:”இப்பத்தான் எனக்கு யாவுகம் வருது. நாலு வருசத்துக்கு மிந்தி நீ ஒங்கூருல நீச்ச கத்துக்கிட்டீல்ல கண்ணு?”