கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

மதச்சார்பின்மையை மதச்சார்பற்றதாக்குதல்!

Loading

Secularizing Secularism என்ற தலைப்பில் பேராசிரியர் இர்ஃபான் அஹ்மது பேசிய காணொளியைத் தழுவி எழுதப்பட்டிருக்கிறது இந்த ஆக்கம்.

ஃபிரெஞ்சு விவகாரத்தை ஒற்றைக் கலாச்சாரவாதத்துக்கு (Cultural Monism) சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். ‘மதச்சார்பற்ற’ அரசியல் சாசனம் மதச் சுதந்திரத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், அது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு பிரதி. ஆதிக்கம் செலுத்தும் கலாச்சார மதிப்பீட்டின் தாக்கத்துக்கு ஆட்பட்டு அதை வாசித்து ஒரு புரிதலுக்கும் நடைமுறைக்கும் அவர்கள் வருகிறார்கள். கிறிஸ்தவத்தின் செல்வாக்குக்கு ஆளாகியுள்ள அவர்களிடம் எது இயல்பு, எது இயல்பல்ல என்ற முன்னுணுர்வு இருக்கிறது. ஒரு பெண் தலை முக்காடு அணிகிறாள் என்றால் அது ஃபிரெஞ்சுப் பொதுப்புத்திக்கு அசாதாரணமாகவும், இயல்பு மீறிய ஒன்றாகவும் படுகிறது.

பல ஐரோப்பிய தேச அரசுகள் கொண்டுள்ள மதச்சார்பற்ற ஏற்பாடுகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழமைவில் தோன்றியவையாகும். இப்போது அந்தச் சூழல் மாறிவிட்டது. அரசமைப்புச் சட்டம் தாராளவாதத்தின் அடிப்படையிலேயே உருப்பெற்றுள்ளது. தாராளவாதத்தின் ஆதாரமான கருதுகோள்களுள் ஒன்று, மதம் இறுக்கமானது; மதம் சார்ந்தோர் தங்களது கருத்துநிலையை மறுபரிசீலனை செய்ய மாட்டார்கள் என்பது. தாராளவாதம் நம் கருத்துநிலையை சீர்செய்துகொள்ள இடமளிப்பதாகவும் சொல்லப்படுகிறது. உண்மையில், மதச்சார்பற்ற நாடுகளில், குறிப்பாக மேற்குலகில் வாழும் பல முஸ்லிம் அறிவுஜீவிகள் தங்களின் பல்வேறு கருத்துநிலைகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், தாராளவாதிகளும் மதச்சார்பற்றோரும்தான் அவ்வாறு செய்யத் தயாராக இல்லை. இந்தப் பின்னணியிலிருந்து பார்த்தால், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருக்கும் மதச்சார்பின்மையானது மதச் சிறுபான்மையினரின் கண்ணோட்டத்திலிருந்து அணுகப்பட வேண்டியதன் அவசியம் புரியும்.

1789 ஃபிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து அங்கே வாழ்ந்த அனைத்து மக்களுக்கும் சுதந்திரம், சமத்துவம் போன்றவை கிடைத்துவிடவில்லை. யூதர்கள் முதலான பிற சிறுபான்மைச் சமூகங்களுக்கு அவை எட்டாக்கனியாகவே இருந்தன. யூதர்கள் சமமாக நடத்தப்பட வேண்டுமென்றால், தம் மத அடையாளங்களைப் பலிகொடுக்க வேண்டும் எனும் முன்நிபந்தனை அவர்கள் முன் வைக்கப்பட்டது. எங்கள் மத அடையாளங்களை இழக்காமலேயே நாங்கள் சமமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.

கிட்டத்தட்ட இதேபோன்ற சிக்கல் தற்காலத்திலும் தொடர்வதை நாம் அவதானிக்கலாம். முஸ்லிம்கள் தம் நாடுகளில் சமமாக நடத்தப்பட வேண்டுமென்றால் அவர்கள் தங்களின் மத அடையாளங்களைக் கைவிட வேண்டும் என்று பலவகையில் வற்புறுத்தப்படுகிறது. மதச்சார்பற்ற பண்பாட்டின் பல கூறுகள் கிறிஸ்தவத்தின் அல்லது இந்து மதத்தின் கூறுகளைக் கொண்டிருப்பது கண்டுகொள்ளப்படுவதில்லை. உதாரணத்துக்கு, இந்தியாவில் ஒரு பொது நிகழ்ச்சியைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தால் மையநீரோட்டம்; அதையே குர்ஆன் ஓதித் தொடங்கினால் அடிப்படைவாதம்! ஐரோப்பாவில் கிறிஸ்மஸுக்கு மட்டும் அளிக்கப்படும் விடுமுறையை இதற்கு மற்றுமோர் உதாரணமாகக் கொள்ளலாம்.

கிறிஸ்மஸ் வருகிறதென்றால் இரண்டு வாரங்களுக்கு முன்பே நகரங்களின் தெருக்களெல்லாம் அலங்கரிக்கப்பட்டுவிடும். அதைத் தெரியாத கிறிஸ்தவரல்லாதோர் வீதிகளில் நடக்கும்போதே ஏதோ பண்டிகை வருகின்றதென்பதைக் கண்டுகொள்வார். கிறிஸ்மஸுக்கு இரண்டு வாரங்களுக்கும் பிறகும் இதே நிலை காணப்படும். இதற்கு முரணாக, இஸ்லாமியப் பண்டிகைகளின் நிலை இருக்கும். றமளான் மாதம் முழுக்க நோன்பிருந்து முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுவார்கள். ஆனால், ஆஸ்திரேலியா, டென்மார்க், கனடா போன்ற பெரும்பாலான மேலை நாடுகளில் பெருநாள் அன்று விடுமுறைகூட இருக்காது. தெருக்கள் எப்போதும்போல வெகு சாதாரணமாகவே இருக்கும். காரணம், அந்நாடுகளின் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக முஸ்லிம்களின் பெருநாள் இல்லை. இவை மதச்சார்பற்ற நாடுகள் என்பதாகத் தங்களை வாதிடலாம். ஆனால், அங்குள்ள மதச் சிறுபான்மையினர் இந்த வாதத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம். எனவே, மதப் பன்மைத்துவம் விஷயத்தில் இந்நாடுகள் திறந்த தன்மையுடன் (openness) நடந்துகொள்வதும், தங்களின் கருத்துநிலையை மறுவிசாரணைக்கு உட்படுத்துவதும் தற்போதைய தேவையாக உள்ளது.

ஃபிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளில் மதச்சார்பின்மையை மதச்சார்பற்றதாக மாற்ற வேண்டியிருக்கிறது. மேலும், தேச அரசு ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் பல நேர்மறையான, எதிர்மறையான கூறுகளையெல்லாம் உள்வாங்கியே உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு வகுக்கப்படும் சட்டங்களிலும் விதிமுறைகளிலும் அந்தக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு இருக்கிறது. ஆக, நாம் சமூகத்தை இன்னும் ஜனநாயகப்படுத்த வேண்டுமே அன்றி, எந்தவொரு விவகாரத்தையும் விவாதிக்கத் தகுந்ததில்லை என்று ஒதுக்கிவிடக் கூடாது. ஆனால் தீவிர வலது, இடது சக்திகள் இதைத்தான் செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில்தான் சொன்னேன், மதம் சார்ந்த மக்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வரும்போது, தாராளவாதிகள் என்றும் மதச்சார்பற்றோர் என்றும் கூறிக்கொள்வோர் தங்கள் கருத்துநிலையை மறுபரிசீலனை செய்ய முன்வருவதே இல்லை என்று.

Related posts

Leave a Comment