குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தற்கொலை

தற்கொலை செய்பவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக அணுகிவிட முடியாது. பல்வேறு காரணிகள் ஒன்றிணைந்தே ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன என்று கூறுகிறார்கள் உளவியலாளர்கள். தாங்க முடியாத அழுத்தத்தை உணரும்போது அதிலிருந்து விடுபட தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவோர் ஒரு வகையினர். உளநோயால் பாதிக்கப்பட்டு தற்கொலையின் பக்கம் தள்ளப்படுபவர்கள் ஒரு வகையினர். முதல் வகையினரின் தற்கொலையை அவர்களின் மீது அக்கறை கொண்டவர்களால் ஓரளவுக்குத் தடுக்க முடியும். நிராசையிலிருந்து விடுவிக்கும் நல்ல சொற்கள் அவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணிகள். அப்படிப்பட்ட பலரை சாதாரண ஒரு சொல் அல்லது சாதாரண ஒரு காட்சிகூட காப்பாற்றியிருக்கிறது. தங்களின் அழுத்தங்களிலிருந்தும் தனிமையிலிருந்தும் வெறுமையிலிருந்தும் அவர்கள் விடுபட்டுவிட்டால் மிக விரைவில் அவர்கள் மீண்டு விடுவார்கள்.

தற்கொலை செய்வது தங்களின் தனிப்பட்ட உரிமை என வாதிடுவது நாத்திக மனநிலையின் விளைவு. தற்கொலையைக் கொண்டாடுவது எந்த வகையான மனநிலை என்று தெரியவில்லை. அது ஒருவகையான மனப்பிறழ்வு என்றே கருதுகிறேன். ஒருவரின் தற்கொலை அவரோடு மட்டும் முடிந்துவிடக்கூடியதல்ல. அது அவருக்கு அணுக்கமாக இருக்கும் அனைவரையும் பாதிக்கக்கூடியது. அது உருவாக்கும் அதிர்ச்சியிலிருந்து அவர்கள் அவ்வளவு எளிதாக மீண்டுவிட முடியாது. தற்கொலை செய்து கொள்ளும் உரிமை எந்த மனிதனுக்கும் இல்லை என்று இஸ்லாம் அழுத்தமாகக் கூறுகிறது. இஸ்லாம் அதனை ஒருவரின் தனிப்பட்ட விவகாரமாக மட்டுமே பார்க்கவில்லை.

இறைநம்பிக்கையாளர்கள் இறைவன் மீது எந்தச் சமயத்திலும் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். இந்த நம்பிக்கை மிக எளிய நம்பிக்கைததான் என்றாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் வலுவானது. இதுபோன்ற நம்பிக்கைகளே வாழ்க்கையே அழகுபடுத்தும். அதனை எளிதாகக் கடப்பதற்கு வழிவகுக்கும்.

மற்றொரு வகையினர் உளநோயின் காரணமாக தற்கொலையின் பக்கம் தள்ளப்படுபவர்கள். அது அவர்களையும் அறியாமல் அவர்களை ஆட்டிப் படைக்கும் ஓர் உணர்வு. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நிச்சயம் அவர்கள் குற்றவாளிகள் அல்ல. நல்ல முறையில் கவனிக்கப்பட வேண்டிய உளநோயாளிகள். ஒரு கட்டத்திற்கு மேல் ஆலோசனைகள் அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்களின் குறைபாட்டைச் சரிசெய்யும் மருந்துகளே அவர்களுக்குப் பயனளிக்கும். உளநோயின் காரணமாக தற்கொலையின் பக்கம் செல்பவர்களை பெரும்பாலோர் புரிந்துகொள்வதில்லை. பலருக்கு இதனைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை என்றே தெரிகிறது. எல்லாவற்றையும் அவர்கள் ஒரே மாதிரியாகவே அணுகுகிறார்கள்.

ஷிர்க்கைத் (இறைவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவது) தவிர மற்ற எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடுகிறான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. தற்கொலை செய்பவர்கள் நரகிற்குச் செல்வார்கள் என்று ஹதீஸில் கூறப்பட்டிருப்பது சமூகத்தில் இருந்து அதனை அகற்ற வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட எச்சரிக்கை மொழியாக இருக்கலாம். நிச்சயம் வேண்டுமென்றே தம்மைத் தாமே மாய்த்துக் கொள்பவர் பெரும் பாவங்களில் ஒன்றைச் செய்துவிட்டார் என்பதில் எத்தகையே சந்தேகமும் இல்லை. ஆனால் தற்கொலை செய்து கொள்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.

Related posts

Leave a Comment