கட்டுரைகள் 

பெண் என்பவள்…

பெண்கள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களிடம் பேசுவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கின்றன. குறைவாகப் பேசக்கூடிய பெண்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பேசிப் பேசி எல்லாவற்றையும் கடக்கிறார்கள். புலம்புகிறார்கள், தன்னிரக்கம் தேடுகிறார்கள், அழுகிறார்கள். இவற்றின்மூலம் அவர்களால் மலையளவு பாரங்களைக்கூடி எளிதாக இறக்கி வைத்துவிட முடிகிறது. அவர்களின் பலவீனம்கூட அவர்களுக்குப் பலம்தான். பல சமயங்களில் அது ஆண்களின் பலத்தைக்கூட வீழ்த்திவிடுகிறது.

ஆண், பெண் தொடர்பின் எல்லைகளை இஸ்லாம் வரையறை செய்கிறது. அந்த எல்லைகளைத் தாண்ட வேண்டுமானால் திருமணம் என்ற பந்தத்திற்குள் இருவரும் வர வேண்டும் என்ற வழிமுறையையும் அது கற்றுத் தருகிறது. அதைத் தாண்டிய உறவை அது தடைசெய்யப்பட்ட உறவாக்கி அது இருவருக்கும் பேரிழப்பை உருவாக்கும் என்றும் எச்சரிக்கிறது. அதனால்தான் திருமணத்தையும் விவாகரத்தையும் மிக இலகுவாக்கி வைத்திருக்கிறது. ஆண், பெண் தொடர்புக்கு மத்தியிலுள்ள மெல்லிய திரை அகற்றப்பட்டுவிட்டால் அது பெரும் குழப்பத்திற்கு வழிவகுக்கும்.

எந்தச் சமயத்திலும் ஆண் ஆண்தான், பெண் பெண்தான். ஆண்கள் தங்களுக்குரிய இயல்பான பண்புகளோடும் பெண்கள் தங்களுக்குரிய இயல்பான பண்புகளோடும்தான் இருக்கிறார்கள். ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் கொள்ளும் நட்பு போன்று, ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் கொள்ளும் நட்பு போன்று ஆண்-பெண் நட்பு எந்த அளவு சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. அது ஆபத்தான ஒன்றாகவே எனக்குத் தெரிகிறது. இங்கு செயல்படுவது விருப்பமும் விருப்பமின்மையும்தான். விருப்பம் சாக்குப்போக்குகளை உருவாக்குகிறது. விருப்பமின்மை தொந்தரவாக அடையாளம் காட்டப்படுகிறது. இங்கு விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் விதிவிலக்குகளை அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான வரையறைகளாக ஆக்கிவிட முடியாது.

பெண் எளிதாக ஏமாற்றப்பட்டு விடுகிறாள். எதையும் எளிதாக நம்பி விடுகிறாள். எளிதாக நம்பும் அவளது தன்மைதான் அவளது பலவீனம். ஒரு வகையில் அது அவளது பலமும்கூட. எளிய நம்பிக்கை பல சமயங்களில் கை கொடுக்கவும் செய்கிறது. தேவையற்ற பயத்திலிருந்தும் கவலைகளிலிருந்தும் அவளைப் பாதுகாக்கவும் செய்கிறது. அவள் உணர்ச்சிமிகுந்தவள். எந்தவொரு உணர்வாலும் அவள் எளிதாக ஆட்கொள்ளப்பட்டுவிடுகிறாள். இந்த மிகுஉணர்ச்சி நேர்மறையானவற்றில் ஏற்படும்போது ஆண் ஈர்க்கப்படுகிறான். இந்த மிகுஉணர்ச்சி எதிர்மறையானவற்றில் ஏற்படும்போது அவன் விலகிஓடுகிறான். பெண்ணின் மிகுஉணர்ச்சியை புரிந்துகொள்ளும் ஆணால் அவளை மிக எளிதாக அணுகிவிட முடியும் என்று கருதுகிறேன். அவளது பலவீனத்தின் காரணமாகவே அவள் உதவி செய்யப்படுகிறாள். சமூக விரோதிகளைத் தவிர வேறு யாரும் பலவீனர்களை ஏமாற்ற வேண்டும் என்றோ துன்புறுத்த வேண்டும் என்றோ எண்ண மாட்டார்கள். அவளது பலவீனத்தின் காரணமாக அவளது தவறுகள் பெரிதாக்கவும்படுகின்றன. இந்தியாவில் முஸ்லிம்களின் தவறுகள் பூதாகரமானவையாக சித்தரிக்கப்படுவதைப்போல.

இப்படி எல்லோரையும் பொத்தாம் பொதுவாக ஒரு வரையறைக்குள் அடைத்துவிட முடியாது. சில பெண்கள் விதிவிலக்கானவர்கள். அவர்கள் பிசாசுகளைப் போன்றவர்கள். ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் பலவீனமே அவர்களின் பலம். வெளியிலிருந்து பார்க்கும்போது தேவதைகளாகத் தெரிவார்கள். அவர்களின் அழகு அல்லது பலவீனம் அவர்களின் குரூரங்களை மூடி மறைத்திருக்கும்.

ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான இயல்புகளைக் கொண்டவர்கள் அல்லர். ஆணுக்குரிய பண்புகள் வேறு. பெண்ணுக்குரிய பண்புகள் வேறு. சில ஆண்களிடம் பெண்களுக்குரிய பண்புகள் அமைந்துவிடுவதும் சில பெண்களிடம் ஆண்களுக்குரிய பண்புகள் அமைந்துவிடுவதும் விதிவிலக்கானவை. விதிவிலக்குகளை நாம் பொதுவானவற்றோடு ஒப்பிட முடியாது.

பெண்ணியம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடு. அதன் கண்ணோட்டத்தில் நின்று நாம் பெண்களைப் பார்த்தால் ஏமாந்துவிடுவோம். ஆண்களுக்கு எதிராக அது உருவாக்கி வைத்திருக்கும் சொல்லாடல்கள் போட்டி மனப்பான்மையை, காழ்ப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அதன் கண்ணோட்டங்கள் பெரும்பாலும் பாசாங்கானவை.

பெண்களின் அழகு சில சமயங்களில் அவர்களுக்குப் பெரும் தொல்லையாகவும் அமைந்துவிடுகிறது. அழகான மனைவிகளைப் பெற்ற கணவர்களின் உள்ளத்தில் இயல்பாகவே சந்தேகமும் பயமும் குடிகொண்டுவிடுகின்றன. அவை அவர்களை வேறு முகம்கொண்ட மனிதர்களாக மாற்றிவிடுகின்றன. மற்றவர்களுடன் அவர்கள் சிறந்த முறையில் நடந்துகொண்டாலும் மனைவியருடன் மிக மோசமாக நடந்துகொள்கிறார்கள். அவர்கள் கொண்டிருக்கும் சந்தேகமும் பயமும் வெறுப்பாக, கோபமாக மாற்றமடைந்து தம்பதியரின் இல்வாழ்க்கையை நாசம் செய்துவிடுகின்றன.

தம்பதியினரின் இல்வாழ்க்கை நாசமடைவதற்கு புரிதலின்மை ஒரு காரணமாக இருந்தாலும் வெறுப்பே மிக முக்கியமான காரணியாக இருக்கின்றது. இருவருக்கும் மத்தியில் நேசம் இருக்கும்பட்சத்தில் ஒருவர் மற்றவரின் மீது கொள்ளும் கோபத்திற்கான காரணிகளை எளிதாக புரிந்துகொண்டு சகித்துக்கொள்கிறார்கள், சரிசெய்துவிடுகிறார்கள். காதல் உருவாக்கும் ரோஷம் இயல்பானது. இருபக்க காதலில் அது எளிதாக புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு பக்க காதலில் அது பெரும் தொல்லையாக, சித்ரவதையாகக் கருதப்படுகிறது.

பலவீனம் வெறுமனே நமக்கு இழப்பை மட்டுமே தரக்கூடிய ஒன்றல்ல. சில சமயங்களில் அது நம்மை பெரும் ஆபத்துகளிலிருந்துகூட காப்பாற்ற வல்லது. பலமும் அப்படித்தான். அது நமக்கு இலாபம் மட்டுமே தரக்கூடிய ஒன்றல்ல. சில சமயங்களில் நம் அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடும். பலவீனமானவனுக்கே நாம் உதவி செய்கிறோம். இரு மனிதர்கள் சண்டையிட்டுக்கொண்டால் பலவீனமானவனையே நாம் ஆதரிக்கிறோம். நம்மிடம் இருக்கும் இரக்கப்பார்வை முதலில் பலவீனமானவனையே பார்க்கிறது. நாம் யாருக்கேனும் பொருளாதார அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால்கூட மிக மிகப் பலவீனமானவரைப் பார்த்தே உதவி செய்கின்றோம். பலமானவன் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்க மாட்டான். அப்படியிருந்தாலும் அவன் சோம்பேறித்தனத்தின் காரணமாகவே அந்த நிலையை அடைந்திருப்பான் என்று நம்முடைய ஆழ்மனதில் ஏதோ ஒரு எண்ணம் இருக்கிறதுபோலும். ஆனால் உண்மை அப்படியல்ல. திறமையும் பலமும் பெற்றிருக்கும் எத்தனையோ மனிதர்கள் வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் திறமையையும் பலத்தையும் தாண்டி ஏதோ ஒன்று அவர்களை வறுமையில் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பெண்ணின் பலவீனமும் அவளது பலம்தான். அதன் காரணமாக அவளுக்கு ஏற்படும் இழப்பைவிட இலாபமே அதிகம். பெண்ணிடமிருந்து வெளிப்படும் மூர்க்கத்தை மிகச் சாதாரணமாக நாம் கடந்து விடுகின்றோம். ஆணிடமிருந்து வெளிப்படும் மூர்க்கத்தை மிகக் கொடூரமான ஒன்றாகச் சித்தரிக்கின்றோம். பலவீனமும் பலமும் நம்முடைய பார்வைகளையும் வேறுபடுத்துகின்றன. நியாயம், அநியாயம் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகே நமக்குத் தென்படத் துவங்குகின்றன. பெரும்பாலோர் பலவீனத்தின் பக்கம் நியாயம் இருக்கும் என்று குருட்டுத்தனமாக எண்ணிக்கொள்கிறார்கள்.

பெண் ஏமாறுகிறாள், ஆண் ஏமாற்றுகிறான் என்று கூறுவது பெண் பலவீனமானவள் என்பதனால்தான். இங்கு பெரும்பாலும் ஏமாறுதல் ஏமாற்றுதல் என்பதெல்லாம் இல்லை. இருவரும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். ஏமாறுதல் என்ற வார்த்தையை நாம் பலவீனமானவர்களுக்கே அதிகம் பயன்படுத்துகிறோம்.

ஆண், பெண் மத்தியிலுள்ள இயல்பான ஈர்ப்பும் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு தேவையுடையவர்களாக இருப்பதும் மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும் அவசியமான அடிப்படையான அம்சங்களாகும். திருமணம் என்னும் அமைப்பு ஆரம்ப காலம்தொட்டே இருந்து வருகின்ற அமைப்பாகும். அது தகர்க்கப்படும்போது அதிகம் பாதிக்கப்படுவது பெண்தான். அதுதான் பெண்ணுக்கு பாதுகாப்பை, உத்தரவாதத்தை அளிக்கக்கூடியது. ஆண், பெண் உறவுக்கு திருமணம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட, பாதுகாப்பான வழிமுறை. அதைத் தாண்டிய வழிமுறைகள் துன்பங்களை கொண்டு வரக்கூடியவை.

ஆண் பெண் மத்தியிலுள்ள இயல்பான ஈர்ப்பு மிக மிக ஆச்சரியமான ஒன்று. எத்தனை முறை பார்த்தாலும் அந்த ஈர்ப்பு குறைந்துவிடுவதில்லை. மீண்டும் மீண்டும் புதிய ஒன்றாக அது மாறிக்கொண்டேயிருக்கும். அது உருவாக்கப்படக்கூடிய ஒன்றல்ல. இயல்பாகவே அமைந்துவிட்ட ஒன்று. விதியின் கரம் யாரை யாருடன் இணைக்க வேண்டும் என்று நாடுகிறதோ அவரை அவருடன் இணைத்துவிடுகிறது. அது யாரை பிரிக்க வேண்டும் என்று நாடுகிறதோ அவர்களுக்கு மத்தியிலுள்ள ஈர்ப்பை அகற்றி அவர்களைப் பிரித்துவிடுகிறது. ஈர்ப்பு என்பது நாம் அழகு என்று எதைக் கூறுகிறோமோ அதைத் தாண்டிய ஒன்று. அழகாகத் தெரியும் ஒன்று ஈர்க்கும் தன்மை இல்லாமலும் இருக்கலாம். சாதாரணமான ஒன்று வலுவான ஈர்ப்பைக் கொண்டதாகவும் இருக்கலாம். இந்த ஈர்ப்பும் ஈர்ப்பின்மையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத விசயங்களுள் உள்ளவை.

Related posts

Leave a Comment