கட்டுரைகள் 

நாத்திகம் என்னும் சீர்குலைவு

நாத்திகர்கள் மனிதம் பேசினாலும் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்று நாம் கூறுவதற்குக் காரணம், எல்லாவித அறவிழுமியங்களையும் தகர்க்கும் அவர்களின் நாத்திக வாதம்தான். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு ஏன் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டும்? ஏன் அநீதி இழைக்காமல் இருக்க வேண்டும்? கணவன் தன் மனைவிக்கோ மனைவி தன் கணவனுக்கோ ஏன் துரோகமிழைக்காமல் இருக்க வேண்டும்? இப்படி ஒவ்வொன்றையும் ஏன், ஏன் என்ற கேள்வியை முன்வைக்கும்போது அவர்களின் வாதப்படி தாமாகவே ஒவ்வொன்றும் தகர்ந்து விடுகின்றன.

மனிதன் இயல்பாகவே சுயநலம்மிக்கவன். தன் நலன்களை மட்டுமே பார்க்கக்கூடியவன். அதற்கேற்ப நியாயவாதங்களும் அவனுக்கு அமைத்துக் கொடுக்கப்படும்போது அவன் கொடிய விலங்காகி விடுகிறான். சுயநலமும் நம்பிக்கைத் துரோகமும் அநியாயமும் நாத்திகம் வாழும் பகுதியில்தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன.

மனநலம் பாதிக்கப்பட்டு ஒரு குதிரையைக் கட்டிப்பிடித்தவனாக மரணமடைந்தார் நீட்சே. வெறுமையாலும் நிராசையாலும் தின்னப்படாமல் மனநிறைவோடு மரணத்தைத் தழுவினார் என்று எந்நவொரு நாத்திகரையும் காட்ட முடியாது. அவர்கள் எழுப்பிய கேள்விகள் அவர்களின் குழப்பங்களை அதிகரித்ததே தவிர நேரான எந்த வழியையும் அவர்களுக்குக் காட்டவில்லை. இளமையில் வீரியத்தோடு அவர்கள் பேசும் நாத்திகம் முதுமையில் கொடும் சித்ரவதையாக அவர்களுக்கு அமைந்து விடுகிறது.

மனிதர்கள் இயல்பாகவே இறைவனை உணர்கிறார்கள். அவன் பக்கம் அடைக்கலம் தேடுகிறார்கள். தங்களின் கோரிக்கைகளையும் ஆசைகளையும் அவனிடமே முறையிடுகிறார்கள். வெயில், மழை, பனி, காற்று, கடல், நிலம் என இந்த உலகிலுள்ள ஒவ்வொன்றும் அவர்களுக்கு இறைவனை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.

இறைவனை மறுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவனை ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை. மனிதன் தன் இயல்பு நிலையில் நிலைத்திருத்தலே போதுமானது. மேலோட்டமான அறிவு இறைவனை மறுக்கத் தூண்டலாம். ஆனால் ஆழமான அறிவு நிச்சயம் மனிதனை இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும்.

வாழ்க்கை குறித்த ஆதாரமான கேள்விகளிருந்தே மதம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. ஒவ்வொரு ஆரோக்கியமான மனிதனுக்குள்ளும், “உலகம் என்பது என்ன, மனிதன் என்பவன் யார், அவன் எங்கிருந்து வந்தான், அவனைப் படைத்தவன் யார், எதற்காக அவன் படைக்கப்பட்டான், மரணம் என்பது என்ன, மரணத்திற்குப் பின்னால் என்ன நிகழும்” என்பது போன்ற வாழ்க்கை குறித்த ஆதாரமான கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இக்கேள்விகளுக்கு விடை தெரியாத மனிதன் வெறுமையை, நிம்மதியற்ற நிலையை உணர்கிறான். இக்கேள்விகளை புறக்கணித்து எவரும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. ‘எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்’ என்பதைக்கூட அறியாதவர்களால் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியும்? இஸ்லாம் மட்டுமே இதற்கான தெளிவான, திருப்தியான பதிலைத் தருகிறது. அது தரும் பதில்கள் மனித இயல்போடு அப்படியே ஒன்றிப்போய் விடுகின்றன. இலக்கை நோக்கிய பயணம் நிம்மதியைத் தருகிறது.

ஆன்மீகம் சார்ந்த எதையும் வாசிக்க மாட்டேன் என்று ஒருவன் தன் மூளையை அடைத்துக் கொண்டு வாழ்வது எவ்வளவு துரதிஷ்டமானது! அப்படிப்பட்டவர்கள் தேடல் கொண்டவர்களாக இருக்க முடியாது. ஷைத்தானிய பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். கவர்ச்சிகரமான கோஷங்களைக் கொண்டு தங்களை மூடிமறைத்துக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் பார்வையில் இறைமறுப்பைவிட பெரும் குற்றம் எதுவுமில்லை. தன்னைப் படைத்துப் பராமரிக்கும் தனக்கு வாழ்வாதாரம் அளிக்கும் இறைவனை மறுப்பதைவிட மிகப்பெரிய நன்றிகெட்டத்தனம் எதுவுமில்லை. இறைவனை மறுத்துவிட்டு மனிதம் பேசுபவர்கள் மிக மிக ஆபத்தானவர்கள். அவர்கள் மனிதர்களைக் கொன்று குவிக்கும் கொடூரர்களாக மாறும் சாத்தியக்கூறுகளும் இல்லாமல் இல்லை. சோவியத் ரஷ்யாவின் முன்னுதாரணங்கள் இன்னும் நம் கண்முன்னால்தான் இருக்கின்றன.

இவ்வுலக வாழ்வே அனைத்தும்; இதற்குப் பின்னால் எதுவும் இல்லை என்று எண்ணுபவர்கள் வாழ்க்கையை எப்படியாவது அனுபவித்துவிட வேண்டும் என்ற நோக்கில் சமூக விரோத காரியங்களில்கூட ஈடுபடத் தயங்க மாட்டார்கள். அவர்களிடம் நன்மை-தீமை, சத்தியம்-அசத்தியம், என எந்த வேறுபாடும் இருக்காது. தங்களின் மன இச்சைகளைப் பூர்த்தி செய்வதே அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கும். இவர்கள்தாம் மனித குலத்தின் முதல் எதிரிகள். இப்படிப்பட்டவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சமூகம் விரைவில் சீர்குலைந்து சின்னபின்னமாகிவிடும். அமைதியான வாழ்க்கையை இழந்துவிடும். அங்கு அதிகாரம் பெற்றவர்கள் எளியவர்களை அடக்கி ஒடுக்குவார்கள். தங்களின் நலன்களுக்காக எதையும் செய்யத் துணிவார்கள். தாங்கள் செய்யும் எல்லா காரியங்களையும் தம் அறிவால் நியாயப்படுத்துவார்கள். எதிர்ப்புகளை தம் பலம்கொண்டு நசுக்குவார்கள்.

நாத்திகம் ஒரு வாழ்க்கை முறை என்று சொல்லப்படுகிறது. மதவாதத்திற்கான ஒரு மாற்றாக அதன் பின்பற்றாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அப்படியல்ல. அது வாழ்க்கை முறையைச் சீரழிக்கும் நோய்க்கூறு. சீரான மனித வாழ்க்கைக்கு அவசியமான அறநெறிகளை அழித்தொழிக்கும் கொடிய விஷம். அது மதவாதம் ஏற்படுத்தும் பாதிப்புகளைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

மதநம்பிக்கையைப் போன்று நாத்திகமும் ஒரு நம்பிக்கை. ஆனால் அது எந்த அறநெறிகளையும் வரையறைகளையும் கொண்டிராத நம்பிக்கை. அது சமூகத்தை அழிக்கும் கொடிய நோய்க்கூறு என்று நாம் கூறுவது அது பெற்றிருக்கக்கூடிய இந்த தன்மையினால்தான். எல்லா கொடியவர்களும் தீயவர்களும் தங்களின் செயல்களை நியாயப்படுத்த ஏதுவான தர்க்கங்களை அது ஏற்படுத்திக் கொடுக்கிறது.

சமூகத்தின் வரையறைகள், அறநெறிகள் இதுபோன்ற தர்க்கங்களைக் கொண்டு தகர்க்கப்பட்டால் சமூகத்தில் எப்படி அமைதியும் இணக்கமும் நீடிக்க முடியும்? கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் வளர்க்க வேண்டிய அவசியமில்லை. பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களைப் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆட்சியாளர்கள் குடிமக்களுடன் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. குடிமக்கள் தங்களின் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டதால் நம்மைச் சுற்றிக் காணப்படும் அற்புதங்களை மறந்துவிட்டோம் என்கிறார் அறிஞர் செய்யித் குதுப். நம்மைச் சுற்றிக் காணப்படும் ஒவ்வொரு படைப்பினமும் அற்புதமே. அவற்றின் ஒழுங்கமைப்பு, சீரான இயக்கம் என அனைத்தும் படைப்பாளனின் ஆற்றலையே பறைசாற்றுகின்றன.

இயந்திர வாழ்க்கையில் தம்மைத் தொலைத்துவிட்ட நகரங்களில்தான் நாத்திக வாதம் அதிகமாகப் பேசப்படுகிறது. ஆன்மிக வறட்சி காணப்படுகிறது. செக்கு மாடுகள்போல் எப்போதும் அவர்கள் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்குத் தேவையான ஆதாயங்களைத் தவிர எதைப்பற்றியும் அவர்கள் சிந்திப்பதில்லை. வாழ்க்கை குறித்த ஆதாரமான கேள்விகளை எதிர்கொள்ளவே அவர்கள் பயப்படுகிறார்கள். அவ்வாறான சிந்தனை தோன்றும் சமயங்களில் ஏதோ ஒன்றால் தம்மைத் திசைதிருப்பிக் கொள்கிறார்கள், நிரப்பிக் கொள்கிறார்கள். இயந்திர வாழ்க்கையை விட்டுவிட்டு இயல்பு வாழ்க்கை வாழ்பவர்களிடம் நாத்திக வாதம் எடுபடாது. அவர்களைச் சுற்றி காணப்படும் படைப்பினங்களில், காட்சிகளில் அவர்கள் இறைவனை, அவனது ஆற்றலைக் கண்டுகொண்டேயிருப்பார்கள்.

பார்த்துப் பார்த்து பழகிவிட்ட அந்த காட்சிகளையே புதிய கண்கொண்டு பார்க்குமாறு குர்ஆன் நம்மை அறிவுறுத்துகிறது. அவை படைப்பாளனின் இருப்பிற்கும் அவனது வல்லமைக்கும் சாட்சி கூறிக்கொண்டேயிருக்கின்றன.

“வானங்கள், பூமியின் படைப்பிலும், இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிக்கக்கூடியவற்றை சுமந்துகொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கிய நீரிலும் – அதைக்கொண்டு அவன் வறண்ட பூமியை செழிப்பாக்குகிறான் – இந்தப் பிரபஞ்சத்தில் அவன் படைத்த உயிரினங்களிலும், ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு அவன் காற்றை வீசச் செய்வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்படுத்தப்பட்டுள்ள மேகங்களிலும் அறிவுள்ள மக்களுக்கு, இறைவன் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.” (2:164)

Related posts

Leave a Comment