கட்டுரைகள் 

ஆம் நான் எழுதுகிறேன்

Loading

எழுத வேண்டும் என்று திட்டமிட்டு எதையும் நான் எழுதுவதில்லை. அவ்வாறு என்னால் எழுதவும் முடியாது. எழுத வேண்டும் என்ற உணர்வு தோன்றும்போது எழுதுகிறேன். அந்த உணர்வு எப்போது, எப்படி தோன்றுகிறது என்பதும் எனக்குத் தெரியாது. அது ஒருவகையான உணர்வு. ஏதோ உள்ளத்தில் பாரமாக இருப்பதுபோன்ற, ஏதோ உருவாகி வருவதுபோன்ற ஒர் உணர்வு. எழுதி முடித்த பிறகு பாரமாக இருந்த எதையோ இறக்கி வைத்ததுபோன்று ஒரு தெளிவு கிடைத்ததுபோன்று உணர்கிறேன். பெரும்பாலும் அழுத்தங்கள் ஏதுமில்லா சமயங்களில்தான் அப்படியான தருணங்கள் அமைகின்றன.

நான் எழுதும் இந்தப் பதிவுகளின் மூலம் ஏதோ ஒரு வகையில் உங்கள் வாழ்வுடன் தொடர்பு கொண்டுள்ளேன் என்பதை நான் அறிகிறேன். சிலருடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். எனது தனிமையைப் போக்குவதற்கு நான் எழுதும் பதிவுகள் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கும் விடையளிக்கும் என்பதையோ உங்கள் மனதுடன் நெருக்கமாக உரையாடும் என்பதையோ நான் அறியவில்லை. எனக்கு அப்படியொரு எண்ணமும் இருந்ததில்லை. ஆனாலும் சில நண்பர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் எனக்கு ஓரளவு மனநிறைவை அளிக்கவே செய்கின்றன. எவ்வாறு இருப்பினும் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

எனக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. நான் தனிமை விரும்பி. உரையாடலை நீட்டிக்கும் கலையை அறிய மாட்டேன். ஒரு கட்டத்தில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் அப்படியே நின்று விடுவேன். என் இயல்பே அப்படித்தான். சில சமயங்களில் எல்லாவற்றையும் அப்படியே உடைத்தும் பேசிவிடுகிறேன். நண்பர்களை தக்க வைத்துக்கொள்வது ஒரு கலை.

சிலர் நுண்ணுணர்வுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எழுத்தாற்றலும் வாய்க்கப்பெற்றவர்களாக இருந்தால் அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது. நானும் நுண்ணுணர்வுகள் கொண்டவன்தான். என்னுள் நிகழும் மாற்றங்களை, என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை, நான் காணும் மனிதர்களை மிக உன்னிப்பாக கவனிக்கிறேன். நான் காணும் இந்த பரந்தவெளியும் நான் வாசிக்கும் புத்தகங்களும் எனக்கு எதையோ சொல்லிக்கொண்டேயிருக்கின்றன. நான் உணர்வதை என் எழுத்தின் வழியாக வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். உண்மையில் என்ன எழுதப் போகிறேன் என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால் எழுத வேண்டும் என்ற உணர்வு மட்டும் தணியாமல் அப்படியே இருந்துகொண்டேயிருக்கிறது. பல சமயங்களில் என்னையும் அறியாமல் அது என்னை மிகைத்துவிடுவதை உணர்கிறேன்.

உள்ளதை உள்ளபடியே எடுத்துரைக்க விரும்புகிறேன். விலகி நின்று ஒவ்வொன்றையும் விமர்சனக்கண்ணோட்டத்துடன் அணுக விரும்புகிறேன். குழுமனப்பான்மையில் அடைபட்டுக் கிடப்பதை வெறுக்கிறேன். உள்ளதை உள்ளபடியே முன்வைக்கும்போது நிச்சயம் அது இஸ்லாமிய அடிப்படைகளுடன் போதனைகளுடன் மோதாது என்று கருதுகிறேன். ஏனெனில் இஸ்லாம் இறைமார்க்கம். இயல்பான எந்தவொன்றோடும் அது முரண்படாது. மனித உள்ளத்தில் இயல்பாகவே இஸ்லாமிய போதனைகள் காணப்படுகின்றன. அதன் மீது படிந்திருக்கும் அழுக்குகளையே இஸ்லாம் நீக்க விரும்புகிறது. அழுக்குகள் நீக்கப்பட்டுவிட்டால் மனித உள்ளத்தில் காணப்படும் போதனைகளுக்கும் இஸ்லாம் கூறும் போதனைகளுக்கும் மத்தியில் எந்த முரண்பாடும் மோதலும் இருக்காது.

இங்கு மனிதர்கள் உருவாக்கிக்கொண்ட அரசியல் நிலைப்பாடுகள் சிக்கலானவை. அவை அவர்களுக்கு மத்தியில் மோதலை உருவாக்கும் காரணிகளில் முதன்மையானவை. அவை இஸ்லாத்தின் பெயரில் முன்வைக்கப்படும்போது சிக்கல் இன்னும் அதிகரித்துவிடுகிறது. அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் அவர்களை இயக்கும் காரணிகளாக மாற்றமடைந்து விட்டால் அவர்களால் எந்தவொன்றையும் கண்டுகொள்ளவோ அவற்றுக்கு மாற்றமான எந்தவொன்றையும் சகித்துக்கொள்ளவோ முடியாது. இங்கிருந்துதான் சிக்கல் உருவாகிறது. அவர்களின் கர்வத்திற்கும் காழ்ப்பிற்கும் பெரும் தீனி கிடைத்துவிடுகிறது.

பெரும்பாலோர் ஏதேனும் ஒரு குழுவோடு ஐக்கியமாகிக் கொள்ளவே விரும்புகிறார்கள். தங்களைக் காத்துக்கொள்வதற்கு, தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு அவர்களுக்கு ஏதேனும் ஒரு குழு தேவைப்படுகிறது. குழுமனப்பான்மையில் சிக்குண்டவர்கள் தங்களைத் தவிர மற்ற குழுக்களை எதிர்க்குழுக்களாகவே பார்க்கிறார்கள். எதிர்ப்பில்தான் குழுக்கள் வளர முடியும். ஆகவே அவை எதிர்க்கவும் எதிர்க்கப்படவும் தயாரான நிலையிலேயே இருக்கின்றன.

இங்கு நேர்மறையான முறையில் தங்களின் கொள்கைகளை முன்னெடுப்பவர்கள் மிகவும் குறைவு. ஒவ்வொருவரும் உடனடி பலன்களை விரும்புகிறார்கள். ஆகவே அவர்களையும் அறியாமல் எதிர்மறையான விசயங்களின் பக்கமே சாய்கிறார்கள். அவைதாம் உடனடியாக கவனத்தைக் கவர்பவை, சூடான விவாதத்திற்கு வழிவகுப்பவை. நேர்மறையான அணுகுமுறை என்று நான் குறிப்பிடுவது வெறுப்பையும் காழ்ப்பையும் தூண்டாத அணுகுமுறை. விமர்சனக் கண்ணோட்டமும் நேர்மறையான அணுகுமுறையில் உள்ளதுதான். நிச்சயம் விமர்சனக் கண்ணோட்டத்திற்கும் சல்லித்தனமான, கீழ்த்தரமான அணுகுமுறைக்கும் மத்தியில் பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன.

முடிந்த மட்டும் தற்காலிக பிரச்சனைகளைப் பேசுவதைத் தவிர்க்கிறேன். கிட்டத்தட்ட எல்லோரும் அவற்றைப் பற்றித்தானே பேசுகிறார்கள். என்னுடைய பதிவுகள் என்றும் படிக்கப்படத் தகுதியான நிரந்தமான பதிவுகளாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் பதிவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்களைத் தரக்கூடியவை அல்ல. அவை என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விவகாரங்களுக்கான தீர்வுகள்; நான் கண்டடைந்த முடிவுகள்; என் அனுபவங்களின் தொகுப்புகள். அவை உங்களுக்குப் பயனளிக்கவும் செய்யலாம். பயனளிக்காமலும் இருக்கலாம். அதனால் எனக்கு எந்த இலாபமும் இழப்பும் இல்லை. எழுத வேண்டும் என்று தோன்றுவதால் எழுதுகிறேன். நான் மாத இதழ்களிலோ பத்திரிகைகளிலோ எழுதியதில்லை. என்னால் எழுதவும் முடியாது. என்னால் திட்டமிட்டு ஒரு தலைப்பில் எழுத முடியாதததுதான் அதற்கான காரணம். அதற்கான மனநிலையை நான் பெற்றிருக்கவில்லை. வெறுமனே தகவல்களை மட்டுமே உள்ளடக்கியிருக்கும் புத்தகங்களை என்னால் வாசிக்க முடியவில்லை. அப்படியொரு புத்தகத்தை என்னால் எழுதவும் முடியாது.

இப்படியொரு காலம் கனிந்து வர வேண்டும் என்றும் மொழி என் வசப்பட வேண்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். அபுல் ஹசன் நத்வீ, செய்யித் குதுப் ஆகியோரின் புத்தகங்களை படிக்கும்போதெல்லாம் இப்படியொரு மொழிவளத்தை என் மொழியில் நான் பெற வேண்டும் என்று என் மனம் துடியாய் துடிக்கும். ஆச்சரியமாக இருக்கிறது, அன்று நான் செய்த பிரார்த்தனையை இன்று நினைத்துப் பார்க்கிறேன். அது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவே உணர்கிறேன். என்னையும் அறியாமல் என்னிடமிருந்து எழுத்து பீறிடுகிறது. என்னை அதற்கு ஒப்புக் கொடுக்கிறேன் என்பதைத் தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. இது நான் அதிகமாக எழுதிக் குவிக்கும் காலமாக இருக்கும் என நான் நம்புகிறேன். என் இறைவன் அதற்கு அருள்புரிய வேண்டும்.

இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் மட்டும் நின்று அதன் சார்பாக வாதாட என்னால் முடியவில்லை. ஒரு காலத்தில் அப்படித்தான் வாதாடிக் கொண்டிருந்தேன். அது சரியான வழிமுறை என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அப்படி வாதாட எண்ணும்போது மனம் இறுகிவிடுவதை உணர்கிறேன். உண்மை என்பது ஒரு தரப்புக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று நான் நம்புவது அதற்குக் காரணமாக இருக்கலாம். மனிதர்கள் தங்கள் அரசியல் சார்புகளைத் தாண்டி யோசித்தால் இப்படியொரு ஒற்றைப்படையான நிலைப்பாட்டை எடுப்பது சரியான ஒன்றாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று நான் கருதுகிறேன்.

இங்கு அரசியல் சார்புகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. அவற்றின் அடிப்படையில் உண்மையும் பொய்யும் தீர்மானிக்கப்படுகின்றன. செய்திகள் அனைத்தும் ஆதரித்தோ எதிர்த்தோ செய்யப்படும் பிரச்சாரங்களாக மாறிவிட்டன. தனிப்பட்ட முறையில் எந்தவொரு செய்தியையும் அடிப்படையாகக் கொண்டு நாம் எந்த முன்முடிவுக்கும் ஆட்பட்டுவிடாமல் இருப்பதே ஆரோக்கியமானது. இங்கு செய்திகள்கூட திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன.

நம் அரசியல் சார்புகளின் மூலம் இஸ்லாத்தை குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரித்தான ஒன்றாக ஆக்கிவிட்டோமோ என்று கருதுகிறேன். இஸ்லாம் அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டது. அது மனிதர்கள் அனைவரையும் ஒரே ஒழுங்கில் தழுவிக்கொள்ளக்கூடியது. இன்று மும்முரமாக அதனை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள்கூட நாளை அதன் படைவீரர்களில் உள்ளவர்களாகலாம். யாருக்குத் தெரியும், மனித மனம் எந்த மாற்றத்திற்கும் உட்படலாம். வரலாறு நமக்கு ஏராளமான முன்னுதாரணங்களை அள்ளித் தருகிறது.

எல்லாவற்றையும் உண்மை-பொய் என்ற இரு எதிரெதிர் நிலைகளுக்குள் அடைத்து அணுகுவது மிக இலகுவானது. அதனால்தான் பெரும்பாலோர் அப்படியான ஒரு நிலைப்பாட்டை அறிந்தோ அறியாமலோ எடுக்கிறார்கள்போலும். அதையும் தாண்டிய ஒரு அணுகுமுறை உண்டு, அதுவே சரியானதும்கூட என்பதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மனித மனம் அந்த நிலையை உணர முடியும். ஆனால் ஒரு நிபந்தனை தர்க்கத்தின் துணைகொண்டு அந்த எளிய மனநிலையை நாம் சிதைத்துவிடக்கூடாது.

தீராப் பசிகொண்ட வாசகன் பெரும்பாலும் எழுத்தாளனாக பரிணமித்து விடுகிறான். சொல்வதற்கும் விமர்சிப்பதற்கும் அவனிடம் ஏராளமான விசயங்கள் சேர்ந்து விடுகின்றன. ஒரு கட்டத்தில் அவனையும் அறியாமல் அவை வேறொரு புதிய வடிவம் பூண்டு வெளிப்படத் துவங்குகின்றன. நிரம்பிவிட்டால் வழிவது இயல்புதானே.

பல வருடங்கள் தொடர்ந்து வாசித்தும் இதுவரை எழுத்தாளர்களாக பரிணமிக்கதாவர்களையும் நான் கண்டிருக்கிறேன். காலம் அவர்களை அனுமதிக்கவில்லை போலும். அல்லது அதற்கான சூழல் அவர்களுக்கு வாய்க்கப்பெறவில்லை. சிலர் மொழிபெயர்ப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். சிலர் கூர்மையான வாசகர்கள் என்ற அளவில் நின்று விடுகிறார்கள். அவர்களால் எந்தவொன்றின் சுவையையும் எளிதாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் புதிதாக எதையும் உருவாக்க முடியாது. எழுத்தாளர்கள் பின்னிருந்து ஊக்குவிக்கும் பெரும் பணியை அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள்.

சிலர் படைப்பூக்கத்திறன் மிகுந்து காணப்படுவார்கள். மொழி அவர்களின் வசப்பட்டுவிட்டால் கொட்டும் அருவி போல, பீறிடும் நீருற்றுபோல எழுத்து அவர்களிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதன் வேகத்தை எந்தவொன்றாலும் மட்டுப்படுத்த முடியாது. ஊற்று தானாக வற்றிவிட்டால்தான் உண்டு. வாசகர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் ஊக்குவித்தாலும் ஊக்குவிக்காவிட்டாலும் அவர்கள் எழுதிக் கொண்டேயிருப்பார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களே அசலான எழுத்தாளர்கள். காலம் அவ்வளவு சீக்கிரம் அவர்களை மறக்கடித்துவிடாது. அவர்களில் சிலர் நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்திருப்பார்கள்.

ஒரு சாரார் மக்களின் ரசனைக்குத் தீனியிட முயல்பவர்கள். மக்களின் ரசனையே அவர்களை வழிநடத்தும். கேளிக்கையாளர்கள் என்று அவர்களைக் கூறலாம். சூழலின் கைதிகள் அவர்கள். மொழி ஆளுமையே அவர்கள் பெற்றிருக்கும் பலம். சிலர் தர்க்கத்திறனும் பெற்றிருப்பார்கள். உள்ளீடற்ற வெற்றிடமே அவர்களின் எழுத்துகளில் பரவலாகக் காணப்படும். அவர்களில் சிலர் தங்களின் காலத்தில் பெரும் புகழ் பெற்றுவிடுகிறார்கள். ஆனாலும் காலம் மிக எளிதாக அவர்களை மறக்கடித்துவிடும்.

எனது பதிவுகளில் வெளிப்படும் ஆன்மீகம் இயல்பானது. நான் மதப்பிரச்சாரகன் அல்ல. என் வாழ்வில் மார்க்கத்தின் அவசியம் என்ன என்பதைக் கண்டடைய முயல்கிறேன். ஒரு மார்க்கம் இல்லையென்றால் நான் எப்படி இருப்பேன் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன். அதன் விளைவாக வெளிப்படும் பதிவுகளில் ஆன்மீகம் இயல்பாகவே வெளிப்படுவதை உணர்கிறேன்.

தொழிலாகச் செய்யப்படும் மதப்பிரச்சாரம், நிறுவனமயமாக்கப்பட்ட மதஅமைப்புகள் எனக்கு ஒவ்வாமையைத் தருகின்றன. பெரும்பாலான மதப்பிரச்சாரங்கள் தனிமனிதர்கள் அல்லது அமைப்புகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்காக செய்யப்படுபவையாகத் தெரிகின்றன. அவற்றில் வெளிப்படுவது அவர்களின் மதமா அல்லது அவர்களின் தனித்திறன்களா என்று தெரியவில்லை. கதாநாயகர்களைப் போன்று மதப்பிரச்சாரகர்கள் முன்னிறுத்தப்படுவது மதத்திற்கே ஆபத்தாக அமையும் போக்காகும்.

மனித வாழ்வில் மார்க்கத்தின் பங்கு முதன்மையானது, அடிப்படையானது. ஒரு மார்க்கம் இன்றி வாழும் மனிதன் கொடிய மிருகமாகிவிடுகிறான். எந்தவொன்றாலும் கட்டுப்படுத்தப்படாத மனிதன் புனிதனாகவா வெளிப்படுவான்? மனிதர்களுக்கு மத்தியிலுள்ள கர்வத்தையும் வெறுப்பையும் காழ்ப்பையும் பொறாமையையும் கட்டுப்படுத்துவதில் அவர்களை நெறிப்படுத்துவதில் அவர்களை நல்லவற்றின் பக்கம் உந்தித்தள்ளுவதில் அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதில் மார்க்கத்திற்கு இணையாக வேறொன்றும் இல்லை. ஆனாலும் அந்த மார்க்கத்தைக் கொண்டே தங்களின் கர்வத்தையும் காழ்ப்பையும் வெளிப்படுத்தும், தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முற்று முதலாக சர்வ நாசத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்ட நாத்திகர்கள், மார்க்கத்தைக் கொண்டு தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்த முயலும் மனிதர்களைக்காட்டி மார்க்கத்தைப் பழிக்கிறார்கள். அதற்கு மார்க்கம்தான் காரணம் என்கிறார்கள். மூடர்களைத் தவிர வேறு யாரும் அவர்களின் இந்த அப்பட்டமான பொய்யை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாத்திகர்கள் மனிதம் பேசுவதை மிகவும் விசித்திரமான ஒன்றாகக் கருதுகிறேன். மனிதத்திற்கு எதிராக அவர்கள் கொண்டிருக்கும் நச்சுக்கிருமியை மறைப்பதற்காகத்தான் அவர்கள் இவ்வாறு பேசுவதாக எனக்குத் தோன்றுகிறது.

இங்கு ஏதேனும் ஒரு மதத்தின் மீதுள்ள தீவிர வெறுப்பினால் நாத்திகம் பேசுவோரே அதிகம் காணப்படுகிறார்கள். அது ஒரு அரசியல் தரப்பாக அறியப்படுகிறது. அதன் பக்கம் இணைத்துக் கொள்வோர் நாத்திகம் பேசும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். தங்கள் தேடலின் விளைவாக நாத்திகத்தைக் கண்டு அதனால் நாத்திகம் பேசுவோர் அரிதிலும் அரிது. ஆரோக்கியமான மனிதர்கள் தங்களின் இயல்புக்கு முரணான அப்படிப்பட்ட ஒரு முடிவை அடைய முடியாது என்றே நான் கருதுகிறேன்.

Related posts

Leave a Comment