கட்டுரைகள் 

அநியாயம், அநியாயம்

Loading

அநியாயக்காரர்கள் மோசமான விளைவை சந்திப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அநியாயக்காரர்களால் நீடித்த வெற்றியை பெற முடியாது. அநியாயம் இவ்வுலகில் செயல்படும் நியதிகளுக்கும் மனிதனுக்குள் செயல்படும் நியதிகளுக்கும் எதிரானது. அநியாயம் மகிழ்ச்சியையோ நிம்மதியையோ கொண்டு வராது. அநியாயம் அதைவிட மோசமான அநியாயத்தைக் கொண்டுவரும். அநியாயக்காரர்கள் தங்களைவிட வலிமையான அநியாயக்காரர்களால் வீழ்த்தப்படலாம். வலிமையான அநியாக்காரர்கள் பலவீனமான மனிதர்களால் வீழ்த்தப்படவும் செய்யலாம். மனிதன் எவ்வளவுதான் பலம்கொண்டவனாக இருந்தாலும் எளிதாக வீழ்ந்துவிடக்கூடிய அளவு பலவீனங்களையும் அவன் கொண்டிருக்கிறான். அத்தனை பலங்களுக்கு மத்தியிலும் அவன் எளிதாக வீழ்த்தப்பட்டும் விடலாம்.

வரலாறு நமக்குக் கற்றுத்தரும் பாடங்களில் இதுவும் ஒன்று. திருக்குர்ஆன் இதனை இவ்வுலகில் செயல்படும் மாறாநியதிகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் சாபம் சாதாரணமான ஒன்றல்ல. அது விடாமல் அநியாயக்காரர்களை துரத்திக்கொண்டேயிருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் சாபத்திற்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் இல்லை என்று நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள். நாம் மற்றவர்களிடமிருந்து பறிக்கக்கூடிய எந்த உரிமையைக் கொண்டும் எதையும் நாம் அனுபவித்துவிட முடியாது.

அநியாயம் என்றால் மற்றவர் உரிமையைப் பறித்துக் கொள்வது. கணவனின் உரிமையை மனைவி பறிப்பது, மனைவியின் உரிமையை கணவன் பறிப்பது, பிள்ளைகளின் உரிமையை பெற்றோர்கள் பறிப்பது, பெற்றோரின் உரிமையை பிள்ளைகள் பறிப்பது என ஒரு குடும்பத்திலிருந்து ஒரு நாட்டின் ஆட்சிவரை நடைபெறும் அத்தனை அபகரிப்புகளும் அநியாயங்கள்தாம். அநியாயம் பேராசையின், அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு. சுயநலக்காரர்களும் பேராசை கொண்டவர்களும் அநியாயக்காரர்களாக உருமாறிவிடுகிறார்கள்.

நீதியுணர்ச்சி ஆரம்பம்தொட்டே குழந்தைகளின் உள்ளத்தில் பதிய வைக்கப்பட வேண்டும். உரிமைகளும் கடமைகளும் சமஅளவில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். சிறிய அளவிலான அதிகாரம்கூட ஒருவனை அநியாயக்காரனாக மாற்றிவிடும் தன்மைவாய்ந்தது. அதிகாரம் ஏற்படுத்தும் போதையும் அதன் விளைவும் ஆரம்பம்தொட்டே தெளிவுபடுத்தப்பட வேண்டும். நீதி என்பது ஒவ்வொரு தளத்திலும் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

நீதி என்பது இவ்வுலகில் செயல்படும் மாறா நியதிகளுள் ஒன்று. மனிதர்கள் நீதி வழங்கினாலும் வழங்காவிட்டாலும் அது தனக்கான இடத்தைப் பெற்றே தீரும். அது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒரு வடிவில் தனக்கான இடத்தை அடைந்தே தீரும். அநியாயக்காரர்கள் தற்காலிகமாக தப்பித்துவிட்டாலும் தங்களின் செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தண்டிக்கப்பட முடியாத உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டாலும் ஏதேனும் ஒரு வடிவில் தாங்கள் செய்த அநியாயங்களுக்கான விளைவுகளை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.

இங்கு வெளிப்படையான, கண்ணுக்குத் தெரியக்கூடிய காரணிகளின் அடிப்படையில் பார்க்கும்போது ‘பலமானவனே நிலைப்பான், பலவீனமானவன் அழிவான்’ என்ற விதியே செயல்படுகிறது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் வரலாறும் நம்முடைய அனுபவங்களும் நமக்கு வேறு ஒன்றைக் கற்றுத் தருகின்றன. பலவீனமானவன் பலவீனத்தின் காரணமாக பாதுகாக்கப்படுவதையும் உதவிசெய்யப்படுவதையும் பலமானவன் அவனுடைய பலத்தின் காரணமாக எதிர்க்கப்படுவதையும் அதன் காரணமாக அவனுக்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருப்பதையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அநியாயக்காரர்கள் எவ்வளவுதான் வலுவான முறையில் தங்களின் பாதுகாப்பை அமைத்துக் கொண்டபோதிலும் அவர்களே அறியாதவிதமாக அழிவு அவர்களை வந்தடைந்துவிடுவதையும் திடீரென அவர்கள் அழிக்கப்பட்டுவிடுவதையும் வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. நம் வாழ்வின் அனுபவங்களும் இந்த விசயத்தை மெய்ப்பித்துக் கொண்டேயிருக்கின்றன. மீண்டும் மீண்டும் ஃபிர்அவ்ன்கள் வெவ்வேறு வடிவங்களில் தோன்றிக்கொண்டேயிருந்தாலும் வெவ்வேறு வடிவங்களில் அவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

இங்கு நாம் அறிந்துகொண்டே எந்தவொரு அநியாயத்தையும் செய்துவிட்டு தப்பிவிட முடியாது. நம் மனதின் குரலுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். என்னதான் சாக்குப்போக்குகள் கூறி நம் மனதை நாம் ஆற்றுப்படுத்த முயன்றாலும் குற்றவுணர்கள் ஏற்படுத்தக்கூடிய பயத்திலிருந்தும் பதற்றத்திலிருந்தும் நம்மால் விடுபட முடியாது. அந்த பயமும் பதற்றமும் நம் நிம்மதியைச் சீர்குலைப்பவை. நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடியவை. அது நமக்கு நாமே செய்து கொள்ளக்கூடிய தீங்கு. அது நமக்கான துன்பத்தை நாமே விலைகொடுத்து வாங்குவதைப் போன்றது.

நாம் செய்த சிறு தவறு பூதாகரமாக்கப்பட்டு அதற்காக நாம் இழிவுபடுத்தப்படும்போது தண்டிக்கப்படும்போது ஒரு சிறு தவறா நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது என்று நாம் கருதுவோம். ஆனால் அதற்கு முன்னால் நாம் செய்த பெரும் பெரும் தவறுகள் மறைக்கப்பட்டதை, கண்டுகொள்ளாமல் விட்டுவிடப்பட்டதை நாம் நினைத்துப் பார்க்க மாட்டோம். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் ஒரு சொல்தானே? நாம் புத்திசாலித்தனமாக நம் தவறுகளை அனைத்தையும் மறைத்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருப்போம். ஆனால் ஏதாவது ஒருநாள் நாம் உள்ளபடியே வெளிப்பட்டே தீருவோம். அதுதான் இவ்வுலகில் செயல்படும் நியதி. இங்கு குற்றங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் கண்காணிக்கப்படுகின்றன; பதிவு செய்யப்படுகின்றன. எந்த அடையாளமும் இன்றி யாரும் அவற்றை முழுமையாக மறைத்துவிட முடியாது.

மனிதர்கள் அநியாயம் இழைக்கலாம். அவர்களால் முழு நீதியை பெற்றுத் தர முடியாது. அவர்கள் வெளிப்படையானவற்றை மட்டுமே பார்க்கக்கூடியவர்கள். அவர்களால் அவற்றைத் தாண்டி பார்க்க முடியாது. இறைவன் அநியாயக்காரன் அல்ல. அவன் மனிதர்களின் மீது சிறிதும் அநியாயம் இழைக்க மாட்டான். இங்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்முடைய குறையறிவினால் இறைவனை குற்றம் சுமத்தாலிருப்பதும் வெளிப்படையாக நமக்குத் தெரிவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இறைவிதியை பழிக்காமல் இருப்பதும்தான். படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டால் அவன் படைப்புகளின் மீது பெரும் கருணை கொண்டவன் என்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். அவன்தான் ஒன்றும் இல்லாமல் இருந்த மனிதர்களுக்கு இருப்பை வழங்கினான். அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கினான். அனைத்தையும் அறிந்த இறைவனின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க ஞானத்தையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்டவை என்று நம்புமாறு இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது. அதுதான் சரியான நம்பிக்கையும்கூட.

இவ்வுலகம் சமநிலையால் ஆனது. இங்கு நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். நாம் மற்றவர்களுக்கு அளிக்கும் ஒவ்வொன்றையும் காலம் நமக்கு திருப்பி அளிக்கும். நாம் ஒருவர் மீது அநியாயமிழைத்தால் காலம் நம் மீது அநியாயம் இழைப்பவர்களைக் கொண்டு வரும். உதவி செய்தால் உதவி செய்யப்படுவோம். துரோகமிழைத்தல் துரோகமிழைக்கப்படுவோம். நாம் அனுபவிக்கும் இன்பங்கள், நமக்கு ஏற்படக்கூடிய வலிகள் எல்லாம் இந்த நியதிகளுக்கு உட்பட்டவைதாம்.

நாம் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் துரோகத்தை எண்ணி அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அப்படியொரு துரோகமும் நமக்கு நன்மையையே கொண்டு வரும். நேர்மை உள்ளத்தில் தைரியத்தை ஏற்படுத்தக்கூடியது. நாம் அஞ்ச வேண்டியது நம்முடைய துரோகத்தை எண்ணியே. அது நிச்சயம் துரோகத்தின் வலியை நமக்கு உணர்த்தாமல் ஓயாது. நாம் செய்யக்கூடிய பாவங்களுக்கும் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கும் வலுவான தொடர்புகள் உள்ளன. நம்முடைய செயல்களுக்கேற்பவே நாம் கூலி வழங்கப்படுவோம்.

சந்தேகமேயின்றி நமக்கு வரக்கூடிய துன்பங்கள் நாம் செய்த பாவங்களின் விளைவுகள்தாம். இது ஒருவன் மற்றவனைப் பார்த்து சொல்லக்கூடிய பழிச்சொல் அல்ல. அது ஒருவன் தன்னைத் தானே சீர்படுத்திக்கொள்வதற்காக சொல்லப்பட்ட மிகச் சிறந்த அறிவுரை. நமக்கு வரக்கூடிய துன்பங்கள் நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கைகள் என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் எந்தச் சமயத்திலும் சாபங்களும் பாவங்களும் உங்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டன என்று மற்றவர்களைப் பார்த்து முத்திரை குத்துவதற்காக சொல்லப்பட்ட வாசகம் அல்ல இது.

Related posts

Leave a Comment