கட்டுரைகள் 

உறவுப் பாலத்தின் அடித்தளம்

ஒருவர் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நமக்குப் பெரும் பலம் மட்டுமல்ல பலவீனமும்கூட. அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு நாம் பெரிதும் மெனக்கெட வேண்டும். நம்முடைய தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திட வேண்டும். விரும்பியோ விரும்பாமலோ சமூகம் விதித்திருக்கும் வரையறைகளைப் பின்பற்ற வேண்டும். அந்த நம்பிக்கை அவ்வளவு எளிதாக உருவாகிவிட முடியாது. அதற்கு நீண்ட கால பழக்கம் அவசியமாகிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே ஒருவரைக் குறித்த பிம்பம் பொதுவெளியில் நிலைபெறுகிறது. அந்த நம்பிக்கையை தகர்க்கும்விதமாக நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்பாடுகள் அவரை மட்டுமல்ல நம் மனசாட்சியின் குரலையும் காயப்படுத்துகின்றன. நேர்மறையான பிம்பம் உருவாக நீண்ட காலம் அவசியமாகிறது. எதிர்மறையமான பிம்பம் உருவாக குறுகிய காலமே போதுமானது. மனிதர்கள் எதிர்மறையானவற்றின் பக்கம் உடனடியாக கவனம் செலுத்துவார்கள்.

ஒருவர் மற்றொருவர் மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் மனித வாழ்க்கை சீராகச் செல்கிறது. விரும்பியோ விரும்பாமலோ நாமும் மற்றவர்களை நம்பியாக வேண்டும். நம்பிக்கைத் துரோகம் நம்மை நிராசையில் ஆழ்த்திவிடக்கூடாது.

உறவுகள் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிலைபெறுகின்றன. அந்த நம்பிக்கையில் விழும் சிறு கீறல்கூட அடித்தளத்தை ஆட்டம்காணச் செய்துவிடும். நம்பிக்கைத் துரோகம் ஒட்டுமொத்தமாக கட்டடத்தையே தகர்த்துவிடும். உறவுகளின் வழியேதான் நாம் வாழ்க்கையை சலிப்பின்றி, வெறுமையின்றி, பயமின்றி பாதுகாப்புணர்வோடு கடந்து செல்ல முடியும். தனிமையுணர்வும் வெறுமையும் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடக்கூடியவை. அவை நம் வாழ்வை அர்த்தமற்றதாக ஆக்கிவிடக்கூடியவை. நம் வாழ்வு அதன் போக்கில் சீராக இயங்க வேண்டுமெனில் நம் மீது வைக்கப்படும் நம்பிக்கை சிறு கீறல்கூட விழாதவாறு காப்பாற்றப்பட வேண்டும். நேர்மை நமக்கு வழங்கும் தைரியம் அலாதியானது. அது நம் மனதுக்கும் பெரும் பலத்தை அளிக்கக்கூடியது. மனவலிமைதானே எல்லாவற்றுக்கும் அடிப்படை!

திருட்டு மாங்காய் தித்திப்பாய் இருக்கும் என்றொரு சொல் உண்டு. தடுக்கப்பட்டதில் மனிதனுக்கு ஈர்ப்பு அதிகம். மனிதர்கள் தங்களிடம் இருப்பவற்றைவிட மற்றவர்களிடம் இருப்பவற்றின் மீதே அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். இங்கு எனக்கு இன்னொரு எண்ணம் தோன்றுகிறது. அது இஸ்லாம் எனக்குக் கற்றுத் தந்த பார்வையின் அடிப்படையிலானது. ஈர்ப்பும் ஈர்ப்பின்மையும் இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் ஒன்று என்று தோன்றுகிறது. இறைவன் நம்மை தண்டிக்க நாடினால் நம்மிடம் இருப்பவை எவ்வளவுதான் மதிப்புமிக்கவையாக, சிறந்தவையாக இருந்தாலும் அவற்றைவிட்டு நம்மைத் திருப்பி நம்மிடம் இல்லாதவற்றின் மீது நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகிறான். இல்லாத ஒன்றுக்காக எப்போதும் ஏங்கிக் கொண்டேயிருக்கக்கூடிய துர்பாக்கியமான நிலைக்கு நம்மை அவன் ஆளாக்கிவிடுகிறான். இதுவும் ஒருவிதமான தண்டனைதான்.

அந்த முதல் தலைமுறை நம்பிக்கையாளர்களைக் குறித்து அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும்போது, ‘அவன் அவர்களுக்கு ஈமானைப் பிரியமாக்கிவிட்டான். அவர்களின் உள்ளத்தில் அதனை அழகாக்கிவிட்டான். அவனை நிராகரிப்பதையும் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதையும் அவர்களுக்கு வெறுப்பானவையாக அவன் ஆக்கிவிட்டான்” என்று வர்ணிக்கிறான். இந்த வசனத்திலிருந்துதான் மேற்கண்ட கருத்தை நான் எடுத்துரைக்கிறேன்.

எதுவும் உள்ளத்தில் அழகாக்கப்பட வேண்டும். நமக்குப் பிரியமானதையே நாம் செய்கிறோம். நமக்குப் பிடிக்காததை நாம் செய்வதில்லை. வலுக்கட்டாயமாக நாம் நற்செயல்களில் ஈடுபட முடியாது. முதலில் நம் உள்ளம் அவற்றுக்குத் தயாராக வேண்டும். அவற்றில் ஈடுபடும்போது நம் மனம் விசாலமடைய வேண்டும். ஆசையாக, பிரார்த்தனையாக ஒன்று மாறாதவரை நாம் அதில் மனமுவந்து ஈடுபட முடியாது. மனமுவந்து ஈடுபடாத எந்தவொன்றும் நமக்குத் தண்டனையே.

ஒருவன் நற்செயல்களில் ஈடுபடுகிறான் எனில் அதுவும் அவனைக் கர்வத்தில் ஆழ்த்திவிடக்கூடாது. திருப்தியுணர்வு என்பது வேறு. கர்வம் என்பது வேறு. கர்வம் தன்னை முன்னிலைப்படுத்தவும் மற்றவர்களை இழிவாக எண்ணவும் தூண்டும். அதுவும் ஒரு அருட்கொடை. தன்னிடம் இருக்கும் எந்த அருட்கொடையைக் கொண்டும் மனிதன் மற்றவர்களை இழிவாகக் கருதிவிடக்கூடாது. உங்களின் நற்செயல்கள் உங்களைப் பெருமையடிக்க, மற்றவர்களை இழிவுபடுத்தத் தூண்டினால் உண்மையில் அவை நற்செயல்களே அல்ல. நற்செயல்களின் வடிவில் தோன்றிய தீயசெயல்கள். உங்களை அழிக்க அவையே போதுமானவை.

கணவன், மனைவி உறவில் அன்பு குறிப்பிட்ட காலம்வரை ஆதிக்கம் செலுத்தலாம். அன்புக்கு ஆயுள் குறைவுதான். விரைவில் அது பரஸ்பர ஒப்பந்தமாக மாறிவிடும். அதன் இடத்தில் சார்பு வாழ்க்கை அல்லது நிர்ப்பந்தம் வந்து அமர்ந்துவிடும். அவர்களுக்கு மத்தியில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இருவரும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தே வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அந்த பிரச்சனைகளை வளர விடாமல் தடுத்துக் கொண்டேயிருக்கும்.

மனிதன் பல சமயங்களில் நிர்ப்பந்தம் காரணமாகவே தன் கோபத்தை கட்டுப்படுத்துகிறான். தன் கர்வத்தை விட்டுக் கொடுக்கிறான். ஒரு வேலைக்காரன் தன் முதலாளியிடம் பணிவைக் காட்டுவதும் ஒரு வியாபாரி தன் வாடிக்கையாளர்களிடம் பணிவாக நடந்துகொள்வதும் இந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில்தான். மனித வாழ்வு சீராக இயங்க இந்த நிர்ப்பந்தமும் அவசியமாகிறது. இறைவன் இப்படித்தான் மனித வாழ்க்கையை அமைத்துள்ளான். மனிதனால் தனித்து நிற்க முடியாது. அவனுக்கு மற்றவர்களின் துணையும் உதவியும் மிக அவசியம். இது இறைவன் அமைத்த நியதிகளுள் ஒன்று.

கணவன் மனைவி இருவரும் தங்களை தேவையற்றவர்களாகக் கருதும்போது அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து தங்கள் தேவைகளைப் பெற்றுக் கொள்ளாமல் வெளியிலிருந்து தங்கள் தேவைகளைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கும்போது சிக்கல் உருவாகிறது. ஒருவர் மற்றவருக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம், விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஆகிறது. இங்குதான் ஈகோ பூதாகரமாக உருவெடுக்கிறது. அவர்களை இணைத்திருக்கும் அன்பின் ஆயுள் முடிந்தவுடன் அவர்கள் இணைந்திருக்க விரும்புவதில்லை. ஒருவர் மற்றவரைவிட்டு வெருண்டோடவே விரும்புவார்கள்.

திருக்குர்ஆனில் இடம்பெற்ற ஒரு பிரார்த்தனை என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஒரு குடும்பம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு சித்திரத்தை அது அளிப்பதாக நான் உணர்கிறேன். அந்த பிரார்த்தனை இதுதான்: “எங்கள் இறைவா! எங்களின் வாழ்க்கைத் துணைவர்களிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவாயாக. எங்களை இறையச்சமுடையோருக்கு வழிகாட்டிகளாகவும் ஆக்குவாயாக.” (25:74)

இந்தப் பிரார்த்தனையில் இடம்பெறும் ‘அஸ்வாஜ்’ என்ற அரபி வார்த்தை கணவன், மனைவி இருவரையும் குறிக்கும். அதனை இணையர் அல்லது வாழ்க்கைத்துணை என்று மொழிபெயர்க்கலாம். பொதுவாக தமிழிலுள்ள திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் ‘மனைவியர்’ என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குடும்பம் என்பது ஒரு மனிதனுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதாக, நிம்மதியளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். வீடு என்பது அவன் இளைப்பாறுவதற்காக ஒதுங்கக்கூடிய இடமாகும். அங்கு அவன் நிம்மதியை, அமைதியைப் பெறவில்லையெனில் அவன் மிகுந்த நெருக்கடிக்கு, அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுவான்.

இல்லற வாழ்வு சிறந்து விளங்குகிறது என்பதற்கான அடையாளம், ஒருவர் துன்பத்திற்கு மற்றவர் ஆறுதலாக அமைவார்கள். அதனை நீக்குவதற்கு தம்மால் ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்வார்கள். இல்லற வாழ்வு மிக மோசமாக இருக்கிறது என்பதற்கான அடையாளம் ஒருவர் துன்பத்திற்கு மற்றவர் காரணமாக அமைவார்கள். தங்களுக்கான நிம்மதியை, மகிழ்ச்சியை வேறு எங்கோ தேட முயற்சிப்பார்கள். இதனால்தான் திருக்குர்ஆன் நம்பிக்கையாளர்கள் செய்யும் பிரார்த்தனைகளில் ஒன்றாக மேற்கண்ட பிரார்த்தனையையும் குறிப்பிடுகிறது என்று நான் கருதுகிறேன்.

Related posts

Leave a Comment