கட்டுரைகள் 

அதிகாரமும் அநியாயமும்

Loading

இவ்வுலகில் இறைவன் அமைத்த நியதிகளின்படி வெளிப்படையான காரணிகளை அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்றினாலும் அநியாயக்காரர்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. அவர்களால் தற்காலிக வெற்றிகளைத்தவிர நீடித்த வெற்றியைப் பெற முடியாது. அவர்கள் பெறக்கூடிய தற்காலிக வெற்றிகள் அவர்களை ஒருவித மயக்கத்தில், தாங்கள் செய்வது சரிதான் என்ற எண்ணத்தில் ஆழ்த்தி விடுகின்றன. தங்களுக்கு அளிக்கப்படும் அவகாசத்தை தம் திறமையின், செயல்பாட்டின் விளைச்சலாக அவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களின் திட்டங்கள் அனைத்தும் செயலற்று ஒன்றுமில்லாமல் ஆகும்போதுதான் தம் இயலாமையை, இறைவனின் பிடியை அவர்கள் உணர்ந்துகொள்ளத் தொடங்குகிறார்கள்.

வரலாறு இதற்குச் சான்று. எந்த அநியாயக்காரனும் – அவன் திறமையானவனாக வலிமையானவனாக இருந்தபோதிலும் – நீண்ட காலம் நீடித்ததில்லை. அநியாயக்காரர்களின் அநியாயமே அவர்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. “இந்தக் குர்ஆனை நிராகரிப்போரை என்னிடம் விட்டுவிடுவீராக. அவர்களே அறியாதவிதத்தில் அவர்களை நான் தண்டிப்பேன். நான் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறேன். எனது திட்டம் யாராலும் முறியடிக்க முடியாத அளவுக்குப் பலமானது” என்கிறான் இறைவன். நபியவர்கள் நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்டிருந்தபோது, அவர்களின் பிரச்சாரத்தை முறியடிக்க எதிரிகள் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு அருளப்பட்ட வசனமிது. அவர்களைக் கண்டுகொள்ளாமல் நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள் என்பதுதான் நபியவர்களுக்கு இடப்பட்டிருந்த கட்டளை.

அநியாயக்காரர்கள் முதலில் இழப்பது தங்களின் அறிவைத்தான். தங்கள் கைகளினாலே தங்களின் அழிவை அவர்கள் தேடிக்கொள்வார்கள். அவர்களால் அப்படித்தான் செயல்பட முடியும். அவர்கள் அப்படித்தான் செயல்படுவார்கள். எந்த அநியாயக்கார ஆட்சியாளனும் தன் மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடியவனாக இருக்க மாட்டான்.

வரலாறு நமக்கு இறைநியதிகளை கற்றுத்தருகிறது. எந்த அநியாயக்காரனும் நீண்ட நாள் நீடித்ததில்லை. அநியாயக்காரர்களின் அநியாயமே அவர்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அநியாயக்காரர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தற்காலிகமான அதிகாரத்தைக் கொண்டு தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதுகிறார்கள். அந்த அதிகாரம் அவர்களின் அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடுகிறது. போதையால் வீழ்த்தப்பட்டவனைப் போன்று அவர்கள் செயல்படத் தொடங்குவார்கள்.

அதிகாரம் இடம்பெயரக்கூடியது. அது யாரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருக்காது. இன்று ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் நாளை ஒடுக்கப்படுபவர்களாக மாறலாம். இன்று ஒடுக்கப்படுபவர்கள் நாளை ஆட்சியாளர்களாக மாறலாம். அதிகாரம் எப்படி பறிக்கப்படுகிறது? அது எப்படி கைமாறுகிறது? என்பதின் உண்மைநிலையை நாம் அறிய மாட்டோம். வெளிப்படையான காரணங்களை நம்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அவைதாம் உண்மையான காரணிகளாக இருக்குமானால் ஒடுக்கப்படுபவர்கள் எப்போதும் ஒடுக்கப்படுபவர்களாக, ஆட்சியாளர்கள் எப்போதும் ஆட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள்.

“நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரத்தின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகின்றாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்து விடுகின்றாய். நீ நாடியோரைக் கண்ணியப்படுத்துகின்றாய். நீ நாடியோரை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. நிச்சயமாக நீ எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.” (3:26)

ஆட்சிப் பதவியும் அதிகாரமும் பெரும் போதைதரக்கூடியவை. அதிலும் ஒரு பதவியில் அதிகாரம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களால் அவ்வளவு எளிதாக அதனை விட்டுக்கொடுக்க முடியாது. தம்முடைய அதிகாரத்தை நிலைநாட்ட என்ன வேண்டுமானாலும் செய்தவதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள். உலகெங்கிலும் நிகழ்ந்த பெரும் மனிதப் படுகொலைகளுக்குப் பின்னால் பெரும்பாலும் ஆட்சியாளர்கள்தாம் இருக்கிறார்கள். தங்கள் அரசியல் நோக்கங்களுக்குப் பிறகுதான் அவர்கள் அறவிழுமியங்களையும் மதங்களையும் அனுமதிக்கிறார்கள். அல்லது அவற்றை நிறைவேற்றுவதற்காகவே ஆதரிக்கிறார்கள்.

அதிகாரம் மனித அறிவை மழுங்கடிக்கும் அளவு வலிமைமிக்கது. அதிகாரம் கைவரப்பெற்ற மனிதன் வேறொரு மனிதனாக மாறிவிடுகிறான். அவனுக்கு முன்னால் தன் அதிகாரத்தைத் தக்க வைக்க வேண்டும் நோக்கத்தைத் தவிர வேறெந்த நோக்கமும் இருப்பதில்லை. மிகக் குறைவான மனிதர்களே அதிகாரம் கைவரப் பெற்றும் இயல்பான மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்தை விரும்பாமல் அதனை நோக்கித் தள்ளப்பட்டவர்கள். அவர்கள்தாம் நாம் விரும்பக்கூடிய ஆட்சியாளர்கள். அவர்கள் தம் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மறைமுக சதிகளிலோ வெளிப்படையான அநியாயங்களிலோ ஈடுபட விரும்பாதவர்கள்.

மனிதர்கள் ஏதேனும் ஒரு கும்பலில் கலந்து விடுவதையே தங்களுக்குப் பாதுகாப்பென எண்ணுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் சிந்திப்பதை விரும்பாதவர்கள் அல்லது சிந்திக்கத் தெரியாவதவர்கள். அதனால்தான் யாரேனும் ஒரு மேய்ப்பாளனால் வேலைவாங்கப்படுவதற்காக, பலிகொடுக்கப்படுவதற்காக எளிதாக ஓட்டிச் செல்லப்பட்டு விடுகிறார்கள்.

அதிகாரம் தரும் போதையிலிருந்து மீள்பவர்கள் மிகக் குறைவானவர்களே. அதிகாரம் இருந்தும் அதைத் தவறாகப் பயன்படுத்தாதவர்கள் மகத்தான மனிதர்கள். அவர்கள் மிகச் சொற்பமானவர்களே. சிறு அதிகாரம்கூட மனிதனை கர்வத்தில் ஆழ்த்தி விடுகிறது; அவனை அநியாயம் இழைக்கத் தூண்டுகிறது. அதிகாரம் மனிதனை அப்படியே தலைகீழாக மாற்றிவிடவும் செய்கிறது.

மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருந்தாலும் ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் அநியாயம் இழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் ஆதிக்கம் செலுத்தவில்லையெனில் ஆதிக்கம் செலுத்தப்படுவீர்கள். கணவன் மனைவி மீது ஆதிக்கம் செலுத்த முனைகிறான். மனைவி கணவன் மீது ஆதிக்கம் செலுத்த முனைகிறாள். பெற்றோர் பிள்ளைகளின் மீது ஆதிக்கம் செலுத்த முனைகிறார்கள். பிள்ளைகள் பெற்றோர் மீது ஆதிக்கம் செலுத்த முனைகிறார்கள். இயலாதவர்கள், கோழைகள் பின்வாசல் வழியாக ஆதிக்கம் செலுத்த, பழிவாங்க முனைகிறார்கள். அதிகாரம் கைவரப் பெற்றும் யாருக்கும் அநியாயம் இழைக்காமல் யாரையும் அடிமைப்படுத்தாமல் இருப்பவர்களே மகத்தான மனிதர்கள்.

அதிகாரம் எப்படி நம்மிடம் வந்து சேருகிறது என்பதையும் அது நம்மிடமிருந்து எப்படி பறிக்கப்பட்டுவிடுகிறது என்பதையும் நாம் அறிய மாட்டோம். நாம் வெற்றி பெற்றால் நம் செயல்கள் முன்மாதிரிகளாகப் பார்க்கப்படுகின்றன. நாம் தோல்வியடைந்தால் நம் செயல்கள் தோல்விக்கான காரணிகளாக அலசப்படுகின்றன. உண்மையில் ஒருவரிடம் எப்படி அதிகாரம் வந்து சேருகிறது என்பதும் அது எப்படி அவரிடமிருந்து பறிக்கப்படுகிறது என்பதும் ஆச்சரியமானதுதான். ஒரு சாதாரண மனிதனிடம் எப்படி அவ்வளவு அதிகாரம் குவிந்து விடுகிறது என்பதும் ஏன் மற்றவர்கள் அனைவரும் அவருக்குக் கட்டுப்படுகிறார்கள் என்பதும் திடீரென அவர் ஒன்றுமில்லாதவராக, இயலாதவராக ஆக்கப்படுவதும் ஆச்சரியமான நிகழ்வுகள்தாம். காரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போனாலும் புதுப்புது காரணங்களும் முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகின்றாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துவிடுகின்றாய்…. என்ற வசனம்தான் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது.

Related posts

Leave a Comment