ஈரானிய ஏவுகணைத் துறையின் தந்தை
முஸ்லிம் பலவீனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்
![]()
ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையின் (IRGC) மூத்த தளபதியாக இருந்த ஜெனரல் ஹஸன் தெஹ்ரானி முகத்தம் (1959-2011) ஈரானின் நீண்ட தொலைவு ஏவுகணைத் திட்டத்தின் சிற்பியாகக் கொண்டாடப்படுபவர். ஈரானிலும் சர்வதேச அளவிலும் ‘ஈரானின் உள்நாட்டு ஏவுகணைத் துறையின் நிறுவனத் தந்தை’யாக அவர் கருதப்படுகின்றார்[1][2]. தெஹ்ரானி முகத்தம், ஈரானின் முதல் உள்நாட்டு ஏவுகணைகளின் உருவாக்கத்திற்குத் தலைமை தாங்கி, ஆரம்பகால ஷஹாப், ஸெல்ஸால் தொடர்களிலிருந்து நவீன திட-எரிபொருள் ஏவுகணைகள் வரை அந்தத் திட்டத்தை வழிநடத்தியதன் மூலம் இஸ்லாமியக் குடியரசுக்கு ஒரு சக்திவாய்ந்த மூலோபாயத் தடுப்பாற்றலை வழங்கினார். 2011இல் அவர் இறப்பதற்குள், ஷஹாப், கத்ர், செஜ்ஜில் போன்ற முக்கியமான ஏவுகணைக் குடும்பங்களை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றியிருந்தார். இவை ஒவ்வொன்றும் 1,000 கி.மீ-க்கு மேல் செல்லும் திறன் கொண்டவை[1][2].
அவரது அயராத உழைப்பு, வெளிநாட்டு ஏவுகணை விநியோகங்களைச் சார்ந்திருந்த தேசம் என்ற நிலையிலிருந்து ஈரானை ஒரு தன்னிறைவு பெற்ற ஏவுகணைச் சக்தியாக மாற்றியது. இது அதன் பாதுகாப்புக் கோட்பாட்டின் ஒரு முக்கியத் தூணாகும். இன்று ஈரானில், அவர் ‘பொறியியல், உறுதிப்பாடு, புதுமை ஆகியவற்றின் மூலம் தேசியப் பாதுகாப்பிற்கான பாதையை வகுத்த’ ஒரு தேசிய வீரராகவும் உயிர்த் தியாகியாகவும் போற்றப்படுகிறார்[2][3]. அவரது வாழ்க்கைப் பயணத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஈரானின் இராணுவத் திறன்களிலும் பிராந்திய மூலோபாயத்திலும் அவரது ஆழமான தாக்கத்தை இந்தப் பகுப்பாய்வு மதிப்பிடுகின்றது.
ஒரு தளபதியின் உருவாக்கம்: ஆரம்பகாலப் பணி, ஈரான்-ஈராக் போரின் சோதனைக் களம்
ஹஸன் தெஹ்ரானி முகத்தமின் தொழில்நுட்ப, இராணுவப் பயணம் ஒரு வலிமையான கல்விப்புல அடித்தளத்திலிருந்து துவங்கியது. 1959ஆம் ஆண்டு தெஹ்ரானில் பிறந்த அவர், பொறியியலில் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றார். மதிப்பு வாய்ந்த ஷரீஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 1979ஆம் ஆண்டு இளநிலைப் பட்டத்தையும் கஜேஹ் நாஸிர் அல்-தீன் தூஸி பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்தையும் பெற்றார்[4]. 1979 புரட்சிக்குப் பிந்தைய கொந்தளிப்பான சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையில் (IRGC) 1980இல் சேர்ந்த அவர், வெகு விரைவிலேயே ஈரான்-ஈராக் போரின் முன்களங்களில் பணியாற்ற நேர்ந்தது. இளம் IRGC அதிகாரியாக இருந்த அவர், தொழில்நுட்பத் திறனையும் போர்க்கள முன்முயற்சியையும் இணைத்த தனித்துவமான திறனை வெளிப்படுத்தினார்.
உதாரணமாக, 1981ஆம் ஆண்டு அபாதான் நகரம் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதற்குப் பிறகு, ஒரு முக்கியமான திறன் குறைபாட்டை அவர் அடையாளம் கண்டு, IRGC தன்னுடைய சொந்த சிறப்புத் துப்பாக்கிப் (artillery) படையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது நேரடித் திட்டமிடலின் கீழ் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டு, போரின்போது ஏற்படும் துப்பாக்கிகளின் தேவையை பூர்த்தி செய்ய 155 மிமீ, 130 மிமீ போன்ற மாதிரிகளை உருவாக்கியது. மேலும் போர்ச்சுகீசிய 105 மிமீ ஹவிட்சர்கள் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட பலவகை நிலத் துப்பாக்கிகளால் ஆயுதப்படுத்தப்பட்டது[5][3].
விரைவில் அவரது நிபுணத்துவம் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தியது. 1980களின் முற்பகுதியில், அவர் IRGC-யில் புதிதாக உருவாகி வந்த ஏவுகணைப் படையின் முதல் தளபதியானார். அத்திட்டத்துடன் அவரது பெயர் பெரிதும் பிணைந்திருந்ததால் ஈரானிய ஊடகங்கள் அவரை ‘ஈரானிய ஏவுகணைத் துறையின் தந்தை’ என்று வெளிப்படையாகக் குறிப்பிடுகின்றன. மேலும், “தெஹ்ரான்-மொகதாமின் பெயர் ஈரானில் ஏவுகணைத் துறையுடன் பின்னிப் பிணைந்துள்ளது” என்றும் குறிப்பிடுகின்றன[3].
இந்தப் புதிய திறனின் வியத்தகு செயல் விளக்கமாக, சில நாட்களுக்குப் பிறகு, பாக்தாத்தில் உள்ள முக்கிய இலக்குகளை IRGC ஏவுகணைகள் தாக்கின. இதில் 18 மாடிக் கட்டிடம் ஒன்றும், ஈராக் இராணுவ அதிகாரிகளின் மன்றமும் தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் பல உயர்மட்ட பாத் (Ba’athist) தளபதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது[9]. இந்த ஆரம்பகால, வெற்றிகரமான ஏவுகணைச் சோதனைகள் வெறும் தந்திரோபாய வெற்றிகளாக மட்டுமல்லாமல் ஈரானிய ஏவுகணைப் படை என்ற மூலோபாயக் கருத்தை நிரூபித்ததோடு, குறிப்பிடத்தக்க மன உறுதியையும் அளித்தன. அவரது செல்வாக்கு வெகுவிரைவாக விரிவடைந்தது.
ஏவுகணைச் சக்திக்கான அடித்தளம்
ஈரான்-ஈராக் போர் நிறுத்தத்தைத் (1980-88) தொடர்ந்து தெஹ்ரான் முகத்தமின் இலக்கு பரிணாமம் பெற்றது. வெளிநாட்டு மாதிரிகளைப் பயன்படுத்திய அவர், முழுமையான உள்நாட்டு ஏவுகணைத் துறையை உருவாக்குவதில் கவனத்தைத் திருப்பினார். அவரது இலக்குகள் பேரார்வமுடையதாகவும் வெளிப்படையாக புவிசார் அரசியல் சார்ந்தவையாகவும் இருந்தன. ஈரானுக்கு மிக அருகிலுள்ள எல்லைப் பகுதிகளையும் தாண்டி வெகுதூரம்வரை செல்லக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கி நம்பகத்தன்மை வாய்ந்த தடுப்பு அரணை உருவாக்கவே அவர் முயற்சி செய்தார். இதனை அடைவதற்காக திரவ-எரிபொருள் ஸ்கட் வகை ஏவுகணைகளிலிருந்து மேம்பட்ட, விரைவாக, நம்பகமான திட-எரிபொருள் ஏவுகணைகளுக்கு தொழில்நுட்ப மாற்றத்தை அவர் வலியுறுத்தினார்[6][10].
அவரது தலைமையின் கீழ், ஈரான் படிப்படியாக நீண்ட தூரம் சென்றடையும், சுமார் 160 கிமீ தூரம் பயணிக்கக்கூடிய, மேம்பட்ட ஏவுகணைகளை உருவாக்கியது. ஆரம்ப கால ஸெல்ஸால் போன்ற திட-எரிபொருள் துப்பாக்கி ஏவுகணைகளிலிருந்து, 2002ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட தூர ஏவுகணையான ஃபத்தாஹ்–110 வரை இந்த வளர்ச்சிப் பாதை முன்னேறியது[10]. தெஹ்ரானி முகத்தமின் வழிகாட்டுதலின்கீழ் ஷிராஸ் வான்வெளித் துறையின் குழுவால் உருவாக்கப்பட்ட ஃபத்தாஹ் -110, முற்றிலும் ஈரானிய திட எரிபொருளைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஈரானின் முதல் நீண்ட தூர ஏவுகணையாக ஒரு மகத்தான பாய்ச்சலைக் குறிக்கிறது. ஃபத்தாஹ்–110இல் “உயிர்த்தியாகி தெஹ்ரானி முகத்தமின் மேலாண்மையிலும் முன்முயற்சியிலும் ஈரான் தனது முதல் துல்லியமான திட-எரிபொருள் ஏவுகணையைச் சாதித்தது” என்று தஸ்னீம் செய்தி பகுப்பாய்வு ஒன்று குறிப்பிடுகின்றது[10].
தொலைவைக்காட்டிலும் தெஹ்ரானி முகத்தம் துல்லியத்தன்மைக்காக இடைவிடாது முயற்சித்து வந்தார். பொறியாளர்களைக்கொண்ட குழுக்களுடன் இணைந்தும் குத்ஸ் படையின் தளபதியான மறைந்த அவரது நண்பர் காஸிம் ஸுலைமானியின் ஆதரவுடனும் மேம்பட்ட வழிகாட்டும் கருவிகளை உருவாக்க அவர் உத்தரவிட்டார். இந்த முயற்சிகள், 2000களின் நடுப்பகுதிக்குள், முழுமையான ‘நான்காம் தலைமுறை’ ஃபத்தாஹ்–110 ஏவுகணையை உருவாக்குவதில் உச்சத்தை அடைந்தன; இது துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் திறனை ஈரானுக்கு வழங்கியது[11].
ஃபத்தாஹ்-110ஐ ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தாக்கும் ஆயுதம் என்ற நிலையிலிருந்து துல்லியமாகத் தாக்கும் உபகரணமாக உருமாற்றும் லேசர்-வழிகாட்டுதல் மேம்படுத்தலுக்காக அவர் வலியுறுத்தினார். இந்த அடித்தளம் இன்னும் பல மேம்பட்ட வடிவமைப்புகளுக்கு வித்திட்டது. 2021இலும் 2022இலும் கைபர் ஷெகான்-1 (1450 கிமீ தொலைவு) ஹைப்பர்ஸானிக் ஃபத்தாஹ் (1400 கிமீ தொலைவு) ஆகியவற்றை ஈரான் அறிமுகப்படுத்தியது. “ஏவுகணைத் துறையில் (அவர்) நட்டு வைத்த ஆசிர்வதிக்கப்பட்ட மரத்தின் மிகச்சிறந்த பழங்கள்” என்று இவற்றை சமகால ஈரானிய அறிக்கைகள் பாராட்டுகின்றன[12][13].
மேற்கு ஆசியா அதிகாரச் சமநிலையை மறுவடிவமைத்தல்
தெஹ்ரான் முகத்தம் உருவாக்கிய முன்னோடியான ஏவுகணைத் திறன்கள் மேற்கு ஆசியாவின் சமநிலையை வியத்தகு முறையில் மாற்றியமைத்தன. 2010களில் சிறிய தொலைவு துப்பாக்கி ஏவுகணைகள் முதல் நீண்ட தூர ஏவுகணைகள் வரை உள்ளடக்கியிருந்த பிராந்தியத்தின் மிகப் பெரிய, பன்முகத்தன்மை வாய்ந்த ஏவுகணை ஆயுதக்கிடங்கை ஈரான் உருவாக்கியிருந்தது. இந்த ஆயுதக்கிடங்கு, பிராந்தியம் முழுவதுமுள்ள இராணுவத் தளங்களையும் தந்திரோபாயத் தளங்களையும் இலக்காக்கும் ஆற்றலை ஈரானுக்கு வழங்கியதுடன் அதிகார வெளிப்படுத்தலிலும் தடுப்புத் தந்திரத்திலும் அதன் முக்கியமான அங்கமாகவும் திகழ்ந்தது. சட்டவிரோத ஸியோனிச அமைப்பு உட்பட எந்தவொரு எதிரியையும் முறியடிக்கும் திறன்கொண்ட பரந்த ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்துடன் ஈரான் ஒரு பெரிய ஏவுகணை சக்தியாக உருவெடுத்தது[15].
இத்தடுப்பாற்றலின் மதிப்பு ஈரானின் நட்பு சக்திகளுக்கும் நீள்கின்றது. இஸ்ரேலுடனான மோதலில் தடுப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஈரானிய ஏவுகணைகளின் பங்கை அங்கீகரிக்கும் வகையில் “லெபனானில் வடக்கிலிருந்து தெற்குவரை, தெற்கிலிருந்து வடக்குவரை பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் பாதுகாப்புக்காக ஹஸன் தெஹ்ரானி முகத்தமுக்கு கடமைப்பட்டுள்ளனர்” என்று ஹிஸ்புல்லாஹ் பொதுச் செயலாளர் ஸய்யித் ஹஸன் நஸ்ரல்லாஹ் வெளிப்படையாகவே கூறினார்[16].
2024இல் நடைபெற்ற போரில் அவரது பணியின் உறுதியான தாக்கம் தெளிவாக வெளிப்பட்டது. ஈரானியத் தளபதிகளின் மீதான இஸ்ரேலியத் தாக்குதலைத் தொடர்ந்து குறுகிய ’12 நாள் போர்’ ஏற்பட்டபோது நூற்றுக்கணக்கான ஈரானிய ஏவுகணைகளும் ட்ரோன்களும் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. அயர்ன் டோம் உட்பட இஸ்ரேலின் பல்லடுக்கு வான் பாதுகாப்பையும் அவை முறியடித்ததாகக் கூறப்படுகின்றது. ‘தெஹ்ரான் முகத்தமுடைய நான்கு தசாப்த உழைப்பின் நேரடிப் பலன்கள்” என்று ஈரானிய ஊடகங்கள் இத்தாக்குதல்களைக் கொண்டாடின[17][18]. ஈரானின் சக்திவாய்ந்த ஏவுகணைத் திட்டம் இன்று “இந்த மாபெரும் தளபதியின் குறிப்பிடத்தக்க பாரம்பரியத்திற்கு ஒரு பெருமைமிக்க சான்றாக நிற்கிறது” என்று பிரஸ் டிவி குறிப்பிட்டது. [19].
ஏவுகணைத் திட்டத்தின் உளவியல் தாக்கமும் ஆழமானது. தெஹ்ரானி முகத்தம், “ஸியோனிச ஆட்சிக்கு எப்போதும் ஒரு கெட்ட கனவாக” இருந்ததாக ஒரு IRGC தளபதி கூறுகின்றார்[20]. உண்மையில், அவரின் இந்த முயற்சிகள் பிராந்திய எதிரிகளையும் உலக சக்திகளையும் ஈரானின் நலன்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை கவனமாகக் கணக்கிட கட்டாயப்படுத்தியுள்ளது.
துயர மரணமும் நீடித்திருக்கும் பாரம்பரியமும்
ஜெனரல் தெஹ்ரானி முகத்தம், தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பணிக்காக இறுதியாக மிக உயர்ந்த விலையைக் கொடுத்தார். நவம்பர் 12, 2011 அன்று, தெஹ்ரானுக்கு அருகில் பித் கனேஹ்வில் உள்ள IRGC தளத்தில் ஓர் ஏவுகணை சோதனையை அவர் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அவரும் 16 நபர்களும் கொல்லப்பட்டனர் [1]. அவரது மரணம் ஓர் ஆழ்ந்த துயரமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அவருக்கு முழு இராணுவ மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அவரது விருப்பப்படி, அவரின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, அவரது கல்லறைக் கல்லில் ‘இஸ்ரேலை அழிக்க விரும்பிய நபர் இங்கே உறங்குகிறார்’ என்று பொறிக்கப்பட்டது[21].
இருப்பினும், அவரது மரபு அவருடன் இறந்துவிடவில்லை. தெஹ்ரானி முகத்தமின் சீடர்களும் ஆதரவாளர்களும் அவரது இலட்சியத்தை நம்பிக்கையுடன் முன்னோக்கி எடுத்துச் சென்றனர். மஜித் மூஸாவி, மறைந்த அமிராலி ஹஜிசாதே போன்ற ஆளுமைகள் உட்பட, அவருக்குப் பின் வந்த IRGC வான்படைத் தளபதிகள், ஏவுகணைப் படையைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, செம்மைப்படுத்தி வருகின்றனர் [22][23]. இந்தத் திட்டம் அதன் மேல்நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தது. 2020களின் முற்பகுதியில், ஈரானின் நீண்ட தூர ஏவுகணை வரம்பு அதிகாரப்பூர்வமாக 2,000 கிமீ ஆக விரிவடைந்தது. இது ஈரானியப் பிரதேசத்திலிருந்து இஸ்ரேலை உறுதியாக, வரம்பிற்குள் கொண்டு வந்தது.
மேலும், ஹைப்பர்சோனிக் (ஒலியைவிட வேகமாகப் பயணிக்கும்) ஃபத்தாஹ் ஏவுகணை போன்ற முன்னேற்றங்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. இந்தச் சமகால சாதனைகள் யாவும் அவர் நட்ட அடித்தள ‘மரத்திற்கு’ கிடைத்த பலன்கள் என்றே எப்போதும் பாராட்டப்படுகின்றன[17]. இறுதியாக, அவரது வாழ்நாள் பணி ஈரானுக்கு ஒரு வலிமையான, தன்னிறைவு பெற்ற ஏவுகணைத் திறனை வழங்கியது; அவர் முன்னெடுத்த ஏவுகணைகள் மேற்கு ஆசியாவின் அதிகாரச் சமநிலையை மாற்றியமைத்துள்ளன; ஈரானுக்கும் அதன் நட்பு சக்திகளுக்கும் முன்பு ஒருபோதும் இல்லாத அளவிலான மூலோபாய தடுப்புத் திறனை வழங்கியுள்ளன[15][19].
துணை நின்றவை:
[1] Iran Press. “Iran marks martyrdom anniversary of Tehrani Moghaddam.” Iran Press.
[2] Wikipedia contributors. “Hassan Tehrani Moghaddam.” Wikipedia.
[3] Tasnim News Agency. “Sepah va Sukht-e Jamad-e Mushak-ha; ‘Tehrani Moghaddam’ Chegoneh Donya ra Heyratzadah Kard.” Tasnim News, 21 Azar 1396.
[4] [5] [8] [9] [15] [18] [19] [20] [21] [23] [24] PressTV. “Remembering the ‘father of Iran’s missile program’ who wanted to ‘destroy Israel’.” PressTV, 12 November 2025.
[6] Tasnim News Agency. “Sepah va Sukht-e Jamad-e Mushak-ha…”.
[7] Arabi21. “Man Hu ‘Abu al-Sawarikh al-Iraniya’ alladhi Tardada Ismuh ba’d Qasf al-Ihtilal al-Isra’ili?” Arabi21.
[10] [11] [12] [13] [14] [22] Tasnim News Agency. “Sukht-e Jamad; Chegoneh Mohemtarin Dastavard-e Shahid Tehrani Moghaddam Naji-ye Iran Shod?” Tasnim News, 20 Aban 1404.
[16] Tehran Times. “Tehrani Moghaddam; from the first missile launch to Iran’s self-sufficiency.” Tehran Times.
[17] Tabnak. “Tasavir-e Avvalin Shalik-e Mushk-e Iran ra Bibinid.” Tabnak.
மூலம்: https://aep1979.substack.com/p/ending-an-era-of-muslim-weakness
தமிழில்: ரா. அபுல் ஹசன்

