ஓர் இரகசிய உறவின் கதை
![]()
மால்கம் X-ம் கவிதையும்
நான் யார்?
சிறைக் கம்பிகளுக்கு வெளியே தன் இரு கைகளை நீட்டி கேட்கிறான் அந்த இளைஞன்.
அது 1946-ம் ஆண்டு. மாசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள சார்லஸ்டவுன் சிறைச்சாலையில் ஓர் இரவு. நெடிதுயர்ந்த சுதந்திர தேவி சிலை கம்பீரமாக காட்சியளிக்கும் கழுகு தேசத்தில், கறுப்பர்கள் மனிதர்களே இல்லை எனும் போது, இந்த இருட்டுக் காராக்கிருகத்தில் கிடக்கும் நான் யார்?
மால்கம் லிட்டில் அவன் பெயர். வயது 21. கறுப்பனுக்கு கல்வி தேவையில்லை என வகுப்பாசிரியர் வயிற்றெரிச்சலைக் கொட்டியதால் பள்ளியிலிருந்து இடைநின்றவன். கல்வியுரிமையைச் சுட்டுப் பொசுக்கிய, வெள்ளைச் சமூகம் மீது அவனுக்கு தீராக் கோபம். ஆனால், என்ன செய்ய?
போதைக்கு அடிமையானான், பொறுக்கித் தனத்தை ஆடையாய் அணிந்தான், ரவுடித் தொழிலை வேலையாக்கிக் கொண்டான். களவு கைவினைத் திறன்; சோரம் போதல் பொழுதுபோக்கு. 13 வயதில் குற்றச் செயல்களில் விட்டில் பூச்சியாய் விழுந்தவன், 20 வயதில் குற்றங்களின் உறைவிடமாகிப் போனான்.
விளைவு: சிறைக் கொட்டில்.
சிறையில் விளைந்த இசை
24 மணி நேரமும் போதையில் மிதந்து, மஞ்சத்தில் வாசம் செய்த இளைஞனை நான்கு சுவர்களுக்குள் அடைத்தால்…? பிடித்தது பித்து. மதி மயக்க இலாகிரிகள் எதுவும் கிடைக்கா நிலையில், துவண்டு போனான். அந்த மயக்க நிலையில் உருவான கேள்விதான், நான் யார்?
விடை கிடைத்தது: கவிதை.
இங்கல்ல. அவன் மாற்றப்பட்ட நார்ஃபோக் சிறைச்சாலை நூலகத்தில். புத்தகங்களின் ஒவ்வொரு தாளும் சாளரங்களாக தெரிந்தன அவனுக்கு. ஒவ்வொன்றும் சுதந்திர சுகந்தத்தை அவன் முகத்தில் வீசியறைந்தன. விடுதலையை முகர்ந்தான்.
அது, அவனுக்கோர் புதிய உலகம். ஹஃபீஸ், உமர் கய்யாம், சாதி ஷிராஸி – இவர்களெல்லாம் அவன் சந்தித்த கவி ஆளுமைகள். பாரசீகக் கவி நட்புகளிடமிருந்து கவிதையமுதம் பருகினான். அவர்கள் கற்றுக் கொடுத்த சாந்தி மார்க்கமும், சாந்த மொழியும் அவனுள் இருந்த வெறுமையை அகற்றின.
சகோதரனுக்கு கடிதம் எழுதினான்:
“மனிதர்களால் உருவாக்கப்பட்ட வெறுமையை
கவிதையால் மட்டுமே நிரப்ப முடியும்.”
மேலும் நீண்ட அந்தக் கடிதத்தில்…
“இஸ்லாத்தின் புண்ணியத்தால் சிறைச்சாலை இப்போது அடைக்கப்பட்ட கொட்டடியாக இல்லை. தூய்மையான தனிமையின் உன்னதத்தை நான் நேசிக்கக் கற்றுக் கொண்டேன்.”
இன்னும் இன்னும் தத்துவர்த்த சிந்தனைகள் நீண்டன சகோதரனுக்கு எழுதும் கடிதங்களில்… மால்கம் லிட்டில் என்ற அந்த இளைஞனின் அகக்கண்களில் வெளிச்சம் பாய்ச்சியது சிறைச்சாலை நூலகம்.
கவிதை தந்த அறிவொளியை இப்படி விவரித்தான்:
இறைவன்தான் எத்துணை மகத்துவமிக்கவன்
மனிதன்தான் எத்துணை அறிவாற்றலாளன்
இது ஷிராஸியின் கவிதை வரிகளில் அவன் கண்டெடுத்த துணுக்கு.
இசைக்கு அடிமையாய் இருந்தேன்
அது எனக்கு இன்னொரு ‘சிலை’யாக இருந்தது
ஓரிறைக்கு மாறாக சிலை வழிபாட்டிலிருந்த மனநிலையை படம்பிடித்த இந்த வரிகள் உமர் கய்யாமின் கவிதைச் சாரம்.
கவிதை என்ன செய்யும்? இருண்மையைப் போக்கும். கவிதை அதை வாசிப்பவனையே வெளிச்சமாக்கும். ஆம் அதுதான் நிகழ்ந்தது. கவிதை எழுதினான் அந்தக் குற்றவாளி இளைஞன். அதுக்கு ‘இசை’ என பெயரிட்டான். இசையின் தாளங்கள் இதோ:
இசை உருவாக்கப்படுவதில்லை
அது எப்போதும் இங்கேயே இருக்கிறது
நம்மைச் சூழ்ந்தபடி
உயிரைக் கட்டமைக்கும்
முடிவற்ற துகள்களைப் போல
அதைக் காண முடியாது
உணர மட்டுமே முடியும்
இசைக் கலைஞன் இல்லாத இசை
அல்லாஹ் இல்லாத வாழ்க்கையைப் போல
இரண்டுக்குமே பெருந்தேவை ஒரு வீடு
அது ஓர் உடல்
தொடர் வாசிப்பு கவிதையைத் தாண்டி நீண்டது மால்கமுக்கு. மொழியை கைவரப்பெற அகராதியைப் பிரித்தான், மொழியின் நுட்பங்களை அவிழ்த்தான். சொற்களின் ஆணிவேரை அகன்றெடுத்தான். இந்த ஈடுபாடு, அவனை அமெரிக்காவின் ஆற்றல்மிக்க வாக்கியக் கட்டடக் கலைஞனாக மாற்றியது எதிர்காலத்தில்.
கவிதையின் ஆயுதங்களைக் கொண்ட சொல்வீரன்
சிறையிலிருந்து விடுதலையான பின், அடிமை வம்ச பெயரை தூக்கி எறிந்து, மால்கம் X ஆனார், அந்தக் கவிஞர். அமெரிக்க கறுப்பர்களின் விடுதலையை நோக்கி ஓடத் தொடங்கிய அந்த இளைஞனால், அடுத்து கவிதை இயற்ற முடியவில்லை.
ஆனால், சொல்லே தன் செயலாக வாழ்ந்த அவருக்கு, கவிதையின் இலக்கணமே மேடைப் பேச்சில் கவிந்தது. ஆற்றல் மிக்க பேச்சாளராக உருமாறிய மால்கமின் வார்த்தைகளில் தெறித்தது வெறும் அரசியல் முழக்கங்களோ, ஆவேச உணர்வுகளோ அல்ல. அவை கவிதைகள்.
உருவகங்கள், ஒப்புமைகள், அடுக்குமொழி, தாளலயம் என கவிஞனின் கருவிகள் அவர் வசம் இருந்தன. இதெல்லாம் அவர் பேச்சில் மிளிர்ந்தன. கறுப்பின இலக்கியவாதிகள் இந்த உண்மையை உணர்ந்தனர்; இப்போது கொண்டாடுகின்றனர். தங்கள் கவிதை நுட்பங்களுக்கு மால்கமே முன்னோடி என்று உச்சி முகர்கின்றனர். Black Arts Movement என்ற கறுப்பின கவிதை இயக்கம் மால்கமின் கவிக்கூறுகளை தன்னுள் பொதிந்து கொண்டது.
ஒரு முரண்நகையைப் பாருங்கள்: சிறையிலிருந்து வெளியே வந்த மால்கம் தன்னை கவிஞரென்று எங்கும் பிரஸ்தாபிக்கவில்லை. அவர் விரும்பியது, கறுப்பர்களின் விடுதலையை. அந்த விடுதலையை நோக்கிய பயணத்தில் கறுப்பர்களின் சிந்தனையை மாற்ற அவருக்கு உதவியது கவிதையின் கருவிகளே. கவிஞராக இல்லாமல், கவிதையின் ஆத்மாவை வைத்திருந்த மாயாஜால நாவன்மைக்காரர் அவர்.
காஸாவில் ஒரு கவிதைப் பாலம்
1964-ம் ஆண்டு, அவர் வாழ்வின் இறுதி நாட்கள். அதை அவர் அறிந்தே இருந்தார். விரைவில் கொல்லப்படுவோம் என்பது அவருடைய நம்பிக்கை. செப்டம்பர் 5-ம் தேதி காஸா மண்ணில் அவர் கால் வைத்தார். அவர் பாதங்கள் தரையைத் தொட்டதும் ஒரு வாசனையை அவர் உணர்ந்தார். அது அவருக்கு நன்கு பரிச்சயமான வாசனை. ஆம், அது இனவெறியின் வாசனை.
வெள்ளையர்களால் தான் அனுபவித்த இனவெறி கோரத்தாண்டவச் சுவடுகளை பாலஸ்தீன மண்ணில் யூதர்களின் வடிவில் கண்டார். முகாம்களில் தங்கி இருந்த பாலஸ்தீன அகதிகளிடம் நலம் விசாரித்தார். நிலத்தை, வீட்டை, வாழ்வை, வரலாற்றை இழந்தவர்கள் மால்கமிடம் அழுது புலம்பினர். அங்கும் அவருடன் கவிதை ஓர் உறவு பூண்டது.
1956-ல் இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமித்த போது நிகழ்ந்த கான் யூனிஸ் படுகொலையில் தப்பிப் பிழைத்த ஹாரூன் ஹாஷிம் ரஷீத் என்பார் மால்கமைச் சந்திக்கிறார், அவர் ஒரு கவிஞர். சொந்த வீடுகளிலிருந்து பிய்த்தெறியப்பட்ட காயங்களுடன் அகதி முகாம்களில் ஆண்டுக் கணக்காய் வாழும் அவலங்களை கண்ணீருடன் மால்கமிடம் பகிர்ந்து கொள்கிறார். எப்போதாவது ஒரு நாள் வீடு திரும்புவோம் என காத்திருக்கும் நம்பிக்கையை அவர் கவிதையாய் வடித்திருந்தார்.
வாசிக்க வாசிக்க, தன் நாட்குறிப்பின் கடைசிப் பக்கத்தில் தன் கைப்பட அந்தக் கவிதையை எழுதிக் கொண்டார் மால்கம்.
நாம் திரும்ப வேண்டும்
எல்லைகள் ஏதும் இருக்கலாகாது
எந்தத் தடையும் நம்மை நிறுத்த முடியாது
அகதிகளே உரக்கக் கூறுங்கள்: நாம் திரும்ப வேண்டும்
மலைகளிடம் சொல்லுங்கள்: நாம் திரும்ப வேண்டும்
பள்ளத்தாக்கிடம் சொல்லுங்கள்: நாம் திரும்ப வேண்டும்
நம் இளமையின் மண்ணுக்கு திரும்பிச் செல்வோம்
நம்மை ஆயுதமேந்த அழைக்கிறது பாலஸ்தீன்
நாம் ஆயுதமேந்தியுள்ளோம், போரிடவும் தயார்
நாம் திரும்பியே தீருவோம்!
வலியைப் பேசிய இந்த வரிகள் மால்கமை ஆழமாகத் தொட்டன. அந்த வலியை உணர்ந்தவர் அவர். பாலஸ்தீனர்கள் சொந்த மன்ணிலிருந்து விரட்டப்பட்டவர்கள்; கறுப்பின மக்களோ ஆணிவேரிலிருந்தே பிடுங்கப்பட்டவர்கள். இரண்டு வலிகளையும் காஸாவில் ஹாரூன் ஹாஷிம் ரஷீதின் மொழி இணைத்தது. எந்நாட்டுக்கும் சொந்தமில்லாத, எல்லா ஒடுக்கப்பட்டவர்களுக்குமான பொதுவான மொழி அது – கவிதை.
கவிதைகளோடு மால்கமுக்கு இருந்த நெருக்கம் உணர்வுப்பூர்வமானது. காஸாவுக்குச் சென்ற அவரின் மேலாடையில் இன்னொரு கவிதையும் இருந்தது. அது தன் சகோதரி எல்லா (Ella) கொடுத்த கவிதைப் புத்தகம். அவரை அன்னையைப் போல காத்தவர் எல்லா. நார்ஃபோக் சிறைக்கு மால்கமை மாற்ற முயன்றது அவர்தான், மால்கம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதி கொடுத்துதவியதும் அவர்தான்.
Rudyard Kipling எழுதிய If என்ற கவிதையை எப்போதும் தன் சட்டைப் பையில் வைத்திருந்தார் மால்கம். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கவிஞர் அவர். அந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர் இவர். இதுதான் வாழ்க்கையின் முரண்.
உன்னைச் சுற்றியுள்ள அனைவரும் நிதானம் இழந்து உம்மீது பழிபோடும்போதும் நீ நிதானம் காக்க முடிந்தால்… உலகமே உன்னைச் சந்தேகிக்கும்போதும் நீ உன்னை நம்ப முடிந்தால்… இடிபாடுகளுக்குப் பிறகும் உடைந்த கருவிகளைக் கொண்டு மீண்டும் எழுப்ப முடிந்தால்… நீ ஒரு மனிதனாக உயர்வாய் என் மகனே!
இதுதான் அந்தக் கவிதையின் சாரம். இது மால்கமுக்கு தேவையான உரம். சகோதரி எல்லா கொடுத்தது வெறுமனே கவிதை அல்ல. அது ஓர் அக்கையின் ஆசீர்வாதம்.
விடுதலையின் கவிதைக்கு மரணமில்லை!
துப்பாக்கி ரவைக்கு தெரியாது கவிதையின் கவசம். நான் கவிதையின் மீது தீரா தாகம் கொண்டவன் என்றவரை, மேடையில் வைத்து துளைத்தன துப்பாக்கிக் குண்டுகள். மால்கம் உயிர் துறந்தார் (1965 பிப்ரவரி 21). வயது 39.
ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மடியில் தாங்கிய அவர் நண்பர் யூரி கொச்சியாமா (அமெரிக்க ஜப்பானிய பெண்), எந்தத் துப்பாக்கி குண்டுகளாலும் அவர் யார் என்பதையும், அவருடைய அர்த்தம் என்ன என்பதையும் அழித்துவிட முடியாது; மால்கம் வாழ்கிறார் என்றார்.
சொல்வன்மை மிக்க பேச்சாளரான மால்கமின் உரைகளைக் கேட்பது – படிப்பது மட்டும் போதாது. அவரின் மெளனங்களை வாசிக்க வேண்டும். சிறை அறையில் அவர் கவிதையைப் படிக்கும் போது நிலவிய மெளனம். நாட்குறிப்பில் பாலஸ்தீன கவிஞரின் கவிதையை எழுதும்போது நீடித்த மெளனம். மரண வாயிலில் சட்டைப்பையில் கவிதைப் புத்தகத்தை தாங்கிய மெளனம்.
சிறைச்சாலையின் இருண்ட அறைகளில் மால்கமின் அகக்கண்களைத் திறந்தது கவிதை. அதே கவிதை வரிகளில், நீதிக்காகப் போராடும் கவிஞர்களோடு அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வளை நெறிக்கப்படும்போது திமிறி எழும், ‘நாம் திரும்ப வேண்டும்’ என்ற குரல்களோடு, மால்கம் X ஆன்மாவின் குரலும் சேர்ந்து எதிரொலிக்கும்.
மொழியையும் விடுதலையையும் பிரிக்க முடியுமா? கவிதைக்கும் மால்கமுக்கான உறவும் அப்படியே!
(மார்ச் 21 சர்வதேச கவிதைகள் தினம்)

