குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஈரான் – அமெரிக்கா / இஸ்ரேல் போர்: யார் கை ஓங்குகிறது ?

Loading

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் தொடங்கி இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், அமெரிக்கா இந்தப் போரில் பெரு வெற்றிபெற்று வருவதாக இடையறாது மார்தட்டுகிறார் ட்ரம்ப். அதற்கு முதன்மைக் காரணங்களாக அவர் கூறுபவை:

* ஈரானின் உச்சத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார்.
* கடற்படை துடைத்தழிக்கப்பட்டுவிட்டது.
* விமானப்படை நிர்மூலமாகிவிட்டது.
* அணுசக்தித் தளங்கள் கடும் சேதத்தில் உள்ளன.
* விமான-எதிர்ப்பு ஏவுகணைத் தளம் சர்வ நாசம்.
* 1300க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
* நகரங்கள் பற்றி எரிகின்றன.

ஆனால், நடைபெறும் இந்த போரில் ஈரான் கை மேலோங்கி இருப்பதை சில விவரங்களைக் கூர்ந்து கவனிப்பது மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். சமீப நாட்களில் ஈரான் மேற்கொண்ட இரண்டு நகர்வுகள் உலகின் ஒவ்வொரு நாட்டையும் உலுக்கப் போதுமானவை.

உலகின் 20%-25% எண்ணெய்ப் பயன்பாட்டுக்குக் காரணமாக உள்ள ஹொர்முஸ் ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள சோதனைச் சாவடியாக அது மாற்றியதும் நிராகரிக்கப்படுவதற்கு ஏற்பத் திட்டமிடப்பட்ட மூன்று போர் நிறுத்த நிபந்தனைகளை அது முன்வைத்ததும் இந்த நகர்வுகளாகும்.
ஈரான் பின்வாங்கவும் இல்லை; தோற்கவும் இல்லை. அது மேலும் ஆழமாகத் துளையிடுகிறது என்பதை இந்த இரண்டு நகர்வுகளும் நமக்கு உரக்கச் சொல்கின்றன.

நகர்வு 1: உலக எண்ணெய்யின் புதிய காவல் கங்காணி

ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட இரண்டு  கோடி பீப்பாய்கள் ஹொர்முஸ் ஜலசந்தி வழியாகக் கடக்கின்றன. அதை ஈரான் மூடுவதன்  விளைவாகக் கிட்டத்தட்ட 90% கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான கப்பல்களின் இயக்கம் இப்பொழுது முடங்கியுள்ளது. அதே நேரம், ஈரான் எல்லோரையும் தடைசெய்யவில்லை. மேற்குலகைத் தடைசெய்து மற்றவர்களை அனுமதிக்கிறது.

உதாரணமாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஷியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சில இந்தியக் கப்பல்களுக்கு அது பாதுகாப்பான அனுமதி அளித்துள்ளது. அதுபோல், போர் தொடங்கியதிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 1 கோடியே 10 லட்சம் பீப்பாய்கள் சீனாவுக்குச் சென்றுள்ளன. ஆனால், அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிச் செல்ல முயன்ற கப்பல்கள் தாக்கப்படுகின்றன; கைப்பற்றப்படுகின்றன.

ஆக, யாருக்கு எண்ணெய் கிடைக்க வேண்டும், யாருக்குக் கிடைக்கக் கூடாது என்பதை முடிவுசெய்யும் ஓர் அதிகார மையத்தில் இப்பொழுது ஈரான் உள்ளது, அது “தோற்றுக்கொண்டிருக்கிறது” என்ற ட்ரம்பின் (வெற்று) முழக்கத்துக்கு மத்தியில்.

இது வெறுமனே ஓர் “இடைமறிப்பு” அல்ல. இது ஒரு சுங்கச் சாவடி நடவடிக்கை.

இந்தியா தனது 40%க்கு மேலான கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு இப்பொழுது ஈரானின் நன்மதிப்பையே சார்ந்துள்ளது. அதுபோல், சீனாவுக்கு மிக மலிவாக எண்ணெய் கிடைக்கிறது. பகரமாக அது ஈரானுக்குப் போர் தந்திரங்களையும் தளவாடங்களையும் அளிக்கிறது. ஆனால் பீப்பாய்க்கு 100 டாலர் என்ற ரீதியில் எண்ணெய்யின் விலைவாசி உயர்வு, LPG (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு) பற்றாக்குறை என மேற்குலகம் திணறுகிறது .

ஈரானின் இந்த நடவடிக்கை, தோல்வி பயத்திலோ பதற்றத்திலோ மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல. மாறாக, நீண்ட நெடிய போருக்காக வருடக்கணக்கில் திட்டமிடப்பட்ட நேர்த்தியான தொலைநோக்குக் கட்டமைப்பாகும்.

நகர்வு 2: ஏற்றுக்கொள்ளப்பட சாத்தியமே இல்லாத நிபந்தனைகள்

1. ஈரானின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரித்தல்.

2. உயிர், பொருள் சேதாரங்களுக்கான ஈட்டுத் தொகை வழங்குதல்.

3. எதிர்கால அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான சர்வதேச உத்தரவாதங்கள்.

என  போர் நிறுத்தத்திற்காக ஈரான் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. “ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பே இல்லை” என்று தெரிந்தே இந்த நியாயமான நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

அமெரிக்கா இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாது என்று தெரிந்தும் ஈரான் ஏன்  இந்த நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும்? ‘நாங்கள் சமாதானத்தை கோருகிறோம், ஆனால் அமெரிக்கா எங்களை மிரட்டுகிறது’ என்ற செய்தியை உலகிற்கு ஈரான் வழங்க முயற்சிக்கிறது. அத்துடன் இந்த நகர்வு தனக்கு அனுதாபத்தை பெற்றுத் தரும் என்று நம்புவதுடன்,  ரஷ்யா, சீனாவின் சாய்வும் கூட்டும் மேலும் வலுப்பெறும் என்றும் ஈரான் நம்புகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இது ஒரு கேடயமாகப் பயன்படக்கூடும் என்ற கூடுதல் நம்பிக்கையும் இருக்கிறது. ஈரானின் இந்த நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு எதிராகச் சுழன்றுகொண்டிருக்கும் கடிகார முட்களாகும்.

பொருளாதாரப் பொறி

அமெரிக்காவுக்கு இணையாகச் செலவிடாமலேயே அமெரிக்காவின் ரத்தத்தை உறிந்து அதை வறட்சியாக்குகிறது ஈரான். இந்தப் போரில், அமெரிக்கா நாள் ஒன்றுக்கு 150 கோடி டாலர் செலவு செய்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஆஃப்கானிஸ்தான் போரில் 30,000 கோடி டாலரை மூன்று ஆண்டுகளில் இழந்த அமெரிக்கா இப்போது அதே தொகையை வெறும் ஆறு மாதங்களிலேயே இழந்துவிடலாம் என்று கணிக்கப்படுகிறது.

எளிதாக தாக்குதல் நடத்திவிட்டு வெளியேறி விடலாம் என்று திட்டம் போட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இப்போது பொறியில் நன்றாக சிக்கியுள்ளார். நான்கில் ஒரு அமெரிக்கர்தான் இந்தப் போரை ஆதரிக்கிறார் என்பதுடன், காங்கிரஸிலிருந்து இதற்கு மேல் எந்த யுத்த நிதியும் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரை நெருங்குவதால், பெட்ரோல், அன்றாட உணவு-மளிகைப் பொருட்களின் விலை, பணவீக்கம் என எல்லாமே வேகமாக உயரும் அபாயம் உள்ளது.

ஒரே முடிவைத் திரும்பத்திரும்பச் சந்திக்கும் அமெரிக்கா

வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், ஈராக் என எல்லாப் போர்களிலும் ஒரே மாதிரியான முடிவுகளையே அமெரிக்கா சந்தித்துள்ளது:

* முன்கூட்டிய “வெற்(று)றி” முழக்கங்கள்.
* விலைவாசி உயர்வுகள்.
* வெகுஜன ஆதரவில் வீழ்ச்சி.
* அரசியல் அழுத்தம்.
* குழப்பமான, நிர்ப்பந்தமான சூழலில் போரிலிருந்து வெளியேறுதல்.

அமெரிக்கா எப்படிப் போர்களில் தோற்றது, எப்படித் தோற்கும் என்ற பாடத்தைச் சமீப வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்ட ஈரான் அதே பாடத்தை இப்பொழுது விமரிசையாக அமல்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஈரானின் சுப்ரீம் லீடர் படுகொலை செய்யப்பட்டவுன் அந்நாட்டின் ஆட்சி நிர்வாகம் சீர்குலையும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்த்தன. அவர்கள் எதிர்பார்த்தது போல் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படாததுடன் புதிய சுப்ரீம் லீடரும் விரைவாகவே பதவியேற்றுவிட்டார். ரஷ்யாவும் சீனாவும் ஏற்கெனவே ஆயுதங்களை ஈரானுக்கு வழங்கிய நிலையில், போர் தொடங்கிய பிறகு, ஈரானுக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் உளவுத் தகவல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் நுட்பமான தாக்குதல்களை வழங்குவதற்கு இந்நாடுகள் வழங்கும் தகவல்களே காரணம் என்று கூறப்படுகிறது. மிக முக்கியமாக தனது நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவையும் ஈரான் அரசாங்கம் பெற்றுள்ளது.

மறுபுறம், கடுமையான போர் இழப்புகள், பொருளாதார நெருக்கடி, சொந்த நாட்டு மக்களின் எதிர்ப்பு என நாம் மேலே கூறிய பிரச்சனைகளை அமெரிக்கா சந்தித்து வருகிறது. பல முனைகளில் அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி இந்தப் போரை நீட்டிப்பதே ஈரானின் நோக்கமாக உள்ளதே அல்லாமல், வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. 

ஆக, தான் வீழ்த்த முடியாத, அதிகார மையமாக மாற, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஓர் கூராயுதமாக உருவெடுக்க ஈரானுக்கு அவகாசம் தேவை. இப்பொழுது அந்த அவகாசம் ஈரானின் கைகளில் உள்ளது போல் தெரிகிறது.


Related posts

Leave a Comment