கோட்டை அரண்களை உடைத்து.. மரண நதியைக் கடந்து…
றமளானில் ஈட்டப்பெற்ற 10 இஸ்லாமிய வெற்றிகள்
![]()
நூற்றாண்டுகளுக்கு முன்பு, நோன்பு என்பது ஒரு குளிர்சாதன அறையின் கூரையின் கீழ் ஓய்வெடுத்துக்கொண்டு கடைப்பிடிக்கப்படவில்லை. மாறாக, அவர்களின் றமளான் என்பது நிழலையும் ஒளியையும் தேடுகின்ற, தாகம், பசி ஆகியவற்றின் கொடுமைகளையும் கடுமையான வெப்பத்தின் துன்பத்தையும் எதிர்கொண்டு சிறிது அமைதிக்காக ஏங்கிய காலகட்டம் அது. (இன்றும் பல இடங்களில் இது தொடர்கிறது).
இருப்பினும், நெருப்பாற்றையும் மரண நதியையும் கடந்து, நகரங்களையும் கோட்டைகளையும் கைப்பற்றிய வெற்றி வீரர்களின் இஸ்லாமிய வரலாறு றமளானின் வேறு பக்கங்களில் பதிவாகியுள்ளது. றமளானில் கிடைத்த வெற்றிகளின் கதைகள் போராளிகளின் இதயங்களை நம்பிக்கையின், உறுதியின் பிரகாசத்தைக் கொண்டு நிரப்புகின்றன. இஸ்லாமிய வரலாற்றில் றமளானில் நடந்த மிகப் பிரபலமான போர்கள், வெற்றிகள் சிலவற்றின் விவரங்களை இங்கே காண்போம்.
பத்ருல் குப்றா: ஃபுர்கான் தினம்
ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு றமளான் மாதம் 17ஆம் தேதி, நம்பிக்கையாளர்களுக்கும் குறைஷி நிராகரிப்பாளர்களுக்கும் இடையே ஒரு போர் நடந்தது. அவர்களுக்கு நடுவில் சமநிலை இல்லை. குறைஷிகளிடம் சுமார் ஆயிரம் வீரர்கள் கொண்ட படையும், நபி (ஸல்) அவர்களின் தரப்பில் 314 வீரர்களும் இருந்தனர். அவர்களின் உறுதியான நம்பிக்கைக்கு அப்பால், அவர்களிடம் ஆயுதங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. குறைந்த எண்ணிக்கையிலான குதிரைகள், ஒரு சில வாள்கள் அத்துடன் அசைக்க முடியாத உறுதிப்பாடு. எனினும், குறைஷிகளின் முன்னணித் தலைவர்கள் கொல்லப்பட்டதோடு பத்ருப் போர் விரைவில் முடிவுக்கு வந்தது.
குறைஷிகளில் எழுபது பேர் கொல்லப்பட்டனர். மேலும் எழுபது பேர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இந்தத் தீர்மானகரமான போரின் முடிவில், முஸ்லிம்களின் வாள்கள் குறைஷித் தலைமையின் முன்னணியில் இருந்த மிகவும் கொடூரமான ஒரு தலைமுறையை அகற்றியதன் மூலம், மற்றொரு தலைமுறையின் தலைமைக்கு வழிவகுத்தன. பகைமையும் மோதல்களும் இருந்தபோதிலும், பத்ருப் போருக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாம் மக்காவைக் கைப்பற்றித் தனது இறுதி வெற்றியைப் பெறுகின்றவரை அந்தத் தலைமுறை தன்னைப் பாதுகாத்துக்கொண்டது.
பத்ரு நாளில் 14 முஸ்லிம்கள் தியாகத்தின் மேன்மையின் பக்கங்களில் ஷஹீதுகளாக உயர்த்தப்பட்டனர். அவர்கள் தங்கள் புனித இரத்தத்தை அம்மண்ணில் சிந்தினர். ஒரு முஸ்லிமின் உயர்ந்த உள்ளத்தின் இறுதி இலக்கானது, போர்க்களத்தில் தனது இரத்தத்தைச் சிந்தி, பசி தாகத்துடன் அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதாகவே இருக்கும்.
மக்கா வெற்றி: கஅபாவின் மீதேறி பிலால் தொழுகைக்கு அழைப்பு விடுத்த நாள்
ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு றமளான் 20ஆம் தேதி, நபி (ஸல்) அவர்களின் மாபெரும் படை மக்காவை நோக்கிப் புறப்பட்டது. அவர்கள் மக்காவின் மேல் பகுதிகளிலிருந்தும் அதன் பள்ளத்தாக்குகளிலிருந்தும் அந்நகரத்திற்குள் நுழைந்தனர். குறைஷிகளின் தலைவரான அபூ சுஃப்யான் வழங்கிய தெளிவான, துல்லியமான எச்சரிக்கை குறைஷிகளின் இதயங்களைப் பயத்தால் நிரப்பியிருந்தது. “எவர்கள் மஸ்ஜிதுல் ஹறமிற்குள் அபயம் தேடுகிறார்களோ அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள். எவர்கள் தம் வீடுகளில் கதவுகளை மூடிகொண்டு இருக்கிறார்களோ அவர்களும் பாதுகாப்புப் பெறுவார்கள்” என்று அங்கு அறிவிக்கப்பட்டது. அதிகாரத்திலிருந்து அகற்றப்படும் தலைமைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, “அபூ சுஃப்யானின் வீட்டிற்குள் இருப்பவர்களும் பாதுகாப்புப் பெறுவார்கள்” என்றும் அறிவிக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் தக்பீர் முழக்கத்துடன், கம்பீரத்துடனும் மரியாதையுடனும் மக்காவினுள் நுழைந்தார்கள். உத்பாவின் வன்முறையாலும், அபூ ஜஹ்லின் அடக்குமுறையாலும் அம்மண்ணிலிருந்து வெளியேறிச் சென்றிருந்த அவரும் அவரின் தோழர்களும் மீண்டும் இப்போது மக்காவிற்குள் வெற்றியாளர்களாக நுழைந்தனர். மக்காவை வெல்ல வலிமை அளித்த அல்லாஹ்விற்குத் தலை வணங்கியவர்களாக அந்தப் புனித மண்ணில் மீண்டும் கால் பதித்தனர். பின்னர், மக்கா தனது இதயத்தையும் கட்டுப்பாட்டையும் இஸ்லாத்திடம் ஒப்படைத்தது. தன் எஜமானரான உமையாவின் கோபத்திற்கு இரையாகி, வெப்பத்தால் கொதிக்கும் பாலைப் பெருவெளியில் உடையில்லா வெற்றுடலின் மீது சுடு பாறையை வைத்துக் கொடுமை செய்யப்பட்ட பிலால் (ரலி), எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கஅபாவின் உச்சியில் ஏறி தவ்ஹீதின் முழக்கத்தை எழுப்பியவராகத் தொழுகைக்கு அழைப்பு விடுத்தார்.
மக்கா வெற்றி என்பது இஸ்லாத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்களில் ஒன்றாகும். ஆயுத பலத்திற்கு அப்பால், ஈமானிய வலிமையாலும், அதன் காரணமாக எதிரிகளின் இதயங்களை நிரப்பியிருந்த பயத்தாலும் புனித நகரம் மீட்கப்பட்டது. ஏனெனில், அன்று பிலாலின் பாங்கொலி குதிரைகளின் குளம்படிகளைவிட உரத்து ஒலித்தது. பல ஆண்டுகளாக நீடித்த அக்கிரமத்தின் வலிமையைவிட, சத்தியத்தின் உறுதியும் வெற்றியாளர்களின் நீதியுணர்வும் வலிமையானவையாக இருந்தன. மக்கா வெற்றிக்குப் பிறகு, தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பினார். ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டில் ‘ஹஜ்ஜதுல் விதா’(இறுதி ஹஜ்)விற்காக மீண்டும் மக்காவுக்கு வந்தார்கள். அங்குதான் அவர் தனது புகழ்பெற்ற ‘விடைபெறும் உரையை’ நிகழ்த்தினார்.
மறுமை நாள்வரை முஸ்லிம்களின் பாதையை ஒளிரச் செய்யும் நாகரிகத்தின் பிரகடனமாக அந்த உரை திகழ்கிறது. விடைபெறப் போகும் ஒரு மனிதரின் அறிவுரையாகவும் அது இருந்தது. அதன் பிறகு தூதர் (ஸல்) அவர்கள் மிகக் குறுகிய காலம் மட்டுமே வாழ்ந்தார்கள். தூதர் (ஸல்) அவர்கள் தம் பணியை தாம் முறையாக நிறைவேற்றியதைக் குறித்து அங்கு குழுமியிருந்த முஸ்லிம்களை சாட்சிகளாக்கி இவ்வாறு கூறினார்கள்: “மக்களே, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் செய்தியை எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா?” அந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்களின் வாயிலிருந்து ஒருமித்து எழுந்த பதில், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆம்!” என்பதாக இருந்தது.
புவைப் போரும் முஸன்னாவின் வாள்களும்
முஸன்னா பின் ஹாரிஸா (ரலி) என்பது எல்லைகளை அதிர வைத்த ஒரு பெயர். போர்க்களத்தில் அவருடைய துல்லியமான நிபுணத்துவத்தையும் தந்திரங்களையும் குறித்து பாரசீகர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஸஹாபாக்களையும் பல்வேறு அறபுப் பழங்குடியினரையும் உள்ளடக்கிய அவரது பெரிய படை பற்றிய தகவல்கள் அவர்களை அடைந்தன. இன்றைய ஈராக்கில் கூஃபாவிற்கு அருகிலுள்ள புவைப் என்ற இடத்தில் இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தன. யூப்ரடீஸ் (ஃபுறாத்) நதி இரு பிரிவினர்களையும் பிரித்தது. பாரசீகத் தளபதி மெஹ்ரான் பின் பாதான் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, முஸன்னாவின் சம்மதத்துடன் பாரசீக இராணுவம் ஆற்றைக் கடந்து மறுபக்கத்தை அடைந்தது. இஸ்லாமிய வரலாற்றுப் பதிவுகளின்படி, இந்தப் போர் ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு றமளான் 13 அன்று தொடங்கியது. முஸன்னா தன்னுடைய போர்களின்போது மட்டுமே பயன்படுத்திய அவரது புகழ்பெற்ற குதிரையான அஷஷமுஸின் மீதேறிப் போர்க்களத்திற்கு வந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, முஸன்னா பாரசீக இராணுவத்திற்கு எதிராக நேரடியாகப் போரிட்டார். அவர்களின் தளபதி மெஹ்ரான் கொல்லப்பட்டார். இது பாரசீக இராணுவத்தைச் சிதறடித்தது. முஸன்னாவும் அவரின் குழுவினரும் அவர்களுக்கு முன்னால் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தைத் தடுத்தனர். இதனால் பாரசீகர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. எந்தளவிற்கு என்றால், போரில் கொல்லப்பட்டும் ஆற்றில் மூழ்கியும் 100,000க்கும் மேற்பட்ட பாரசீகர்கள் இறந்தனர்.
முஸ்லிம் தரப்பிலிருந்தும் பல முக்கியத் தலைவர்கள் உட்பட சுமார் நான்காயிரம் பேர் ஷஹீதாயினர். வெற்றிக் கொண்டாட்டத்தின்போதும் தனது போர் உத்தியில் ஏற்பட்ட ஒரு தவறை இராணுவத்தின் முன் கூற அவர் மறக்கவில்லை; அதாவது, பாலத்தைக் கடந்து பாரசீக இராணுவத்தின் பின்னால் அவர்களைச் சுற்றி வளைத்தபோது அவர்கள் உறுதியாக இருந்திருந்தால், தனது இராணுவம் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கும் என்பதே அப்பாடம்.
சிந்துவின் வெற்றி: கிழக்காசியாவிற்கான இஸ்லாத்தின் நுழைவாயில்
சிந்துவின் வெற்றி வெறும் வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, கிழக்காசிய மக்கள் சிறந்தவொரு நாகரிகத்தை ஏற்றுக்கொள்ளவதற்காகத் திறக்கப்பட்ட கதவுதான் அது. அதன் மூலம், மக்கள் கூட்டங்கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் திரண்டனர். சிந்துவின் வெற்றிக்கு முந்தைய ஆண்டுகளில், இப்பகுதி முஸ்லிம்களுக்கு பெரியதொரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியிருந்தது. அதன் கடற்கொள்ளையர்கள் இந்தியப் பெருங்கடலிலும் அறபியக் கடலிலும் முஸ்லிம் வணிகர்களைத் தாக்கி அவர்களின் செல்வத்தைக் கொள்ளையடிப்பார்கள். ஹஜ் பயணத்திற்குச் சென்ற சில முஸ்லிம் பெண்களைச் சிறைபிடித்தனர். அவர்கள் முஸ்லிம்களின் ஃகலீஃபாவிடமும் இராக் ஆளுநரிடமும் உதவி கேட்டனர். அதன் மூலம்தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்து.
இயற்கையாகவே, சிந்து மாகாணத்தைக் குறிவைப்பது அவ்வளவு எளிதானதல்ல. அந்த நேரத்தில் இராக்கின் அமீராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இரண்டு முறை முயன்று தோல்வியடைந்ததுடன் அவரின் இரண்டு தளபதிகளும் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் மூன்றாவதாக அவருடைய மருமகன் முஹம்மது பின் காசிம் தளபதியாக நியமிக்கப்பட்டார். உறுதிப்பாடும் போரட்டக் குணமும் தைரியம் நிறைந்த 17 வயது மட்டுமே நிரம்பிய இளைஞராக முஹம்மது இருந்தார். அவர் சிந்துவை மூன்று ஆண்டுகள் முற்றுகையிட்டார்.
தற்போது கராச்சி என்று அழைக்கப்படும் தீபல், அந்தக் காலத்தில் ஒரு சக்தி வாய்ந்த கோட்டையாக இருந்தது. ஆனால் ஹிஜ்ரீ 92 றமளான் 6ஆம் தேதி, இப்னு காசிம் கோட்டையை முற்றுகையிட்டார். சுமார் பன்னிரண்டாயிரம் போர்வீரர்களைக் கொண்ட அவரது படை கோட்டையின் அரண்களை உடைப்பதில் வெற்றி பெற்றது. பின்னர், அவர் இப்போது ஹைதராபாத் என்று அழைக்கப்படும் நைரூன் நகரத்திலும் தனது வெற்றிக் கொடியை நாட்டினார். ஒப்பந்தங்கள் ஊடாகவும் போராட்டங்கள் வழியாகவும், அமைதியான முறையிலும் போரின் மூலமாகவும் இளம் தளபதி ஒவ்வொரு நகரத்தையும் கைப்பற்றினார். வெறும் மூன்று ஆண்டுகளில், சிந்து மாகாணம் இஸ்லாமிய ஃகலீஃபாவின் ஆட்சியின் கீழ் முழுமையாக வந்தது. அந்த வெற்றிகளுக்குப் பிறகு, இந்தப் பகுதிகள் முஸ்லிம் நாகரிகத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக மாறிவிட்டன. ஆழ்ந்த நம்பிக்கை, அறிவுசார் போராட்டங்கள் ஆகியவற்றின் வழியாகப் புதியதொரு வரலாறு பிறந்தது. அது இன்றுவரை அங்குள்ள பள்ளிகளிலும் கல்வி நிலையங்களிலும் தொடர்கிறது.
அந்தலூசிய வெற்றி: இழந்த ‘சொர்க்கம்’
ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு இஸ்லாமிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இஸ்லாம் கிட்டத்தட்ட இன்றைய ஐரோப்பாவரை பரவியிருந்த, வெற்றியின் கப்பல்கள் அந்தலூசிய மண்ணில் தரையிறங்கியிருந்த காலம் அது. எட்டு நூற்றாண்டுகள்வரை நீடித்த பெருமையின், அழகின் பயணத்தின் தொடக்கம் அங்குதான் தொடங்கியது. அவ்வாறுதான் ‘தொலைந்து போன சொர்க்கம்’ என்று அழைக்கப்படும் நாகரிகம் பிறந்தது.
தாரிக் பின் ஸியாது தலைமையிலான பன்னிரண்டாயிரம் பேர் கொண்ட படையால் ஸ்பெயின் வெற்றி பெறப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் உள்ளூர் பர்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கோதிக் இராணுவத்தின் பெருமையை உடைத்தனர். கோதிக் மன்னர் உட்பட நாற்பதாயிரம் வீரர்கள் போரில் கொல்லப்பட்டனர். அந்தலூசியாவில் வெற்றி பெற்ற பிறகு, அங்கு மினாராக்கள் உயர்ந்தன, பாங்கொலி ஒலித்தது. அந்தப் பெருமைமிகு மண்ணில் இஸ்லாமிய நாகரிகம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.
அம்மூரியா வெற்றி: ஒரு அழுகையிலிருந்து ஆரம்பித்த வரலாறு
அம்மூரியா சந்தையில் ரோமானியன் ஒருவன் முஸ்லிம் பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தான். அம்மூரியாவின் வெற்றிக்கு அந்த நேரத்தில் எல்லைகளை உலுக்கிய அப்பெண்ணின் கூக்குரலைத் தவிர வேறு நேரடிக் காரணம் எதுவும் இல்லை. “வா முஅதஸிமா!” (ஓ முஅதஸிம், எனக்கு உதவுங்கள்!) என்று அந்தப் பெண் கூச்சலிட்டாள். அந்த அலறலைக் கேட்ட ரோமானியன் அவளை ஏளனமாகத் தள்ளிவிட்டான். ஆனால், அந்தக் காட்சியைத் தன் கண்களால் படம்பிடித்துக்கொண்ட முஅதஸிமின் உளவாளி, பக்தாதில் இருந்த ஃகலீஃபாவிடம் சென்று எல்லாவற்றையும் விவரித்தார்.
இராணுவம் உடனடியாகத் தயாராகி, வீரர்கள் அணிதிரட்டப்பட்டனர். இவ்வாறு ஓர் உளவியல் உத்தியுடன் போர் தொடங்கியது. ஜோதிடர்கள் ஃகலீஃபாவை அவரது இலக்கிலிருந்து தடுக்க முயன்றாலும், அவர் தனது இலக்கிலிருந்து விலகவில்லை. இவ்வாறு, ஹிஜ்ரீ 223 றமளான் மாதத்தில், முஅதஸிம் கோட்டையின் சுவர்களை இடித்தார். அந்தக் கோட்டையைக் கைப்பற்றிய பிறகு, அவர் அக்கிரமக்காரனான அந்த ரோமானியனைப் பிடித்து, தன்னை அழைத்துக் கூக்குரலிட்ட பெண்ணின் முன் அவமானப்படுத்தினார். இவ்வாறு, ஒரு பெண்ணின் கண்ணீர் துளிகள் கண்டு விரைந்த வலிமையான இராணுவமாகவும் முதல் வெற்றியாகவும் வரலாற்றில் இது பதிவுசெய்யப்பட்டது.
சல்லாகா போர்: ஸ்பானிய ஆதிக்கத்தை அழித்த முறாபித்துகளின் படை
இன்றைய தெற்கு ஸ்பெயினில் நடந்த சல்லாகா போர், இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமானதும் அந்தலூசியாவில் நடைபெற்ற மிகப்பெரிய போர்களில் ஒன்றுமாகும். இது ஹிஜ்ரீ 479 றமளான் மாதத்தில் நடந்தது. அந்தலூசியாவின் அமீர் அல்முஅதமிது பின் அப்பாது, காஸ்டில் இராஜ்ஜியத்தை ஆண்ட ஆறாம் அல்ஃபோன்சோவின் அச்சுறுத்தலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முறாபித்தூன் ஆட்சியாளர் யூசுஃப் பின் தாஷ்ஃபீனிடம் உதவி கோரினார். இதைத் தொடர்ந்து, ஒட்டகங்களில் பயணிக்கும் துணிச்சலான பாலைவன வீரர்கள் (முறாபித் இராணுவத்தினர்) அங்கு புறப்பட்டனர்.
சல்லாகா சமவெளியில் இரு குழுக்களும் அவர்கள் தங்கள் நிலைகளை எடுத்துக்கொண்டு நேருக்கு நேர் நின்றனர். இரத்தக்களரியான சண்டையின் முடிவில் ஸ்பானிய இராணுவம் பரிதாபமாகத் தோல்வியடைந்தது. அவர்களது பெருமையின் உச்சம் உடைந்து நொறுங்கியது. உள்ளூர் அரசர்களின் துரோகத்தால் ஸ்பானிய இராணுவத்தினது வாளின் முனையில் வீழ்ச்சி அடையும் நிலையிலிருந்த அந்தலூசியாவில், அல்லாஹ்வின் அருளால் இந்த வெற்றி மூலம் இஸ்லாமிய நாகரிகம் மேலும் மூன்று நூற்றாண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
ஹித்தீன் போர்: குத்ஸின் விடுதலை வரலாறு
ஹிஜ்ரி 583ஆம் ஆண்டு றமளான் மாதத்தில், அன்றைய சிரியாவின் கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த சிலுவைப் போர் வீரர்களை நசுக்குவதற்காக சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபீ ஹித்தீன் போருக்குத் தலைமை தாங்கிச் சென்றார். சிலுவை இராணுவம் அங்கு 90 ஆண்டுகளாக ஆதிக்கத்தில் இருந்தது. அவர்களின் ஆதிக்கம் சிரியாவின் மண்ணில் ஆழமாக வேரூன்றியிருந்தது. சிலுவைப் படைகளுக்கு எதிரான நீண்ட போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபீ தனது படையுடன் புறப்பட்டார்.
இரத்தக்களரியாக மாறிய அப்போர் ஓர் ஒப்பற்ற, புகழ்பெற்ற வெற்றியில் முடிந்தது. ஹித்தீன் சமவெளி இரத்தத்தால் நனைந்தது. சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபீயின் படையின் வாள்களின் கீழ் சிக்கி சிலுவைப் போர் வீரர்கள் சின்னாபின்னமாகிச் சிதறி ஓடினர். ஹித்தீனில் கிடைத்த வெற்றி, அல்அக்ஸா பள்ளிவாசலின் மீதான 90 ஆண்டுகாலத் துயரமான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் புனித பூமியின் விடுதலைக்கும் நுழைவாயிலாக மாறியது.
ஐன் ஜாலூத்: தோற்காதவர்களின் முதல் தோல்வி
தார்த்தாரிகளின் மிருகத்தனமும், நகரங்களிலும் கிராமங்களிலும் அவர்கள் நடத்திய அடக்குமுறையும், முஸ்லிம்கள் மற்றும் உலகெங்கிலுமுள்ள மற்றவர்களின் மனங்களில் ஏற்கனவே பெரியதோர் உளவியல் தோல்வியை உருவாக்கியிருந்தது. அவர்கள் ஆசியாவின் இஸ்லாமியப் பகுதிகளுக்குள் புகுந்து, நகரங்களை அழித்தும் பண்ணைகளை எரித்தும் இனப்படுகொலை செய்தும் மக்களைக் கொடூரமாகக் கொன்றும் மனிதர்களின் மனங்களில் ஆழமான பீதியை ஏற்படுத்தினர். பக்தாதில் நடந்த அட்டூழியங்களில் மட்டுமே பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அப்பாஸிய ஃகிலாஃபத்தும் வீழ்ந்தது. தார்த்தாரியர்களின் ஈட்டிகளுக்கும் வாள்களுக்கும் இரையான ஃகலீஃபா முஅஸ்தஸிம் பில்லா, ஹுலாகு ஃகானால் கொல்லப்பட்டார்.
சிரியாவிலும் ஃபலஸ்தீனிலும் இருந்த நகரங்களைக் கைப்பற்றி தார்த்தாரியர்களின் இரத்தக்களரியான படையெடுப்பு தொடர்ந்தது. இறுதியாக, ஹிஜ்ரீ 658 றமளான் 26ஆம் தேதி, இன்றைய நாபுலுஸுக்கு அருகிலுள்ள ஐன் ஜாலூத்தில் அப்படையெடுப்பு முறியடிக்கப்பட்டது. அங்கு, இரு படைகளும் நேருக்கு நேர் மோதின, உக்கிரமானதொரு போர் நடந்தது. முஸ்லிம் படையின் தலைவரான அல்முழஃப்பர் குத்ஸ், தனது படையில் தோல்வியின் அறிகுறிகளைக் கண்டதும், ஷஹீதாவதற்கான ஆசையை உரக்க முழங்கியவராகத் தனது கவசத்தைத் தரையில் வீசினார். பின்னர், தனது மரணத்தை எதிர்கொண்டு, “வா இஸ்லாமா… வா இஸ்லாமா…” (இஸ்லாம் ஓங்குக!) என்று உரக்கக் கூவினார்.
சில அறிவிப்புகளின்படி, அவர் தனது குதிரையிலிருந்து இறங்கி, இரண்டு றகஅத்துகள் தொழுதார். பின்னர், முஸ்லிம் படையின் குதிரைக் குளம்புகளுக்கு அடியில் சிக்கிய தார்த்தாரியரை அவரது படை தாக்கியது. போர் மகத்தான வெற்றியில் முடிந்தது. இருப்பினும், தளபதியான குத்ஸ் போருக்குப் பிறகு நீண்ட காலம் உயிர் வாழவில்லை. போருக்குச் சில நாள்களுக்குப் பிறகு, அவர் தன் எதிராளியான ழாஹிர் பைபர்ஸால் கொல்லப்பட்டார்.
ஐன் ஜாலூத் போர் அதிகாரச் சமநிலையை மாற்றியது. இது தார்த்தாரியர்களின் வலிமைமிக்க இராணுவத்தின் மீது முஸ்லிம்கள் பெற்ற முதல் தீர்க்கமான வெற்றியாகும். இந்த வெற்றி இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு மைல்கல்லாக மாறியது. பரந்து விரிந்த இஸ்லாமிய நாடுகளில் மூன்று நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்தவர்களுக்கு முன்னால் இந்த வெற்றி, விசாலமானதொரு கதவைத் திறந்துவைத்தது.
பார்லெவ் எல்லைக் கோட்டை உடைத்தல்: தொடர் அறபுத் தோல்விகளுக்கு மத்தியில் அற்புதமானதொரு வெற்றி
1973ஆம் ஆண்டு அக்டோபரில் எகிப்து இராணுவம் ‘பார்லெவ் எல்லைக் கோட்டை’ மீறிய நிகழ்வு, 1936இல் தொடங்கிய ஆக்கிரமிப்பு இஸ்ரேலுடனான அறபு உறவுகளில் பெரியதொரு மாற்றத்தைக் குறித்தது. இது 1936ஆம் ஆண்டு இடப்பெயர்வுடன் தொடங்கி, 1948ஆம் ஆண்டு நக்பா வழியாகச் சென்று,1967இல் நக்சயில் ஆழமான காயங்களாக மாறிய வரலாறாக அது இருந்தது. இந்தக் காலகட்டத்தில், ‘வெல்ல முடியாத இஸ்ரேலிய இராணுவம்’ என்ற எண்ணம் அறபு மக்களின் உள்ளங்களிலும் தலைவர்களின் உள்ளங்களிலும் உறுதியாக வேரூன்றியிருந்தது. இருப்பினும், 1973ஆம் ஆண்டு றமளான் மாதத்தில், எகிப்திய இராணுவம் பார்லெவ் எல்லைக்கோட்டை உடைக்க முயன்று, வெற்றிகரமாக உடைத்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திற்குள் நுழைந்து, இஸ்ரேலிய இராணுவத்தைத் தோற்கடித்து, எகிப்தியப் பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றியபோதுதான் இந்த மனநிலை மாறியது.
றமளான் 10ஆம் நாள், பார்லெவ் எல்லைக்கோட்டை உடைத்து எகிப்திய இராணுவத்தின் போராளிகள் கடுமையான போரில் ஈடுபட்ட போது வானில் தக்பீர் முழக்கங்கள் எழுந்தன. சினாய் பகுதியில் இஸ்ரேல் கட்டிய வலிமையான இராணுவத் தற்காப்புகளில் ஒன்றான பார்லெவ் எல்லைக்கோடுதான் அன்று தகர்க்கப்பட்டது. பார்லெவ் எல்லைக்கோட்டை உடைப்பது என்பது இஸ்ரேலைப் பொறுத்தவரை நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒன்றாக இருந்தது. அதுமட்டுமின்றி 1948ஆம் ஆண்டு நக்பாவுக்குப் பிறகு தொடர்ச்சியான வன்முறை நடவடிக்கைகள் மூலம், அறபியர்களின் இதயங்களில் தோல்வி பயத்தையும் தாழ்வு மனப்பான்மையின் பெரிய சுவர்களையும் அவர்களால் கட்ட முடிந்திருந்தது.
இந்த வெற்றியின் மூலம் வீரர்களின் எழுப்பிய “அல்லாஹு அக்பர்!” என்ற முழக்கம் ஓரளவு வெற்றியைச் சாத்தியமாக்கியது. அனைத்து அறபுத் தலைநகரங்களிலும் மக்களால் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கப்பட்ட ஒரு வரலாற்றுதி தினமாக 1973ஆம் ஆண்டு றமளான் 10ஆம் நாள் மாறியது. இந்தப் போரில் எகிப்திய இராணுவம் மட்டும் ஈடுபடவில்லை. சிரிய இராணுவமும் அவர்களுக்கு ஆதரவளித்தது. இரு தரப்பினரும் இரண்டு வெவ்வேறு திசைகளிலிருந்து போரை வழிநடத்தினர்.
றமளான் பத்தாம் நாள் கிடைத்த இந்த வெற்றி நீண்ட காலம் நீடிக்கவில்லை. விரைவில், எகிப்திய அரசாங்கம் ‘கேம்ப் டேவிட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் அறபியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதிக்கான கனவுகளை விதைத்தது. ஆனால், ஆக்கிரமிப்புப் படைகள் அந்தக் கனவுகளை இரத்தத்தாலும், நெருப்பாலும், அழிக்கப்பட்ட நகரங்களாலும் துடைத்தழித்துவிட்டது. மரண பீதியின் அந்தக் கதைகள் இன்றுவரை தொடர்கின்றன… புனித றமளான் மாதத்திலும்கூட.
(றமளானின் வெற்றி வரலாறு இனியும் தொடரும். இன்ஷா அல்லாஹ்!)
(அறபி மூலம்: AlJazeera.net)
(மலையாள மொழிபெயர்ப்பு: IslamOnLive)
(மலையாளம் வழி தமிழில்: கே.எஸ். அப்துல் ரஹ்மான்)

