தமிழ்நாடு முஸ்லிம் அரசியல்: சவால்களும் வாய்ப்புகளும்
2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து கவனப்படுத்தும் ஆய்வறிக்கை
![]()
2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து கவனப்படுத்தும் ஆய்வறிக்கை
பதினேழாவது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் பொது வெளியில் பேசப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம், பிரச்சாரம் தொடங்கிய பிறகு சற்று ஓரமாக ஒதுங்கிக் கொண்டது. சமீப ஆண்டுகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறித்த கருத்துகள் ஓரளவு கவனம் ஈர்த்து வரும் நிலையில் தற்போதைய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் அது பேசு பொருளானதை மறுக்க முடியாது.
ஏறத்தாழ ஆறு சதவிகித மக்கள் தொகை கொண்ட தமிழக முஸ்லிம்கள் தேர்தல் அரசியலில் தங்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை எப்போதும் பெற்றதில்லை என்பதை தரவுகள் தெரிவிக்கின்றன. சமூக நீதி, மதச்சார்பின்மை, எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய கொள்கைகள் முன்வைக்கப்பட்டாலும் அரசியலில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இங்கும் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விட சமூக களத்தில் முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருந்தாலும் அரசியல் களத்தில் ஏனைய மாநிலங்களின் நிலைதான் தமிழ்நாட்டிலும் நீடிக்கிறது.
இதுவரை நடைபெற்ற பதினாறு சட்டமன்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3,644 உறுப்பினர்களில் 93 பேர் மட்டுமே முஸ்லிம்களாவர். இந்த காலகட்டத்தில் மக்கள் தொகையில் ஏறத்தாழ 5.25 சதவிகித பங்கு கொண்ட முஸ்லிம்கள் சட்டமன்றத்தில் வெறும் 2.55 சதவிகித பங்கை மட்டுமே பெற்றுள்ளனர். அதாவது, 191 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் 93 உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் மிக குறைந்த எண்ணிக்கையாக இரண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் 1952 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1989 மற்றும் 1996 சட்டமன்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 11 முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2001, 2006, 2021 சட்டமன்ற தேர்தல்களில் தலா ஏழு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அட்டவணை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் விபரம்
| தேர்தல் வருடம் | மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் | முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் | முஸ்லிம் உறுப்பினர்களின் சதவிகிதம் | முஸ்லிம் மக்கள்தொகை சதவிகிதம் |
| 1952 | 191 | 2 | 1.08 | 4.73 |
| 1957 | 205 | 4 | 1.95 | 4.73 |
| 1962 | 206 | 4 | 1.94 | 4.60 |
| 1967 | 234 | 4 | 1.71 | 4.60 |
| 1971 | 234 | 6 | 2.56 | 5.10 |
| 1977 | 234 | 7 | 2.99 | 5.10 |
| 1980 | 234 | 6 | 2.56 | 5.10 |
| 1984 | 234 | 6 | 2.56 | 5.20 |
| 1989 | 234 | 11 | 4.70 | 5.20 |
| 1991 | 234 | 3 | 1.28 | 5.50 |
| 1996 | 234 | 11 | 4.70 | 5.50 |
| 2001 | 234 | 7 | 2.99 | 5.56 |
| 2006 | 234 | 7 | 2.99 | 5.56 |
| 2011 | 234 | 5 | 2.14 | 5.86 |
| 2016 | 234 | 4 | 1.71 | 5.86 |
| 2021 | 234 | 7 | 2.56 | 5.86 |
(ஆதாரம்: ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை, சீர்மை வெளியீடு)
மாநில சட்டமன்றத்தில் 13 அல்லது 14 சட்டமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம்கள் சார்பாக பிரதிநிதித்துவம் பெற வேண்டிய நிலையில், இரண்டு சட்டமன்றங்களை தவிர்த்து ஏனைய சட்டமன்றங்களில் ஒற்றை இலக்கத்திலேயே முஸ்லிம்கள் சட்டப்பேரவையில் கால் பதித்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகள் வெற்றி பெற்ற தேர்தல்களை விட திமுக வெற்றி பெற்ற தேர்தல்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் சற்று அதிகமாக உள்ள போதும் அவையும் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் பரவி வாழ்வதன் காரணமாக எந்த தொகுதியிலும் முஸ்லிம்கள் தனியாக வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவில்லை. ஆனால், வெற்றி விகிதம் குறைந்து வரும் தற்போதைய சூழலில் முஸ்லிம்களின் வாக்கு மீண்டும் மதிப்பை பெற்றுள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் பத்து சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி விகிதம் ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகவும், 25 தொகுதிகளில் மூவாயிரம் வாக்குகளுக்கு குறைவாகவும் இருந்தது.
நான்கு முனைப் போட்டி நிலவி வரும் தற்போதைய சட்டமன்ற தேர்தலில் வாக்கு வித்தியாசம் இன்னும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முஸ்லிம்கள் எந்த சட்டமன்ற தொகுதியிலும் பெரும்பான்மையாக இல்லாத போதும், முடிவுகளில் அவர்கள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளன.
இந்தப் பின்னணியிலேயே, முஸ்லிம் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தையும் திமுக இத்தேர்தலில் தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு (மமக) தலா இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ள திமுக, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) ஆகியவற்றிற்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. முஸ்லிம் லீக் மற்றும் மமக ஆகியவை ஏற்கெனவே கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில், ஏனைய இரு கட்சிகளையும் புதிதாக கூட்டணியில் இணைத்துள்ளது திமுக. இது தவிர, திமுக சார்பாக நான்கு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து முஸ்லிம் கட்சிகளும் திமுக அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய தொகுதிகளை திமுக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சற்று மென்மையாக முன் வைக்கப்பட்ட போதும், கூட்டணியில் உள்ள புதிய கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற காரணத்தை கூறி திமுக இக்கோரிக்கையை நிராகரித்தது. கடந்த தேர்தலில் மூன்று தொகுதிகள் வழங்கப்பட்ட முஸ்லிம் லீக் கட்சிக்கு இம்முறை இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மறுமலர்ச்சி திமுகவிற்கும் தலா ஒரு தொகுதிகள் குறைக்கப்பட்டன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் இரண்டு முஸ்லிம்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் களத்தில் இறக்கியுள்ளன. திமுக கூட்டணியில் 13 முஸ்லிம் வேட்பாளர்கள் என்ற எண்ணிக்கை ஓரளவு அவர்களின் தொகை விகிதாசாரத்திற்கு இணையாக உள்ளது. புதிதாக தேர்தல் களம் காணும் நடிகர் விஜய்-இன் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாக 13 முஸ்லிம்களும் சீமானின் நாம் தமிழர் கட்சி (நாதக) சார்பாக ஒன்பது முஸ்லிம்களும் போட்டியிடுகின்றனர்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து இத்தேர்தலை சந்திக்கும் பிரதான எதிர்கட்சியான அதிமுக, பாளையங்கோட்டை தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. பாஜக கூட்டணி, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் கட்சிகள் ஆகிய காரணங்களால் தங்களுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது என்ற கணிப்பில் அக்கட்சி இந்த முடிவை எடுத்தது போல் தெரிகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது அக்கட்சிக்கு கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம் வாக்குகள் கிடைத்தன. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது வெறும் நான்கு சதவிகித முஸ்லிம் வாக்குகளை மட்டுமே பெற்ற அதிமுக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்பது சதவிகித முஸ்லிம் வாக்குகளை பெற்றது. (சிஎஸ்டிஸ் லோக் நிதி ஆய்வு). நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு அலை முஸ்லிம்கள் மத்தியில் இருந்த போதும் ஒன்பது சதவிகித வாக்குகளை அதிமுக பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முஸ்லிம் கட்சிகளின் அரசியல் – ஒரு சுருக்கமான பார்வை
முதலாம் உலகப் போரின் போது, தோல் மற்றும் தோல் பதனிடும் தொழில்களுக்கு ஆங்கிலேய அரசாங்கம் நெருக்கடி கொடுத்தது. மற்ற தொழில்களைப் போலவே தோல் பதனிடும் தொழிலிலும் இங்கிலாந்து முதலாளிகளின் ஏகபோகத்தை திணிக்க ஆங்கிலேய அரசு முயன்றது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கணக்கில் கொண்டு, அதுவரை தொழிலில் மட்டுமே ஈடுபாடு காட்டி வந்த தமிழக முஸ்லிம்கள் அரசியலில் களம் கண்டனர்.
அதேபோல, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய சக்திகள் கிலாஃபத் கட்டமைப்பை நசுக்கும் காலகட்டமாகவும் அது இருந்தது. கிலாஃபத் அமைப்பை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்தி வட இந்திய உலமாக்கள் தமிழ்நாட்டில் மேற்கொண்ட பயணங்களும் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதற்கு முன்னரே உருது மொழி பேசும் முஸ்லிம்கள் சென்னை மாகாண அரசியலில் கால் பதித்திருந்தனர்.
1920 தேர்தலுக்கு பிறகு நீதிக் கட்சியுடன் முஸ்லிம்கள் கொண்ட கூட்டணி விரைவாகவே உடைந்தது. சென்னை உயர்நீதி மன்றத்திற்கு முஸ்லிம் ஒருவரை நியமனம் செய்யாததையும் அரசு பணிகளில் பார்ப்பனர் அல்லாத இந்து சாதியினருக்கு கொடுக்கப்படுவது போன்ற முக்கியத்துவம், முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படாததை முஸ்லிம்கள் பெரும் குறையாக கண்டனர்.
தென் இந்திய வர்த்தக கூட்டமைப்பில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதும் கிலாஃபத் இயக்கத்திற்கு நீதிக் கட்சி ஆதரவு அளிக்காததும் இந்த விரிசலை அதிகப்படுத்தின. நீதிக்கட்சியில் சில முஸ்லிம் தலைவர்கள் இருந்த போதும் முஸ்லிம்கள் உடனான அக்கட்சியின் தொடர்பு குறைவாகவே இருந்தது.
இதனை தொடர்ந்து 1926 தேர்தலில் முஸ்லிம்கள் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல் கட்சியான சுயராஜ்ய கட்சியின் பக்கம் சாய்ந்தனர். கிலாஃபத் இயக்கத்திற்கு ராஜாஜி வழங்கிய ஆதரவும் நீதிக் கட்சியின் ஆங்கிலேய சார்பு நிலையும் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்களை காங்கிரஸ் பக்கம் கொண்டு சென்றது. இதன் தொடர்ச்சியாக, 1937 தேர்தலில் சென்னை மாகாண முஸ்லிம் லீக் தலைவர் ஜமால் முகம்மது, காங்கிரஸ் தலைவர்களான ராஜாஜி மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோருடன் அதிகாரப்பூர்வமற்ற உடன்படிக்கையை மேற்கொண்டதன் அடிப்படையில் இரு கட்சிகளும் தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்ப்பதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றியை பெற்றதுடன் நீதிக் கட்சி படு தோல்வியை சந்தித்தது.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் கூட்டணி முடிவுக்கு வழிவகுத்தது. இந்தியா முழுவதும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதை தொடர்ந்து இந்திய மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி காங்கிரஸ் கட்சி மட்டுமே என்று ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தில் முஸ்லிம் லீக்கை புறக்கணித்துவிட்டு காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தார் ராஜாஜி. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு முஸ்லிம்களை முஸ்லிம் லீக்கை நோக்கி தள்ளியது.
1937 தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியின் சில செயல்பாடுகள் முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகத்தையும் அதிருப்பதியையும் ஏற்படுத்தின. முஸ்லிம்களுக்கான தனி வாக்காளர் தொகுதிகளை நீக்க வேண்டும் என்ற நேரு கமிட்டியின் (1928) அறிக்கையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முஸ்லிம் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள இந்து பெரும்பான்மைவாதம், சிறுபான்மையினரின் நலன்களை புறக்கணிப்பதாக முஸ்லிம்கள் உணர்ந்தனர். 1937 தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் நடந்து கொண்ட விதம் இதனை உண்மைப்படுத்தியது. சுதந்திரத்திற்கு முன், நீதிக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கவில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.
சுதந்திரத்திற்குப் பிறகு வட இந்தியாவில் முஸ்லிம் லீக் கடும் பாதிப்புகளை சந்தித்து ஒட்டுமொத்த கட்சி கட்டமைப்பும் சிதிலமடைந்தது. சவால்கள் நிறைந்த அந்த காலகட்டத்தில், ஜமால் முகம்மதின் உறவினரான முகம்மது இஸ்மாயில் (காயிதே மில்லத்) முஸ்லிம் லீக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை முன் வந்து ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ் உடன் கசப்பான அனுபவங்கள் இருந்த போதும் 1952இல் நடைபெற்ற முதல் தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், அக்கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. சென்னை மாகாணத்தில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம் லீக் வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். (மலபார் பகுதியில் ஐந்து பேர் வெற்றி பெற்றனர்).
குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜருக்கு முஸ்லிம் லீக் ஆதரவு அளித்த போதும், அக்கட்சியை ஒரு தீண்டத்தகாத கட்சியாகவே காங்கிரஸ் நடத்தியது. மறுபுறம், தனி திராவிட நாடு கோரிக்கை, முன்னணி தலைவர்களின் நாத்திக சிந்தனை காரணமாக, திமுக உடன் கூட்டணி அமைப்பதிலும் முஸ்லிம் லீக்கிற்கு தயக்கம் இருந்தது. ஏற்கெனவே தேசப் பிரிவினைக்கு காரணமானவர்கள் என்ற குற்றத்தை சுமந்து வரும் நிலையில் மற்றொரு பிரிவினைக்கு உதவியாக இருப்பவர்கள் என்ற குற்றச்சாட்டையும் சுமக்க வேண்டுமா என்ற கேள்வி லீக் தலைவர்களிடம் இருந்தது. எனவே, 1957 தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை முஸ்லிம் லீக் எடுத்தது.
1962 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த முஸ்;லிம் லீக் தொடர்ந்து திராவிட கட்சிகளுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. வட இந்தியாவில் வளர்ந்து வந்த இந்து தேசியவாத அரசியலை திமுக எதிர்த்தது, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது, நாத்திக பிரச்சாரத்தை முன்னணி தலைவர்கள் நிறுத்தியது, முஸ்லிம் லீக்கில் ஏற்பட்ட பிளவு ஆகியவை இந்த கூட்டணி அமைவதற்கு காரணங்களாக இருந்தன. சுயேட்சை சின்னத்தில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து லீக் வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 1967 தேர்தலில் நான்கு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1971 தேர்தலில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. 1972இல் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ராமசந்திரன் அதிமுகவை தொடங்கிய போது முஸ்லிம்களின் அரசியல் பேரத்திற்கான வாய்ப்பு அதிகரித்தது.
1977 தேர்தலில் முதன் முறையாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். 1980 தேர்தலில் மீண்டும் திமுக பக்கம் சென்ற முஸ்லிம் லீக், எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட போதும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 1984 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சென்ற லீக், மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
1989 தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்து எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதுவரை சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் முதன் முறையாக காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டனர். முஸ்லிம் லீக்கில் இருந்து பிரிந்த அப்துல் லத்தீப் திமுகவுடன் கூட்டணி அமைத்து நான்கு தொகுதிகளில் போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சட்டமன்றத்தில், முஸ்லிம் லீக் (லத்தீப்) என்று தனி அணியாக இவர்கள் அறியப்பட்டனர். (1987 தேர்தலுக்கு முன் முஸ்லிம் லீக் கட்சியை வகுப்புவாத கட்சி என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டது. கூட்டணி தலைவரான கருணாநிதி இதனை கண்டிப்பார் என்று எதிர்பார்த்த முஸ்லிம் லீக் கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவை, பொதுச் செயலாளர் அப்துல் லத்தீப் ஏற்கவில்லை. இதுவே கட்சியின் பிளவிற்கு காரணமாக அமைந்தது).
1991 தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக்கிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து 18 தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
பாபரி பள்ளிவாசல் இடிப்பை தொடர்ந்து கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியை விட்டும் வெளியேற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் இப்ராஹிம் சுலைமான் சேட் வலியுறுத்தினார். ஆனால், அவரின் கோரிக்கை ஏற்கப்படாததால் கட்சியில் இருந்து விலகி தேசிய லீக் என்ற புதிய கட்சியை தொடங்கினார்;. தமிழ்நாட்டில் கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்ட அப்துல் லத்தீப், தேசிய லீக்கிற்கு ஆதரவாக இருந்ததால் மீண்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
1996 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் தோல்வியை தழுவிய நிலையில், திமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய லீக் வெற்றி பெற்றது. 2001 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் முஸ்லிம் லீக், தேசிய லீக் ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் தலா ஒரு இடத்தில் போட்டியிட்டன. இதில் முஸ்லிம் லீக் தோல்வியடைந்த நிலையில், தேசிய லீக் வெற்றி பெற்றது. வாணியம்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற அப்துல் லத்தீப் ஆறு மாதங்களில் மரணம் அடைந்தார். அத்துடன் தேசிய லீக் கட்சியும் தமிழ்நாடு அரசியலில் இருந்து மறைந்தது.
2006 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 2011 மற்றும் 2021இல் திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளிலும் போட்டியிட்ட முஸ்லிம் லீக் தோல்வியை தழுவியது. 2016இல் திமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை பெற்ற போதும் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.
திமுக, அதிமுக, காங்கிரஸ் என மாறி மாறி கூட்டணி அமைத்த முஸ்லிம் லீக், திமுக கூட்டணியில்தான் அதிக இடங்களை பெற்றதை காண முடிகிறது. 1971இல் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த அக்கட்சி தற்போது இரண்டு தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் நிலையை அடைந்துள்ளது. 1989 தேர்தலுக்குப் பிறகு 2006 மற்றும் 2016 சட்டமன்றங்களில் மட்டுமே அக்கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
ஜமாத் ஆதரவு மீது மட்டும் நம்பிக்கை கொண்டு இனி வரும் காலங்களில் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அக்கட்சியினர் உணர வேண்டும். கடந்த நூற்றாண்டின் இறுதியில் தமிழ் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட எழுச்சியும் புதிய அரசியல் கட்சிகளின் வருகையும் முஸ்லிம் லீக்கிற்கு பெரும் சவாலாக உள்ளன. சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக அடையாளப்படுத்திய போதும் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டதும் முஸ்லிம்; சிறைவாசிகள், சட்டவிரோத கைதுகள் போன்ற சமூகத்தின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் உரிய கவனம் கொடுத்து செயல்படாததும் கள அரசியலில் ஈடுபடாததும் அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணங்களாக அமைந்தன.
2009 பிப்ரவரி மாதம் மனிதநேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சி தமிழ்நாடு முஸ்லிம் அரசியலில் உதயமானது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற சமூக அமைப்பை அடித்தளமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி, மாற்று அரசியலுக்கான புரட்சி என்ற அடையாளத்துடன் அறிமுகமானது. நாடாளுமன்றத்தில் ஒற்றை தொகுதி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று அறிமுக கூட்டத்தில் அறிவித்த போதும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே அக்கட்சி தனித்து போட்டியிட்டது. அத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்த மமக, தேர்தல் அரசியல் யதார்த்தத்தை விரைவாக உணர்ந்து கொண்டு 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்டது. இரட்டை மெழுகுவர்த்தி தனி சின்னத்தில் போட்டியிட்ட இக்கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக தேர்தல் களம் கண்ட முஸ்லிம் லீக், 2016 சட்டமன்ற தேர்தலில்தான் தனி சின்னத்தில் (ஏணி) நின்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 2014 நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.
அதிமுக கூட்டணியில் இருந்து விரைவாகவே திமுகவிற்கு சென்ற இக்கட்சிக்கு 2016 தேர்தலில் திமுக ஐந்து தொகுதிகளை ஒதுக்கியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அதில் ஒரு தொகுதியை திரும்ப ஒப்படைத்த இக்கட்சி கப் அண்ட் சாசர் சின்னத்தில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி எதற்காக ஒரு தொகுதியை மீண்டும் ஒப்படைத்தது என்ற கேள்வி அப்போது எழுந்தது. அதன் பின் தனி சின்னத்தை கைவிட்ட இக்கட்சி, 2021இல் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலிலும் இரண்டு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் இக்கட்சி களம் காண்கிறது.
சமூக ஜனநாயக கொள்கையை முன்வைத்து சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சியை மையமாக வைத்து தேசிய அளவில் ஜூன் 2009இல் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா உதயமானது. சமூக களத்தில் பயணித்த அதன் தலைவர்களின் அனுபவமும் கள அரசியலும் இக்கட்சியின் முக்கிய பலங்களாக பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தல் அரசியலில் இக்கட்சி இதுவரை வெற்றி எதையும் அடையாதது மிகப்பெரும் குறையாகவே இருந்து வருகிறது. 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் முறையே ஐந்து மற்றும் 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட இக்கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
ஆனால், 2016 தேர்தலில் சில தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தோல்விக்கு இக்கட்சி பெற்ற வாக்குகள் காரணமாக இருந்தன. அத்தேர்தலில், ஒரு தொகுதியை மட்டும் திமுக வழங்குவதற்கு முன் வந்ததால் அக்கூட்டணியில் எஸ்டிபிஐ இடம் பெறவில்லை. பின்னர், அதிமுக இக்கட்சிக்கு மூன்று தொகுதிகளை கொடுக்க முன்வந்த போதும், அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்சி விரும்பாததால் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
2021 சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இக்கட்சி, ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. நேர்மறை அரசியல் சித்தாந்தத்தை முன்வைத்து களம் கண்ட இக்கட்சி, தனி சின்னத்தில் போட்டியிடுவதில் பிடிவாதமாக இருந்த போதும் கள யதார்த்தமும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியும் இக்கட்சியையும் திமுக கூட்டணிக்கு கொண்டு சென்றுள்ளன.
2011 மற்றும் 2026 தேர்தல் முடிவுகளை தவிர ஏனைய தேர்தல்களில் இக்கட்சி எடுத்த முடிவுகள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன. குறிப்பாக, 2014ற்கு பிறகு, ‘பாஜக வந்துவிடும்’ என்ற பிரச்சாரம் இக்கட்சிக்கு எதிராக கடுமையாக மேற்கொள்ளப்பட்டது. திமுகவில் உள்ள முஸ்லிம்களே இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டனர். வலுவான தொண்டர் கட்டமைப்பும் கள அரசியலும் உள்ள போதும் தேர்தல் அரசியலில் இக்கட்சியால் இதுவரை வெற்றிகளை பெற இயலாத நிலையில் தற்போது முக்கிய திராவிட கட்சியுடன் கரம் கோர்த்துள்ளது.
மமகவில் பொதுச் செயலாளராக இருந்த தமீமுன் அன்சாரி, 2015இல் அக்கட்சியில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கினார். 2016இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. தமீமுன் அன்சாரி 2026 தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடும் நிலையில், அன்சாரியுடன் மமகவை விட்டு வெளியே வந்த ஹாரூன் ரஷீத், தமிழக வெற்றிக் கழக சின்னத்தில் களம் காண்கிறார்.
சவால்களும் வாய்ப்புகளும்
முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அவசியப்படும் இன்றைய சூழலில், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் உள்ள அதே சவால்களை தமிழ்நாடு முஸ்லிம்களும் எதிர்கொள்கின்றனர். இந்;தியாவின் தேர்தல் முறை, முஸ்லிம்களுக்கு பாதகமான தொகுதி சீரமைப்பு, அட்டவணை சாதியினருக்கு ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளில் முஸ்லிம்கள் போட்டியிட இயலாதது ஆகியவை இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் குறைவான பிரதிநிதித்துவத்திற்கு காரணமாக உள்ளது.
பாஜகவின் வளர்ச்சியும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதை காண முடிகிறது. முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினால் இந்து வாக்காளர்களின் வாக்குகள் கிடைக்காது என்ற பாஜகவின் பிரச்சாரத்திற்கு மதச்சார்பற்ற கட்சிகளும் பலியாகி வருகின்றனர். ஆனால், இவற்றை கடந்து மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் நியாயமான எண்ணிக்கையில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்கள் வெற்றிக்கு முயற்சிகளை மேற்கொண்டால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுகவை விட அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்களுக்கு திமுக வாய்ப்பு வழங்கிய போதும் சில சந்தர்ப்பங்களை தவிர்த்துவிட்டு ஏனைய தேர்தல்களில் அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அந்த எண்ணிக்கை அமையவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மக்களவை தேர்தலை ஒப்பிடும் போதும் சட்டமன்ற தேர்தலில் திமுக சற்று நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட்டுள்ளது. ஆனால், வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளை கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்குவது, கூட்டணி கட்சியினர் வெற்றிக்கு திமுகவினர் உரிய கவனம் செலுத்துவதில்லை ஆகிய குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் எல்லா தேர்தல்களிலும் முன்வைக்கப்படுகிறது.
திராவிட சித்தாந்தத்தையும் சமூக நீதி கொள்கையையும் உயர்த்திப் பிடிக்கும் திமுக, முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் உரிய கவனத்தை செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம்களிடம் உள்ளது. 1997 கோவை கலவரம், பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது ஆகிய சூழல்களை தவிர்த்து முஸ்லிம்கள் பெரும்பாலும் திமுகவிற்கே வாக்களித்து வருகின்றனர். (பாஜக கூட்டணி அல்லாத தேர்தல்களில் அதிமுகவும் கணிசமான முஸ்லிம் வாக்குகளை பெற்றுள்ள போதும் திமுக பெற்ற வாக்குகளை விட அது குறைவாகும்). தமிழ்நாடு முஸ்லிம்களின் மொழி, பண்பாடு, பொருளாதார நலன்கள் ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ள போதும் அவர்களின் பெரும்பான்மை ஆதரவு திமுகவிற்கே இருந்துள்ளது. எனவே, அவர்களுக்கான உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டியது அக்கட்சியின் கடமையாகும்.
முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்திற்கான கோரிக்கையை வகுப்புவாதமாக சித்தரித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையைத்தான் முஸ்லிம்கள் முன்வைக்கிறார்களே அல்லாமல், அவர்கள் புதிதாக எதையும் கேட்கவில்லை. வேகமாக மாறி வரும் அரசியல் சூழலில், தங்களின் இருப்பை தக்க வைத்து, தங்களின் நலன்களை பாதுகாக்க முயற்சி செய்யும் ஒரு சிறுபான்மை சமூகத்தின் நியாயமான கோரிக்கையாகவே அரசியல் கட்சிகள் இதனை நோக்க வேண்டும்.
முக்கிய அரசியல் கட்சிகளில் ஆளுமை மிக்க முஸ்லிம் தலைவர்கள் இல்லாதது இன்று மிகப்பெரும் குறையாக உள்ளது. மக்களுடன் தொடர்பில் உள்ள, மக்களின் பிரச்சனைகளை அறிந்த தலைவர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்க வேண்டிய கடமையும் அவசியமும் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. இல்லையென்றால் முஸ்லிம் சமூகத்துடனான தொடர்பை அவர்கள் இழக்கும் அபாயம் உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளிலும் உள்ள முஸ்லிம் தலைவர்களை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் இன்று தமிழ்நாடு அரசியலில் முக்கிய இடத்தை பெறத் தொடங்கியுள்ளன. முஸ்லிம் கட்சிகளின் வலிமையை முக்கிய அரசியல் கட்சிகள் நன்றாகவே உணர்ந்துள்ளன. ஆனால், அதே சமயம் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல்வேறு நெருக்கடிகளையும் சந்தித்து வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய கட்சிகளுடன் கொண்டுள்ள தொடர் கூட்டணி காரணமாக, இக்கட்சிகளின் வலிமை குன்றியதற்கு முஸ்லிம் லீக் நல்லதொரு உதாரணமாகும்.
அதே போன்று, பிரதான கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் இக்கட்சிகளின் தனித்தன்மையை அழிக்கும் அபாயம் உள்ளது. நியாயமான கோரிக்கைகளையும் இலக்குகளையும் முன்வைத்து தோன்றிய இக்கட்சிகள் முக்கிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடும் போதும் அவற்றின் நோக்கமே சிதைந்து விடுகிறது. திமுக, அதிமுக சின்னங்களில் போட்டியிட்ட மமக, மஜக போன்ற கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும் அபாயமும் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் இத்தகைய சிக்கல்களை கவனமாக கையாள வேண்டிய அவசியம் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது.
அரசியல் வாய்ப்புகளை முஸ்லிம் கட்சிகள் சரியாக கண்டறிந்து காய்களை நகர்த்த வேண்டும். ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத தமிழ்நாடு அரசியல் சூழலை அனைத்து தரப்பினரும் எவ்வாறு பயன்படுத்துவது என்று திட்டமிட்டு செயல்பட்ட போது, அந்த வாய்ப்பை தவறவிட்ட ஒரே சமூகமாக முஸ்லிம் சமூகம் மட்டுமே இருந்தது.
அதிமுக – பாஜக கூட்டணி, தவெக-வின் தெளிவற்ற அரசியல் காரணமாக, ஒட்டுமொத்த முக்கிய முஸ்லிம் கட்சிகளும் திமுக பக்கம் ஒதுங்கியுள்ளது சில பாதகமான அம்சங்களையும் கொண்டுள்ளதை மறுக்க முடியாது. திமுக மீண்டும் ஆட்சியில் அமரும் போது, அக்கட்சியின் குறைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்ய முடியாத நிலை இக்கட்சிகளுக்கு ஏற்படும். ஆனால், அதே சமயம் ஆட்சி அதிகாரத்தின் துணையை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதில் இக்கட்சிகள் முனைப்பு காட்டலாம்.
முஸ்லிம்களின் நலன் குறித்து இரு திராவிட கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் முக்கியமாக எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், முஸ்லிம் கட்சிகளின் கடமை அதிகமாகவே உள்ளது. வழக்கமான, பாரம்பரிய கோரிக்கைளில் இருந்து விலகி சமூக மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகை செய்யும் கோரிக்கைகளை முன்வைத்து பெற்றுக் கொடுக்க வேண்டும். முஸ்லிம் வாக்குகள் இலவச வாக்குகளாக மாறிவிடக் கூடாது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த அதே நிலையில்தான் தற்போதைய தமிழ்நாடு முஸ்லிம்களின் அரசியல் நிலை உள்ளது. குறைவான, வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளை கொண்டுள்ள தமிழ் முஸ்லிம் சமூகம் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு மிக கவனமாக பயணிக்க வேண்டியது அவசியமாகும். தமிழ் முஸ்லிம் சமூகத்தின் இந்த நிலையை வேறு எந்த சமூகத்துடனும் ஒப்பிட முடியாது. தனித்துவமான இந்த விவகாரத்தை முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் சிந்தனையாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் முறையாக கையாண்டால் அரசியல் அதிகாரம் என்பது எட்டாக் கனி அல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் இதில் மிகப்பெரும் பொறுப்பு உள்ளது.
References:
How best do we survive?, A Modern Political History of the Tamil Muslims, Kenneth, McPherson, Routledge Publication
ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை – அரசியலில் ஓரங்கட்டப்படும் முஸ்லிம்கள், அப்துர் றஹ்மான், சீர்மை வெளியீடு
தமிழக – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1948 – 2024), சேயன் இப்ராகிம், நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்

