வரலாற்றுத் துளிகள் – மதாயீன் நகரப் புகார்
![]()
ஹிஜ்ரி 573 – கி.பி. 1177-1178. அது சிலுவைப் போர்களின் காலம். அப்பாஸிய கிலாஃபத் ஆட்சி நடைபெற்று வந்தது. பக்தாத் அதன் தலைநகரம். கலீஃபாவாக வீற்றிருந்தவர் அல்முஸ்ததி பிஅம்ரில்லாஹ்.
ஒருநாள் மதாயீன் நகரைச் சேர்ந்த முஸ்லிம்களின் குழு ஒன்று பெரும் குறை ஒன்றைச் சுமந்து, வேகவேகமாக பக்தாத்திற்கு வந்தது. மதாயீன்-பக்தாத் நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் சற்றொப்ப ஆயிரம் கிலோ மீட்டர். ஆனால் மெனக்கெட்டு, சிரமப்பட்டு, அத்தனை தூரம் பயணப்பட்டு வந்திருந்தது அக்குழு. கலீஃபாவைச் சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.
என்ன புகார்? யூதர்களின் அராஜகம் குறித்த புகார்!
‘மதாயீன் நகரில் நாங்கள் எங்களது மஸ்ஜிதில் ஐவேளையும் முறைப்படி தொழுகைக்கான அழைப்பு (அதான்) விடுக்கிறோம். தொழுகையை நிறைவேற்றுகிறோம். எங்கள் மஸ்ஜிதிற்கு அண்மையில் யூதர்களின் ஆலயம் உள்ளது. அந்த யூதர்கள், ‘நீங்கள் அடிக்கடி தொழுகைக்கு அழைப்பு விடுத்து எங்களுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்’ என்று வம்பு செய்தார்கள். அதற்கு எங்கள் முஅத்தின், அவர்களை எதிர்த்துப் பதிலளித்தார். அதையடுத்து அவர்கள் தகராறு செய்து, கைகலப்பு ஏற்பட்டு, அவர்களது தாக்குதலால் நாங்கள் பாதிப்படைந்தோம்’ என்பது புகார்.
பக்தாத் நிர்வாகத்தின் தலைவர்களுள் ஒருவர் இப்னு அல்-அத்தார். அவர் என்ன விசாரித்தார், எப்படிப் புரிந்துகொண்டார் எனத் தெரியவில்லை; பாதிப்புக்கு உள்ளாகி, புகாரளிக்க வந்த அந்த முஸ்லிம்களைச் சிறையில் அடைத்துவிட்டார். பின்னர் சில நாள்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். வெறுத்து விரக்தியடைந்திருந்த அந்த முஸ்லிம்கள், அரண்மனை வளாகத்திற்குரிய மஸ்ஜிதுக்குச் சென்றார்கள். அன்று வெள்ளிக்கிழமை. ஜும்ஆ தொழுகையின் சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் தங்களது புகாரையும் புகாரளிக்க வந்த தங்களுக்கு பக்தாதில் நேர்ந்ததையும் உரத்துக் கூறி கதறினர். அந்த குறுக்கீடுகளைக் கண்ட இமாம் தமது குத்பாவையும் தொழுகையையும் சுருக்கமாக நிறைவேற்றி முடித்தார்.
தொழுகை முடிந்த பின், பாதிப்புக்கு உள்ளாகியிருந்த மதாயீன் முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் தங்களது புகாரைக் கூறி எதிர்ப்புக் குரல் எழுப்ப, காவலர் படைப்பிரிவு வந்து சேர்ந்தது. அவர்களைத் தடுத்தது. அத்தனையையும் அதுவரை வேடிக்கைப் பார்த்தபடி இருந்த பக்தாத் நகரின் முஸ்லிம்களுக்கு மதாயீன் நகரின் முஸ்லிம் சகோதரர்கள் நடத்தப்பட்ட விதத்தைக் கண்டு ஆத்திரம் பொத்துக்கொண்டது. இஸ்லாத்தையும் அந்த முஸ்லிம்களையும் ஆதரித்து முழங்கி, உத்வேகத்துடன் கூக்குரலுடன் காவலர்களை எதிர்த்துத் திட்டி, எதிர்ப்பை தெரிவித்தார்கள். ஓடுகளைப் பிடுங்கி எடுத்து, காவல் படையினர் மீது வீசி எறிந்து தாக்கினார்கள். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியுமோ? தப்பிப் பிழைத்து ஓடியது காவலர் படை.
பக்தாதில் மருத்துவர்களின் கடை வரிசை ஒன்று இருந்தது. அவர்களுள் பெரும்பாலோர் யூதர்கள். தங்களுக்கு இருந்த கோபத்தில் அங்கு புகுந்து அந்தக் கடைகளைத் தாக்கி அவற்றைச் சூறையாடினார்கள் ஊர் மக்கள். அரண்மனை அதிகாரி அவர்களைத் தடுக்க முயன்றார், அவர் மீது கற்கள் பறந்தன. அதனால் அவரும் அங்கிருந்து ஓடினார். அடுத்து அங்கிருந்த யூதர்களின் ஆலயத்தையும் அவர்கள் தாக்க, தப்பி ஓடித் தலைமறைவானார்கள் யூதர்கள். கலவர பூமியானது பக்தாத்.
அந்தளவு நிலைமை மோசமான பிறகே கலீஃபாவுக்குத் தகவல் சென்று சேர்ந்தது. அதன் பிறகே அவர் புகாரை விசாரித்தார். நடவடிக்கை எடுத்தார்.
(Source: The Chronicle of Ibn al-Athir for the Crusading Period from al-Kamil fi’l-Ta’rikh. Part 2, Translated by D.S. Richards)

