குறும்பதிவுகள் 

மால்கம் எக்ஸ்: கண்டெடுக்கப்பட்ட புதிய பக்கங்கள்

Loading

மால்கம் எக்ஸைப் புரிந்துகொள்வதற்கு முதன்மை மூலாதாரமாக இன்றுவரை இருப்பது அவருடைய தன்வரலாறுதான். மால்கம் எக்ஸ் சொல்லச் சொல்ல அலெக்ஸ் ஹேலி எழுதித் தொகுத்த நூல் அது. அதன் இறுதி வடிவத்தைப் பார்ப்பதற்கு முன்பே மால்கம் எக்ஸ் சுடப்பட்டு ஷஹீதாகிவிட்டார்.

கறுப்பினச் சேரியில் பிறந்த மால்கம் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதையும், கறுப்பின விடுதலைக்காகப் பாடுபட்டு வந்த நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு அவர்களோடு இணைந்ததையும், தனது கூர்மையான புத்தியாலும் அதை விடக் கூர்மையான சொல்வீச்சினாலும் அதிவிரைவில் ‘கறுப்பின விடுதலை நாயகனாக’ மாறியதையும், பிறகு அநியாயமாகக் குற்றம்சாட்டப்பட்டு அமைப்பிலிருந்து தூக்கியெறியப்பட்டதையும், இறுதியில் ஹஜ் பயணம் சென்று திரும்பி புதிய அரசியல் முன்னெடுப்புகளைத் தொடங்கியதையும் ஹேலி எழுதிய நூல் மிக வசீகரமாக எடுத்துரைத்துள்ளதை அதை வாசித்த எவரும் மறுக்க முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், மால்கம் எக்ஸ் எனும் மாமனிதனின் அபாரமான பரிணாம வளர்ச்சியை வெற்றிகரமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது அந்நூல்.

ஆனால், சமீபத்தில் சில கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளன. தற்போதைய தன்வரலாற்று நூலில் இடம்பெறாத பலவும் அதில் உள்ளன. நூலின் கட்டமைப்பையுமே கூட மால்கம் எக்ஸ் முற்றிலும் வேறுவிதமாகத் திட்டமிருந்தது இவற்றின் வழி தெரியவந்துள்ளது. தன் வாழ்க்கைப் பரிணாமத்தை வெறும் மூன்று அத்தியாயங்களில் சுருக்கிக் கொண்டு, எஞ்சிய அத்தியாயங்களில் கறுப்பின மக்களின் விடுதலைக்கான போராட்ட வரலாற்றை உரை (speech) வடிவிலான அத்தியாயங்களாக அமைக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார் மால்கம். திட்டப்படி காரியங்கள் சென்றிருந்தால், சில அத்தியாயத் தலைப்புகள் இவ்வாறு அமைந்திருக்கும்:

“The Liberal”
“The Brutal Police”
“The Farce on Washington”
“The Potential Twenty Million Muslims in America”
“Questions I Get Asked”
“What We Muslims Want. . . What We Believe”

அசல் திட்டப்படி வந்திருந்தால், அவரின் தன்வரலாற்று நூல் வெறுமனேயொரு அசாதாரணமான மனிதரின் அபாரமான வாழ்க்கை வரலாறு என்று ஆகிவிடாமல் மால்கம் எக்ஸை அவரின் சூழமைவுக்குள் இன்னும் சரியாகப் பொருத்திப் பார்ப்பதற்கான ஓர் ஆவணமாக ஆகியிருந்திருக்கும் எனத் தெரிகிறது.

அனைத்திலும் முக்கியமாக, “The Negro” என்ற வெளியிடப்படாத 25 பக்க அத்தியாயத்தின் கையெழுத்துப் பிரதியும் இப்போது கிடைத்துள்ளது. அதை நுணுக்கமாகக் கட்டுடைத்து Garrett Felber “The Missing Malcolm X” என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். வாசித்துப் பாருங்கள்.

Related posts

Leave a Comment