கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்?

Loading

அண்மையில் தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட மூவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து —25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை— மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு, பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்த ஆயுள் சிறைவாசிகளை விடுவிப்பதற்கான விதிமுறைகளைக் கொண்ட அரசாணையின் அடிப்படையில் சுமார் 1500 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தமிழக அரசு அறிவித்தது.

ஆயுள் சிறைவாசிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படுவது பொதுச்சமூகத்திற்கு வேண்டுமானால் சாதாரண செய்தி. ஆனால், எப்போது விடுதலை கிடைக்கும் என்று தெரியாமல் அதீத மன உளைச்சலோடும், தீவிர உடல் உபாதைகளோடும் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் உழலும் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கும் அவர்களுக்காகப் போராடும் மனித உரிமையாளர்களுக்கும் அது – அநீதியின் மையிருட்டில் தென்படும் நீதியின் சிறு ஒளிக்கீற்று.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை சுமார் இருநூறு பேர் தவணை முறையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதில் மூவர் மட்டுமே முஸ்லிம்கள். அரசாணைப்படி பத்தாண்டுக்கால வரையறையைக் கணக்கில் கொண்டால், சிறையில் வாடும் சுமார் 50 முஸ்லிம் ஆயுள் கைதிகளில் அத்தனை பேருமே முன் விடுதலைக்குத் தகுதியானவர்களே! இவர்களில் பலரும் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் தவிக்கின்றனர். ஆனால், பிற கைதிகளுக்குக் கிடைக்கும் பொதுமன்னிப்பு எனும் அரச கருணை முஸ்லிம்களுக்கு மட்டும் கிடைப்பதில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக, தமிழகத்திலேயே அதிக ஆண்டுகாலம் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைவாசி பாபு. 24 ஆண்டுகளாகச் சிறையில் அடைந்துகிடக்கும் இவர், இந்த `பரோல்’ வருகையின்போதுதான் கோவை உக்கடம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். 21.07.2018-லிருந்து 10 நாள்களுக்கு தனது வீட்டில் தங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

1997-ம் ஆண்டு காவலர் செல்வராஜ் கொலை, அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட கோயம்புத்தூர் கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்த சூழல், இதன் தொடர்ச்சியாக அந்நகரில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த வழக்கு விசாரணைக்காகத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 1998-ல் கைதானார் பாபு. 2007-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது பாபு மீதான பயங்கரவாத வழக்குகளிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஆனால், ஏற்கெனவே பழைய கொலை வழக்கு ஒன்றில் 302-வது பிரிவில் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மிச்சமிருந்தது. இப்போது வரை அதுதான் அவரது ஆயுளை வதைத்துக்கொண்டி ருக்கிறது.

“முஸ்லிம்கள்மீது தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்துவதே இது போன்ற வழக்குகளின் நோக்கம். குண்டுவெடிப்பு நடந்தவுடனேயே முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து காவல்துறை தாக்குதல் நடத்தி, பலரையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்ததை மதுரை ஆய்வில் கண்டறிந்தோம். வெடிகுண்டு என்ற சொல் பொதுச்சமூகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. நாங்கள் ஆய்வு செய்த வழக்குகளில் பயன்படுத்தப்பட்டவை வெறும் பட்டாசு வெடிகுண்டுகளே! இதைக் காவல்துறையினரே எங்களுக்கு வாக்குமூலமாக அளித்துள்ளனர். ஆனால், அவற்றைக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களாகக் காவல்துறை சித்திரித்தது. காவலர்கள் பதவி உயர்வு மற்றும் பரிசுகள் பெறுவதற்காக இப்படியான வழக்குகளைப் புனையும் கொடுமையும் நடக்கிறது’’ என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ்.

நிலைமை இப்படி இருக்கையில், இந்தச் சட்டப் பிரிவுகளையே காரணமாக்கி முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளுக்கு ஒவ்வொரு முறையும் பொதுமன்னிப்பு மறுக்கப்பட்டுவருகிறது. ‘ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்குப் பொது மன்னிப்பில் பாரபட்சம் காட்டக்கூடாது’ என 2005-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளதை மனித உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பயங்கரவாதம் மற்றும் வெடிமருந்து மட்டுமல்ல, சாதாரண சட்டப்பிரிவுகளில் தண்டனை பெற்ற முஸ்லிம்களையும்கூட நிரந்தரக் கைதிகளாக வைத்திருக்கும் வகையிலேயே நமது நீதி அமைப்பு இயங்குகிறது.

பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை —இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே— மனித உரிமை மற்றும் முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தின. இந்திய நீதி அமைப்பு முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது என்பதை 2005-ம் ஆண்டு முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தது. பொது மன்னிப்பு மட்டுமல்ல, பொதுவாக சிறைக் கைதிகள் பெறும் எந்த உரிமைகளையும் முஸ்லிம் கைதிகள் பெற முடிவதில்லை.

ஆயுள் தண்டனை அல்லது பல ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து தண்டனை நிறுத்தம் பெற்றுப் பிணையில் விடுதலையாகும் உரிமையை சட்டம் வழங்குகிறது. ஆனால், அந்த உரிமை இதுவரையிலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை.

“நான் அவரைக் கல்யாணம் செஞ்சப்ப எனக்கு 17 வயசு. ஒன்பது மாசக் கருவை நான் சுமந்திட்டிருக்கும்போது, `நான் இனிமேல் வர முடியுமான்னு தெரியல’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். அந்த வேதனையை வார்த்தையால விவரிக்க முடியாது. கலெக்டர் ஆபீஸ், நீதிமன்றம், சில அமைப்புகள்னு கைகாட்டுற இடத்துக்கெல்லாம் உதவி கேட்டு ஓடினேன். அவரு எந்தச் சிறையில இருக்காருன்னு தெரிஞ்சுக்கவே ரொம்ப நாளாச்சு. ஆனா அவர் பரோல்ல வரவே பத்து வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. மகன் பிறந்து 16 வருஷம் கழிச்சு 2014-ல் சுமைனா பிறந்தா. பிணை, விடுதலைக்கெல்லாம் நாங்க ஆசைப்படக் கூடாது. ஏன்னா, நாங்க இந்தச் சமூகத்துல ஒதுக்கப்பட்டவங்க’’ என்கிறார் பாபுவின் மனைவி ஜாஸ்மின்.

தமிழகத்தின் மத்தியச் சிறைகளில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நீண்ட கால சிறைவாசத்தை அனுபவிப்பது —ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளுக்கு அடுத்தபடியாக— முஸ்லிம்களே! இளவயதில் கைதாகி ஒட்டுமொத்த இளமையையும் வாழ்வையும் தொலைத்தவர்களாக அல்லலுறுகின்றனர். பிணையில்கூட வெளிவராமல் அவர்கள் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டுச் செத்துமடியும் கொடுமையும் நிகழ்கிறது.

கடந்த மார்ச் மாதம் கோவை மத்தியச் சிறையில் இருந்த ரிஸ்வான் பாஷா 41 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். 20 ஆண்டுகால ஆயுள் தண்டனையில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் பரோலில் வந்து அவர் திருமணம் முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஸ்வானுக்கு முன்னர் முகமது ஒஜீர், சபூர் ரஹ்மான் உள்ளிட்ட சில முஸ்லிம் கைதிகள் சிறையிலேயே உயிரை விட்டுள்ளனர். நோய்வாய்ப்பட்ட ஆயுள் சிறைவாசிகளுக்கும் விசாரணைக் கைதிகளுக்கும் பிணையில் வெளிவர சட்டப்படி உரிமை உள்ளது. ஆனால் பெரும்பாலும் அது நடப்பதில்லை.

முஸ்லிம் கைதிகள் விடுதலைக்காகக் குரல் கொடுப்போர் கோவை அபுதாஹீர் உடல்நிலை குறித்து மிகுந்த வேதனையோடு கவனிக்கின்றனர். உடல் உள்ளுறுப்புகள் சிதையும் நோயால், கடந்த 2006-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட அபுதாஹீருக்கு இப்போது 40 வயது. இருபதாண்டுகளுக்கு முன்னர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் பயங்கரவாத வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது 302-வது பிரிவில் ஒரு கொலைக் குற்றவாளியாகச் சிறையில் இருக்கிறார். உயிர்க்கொல்லி நோயால் அவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன. இதயத் துடிப்பு சீராக இல்லை. கைகால்கள், முகம் மற்றும் வயிற்றுப்பகுதி வீங்கிப்போயு ள்ளன. மருத்துவ அறிக்கை யின்படி அவர் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக்கொண்டிருக்கிறார்.

ஆயுள் தண்டனைக்கு எது அளவு என்பது தொடர்ச்சியான விவாதமாகவே இருந்து வருகிறது. குற்றத்தின் தன்மையைப் பொறுத்தோ அல்லது அவர்கள் சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியின் அடிப்படையிலோ ஆயுள் தண்டனைக்கான கால வரையறை மாறுபடுகிறது. ஏழு ஆண்டுகளில் விடுவிக்கப்படுவோரும் உண்டு; கால் நூற்றாண்டுக் காலம் கடந்து வதைபடுவோரும் உண்டு. ஆனால், விடுவிக்கப்படுவோர் யார், வதைக்கப்படுவோர் யார் என்பதில்தான் பிரச்னை எழுகிறது.

ஒருவரின் தண்டனையை மரணம்தான் முடித்து வைக்குமெனில், அதையும் மரண தண்டனை என்றுதான் அழைக்க முடியும். நீண்ட காலச் சிறைக்கொட்டடியில் —நொடிக்கு நொடி— மரண தண்டனையை அனுபவிக்கின்றனர் முஸ்லிம் ஆயுள் கைதிகள். நீதியின் அழகே அதில் நிலைநாட்டப்படும் சமத்துவத்தில்தான் அடங்கியிருக்கிறது. அதிலும் இந்தியா போன்றதொரு ஜனநாயக நாட்டில் நீதியில் பாரபட்சம் என்பது அதன் நிழலிலும்கூட இருக்கக்கூடாது. முன் விடுதலைக்குத் தகுதியானோர் பட்டியலில் உள்ள 1500 பேரில் மேலதிகமான ஆண்டுகள் சிறைவாசத்தை முடித்த முஸ்லிம் கைதிகளையும் இணைத்து, தமிழக அரசு இம்முறையாவது விடுவிப்பதே நீதியின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றும்.

(நன்றி: ஆனந்த விகடன் )

(ஓவியம்: பிரேம் டாவின்ஸி)

Related posts

Leave a Comment