mappila rebellion tamilநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் (நூல் அறிமுகம்)

Loading

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரான கான்ட்ராட் உட் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காகத் திரட்டிய தகவலின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கேரளாவின் மலபார் பிரதேசத்தில் 1836-1919க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் உயர்சாதி நிலச்சுவான்தார்களையும் எதிர்த்து மாப்ளா முஸ்லிம்கள் மேற்கொண்ட 29 தாக்குதல்களை முதல் அத்தியாயம் ஆய்வு செய்கிறது. அந்தக் காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றபோதிலும் இந்தக் குறிப்பிட்ட 29 நிகழ்வுகளில்தான் அவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அதனால் நூலாசிரியர் இவற்றை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார்.

அவற்றில் கொல்லப்பட்டவர்கள் மொத்தம் 82 பேர். அதில் பார்ப்பனர்கள் 29 பேர். மற்றவர்கள் அவர்களின் உறவினர்களாகவும், அவர்களிடம் வேலை செய்த பிற சாதியினராகவும் இருந்தனர். இவர்கள் அனைவரும் நிலப்பிரபுக்களாக அல்லது நிலப்பிரபுக்களின் இடைத்தரகர்களாக இருந்தனர். ஆங்கிலேயர்கள், நிலப்பிரபுக்கள், இடைத்தரகர்கள் ஆகியோரால் கடுமையாகச் சுரண்டப்பட்ட ஏழை குத்தகை விவசாயிகள்தான் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். குத்தகைக் காலம் முடியும் முன்பே நிலத்திலிருந்து வெளியேற்றுவது, குத்தகைக் கட்டணத்தை உயர்த்துவது ஆகியவையே இதில் பிரதானப் பிரச்னைகளாக இருந்தன. இதில் நிலப்பிரபுக்களே மிக முக்கியப் பங்கு வகித்தனர்.

இது ஒரு வர்க்கப் போராட்டம் என்றபோதிலும், இந்து என்ற வகைமைக்குள் உள்ளடக்கப்பட்ட பல்வேறு சாதியினர் நிலப்பிரபுக்களின் அடக்குமுறையைச் சகித்துக் கொண்டபோது, முஸ்லிம்கள் மட்டும் கிளர்ந்தெழுந்தது ஏன்? அதற்கு ஒரே காரணம் இஸ்லாம் மட்டுமே. அதுதான் ஒன்றிணைவதற்கும் (எ.கா. பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்றுகூடுவது) போராடுவதற்கும் வலிமை கொடுத்தது. ஒருசில தருணங்களில் இந்தக் கிளர்ச்சிகளில் ஆலிம்களும் (மார்க்க அறிஞர்கள்) பங்கேற்றனர். பந்தலூர் மலையைச் சுற்றிலும் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே அனைத்துக் கிளர்ச்சிகளும் நடைபெற்றன. கேரளாவின், குறிப்பாக மலபார் பிரதேசத்தின், நிலவுடமை உறவுகளைக் குறித்து அறிந்துகொள்ள ஒருவர் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.

இரண்டாவது அத்தியாயத்தில் 1800ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற முதல் மாப்ளா கிளர்ச்சி குறித்து விவரிக்கப்படுகிறது. திப்பு சுல்தான் மலபார் பகுதியை ஆட்சி செய்த வரலாறும், அப்போது நிலவுடமை உறவுகளில் அவர் ஏற்படுத்திய முக்கியமான சீர்திருத்தங்களையும் இந்தப் பகுதியில் அறியமுடிகிறது. பெரும்பாலான இந்து நிலப்பிரபுக்களை அவர் மலபார் பகுதியிலிருந்து விரட்டியடித்தார். ஆனால் திப்பு கொல்லப்பட்ட பிறகு மீண்டும் பார்ப்பன நம்பூதிரிகள் மலபார் பிரதேசத்திற்குத் திரும்பி நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். அதற்கு பிரிட்டிஷ் ஆதரவும் இருந்தது. ஏனெனில் பிரிட்டிஷாருக்கு ஒத்துழைக்காத, அடங்க மறுத்த மாப்ளா நிலப்பிரபுக்களைக் காட்டிலும் அவர்களுக்கு அடங்கிப்போன இந்து நிலப்பிரபுக்களே பிரிட்டிஷாருக்கு முக்கியமானவர்களாக இருந்தனர். அதனால் ஆங்கிலேயர்கள் மீது மாப்ளா முஸ்லிம்கள் தீராதப் பகையைக் கொண்டிருந்தனர். அது 1947ல் ஆங்கிலேயர் இங்கிருந்து வெளியேறும்வரை தொடர்ந்தது. மாப்ளா முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக மாப்ளா சட்டம் (Mappila Outrageous Act) கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாக மாப்ளா முஸ்லிம்களின் கோபம் இன்னும் அதிகமானது.

1916வரை காங்கிரஸ் கட்சியால் மலபார் பகுதியில் பெரிய அளவுக்கு செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. மலபார் பகுதியின் முதல் காங்கிரஸ் மாநாடு 1916ம் ஆண்டு அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமையில் நடத்தப்படுகிறது. இதில் (மொத்த பிரதிநிதிகள் 454) ஏழு பணக்கார முஸ்லிம்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். எழுச்சி நடைபெற்ற பகுதிகளிலிருந்து ஒரு முஸ்லிம்கூட கலந்துகொள்ளவில்லை.

குத்தகை விவசாயிகள் மேம்பாட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு நிலப்பிரபுக்கள் அதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ’மேல்சார்த்து குத்தகை’ என்ற புதிய நடைமுறையைப் புகுத்தினர். ஆகவே, குத்தகை விவசாயிக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. முதல் நான்கு மாநாடுகளில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கமே நிலவியது. 1920ம் ஆண்டு நடத்தப்பட்ட ஐந்தாவது காங்கிரஸ் மாநாட்டில்தான் முதல்முறையாக குத்தகைதாரர்கள் பிரச்னை குறித்துப் பேசவும், அதற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றவும் அனுமதிக்கப்பட்டது. அதில் பெருமளவு மாப்ளா விவசாயிகள் கலந்துகொண்டனர்.

சமூக-பொருளாதார விடுதலையைத் தனது கோட்பாடுகளின் அடிப்படையாகக் கொண்டது இஸ்லாம் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மேலும், இந்த மூன்றாவது அத்தியாயம் முதலாம் உலகப்போரில் துருக்கியின் பாத்திரம் குறித்தும், அதற்கும் மாப்ளா முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் ஆய்வு செய்கிறது.

காங்கிரஸ் இயக்கம் தேசிய அளவில் மதச்சார்பின்மை என்ற போர்வையில் வலிமையான தேசிய இயக்கத்தைக் கட்டும் முயற்சியாக ஃகிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியது. ஆனால் இது மலபார் பகுதியின் எரநாடு வட்டாரத்தில் உள்ளூர் மரபைப் பின்பற்றி நிலப்பிரபுக்களுக்கு எதிரான மாப்ளா முஸ்லிம்களின் ஒத்துழையாமைப் போராட்டமாக மாறியது. காங்கிரஸ் தலைவர்கள் ஃகிலாஃபத் இயக்கத்தை முன்னின்று தொடங்கிவைத்தபோதிலும் தவிர்க்க இயலாமல் உள்ளூர் முஸ்லிம் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்ட ஒருசிலர் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக குத்தகை விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கினர். இரண்டும் ஒருங்கிணைந்து உள்ளூர் வடிவத்தை எடுத்தது குறித்தும், 1921ம் ஆண்டு மாப்ளா கிளர்ச்சிக்கு முந்தைய சூழலைப் பற்றியும் அத்தியாயம் நான்கு விவரிக்கிறது. இந்தப் பகுதியில் காங்கிரஸின் அகிம்சைக் கொள்கைகள் எடுபடாமல் போயின. போராட்டத்தின் தலைமை முற்றிலும் காங்கிரஸின் கையை விட்டுச் சென்றது.

இறுதி அத்தியாயத்தில் 1921ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி 1922ம் ஆண்டுவரை நீடித்த புகழ்பெற்ற மாப்ளா கிளர்ச்சி குறித்த ஆய்வு எடுத்துரைக்கப்படுகிறது. கிளர்ச்சியின் தொடக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட விதம், கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்களின் பின்னணி, கிளர்ச்சிக்கான ஆதரவு குறித்த விரிவான ஆய்வை முன்வைக்கிறார் கான்ராட் உட். தெற்கு உட்புற மலபார் பகுதியில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியச் சமூகத்தின் எழுச்சியாகவே 1921-22ல் நடைபெற்ற மாப்ளா கிளர்ச்சி இருந்தது.

மலபார் பகுதியில் நிலவுடமை உறவுகள் எவ்வளவு மோசமாக இருந்தன என்பதை அறிய விரும்பும் ஒருவர் இந்தப் புத்தகத்தைக் கட்டாயமாக வாசிக்க வேண்டும். அந்த நிலவுடமைக்கு எதிரான போராட்டமே இந்த எழுச்சிக்கு வழிவகுத்தது. ஆனால் முஸ்லிம்கள் மட்டுமே எதிர்த்துப் போராடியதற்கு என்ன காரணம்? அதற்குக் காரணம் அவர்களின் மதம்தான். இஸ்லாம்தான் அவர்களுக்கான போராட்ட வீரியத்தை வழங்கியது. இன்று நமக்குக் கிடைத்த அரைகுறை போலிச் சுதந்திரத்திலும்கூட காங்கிரஸைக் காட்டிலும் அதிக உரிமை கொண்டாடும் தகுதி முஸ்லிம்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் உங்களுக்குப் புரிய வைக்கும்.

Related posts

Leave a Comment