law student abdul raheem issueகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அப்துல் ரஹீம் விவகாரமும் காவல்துறை சீர்திருத்தமும் – அ.மார்க்ஸ்

Loading

ஒன்று

சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் மீதான காவல்துறை அத்துமீறல் பெரிய அளவில் இன்று செய்தியாகியுள்ளது. கடும் கண்டனங்கள் நாலாபுறமும் எழுந்துள்ளன. காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். ‘கொலை முயற்சி’ வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக பாதிக்கப்பட்ட மாணவன் ரஹீம் பிரச்சினையை எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. ஊடகங்கள், குறிப்பாக ஜூனியர் விகடன் இதை நல்லமுறையில் அம்பலப்படுத்தியுள்ளது.

பொதுவாக இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லோரும் காவல்துறையைக் கண்டிப்பது, கொஞ்சம் இதுகுறித்துச் சிந்திப்பவர்கள் ”காவல்துறை சீர்திருத்தம் வேண்டும்” என முனகிப்பின் மறந்துபோவது, காவல்துறை வழக்கம்போல கொடூரமான சித்திரவதைகளைத் தொடர்வது என்பது வாடிக்கையாக உள்ளது.

சாத்தான்குளம் கொடுமையை எடுத்துக்கொள்ளுங்கள். என்னென்ன பேசினோம். இன்று அந்த வழக்கு எந்த நிலையிலுள்ளது என யார் அதைப் பின்பற்றிச் சென்று பேசுகிறோம். இன்றைய பாஜக அரசு காவல்துறையை இன்னும் கொடுமையாக்கத்தான் முயற்சிக்குமே ஒழிய அதைச் சீரமைக்கப் போவதில்லை என்கிற எண்ணம் வேறு இன்று எல்லோர் மத்தியிலும் நிலவுகிறது. ஆக, என்ன செய்ய முடியும் எனும் ஒரு அவநம்பிக்கை எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளது.

காவல்துறைச் சீர்திருத்தம் தொடர்பாக இங்கு என்ன நடந்து வருகிறது என்பதுகுறித்து என் நினைவிலுள்ள சில நிகழ்வுகள்:

  1. 2014 தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி காவல்துறைச் சீர்திருத்தம் குறித்துப் பேசியிருந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. வெற்றிபெற்றிருந்தாலும் அது அந்தத் திசையில் நகர்ந்திருக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
  2. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிவேண்டி உறுதியுடன் நின்று போராடினாலும் உடனடியாக நீதி கிடைப்பது கடினம். தொடக்கத்தில் அவர்கள் உறுதியாக நின்றாலும் கடைசிவரை அதைத் தொடரமுடிவதில்லை. நம் குற்ற நடைமுறை தொடர்பான வழமைகளும் இப்படியான அத்துமீறல் பிரச்சினையில் மக்களுக்கு எதிராகவே உள்ளன.

சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

(i) நமது சட்டங்களின்படி குற்றம் சாட்டுபவர்களே குற்றத்தை நிறுவ வேண்டும். காவல்துறை வன்முறைகளில் குற்றம் சாட்டுபவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள். குற்றம் சாட்டப்படுபவர்கள் காவல்துறையினர். எனவே காவல்துறைக்கு எதிராக சாதாரண மக்கள் குற்றத்தை நிறுவ வேண்டும். இது அத்துணை எளிதல்ல. மிக வலுவான ஒரு போராட்டப் பின்னணி இருந்தால் ஒழிய காவல்துறையை எளிய மக்கள் எதிர்கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக, “உயிராபத்து விளைவிக்கத் தக்க காயங்கள்” (Grievous Injuries) என்பதைக்கூடப் பல நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நிறுவ முடியாது. வெளிக்காயங்கள் ஏதும் இல்லாமலேயே அடித்துக் கொல்லும் வித்தை எல்லாம் தெரிந்தவர்கள் நம் காவல்துறையினர். எனவே காவல்நிலைய வன்முறையால் நேர்ந்த கொலை என்பதைப் பொருத்தமட்டில் இந்த Grievous Injuries இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை நீக்கப்படுதல் வேண்டும்.

(ii) காவல் நிலைய மரணம் குறித்த புலனாய்வுகளில் (Custodial Death Investigation) காவல்துறையை எதிர்த்து வழக்காட வேண்டும் என்றால் அதற்கு அரசு ஒப்புதல் வேண்டும். இந்தச் சட்ட நிபந்தனையும் நீக்கப்பட வேண்டும்.

(iii) (அ) சித்திரவதை செய்தவரும், சித்திரவதை செய்யப்பட்டவரும் சாதி, மதம், இனம் என ஏதாவதொன்றில் வேறாக இருக்க வேண்டும்; (ஆ) அச்சுறுத்தல், பாலியல் சகாயம் பெறுதல் ஆகியவற்றுக்காகத் துன்புறுத்தப்பட்டேன் எனவும் ஒருவர் குற்றச்சாட்டுகளை வைக்க முடியாது. ஏனெனில் அதை நிறுவுவது கடினம்; (இ) குற்றம் நடந்து 6 மாதங்களுக்குள் புகார் அளிக்க வேண்டும் – ஆகிய நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.

  1. நீதிபதி அனந்த நாராயண் முல்லா அவர்களின் ஒரு முக்கியத் தீர்ப்பு இங்கே குறிப்பிடத்தக்கது. “எந்த ஒரு கிரிமினல் கும்பலைக் காட்டிலும் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட காவல்துறையே பெரிய கிரிமினல் கும்பல்” என்கிற புகழ்பெற்ற கருத்தை முன்வைத்த நீதியரசர் முல்லா அவர்களின் இவ்வாசகங்களை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. இப்படியான அவரது தீர்ப்பு நேர்மையான போலிஸ்காரர்களின் உற்சாகத்தைக் கெடுத்துவிடும் எனக் கூறி அதைத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக் காவல்துறை முறையீடு செய்தபோது, “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்ல மீனைத் தேடும் முட்டாள் நானல்ல” எனக் கூறி அவர் அந்த மனுவைத் தள்ளுபடி செய்யவும் செய்தார்.

ஏ.என்.முல்லா (1901 -1997) என்றழைக்கப்பட்ட நீதியரசர் அனந்த நாராயண் முல்லா ஒரு காஷ்மீரப் பிராமணர். அது மட்டுமல்ல, அவர் ஒரு தலைசிறந்த உருதுக் கவிஞரும்கூட. அலகாபாத் நீதிமன்றத்தில் நீண்ட காலம் வழக்குரைஞராகப் பணியாற்றிப் பின் நீதிபதியானவர். அவரது மேற்குறிப்பிட்டதீர்ப்பு பலராலும் பலமுறை மேற்கோள் காட்டப்பட்ட ஒன்று. உத்தரப் பிரதேசப் போலீஸ் குறித்த அந்தத் தீர்ப்பு வாசகம் 1961ம் ஆண்டு மொழியப்பட்டது.

சிறைச்சாலைச் சீர்திருத்தங்கள் குறித்த புகழ்பெற்ற ‘முல்லா கமிட்டி அறிக்கை’ என்பதும் அவரது தலைமையிலான குழு ஒன்றினால்தான் உருவாக்கப்பட்டது. ஓய்வுக்குப் பின் அவர் உச்சநீதிமன்றத்தில் சீனியர் கவுன்சிலாக இருந்துள்ளார். கவிதைக்கான சாஹித்ய அகாடமி பரிசும் பெற்றவர் அவர். அப்படியான கருணையும் நீதியும் நிறைந்த மனம் எல்லா நீதிபதிகளுக்கும் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் முல்லா ஒரு விதிவிலக்குதானே ஒழிய விதி அல்ல.

இரண்டு

ஒரு நாட்டின் காவல்துறையில் குடிமக்களின் பல்வேறு தரப்பினருக்கும் உரிய பங்களிப்பு இருத்தல் அவசியம். ஒரு பிரிவினர் மக்கள் தொகையில் எத்தனை சதம் உள்ளார்களோ அதே அளவு காவல்துறையிலும் அவர்களின் பங்கு இருத்தல் வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 20 சதம் எனும்போது, காவல்துறையிலும் எல்லா மட்டங்களிலும் முஸ்லிம்கள் 20 சதம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நிலை?

ஆண்டுமுஸ்லிம்கள்மொத்தம்
20061,06,634 (7.63%)13,18,295
20131,08,602 (6.27%)17,31,537
காவல்துறையில் முஸ்லிம்களின் பங்கு குறித்த ஒரு தரவு

எடுத்துக்காட்டாக, சச்சார் அறிக்கையின்படி 2001ல் இருந்த மொத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 3,209. இதில் முஸ்லிம் அதிகாரிகள் வெறும் 128 பேர்கள்தான். அதாவது 4 சதவீதம்தான். மக்கள் தொகையில் 14.2 சதவீதமாக உள்ள முஸ்லிம்கள் ஐபிஎஸ் அதிகாரிகளில் வெறும் 4 சதவீதமாகவே இருந்தனர்.

சரி, இன்று நிலைமை என்ன? ஜனவரி 2016ல் ஐபிஎஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 3754ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இப்போது முஸ்லிம் அதிகாரிகளின் எண்ணிக்கை 120ஆகக் குறைந்துள்ளது. அதாவது வெறும் 3.19 சதவீதம். போகப்போக முஸ்லிம்களின் பங்கு குறைகிறது.

இதில் இன்னொரு அம்சம்தான் மிகவும் கவலைக்குரிய ஒன்று. இரண்டு வகைகளில் ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநில அளவில் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று இறுதியில் ஐபிஎஸ் அதிகாரிகளாவோர் ஒரு வகை. இன்னொரு வகை UPSC போட்டித் தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவோர். 2006ல் இப்படி மாநில அளவில் பதவி உயர்வு மூலமாக ஐபிஎஸ் ஆனோர் 912 பேர். இதில் 65 பேர்கள் மட்டுமே முஸ்லிம்கள் (7%). 2016ல் இப்படிப் பதவி உயர்வுபெற்றோர் 1150 பேர். இதில் முஸ்லிம்கள் 44 பேர்தான் (3.82%). அதாவது, மாநிலங்களிலிருந்து பதவி உயர்வோரின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் பங்கு குறைந்துகொண்டே போகிறது.

எனினும் நேரடித் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெறும் முஸ்லிம்களின் பங்கு சற்று அதிகரித்துள்ளது. போட்டித் தேர்வில் பங்குபெற்று ஐபிஎஸ் அதிகாரிகளானோர் 2006ல் 2,297 பேர் (2.7%). 2016ல் இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டோர் 2,604. இதில் முஸ்லிம்கள் 76 பேர் (2.91%).

ஐஏஎஸ் அதிகாரிகளின் தேர்வுகளை எடுத்துக்கொண்டால் 2006ல் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்களின் வீதம் 3 விழுக்காடு. இது 2016ல் 3.32 விழுக்காடாக சிறிது அதிகரித்திருந்தது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் இரண்டிலுமே முஸ்லிகளின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் (14.2%) தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 சதவீதத்தைத் தாண்டவில்லை. எவ்வளவு பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதைப் போலவே எவ்வளவு பேர் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்பதும் முக்கியம் எனச் சொல்லும் டாக்டர் அமிதாப் குண்டு, “மொத்த விண்ணப்பதாரர்களில் 8 சதம்தான் முஸ்லிம்கள்” என்கிறார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 172. இதில் உபியைச் சேர்ந்தோர் 48. பிஹார் மாநிலத்தவர் 34. ஜம்மு கஷ்மீர் 22. பிற 26 மாநிலங்களையும் சேர்ந்தோர் 58 பேர்கள்.

ஆக, காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை படிப்படையாகக் குறைந்து வருகிறது. 2006ம் ஆண்டில் மொத்த காவல்துறைப் பணியாளர்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் வீதம் 7.63 விழுக்காடு. இது 2013ல் 6.27 விழுக்காடாகக் குறைந்தது. 2014ல் பாஜக ஆட்சி வந்தபின் காவல்துறை முதலானவற்றில் இதுபோன்ற புள்ளி விவரங்களைத் தர இயலாது என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று

2006 செப்டம்பரில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பு மிக முக்கியமானது. இந்திய அளவில் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என அத்தீர்ப்பு ஆணையிட்டது. உடனடியாக இந்தப் பணி தொடங்க வேண்டும் எனவும் கூறியது. ஆனால் இன்று 17 ஆண்டுகள் ஆகியும் அந்தத் திசையில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசுகள் இருந்திருந்தால் அந்த ஆணை நிறைவேற்றப்பட்டிருக்கும்.

இந்த அமைப்பில் நமக்கு நீதி கிடைக்காது என்கிற எண்ணம் குடிமக்களுக்கு உருவாவது ஒரு நாட்டிற்கு நல்லதல்ல. மக்களின் உரிமைகளையும் நியாயங்களையும் புரிந்துகொள்ளாத, பெரிய அளவில் ஊழல் மிகுந்த சூழல் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான ஒன்று என்ற எண்ணம் காவல்துறைக்கு மட்டுமின்றி ஆட்சியாளர்களுக்கும் இல்லை என்பது வேதனைக்குரியது. நாம் பாதுகாப்பாக உள்ளோம்; இந்த அமைப்பில் எனக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்க வேண்டும் என்பது ஏதோ மக்களின் நலனுக்காக மட்டும் சொல்லப்படும் கருத்து அல்ல. அதுவே பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தின் ஆட்சி என்பது ஜனநாயகத்தின் ஆக முக்கியமான அடிப்படை. நார்வே நாட்டுப் பிரதமர் கோவிட் விதிகளை மீறித் தன் 60ம் பிறந்தநாளை ஏகக் கொண்டாட்டமாக நடத்தியதால் அவருக்கு சட்டப்படி உரிய அபராதம் விதிக்கப்பட்டதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்முன் கண்டோம். ஆனால் இங்கே டெல்லி காவல்துறை உயரதிகாரி ஒருவர் சென்ற ஆண்டில் டெல்லியில் நடந்தேறிய வன்முறைக் கலவரத்தின்போது, கலவரத்துக்குக் காரணமானவர்கள் இந்துக்களாயின் அவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டதையும் நாம் கண்டோம்.

1861 காலனியக் காவல்துறைச் சட்டம்தான் பெரிய மாற்றங்கள் இன்றி இன்றும் இங்கு தொடர்கிறது. ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறது என்றால் அது இருக்கும் நிலையை மோசமாக்கும் திசையில்தான் நடக்கின்றன. ஒரு காலனிய அரசுக்கு இருந்த சட்டத்தின் ஆட்சி குறித்த கரிசனம்கூட இல்லாத சூழல்தான் இன்று நிலவுகிறது. முதல் சுதந்திரப் போர் என்றும், சிப்பாய்களின் எழுச்சி என்றும் சொல்கிறோமே அதைத் தொடர்ந்து, இனி அப்படியான ஒரு எழுச்சி ஏற்படக் கூடாது எனும் வகையில் இறுக்கமாக உருவாக்கப்பட்டதுதான் 1861 சட்டம்.

தேசிய அளவிலான ‘போலீஸ் கமிஷன்’, மாநில அளவிலான போலீஸ் கமிஷன் என்றெல்லாம் 1960 தொடக்கம் முதல் இங்கே அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றின் பரிந்துரைகளில் நல்ல பல அம்சங்கள் இருந்தபோதிலும் அவை எந்நாளும் இங்கே முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. காவல்துறை அத்துமீறும்போது அதன்மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது ஆட்சிக்கு நல்லதல்ல என்கிற கருத்து அரசுகளிடம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கையோடு அன்றைய பாஜக அரசு காவல்துறையினருக்குச் சிறப்பு நலத் திட்டங்கள் அறிவித்ததை அறிவோம்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு ஆகட்டும், திருநெல்வேலி தமிரபரணி துப்பாக்கிச் சூடாகட்டும், அதற்குப் பின் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் எல்லாம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மறைமுகமான நியாயங்களைக் கற்பிப்பதாகத்தான் இருந்தன.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது அமைக்கப்பட்ட சம்பத் ஆணையம் என்ன சொன்னது?

  1. “உரிய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்ட பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.”
  2. “காவல்துறை தலித்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுவது பொய். பழனிக்குமார் கொலையை ஒட்டி ஏற்கனவே பொங்கிக் கொண்டிருந்த தலித்கள்தான் வன்முறைக்குக் காரணம். காவல்துறையினர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. காவல்துறை தற்காப்புக்காகத்தான் அவர்களைச் சுட நேர்ந்தது. காவல்துறை மட்டும் அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியிராவிட்டால் அதன் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலை (savage mass) அடக்குவதற்கு அன்று துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் அவர்களின் வன்முறை அந்தப் பகுதியில் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் முழுவதிலுமே சாதிக் கலவரத் தீயைப் பற்றவைத்திருக்கும்.”
  3. “கலவரங்களைக் கட்டுப்படுத்த மற்ற எல்லா முறைகளையும் கையாண்டபின், இறுதியில் நிர்வாக மாஜிஸ்ட்ரேட் (தாசில்தார்) உத்தரவிட்ட பிறகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.”
  4. “சுருங்கச் சொல்வதானால், கலவரக்காரர்களின் நடத்தை எல்லாவிதமான அடிப்படை நாகரிகங்களையும் கடந்து மிருகத்தனத்தின் எல்லையையே தொட்டது. அது எக்காரணங்கொண்டும் மன்னிக்கக்கூடியதாக இல்லை.”

மேற்குறிப்பிட்டுள்ள வாசகங்கள் அனைத்த்தும் சம்பத் அறிக்கையில் ஆங்கிலத்தில் இருந்தவை.

அப்போது நான் எழுதினேன்: “துப்பாக்கிச் சூடு நடந்த அடுத்தநாள் (செப்டம்பர் 12, 2011) முதல்வர் ஜெயா சட்டமன்றத்தில் என்ன சொன்னாரோ, டிசம்பர் 21 அன்று ஜெயா அரசின் டிஐஜி தாஸ் நீதிமன்றத்தில் என்ன சொன்னாரோ அதையேதான் சம்பத் தன் அறிக்கையில் கொட்டினார். நீதிபதியின் பங்கு இங்கே குற்றச்சாட்டின் உண்மை – பொய்களை ஆய்வு செய்து உண்மையைக் கண்டு நீதி வழங்குவதாக இல்லை; மாறாக இங்கு நீதிபதியே அரசு வழக்குரைஞராக மாறிவிடுகிறார்.

சொல்லப்போனால் அரசின் வழக்குரைஞர் என்ற நிலையையும் தாண்டி விடுகிறார் நீதியரசர்! இன்னும் ஒருபடி மேலே போய் அவரும் அந்த அப்பாவி மக்களின் மேல் இப்படித் தாக்குதலையும் மேற்கொள்கிறார்.”

காவல்துறையின் அத்துமீறல்களை நியாயப்படுத்துவது என்பதை நமது அரசுகள் ஒரு கொள்கையாகவும், அதுவே திறமையான ஆளுகை என்றும் நினைக்கும்வரை அது குறையப்போவதில்லை. அதேபோல், மக்கள் காலவோட்டத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் எனும் அணுகல்முறை தொடரும்வரை காவல்துறை அத்துமீறல்கள் குறைய வாய்ப்பில்லை.

சுருக்கம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். ‘பயங்கரவாதம்’ எனும் பூச்சாண்டி காட்டி காவல்துறை அதிகாரம் வானளாவ அதிகரிக்கப்படுவது குறித்து நிறைய எழுதியாயிற்று. கண்ணுக்கெட்டிய தூரம்வரை நம்பிக்கை நட்சத்திரம் ஏதும் கண்ணில்படவில்லை!

Related posts

Leave a Comment