இஸ்லாமிய பெண்ணியம்கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்! – உம்மு ஃகாலிது

Loading

தொடர்ச்சியாகவும் நீண்ட காலமாகவும் பெண்களிடம் பொய் சொல்லப்பட்டு வந்துள்ளது. பலர் ஒன்றிணைந்து தமது சுயலாபங்களுக்காகப் பெண்களை ஏமாற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஆணாதிக்கம் பற்றியோ, முஸ்லிம் ஆண்கள் பற்றியோ நான் பேசுவதாக எண்ண வேண்டாம். சில மேற்கத்திய சூன்யவாத நாத்திக மேட்டுக்குடிகளைப் பற்றிப் பேசுகிறேன்.

தமது சொந்த அஜென்டாக்களுக்காக, அவர்கள் பெண்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் சமூக வழமைகள் சிலவற்றை மாற்றி, இயந்திரங்களைப் போல மக்களைக் குறிப்பிட்ட வழியில் இயக்கியிருக்கிறார்கள்.
ஊடகங்கள், ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், புத்தகங்கள், நாவல்கள், பிரபல பத்திரிகைகள், பாடல் வரிகள், புகழ்பெற்ற கல்விநிலையங்கள் முதலானவற்றின் மூலம் உலகெங்கும் அவர்கள் பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள்.

அமெரிக்கத் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஆறு சீசன்கள் வரை ஒளிபரப்பப்பட்ட தொடர் “செக்ஸ் அண்ட் த சிட்டி” (Sex and the City). அதன் மையக் கருத்து இதுதான்: ஒரு நவீனப் பெண் வாழ்வில் அனைத்தையும் பெறலாம். அவள் சுயமாகவே என்றென்றும் இளமையாக, கவர்ச்சியாக, சுதந்திரமாக, கொண்டாட்டத்துடன் வெற்றிகரமாகவும் வாழ முடியும்.  அவள் பெரிய நகரத்தில் முழுநேர வேலை செய்துகொண்டே தோழிகளுடன் வெளியே சென்று முன் பின் தெரியாத ஆண்களுடன் உடலுறவு கொண்டு, தன் வாழ்க்கையைக் கொண்டாட்டத்துடனும் நிறைவாகவும் வாழ முடியும். திருமணம், கணவன், தாய்மை போன்ற கடினமான சுமைகளை இப்போதே சுமக்க வேண்டிய எந்தத் தேவையும் ஒரு பெண்ணுக்கில்லை. அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
 
பல வருடங்கள் இந்தத் தொடரை உலகம் முழுவதும் ஒளிபரப்பி பல தலைமுறைப் பெண்களை பாதிப்புக்குள்ளாக்கிய பிறகு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. காண்டஸ் புஷ்நெல் (பெண்) 1997ல் எழுதிய நாவல்தான் Sex and the City என்ற தொடராக HBOவில் ஒளிபரப்பப்பட்டது. 2012ல் நடந்த அவரது விவாகரத்து பற்றி Sunday Times இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், குழந்தை பெறாதது தன்னைத் தனிமைப்படுத்தியிருப்பதை உணர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

அவர் சொல்கிறார்:

“என் வயது 30களில், 40களில் இருந்தபோது இதை நான் உணரவில்லை. விவாகரத்தான பிறகு 50களில்தான் குழந்தை பெற்றுக்கொள்ளாததின் பாதிப்பையும், நான் முற்றிலும் தனியானதையும் உணர்ந்தேன். வாழ்வதற்கான ஒரு பிடிப்பு குழந்தை பெற்றுக்கொண்டோரிடம் இருப்பதை நான் காண்கிறேன், குழந்தை பெறாதவர்களிடம் அது இல்லை”

காண்டஸ் உருவாக்கிய நிகழ்ச்சியின் மூலம் வழிதவறிச் சென்ற பெண்கள் என்ன செய்வார்கள்? இந்தத் தவறான தொடர் மூலம் தங்களது வாழ்க்கையை வெற்று நுகர்வுக் கலாச்சாரத்திலும், கார்ப்பரேட் யுகப் பந்தயத்திலும் கழித்துவிட்டார்கள். இப்போது காண்டஸ் வருந்துவதால் ஏமாற்றப்பட்ட பெண்களுக்கு என்ன லாபம்? அவர்கள் தம் இளம் பருவத்தை மீண்டும் பெற்று திருமணம் செய்து குடும்ப வாழ்வில் ஈடுபட இயலுமா?
 
‘சப்வெர்டட்: நான் எவ்வாறு பெண்ணிய இயக்கங்களை பாலியல் புரட்சிக்குப் பயன்படுத்த உதவினேன்’ எனும் தலைப்பில் ஒரு நூல் உள்ளது. இதன் ஆசிரியர் சூ எல்லென் பிரௌடேர் நீண்டகாலமாக Cosmopolitan இதழில் எழுதி வந்தார். மிகவும் பிரபலமான இந்த மாதர் இதழுக்கு மேற்கத்தியப் பெண்கள் மிகத் தீவிரமான வாசகர்களாக இருந்திருக்கின்றனர்.
 
திருமணமின்றி உடலுறவு, கருத்தடை, கருக்கலைப்பு ஆகியவைதாம் பெண்கள் வாழ்வில் நிறைவடைவதற்கான வழி என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்து கட்டுரைகள் எழுதி வந்தார் சூ எல்லென். ஆனால், அவரைவிட உயர்நிலையிலிருந்த, புத்திசாலிப் பிரச்சாரகர்கள் அவரின் எண்ணங்களையும் தேர்வுகளையும் பாதித்து பெண்ணிய இயக்கங்களைத் தங்களின் சுய லாபத்திற்காக மடைமாற்றினார்கள் என்பதை பின்னாளில்தான் அவர் புரிந்துகொண்டார்.

தானும், Cosmopolitan இதழிலுள்ள பிற எழுத்தாளர்களும் பெண்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்ததாக சூ பகிரங்கமாக அறிவித்தார். அந்த எழுத்தாளர்கள் ஒரு முழுப் பொய்யை விற்றுள்ளனர் என்று கூறும் அவர், பெண்களை அவர்களின் குடும்பம், வீடு, பாதுகாக்கும் ஆண்கள் (அண்ணன்/தம்பி/கணவன்/தந்தை) ஆகியோரிடமிருந்து பிரித்து, கவர்ந்திழுத்து, பெருநகரங்களுக்குள் புகுத்தி, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அடைத்து, முன் பின் தெரியாத ஆண்களுடன் உடலுறவுகொள்ளும் “சுதந்திரத்தை” அவர்களுக்கு அளிப்பதே அந்த எழுத்தாளர்களின் நோக்கம் என்கிறார். இன்று மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான பெண்கள் இவ்வாறுதான் உள்ளார்கள்.

“பாரம்பரிய மனப்பான்மை, குடும்ப அறவிழுமியங்கள், ஆண்களின் பாதுகாப்பு ஆகியவற்றைத் தூக்கியெறிந்து, முன் பின் தெரியாத ஆண்களிடம் படுங்கள், கல்யாணம் குழந்தை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். மேற்படிப்பு படித்து உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கி, உங்கள் தொழில் வாழ்க்கையையே வாழ்வின் நோக்கமாக்குங்கள்” என நேரடியாகச் சொல்லி பெண்களை இவ்வாறெல்லாம் செய்ய வைத்திருக்க முடியாது.

எனவே மென்மையான முறையில் எடுத்துச் சொல்லி இக்கருத்தை விற்பனை செய்ய வேண்டும். அது உற்சாகமும் விடுதலையும் அளிப்பதாகத் தோன்ற வேண்டும். அதுபோல் வாழ்வதற்கான ஆசையைப் பெண்களுக்குள் அவர்களுக்கே தெரியாமல் உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் அதை இயல்பாகத் தோன்றிய உணர்வாக அவர்கள் கருதுவார்கள் என்ற தந்திரம் மேற்கொள்ளப்பட்டது.

மிக முக்கியமாக, இவ்வகையான வாழ்கைமுறை அவசியமானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு திருமணம், உறவுகள், ஆண்கள் என்றாலே துன்பம், தவிப்பு, பயம் என்பதாகப் பெண்கள் கருத வேண்டும். அப்போதுதானே, மேலே சொன்ன வாழ்க்கைமுறை அவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு அவசியம் என்று தோன்றும்!?

“ஆண்கள் அனைவரும் தவறானவர்கள், தீயவர்கள். உன்னை ஏமாற்றி, குழந்தையைக் கொடுத்துவிட்டு, வேறு பெண்ணோடு ஓடிவிடுவார்கள். நீ தான் உன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உன் சொந்தக் காலில் நிற்கக் கற்றுக்கொள். உன் பொருளாதாரத் தேவைகளை நீயே பூர்த்திசெய்ய பொருளீட்டு, ஒருபோதும் ஆண்களை நம்பாதே. திருமணமானால் விவாகரத்து நிச்சயம், அப்போது உன் சொந்தக் காலில் நீ நிற்க இப்போதே தயாராக இரு” என்று சொல்லி பெண்கள் பயமுறுத்தப்பட்டனர்.
 
பெண்களும் படிப்படியாக இந்த மூளைச் சலவைக்குப் பலியானார்கள். அவர்கள் வெளியே சென்றார்கள், வீட்டைவிட்டு தூரமான பெருநகரங்களில் இருப்பிடம் அமைத்து, மேற்படிப்பு படித்து, கருத்தடைகளைப் பயன்படுத்தி, முழுநேரப் பணியில் அமர்ந்து, திருமணத்தை விடுத்து பல ஆண்களுடன் உடலுறவு கொள்ளத் தொடங்கி விட்டார்கள். தவறுதலாகக் கருவுற்றால் கருக்கலைப்பு செய்துகொண்டார்கள். இந்தக் கவர்ச்சியான, வேகமான, சுதந்திரமான வாழ்கைமுறையில் குழந்தைகள் தேவைப்படவில்லை.

பின்னர், இந்தப் பெண்கள் வெறும் நுகர்வோராய் மாறிப்போனார்கள். முதலாளித்துவ இயந்திரத்தில் சுதந்தரமாகப் பொருளீட்டுபவர்களாக மாற்றப்பட்ட பெண்களை நுகர்வோராக மாற்றுவது எளிது.

பெண்களுக்கான இதழ்களை வாசிப்போர் இவ்வாறு வாழவும் சிந்திக்கவும் கற்றுக்கொண்டார்கள். ஒவ்வொரு பெண்ணும் Cosmo பெண்ணாக மாற விரும்பினாள். ஆனால் அந்த Cosmo கட்டுரைகளை எழுதிய சூ எல்லென் பிரௌடேர் லட்சக்கணக்கான பெண்களிடம் பச்சையாகப் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டோம் எனக் குற்றவுணர்வு கொண்டு, கத்தோலிக்க மதத்தை ஏற்று பாவமன்னிப்புக் கோரினார். தான் செய்த தவறை சீர்செய்யும் நோக்கிலேயே Subverted நூலை எழுதினார்.

இந்த நூலை வாசித்த பெண்கள் சிலரின் சுவாரசியமான கருத்துகள் இங்கே:
 
“எனக்கு சுமார் 70 வயது. இந்தப் பொய்களை நம்பி அவ்வாறே வாழ்ந்தேன். இந்த ஆபத்தான பொய்களால் கவரப்பட்டேன். சூ எல்லென் பிரௌடேர் இவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு உதவிய தளத்துக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இந்த முழுப் போலியான அட்டை வீடும் நொறுங்கி விழ வேண்டும். இந்தப் பொய்களால் அமெரிக்கக் குடும்பங்கள் சிதைந்துவிட்டன. கருவிலேயே குழந்தைகளை அழிக்கின்ற, தாயை குடும்பத்திலிருந்து பிரிக்கின்ற எந்தவொரு நாகரிகமும் அழிந்துவிடும்.”

“இந்த நூல் எவ்வாறு பெண்ணிய இயக்கங்களை சுயநலமிக்க சூன்யவாதச் சுரண்டல்காரர்கள் கைப்பற்றி பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துகிறது. சமூக அவலங்களான அதிக விவாகரத்துகள், கட்டற்ற உடலுறவு, பெண்கள் வறுமைக்கு ஆட்படுதல், பெண்களிடையே பயம் – பதற்றம் குடிகொள்ளுதல், ஆண் – பெண் இருவரிடமும் தம் அடையாளம் குறித்த ஆழமான குழப்பம் உண்டாதல் என அனைத்தும் அதன் விளைவுகள்தாம்.”

“நடைமுறையில் சாத்தியமற்ற Cosmo பெண் என்ற கருத்தாக்கம் ஒரு புனையப்பட்ட, ஆபத்தான பொய்யாகும்.”

“இந்நூல் நமக்கு இரு விஷயங்களைத் தெரியப்படுத்துகிறது. சூ நேர்மையின்றி ஒரு கருத்தை உருவாக்கியுள்ளார். ஆண்களிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் பெண்களுக்குச் சுதந்திரம் பெற்றுத் தருவது என்பதே அந்தக் கருத்து. அதற்குச் சாதகமாக எண்ணற்ற போலிப் புள்ளிவிவரங்களை தைரியமாகத் தயாரித்துள்ளார் சூ. இன்று அவர் அதை வெறுக்கிறார். இன்றும் இதுபோன்ற புள்ளிவிவரங்களை இறைவாக்குபோல் கருதி நம்பி அடிமையாக இருப்பவர்கள் உண்டு. என்னதான் குறைநிறைகள் இருந்தாலும் திருமணமும் தாய்மையும்தான் சரியான வழி.”
 
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன உலகின் பின்புலம் இதுதான்.
 
மேற்கில் பல்லாண்டுகளாய் பல்வேறு முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். மேற்குலகை வடிவமைத்த சில காரணிகளையே நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம். முஸ்லிம்களாகிய நாம் நம் குழந்தைகளை இவர்களின் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறோம். நம் குழந்தைகள் இதே திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் பார்க்கின்றனர். நம் பெண் குழந்தைகள் இதுபோன்ற பிரபலமான இதழ்களையும் வாசிக்கின்றனர்.

முஸ்லிம் நாடுகளிலிருந்து நாம் சுமந்துவரும் மேற்படிப்பு – பட்டங்களுக்கான ஆசை, குடும்ப கவுரவம், பணப் பேராசை, மேற்கைக் கண்டு தாழ்வு மனப்பான்மை, மேற்கோடு ஒன்றுகலக்க வேண்டும் என்ற அவா போன்றவற்றுடன் இந்த மேற்கத்தியக் கலாச்சாரத் தாக்கங்களும் சேர்ந்துவிடுகின்றன.
 
பிறகு, நம் பெண் பிள்ளைகள் இளம் பருவத்தை அடைந்தவுடன் திடீரென்று, “பொருளாதார ஸ்திரத்தன்மை”, “சுதந்திரம்” ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்; ஏனெனில், ஒருவேளை “ஏதேனும் நடந்துவிட்டால்” ஆண்கள் அனைவரும் “தவறானவர்கள்”, நம்மிடையே “toxic masculinity”யும் உள்ளது, “ஒருவேளை விவாகரத்து ஆகிவிட்டால் அல்லது கணவன் இறந்துவிட்டால் அல்லது ஏமாற்றிவிட்டால்” என்கிற ரீதியில் தடுமாறுகின்றனர்.

இதுபோன்ற பதற்றம், சந்தேகம், கவலை இவையாவும் சமூக மூளைச் சலவையின் விளைவேயாகும்.
 
பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இந்தச் சமூகக் கட்டளைகளுக்கு முழுவதுமாக அடிபணிவதில்லை. அவர்கள் பல ஆண்களுடன் படுத்து பற்பல கருக்கலைப்புகளில் ஈடுபடுவதுமில்லை (துரதிருஷ்டவசமாக மேற்குலகில் ஒருசில முஸ்லிம் பெண்கள் அவ்வாறும் உள்ளனர்). இவ்விஷயத்தில் முஸ்லிம் அல்லாதவர்களைப் பின்பற்றி நாம் ‘பல்லியின் துளைக்குள் நுழையவில்லை’ (நபிமொழியில் வரும் உவமை).

மாறாக, பின்வரும் செயல்களில் முஸ்லிம் அல்லாதவர்களைப் பின்பற்றுவதன் வழியாக நாம் அப்படி நுழைகிறோம்: நம் சமூக ஆண்கள்மீது மதிப்பற்று இருப்பது, திருமணத்தை சந்தேகத்துடனும் பயத்துடனும் அணுகுவது, நம்மை நாமே பாதுகாக்க வேண்டுமென்ற நினைப்பில் திருமணத்தால் மிக மோசமானவை நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதுவது, உயர்கல்வியையும் உத்தியோகத்தையும் முக்கியமானதாகக் கருதி திருமணத்தைத் தாமதப்படுத்துவது, தாய்மையையும் மனைவியாக இருப்பதையும் சிறுமைப்படுத்துவது, கணவன்மீது அவநம்பிக்கை கொள்வது, முஸ்லிம் சமூகங்களில் விவாகரத்து அதிகமாகிக்கொண்டே போவது முதலியன.
 
நாம் இப்படியான பதற்றத்தில் இருந்துவருகிறோம். இந்தச் செயற்கையான அச்சம் பெண்களை மனைவி, தாய் என்ற பொறுப்பிலிருந்து விலக்கி பொருளீட்டாளர்களாக மாற்றி, பின்னர் நுகர்வோராக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படியான லட்சியங்கள் யாவும் பொய்யை அடிப்படையாகக் கொண்டவை.

இஸ்லாம்தான் சத்தியம்!

மூலம்: Women Have Been Lied To

தமிழில்: ஷான் நவாஸ்

Related posts

Leave a Comment