bajrang dal tamilகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து ஆதிக்கவாதத்தின் சராசரி முகம் : ஒரு பஜ்ரங் தள ஊழியருடன் உரையாடல் – மோயுக் சாட்டர்ஜீ

(EPW 27 ஜனவரி 2018 இதழ்க் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

அகமதாபாத்தில் சில பஜ்ரங் தள ஊழியர்களுடன் பணியாற்றிய சொந்த அனுபத்திலிருந்து நேரடிப் பதிவாக ஆசிரியர் இதை எழுதியிருக்கிறார். இந்தியா முழுக்க வலதுசாரி குண்டர்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் செய்திகள் அதிகரித்து வரும் இவ்வேளையில், பஜ்ரத் தளத்தின் ஊழியர்களுடைய தினசரி வாழ்க்கை மீது வெளிச்சம் பாய்ச்சும் முயற்சி இது. மூன்று பகுதிகளைக் கொண்ட இந்தக் கட்டுரையில், இந்தக் குழுக்களிடம் வன்முறையைத் தாண்டி பல விசயங்களிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். குஜராத் போன்று இந்தியாவின் சில பகுதிகளில் இந்தக் குழுக்களும் ஊழியர்களும் அந்தந்தப் பகுதிகளின் தினசரி வாழ்க்கையுடன் கலந்திருக்கிறார்கள். அந்தப் பகுதிவாசிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களாக, பஞ்சாயத்து செய்பவர்களாகச் செயல்படுகிறார்கள்.

1

2010 ஃபிப்ரவரியில் ஒரு தன்மையான மாலைப்பொழுதில் நீண்டு வளைந்துநெளிந்து செல்லும் நடையொன்றின் இடையே நாங்கள் ஒரு மசூதியின் முன் நின்றோம். “இதப் பாருங்க இப்போ. எங்கப் பசங்க இத 2002ல எரிச்சபோது நீங்க இதப் பார்த்திருக்கணும்” என்றான் குணால். நிமிர்ந்து அந்த வெளிர் பச்சையான மசூதி, அலங்கார விளக்குகளால் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். எட்டு வருடங்கள் கழிந்திருக்க, அதில் சிதைக்கப்பட்டதன் அடையாளங்கள் எதுவும் மிச்சமிருக்கவில்லை. ஆனாலும் அந்த மசூதிக்கு முன்னால் நின்று அந்தத் தாக்குதலை கற்பனை செய்ய முயன்றேன். வளையல்கள், காய்கறிகள், இனிப்புகள் விற்றுக்கொண்டிருக்கும் அத்தனை பேர் நிறைந்த பரபரப்பான தெருவின் நடுவே ஒரு கூட்டம் மசூதியை எரிப்பதைக் கற்பனை செய்வதே கடினமாக இருந்தது.

பஜ்ரங் தள ஊழியனும், மாதவ்புராவில் நீண்ட காலமாக வசித்து வருபவனுமான குணால், அன்றைய தாக்குதலின்போது வந்த எதிர்பாராத ஒரு நபரைப் பற்றி என்னிடம் சொன்னான்.

நாங்க மசூதியோட பூட்ட ஒடச்சபோது போலீஸ் இன்ஸ்பெக்டரோட ஜீப் வந்ததும் நாங்க ஓடப் பார்த்தோம். ஆனா அவர் மசூதி பக்கத்துல ஜீப்ப நிறுத்திட்டு நாங்க செஞ்சுகிட்டு இருந்தத தொடர்ந்து செய்யச் சொல்லி சத்தமா சொன்னார்.

அவ்வப்போது வரும் தேர்தல்களும் செய்திகளும் குணால் போன்ற நபர்களை நம் பார்வையில் ஒளிர்ந்து மறையச் செய்கின்றன, எனவே அவர்களை உதிரியாகக் கருதி நிராகரிப்பது எளிதாகிறது. ஆனால் இந்த எரிப்பது, கொள்ளையடிப்பது, வெட்டுவது எல்லாம் முடிந்தபின் இந்த நபர்கள் என்ன செய்வார்கள்? கலவரம் முடிந்ததும், கும்பல் கொலை நடந்த பிறகு, தேர்தல்களில் வெற்றியா தோல்வியா என்ற முடிவுகள் வந்த பிறகு நாம் வசதியாக நம் முகத்தைத் திருப்பிக்கொள்வோம். கும்பல் கொலைகள், தாக்குதல்கள், மாரல் போலீஸிங், படுகொலைகள் முதலான வன்முறைகள் ‘வழக்கத்துக்கு அதிகமாக’ நடக்கும்போதுதான் நமக்கு இந்த உதிரிகள் கண்ணில் படுகின்றன. இந்த உதிரிகள் இந்து மேலாதிக்க உலகப் பார்வை கொண்டவர்கள். அந்தப் பார்வை பொதுமக்களின் பயங்களைப் பிரதிபலிக்கிறது, இளைஞர்களின் ’ஆண்’ கற்பனைகளை ஊதிவிடுகிறது, அவர்கள் அரசைப் பயன்படுத்த உதவும் கருவியாகிறது, உள்ளூரில் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள தினசரி நடைமுறைக்கேற்ற வழியாகிறது.

குணால் சற்றே உயரம் குறைவானவன், விரிந்த மார்புகள், திமிறும் கைத் தசைகள், சிறிய காதுகள், நெகிழ்வான தலைமுடி. பெரும்பாலான மாலைபொழுதுகளில் ‘தன் பசங்களுடன்’ வீட்டுக்கு வெளியே ஒரு கட்டிலில் உட்கார்ந்திருப்பான். ஞாயிறு காலைகளில் ஒன்றாக முனிசிபல் ஜிம்னாசியத்துக்குப் போய் சேவல் சண்டைகளில் கலந்துகொள்வார்கள். அவர்கள் எல்லாருமே பஜ்ரங் தள உறுப்பினர்கள். ராஜ் இரவுநேர செக்யூரிட்டி காவலராக இருக்கிறான், அஜய் நீதிமன்றங்களுக்கு வெளியே கடவுள் படங்கள் விற்கிறான், சஞ்சய் ஒரு தள்ளுவண்டியில் வறுத்த திண்பண்டங்கள் விற்கிறான். இவர்களில் அதிகம் படித்தவனான 22 வயது ஜெய், அக்கவுண்டன்சி மாணவன்.

அவர்கள் பஜ்ரங் தளத்தில் சேர்ந்ததைப் பற்றி என்னிடம் சொல்வதற்காக குணால் தன் படுக்கையின் கீழிருந்து ஒரு உறையில்லாத புகைப்பட ஆல்பத்தை எடுத்தான். அதில் பல இளைஞர்கள் பஜ்ரங் தளத்தில் சேரும் வண்ணப் படங்கள் இருந்தன. பல ஆண்கள் ஒரே மாதிரியான போலி ஆக்ரோஷத்துடன் போஸ் கொடுக்கும் படங்களைத் தாண்டி இளம் குணாலின் படத்தைத் தேடினோம். அவர்களது உடலமைப்புகள் வெவ்வேறு மாதிரி இருந்தாலும், எல்லோரும் ஒரே போஸில் இருக்கிறார்கள் – கையில் மின்னும் திரிசூலங்களை உயர்த்திப் பிடித்தபடி, ஒரு பளீர் ஆரஞ்சு வண்ண பஜ்ரங் தளத் துண்டு தோளில் கிடக்க. பின்னணியில் ஒரு சிறிய கோவிலும், புலியின் மேல் அமர்ந்திருக்கும் பாரதத் தாய் படமும் இருக்கின்றன. இந்த இளைஞர்கள் அருகே உள்ளூர் பஜ்ரங் தளத் தலைவர் ஒருவர் நிற்கிறார். தன் சிறந்த மாணவர்களுக்குப் பரிசளிக்கும் தலைமையாசிரியர் போல கேமராவைப் பார்த்து சிரித்தபடி.

யாராவது பக்கத்தில் வரும்போது குணாலும் அதே போஸுக்கு மாறிக்கொள்கிறான்; நேராக, இரண்டு கைகளையும் கால்சராய் பாக்கெட்டுகளுக்குள் நுழைத்துக்கொண்டு, நெஞ்சை முன்னே விரைத்துக்கொண்டு. தெருவிலிருந்தே அவன் வீட்டை அடையாளம் கண்டு கொள்ளலாம், அதில் மட்டும்தான் ஒரு திரிசூலமும் ஜெய் ஸ்ரீராம் என்றும் பெயிண்ட்டால் எழுதப்பட்டிருக்கின்றன. அடுத்து கண்ணில் படுபவை, அவன் பெற்றோர் நாள்முழுக்க உட்கார்ந்திருக்கும் தூசிபடிந்த கட்டில், அவனது வெளிச்சமற்ற ஒற்றை அறைக் குடிலின் உடைந்த ஜன்னல்கள், பக்கத்து வீட்டுக்காரர்களின் கந்தல் துணிகள். அவன் தன்னுடைய தலித் அண்டை வீட்டுக்காரர்களைப் போலல்ல, தான் ராஜஸ்தானிலிருந்து வந்த ராஜ்புத் என்று சொல்லிக்கொள்கிறான். தன் பக்கத்து வீட்டுக்காரர்களை அழுக்கானவர்கள் என்கிறான்.

அவங்க கீழ் சாதிக்காரங்க, அதுனால அவங்க வீட்டுக் கல்யாணத்துக்குக் கூப்பிடும்போது நாங்க போகமாட்டோம். அவங்களோட சாப்பிடறத விடுங்க, அவங்க வீட்டுல தண்ணிகூட குடிக்க மாட்டோம்.

2010 தொடங்கி நான் குணாலையும் அவன் கூட்டாளிகளையும் சந்தித்து வருகிறேன். முஸ்லிம் ஆண்களிடமிருந்து இந்துப் பெண்களைப் பாதுகாக்க தெருக்களில் சுற்றும், பசுக்களைக் கவர்ந்துவர முஸ்லிம் பகுதிகளுக்கு ரெய்டு செல்லும், ‘மை நேம் இஸ் கான்’ போன்ற படங்களுக்கு எதிராகப் போராட சினிமா தியேட்டர்களைச் சிதைக்கும் இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளவேண்டி அகமதாபாத் சென்றுவருகிறேன். அவர்கள் அதிகாரங்களில் இருப்பவர்கள் அல்ல, கடைநிலை வீரர்கள் என்பது தெரிந்ததுதான். அவர்களைப் போலீஸ் தொந்தரவு செய்யாமலிருப்பதை உறுதிசெய்யும் பெருந்தலைகள் அல்ல, மசூதிகளை எரிக்கும் குண்டர்கள் அவர்கள். 2002ல் குஜராத்தில் இந்த இந்து ஊழியர்களைச் சந்திக்கும் என் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தன. ஒரு முஸ்லிம் நிவாரண முகாமிலிருந்து பக்கத்திலிருந்த இந்துப் பகுதிக்கு நடந்து சென்றபோது, தெருக்கள் காலியாக இருந்தன, ஒரு சுவரில் புத்தம்புதிதாக “5 கோடி குஜராத்திகளின் பெருமை, நரேந்திர மோதி” என்று எழுதப்பட்டிருந்தது. மதியப்பொழுதில் காலித் தெருக்களில் பேசுவதற்கு யாராவது கிடைக்கமாட்டார்களா என்று தேடியபடி நடக்கும்போது என்னைப் பின்தொடரும் நூற்றுக்கணக்கான கண்களை உணரமுடிந்தது. பின் ஒரு ஆள் தன் பால்கனியிலிருந்து கையசைத்துக் கூப்பிட்டு சொன்னார்.

இங்க யாரும் உன்னோட பேசமாட்டாங்க. பாகிஸ்தானுக்கே திரும்பிப் போ.

எனவே ஒரு நண்பர் குணாலை எனக்கு அறிமுகப்படுத்தியபோது, ஒரு நட்பான, தன் அண்டை அயலாருக்கு உதவும் அப்படியான இளைஞனைச் சந்தித்ததும் நான் ஆச்சரியமடைந்தேன். ஏறக்குறைய படிப்பறிவற்ற, நிலையான வேலையற்ற, குணால் முஸ்லிம் ஆண்களிடமிருந்து இந்துப் பெண்களையும் முஸ்லிம் கசாப்புக்காரர்களிடமிருந்து பசுக்களையும் காப்பாற்றுவதில் ஆர்வமுடையவன். ஆனால் சேவா (சேவை) புரிவது என்ற எண்ணம்தான் அவனுக்கு மேலும் ஈர்ப்புடையதாக இருந்தது.

அவங்க (முஸ்லிம்கள்) ஒண்ணாக் கூடி அவங்க தர்மத்தப் பத்திப் பேசுறாங்க. நாமளும் ஏன் அப்படி பேச முடியாது? நாமளும் ஒண்ணாக் கூடி உறுதியா இருக்கக் கூடாதா? ஒரு இந்துக்கு துன்பம் வரும்போது, எனக்கு வருத்தமா இருக்குது, அதனால நான் ஏதாவது செய்யுறேன். என் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு முடிஞ்சளவு உதவி செய்யுறேன். என்னால உதவி செய்ய முடியாதபோது எனக்கு மேல இருக்கவங்கள்ட்ட பேசுறேன்.

ஒருநாள் மாலை, பக்கத்து வீட்டார் (இந்து) தங்களின் மேல் போலீஸில் புகாரளித்துவிட்டதாக ஒரு இந்து கணவன் மனைவி அவனிடம் வந்தனர். படிக்கட்டுகள் பற்றிய பிரச்சினை ஒன்றுக்காக அந்த வீட்டார் போலீஸிடம் போயிருக்கிறார்கள். அந்தக் கணவன் மனைவி சொன்னதைக் கேட்டு முடித்ததும், குணால் அவர்களோடு உள்ளூர் காவல் நிலையத்துக்குச் சென்று அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்கள் மேல் எதிர்வழக்கு பதிய உதவினான். குணாலின் சகோதரனும் நானும் அந்த சிறிய ஒற்றையறை நிலையத்துக்கு வெளியே காத்திருந்தோம். குணால் உள்ளே சென்று போலீஸ்காரர்களோடு கை குலுக்குவதை திறந்திருந்த கதவின் வழியாகப் பார்த்தேன். ஒரு மேசைக்கு எதிரே அந்தக் கணவன் மனைவியை உட்கார வைத்துவிட்டு அவர்களுக்குப் பின் அவன் நின்றுகொண்டான். பத்து நிமிடங்களில் அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். அவன் அவர்களிடம், “அவங்க (பக்கத்துவீட்டார்) பிரச்சினை பண்ணா அவங்கள வீட்டுல இருந்து வெளியே இழுத்துப் போட்டுரலாம்” என்கிறான்.

2

”விஷ்வ இந்து பரிஷத்தும் பஜ்ரத் தளமும் சங்-இலிருந்து (ஆர்எஸ்எஸ்) மாறுபட்டவை” என்கிறார் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சந்தன்பாய்.

சங் சண்டை போடுவதோ தங்கள் பசங்களை அனுப்பி பிரச்சினை செய்வதோ கிடையாது. அவர்கள் உடற்பயிற்சி, தேசபக்தி பாடல்கள் வழியாக அடிப்படையை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள்.

தன் பேரனை கையில் தூக்கி ஆட்டியபடியே இப்போது எல்லாம் தணிந்திருப்பதாகச் சொல்கிறார் சந்தன்பாய்.

மேல இருக்கும் தலைவர்கள் பஜ்ரங் தளம் வி.ஹெச்.பி கிட்ட இருந்து எந்தச் செயல்பாட்டையும் எதிர்பாக்குறது மாதிரித் தெரியல. பல மாதங்களா எந்த சம்பவமோ, கூட்டமோ, கட்டளைகளோ இல்ல.

பஜ்ரங் தளம் போன்ற இயக்கங்கள் செயல்பாடு நிறைந்த, செயல்பாடற்ற காலகட்டங்கள் என்று மாறிமாறி இயங்குபவை. தேர்தல் காலங்களில் வழக்கமாக நிறைய செயல்பாடுகள் இருக்கும். அவை இத்தகைய செயல்பாடு நிறைந்த காலகட்டத்தில் இருக்கும்போதுதான் அவற்றைப் பற்றி செய்திகளில் கேள்விப்படுகிறோம்.

ஆனால் குணால் போன்ற இளைஞர்களின் பார்வையில், வாக்காளர்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி தேர்தலில் ஜெயிக்கும் உத்திகளைத் தாண்டியும் இத்தகைய இந்துத்துவ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தத் தேர்தல் உத்திகள் உண்மையும் முக்கியமானவையும்தான், ஆனால் இந்த இயக்கங்களால் இவர்களுக்குக் கிடைப்பது என்ன என்பதை தேர்தலைக் கொண்டு புரிந்துகொள்ள முடியாது. ஒரு நிலையான வேலைக்கான அல்லது எந்தவிதமான சமூக பொருளாதார முன் நகர்வுக்கான வாய்ப்போ உறுதிப்படுத்தப்படாத ஒரு வாழ்க்கையில் இத்தகைய அமைப்புகள் பல இளைஞர்களுக்கும் தங்களுடைய நிலையற்ற அன்றாடத்தை விட பெரிய பிரமாண்டமான ஒன்றின் பகுதியாக இருக்கும் வாய்ப்பை அளிக்கின்றன. போலீஸ் போன்ற அதிகாரமிக்க அரசு அதிகார மட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பைத் தருகின்றன. அவர்களுக்கு “ஆண்மை” பலம் அதிகாரம் போன்ற உணர்வுகளைத் தருவதுடன், காப்பாற்றவும் அழிக்கவும் அவர்களுக்கு ஏதோ ஒன்றைக் தருகின்றன.

குணாலிடம் என்ன வேலை செய்கிறான் என்று கேட்டீர்களானால் பேச்சை மாற்றிவிட முயல்வான். “நான் துணி வாங்கி விக்கிறேன். துணிய மொத்த விலைக்கு வாங்கி சின்ன கடைக்காரர்களுக்கு வித்து லாபத்துல கொஞ்சம் பங்க எடுத்துப்பேன்” என்பான். ஒருநாள் அவன் இல்லாத சமயத்தில், அவன் சகோதரர் வேறு ஒரு கதையைச் சொன்னார். “அவன் (குணால்) தெருத்தெருவாகப் போய் ஹோசியரி சாமான் விக்கிறான். அதான் இந்த லேடிஸ் விசயங்க…” குணால் என்னிடம் செல் நம்பர் கேட்டபோது, அதை அவனால் டைப் செய்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு மிகமிகக் குறைவாகத்தான் எழுதப்படிக்க வரும். முறையான படிப்போ திறமைகளோ இல்லாத சூழலில், உடல் உழைப்பு குறைவான அல்லது தொழிற்சாலைகளில் வேலை ஒன்றைப் பெறும் வாய்ப்பு அவனுக்கு மிகக் குறைவே. அவன் அகமதாபாத்தின் மிகப் பெரிய நிலையற்ற முறையற்ற தொழில்துறையின் பகுதியாக இருக்கிறான். அவன் அப்பா ஓமெக்ஸ் மில்ஸில் வேலை செய்வதற்காக நீண்ட காலத்துக்கு முன் ராஜஸ்தானிலிருந்து குஜராத்துக்கு வந்தவர், ஆனால் அந்த மில் மூடப்பட்டு நீண்ட காலமாகிறது. எல்லோரும் நல்ல துணியும், விலை உயர்ந்த ஃபோன்களும், நிறைய சம்பளம் தரும் வேலைகளும் கொண்டிருக்கும் அகமதாபாத்தில், குணாலும் அவன் நண்பர்களும் திறமையற்ற இந்துக்களிடம் இருந்தும், முஸ்லிம் துரோகிகளிடம் இருந்தும் இந்து மதத்தைக் காப்பாற்றுவதில் பெருமை கொள்கின்றனர்!

இந்த ஏரியாவுல நாங்க வி.ஹெச்.பி ஆளுங்கன்னு தெரியாத ஒரு முஸ்லிம்கூட கிடையாது. நாங்க கட்டர்.

கட்டர் (வெறி பிடித்தவர்) என்பது இங்கே ஒரு வசைச் சொல் கிடையாது, அது ஒரு பெருமைக்குரிய பதக்கம்.

அவர்களது செயல்பாடுகளுக்குக் குறுக்கே வரும் எவரையும் அச்சுறுத்துவதன் வழியாக இந்தப் பெயரை வளர்த்துக் கொள்கிறார்கள். அந்தப் பகுதியில் வசிக்கும் ஓர் இந்து தனது வீட்டுக்குப் பக்கத்தில் கோவில் கட்டுவதை எதிர்த்து போலீஸைக் கூப்பிடுவதாக மிரட்டும்போது, குணால் தன் பசங்களைக் கூட்டிச்சென்று அவரை அடித்து துவைக்கிறான். நகர முனிசிபாலிட்டி தெருவை விரிவுபடுத்துவதற்காக சட்டத்தை மீறிய ஒரு கோவிலை இடிக்க முயலும்போது, அவர்கள் அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். போலீஸ் வந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு ஆலோசனை கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.

கோவில் திரும்ப கட்டிக்கோங்க, ஆனா ராத்திரியில செய்யுங்க.

விரிவுபடுத்தப்பட்ட சாலையில் அவர்கள் இன்னும் பெரிய பிரமாண்டமான ஒரு கோவில் கட்டுகிறார்கள்.

அவர்களது பகுதியை ஒட்டியுள்ள ஒரு வீட்டை ஒரு முஸ்லிம் குடும்பம் வாங்கும்போது, குணால் அதை ”மிகவும் ஆபத்தானது“ என்று நினைக்கிறான். அந்த வீட்டின் புதிய உரிமையாளர் தன் வீட்டைப் புதுப்பிப்பதைத் தடுப்பதற்காக பால்கனியில் குப்பையைப் போடுமாறு தனது பக்கத்தில் வசிப்பவர்களிடம் சொல்கிறான்.

அவர்கள் காயப்போட்டிருந்த துணியைக் கூட இங்க இருக்க சில பெண்கள் கொளுத்தி விட்டார்கள். அவங்க (முஸ்லிம்கள்) எங்களை எதிர்க்க முயற்சி செய்தபோது, நான் போலீஸைக் கூப்பிட்டு சட்டுன்னு கலவரம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வாங்கன்னு சொன்னேன்.

குணாலுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் அவர்களின் இந்துத்துவ நோக்கத்திற்கு ஏற்ப போலீஸார் வளைந்துக் கொடுக்கிறார்கள். போலீஸுக்கும் இவர்களுக்கும் இடையே இருக்கும் பொதுவான இந்து விருப்பங்கள் அல்லது அரசியல் தொடர்புகளை வைத்து போலீஸிடம் கோரிக்கைகள் வைக்கிறார்கள், அழுத்தம் கொடுக்கிறார்கள். ஒரு இந்து ஆள் தன் வீட்டுக்குப் பக்கத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு கோவில் கட்டப்படுவதை எதிர்த்தபோது, ஒரு முஸ்லிம் போலீஸ்தான் அவரிடம் “என்ன மாதிரியான இந்து நீ?” என்று கேட்டதாக குணால் சொல்கிறான். போலீஸ் இவர்களுக்கு ஆதரவாக தலையிடாதபோது என்ன நடக்கும்? “நாங்க மகாலக்‌ஷ்மில (அகமதாபாத்தில் இருக்கும் பஜ்ரங் தள அலுவலகம்) இருக்க எங்க தலைவருங்களுக்கு ஃபோன் அடிச்சு போலீஸ்கிட்ட பேச சொல்வோம்.” 2002 போன்ற ‘சிறப்பான’ சூழ்நிலைகளில் அரசும் வழிக்கு வரும். இவர்களது வேலையும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கண்ணாடி அணிந்து அமையாக இருக்கும் ஜெய்யைப் பார்த்தால் அவன் ஒரு கசாப்பு நிலையத்துக்குள் கேமராவும் இரண்டு நண்பர்களுமாக நடுராத்திரியில் திருட்டுத்தனமாக நுழைவதைக் கற்பனை செய்வது கடினம். பின்னர் அவர்கள் தம் பதிவுசெய்ததை உள்ளூர் எம்எல்ஏவுக்கும் போலீஸ் கமிஷனருக்கும் அனுப்பினர். வாயில் வெத்தலை சிவந்திருக்க பின்னால் நிற்கும் ஜெய், இந்தப் பசங்க தங்களது இன்னொரு வாழ்க்கையின் அடையாளங்களைக் காண்பிக்கும்போது சிரிக்கிறான்: ஒரு நீளமான, தடியான பழுப்பு லத்தி அவன் பைக்கில் மறைவாக சொருகிவைக்கப் பட்டிருக்கிறது. அவன் சிவில் பாதுகாப்புக் கமிட்டியின் உறுப்பினர்.

இரண்டு வாரத்துக்கு முன்ன இங்க எதிர்க்க இருக்க முஸ்லிம் ஏரியால இருந்து ஒரு டஜன் கன்னுக்குட்டிங்கள காப்பாத்தினோம். எங்களுக்கு பசு அம்மா மாதிரி, அவனுங்களுக்கு வெறும் சாப்பாடு. பிரிண்டிங் பிரஸ்ஸுக்குப் போயிருக்கீங்களா? அங்க காகிதத்த ரெண்டா நறுக்க ஒரு பிளேட் வெச்சிருப்பாங்க. இவங்க அந்த மாதிரி ஒரு பிளேட் அப்படியே தலைய வெட்டுற மாதிரி ஆட்டோமேட்டிக் இயந்திரம் வெச்சிருக்காங்க. அப்புறம் பொணத்த எடுத்து கழுவிடுவாங்க. பார்க்கும்போதே ஒடம்பெல்லாம் சிலிர்த்துடும்.

பக்ரீதுக்கு முன், இந்தப் பசங்க கூட்டமாகச் சேர்ந்து முஸ்லிம் பகுதிகளுக்குள் அடாவடியாக நுழைந்து கன்றுகளை மீட்கிறார்கள். ஆனால் அவர்கள் தனியாக இல்லை.

”ரெய்டின்போது நாங்கள் போலீஸ் கண்ட்ரோல் எண்ணுக்கு அழைத்துக்கொண்டே இருந்தோம்.”

“இந்த மீட்பு மிஷன் எல்லாம் ரொம்ப ஆபத்தானதில்லையா?”

“ஆமா பின்ன, ஆனா எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கு. போலீஸுக்கு நாங்க பஜ்ரங் தள ஆளுங்க, இந்த வேலைதான் செய்யுறோம்னு தெரியும் அப்டின்றதால எங்களுக்கு ஆதரவு கொடுக்குறாங்க.”

ஆனால் போலீஸும் குணாலைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒருநாள் மாலை குணாலும் நானும் அவன் வீட்டுக்கு வெளியிலிருக்கும் கட்டிலில் உட்கார்ந்து அவனது புதிய சாம்சங் ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது இரண்டு பேர் பைக்கில் வந்து, தெருவில் அந்தப் பக்கம் இருந்து எங்களைப் பார்த்து கைகாட்டினார்கள். குணால் ஃபோனை என்னிடம் கொடுத்துவிட்டு அவர்களை நோக்கிச் சென்றான். அவர்கள் சென்ற பின் குணால் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.

மஃப்டில இருக்க போலீஸ். அவங்க எங்களுக்கு நிறைய உதவி செய்வாங்க, அதனால அவங்க கூட போய் பேசித்தான் ஆகணும்.

குணாலின் முஸ்லிம் அண்டை வீட்டாருடைய வீடுகள் பெரிதாகவும் நன்றாகவும் இருக்கின்றன.

நாங்க கூரை வீட்டுல இருக்கோம், அவங்க டவர்ல (அடுக்குமாடிக் கட்டடங்கள்) இருக்காங்க. கலவரம் ஆகும்போது அவங்க கல்லும் பெட்ரோல் பாமும் வீசுவாங்க. ஆனா எங்க கல் அவங்கள எட்டவே எட்டாது.

தூரத்தில் இருக்கும் கட்டடங்களை உற்றுப் பார்க்கும்போது குழல் விளக்கால் ஒளியூட்டப்பட்ட ஒரு அறையைப் பார்க்கிறேன். ஒரு மனிதரின் உருவம் தெரிகிறது. எனக்கருகே ஒரு மெல்லிய குரல் கேட்கிறது. “நம்மளச் சுத்தி எல்லாப் பக்கமும் முஸ்லிம்தான்”. கைத்தடியைப் பிடித்தபடி குனிந்து நடந்துகொண்டிருக்கும் ஒரு கிழவி என்னை நிமிர்ந்து பார்க்கிறார். வேறு எதுவும் சொல்லாமல் தொடர்ந்து நடக்கிறார். சிறிய ஒற்றை அறை வீடுகளுக்குள் அவ்வப்போது நுழைந்து வெளியேறியபடி எங்கள் மாலை நடை தொடர்கிறது. குணால் எல்லோரையும் சத்தமாக “ஜெய் ஸ்ரீராம்” சொல்லியபடிதான் எதிர்கொள்கிறான். சிலர் எங்களை வீட்டுக்குச் சாப்பிட அழைக்கின்றனர். சிறுவர் கூட்டம் ஒன்று குணால் பெயரை ஜெபித்தபடி எங்களைப் பின்தொடர்கிறது. அவன் அத்தை வீட்டுக்குப் போனபோது, அவர் சமர்மதி ஆற்றங்கரை அமைப்பால் இடம்பெயர்க்கப்பட்ட குடிசைவாசிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட அரசாங்க வீடுகளைப் பற்றி பேச முயல்கிறார். நாங்கள் கிளம்பும்போது அவனிடம் ஒரு அஃபிடவிட்டைத் தருகிறார். “நான் பரோட் கிட்ட பேசுறேன்” என்கிறான் குணால்.

3

குணால், ஜெய், நான் மூவரும் அகமதாபாத்தில் எல்லிஸ் பாலத்தின் மேல் பைக்கில் ட்ரிபிள்ஸ் போய்க்கொண்டிருக்கிறோம். ஜெய் முழு வேகத்தில் டிராஃபிக்குக்குள் வண்டியை வளைத்து வளைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறான். எனக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கும் குணால் இன்னும் வேகமாகப் போய் முன்னால் போய்க்கொண்டிருக்கும் பைக்கைத் தாண்டச் சொல்கிறான். ”அவ பைக்குல கால விரிச்சு உட்கார்ந்திருக்கத பாரு” என்று தாடையை நீட்டி, எங்களுக்கு முன்னால் ஒரு பைக்கின் பின்சீட்டில் அமர்ந்திருக்கும் புர்கா அணிந்த பெண்ணைக் காட்டுகிறான். சிக்னலில் நாங்கள் நின்றோம். குணால் அந்தப் பெண்ணையும், பளபளப்பான நீல நிற ஸ்போர்ட்ஸ் பைக்கையும் முறைத்தான். அவர்கள் எங்களைக் கடந்துபோகும்போது, ஜெய்யிடம் அவர்களைப் பின்தொடரச் சொல்கிறான். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சோர்வாகி வீட்டுக்குத் திரும்பினான்.

ஒருநாள் குணால் கறுப்பு டீஷர்ட் அணிந்திருந்தான். அதன் பின்புறம் நீல நிறத்தில் லஜ்ஜா பச்சாவோ (மானத்தைக் காப்போம்) என்றும், முன்பக்கம் நாகரீக் ரக்‌ஷா சங்கதன் (குடிமக்கள் பாதுகாப்புக் கமிட்டி) என்றும் எழுதப்பட்டிருந்தது. அது “பெண்களையும் அவர்கள் மானத்தையும் காப்பாற்றச் செயல்படும் ஒரு பழைய அமைப்பு” என்றான். டீஷர்ட் பற்றிய பேச்சில் அவனுக்கு ஒரு காமெடியான கதை ஞாபகம் வருகிறது.

”கொஞ்ச நாள் முன்ன ஒரு பையனும் பொண்ணும் ஆட்டோல போறத பார்த்தேன். அந்தப் பையனோட கை பொண்ண சுத்தி இருந்துச்சு. நான் நெத்தியில டிக்கா வைச்சிருந்தேன், அவங்கள போய் நிறுத்தினேன்.

உன் பேர் என்ன?

நீங்க யாரு?

நான் விஹெச்பில இருக்கேன். உன் பேர் என்ன?

த்ரிலோச்சனா.

சரி. உன் பேர் என்ன?

ஃபரூக்.

ஃபரூக், நீ இவளோட என்ன செய்யுற?

இவ என் ஃப்ரெண்ட்.

சரி. இப்படித்தான் உன் ஃப்ரெண்ட் கூட உக்காருவியா? தோள்ல கை போட்டுகிட்டு? இப்படித்தான் உன் அக்கா தங்கச்சி கூட உக்காருவியா?

அப்புறம் அவனப் போட்டு நல்லா அடிச்சேன். சுத்தி கூட்டம் கூடிடுச்சு. எல்லாப் பொண்ணுங்களும் ஸ்கூட்டிய எடுத்துகிட்டு பறந்துட்டாங்க.”

குணாலையும் அவன் நண்பர்களையும் இந்து தேசியவாதத்தில் அல்லது இந்திய அரசியலில் விதிவிலக்கான அம்சங்களாகக் கருதுவது தவறாகும். இவர்கள் இந்து ஆதிக்கத்தை மையநீரோட்டமாய் ஆக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொண்டிருக்கும் இந்து வலதுசாரி வலைப்பின்னல்களைச் சார்ந்தவர்கள். இந்து ஆதிக்கத்தின் செய்தியைப் பரப்ப வன்முறை மட்டும் போதாது, புது ஆதரவாளர்களைச் சேர்க்கவேண்டும், புதிய பகுதிகளுக்கும் நுழைந்து அனுதாபிகளை வென்றெடுக்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு உதவுவது போன்ற மிகச் சாதாரண விசயங்களைக் கொண்டதுதான் இவர்களின் வேலை.

பிப்ரவரி 2016ல் குணால் வீட்டிக்கு வெளியிலிருக்கும் கட்டிலில் அமர்ந்து அவனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவனைத் தேடி ஒரு ஆள் வந்தார். வந்தவர் யாரென்று குணாலுக்குத் தெரியவில்லை. அவருக்கு உதவி வேண்டியிருந்தது. அவர் வீட்டுக்கும், பக்கத்திலிருக்கும் மசூதிக்கும் ஒரு சுவர் பொதுவாக இருந்தது. மசூதி நிர்வாகிகள் இவரின் அனுமதி இல்லாமலேயே சுவரின் உயரத்தைக் கூட்டியிருக்கிறார்கள், உயர்த்தும்போது இவரது தகரக் கூரையில் ஒரு பகுதியையும் வெட்டிவிட்டார்கள். “என் வீட்டின் சுவர் களிமண் சுவர். நான் உள்ளே இருக்கும்போது அது இடிந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது?” என்றார் அவர்.

”ஒரு பாவப்பட்ட இந்து முஸ்லிம்களால் துன்புறுத்தப்படும்” இந்தச் சூழலில், தான் தலையிட்டுதான் ஆகவேண்டும் என குணால் உடனே குறிப்பிட்டான். வந்தவரும் அமைதியாக ஆமோதித்துத் தலையசைத்தார். “நான் அவங்ககிட்ட பேசிப் பாக்குறேன், அவங்க புரிஞ்சிக்காட்டி நாம் போலீஸ்கிட்ட புகார் கொடுக்கலாம்” என்றான் குணால். வந்தவர் திரும்பி வீட்டுக்கு நடக்கத் தொடங்கினார். 2002ல் எரிக்கப்பட்ட அதே மசூதிக்குப் பக்கத்திலிருக்கும் தன் வீட்டுக்கு.

நன்றி: PaperPlane207

(தமிழில்: வயலட்)

Related posts

Leave a Comment