media one c dawoodகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

“பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸை விமர்சித்ததற்காக ‘மீடியா ஒன்’ இலக்காக்கப்பட்டிருக்கிறது” – நிர்வாக ஆசிரியர் சி.தாவூத்

Loading

கடந்த ஜனவரி 31 அன்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட ஆணையின் அடிப்படையில், மீடியா ஒன் செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. (பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடை விதிக்கப்படுகிறது என்று மட்டும் அரசாங்கம் கூறியிருப்பதாக அப்போது அந்தச் சேனலின் ஆசிரியர் பிரமோத் ராமன் கூறினார்). மீடியா ஒன் தொலைக்காட்சிக்கு பாதுகாப்பு அனுமதி (security clearance) மறுக்கப்படுவதற்குக் காரணம் அது முஸ்லிம்களால், குறிப்பாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பால் நிர்வகிக்கப்படுவதால்தான் என்று கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, “உறுதியாகச் சொல்ல முடியவில்லை” என்று அந்த மலையாள சேனலின் நிர்வாக ஆசிரியர் சி.தாவூத் பதிலளித்தார்.

2011ல் மீடியா ஒன் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதில் பணிபுரியும் தாவூத், மத்திய அமைச்சகத்தின் உத்தரவு சேனல் நிர்வாகத்தை “அப்பட்டமாக மிரட்டும்” நோக்கில் விடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்குக் காரணம் இந்தச் சேனல் “மத்திய பாஜக அரசை விமர்சிப்பதுதான்” என்றும் உறுதிபட தெரிவித்தார்.

கேரள உயர்நீதிமன்றம் தகவல் & ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஆணையை ஃபிப்ரவரி 2 (புதன்கிழமை) வரை ஒத்திவைத்த பிறகு மீடியா ஒன் தொலைக்காட்சி மீண்டும் இயங்கத் தொடங்கியது. அதன் ஆசிரியர் பிரமோத் ராமன் கூறியது:

“தகவல் & ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஆணை எங்கள் சேனலுக்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி தர மறுத்ததன் பின்னணியில் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொலைக்காட்சி மாத்யமம் பிராட்காஸ்டிங் லிமிடட் என்ற நிறுவனத்தின் ஓர் அங்கம்தான். ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதியை மறுத்திருக்கிறது. 2016ல்கூட இதேபோன்று நடந்தது.”

தி குவிண்ட்-க்கு தாவூத் விளக்கமளிக்கையில், “விளிம்புநிலை மக்கள் தொடர்பான விவகாரங்களை நாங்கள் பரவலாக ஒளிபரப்பி வந்திருக்கிறோம்; சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள், விவசாயிகள் போராட்டங்கள் உட்பட.” இந்தச் சேனல் “தேச விரோதமாக” செயல்படுவதாக ஃபிப்ரவரி 1 அன்று கேரள மாநில பாஜக தலைவர் பழி சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டமும் விவசாயிகள் போராட்டமும்

மீடியா ஒன் சேனல் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2013ல் அதற்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்ட சமயத்தில் தாவூத் அதன் முதல் கோழிக்கோடு அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறார். ”ஊடகம் என்பது குரலற்றவர்களின் குரலாக இருப்பதாகச் சொல்வது ஒரு வழக்கொழிந்த சொற்றொடர். மீடியா ஒன்-னைப் பொறுத்தவரை நாங்கள் தெளிவாக இருக்கிறோம், யாரும் இங்கு குரலற்றவர்கள் இல்லை. ஆனால், மிகப் பெரும்பாலானவர்களின் குரல் செவிமடுக்கப் படுவதில்லை” என்று சொல்லும் தாவூத், “யாருடைய குரல்களெல்லாம் செவிமடுக்கப் படவில்லையோ அவர்களின் செய்திகளையும் ஒளிப்பரப்புவதாக மீடியா ஒன் தன் செய்திக் கொள்கையிலேயே உறுதியளிக்கிறது” என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்தத் தொலைக்காட்சியின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்ததற்கான காரணத்தை சேனல் நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கவில்லை. என்றாலும், மாத்யமம் பிராட்காஸ்டிங் லிமிடட் ஜனவரி 19ம் தேதி தகவல் & ஒளிபரப்பு அமைச்சகத்துக்குக் கொடுத்த பதிலில், பாதுகாப்பு அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்லாததால் (ஜனவரி 5ல் அமைச்சகம் விடுத்த) ஷோகாஸ் நோட்டீஸ் அதனளவில் மேம்போக்காக இருக்கிறது….பாதுகாப்பு அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணங்களை ஷோகாஸ் நோட்டீஸ் முறையாகச் சொல்லாததன் விளைவாக, நாங்கள் இதுதொடர்பான எங்கள் வாதங்களை சரியான விதத்தில் முன்வைக்க முடியாததுடன், எங்களின் மீதான குற்றச்சாட்டுகளைக் காத்திரமாக எதிர்கொள்ளவும் முடியவில்லை என்று கூறினார்.

இந்தத் தொலைக்காட்சி கடந்த இரு ஆண்டுகளாக சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்த்திருக்கிறது. இந்தியக் குடியுரிமைக்கு மதத்தையும் ஒரு அளவுகோலாக்கிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு 2019 டிசம்பர் 12 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்தபோது, ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடந்த மாணவர் போராட்டங்கள் குறித்து மீடியா ஒன் செய்தி வெளியிட்டது. 2019 டிசம்பர் 15ம் தேதி அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையையும் அது ஒளிபரப்பியது. “ஜாமியாவிலிருந்து கிடைத்த முதல்கட்ட காட்சிகள் எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. (லதீதா ஃபர்ஸானா, ஆயிஷா ரென்னா ஆகிய) இரு இளம் பெண்கள் போராட்டத்தை வழிநடத்தினர். அந்தப் போராட்டங்களை முதன்முதலில் ஒளிபரப்பியது நாங்கள்தான்” என்கிறார் தாவூத்.

2020ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் டெல்லியில் கலவரம் வெடித்தபோது, சுமார் 53 உயிர்களைக் காவு வாங்கிய அந்த ரத்தக்களறி தொடர்பான செய்திகளை டெல்லியிலுள்ள மீடியா ஒன்-னின் தேசிய செய்தியகம் சேகரித்தது. அதைத் தொடர்ந்து தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரத்துக்கு ஒளிபரப்பைத் துண்டித்தது.

“எங்களது ஆசிரியர் குழுவின் கொள்கை முடிவுகள் ஒன்றிய அரசின் கொள்கைகளை, சிஏஏ – என்ஆர்சி விவகாரங்களில் உட்பட, விமர்சிப்பதாக அமைகிறது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஸின் வகுப்புவாத அரசியலையும் விமர்சித்து வருகிறோம்” என்று சொல்லும் தாவூத், இவ்வாறு இருந்தபோதிலும் செய்தி சேகரிப்பதில் புறவயமான அணுகுமுறையைத் தாங்கள் மேற்கொள்வதாக குறிப்பிடுகிறார்.

“அரசின் கொள்கைகள் மீதான எங்கள் விமர்சனத்தில் புறவயமான அணுகுமுறையையும் உண்மையையும் கடைப்பிடிக்கிறோம். விமர்சனபூர்வமாக இருப்பதுதானே ஊடகத்தின் பணி” என்று தெரிவிக்கும் அவர், 2020, 2021ல் டெல்லியின் எல்லைப்புறங்களில் விவசாயிகள் போராட்டம் வெடித்தபோது, களத்திலிருந்து மீடியா ஒன் பல்வேறு கோணங்களையும், காட்சிகளையும் ஒளிபரப்பியதாகச் சொல்கிறார்.

மேலும், மீடியா ஒன் ஒளிபரப்பை நிறுத்த தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு கேரளாவின் ஊடகப் வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கேரள ஊடங்கள் மீதான மிரட்டல்

பல தசாப்தங்களாய் பத்திரிகையாளராகப் பணியாற்றிவரும் தாவூத், மத்திய அமைச்சகத்தின் இம்முயற்சி கேரளாவிலுள்ள ஊடகங்களின் குரலை ஒடுக்கவே மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடுகிறார். “கேரளாவில் ஊடகங்கள் ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும், சங் பரிவாருக்கு எதிராகவும் இருக்கின்றன. நான் கருதுவது என்னவென்றால், எங்களை மிரட்டுவதைத் தாண்டி கேரளாவிலுள்ள எல்லா செய்தித் தொலைக்காட்சிகளையும் மத்திய அமைச்சகம் மிரட்ட நினைக்கிறது.”

இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு வரவேற்கத்தக்க சமூக சூழல் இல்லை என்று கூறும் அவர், அந்தக் கட்சிக்கு எதிராக இப்படியான அரசியல் சூழலை உருவாக்குவதில் மீடியா ஒன் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறது. “ஒளிபரப்புத்துறையில் எங்களின் இருப்பு, எங்களைப் போன்ற எடிட்டோரியல் கண்ணோட்டங்களைக் கொண்ட செய்தித் தொலைக்காட்சிகளின் இருப்பு பாஜகவின் வளர்ச்சியை பாதித்துள்ளது. இதனால் மீடியா ஒன் மீதும், இதர செய்தி ஊடகங்களின் மீதும் பாஜகவுக்கு அரசியல் ரீதியிலான பகை இருக்கிறது” என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் இலக்காக்கப்படுகிறோம்”. தற்போதைக்கு இந்தப் பின்னடைவு இருந்தாலும், மீடியா ஒன் செய்தி வெளியிடுவதில் எந்த சமரசமும் செய்யப் போவதில்லை.

செய்தி வெளியிடுவதில் மீடியா ஒன் தொலைக்காட்சிக்கு மிகத் தெளிவான கொள்கை இருக்கிறது என்று கூறிய தாவூத், “நாங்கள் புறவயமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தாலும் எங்களுக்கென்று சார்பு நிலை உண்டு. செவிமடுக்கப் படாதோரின் பக்கம் நாங்கள் நிற்போம் என்பது எங்களின் தெளிவான கொள்கை நிலைப்பாடு. இதில் நாங்கள் உறுதியாக இருப்போம்” என்று தெரிவிக்கிறார். இந்த நிலைப்பாட்டுக்கான விலையை இப்போது அந்தச் சேனல் கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தகவல் & ஒளிபரப்புத்துறைக்கு எதிராக மாத்யமம் பிராட்காஸ்டிங் லிமிடட் விடுத்த ரிட் மனுவை கேரள உயர்நீதிமன்றம் ஃபிப்ரவரி 2ம் நாள் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (தற்போதைய நிலவரம்: நீதிமன்றம் மத்திய அமைச்சகத்தின் தடை உத்தரவை இம்மாதம் 7ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது.)

மூலம்: ‘MediaOne Targeted for Being Critical of BJP, RSS’: Managing Editor C Dawood

தமிழில்: நாகூர் ரிஸ்வான்.

Related posts

Leave a Comment