ஹிஜாப்: எது பொதுப் பண்பாடு?
கர்நாடகாவில் இந்து தேசியவாதிகளால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது சர்ச்சையாக்கப்படுவது தொடர்பாக OH Tamil யூடியூப் சேனலுக்கு மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர் நாகூர் ரிஸ்வான் அளித்த நேர்காணலின் எழுத்து வடிவம் இது.
நேர்கண்டவர்: திரவிய முருகன்
எழுத்தாக்கம்: ரிவின் பிரசாத்
கே: கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னை நிலவும் சூழலில், முஸ்கான் என்ற முஸ்லிம் மாணவியை ஜெய்ஸ்ரீராம் என்று சத்தமிட்டபடி ஒரு கூட்டம் தொந்தரவு செய்யும் வீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது. அதைப் பார்க்கும்போது உங்களுக்கு என்னவகையான உணர்வு ஏற்பட்டது?
ப: இந்தியா எப்படி ஆகக்கூடாது என்று நாம் விரும்பினோமோ அதற்கு முற்றிலும் மாறான ஒரு காட்சியைத்தான் நேற்று நாம் பார்த்தோம். இவற்றை பார்க்கிறபோது அச்சமும் ஆத்திரமும் ஒருசேர ஏற்படுகிறது. அவரிடம் இப்படி தகாத முறையில் நடந்துகொண்டவர்களை மாணவர்கள் என்று சொல்வது சரியாக இருக்குமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. அவரை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டுக்கொண்டு அச்சுறுத்தவும் மிரட்டவும் முயற்சித்திருக்கிறது ஒரு கும்பல். அந்த சமயத்தில் அம்மாணவி வெளிப்படுத்திய அந்த அறச்சீற்றமும் துணிச்சலும் நமக்கெல்லாம் பாடமாக உள்ளது.
கே: எந்த விதத்தில் பாடமாக இருக்கிறது?
ப : அந்தத் துணிச்சல் நம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. இந்துத்துவ சக்திகள் இன்று மிகப்பெரும் அளவில் வளர்ந்திருக்கின்ற சூழலில், அவர்களை எதிர்த்து நிற்பவர்களுக்கு இந்தத் துணிச்சல் தேவைப்படுகிறது. பெரும்பான்மைச் சமூகம் என்று சொல்லப்படும் சமூகத்திலிருந்தும் இன்று ஹிஜாபுக்கு ஆதரவான குரல்கள் வருகின்றன. ஆனால் அவை இன்னும் அதிகமாக எழ வேண்டும். அவ்வாறு எழாததற்குக் காரணம் இந்துத்துவத்தின் மீது பெரும்பான்மையினர் கொண்டுள்ள அச்சமா அல்லது அவர்களை இந்துத்துவம் பாதிக்காது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. முஸ்கான் வெளிப்படுத்திய துணிச்சல் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும்போது கண்டனக் குரல்கள் வலுக்கும். சங் பரிவார்களின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட அதுவொரு ஆரம்பப் புள்ளியாக அமையும்.
கே: அந்த வைரல் வீடியோவைப் பார்த்தபோது அச்சமும் ஆத்திரமும் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். அச்சம் ஏற்படுவதாக நீங்கள் குறிப்பிட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆத்திரம் என்று எந்த அடிப்படையில் குறிப்பிட்டீர்கள்?
ப: ஹிஜாப் அணிவது ஒரு அடிப்படையான உரிமை. அது யாரையும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அதற்கு எதிராக ஒரு கும்பல் ஒருங்கிணையவும், அப்படி அணிவோரைத் தொந்தரவு செய்யவும் முடிகிறது என்றால் ஆத்திரம் வரத்தானே செய்யும். என் உரிமைகளில் கை வைக்கும்போது எனக்கு ஆத்திரம் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஏனெனில் அதுதான் இயல்பு. அந்த ஆத்திரத்தையும் துணிச்சலையும் நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம். முஸ்கான் என்ற மாணவி அல்லாஹு அக்பர் எனும் முழக்கத்தின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கே: ஜெய் ஸ்ரீராம் என்பதற்கு இணையான முழக்கமாய் அல்லாஹு அக்பர் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறதே?
ப: இரு முழக்கங்களையும் சமப்படுத்த முடியாது. இரு மதங்களுக்கு இடையிலான சண்டை என்றும் இதைப் பார்க்கக் கூடாது. பெரும்பான்மைவாதம் பண்பாட்டு ரீதியாக முஸ்லிம்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது. அதற்கு எதிரான குரல்தான் அல்லாஹு அக்பர். ஜெய் ஸ்ரீராம் என்று தாக்குதல் தொடுப்பவர்கள் சொல்கிறார்கள். தற்காப்புக் குரலாகவும் விடுதலையின் முழக்கமாகவும் அல்லாஹு அக்பர் முன்வைக்கப்படுகிறது. இதை எப்படி புரிந்துகொள்வது என்கிற ரீதியில் ஓரிரு கவிதைகளை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது. இரண்டு கோஷங்களையும் ஒன்றுபோல் பார்க்கக் கூடாது எனும் தெளிவு மக்களுக்கு ஓரளவு ஏற்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
முஸ்கான் அல்லாஹு அக்பர் சொன்னதை வெறும் மத கோஷம் எனும் எல்லைக்குள் சுருக்க முடியாது. அது என் இருப்புக்கும், அடையாளத்துக்கும், பண்பாட்டுக்கும், என்னுடைய முழக்கத்துக்கும் இந்த நாட்டில் இடமிருக்கிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. பொது மக்களுக்கும் இச்செய்தி போய்ச் சேர்ந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். அதனால்தான் முஸ்லிம் அல்லாதோரும் இன்று அல்லாஹு அக்பர் சொல்கிறார்கள், தலைத்துணி அணிந்து தம் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகிறார்கள்.
கே: எல்லா மாணவிகளும் பள்ளியின் சீருடையைத்தான் அணிய வேண்டும் என்றும், இங்கு படிக்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதில்லை, ஒருசிலர்தான் இதையொரு பிரச்னையாக்குகிறார்கள் என்றும் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ப: அதில் பள்ளி நிர்வாகத்துக்கு என்ன பிரச்னை? உண்மையைச் சொன்னால், பொதுவெளியில் இஸ்லாமிய அடையாளங்களுடன் முஸ்லிம்கள் வாழ்வது இங்கு பெரும் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. அவை அச்சுறுத்தலாகவும், தேசத்தின் அடையாளத்துக்கு எதிரானதாகவும், பொதுநீரோட்டத்துக்கு எதிரானதாகவும் நிறுத்தப்படுகிறது. இந்தப் பிரச்னை புதிதல்ல. தமிழகத்திலும்கூட பல பள்ளிகளில், நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர அனுமதியில்லை. நான் படித்த பள்ளியில், வேலை பார்த்த பன்னாட்டு நிறுவனத்தில் இச்சூழல் நிலவியது. புர்காவை கலைவதற்குக்கூட தனியாக இடமிருக்காது. இதுவெல்லாம் ஒருவகையில் இந்தச் சமூகம் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதி. ஆனால் அதுவே இயல்பாக்கம் செய்யப்பட்டுவிட்டது. முஸ்லிம் பெண்கள் பொதுவெளியில் இயங்குவதை இச்சூழல் சிக்கலாக்கியிருக்கிறது.
இந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டினால் அதில் நியாயம் இருக்கிறதா, இல்லையா என்று பார்க்க வேண்டுமே அன்றி, சிலர் மட்டுமே பிரச்னை செய்கிறார்கள், இதற்குப் பின்னால் ஏதோ சதி இருக்கிறது என்றெல்லாம் திசை திருப்பக் கூடாது.
கே: ஒரு வழிபாட்டுத் தளத்துக்குச் சென்றால் அங்கு சில உடைக் கட்டுப்பாடுகள் இருக்கும். அதை ஏற்றுக்கொண்டால் உள்ளே சென்று வழிபட அனுமதிப்பார்கள். அதேபோல் கல்விக்கூடத்தில் ஒரு குறிப்பிட்ட சீருடையைத்தான் அணிந்துவர வேண்டும் என்கிறார்கள். இதில் என்ன தவறு?
ப: எந்தவொரு மாணவராலும் தன் பண்பாட்டுப் பின்னணிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொள்ள முடியாது. இதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்துக்கள் பொட்டு வைப்பது இங்கு யாருக்கும் பிரச்னையாகப் படவில்லை. அவர்கள் காப்பு அணிவது, கயிறு கட்டிக்கொள்வது, சபரிமலை செல்லும் சீசனில் துண்டு – மாலை அணிவதெல்லாம் யார் கண்ணையும் உறுத்தவில்லை. சீக்கியர்கள் டர்பன் அணிவதும் அப்படித்தான். இதை நான் ஏட்டுக்குப் போட்டியாகச் சொல்லவில்லை. உண்மையிலேயே இவையெல்லாம் காலங்காலமாக இயல்பாக இருந்துவரும் நடைமுறை. ஏன் இப்போது ஹிஜாப் மட்டும் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது?
முஸ்லிம் பெண்கள் சீருடையைப் பின்பற்றுகிறார்கள். அத்துடன் தலைத்துணி அணிகிறார்கள். அதுவும் சீருடையுடைய ஷாலின் வண்ணத்தில்தான். இதில் யாருக்கு, என்ன சிக்கல்?
கே: கிறிஸ்துவ கல்விநிலையங்களில் பொட்டு, விபூதி அல்லது கயிறு கட்டுவது போன்ற எந்தக் குறியீடுகளும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், பல இடங்களில் அவற்றை அகற்றச் சொல்கிறார்கள் என்றும் இந்துத்துவவாதிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இப்போது எழும் எதிர்ப்புக் குரல்கள் பெரும்பான்மை மக்களின் அடையாளங்களை அகற்றச் சொல்லும்போது எங்கே போனது?
ப: இந்து அடையாளங்களுக்கு எந்த கிறிஸ்தவக் கல்வி நிறுவனத்தில் தடை இருக்கிறது என்பதை குற்றம்சாட்டுவோர்தாம் சொல்ல வேண்டும். நீங்கள் ஒரு எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரும்பான்மைக்கு எதிராக இந்நாட்டில் எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியாது. அதுபோல கிறிஸ்தவ நிறுவனங்களால் பெரும்பான்மையினரை எவ்வகையிலும் ஒடுக்க முடியாது. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மக்கள் தொகை வீதம் என்ன? நானும் இரு கிறிஸ்துவப் பள்ளிகளில் படித்திருக்கிறேன். மாணவர்கள் தம் மத அடையாளங்களுடன்தான் இருப்பார்கள். அதை யாரும் பிரச்னையாக்கவில்லை.
இன்னொன்று, மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பொதுப் பண்பாடு இருப்பதாக இங்கு கருதப்படுவதை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. இங்குள்ள காலண்டர்முறை தொட்டு கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் பெரும்பான்மை மதப் பின்புலம் இருக்கவே செய்கிறது. ஓர் அரசுக் கட்டடம் கட்டுவதற்கு முன் பூஜை செய்கிறார்கள், தீபாவளி அன்று பொது இடங்கள் கலைகட்டுகின்றன, இந்துப் பண்டிகையின்போது அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. ஆக, நீங்கள் மதச்சார்பின்மையின் பெயரால் மத அடையாளங்களை அழிக்க முயற்சித்தால் அது சிறுபான்மையினருக்குப் பாதகமாகவே அமையும். பொதுவெளியை மத நீக்கம் (secularization) செய்ய முற்படுவது ஆதிக்கப் பண்பாட்டை நிலைநிறுத்தவே உதவும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பிரான்ஸ். அங்கு எப்படி மதச்சார்பின்மையின் பெயரால் சிறுபான்மை மத அடையாளங்கள் ஒடுக்கப்படுகின்றன என்பது குறித்து பல ஆய்வுகள் வெளியாகியுள்ளன. பொதுப் பண்பாடு என்று இங்கே எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்க.
கே: கர்நாடகச் சம்பவத்தை எதிர்ப்பதாகச் சொல்லும் முற்போக்குவாதிகள் சிலர், ஹிஜாப் அணிவதோ புர்கா அணிவதோ பெண்ணடிமைத்தனத்தின் ஒரு வடிவம்தான் என்கிறார்கள். அதுகுறித்த உங்கள் கருத்து?
ப: ஹிஜாப் பெண்ணடிமைத்தனம் என்பது இவர்களின் கண்ணோட்டம் மட்டுமே. அதை அடிமைத்தனம் என்று தீர்மானிக்க இவர்கள் யார்? நான் எதைச் சாப்பிட வேண்டும், எதை உடுக்க வேண்டும், என்ன முழக்கம் வேண்டும் என்பதையெல்லாம் நான்தான் முடிவு செய்ய வேண்டும். ஹிஜாபை முஸ்லிம் பெண்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் இங்கு முக்கியம். இந்த முற்போக்காளர்கள் பாஜகவை எதிர்ப்பதாலேயே இந்த விஷயத்திலும் சரியாகப் பேசுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. இவர்களின் புரிதலில் நிறைய சிக்கல் உள்ளது. முஸ்லிம்களுடன் இவர்கள் திறந்த மனத்துடன் உரையாட வேண்டும். இவர்கள் இப்படி முன்முடிவுகளுடன் இருந்தால் உரையாடல் சாத்தியமில்லை. இன்னொரு முக்கிய விஷயம், இவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ முஸ்லிம் பெண்களை அடிமை என்றே சொல்கிறார்கள், சுய சிந்தனையற்றவர்கள் என்று சொல்லி அவர்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். இதற்கு இவர்களுக்கு முஸ்லிம் பெண்களே பதிலடி கொடுப்பார்கள். உண்மையைச் சொன்னால் இவர்கள் முஸ்லிம்களின் குரலுக்குக் காது கொடுக்கத் தயாராக இல்லை. இவர்கள் ஒருவிதமான சிந்தனைச் சிறையில் அடைபட்டுள்ளார்கள்.
கே: ஹிஜாப் விவகாரத்தில் அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
ப: அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சிறுபான்மையினர் அவரவர்களின் பண்பாடுகளுடன், அடையாளங்களுடன் இருப்பதைக் குற்றப்படுத்தக் கூடாது. அரசாங்கத்தையும் இப்போது ஜெய்ஸ்ரீராம் சொல்லி வன்முறையில் ஈடுபடுவோரையும் பிரித்துப் பார்க்க முடியாத சூழல் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அசதுத்தீன் உவைசி அவையில் கையெழுத்திடச் சென்றபோது ஒலித்த ஜெய் ஸ்ரீராம் என்ற அதே குரல்தான் நேற்றும் ஒலித்தது. இந்தக் குரல் அபாயமானது. அரசும் சிவில் சமூகமும் தன்னை சரிசெய்து கொள்ள வேண்டும்.