சர்மிளா சையத்குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஷர்மிளா ஸெய்யித் எனும் தொழில்முறை முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரகர்

ஷர்மிளா ஸெய்யித் போன்ற தொழில்முறை முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரகரை (professional islamophobe) பிரபலப்படுத்தியது இங்குள்ள பார்ப்பன லிபரல்கள்தாம். முஸ்லிம் சமூகத்தில் அவரொரு உதிரி என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்தும், அவரின் முஸ்லிம்/ பெண் அடையாளத்தை இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதன் வழியாக அந்தச் சமூகம் ஒரு சீழ்பிடித்த சமூகக் குழுவாக அடையாளப்படுத்தப்பட்டது.

உலகெங்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பண்பாட்டுச் சிக்கல்களை ஊதிப்பெருக்கி ஆதிக்கச் சமூகங்கள் தம் அதிகார அரசியலை முன்னெடுத்திருப்பதை நாம் அறிவோம். அதுதான் இங்கும் நடந்தது, நடக்கிறது. முஸ்லிம் பெண்களை சுயசிந்தனையற்றவர்கள், மீட்கப்பட வேண்டிய அபலைகள் என்பது போலவும், ஒட்டுமொத்த முஸ்லிம் ஆண்களும் பெண் வெறுப்பாளர்கள் என்பது போலவும் கட்டமைப்பதை ஷர்மிளா ஸெய்யித் ஒரு பிழைப்பாக வைத்திருக்கிறார். அபாண்டமான குற்றச்சாட்டுகளைக்கூட எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வன்மத்துடன் அவரால் வெளிப்படுத்த முடிகிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல, இஸ்லாமோ ஃபோபியா என ஒன்று இங்கு இல்லவே இல்லை என்கிற ரீதியில் அவரால் வாதிடவும் முடிகிறது.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பொதுப்புத்தியில் மண்டிக்கிடக்கும் அச்சத்தையும் காழ்ப்பையும் பாதுகாப்பது ஷர்மிளா போன்றோரின் முதன்மைப் பணிகளுள் ஒன்று. அதனால்தான் அவரின் வாசகர்கள் பெரும்பாலும் முஸ்லிமல்லாதோராக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் பற்றி அவர்கள் கொண்டுள்ள தப்பெண்ணங்களையும் முற்சாய்வுகளையும் வலுப்படுத்திக்கொள்ளவே அவரின் ஆக்கங்கள் உதவுகின்றன. அவை முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவதற்கான ‘நியாயத்தை’ வழங்குபவை என்பதால் வலதுசாரி முகாம் அவற்றை தங்களது செயல்திட்டத்துக்கு வலுச்சேர்ப்பவையாகக் கருதுகிறது.

இன்று இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புவது ஒரு லாபம் கொழிக்கும் தொழில். அதை செவ்வனே செய்து பெயர், புகழ், பணம், அதிகாரம் என அனைத்தையும் பெற முடிகிறது. ஷர்மிளா போன்ற பல இஸ்லாம் வெறுப்புப் பிரச்சாரகர்களுக்குள் இருக்கும் பொது அம்சங்களாக பின்வருவனவற்றைச் சொல்லலாம்: முஸ்லிம்/ பெண் அடையாளம், Victim playing, சர்வதேச அங்கீகாரம், விருதுகள் பெறுதல், மேலை நாடுகளில் அரசியல் அடைக்கலம் பெறுதல்.

தமிழகத்து முற்போக்கு சக்திகள் இவரைப் போன்ற உதிரிக்கு இடமளித்து முஸ்லிம்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளக் கூடாது என்பது என் வேண்டுகோள். சிஏஏ, சிறைவாசிகள் விடுதலை, ஹிஜாப் உள்ளிட்ட எல்லா உரிமைப் போராட்டங்களிலும் களமாடும் முஸ்லிம் பெண்கள்தாம் அந்தச் சமூகத்தின் பெண் பிரதிநிதிகள். ஷர்மிளா ஸெய்யித் அல்ல.

Related posts

Leave a Comment