hijab issue tamilகட்டுரைகள் காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப் விவகாரம்: இந்து தேசியவாதத்துக்குத் தீனி போடும் பெண்ணியவாதிகள்

Loading

டெய்லி சிலோன் சேனலுக்கு மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர் நாகூர் ரிஸ்வான் அளித்த நேர்காணலின் எழுத்து வடிவம் இது. ஹிஜாப் சர்ச்சையாக்கப்படுவதை எப்படி புரிந்துகொள்வது? தேர்தல் கணக்குகளுக்காகவும் பாஜக அரசின் பொருளாதாரத் தோல்வியை மறைக்கவும்தான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றதா? இந்து தேசியவாதத்துக்கு எப்படி சில பெண்ணிய தரப்புகள் தீனி போடுகின்றன? தேச அரசு எனும் வடிவம் அதனளவில் கொண்டிருக்கும் சிக்கல் என்ன? போன்ற முக்கியமான விஷயங்கள் இந்நேர்காணலில் விவாதிக்கப்பட்டுள்ளன.
நேர்கண்டவர்: உஸ்மான் அகீல்.

கே: கர்நாடக ஹிஜாப் சம்பவத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ப: கர்நாடகாவில் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் தொடங்கிய இந்த சர்ச்சை இன்றுவரை நீடித்து வருகிறது. ஆரம்பத்திலேயே இது தீர்க்கப்பட்டிருக்க வேண்டும், இவ்வளவு காலம் இது தொடர்வதே ஒரு பிரச்னைக்குரிய அம்சம். முஸ்லிம்கள் தம் சமயக் கடமையாய்த் தொடர்ந்து பின்பற்றிவரும் ஹிஜாப் பிரச்னையாக்கப்படுகிறது. இது இங்குள்ள நிறுவனமயப்படுத்தப்பட்ட  இஸ்லாமோ ஃபோபியாவின் உக்கிரமான வெளிப்பாடு.

ஹிஜாப் விவகாரம் என்று இது அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் இது இந்துத்துவவாதிகள் உருவாக்கும் விவகாரம். இயல்பான வழக்கம் அவர்களால் சர்ச்சையாக்கப்படுகிறது. இங்கே பிரச்னை ஹிஜாப் அல்ல, இந்துத்துவம்தான்.

கே: பொதுவாகவே கல்விக்கூடங்களில் சீருடை அணிய வேண்டியிருக்கும். அத்துடன் ஹிஜாபையும் அணிவது சரியா?

ப: தலைத்துணி அணிவதைத்தான் ஹிஜாப் என்கிறோம். சீருடையை  மாணவிகள் கடைப்பிடிக்கிறார்கள். சீருடையின் துப்பட்டாவின் நிறத்திலேயே தலைத்துணி அணிகிறார்கள். அதுதான் இங்கு ஒரு பெரும் சிக்கலாகப் பார்க்கப்படுகிறது. பொட்டு, டர்பன் போன்ற பிற மத அடையாளங்களை எந்த வகையிலும் குற்றப்படுத்தப்படாத நிலையில், ஹிஜாப் அணிவது ஒரு குற்றமாகப் பார்க்கப்படுவது ஏன் என்ற கேள்வி இந்தப் பின்னணியில்தான் எழுப்பப்படுகிறது. இங்குள்ள பொதுநீரோட்டத்துக்கு எதிரானதாக ஹிஜாப் முன்னிறுத்தப்படுகிறது.

கே: அப்படியென்றால் கல்லூரி மாணவர்கள் காவி சால்வை அணிந்து வந்தது அவர்களின் மத இயல்பைக் குறிக்கும் அடையாளம்தானே?

ப: முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால் காவி சால்வை அப்படியா? வீம்புக்காகவும், முஸ்லிம்களை எதிர்க்கும் நோக்கிலும், அவர்களின் சமயம் சார்ந்த உரிமையைப் பறிக்கும் நோக்கிலும் அது அணியப்படுகிறது. இவ்விரண்டையும் சமமானதாகக் கருதுவது தவறு. இப்படி சமப்படுத்த முடியாது என்பது இங்குள்ள பாமரர்களுக்கும் தெரியும்.

சங் பரிவார்களின் தூண்டுதலில்தான் காவி சால்வையை மாணவர்கள் அணிந்தார்கள். அவர்களுள் பலர் மாணவர்களே இல்லை என்பது இன்று தெரிய வந்திருக்கிறது. அல்லாஹு அக்பர் என்று முழக்கமிட்ட முஸ்கான் எனும் மாணவி NDTVக்கு இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். நான் அதில் ஒரு பத்து சதவீத ஆட்களைத்தான் பார்த்திருக்கிறேன், மீதமுள்ளவர்கள் எல்லாம் வெளியாட்கள் என்கிறார் அவர்.

கே: ஹிஜாப் விவகாரம் முடிவடையும்வரை எந்த மாணவர்களும் மத அடையாளங்கள் கொண்ட ஆடைகளை அணியக்கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறதே..?

ப: ஹிஜாப் இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றப்படும் வழமை. நீதிபதிகள் இப்படியான முடிவுக்கு வந்தது துரதிருஷ்டவசமான ஒன்று. வழக்கு முடியும்வரை எங்களின் நம்பிக்கைகளை ஒத்திவைக்க முடியாது என்ற வாதத்தை நீதிமன்றத்தில் ஹிஜாபுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் முன்வைத்தார். அது ஏற்கப்படவில்லை. பிறகு உச்சநீதிமன்றம் சென்றும் பலனளிக்கவில்லை.

ஹிஜாப் விவகாரத்தை சற்று கூர்ந்து அவதானியுங்கள். உடுப்பி மாவட்டத்திலுள்ள அந்தக் கல்லூரி நிர்வாகம்தான் முதலில் பிரச்னையை ஆரம்பித்து வைத்தது. பிறகு சங்கிகள் மாணவர்களைத் தூண்டிவிட்டு, வெளியாட்களையும் இறக்கி இதை வேறொரு தளத்திற்குக் கொண்டுசெல்கிறார்கள். அதைத் தொடர்ந்து அரசாங்கம் ஹிஜாபுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கிறது. இந்தப் பின்னணியில், பல கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை உள்ளே அனுமதிக்க மறுத்து நுழைவாயில்களை இழுத்து மூடுகிறார்கள். பிறகு நீதிமன்றம் அரசாணையை இப்போதைக்கு ரத்து செய்ய முடியாது என்று சொல்லி விசாரணையை நடத்துகிறது. நியாயவுணர்வுள்ள அனைவருக்கும் தெரியும் எது சரியென்று. ஆனால் இங்குள்ள எல்லா பொது நிறுவனங்களும் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கின்றன. எந்த அளவுக்கு இவை முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு.

ஹிட்லரின் ஜெர்மனியில் நாஸிகள் எப்படி யூதர்களை ஒடுக்கினார்களோ, எப்படியெல்லாம் அவர்களின் உரிமைகளைப் பறித்தார்களோ, எப்படி மனித உரிமை மீறிலில் ஈடுபட்டார்களோ அதையொத்த வெளிப்பாட்டைதான் நாம் இங்கு காண்கிறோம். கல்லுரிக்குள் வரக்கூடாதென்று இங்குள்ள இந்து நாஸிகள் முஸ்லிம் பெண்களைத் தடுக்கிறார்கள். இதற்கு இணையான ஒரு சம்பவத்தை நீங்கள் ஜெர்மனியிலும் பார்க்கலாம். எனவே ஒரு ஆபத்தான சூழல் இங்கு உருவாகி வருவதை நாம் இனங்காண வேண்டியிருக்கிறது.

கே: இந்த ஹிஜாப் பிரச்னையை ஆளும் பாஜக  தன் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்கிறீர்களா?

ப: முன்னதாக இது இந்துத்துவர்கள் எழுப்பும் விவகாரம் என்று சொல்லியிருந்தேன். பாஜக தேர்தலில் வாக்குகள் பெற்று வெற்றியடையவே இவற்றையெல்லாம் செய்கிறார்கள் என்று இதை எளிமைப்படுத்த முடியாது. அவர்களின் குறிக்கோள் இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதுதான். அதற்கு இங்குள்ள சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் நாசகரத் திட்டத்துடன் அவர்கள் இயங்குகிறார்கள்.

ஆனால் இங்குள்ள பாஜகவுக்கு எதிரான தரப்புகள் வெறும் தேர்தல் அரசியல், வாக்கு என்கிற அளவில் இதுபோன்ற பிரச்னைகளைச் சுருக்கி, தவறாகப் புரிந்துகொள்கின்றன. பாஜக அரசின் தோல்விகளை, குறிப்பாக பொருளாதாரத் தோல்விகளை மறைப்பதற்காகவே முஸ்லிம்களைக் கொல்கிறார்கள், அவர்களின் உரிமையைப் பறிக்கிறார்கள் என்று கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றன. முஸ்லிம்களின் உயிர்களையும் உடமைகளையும் பறிப்பது வெறும் திசைதிருப்பல் அல்ல. அவர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதே இந்து தேசியவாதிகளின் முதன்மைக் குறிக்கோள் என்பதை பாஜக எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் மிகை எளிமைப்படுத்தி இப்பிரச்னையைப் புரிந்துகொள்வது இந்துத்துவம் வளர ஒரு முக்கியக் காரணம்.

கே: தற்போதைய சர்ச்சையை எப்படி புரிந்துகொள்வது? ஹிஜாப் அணிவது சரியா, தவறா என்றா? அல்லது பெரும்பான்மைவாதத்துக்கும் சிறுபான்மைவாதத்துக்கு இடையிலான மோதல் என்றா? அல்லது இதுவொரு பண்பாட்டு ஒடுக்குமறை என்றா?

ப: ஹிஜாப் அணிவது சரியா, தவறா என்பது இங்கு விஷயமே அல்ல. இங்கு நடைபெறுவது ஒரு பண்பாடு ரீதியிலான அடக்குமுறை. சிறுபான்மையினரை பெரும்பான்மைவாதம் ஒடுக்குகிறது. இவ்விரு தரப்புகளையும் சமப்படுத்துவது சரியல்ல. முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவ சக்திகள் கலவரங்கள் மேற்கொண்டால் அதை ‘மதக்கலவரம்’ என்று சொல்வது இங்கு வழக்கம். ஊடகங்களிலும், பாஜக எதிர்ப்பாளர்களிடமும்கூட இதே வகையான கதையாடல்தான் இருக்கும். இப்படித் தவறான சித்திரத்தைத் தருவது வன்முறையாளர்களுக்குத்தான் உதவும். ஆக, இரு மதத்தினருக்குமான மோதல் என்றெல்லாம் பார்க்காமல், பெரும்பான்மைவாதம் சிறும்பான்மையினரை ஒடுக்குகிறது என்று பார்க்கத் தொடங்கும்போதே இவ்விஷயத்தை சரியாகப் புரிந்துகொண்டு அதற்குரிய விதத்தில் முகங்கொடுக்க முடியும்.

கே: இவ்வாறு ஓர் இனத்தின் மீது பண்பாட்டு ஒடுக்குமுறையை ஏற்படுத்தி எதை அடைய விரும்புகிறார்கள் இந்துத்துவ அமைப்புகள்?

ப: ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோல, இந்து ராஷ்டிரா என்பதை உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் லட்சியம். அதை நோக்கித்தான் வேகவேகமாக முன்னகர்கிறார்கள். அவர்கள் மேற்கொள்ளும் Hindu consolidation கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். இந்து ராஷ்டிரா உருவாவதற்கான அடிப்படையை ஏற்படுத்துவதே அதுதான். ஆம், இந்துக்கள் இங்கு பெரும்பான்மை என்று ஏற்படுத்துவதன் வழியாகவே இந்துத்துவம் தன் அரசியலை முன்னெடுக்கிறது. இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைக்க முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் அது எதிரிகளாக நிறுத்துகிறது. ஒருவகையில் சிறுபான்மையினரையும் அவர்களின் பண்பாடுகளையும் அழிப்பதன் வழியாகவே அதை நிறுவ முடியும் என்று நம்புகிறது.

கே: ஹிஜாப் அணிவது ஒரு பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்கிறார்களே..? குறிப்பாக பெண்ணியவாதிகள் இதையொரு வாதமாக வைக்கிறார்கள்.

ப: தற்போது நிகழ்ந்துகொண்டுள்ள பிரச்னையை வெறும் ஹிஜாப் பிரச்னையாகச் சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இனப்படுகொலையை நோக்கித்தான் இந்துத்துவம் காய்நகர்த்துகிறது. ஹிஜாப் சரியா, தவறா எனும் மயிர் பிளக்கும் விவாதங்கள் எல்லாம் இந்த வன்முறையாளர்களின் வன்முறைக்கு வழியமைத்துக் கொடுப்பவை.

ஹிஜாப் பெண்ணடிமைத்தனம் எனும் வாதத்தை எடுத்துக்கொள்வோம். பொதுப்புத்திக்கும் முற்போக்கு முகாமைச் சார்ந்த சில தரப்பினருக்கும் அப்படியான ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. அவர்கள் தலைத்துணி ஒரு பெண்ணடிமைத்தனம் எனும் கருத்தில் ஊறிப்போயிருக்கிறார்கள். அதை அவர்கள் மறுபரிசீலனை செய்ய கொஞ்சமும் தயாராக இல்லை. ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துகிறதா, இல்லையா என்று நம்மிடம் தொடர்ச்சியாகக் கேட்கிறார்கள். ஆனால் அவர்களிடம் ஏற்கனவே ஒரு முடிவு இருக்கிறது. நீங்கள் என்ன பதில் சொன்னாலும் அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். அவர்களின் sensibility புரியாமல் முஸ்லிம்கள் சிலர் ஹிஜாப் பாதுகாப்பானது, கண்ணியமானது என்றெல்லாம் பதில் சொல்லி அவர்களைத் திருப்திப்படுத்த முனைகிறார்கள். அது பலனளிக்காது. அவர்கள் முன்முடிவின்றி திறந்தமனத்துடன் வந்தால் மட்டுமே உரையாடல் சாத்தியம்.

முத்தலாக் தடைச் சட்டத்தை பாஜக கொண்டுவந்தது. முஸ்லிம்களைத் தொந்தரவு செய்யவும் தண்டிக்கவுமே அது கொண்டுவரப்பட்டது. அதிலுள்ள சரத்துகளைப் பார்த்த பிறகு இங்குள்ள முற்போக்காளர்களே அதை எதிர்த்தார்கள். முத்தலாக் செய்த கணவனை மூன்றாண்டுகள் சிறையிலடைத்தால் மனைவியும் சேர்ந்து பாதிக்கப்படுவாரே என்றார்கள். இதை அவர்கள் இவ்வளவு தாமதமாகச் சுதாரித்திருக்கக் கூடாது. இப்படியான சட்டத்தை இயற்றிய பிறகு இதைப் பேசி என்ன பயன்? இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவருவதை நோக்கி இவர்களும் சேர்ந்துதானே காய்நகர்த்தினார்கள்.

பெண்களுக்கான பிரச்னைகளை பேசவே கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். முஸ்லிம் சமூகம் குறித்த அவர்களின் முன்முடிவுகள் தவறான திசையில்தான் அவர்களை வழிநடத்தும். அவர்களும் தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்வதுடன், முஸ்லிம்களுடன் உரையாடி அவர்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வரலாம். அதைவிட்டுவிட்டு தங்களின் அஜெண்டாவைத் திணிப்பதிலேயே குறியாக இருக்கக்கூடாது.

கே: அல்லாஹு அக்பர், ஜெய் ஸ்ரீராம் ஆகியவை வெறும் மத கோஷங்களா?

ப: அல்லாஹு அக்பர், ஜெய் ஸ்ரீராம் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு குறித்த புரிதல் இங்கே ஓரளவு ஏற்பட்டிருக்கிறது. CAA எதிர்ப்புப் போராட்டத்தில் முஸ்லிம்கள் வெகுமக்களாக வீதியில் இறங்கி போராடினார்கள். அப்போது அல்லாஹு அக்பர் என்பது இயல்பாக அவர்களிடம் வெளிப்பட்ட முழக்கம். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை சார்ந்து இருப்பதாகவே கருதுகிறார்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் அது பின்னிப்பிணைந்திருக்கிறது, அவர்களுக்கு அதுதான் நம்பிக்கை கொடுக்கிறது, போராட்டத்துக்கான துணிச்சலைக் கொடுக்கிறது, அதுவே அதிகாரத்தை எதிர்ப்பதற்கான பிடிமானமாக உள்ளது. எனவேதான் அல்லாஹு அக்பர் என்று முழங்கினார்கள். இதை சில மதச்சார்பின்மைவாதிகள் சர்ச்சையாக்கினார்கள்; இப்படியான மதவாத கோஷங்கள் பொதுவெளியில் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்கள்.

ஆனால் இன்று சங்கி கும்பல் ஜெய்ஸ்ரீராம் என்று கொக்கரித்துக்கொண்டே மாணவி முஸ்கானிடம் வந்தபோது, அவர் கம்பீரமாக அல்லாஹு அக்பர் சொன்ன இந்த நிகழ்வையொட்டி பலரும் தம் முந்தைய நிலைப்பட்டை சுயபரிசீலனை செய்கிறார்கள். ஜெய்ஸ்ரீராம், அல்லாஹு அக்பர் ஆகியவற்றைச் சமப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.

கூடுதலாக ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட நினைக்கிறேன். காவி சால்வை அணிந்தவர்கள் தன்னை நெருங்கும்போது அந்த அனாதரவான நிலையில், மாணவி முஸ்கான் தான் நம்பும் இறைவனின் பெயரைச் சொல்கிறார் என்று இடதுசாரி வட்டத்தில் சிலர் கருத்துரைப்பதைப் பார்க்க முடிந்தது. இதுவோர் எளிமைப்படுத்தப்பட்ட பார்வை. வெறுமனே பயத்திலோ, தஞ்சமடையும் மனநிலையிலோ அந்த மாணவி அல்லாஹு அக்பர் சொல்லவில்லை. மிக உறுதியாக அதை அவர் முன்வைக்கிறார். உன் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்கிறார். உன் அதிகாரத்துக்கு நான் பணிய மாட்டேன், என்னைப் பணிய வைக்கவும் முடியாது என்பதையே அந்த முழக்கத்தின் வழியாகப் பிரகடனப்படுத்துகிறார். ஆகவே முஸ்லிம்கள் பயந்துபோய் அல்லாஹு அக்பர் சொல்கிறார்கள் என்று சிலர் கருதுவது தவறு.

கே: தமிழகத்தில் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

ப: தமிழகத்தில் அவர்கள் நீண்ட காலமாகச் செயல்படுகிறார்கள். இங்குள்ள திராவிட அரசியல் அவர்களை வளரவிடாமல் தடுத்திருக்கிறது. முஸ்லிம் அமைப்புகளும் இங்கு மிக வலுவாக உள்ளன. வட இந்தியாவில் முஸ்லிம்கள் அமைப்பாகத் திரளவில்லை. இங்கு சற்று ஒருங்கிணைத்து செயல்படுகிறார்கள். இங்கு மாநில உரிமைகள், இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கான குரல் பலமாக இருக்கிறது. விளைவாக, இந்து தேசியவாதிகள் மக்களை இந்தியா, இந்து என்றெல்லாம் சொல்லி எளிதாக அணிதிரட்ட முடியவில்லை.

எனினும் தற்போது நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள் வந்துவிட்டார்கள். எதிர்க்கட்சியான அதிமுக மிகவும் பலவீனமாக இருக்கிறது. இங்கு ஆளும் கட்சியான திமுக எதிர் பாஜக எனும் நிலைமை உருவாவது ஓர் ஆபத்தான போக்கு. பாஜகவின் வளர்ச்சிக்கு ஏதுவான சூழல் இது. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக  மேலெழுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதை எதிர்ப்போர்  தங்களின் அரசியலை இன்னும் உறுதியாக முன்னெடுக்க வேண்டும். ஹிஜாப் பிரச்னையாக்கப்படுவது முதலான எல்லா விவகாரங்களிலும் அதுகுறித்து கருத்துரைக்க திமுக தலைவர்கள் தயங்குகிறார்கள். சில விஷயங்களைப் பேசினாலே பாஜக பலனடைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். இது ஒருவகையில் பாஜகவின் வெற்றிதான். உண்மையில், இவர்கள் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது, அதற்குத் தேவையான கருத்துருவாக்கத்தைச் செய்வது போன்றவற்றின் வழியாகவே நிலைக்க முடியும். சங்கிகள் பிரச்னை செய்வார்கள் என்பதற்காக சில விஷயங்களை அடக்கி வாசிப்பது இவர்கள் பலவீனமாகி வருகிறார்கள் அல்லது இவர்களிடம் வலுவான கருத்தியல் நியாயம் இல்லை என்பதையே காட்டுவதாக அமையும்.

கே: இந்த ஹிஜாப் பிரச்னையை இலங்கையில் உள்ள மக்கள் வெறும் ஹிஜாப் பிரச்னையாகத்தான் பார்க்கிறார்கள். இதற்குப் பின்னாலுள்ள அரசியல் பின்புலம் அவர்களுக்குத் தெரிவதில்லை. அப்படியிருக்கின்ற பட்சத்தில் இங்குள்ள இலங்கை முஸ்லிம்கள் இதை எப்படி பார்க்க வேண்டும்?

ப: சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கலாச்சாரம் உள்ளது. பெரும்பான்மையின் பண்பாடு இயல்பானதாகவும், இம்மண்ணுக்குரியதாகவும் கொள்ளப்படுகிறது. அதில் கரைந்துபோகுமாறு சிறுபான்மையினராகிய நாம் வற்புறுத்தப்படுகிறோம். நாம் நம் அடையாளங்களையும் பண்பாட்டையும் கைவிட முடியாது என்று உறுதிகாட்டும்போது நம் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த அரசியலை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் மீதான ஒடுக்குமுறைகளை ஒரு சின்ன அரசியல் கட்சியோ குறுங்குழுவோ நிகழ்த்தவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தின் ஏற்போடுதான் அவை அரங்கேறுகின்றன. இதைத்தான் நாம் ஃபாசிசம் என்கிறோம். இந்தியாவில் நடப்பதும் அதுதான். இப்படிச் சொல்வதால் குடிமக்கள் ஒவ்வொருவரும் சிறுபான்மையினர் மீதான வன்முறையை ஆதரிப்பதாக நாம் சுருக்கிப் புரிந்துகொள்ளக் கூடாது. பெரும்பான்மையின் ஏற்பு, அதன் மௌனம் முதலானவை நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாகவேனும் அடக்குமுறைக்குத் துணை போகின்றன.

இலங்கையில் எனக்கு நண்பர்கள் மிகக் குறைவு. என் புரிதலிலிருந்து ஒரு விஷயத்தைப் பகிர்கிறேன். இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த பின்னணியில் முகத்திரை அணிய அங்கு தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்புக் காரணங்கள் அதற்குச் சொல்லப்பட்டன. எனது முஸ்லிம் நண்பர்கள் இதையோர் இஸ்லாமியச் சட்டவியல் (பிக்ஹு) பிரச்னை போல அணுகினார்கள். இஸ்லாத்தில் முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்றார்கள். உண்மையில் இதுவொரு அரசியல் பிரச்னை. அதை அரசியல் ரீதியாக அணுகாமல் இஸ்லாமியச் சட்டம் சார்ந்த விவாதமாக்கக் கூடாது.

தியாகத் திருநாள் சமயம் ஆடு அறுப்பது, மாடு அறுப்பதையெல்லாம் அரசாங்கம் தடுக்கும்போது, கோழியை குர்பானி கொடுப்பதில் தவறில்லையே என்று இலங்கையிலுள்ள ஒரு இஸ்லாமிய அறிஞர் சொன்னார். கொரோனா காலத்தில் முஸ்லிம் சடலங்களை புதைக்காமல் தகனம் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் சொன்னபோது, அவர் அப்படி எரிப்பது இஸ்லாத்தில் கூடும் என்று மார்க்கத் தீர்ப்பு கொடுத்தார். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இலங்கை முஸ்லிம்கள் சந்திக்கும் எல்லா அரசியல் பிரச்னைகளையும் இப்படி தவறாகக் கையாள சிலர் வழிகாட்டுகிறார்கள்.

ஹலால் பிரச்னையை எடுத்துக்கொள்ளுங்கள். ஹலால் தயாரிப்புகள் வரக்கூடாதென்பதில் ஒரு அரசியல் இருக்கிறது. நம் இருப்புக்கான பிரச்னை அது. வெறும் ஹலால் சான்றிதழ் வைக்கலாமா, வேண்டாமா என்பது சார்ந்த பிரச்னை அல்ல. அது எந்தவகையில் மக்களுக்குத் தொந்தரவு தந்தது? பெரும்பான்மைவாதிகளுக்கு முஸ்லிம் பண்பாட்டின் மீது பயம் இருக்கிறது, ஒரு வெறுப்பு இருக்கிறது, அதைத்தான் இப்படி பலவகையில் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதை நீங்கள் சரியாகக் கையாளாமல், அவர்களின் வேலையை நீங்களே இலகுவாக்குகிறீர்கள்! இலங்கை நண்பர்கள் இன்னும் அரசியல்பட வேண்டும். அங்குள்ள சூழலுக்குத் தகுந்தவாறு அவர்களுடைய கருத்துகளையும் செயல்பாடுகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

கே: ஹிஜாப் அணிவது அவரவர்களுடைய தனி உரிமைதானே? அதை அரசியல் பிரச்னையாகப் பார்க்க முடியுமா?

ப: அது உரிமையென்பதைத் தாண்டி சமயக் கடமை. அதை நடைமுறைப்படுத்தும்போது ஒரு தலையீடு வருகிறது. அது அரசியல் ரீதியான தலையீடு என்பதால் அதை அரசியலாகப் பார்க்கச் சொல்கிறேன். ஒரு அஜெண்டாவோடுதான் அவர்கள் அதில் தலையிடுகிறார்கள். அப்போது அதை முறியடிக்க வேண்டியது, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டியது நம் கடமை.

கே: இலங்கையில் பெரும்பான்மைக்கு இணங்கி அவர்களோடு ஒன்றாகச் சேர்ந்துதான் வாழ வேண்டும் எனும் கருத்து இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? அதுபோக, இந்தப் பெரும்பான்மை  – சிறுபான்மை பிரச்னை எந்த அடிப்படையிலிருந்து வருகிறது, எல்லா இடங்களிலும் இது இருக்கிறதே..?

ப: தேச அரசு (Nation State) என்ற ஒன்று உருவாகியுள்ள பின்னணியில்தான் இந்தப் பெரும்பான்மை – சிறுபான்மை விவகாரமெல்லாம் உருவாகிறது. எப்போதுமே பெரும்பான்மைதான் குறிப்பிட்ட தேசத்தை ஆள முடியும். சிறுபான்மைக்கு அதிகாரம் இருக்காது, உரிமைகள் எனும் பெயரில் சில ஒதுக்கீடுகள் இருக்கும். இலங்கையில்கூட விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் உண்டு. இந்தியாவில் அதுவும் கிடையாது. எல்லா இடங்களிலுமே பெரும்பான்மைதான் அதிகாரத்தைச் சுவைக்கும். சிறுபான்மையர்களுக்கு சில உரிமைகள் மட்டுமே கொடுக்கப்படும். அது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். இதிலுள்ள இன்னொரு சிக்கல் என்னவென்றால், பெரும்பான்மையின் பண்பாடும் கருத்தும் மையநீரோட்டமாக இருக்கும். அதை ஏற்குமாறு சிறுபான்மையை பெரும்பான்மை வற்புறுத்தும். எல்லா இடங்களிலும் இந்த சிக்கல் இருக்கிறது.

கே: கர்நாடக ஹிஜாப் விவகாரத்துக்குத் தீர்வுதான் என்ன?

ப: ஹிஜாப் இஸ்லாத்தைப் பொறுத்தவரை, நம்பிக்கையின் அடிப்படையில் வந்த ஒரு வழக்கம். அதை சமரசம் செய்துகொள்ள முடியாது. இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களின் சமயக் கடமையை அவர்கள் ஆற்றுவதை விட்டும் யாரும் தடுக்க முடியாது. வன்முறையாகவே அரசாங்கம் அதில் தலையிட முடியும். கடைசிவரை அவர்கள் எதிர்த்து நிற்கவே போகிறார்கள். கல்வி, ஹிஜாப் ஆகியவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யும்படி முஸ்லிம்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சொன்னதுபோல் உணவா, தண்ணீரா என்று எங்களிடம் கேட்கக் கூடாது. இரண்டுமே எங்களுக்கு முக்கியம். எங்களுக்குக் கல்வியும் வேண்டும், ஹிஜாப் எனும் எங்கள் வழக்கத்தையும் நாங்கள் விடுவதாக இல்லை. இவ்விரண்டுக்காகவும் போராடுவோம். நீதிமன்றத்தில் விசாரணை நீண்டுகொண்டே செல்கிறது. அங்கு இப்போதே சுமூகமாக இந்தப் பிரச்னை முடிவுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதைத் தாண்டி ஹிஜாபை சர்ச்சையாக இந்துத்துவ சக்திகள் உருவாக்கியது அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் அரசியல் ரீதியான பலனைக் கொடுக்கக்கூடும். தற்போது மக்களிடமும் மாணவர்களிடமும் ஒரு பிளவை ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் தம் சாதனையாகக் கொள்வார்கள். அதற்கு இங்குள்ள பெரும்பான்மைச் சமூகம் இடமளிக்கக் கூடாது. பெரும்பான்மைச் சமூகம் என்று சொல்லப்படும் சமூகத்திடமிருந்து பாதிப்புக்குள்ளாகும் முஸ்லிம்களுக்கு ஆதரவான குரல் வருகிறது. இந்தக் குரல் எந்தளவுக்கு வீரியம் பெறுகிறதோ அதுதான் பாஜகவின் தோல்விக்கு வழியமைக்கும். இது விஷயத்தில் பெரும்பான்மையினருக்குத்தான் கூடுதல் பொறுப்புள்ளது.

தொகுப்பு: ரிவின் பிரசாத்

Related posts

One Thought to “ஹிஜாப் விவகாரம்: இந்து தேசியவாதத்துக்குத் தீனி போடும் பெண்ணியவாதிகள்”

  1. Raja

    இதுகுறித்து முஸ்லிம் மாணவிகள் கூறுகையில், “காரிடாரிலும், கேன்டீனிலும் ஹிஜாப் அணியலாம். ஆனால், வகுப்புகளில் அணியக் கூடாது என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. ஹிஜாப்பைக் கழற்றிவிட்டு வகுப்புகளில் உட்கார நாங்கள் தயாராக இல்லை. தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம். இத்தனை வருடங்களாக ஹிஜாப் அணிந்து வர அனுமதித்தவர்கள் இன்றைக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்?

    ஹிஜாப் என்பது எங்களின் பெருமை, ஒழுக்கம். அதை நீக்கிவிட்டு வகுப்பறைகளில் உட்கார சொல்கிறார்கள். ஒருவேளை எங்கள் தலையைப் பார்த்து பாடம் நடத்தினால்தான் ஆசிரியர்களால் நன்றாக பாடங்களை கற்பிக்க முடியுமோ? முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஏழை மக்களைக் குறிவைத்து, இன்னும் பின்னுக்குத் தள்ள விரும்புகிறார்கள். எங்களுக்கு முடிவுகட்ட விரும்புகிறார்கள்.

    கல்விக்கு இணையாக ஹிஜாப்பை மதிக்கிறோம். தற்போது கல்வியா? ஹிஜாப்பா? என்றால், ஹிஜாப்தான் முக்கியம். ஹிஜாப் ஒரு புனித ஆடை. புனிதத்தைக் காக்க கல்வியைத் துறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.

Leave a Comment