நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘திருமுகம்’ ஈரானிய நாவல் (அறிமுகம்)

Loading

நாம் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் சென்று கொண்டேயிருக்கிறோம். சொல்லப்படும் அனைத்தையும் நம்புவது ஒரு கட்டம். சொல்லப்படும் அனைத்தையும் சந்தேகிப்பது ஒரு கட்டம். ஏதாவது ஒரு நிலையில் திருப்தியடைவது ஒரு கட்டம். தொடர்ந்து நாம் மாறிக் கொண்டேயிருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்கிறோம்; பக்குவமடைகிறோம். வாழ்பனுபவங்கள் நம்மைப் பண்படுத்திக் கொண்டே செல்கின்றன. ஒரு கட்டத்தில் அமைதியடைகிறோம். இறைவனை நோக்கிய பாதையும் இப்படிப்பட்டதுதான். மனிதன் தன் இயலாமையை அப்பட்டமாக உணரும் தருணத்தில்தான் இறைவனை நோக்கி முழுமையாகத் திரும்புகிறான். அந்தச் சமயத்திலும் இறைவனை நோக்கி திரும்பாதவர்கள் மனப்பிறழ்வுக்கு உள்ளாகி விடுகிறார்கள். இறைவனே இந்த வாழ்வுக்கு அர்த்தம் அளிப்பவன். அவன் இல்லாமல் இந்த வாழ்வு புரிந்துகொள்ள முடியாத மாபெரும் சூன்ய வெளி. எதற்குமே இங்கு அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும். இறைவனற்ற மனிதன் இந்தப் பெரும் குழப்பத்தில் சிக்கி தன்னைத்தானே அழித்துக் கொள்வான் அல்லது கொடூர மிருகமாக மாறி மற்றவர்களை தின்னத் தொடங்குவான்.

எளிய சூத்திரங்களால் முழுமையாக இந்தப் பிரபஞ்சத்தையும் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் வரையறுத்துவிட முடியாது. இங்கு வரையறைகளுக்கு நிலையான விதிகளுக்கு உட்பட்ட அம்சங்களும் இருக்கின்றன. வரையறைகளுக்கு நிலையான விதிகளுக்கு உட்படாத அம்சங்களும் இருக்கின்றன. எளிய சமன்பாடுகளால் புரிந்துகொள்ளத்தக்க அம்சங்கள் மனிதனை கர்வத்தில் ஆழ்த்துகிறது எனில் அவற்றுக்கு மாறான அம்சங்கள் அவனது கர்வத்தை உடைக்கின்றன. மனிதனின் கண்டுபிடிப்புகள் அவனுக்கேயுரிய ஆற்றலின் எல்லைகளுக்கு உட்பட்டுதான் இருக்கிறதே அன்றி அந்த எல்லையைத் தாண்டி அவனால் இம்மியளவும் நகர்ந்துவிட முடியாது.

மனித மனதில் ஐயம் என்றொரு நிலை இருக்கிறது. அது நிரந்தரமானது அல்ல. அதைத் தாண்டி தெளிவு இருக்கிறது. அந்த நிலையைத் தாண்டி தெளிவின் பாதையை அடைபவர்களும் இருக்கிறார்கள். அந்த நிலையில் சிக்கி வேறு எங்கோ வழிகெட்டுச் செல்பவர்களும் இருக்கிறார்கள். இறைவனைப் பற்றிக் கொள்வது என்பது வாழ்வைப் பற்றிக் கொள்வது. வாழ்வின் நோக்கத்தைப் பற்றிக் கொள்வது. இறைவனை விட்டு விலகுதல் என்பது காரிருளில் தொலைந்து விடுவது; வாழ்வின் நோக்கத்தை இழந்து விடுவது; சொல்லப்படும் அனைத்தையும் நம்பிக்கை கொண்டு அல்லது எதையும் நம்பாமல் நிராசை என்னும் புதைகுழியில் புதைந்து விடுவது.

திருமுகம் என்ற நாவலை வாசித்த பின் எனக்குத் தோன்றிய வரிகள் இவை. அது மனித மனதின் ஐயம் குறித்து, அது உருவாக்கும் கேள்விகள் குறித்துப் பேசுகிறது. நாவலின் நாயகன் யூனுஸின் மனதில் உருவாகும் மெய்யியல் கேள்விகள் இந்த நாவலை முன்னகர்த்திக் கொண்டு செல்கின்றன. முனைவர் முஹ்ஸின் பாஷா தற்கொலைக்கான காரணங்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதே யூனுஸ் எடுத்துக்கொண்ட முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கரு. யூனுஸின் மனத்தில் உருவாகும் இறைவன் இருக்கிறானா என்ற ஐயமும், முஹ்ஸின் பாஷா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வியும் யூனுஸின் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. யூனுஸின் நண்பர் மஹர்தாத், மஹர்தாத் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜூலியா, யூனுஸூக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான சாயாஹ் எனப் பல்வேறு கதாபாத்திரங்களின் வழி மனித மனதில் ஆதாரமான கேள்விகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் சொல்லப்படுகின்றன.

இயற்பியல் துறையில் பிரபல்யமான பல்கலைக்கழகப் பேராசியராக இருந்த முனைவர் முஹ்ஸின் பாஷா சட்டென காதல் பித்து பிடித்த இளைஞனைப் போன்று எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கான சமூகவியல் காரணம் ஏதும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து சமர்ப்பிக்க யூனுஸ் பெரும் முயற்சி எடுக்கிறார். முஹ்ஸின் பாஷாவுடன் தொடர்புடைய ஒவ்வொருவரையும் சந்திக்கிறார், ஏதேனும் ஒரு காரணம் பிடிபடுமா என்பதை அறிந்துகொள்ள. ஆனாலும் அது அவருக்கு முன்னால் புரியாத புதிராக, சிக்கலான விவகாரமாக நிற்கிறது. இறுதியாக அவர் காதல்வயப்பட்டிருந்தார் என்பது அவரது காதலியின் நண்பி மூலமாகத் தெரிய வருகிறது. அவரது கணினியில் இருந்த கடிதங்களும், அவரது காதலியின் வாக்குமூலமும் அவரது தற்கொலைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தின. அவரது காதலியின் வாக்குமூலத்தில் யூனுஸின் மனதில் அரித்துக் கொண்டிருந்த வினாக்களுக்கும் விடைகள் இருந்தது அற்புதமான தற்செயல்தான்.

இங்கு அவளது வாக்குமூலத்தை அப்படியே தருகிறேன்:

“அனைத்தையும் புரிந்துகொள்ள அதிகம் முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. இயற்பியலையும் கணிதத்தையும் கொண்டு ஏன் மெய்யியலைக் கொண்டுகூட அனைத்தையும் அளவீடு செய்ய முயன்றார். ஆனால் தனக்குப் பழக்கமான சாதனங்களைக் கொண்டு அளக்க முடியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதை சட்டெனப் புரிந்து கொண்டார். அவரது குழப்பம் அதிகமாகியது. தனக்குத் தானே ஒடுங்கி தனிமைப்படத் தொடங்கினார்.

பழைய கணக்குகளை அழித்துவிட்டுப் புதிதாக மீண்டும் ஆரம்பித்தார். அனைத்துப் பகுதிகளையும் கவனத்தில் கொண்டார். ஆனால் இந்தச் சமன்பாடுகளில் ஏதோ ஒரு குறைபாடு இருப்பதாகவும், மயக்கம் இருப்பதாகவும் உணர்ந்தார். அவரது சமன்பாடுகள் ஒரு குறிப்பிட்ட எல்லையில் முழுமை பெறாமல் நின்றபோது அவரது குழப்பம் விஸ்ரூபமெடுத்தது. அதனால் மேலும் தனிமைப்படலானார்.

இயற்கையிலும் பரிசோதனைக் கூடங்களிலும் நூலகங்களிலும் தேடியும் விடுபட்ட அந்தத் தனிமம் என்னவென்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் பின்னோக்கி வர விரும்பினார். ஆனால் முடியவில்லை.
அவர் பயணித்த பாதை கம்பளி நூல்பந்து போன்றது. நுனி எதுவென்று தெளிவாகத் தெரியாது. அது சிக்கலானதும் மயக்கம் நிறைந்ததும்கூட. முன்னால் தொடர்ந்து செல்ல விரும்பினார். அதுவும் முடியாமல் போனது. பாதை அடைபட்டிருந்ததால் கடும் பதற்றத்திற்குள்ளானார். அதனால் அவரது நிலை இன்னும் மோசமடைந்து தனக்குள்ளாகவே ஒடுங்கத் தொடங்கினார்.

அவரது வாய்ப்புகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. இருள்மண்டி அடைபட்டுவிட்ட பாதையில் போவதும் வருவதுமாகத் தடுமாறிக் கொண்டிருந்தார். முன்னால் சென்றபோதெல்லாம் மூழ்கித் தொலைந்தார். பின்னால் திரும்பி வந்தபோது முன்னரைவிட அதிகமாக மூழ்கித் தொலைந்தார். பின்னர், தான் கண்டடைந்த சொற்ப உண்மைகளைக்கூட முழுவதுமாகத் தொலைத்துவிட்டார்.

கேள்விகள் அவரை மேலும் மேலும் மூழ்கடிக்கலாயின. மர்மத் திரைகள் அவர் முன்னால் அடர்த்தியாக விழலாயின. அவரது சிந்தை இருளடைந்தது. ஆத்ம ஜோதி அணைந்தது. அவரது இருப்பின் மீது கும்மிருட்டு கூடாரமிட்டது. அதனால் பார்வையிழந்தார். அவரது கையிலிருந்த கயிற்று நுனி தவறிப்போனது. அதனால் எங்கோ ஆழத்துக்குள் புதைந்துவிட்டார்.

வழக்கமாக அவர்தான் சமன்பாடுகளைக் கையாண்டு முடிச்சுகளை அவிழ்ப்பார். ஆனால் இம்முறை அவரே விடைகாணச் சிரமமான, சிக்கலான கேள்வியாக மாறிவிட்டார். அந்தப் புதிய சிக்கலை அவிழ்ப்பதற்கு வேறொரு நபர் தேவைப்படும் நிலை வந்தது. அது நான்தான் என்பதை உணர்ந்தேன். அவரை அவிழ்த்தது நானே என்று என்னிடம் சொன்னார். அவரது அனைத்து கடினமான கேள்விகளுக்கும் விடை நானே என்று சொன்னார்.
அவர் விடையைக் கண்டுகொண்டபோது தனது அனைத்து சாதனங்களையும் தூர வீசிவிட்டு விலகினார். ஆனால் அது போதுமாக இருக்கவில்லை. அவர் இன்னும் தூர விலகவும் தப்பியோடவும் வேண்டியிருந்தது. சுயத்தைவிட்டே விலக வேண்டியிருந்தது. தன்னைத்தானே பொய்ப்பிக்க வேண்யிடிருந்தது. ஆனால் அது முடியவில்லை. அதனால் இன்னும் ஆழமாக மூழ்கத் தொடங்கினார்.

அவர் சுமந்து கொண்டிருந்த கல் கனமாக இருந்தது. எனவே அவரது தராசு உடைந்தது. ஒழுங்குகள் சரிந்தன. கடும் குழப்பத்துக்கு ஆளானார். அதிலிருந்து விடுபடுவதற்காகத் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால் இன்னும் ஆழத்துக்கே சென்றார். அவரது பொறுமை எல்லை கடந்தது. ஏறினார். மேலே மேலே சென்றார். ஆனால் அது போதுமாக இருக்கவில்லை. பார்வை முற்றாக மங்கிவிடும்வரை ஏறிக்கொண்டே இருந்தார். அதுவும் போதவில்லை. பிறகு தனக்குள்ளாகவே சரிந்து விழுந்தார். விழுந்து சிறிதாகிக் கொண்டே சென்றார். இறுதியாக அந்த உயரத்திலிருந்து கீழே விழுந்து சிதறிப்போனார்.”

🛒 ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/thirumugam-iraniya-novel
📞 வாட்ஸ்அப்-ல் ஆர்டர் செய்ய: +91-7550174762 

Related posts

Leave a Comment