காஞ்சா அய்லய்யாகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மத நிந்தனைச் சட்டம்: இஸ்லாமும் சமத்துவம் எனும் கருத்தாக்கமும் – காஞ்சா அய்லய்யா

Loading

இந்தியத் துணைக் கண்டத்தில் இஸ்லாத்தின் சமூகப் பாத்திரம் என்ன என்பது உலகளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது. லிபரல் உலகம் ஆஃப்கானிஸ்தானையும் பாகிஸ்தானையும் வங்காளதேசத்தையும் மோசமான நாடுகளாகக் கருதுவதுடன், அங்குள்ள சமூகங்கள் தேங்கிப்போனவை, ஜனநாயகமற்றவை என்றும் பார்க்கிறது. அதற்குப் பின்னணியாக அந்நாடுகளில் எழும் விவகாரங்கள் இருக்கின்றன. இஸ்லாம் எந்தச் சீர்திருத்தத்துக்கும் உட்படுத்தப்படவில்லை என்றும், மற்ற மதங்களும் சிவில் சமூகங்களும் தொடர் சீர்திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு பார்வை நிலவுகிறது. சாதியையும் தீண்டாமையையும் கடைப்பிடிக்கும் இந்து மதம் போன்றவைகூட மாற்றத்துக்குத் தயாராக இருக்கும்போது, இஸ்லாமிய சிவில் சமூகம் சீர்திருத்தத்துக்கு எதிராக உள்ளது என்ற பார்வை வலுவாக இருக்கிறது. பாகிஸ்தானின் சமீபகால நிகழ்வுகள், குறிப்பாக “மத நிந்தனைச் சட்டங்கள்” (blasphemy laws) சார்ந்த விவகாரங்கள் இக்கண்ணோட்டத்துக்கு சர்வதேச ஏற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இவ்விஷயத்தை ஆய்ந்தறியும் முன்பு இந்தியத் துணைக் கண்டத்தில் இஸ்லாத்தின் சமூகப் பாத்திரம் என்ன என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு இஸ்லாம் வருவதற்கு முன் இங்கே கடவுள் பற்றி இரு எண்ணக்கருக்கள் இருந்தன. இந்தியர்களை பிரம்மன் வருணாசிரம (அல்லது சாதி) அடிப்படையில் படைத்தார் என்று நம்பியது வைதீக பார்ப்பனியம். மறுபக்கம், பெளத்தக் கண்ணோட்டமானது அடிப்படையில் இறைவன் உண்டா, இல்லையா என்பதில் உறுதியான நிலையெடுக்கவில்லை (agnostic). கடவுள் தொடர்பான கிறிஸ்தவ நோக்கு பரவலாக இருந்தாலும்கூட அது ஒரு சிறிய கேரள பிராந்தியத்துடன் சுருங்கிவிட்டது.

அல்லாஹ் எல்லா மனிதர்களையும் சாதி, இன, குல பேதமின்றி சமமாகப் படைத்தார் எனும் கருத்தமைவுடன் இஸ்லாமிய வணிகர்கள் வந்தபோது அது இந்தத் துணைக் கண்டம் முழுக்கப் பரவியது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்குப் பிறகு இது நிகழ்ந்திருந்தாலும், ஸூஃபி இயக்கம் தொடங்கப்பட்டு 11ம் நூற்றாண்டின் முடிவிலேயே அது இந்தியா முழுக்க பங்காற்ற ஆரம்பித்துவிட்டது. ஆன்மிகத்தில் சாதி, இன, குல அடிப்படையில் பாகுபாடு கற்பிக்கும் இந்து மதக் கருத்து முஸ்லிம்களாலும் ஸூஃபி இயக்கத்தாலும்தான் சவாலுக்குள்ளாக்கப்பட்டது. இதுவே அடித்தள சாதியினரை மிகப்பெரும் அளவில் இந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாமுக்குச் செல்ல வழியமைத்திருக்க வேண்டும். சமநிலையற்ற பல்வேறு சாதிகள் இந்திய இஸ்லாத்தால் ஒருபடித்தானதாய் ஆகின. அந்தக் காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் முதலான சாதிய நிலத்தில் இஸ்லாம் ஒருமைப்பாட்டையும் ஒத்தத்தன்மையையும் ஏற்படுத்துவதில் பாரிய பங்காற்றியது.

ஏற்றத்தாழ்வையும் அசமத்துவத்தையும் கொண்ட சாதிகளை ஒருபடித்தானதாய் ஆக்கும் இந்தப் புதிய வழக்கம் இங்கே உள்ள இந்து ஆன்மிகப் பண்டிதர்களிடையே மத நிந்தனை நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. அது இந்தியத் துணைக் கண்டத்தில் பெரும் வன்முறையிலும் எதிர் வன்முறையிலும் வந்து முடிந்திருக்கக்கூடும். எது பெளத்தர்களுக்கே கடினமான விஷயமாக இருந்ததோ அதை இஸ்லாம் சாதித்துக் காட்டியது. அநேகமாக 1947 வரை 31 சதவீத இந்தியர்கள் (அவர்களுள் அநேகர் அடித்தள சாதியினர்) இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர். இதன் விளைவாக ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியன முஸ்லிம் தேசங்களாக உருப்பெற்றன. பொதுவாகச் சொன்னால் இஸ்லாமும், குறிப்பாகச் சொன்னால் ஸூஃபி இறைநேசர்களும் மக்கள் அனைவரையும் உள்ளடக்கும் ஆன்மிகக் கொள்கையைக் கொண்டிருந்ததால்தான் இது நிகழ்ந்தது.

பாரபட்சமில்லாத முஸ்லிம்களின் வணிகச் செயல்பாடுகள் கிராமப்புறங்களிலும்கூட இஸ்லாம் வியாபிப்பதற்கு முக்கியக் காரணியாகியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சொல்லப்போனால் இது கார்ல் மார்க்ஸ் சொன்ன “தன்னிறைவு பெற்ற (அதேசமயம் வளர்ச்சியடையாத) கிராமப் பொருளாதாரம்” எனும் கருதுகோளை உடைத்துவிட்டதாகத் தோன்றுகிறது. “மத நிந்தனை” குறித்து இந்து மதம், கிறிஸ்தவம், சீக்கியம் ஆகியன கொண்டிருக்கும் கருத்தமைவின் காரணமாகவே இன்று அவை தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன. இஸ்லாமிய மத நிந்தனைச் சட்டங்களை மத்தியகால வழக்கம் என்றெல்லாம் தாக்கும் கிறிஸ்தவ உலகம் இந்தியத் திருச்சபைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். திருச்சபைகள், குறிப்பாக கத்தோலிக்கத் திருச்சபைகள் இந்து அமைப்புமுறையிலிருந்து கடன்பெற்ற ஒருவகையான மத நிந்தனைச் சட்டத்தைக் கொண்டே சாதியத்தையும் தீண்டாமையையும் கடைப்பிடித்து வருகின்றன. கேரளா போன்ற பகுதிகளில் உயர்சாதியினருடன் சமூக உறவு கொண்டதற்காக சிரியன்கள், மார்த்தோமாக்கள் எப்படி தலித்களையும் பிற அடித்தள சாதியினரையும் தண்டிக்கவோ கொல்லவோ செய்தார்கள் என்பதுகுறித்து நம்மிடம் எந்தப் புள்ளிவிவரங்களும் இல்லை. அருந்ததி ராயின் ‘சிறிய பொருட்களின் தெய்வம்’ நாவலில் வரும் வெளுத்தா கதாபாத்திரத்தை இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

”இஸ்லாம் ஓர் உலகளாவிய சமயம்” என்பதை மையப்படுத்தி எழுகின்ற ஒரு வாதம், அது சிவில் சமூக ஒழுங்கை ஒருபடித்தானதாக ஆக்கி பன்முகத்தன்மையை ஏற்க மறுக்கிறது. அதனுள் இருக்கின்ற இப்படியான போக்கு சிவில் சமூகத்தின் மாற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. தம் சமூகத்துக்குள் பன்முகத்தன்மை இருப்பதையேனும் அது உறுதி செய்வது சமூக மாற்றத்துக்கு அவசியம். மத நிந்தனைச் சட்டங்களானது முன்னேற்றத்துக்கும் மாற்றத்துக்கும் எதிராகச் செயல்படும் கருவியாக உள்ளன என்பது. ஆனால் இஸ்லாம் முன்வைத்த மத நிந்தனை பற்றிய கருதுகோள் வலுவான சமூக ஒருமைப்பாட்டைக் கட்டமைத்திருக்கிறது. இஸ்லாமிய வரலாற்றிலிருந்து பரிணமித்த இந்த ஆன்மிகக் கொள்கைதான் சாதியச் சமூகத்துக்குள் இஸ்லாம் பரவும் சாத்தியத்தையும் உருவாக்கியது.

சாதியப் பண்பாடு கொண்டுள்ள மத நிந்தனை சார்ந்த கருதுகோள்களும் நடைமுறைகளும் கடும் பிரிவினையுடன் சமூக அலகுகளைத் தோற்றுவித்தன. அந்தச் சமூகத்தில் கடவுள் மக்களை ஒன்றிணைக்கும் புள்ளியாக அன்றி பிளவுபடுத்துபவராக ஆனார். இஸ்லாத்தின் பலம் என்னவென்றால் அதன் உள்ளடக்கும் தன்மையிலான ஆன்மிகக் கருத்தாடலும், ஆன்மா, உடல், சமூகம் ஆகியவற்றில் அது ஏற்படுத்தும் ஒருமையும். கிறிஸ்தவ மேற்குலகு கவனிக்காத விஷயம், இந்திய இஸ்லாம் தன் சமூகத்துக்குள் முழுமையாகத் தீண்டாமையை ஒழிப்பதில் வெற்றிபெற்றிருக்கிறது என்பதைத்தான் (சாதியம் வேறு சில வடிவங்களில் முஸ்லிம்களுக்குள்ளும் இருந்தாலும்).

பாகிஸ்தான் உக்கிரமான ஓர் இஸ்லாமிய அரசாக உருவானது. கிறிஸ்தவ உலகம் தன் கோளாறைப் புரிந்துகொள்வதுடன், இந்தியக் கிறிஸ்தவத்துக்குள் தீண்டாமையை ஒழிப்பதில் அது ஏன் தோற்றுப்போனது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆக, மத நிந்தனை என்பதை ஒரு குறிப்பிட்ட கடவுளின் அல்லது இறைத்தூதரின் மீதான தாக்குதலாக மட்டும் பார்க்காமல், கடவுள் விஷயத்தில் மனிதர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் நாம் அவ்வாறே நோக்க வேண்டும். இந்தப் புள்ளியிலிருந்தே கடவுள் மற்றும் மத நிந்தனைகளின் பல்வேறு வடிவங்கள் குறித்த கருத்தாடல் விரிவடைய வேண்டும்.

(2011 ஜனவரி 26 அன்று டெக்கன் குரோனிக்கலில் பிரசுரமான காஞ்சா அய்லய்யாவின் கட்டுரை)

தமிழில்: நாகூர் ரிஸ்வான்

Related posts

Leave a Comment