நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (2)

விஞ்ஞானிகள் பற்றிய கற்பிதங்களே அறிவியலாய் நமக்கு போதிக்கப்படுகின்றன. சுய முன்னேற்றத்திற்கான உந்துதலாகவே விஞ்ஞானிகள் பொதுச் சமூகத்திற்கு அறிமுகமாகியுள்ளார்கள். போற்றப்படும் விஞ்ஞானிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் முன்வைத்த கருத்தாக்கங்களைக் கொண்டு மேன்மேலும் அறிவியலை வளர்த்தெடுப்பதற்கு அறிவியலாளர்கள் மிக முக்கியமானவர்கள். அந்த வகையில், அறிவியலாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எப்படி அறிவியல் செய்கிறார்கள் என பேராசிரியர் சுந்தர் சருக்கை இரண்டாம் அத்தியாயத்தில் முழுமையாக அலசுகிறார்.

அறிவியல் ஒரு மாபெரும் நிறுவனமாகச் செயல்படுகிறது. அதில் ஈடுபடும் அறிவியலாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உளவியல், போட்டி மனப்பான்மை, அறிவியல் துறைசார் அனுபவத்திற்கான அங்கீகாரம், பிற துறைகள் சார்ந்த மதிப்பீடுகள் என்பன இந்த அத்தியாயத்தின் பேசுபொருள்கள்.

அறிவியலாளர்களின் தனிப்பட்ட வாழ்வைப் பார்த்தால், சராசரி மனிதர்களைப் போன்று விருப்பு வெறுப்புகளைக் கொண்டிருப்போராகவும், தன்னலம் சார்ந்து சிந்திப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். அறிவியலுக்கு அப்பாலான நம்பிக்கைகளைக் கொண்டிருகிறார்கள். சோதிடரைக்கூட அணுகுகிறார்கள். என்றாலும், ஓர் அறிவியலாளர் அவர் அறிவியல் செய்வதின் மூலமாகவே இனங்காணப்படுகிறார். அறிவியலில் அவர் என்ன செய்கிறார் என்பதே முக்கியம். அறிவியலாளர்கள் எப்படி அறிவியல் செய்கிறார்கள் என்பது பற்றி இரண்டாம் அத்தியாயம் முன்வைக்கும் விஷயங்களிலிருந்து சில பகுதிகளை மட்டும் குறிப்புகளாக இந்த ஆக்கத்தில் எழுதுகிறேன்.

அறிவியல் கருதுகோள்கள் பற்றி கேள்விப்படுகிறோம், பேசுகிறோம், சாதாரணமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறோம். அறிவியலாளர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நமக்குப் போதிய பரிச்சயம் இருப்பதில்லை. அறிவியலாளர்கள் இருவகை. பரிசோதனையாளர்கள் ஒருவகையினர். கோட்பாட்டாளர்கள் மற்றொரு வகையினர். அறிவியலில் அனைத்து முடிவுகளும் பரிசோதனையின் மூலமாகவே பெறப்பட்டதாகச் சொல்லிவிட முடியாது. அதேபோல், கோட்பாடுகளைக் கொண்டே அறிவியல் சிறப்பம்சம் பெற்றிருப்பதாகவும் சொல்லிவிட முடியாது. பரிசோதனைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் மத்தியிலான உறவென்ன? இவ்விரண்டும் இணையும் புள்ளியை இந்தப் புத்தகத்தில் பேரா.சுந்தர் சருக்கை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவ்வுலகை அறிவியல் என்ன விதத்தில் அணுகுகிறது? ஒரு பொருளை அதன் நிறம், சுவை, திடம் எனப் பல்வேறு விதத்தில் விளக்கலாம். ஆனால், இந்த மேலோட்டமான புலன்சார் அனுமானங்களை அறிவியல் முற்றிலுமாகத் தவிர்க்கிறது. இது முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. தனிப்பட்ட புலன்சார் அனுபவங்கள் அறிவியல் பரிசோதனை முறைக்கு இரண்டாம் பட்சமே. வேறு வார்த்தையில் சொன்னால், இந்த உலகை அறிவியல் கணிதமாகப் பார்க்கிறது.

உதாரணத்திற்கு, நகரும் ஒரு பொருளின் நிறை, நிறைக்கேற்ற வேகம், கால அளவு என அனைத்தும் அளவீட்டுத்தன்மையைக் கொண்டுள்ளது. அதுபோல ஒளியை எடுத்துக்கொண்டால், நவீன அறிவியல் அதன் வேகத்தையும், அதன் ஊடுருவும் தன்மையையும் ஓர் அளவு முறையாகப் புரிந்துகொள்கிறது. ஒருவேளை புலன்சார்ந்த அனுபவமாக இயற்கையைப் புரிந்துகொண்டிருந்தால் அதன் வேகம் குறித்து நமக்குத் தெரிந்திருக்காது அல்லவா? இப்படி கணிதத்தை இந்த உலகின் ஒரு மாதிரியாகப் பார்த்தே அறிவியல் முன்நகர்ந்துள்ளது. இந்தத் தனித்துவமான பார்வை உறுதி செய்யப்பட்டு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

அறிவியலின் பரிசோதனையை கோட்பாட்டாக்கம் செய்ய வலியுறுத்தினார் கலிலியோ. அதேபோல, கோட்பாட்டையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். உலகத்தை புலனனுபவத்தோடு சம்பந்தப்படுத்தாத பார்வையே கணிதம். நேர்க்கோடு, வட்டம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்கள் மெய்யுலகில் நாம் காணவே முடியாதவை. ஆனால், இவையெல்லாம் இவ்வுலகம் குறித்த அறிவியல் விளக்கங்களின் வடிவியல் மாதிரிகள். உதாரணத்திற்கு, ஒரு புள்ளியை வரைந்து அதை சூரியனை குறிப்பதாக கணித ரீதியாக ஒப்பீடு செய்ய முடியும். இன்னொரு புள்ளியை வரைந்து அதை பூமி என்று சொல்ல முடியும். இரண்டையும் நேர்க்கோடு போட்டு இணைத்து இரண்டிற்கும் இடையேயுள்ள தூரம் என்று சொல்ல முடியும்.

பௌதீக உலகத்தை கணித முறையாகப் பார்த்து புது வடிவம் கொடுத்ததால்தான் இயந்திரவியல் கொள்கை உருப்பெற்றது. அது மேலும் கொள்கை மாறுதலடைந்து குவாண்டம் இயந்திரவியல் வரை வந்துள்ளது. ஆக, கணிதமுறையில்தான் கோட்பாட்டாக்கம் நடைபெறுகிறது.

கோட்பாட்டை பரிசோதனைக்கு உட்படுத்துவது எளிய விஷயமல்ல. கல்லை மலையிலிருந்து உருட்டிவிடும் கலிலியோ காலத்துப் பரிசோதனை முறைகள் இப்போது ஆறாம் வகுப்புப் பாடநூலில் உள்ளது. பிள்ளைகள் அதைப் படிக்கிறார்கள். தற்காலத்தில் ஒரு கோட்பாடு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற யோசனை உருவாகிறது என்றால் அதற்கான கருவியை உருவாக்கும் திட்டம், அதை வடிவமைக்க நிபுணத்துவம் வாய்ந்த பொறியாளர்கள் அல்லது அந்தக் கருவியை உருவாக்க அறிவியலாளரே பொறியாளர் போல சிந்திப்பது, அதற்கு அரசாங்க நிதி, பரிசோதனையின் விளைவுகள் குறித்த ஆய்வு என பரிசோதனை முறைகளில் பல கட்டங்கள் உள்ளன.

அறிவியலில் கோட்பாட்டிற்கும் கருதுகோள்களுக்கும் குறைவில்லை. ஒவ்வொரு பொருள் குறித்தும் பலவிதமான கோட்பாடுகள் அறிவியல் இலக்கியங்களாகப் பிரசுரிக்கப்படுகின்றன. ஒரு கோட்பாடு பரிசோதனைக்குப் பிறகு அது நிரூபணமாக பத்தாண்டுகள் ஆகலாம். நூறாண்டுகள்கூட ஆகலாம். இப்படி அதிலுள்ள சிக்கல்களையும் நுணுக்கங்களையும் இந்தப் புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம் பல உதாரணங்கள் மூலம் விளக்குகிறது.

பிறகு, ஒரு ஆராய்ச்சி முடிவு பிரசுரிக்கப்படும் கட்டத்தில் அறிவியல் ஒரு நிறுவன அம்சத்தை அடைவதாக நூலாசிரியர் சுந்தர் சருக்கை கூறுகிறார். அதுவொரு மாபெரும் நெட்வொர்க். இந்த அத்தியாயத்தை வாசிக்கையில் எனக்கு சில எண்ணங்கள் தோன்றின. தற்போதுள்ள கல்விச் சூழலில் முதுகலைப் பட்டதாரிகள் ஆய்வு செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அது ஒரு தொழில்முறை நிபுணத்துவமாகவும், ஒரு மதிப்பாகவும் மாறியுள்ளது. பணி செய்யும் இடத்தில் முனைவர் பட்டம் இல்லாவிட்டால் மதிப்பு குறைவு, சம்பளமும் குறைவு என்ற நோக்கில் ஆய்வுக்குள் வருகிறார்கள்.

ஆய்விற்கென பல உள்ளடக்கங்கள் உள்ளன. ஏற்கனவே கண்ட முடிவுகளின் மூலமாகப் பல்வேறு மாதிரிகளைக் கொண்டு ஒரு மாதிரியை உருவாக்கப்படுகிறது. உதாரணமாக, இயற்பியலில் படிக வளர்ச்சி நுட்பங்கள் என்ற பிரிவு உண்டு. இன்றுள்ள அறிவியல் இலக்கியத்தைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான படிகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதுகுறித்து ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. ஏறக்குறைய அனைத்து கலவைகளையும் பயன்படுத்திவிட்டார்கள் என்றே எண்ணுகிறேன். மிகவும் திறன் வாய்ந்த படிகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்றாலும், மேலும் வேதியல் பொருளோடு இதுவரை சேர்க்காத கலவைகளைச் சேர்த்து படிகங்களைச் செய்து, அதைப் பரிசோதித்து, அதன் திறனையும் நிறைகுறைகளையும் ஆய்வுக் கட்டுரையாக எழுதிப் பிரசுரிப்பது.

மேற்சொன்ன ஆய்வும் சற்று சிரமமானதே என்றாலும், இந்தத் துறையில் ஆய்வு செய்வது அறிவியலில் மிகவும் பரவலாக உள்ளது. பொதுவாக, ஆய்வு மாணவர்கள் தம் ப்ராஜக்டிற்காக எடுத்துக்கொள்ளும் சுலபமான வழியாக இது உள்ளது. இதன் மூலம் பெறப்படும் பட்டம் தொழிற்முறையான மதிப்பைத் தரும். ஆனால், ஆய்வுக் கட்டுரைகளுக்கென மதிப்புகள் உண்டு. citation index என்றவொன்றும் உள்ளது. அதாவது, நம் ஆய்வை பலரும் தம் ஆய்வுகளில் மேற்கோள் காட்டுவதாகும். அந்த அளவிற்கு சிறப்பம்சம் கொண்டதாகவும், புது கருத்துகள் கொண்டதாகவும் ஆய்வுக் கட்டுரை இருக்க வேண்டும். அதையெல்லாம் கொண்டே ஒரு ஆய்வுக் கட்டுரை தர மதிப்பீடு செய்யப்படுகிறது.

இதுபோக, நமது ஆய்விற்கான அங்கீகாரத்திற்கு மேற்குலக அறிவுற்பத்தியைச் சார்ந்திருக்க சூழல் பற்றி, இந்தியாவில் பிரசுரிக்கப்படும் ஆய்விதழ்கள் பிற நாடுகளில் எந்த அளவுக்குப் பொருட்படுத்தப்படுகிறது, அதை வாசிப்பதற்கான வழிகளில் உள்ள குறைகள் என்னென்ன, அறிவியல் இதழ்களின் திறந்த அணுக்கம் மற்றும் தனியார்மயம், பிற நாட்டு ஆய்விதழ்கள் டாலர்களில் விற்கப்படும் வர்த்தக சூழ்நிலை, இந்தியா ஆய்விதழ்களுக்காகச் செய்யும் செலவுகள் முதலானவை குறித்த ஆழமான பார்வையை இந்த அத்தியாயம் வழங்குகிறது.

Related posts

One Thought to “அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (2)”

Leave a Reply to அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (3) – மெய்ப்பொருள் காண்பது அறிவு Cancel reply