அலீ மனிக்ஃபான்: பேரண்ட ஆற்றலின் தூதர்
அந்தக் கல் கட்டடத்தின் வாயிலிற்கு ஓலை கிடுகினாலான கதவு.. சன்னலின் இடத்தில் வட்ட வடிவிலான சிமிட்டி கிராதிகள்.
அந்த கிடுகு , கிராதி துளைகள் வழியாக அரூப மாயாவியான காற்றானது குடிலுக்குள் வருவதும் போவதுமாக இருந்தது. வீட்டின் உள்ளே வாழ்க்கையை அன்றாடம் நகர்த்திச் செல்வதற்குத் தேவையான மிக எளிய தளவாடங்களே இருந்தன.
அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் வளர்ந்து நின்றன. அந்த மரத்திலிருந்து பல அடிகள் தள்ளி நின்று நீரூற்றிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.
தலைப்பாகையும் கை பனியனும் லுங்கியும் அணிந்திருந்த அவர் எங்கள் நண்பர்கள் குழாமை பனங்கற்கண்டும் எலுமிச்சை சாறும் கலந்த பானகம் தந்து வரவேற்றார். அவர்தான் அலீ மனிக்ஃபான்.
ஒடிசலான குச்சி போன்ற உடல்வாகு. புன்னகையுடன் சன்னமான குரலில் மென்தமிழில் நிதானமாக உரையாடத் தொடங்கினார்.
குடிலுக்குள்ளிருந்த அவரது மனைவி அவருடன் கோபமாக ஏதோ பேச எங்களுக்குப் புரியாத சில சொற்களில் அவரைக் கையமர்த்தினார் மனிக்ஃபான். மனைவியுடன் அவர் பேசிய மொழி திவேஹி என்பதை பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது. அந்த மொழியானது மாலத்தீவிலும் மினிக்காய் தீவிலும் நடைமுறையில் உள்ளது.
முராய்து கண்டவ்ரு அலீ மனிக்ஃபான் என்ற முழுப் பெயரைக் கொண்ட அலீ மனிக்ஃபான் பிறந்து வளர்ந்த இடம் லட்சத்தீவுத் தொகுதியிலுள்ள மினிக்காய் தீவாகும். இவரது முன்னோர்கள் மாலத்தீவிலிருந்து லட்சத்தீவில் குடியேறிவர்கள். இவரது தந்தை லட்சத்தீவின் தலைமை நிர்வாகியாக (அமீன்) இருந்துள்ளார்.
வள்ளியூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கிழவனேரி கிராமம். தார் சாலையிலிருந்து விலகி கொஞ்ச தூரம் உள்ளே சென்றால் வறண்டு பரந்த நிலத்தின் நடுவே நிற்கின்றது அலீ மனிக்ஃபானின் குடில். வீட்டைக் கட்டி அருகே உள்ள கிணற்றைத் தோண்டியது அவரும் மனைவியும்தான். எந்த வித வேலையாளின் உதவியும் இல்லாமலேயே இதைச் செய்து முடித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள ஒன்றிய அரசின் கடல்சார் மீன்வள ஆய்வுக் கழகத்தில் (CMFRI) 20 ஆண்டுகள் அருங்காட்சியக உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் அலீ மனிக்ஃபான். இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே இயற்கை வேளாண்மை குறித்த தனது கனவுகளை நனவாக்க நினைத்தார். அதற்காக வேதாளை என்ற ஊரில் நிலம் வாங்கினார். அருகமையில் கிடைக்கும் பொருட்களை வைத்து உள்ளூரின் தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறுதான் வீடு கட்ட வேண்டும் என கூறும் அலீ மனிக்ஃபான் அதற்கேற்ப குடிசையமைத்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
தனது இருப்பிடத்திற்கான மின் இணைப்பிற்கு அரசிடம் விண்ணப்பித்து சலித்துப் போய் தானாகவே மின் உற்பத்தியிலும் ஈடுபட்டார். புதுமைக்கும் தேடலுக்கும் கடல்சார் மீன் வள ஆய்வு கழக பணியில் இனிமேலும் வாய்ப்பில்லை என்றான பிறகு அதிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பிறகு வேதாளையிலிருந்து புறப்பட்டு வள்ளியூர் அருகே 15 ஏக்கர் நிலத்தை வாங்கி Do Nothing Farm என்ற இயற்கை வேளாண் பண்ணையை அமைத்தார்.
மனிதனின் இடையூறு இல்லாமல் மரங்களும் செடி கொடிகளும் எப்படி வளர்கின்றன என்பதை சோதித்து அறிவதற்காகவே இந்தப் பண்ணையை அமைத்ததாக மனிக்ஃபான் கூறுகின்றார். அத்துடன் மொட்டைப்பனையில் காற்றாடிகளைப் பிணைத்து கார் பேட்டரி வாயிலாகத் தனது வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தை வெட்ட வெளியிலிருந்து கறந்துகொண்டிருந்தார்.
அணு உலைகள் உயிரினத்திற்கு ஆபத்தானவை. அவை சூழலுக்கும் கேடு பயப்பவை. அணு உலையிலிருந்து மின்சாரம் கிடைக்கும்தான். ஆனால் உலை வெடித்தால் ஊர் இருக்காது என அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார்.
பல அடி தள்ளி நின்று மரங்களுக்கு நீர் ஊற்றுவது ஏன் என வினவினோம்.
மரங்களின் வேர்கள் இயல்பாகவே நீர் தேடி பயணிக்கக்கூடியவை. சற்று தொலைவில் நீரூற்றும்போது அதை தேடி அந்த வேர்கள் பரவும். அதனால் மரம் வலிமையாக நிலையாகக் கொள்ளும். ஆனால் நாம் மரத்தின் அடியிலேயே நீரை ஊற்றி அதன் தற்சார்புத் தன்மையை பலவீனப்படுத்துகின்றோம் என்றார்.
அரசு பணியிலிருந்து விலகிய பிறகு தற்சார்பு வாழ்வியலைத் தனது வாழ்நாள் பணித் திட்டமாகக் கொண்டு இயங்கும் அலீ மனிக்ஃபானின் செயல்களமாக விளங்குவது அவரது சொந்த உடலும் குடும்பமும்தான்.
அன்று காந்தியடிகள் வெள்ளை வல்லாதிக்கத்திற்கு எதிராகத் தனது உடலையும் ஆன்மாவையும் ஆன்மிகத்தையும் ஆயுதமாகவும் கேடயமாகவும் தாங்கினார். அதிலிருந்துதான் இந்தியாவிற்கான வாழ்வியலையும் உருவாக்கி முன்வைத்தார்.
இன்று வங்கொள்ளைக்கார மருந்து, விதை, உரம், பூச்சிக்கொல்லி உற்பத்தி நிறுவனங்கள் தங்களது பொருட்களை இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மண்ணின் மீதும் மக்களின் மீதும் நச்சு சோதனை நடத்திப் பார்க்கும் காலம்.
ஒரு மனிதக் கூட்டத்தின் மீது நுகர்வு, ஆதாய வெறியானது தொற்றுநோய் போல ஆக்கிரமிப்பு நடத்தும்போது, அந்த மண்ணானது இயல்பாகவே காந்தியடிகள், நம்மாழ்வார் போன்ற நச்சு முறிக்கக்கூடிய உயிர்க் காக்கும் அமுதக் கலயங்களை உண்டு பண்ணும் போலும். இன்று அந்த அமுத கலய அடுக்கில் மற்றொரு காந்தியாழ்வாராக அலீ மனிக்ஃபான் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.
ஆடு தின்னும் அனைத்து வகை இலை தழைகளையும் மனிதன் சாப்பிடலாம் என அடித்துக் கூறும் அவர் தனது வீட்டில் சமைப்பதே இல்லை. இலை தழைகள்தான் அவரின் அன்றாட உணவு. நோய்வாய்ப்பாட்டால் மருந்துகள் எதுவும் உட்கொள்வதில்லை. மாறாக நோன்பு பிடிப்பதன் மூலமாக தானாகவே நோய் தீர்க்கும் உடலின் ஆற்றல் செயல்படத் தொடங்குவதாகக் கூறினார்.
பெரும்பாலான நேரங்களில் உணவை அசை போட்டுக் கொண்டே இருக்கும் கால் நடைகளுக்கு ஏதேனும் நோய் வந்தால் அவை உணவை உண்ண மறுக்கின்றன. நோய் சரியான பிறகே அவை மீண்டும் இரை எடுக்க தொடங்குகின்றன என விளக்கினார்.
எல்லோரையும் போல இளம் வயதில் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டார் அலீ மனிக்ஃபான். அவரின் அறிவுத்தேடலானது வகுப்பறைகளின் சுவர்களுக்குள் அடங்கி இருக்க மறுத்தது. மாணவன் அலீ மனிக்ஃபானின் கூர்மையான கேள்விகளுக்கு விடையளிக்கத் திணறினர் ஆசிரியர்கள். இதன் விளைவாக எட்டாம் வகுப்போடு அவரது நவீனக் கல்வி முடிவிற்கு வந்தது. அதன் பிறகு அன்றாடம் பல வண்ணக் கோலம் கொள்ளும் இயற்கையிலிருந்துதான் அவர் தனக்கான கல்வியைத் திரட்டிக் கொண்டார். கடல், மலை, ஆறு, குளம், குட்டைகள் அவரின் ஆசான்களாக மாறி போதித்தன.
அவர் தனது பிள்ளைகளையும் அவர்களின் இளம் பருவத்தில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேயில்லை. அவர்களைத் தனது மடியில் அமர்த்தி தம் அன்றாட வாழ்வின் பரப்பிலிருந்து எழும் கூறுகளிலிருந்து தமக்கான பட்டறிவை உருவாக்கிக் கொள்ளும் நுட்பத்தை மட்டுமே அடையாளங்காட்டினார். பின்னர் அவர்களில் சிலர் பத்தாம் வகுப்பிற்குத்தான் முறை சார்ந்த கல்வி நிறுவனங்களுக்குச் சென்றனர்.
குழந்தைகளை நீங்கள் வளர்க்கத் தேவையில்லை. உங்களின் கண்காணிப்பில் அவர்களை வளர அனுமதித்தால் மட்டும் போதும். மரங்களை எப்படி இறைவன் வளர்க்கின்றானோ அதேபோல பிள்ளைகளையும் வளர்ப்பான் எனக் கூறும் மனிக்ஃபான் அதைத் தன் வீட்டில் நிரூபித்தும் காட்டியுள்ளார். முறையாகப் பள்ளிக்கூடமும் செல்லாமல் கடலியல் கழகத்திலும் பயிலாமல் அலீமனிக்ஃபானிடமிருந்து பெற்ற தலைமுறை கல்வியின் விளைவாக அவரது மகன் மூஸா மனிக்ஃபான் வணிக கப்பல் துறை (Merchant Navy)-யில் நல்ல நிலையில் பணியாற்றி வருகின்றார்.
இன்றைய கல்வி முறையைப் பற்றி அலீ மனிக்ஃபான் கூறுகையில், “பாடசாலை கல்வியானது செயற்கையாக இருக்கிறது. மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றிய தன்னம்பிக்கையை இக்கல்வி வழங்குவதில்லை. அத்துடன் அவர்களின் குண நடத்தைகளிலும் நல்ல விளைவுகளை உருவாக்குவதில்லை. இளம் மாணவர்களின் படைப்பூக்கத்தை அது இல்லாமல் ஆக்குவதோடு மட்டுமின்றி அவர்களின் வளர்ச்சியையும் மட்டுப்படுத்துகின்றது” எனக் குற்றம் சாட்டினார்.
கேரள மாநிலம் திருஸ்ஸூர் மாவட்டம் சாவக்காட்டில் உள்ள பாவரட்டியில் அலீ மனிக்ஃபானின் இளைய மகள் ஆமினா Natural School என்ற பெயரில் இயற்கை பாடசாலையை 2002ம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளார். மற்ற இரு மகள்களும் வெவ்வெறு பாடசாலைகளில் ஆசிரியைகளாகப் பணி புரிகின்றனர்.
நவீன கடலோடி
மத்திய கிழக்கின் வாழ்க்கை ஓட்டத்தின் இழைகளாக ஒட்டகம் சார்ந்த பாலைவன நாடோடி வாழ்க்கை முறையுடன் கப்பல் சார்ந்த கடலோடி வாழ்க்கையும் நெய்யப்பட்டுள்ளது. இது அவர்களின் இலக்கியப் படைப்புகளிலும் தவறாமல் எதிரொலிக்கின்றது.
இடர்களும் தனிமையும் பிரம்மாண்டமும் போராட்டமும் நிறைந்த கடல் பயணமானது எல்லையற்ற சாத்தியங்களைக் கொண்டதாகும். அந்த எல்லையற்ற சாத்தியங்களின் உலகினுள் கடலோடி சமூகமானது செலுத்திய மன ஓடம்தான் ஆயிரத்தோரு இரவு கதைகளில் வரும் சிந்துபாத் பாத்திரம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துபாத் என்ற கடலோடி கதை மாந்தன் பயணித்த கற்பனை தடங்களுக்கு உயிர் கொடுக்க எண்ணினார் அயர்லாந்தை சார்ந்த கள ஆய்வாளாரும் எழுத்தாளருமான டிம் செவரின் (Tim Severin).
சிந்துபாத் பயணித்த மஸ்கட்டிலிருந்து சீனத்தின் கேன்டன் (Canton) துறைமுகம் வரையிலான 9655 கிலோ மீட்டர் கடல் பாதையில் தன் குழுவினருடன் டிம் செவரின் பயணித்துள்ளார். இந்தப் பயண பட்டறிவை The Sindbad Voyage என்ற பயணக் குறிப்பு நூலாகவும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அந்த கடல் பயணத்திற்கான “சோஹர்“ (Sohar) என்ற பெயருடைய 27 மீட்டர் நீளமுள்ள மரக்கலத்தை 11 மாத கால உழைப்பில் தென்னை மட்டை, கயிறு, அயினி மரம் என்ற இயற்கை மூலப் பொருட்களைப் பயன்படுத்தி வடிவமைத்து உருவாக்கியது அலீ மனிக்ஃபான் தலைமையிலான குழுவாகும். இந்த மரக்கலமானது 16ம் நூற்றாண்டின் போர்த்துக்கீசிய ஆவணத்தில் காணக் கிடைக்கும் வடிவமைப்பின் அடிப்படையில் பண்டைய திவேஹி தொழில் நுட்பத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டுதல் என்பது அலீ மனிக்ஃபானின் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் தொழிலாகும். இந்த சோஹர் மரக்கலம் தற்சமயம் மஸ்கட்டில் உள்ள கடல்சார் அரும்பொருள் காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கடல், மரக்கலம் என வரும்போது மனிக்ஃபான் கடலில் விழுந்த கதையையும் சொல்லத்தான் வேண்டும். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு. அப்போது அவருக்கு வயது 72. கவரட்டியில் உள்ள மீன்பிடிப் படகுத் துறையிலிருந்து கால் தவறி கடலில் விழுந்து விட்டார். அவர் விழுந்த இடத்தில் கடலின் ஆழம் பதினெட்டு அடிகளாகும். விழுந்த வேகத்தில் காலின் கணு விலகி விட்டது. உடனே சுதாரித்துக் கொண்டு ஒரு கையில் செல் பேசியைப் பற்றிக்கொண்டே நீந்திக் கரையேறி உள்ளார். மருத்துவ பரிகாரம் எதுவும் எடுக்காமல் ஒன்றரை மாதம் வரை படுக்கை ஓய்வில் இருந்தவருக்கு விலகிய கால் கணு தானாகவே பொருந்திவிட்டது.
கடலின் மகனான அலீ மனிக்ஃபான் பல அரிய வகை மீன் இனங்களைச் சேகரித்துள்ளார். அவற்றின் உள்ளூர் பெயர்களையும் அடையாளங்காணும் பணியில் மண்டபத்தில் உள்ள CMFRI-யின் அன்றைய இயக்குநரான டாக்டர்.எஸ்.ஜோன்ஸுக்கு உதவியுள்ளார். இளைஞனான அலீ மனிக்ஃபானின் திறமையைக் கண்டு வியந்த டாக்டர்.எஸ்.ஜோன்ஸ் அலீ மனிக்ஃபான் கண்டுபிடித்த புதிய வகை மீன் ஒன்றிற்கு அவரின் நினைவாக Abudefduf Manikfani என்ற பெயரைச் சூட்டியுள்ளார்.
அத்துடன் அலீ மனிக்ஃபானை மண்டபம் கடல் சார் ஆய்வு நிலையத்தில் அருங்காட்சியக உதவியாளராகவும் பணியில் சேர்த்துக் கொண்டார்.
தனக்கு விருப்பமான கடலையும் மீனையும் போல தனது தேடலை அவர் பரந்து விரிந்ததாக ஆக்கிக் கொண்டார். இதன் விளைவாக அலீ மனிக்ஃபான் கடல் சார்ந்த விஷயங்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை என்பதற்கு அவரின் மொத்த சாதனைகளும் சான்றாக விளங்குகின்றன. தான் கண்டு பிடித்த உருளை மின்னோடியினால் இயங்கும் மிதிவண்டியில் தனது மகனுடன் புது தில்லி வரை அலீ மனிக்ஃபான் பயணித்துள்ளார்.
இயற்கையின் எல்லா வெளிப்பாடுகளிலும் மனித வாழ்வைப் பிணைத்திடும் முனைப்போடு உள்ள அலீ மனிக்ஃபானுக்கு அவரது தாய்மொழியுடன் மேலதிகமாக ஆங்கிலம், மலையாளம், தமிழ், உர்தூ, ஹிந்தி என்பன சரளமாகத் தெரியும். இதுவல்லாமல் எட்டு மொழிகளிலும் அவருக்குப் பழக்கம் உண்டு. சமஸ்கிருதம், அறபி, லத்தீன் என தலையாய மொழிகளைக் கற்றால் இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு, ஐரோப்பா பகுதிகளில் புழக்கத்தில் உள்ள பெரும்பாலான மொழிகளுடன் பழகுவது எளிது என்கிறார் அலீ மனிக்ஃபான்.
இயற்கையை மனிதன் சூறையாடும்போது பேரழிவுகளின் வடிவத்தில் அவனை அது முழுமையாகத் திருப்பித் தாக்குவது உறுதி. அதேபோல இயற்கையை உறவாடுபவர்களுக்கு அது பன்மடங்காகத் திரும்பக் கையளிக்கும் வள்ளல் தன்மை வாய்ந்தது என்பதற்கு அலீ மனிக்ஃபானின் வாழ்வே ஒரு சாட்சி.
எட்டாம் வகுப்பைத் தாண்டாத அலீ மனிக்ஃபானுக்கு கப்பல் கட்டும் கலை, தற்சார்பு வாழ்வியல், கட்டடக்கலை, மொழியியல், கல்வி, பொறியியல் தொழில் நுட்பம், கடல் உயிரியல், கடல்சார் ஆய்வு, புவிபரப்பியல், வானியல், வேளாண்மை, சூழலியல் போன்றவற்றில் அறிமுகமும் ஆழமும் கிடைத்ததென்றால் அது இறைவன் அளித்த கொடை என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்?
அலீ மனிக்ஃபானின் வாழ்க்கையை ஆங்கிலத்தில் The Man in Million என்ற பெயரில் கேரளாவைச் சார்ந்த இயக்குநர் மாஜித் அழிகோடு ஆவணப்படமாக இயக்கியுள்ளார். இது மலையாளத்தில் “கண்டுபிடித்தங்களுடே கப்பித்தான்” என்ற பெயரிலும் வெளிவந்துள்ளது.
நானும் நண்பர்களும் வள்ளியூரில் உள்ள அவரது இயற்கைப் பண்ணையில் கண்ட காட்சிகள் எல்லாம் 1993ம் ஆண்டு காலப் பகுதியைச் சேர்ந்தது. இன்று அவர் கட்டிய வீடும் இல்லை. கிணறும் இல்லை. அந்த இயற்கை பண்ணை அமைந்துள்ள வள்ளியூரின் பொட்டல் காட்டில் ஏராளமான வீடுகள் வந்துவிட்டன. அந்த 15 ஏக்கர் இயற்கைப் பண்ணையானது சொந்தத் தேவையையொட்டி அவரது குடும்பத்தினரிடையே பங்கிடப்பட்டுவிட்டது. அலீ மனிக்ஃபான் கேரளத்திற்குச் சென்றுவிட்டார்.
இந்தச் செய்தியைக் கேட்கவே பிடிக்கவில்லை.
தனது வாழ்வின் மாலைப் பொழுதில் இருக்கும் அலீ மனிக்ஃபானுக்கு முன்னர் உள்ள ஒரே விடயம் உலக சந்திர நாட்காட்டியைப் பரவலாக்குவதுதான். “கதிரவனைப் போலவே பிறையும் திட்டமிடப்பட்டவாறே சுழன்று கொண்டிருக்க உலக முஸ்லிம்கள் ஏன் இறைவன் ஏற்பாடாக்கித் தந்துள்ள பிறைக் காட்டியைப் பின்பற்றாமல் ஊருக்கொரு நோன்பையும் பெருநாளையும் கொண்டாடுவது சரிதானா?” என சிரித்தவாறே கேட்கிறார்.
சந்திப்பின் நிறைவாக அலீ மனிக்ஃபானிடம், “நீங்கள் நடந்து வந்த பாதையில் ஏன் பிறரைப் பயிற்றுவிக்கவில்லை? எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், “நான் செய்து கொண்டிருக்கும் விஷயங்களை யாரையும் ஏற்கும்படி செய்ய விரும்பவில்லை. இது ஒரு பரிசோதனை மட்டுமே.”
பத்மஸ்ரீ விருது பெற்ற அலீ மனிக்ஃபானிடம் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், “இவ்வளவு சாதனைகளை கொண்டுள்ள உங்களைப் போன்றவர்களை சராசரி மனிதர்கள் அறியவில்லையே?” எனக் கேட்கப்பட்டபோது, “அப்படிப்பட்டவர்களை சராசரிகள் அறிய மாட்டார்கள். வறண்ட நிலத்தில் வந்துபோகும் பூக்களை யாரும் அறிவதில்லைதானே?” என்றார்.
உலகச் செயல்களத்தின் ஊடாகப் பயணித்த ஆன்மிகக் கீற்றின் லௌகீக உள்ளொளிப் பயணமாகத்தான் அலீ மனிக்ஃபானின் வாழ்வைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. காந்தியடிகள், மசானபு ஃபுக்கோகா, நம்மாழ்வார், அலீ மனிக்ஃபான் போன்றோர் பேரண்ட ஆற்றலின் தூதர்கள். நாம் வாழும் உலகிற்குப் பேராசான்கள்.
தன் தேவைகளுக்காக முற்றிலும் இறைவனை சார்ந்திருத்தல் என்ற சித்தர், ஸூஃபி ஞான முனிவர்களுடைய தத்துவ மரபின் சமகாலச் செயல் நீட்சிதான் இந்த ஆளுமைகள். இயற்கையையும், அதன் வளங்களையும் பணத்தாள்களில் அளவிடும் நமது மதிப்பீட்டு முறைக்குள் அடங்க மறுப்பவர்கள்.
அன்றாடம் விரியும் மலரைப் போல காலை கதிரவனைப் போல ஒவ்வொரு நாளும் வாழ்க்கையானது நிறைந்த அழகுடனும் நம்பிக்கைகளுடனும் மலர்கிறது. அனைத்தையும் ஒரே மூட்டையில் அள்ளி முடிந்திட வேண்டும் என்ற நுகர்வு வெறியும், அது சார்ந்த நமது வாழ்க்கை ஓட்டமும் அந்த நம்பிக்கை புலரியைக் காண முடியாமல் செய்யும் கருந்திரையாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
அலீ மனிக்ஃபானின் பரிசோதனையின் பாதை நிறையும் இடத்தில் அந்தக் கருந்திரைகள் கிழித்து எறியப்பட்டுக் கிடக்கின்றன.
அவருடன் பேச: +91 96456 01877
அற்புதம். வேறு சொல்ல வார்த்தை இல்லை.