கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காஸா இனப்படுகொலையின் பின்னணியில் இஸ்ரேலிய தேர்தலை புரிந்து கொள்வது

Loading

ஒரு நாட்டில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்பதற்காக அந்த நாட்டின் அரசியல் அனைவருக்குமான ஜனநாயக அரசியலாகிவிடாது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எத்தகைய பாசிச ஒழுங்கைப் பாதுகாக்கின்றன, அந்த ஒழுங்கில் யாருடைய இருப்பு அங்கீகரிக்கப்படுகிறது, யாருடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பவற்றிலிருந்துதான் ஜனநாயகத்தின் அரசியல் தன்மையை மதிப்பிட வேண்டும்.

இந்த ஆண்டு (2026) அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்ற இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலை இந்த அடிப்படையில் அணுகும்போது, குடியேற்றக் காலனியத் தேசத்தை எவ்வாறு நிர்வகிப்பது, நீதித்துறைக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்க வேண்டும், தீவிர மதப்பற்றுள்ள யூதக் குடிமக்கள் ராணுவத்தில் சேவையாற்றி வரிச் சுமையைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமா வேண்டாமா என்பது போன்ற சமூக, பொருளாதார, கருத்தியல் விவகாரங்கள் தொடர்பாக இஸ்ரேலிய ஸியோனிசக் கட்சிகள் கடுமையாகப் பிளவுபட்டுள்ளதைக் காணமுடிகிறது. இருப்பினும், காலனித்துவ ஆட்சிமுறையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து அவற்றுக்கிடையே ஏறக்குறைய ஒருமித்த கருத்தே நிலவுகிறது என்கிறது BDS National Committee.

ஓரன் யிஃப்டாசெல் (Oren Yiftachel) மற்றும் அசாத் கானெம் (Asad Ghanem) எழுதிய Understanding ‘ethnocratic’ regimes: the politics of seizing contested territories என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டப்படுவதைப் போல, இஸ்ரேல் நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடனே அவர்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தையும் அதன் அரசியலமைப்பையும் யூதமயமாக்கும் ஒரு தீவிரத் திட்டத்தை ஆரம்பித்தார்கள். உதாரணமாக, இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தில் “இஸ்ரேலிய பூமியில்தான் யூத இனம் உருவானது. அங்கேதான் அதன் மத, ஆன்மிக, அரசியல் அடையாளம் வடிவம் பெற்றது. மக்கள் தங்கள் காலம் முழுவதும் அதன் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் திரும்பிவருவதற்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதையும் நம்பிக்கையையும் கைவிடவில்லை. எங்களின் இயற்கை மற்றும் வரலாற்று உரிமையின்படி இந்த இஸ்ரேல் நிலத்தில் ஒரு யூத அரசை நாங்கள் இதன் மூலம் பிரகடனப்படுத்துகிறோம்” என்று குறிப்பிட்டு பண்டைய தாயகத்துடனான யூதர்களின் தொடர்பையும், இந்த ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மீதான அதன் அரசியல் கட்டுப்பாட்டையும் பிரகடனம் செய்தார்கள்.

இதன் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வாழ்ந்தவர்களின் உரிமைகளை முழுமையாக மறுப்பதுடன், இஸ்ரேல் என்று அறியப்படும் பகுதியில் வாழும் ஃபலஸ்தீனர்கள் இந்த நிலத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்ற கொள்கையும் இயல்பாக்கம் செய்யப்படுகிறது. அத்துடன், இஸ்ரேல் அரசு வளங்கள், அதிகாரங்கள், நிலங்களை ஒதுக்கீடு செய்வதில் இனத்துவ அடிப்படையில் யூதர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளைச் செயற்படுத்திவருகிறது. அந்த வகையில், அங்கு வாழும் ஃபலஸ்தீன மக்களும், ஆக்கிரமித்திருக்கும் யூத மக்களும் சமமான குடியுரிமை கொண்டவர்களாக இல்லை.

இஸ்ரேலிய பாசிச அரசு அறபு மக்களிடமிருந்த நிலங்களைக் கைப்பற்றி யூதர்களுக்கு வழங்குவதைத் தொடர்ந்து செய்துவருவதாக ஜெஃப் ஹால்பர் (Jeff Halper) குறிப்பிடுகிறார். இஸ்ரேலிய அரசு நகர்ப்புறத் திட்டமிடல் அமைப்புகளையும் நிலம் சார்ந்த சட்டங்களையும் உருவாக்கி, யூதக் குடியேற்றங்களுக்குப் பெரியளவில் நிதியளித்து அவற்றைச் செயற்படுத்தி வருகிறது. தற்போது காஸா இனப்படுகொலை நடைபெற்றுவரும் சந்தர்ப்பத்தில், காஸாவை அண்மித்த பகுதிகளில் பல குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகளையும் இஸ்ரேல் முன்னெடுத்துவருகிறது என்றும் ஹால்பர் குறிப்பிடுகிறார். இவை இஸ்ரேலியத் தேர்தல் விவாதங்களில் விவாதிக்கப்படுவதில்லை.

யோவ் லிட்வின் (Yoav Litvin) தனது ‘Did he know?’: Why Israel is rejecting an October 7 reckoning என்ற கட்டுரையில், ‘அக்டோபர் 7 தாக்குதல்குறித்து பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு முன்கூட்டியே தெரியுமா என்ற விவாதம் இஸ்ரேலிய அரசியலின் மையப் பிரச்சினையாக மாறும்போது, அதற்குப் பின்னர் நடைபெற்ற காஸா அழித்தொழிப்புக்கான பொறுப்புக்கூறல் ஏன் தேர்தல் விவாதத்தின் மையத்திற்கு வருவதில்லை?’ என்ற முக்கியமான கேள்வியை எழுப்புகிறார். இந்தக் கேள்வி நெதன்யாகுவின் பொறுப்பை மறுப்பதற்கானதல்ல; மாறாக, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பின் பொறுப்பை ஒரு தலைவரின் தோல்விக்குள் சுருக்கிவிடும் அரசியல் உத்தியைக் கேள்விக்குட்படுத்துவதாகும்.

நெதன்யாகுவைத் தோற்கடிப்பது, அவருக்குப் பதிலாக வேறொரு தலைவரை ஆட்சிக்குக் கொண்டுவருவது அல்லது அவரது அரசாங்கத்தின் தோல்விகளை அம்பலப்படுத்துவது ஆகியவை அரசியல் ரீதியாக முக்கியமற்றவை அல்ல. ஆனால், இவற்றைச் செய்வதன் மூலம் ஃபலஸ்தீனர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு, நிலப்பறிப்பு, இனவாதப் பாகுபாடு, இராணுவ வன்முறை, இன அழிப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் அரசமைப்பு தானாகவே ஒழிந்துவிடாது. நெதன்யாகுவின் எதிரிகளும் தங்களுடைய அரசியல் பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது. லிட்வின் சுட்டிக்காட்டுவதுபோல, தேர்தல் விவாதம் நெதன்யாகுவின் தவறுகளை முன்னிலைப்படுத்தும்போது, இஸ்ரேலிய அரசியல் சமூகத்தின் பரந்த பொறுப்பும் ஸியோனிசக் குடியேற்ற விரிவாக்கத்தின் தொடர்ச்சியும் மறைக்கப்படுகின்றன. இங்குதான் தேர்தல் அரசியலின் அடிப்படைச் சிக்கல் வெளிப்படுகிறது.

ஃபலஸ்தீனர்களின் இன அழிப்பு என்பது ஒரு தலைவரின் தனிப்பட்ட முடிவுகளால் மட்டும் உருவான நிகழ்வு அல்ல. அது பூர்வகுடி மக்களைத் தமது நிலத்தின் மீது முழுமையான உரிமையற்றவர்களாக மாற்றும் பாசிச அரசியல் ஒழுங்கின் விளைவு. அந்த ஒழுங்கு கேள்விக்குட்படுத்தப்படாமல், அதன் நிர்வாகிகள் மட்டுமே மாற்றப்படும்போது, அரசியல் மாற்றம் என்ற பெயரில் பாசிச அதிகாரத்தின் தொடர்ச்சியே நிலைபெறுகிறது.
எனவே, இஸ்ரேலியத் தேர்தல்களில் கட்சிகள் எதைப் பேசுகின்றன என்பதுடன், எதைப் பேச மறுக்கின்றன என்பதும் முக்கியமானது.

காஸாவில் கொல்லப்பட்ட ஃபலஸ்தீனர்கள், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், அழிக்கப்பட்ட மருத்துவமனைகள், தகர்க்கப்பட்ட வீடுகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்கள், இழக்கப்பட்ட நிலங்கள் ஆகியவை தேர்தல் விவாதத்தின் மையக் கேள்விகளாக மாறாதபோது, அந்த மௌனம் ஃபலஸ்தீன உயிர்களை அரசியல் கணக்கீட்டிலிருந்து வெளியேற்றும் மனிதநீக்க அரசியலின் வெளிப்பாடாகும். இஸ்ரேலியக் கட்சிகளுக்கிடையிலான போட்டியைப் புரிந்துகொள்வதற்கு, யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதைவிட, ஆட்சிக்கு வரும் அனைவரும் எந்த ஒடுக்குமுறை அமைப்பைத் தொடர்ந்து பாதுகாக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்ரேலுக்குள் வாழும் ஃபலஸ்தீனர்களின் தேர்தல் பங்கேற்பு குறித்த விவாதம், வாக்களிப்பதற்கான உரிமை இருக்கிறதா இல்லையா என்ற சட்டரீதியான லிபரல் ஜனநாயகக் கேள்விக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை. ஒடுக்கப்படும் பூர்வகுடி மக்கள் தங்களை ஒடுக்கும் அரசின் நிறுவனங்களுக்குள் பங்கேற்பதன் அரசியல் விளைவுகள் என்ன என்ற அடிப்படையான கேள்வியை அது எழுப்புகிறது.

ஹைதர் ஈது (Haidar Eid) தனது On Palestinian Participation in the Elections of the Genocidal Israeli Parliament என்ற கட்டுரையில், இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல்களில் ஃபலஸ்தீனர்கள் பங்கேற்பதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை முன்வைக்கிறார். கட்சிகளின் பங்கேற்பு குறித்த விவாதம், அறபுப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்களா என்ற கேள்வியைத் தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது.
மன்சூர் அப்பாஸ் தலைமையிலான ராம் (Ra’am) கட்சி, இஸ்ரேலிய அரசியல் அமைப்புக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமும் ஆட்சிக் கூட்டணிகளில் பங்கேற்பதன் மூலமும் ஃபலஸ்தீன மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பெற முடியும் என்ற நடைமுறை அணுகுமுறையை முன்னிறுத்துகிறது.

ஹடாஷ், தால், பலத் ஆகிய கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகள் வேறுபட்டவையாக இருந்தாலும், பிரதிநிதித்துவம், சம குடியுரிமை, இனவாதப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம் ஆகியவை அவற்றின் அரசியலில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஆனாலும் இக்கட்சிகள் அனைத்தையும் ஒரே அரசியல் நிலைப்பாட்டில் இருப்பவையாகக் கருத முடியாது. அவை செயற்படும் நாடாளுமன்ற அமைப்பின் காலனித்துவ வரம்புகளை ஆராய்வது அவசியம்.

ஈது முன்வைக்கும் விமர்சனத்தின்படி, அறபுப் பிரதிநிதிகள் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இருப்பதையே, ஃபலஸ்தீனர்கள் அரசியல் அமைப்பில் பங்கேற்கிறார்கள் என்பதற்கான சான்றாக இஸ்ரேலிய அரசு பயன்படுத்த முடியும். இதன் அரசியல் விளைவு: ஒடுக்கப்படும் மக்களின் பிரதிநிதித்துவமானது அவர்களை ஒடுக்கும் அரசின் ஜனநாயக நியாயத்தன்மையை உறுதிப்படுத்தும் கருவியாக மாற்றப்படுகிறது. ஃபலஸ்தீனர்களின் தேசிய உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கும் அதேவேளை, அவர்களுடைய சில பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டி, அந்த அரசமைப்பு அனைவரையும் உள்ளடக்கியதாகச் சித்தரிக்க முடிகிறது.
இங்கு தாராளவாத ஜனநாயகம் செயற்படும் விதத்தை நாம் கவனிக்க வேண்டும்.

அது தனிநபர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதன் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டிவிட்டதாகக் கூறுகிறது. ஆனால் நிலத்தின் மீதான உரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றில் நிலவும் அடிப்படை அசமத்துவத்தை அது தொடாமல் விட்டுவிடுகிறது. இதனால் வரலாற்று ரீதியாக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது தமது தாயகத்திலேயே கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு தரப்பு மக்கள், தங்களின் உரிமைகளை மறுக்கும் அரசமைப்புக்குள் கிடைக்கும் குறுகிய வாய்ப்புகளுக்காகவே அரசியல் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மேலும், அறபுப் பிரதிநிதிகள் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இருக்கிறார்களா என்பதைவிட, அவர்கள் பங்கேற்கும் அரசியல் அமைப்பு, ஃபலஸ்தீனர்களைத் தமது நிலத்தின் மீது உரிமையுள்ள மக்களாக ஏற்றுக்கொள்கிறதா என்பதே முக்கியமாகும். இந்த அடிப்படைக் கேள்விக்கு விடையளிக்காமல், தேர்தல் பிரதிநிதித்துவத்தையே ஜனநாயகத்தின் முழுமையான சான்றாக முன்வைப்பது, தாராளவாத ஜனநாயகத்தால் பாதுகாக்கப்படும் காலனித்துவக் கட்டமைப்பை மறைப்பதாகும்.

அறபுக் கட்சிகள் தேர்தலில் பங்கேற்பது, அந்தக் கட்சிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிப்பது, அன்றாடக் காலனித்துவத்தையும் இனவாதத்தையும் எதிர்கொள்ளும் மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் அரசியல் வாய்ப்புகளைப் பயன்படுத்துவது என்பவை புரிந்துகொள்ளத் தக்கவையே. ஆனால் அந்த நடைமுறைத் தேவையையும், காலனித்துவ, இனவாத அரசமைப்புக்கு வழங்கப்படும் அரசியல் அங்கீகாரத்தையும் ஒன்றாகக் கருத முடியாது. ஒரு சமூகத்திற்கு உடனடியாக நிதி, சேவைகள், பாதுகாப்பு அல்லது பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்வது அவசியமான போராட்டமாக இருக்கலாம். அதேநேரம், அந்தப் போராட்டம் ஒடுக்குமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றுகிறதா அல்லது அதன் அமைப்புக்குள் மக்களைத் தொடர்ந்து வைத்திருக்கிறதா என்ற கேள்விதான் இங்கு முக்கியமானது.

இதனால்தான் ஈது “disparticipation” (அரசமைப்புக்குள் பங்கேற்க மறுத்தல்) என்ற கருத்தை முன்வைக்கிறார். இது வெறுமனே தேர்தலைப் புறக்கணிப்பதல்ல; ஏற்கெனவே நிலவும் காலனித்துவ அரசமைப்பின் சட்டபூர்வத்தன்மையை ஏற்க மறுத்து, 1948 நிலப்பரப்பில் வாழும் ஃபலஸ்தீனர்களின் அரசியல் தன்னாட்சியை மீட்டெடுப்பதுடன், மேற்குக் கரை, காஸா, புலம்பெயர் சமூகங்கள் ஆகியவற்றின் போராட்டங்களையும் இணைக்கும் மாற்று அரசியல் ஆற்றலை உருவாக்குவதாகும்.

தாராளவாத ஜனநாயகம் எவ்வாறு பாசிசத்தையும் குடியேற்றக் காலனித்துவத்தையும் இயல்பாக்குகிறது என்பது தேர்தல் ஜனநாயகத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும் . பாசிசம் எப்போதும் தேர்தல்களை ஒழித்துவிட்டு, வெளிப்படையான சர்வாதிகாரத்தை நிறுவுவதன் மூலம் மட்டுமே செயற்படுவதில்லை. அது தேர்தல்களைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே, ஒரு குறிப்பிட்ட தேசிய மக்கள் கூட்டத்தின் ஆதிக்கத்தை அரசின் இயல்பான உரிமையாக நிறுவுகிறது; பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவ மயமாக்கலை விரிவுபடுத்துகிறது; தேசிய ஒற்றுமை என்ற பெயரில் விமர்சனங்களை துரோகமாகச் சித்தரிக்கிறது; மக்களின் பயத்தை தேர்தல் ஆதரவாக மாற்றுகிறது; ஒடுக்கப்படும் மக்களின் எதிர்ப்பை வன்முறைக்கான காரணமாக முன்வைக்கிறது.

தேர்தல் மூலம் ஆட்சி மாறும் வாய்ப்பு இருப்பதால் மட்டும் இந்த அமைப்பு பாசிசப் பண்புகளிலிருந்து விடுபட்டுவிடாது. மாறாக, தேர்தல் போட்டியானது வன்முறையின் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி விவாதிக்காமல், அவற்றை யார் திறமையாகச் செயற்படுத்துவார்கள் என்ற போட்டியாக நடைபெறும்போது, ஜனநாயகத்தின் நடைமுறைகள் ஆதிக்கத்தின் தொடர்ச்சிக்கே சேவை செய்கின்றன.

தாராளவாத ஜனநாயகம் தன்னைச் சுதந்திரம், சமத்துவம், தனிநபர் உரிமைகள் ஆகியவற்றின் அரசியல் வடிவமாக முன்வைக்கிறது. ஆனால் இந்தக் கருத்தாக்கங்கள் யாருக்குப் பொருந்துகின்றன, யாரைப் பாதுகாக்கின்றன, யாருடைய உரிமைகள் அரசின் பாதுகாப்பு என்ற பெயரில் நிறுத்தப்படுகின்றன, யாருடைய உயிர்கள் அரசியல் கணக்கீட்டில் மதிப்பற்றவையாக மாற்றப்படுகின்றன என்பதைக் கேட்கும்போது, அதன் உலகளாவிய தன்மைகுறித்த கூற்று சிதைகிறது. இஸ்ரேலியத் தேர்தல்கள் இந்த முரண்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அங்கு தேர்தல் நடைபெறுகிறது; கட்சிகள் போட்டியிடுகின்றன; அரசாங்கங்கள் மாறுகின்றன. ஆனால், இந்த ஜனநாயகச் செயல்முறைகள் ஃபலஸ்தீனர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பையும், இனப்படுகொலையையும், நிலப்பறிப்பையும் முடிவுக்குக் கொண்டுவருகின்றனவா? யோவ் லிட்வின் இஸ்ரேலிய லிபரல் ஜனநாயகம் எவ்வாறு பாசிசத்தின் தொடர்ச்சியைப் பாதுகாக்கிறது என்பதை விளக்குகிறார்.

அக்டோபர் 7 தாக்குதல்குறித்த விசாரணை, நெதன்யாகுவின் தோல்விகள், அவருக்கு முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்ததா என்ற கேள்விகள் ஆகியவை தேர்தல் விவாதத்தின் மையமாகும்போது, காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான பொறுப்புக் கணக்கீடு ஓரங்கட்டப்படுகிறது. பணயக்கைதிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடிய இராணுவ நடவடிக்கைகள், போர் நிறுத்த முயற்சிகள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டமை, ஃபலஸ்தீனர்கள் எதிர்கொண்ட படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள் ஆகியவை தேர்தல் அரசியலின் மையக் கேள்விகளாக மாறுவதில்லை. இது வெறும் ஊடகங்களின் பாரபட்சம் அல்ல; அரசியல் விவாதத்தின் எல்லைகளே இங்கு முக்கியம். ஃபலஸ்தீனர்களின் உயிர்கள், அவர்களின் துயரங்கள், அவர்களின் அரசியல் உரிமைகள் ஆகியவை இஸ்ரேலிய அரசியல் சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கேள்விகளாகக் கருதப்படாதபோது, அவர்களை மனிதர்களாகவும் உரிமையுள்ள மக்களாகவும் பார்க்க மறுக்கும் மனிதநீக்க அரசியல் செயற்படுகிறது.

லிட்வின் தெளிவுபடுத்துவதுபோல, நெதன்யாகுவை தனிப்பட்ட குற்றவாளியாக முன்னிறுத்துவது, இஸ்ரேலிய அரசியல் அமைப்பின் பரந்த பொறுப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புகிறது. அவருடைய எதிரிகள் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் எந்தக் கட்டமைப்பைத் தொடர்ந்து பாதுகாக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். இதன் பின்னணியில் லிபரல் ஜனநாயகத்தின் முரண்பாடு தெளிவாகிறது. அது ஒடுக்குமுறையை நேரடியாக ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை; ஒடுக்குமுறை தொடர்ந்துகொண்டிருக்கும்போதும் தேர்தல்கள் நடைபெறுகின்றன, பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுகிறார்கள், அரசியல் விவாதங்கள் இடம்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி அந்த அமைப்புக்கு நியாயத்தன்மையை வழங்க முடியும். வன்முறையின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றாமல், அதை நிர்வகிக்கும் தலைவர்களை மாற்றுவது ஜனநாயக மாற்றமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அரசியல் வடிவம் மாறினாலும், காலனித்துவ அதிகார உறவுகள் தொடர்கின்றன.

இந்த அரசியல் தொடர்ச்சியைத் தக்கவைப்தாகத் தொழிற்படுவது, “நிரந்தர அச்சுறுத்தல்”, “பாதிக்கப்பட்டவர்கள்” என்ற தேசியவாதக் கட்டுக்கதைகளே. இஸ்ரேலியச் சமூகத்தை எப்போதும் முற்றுகையிடப்பட்ட, தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகும் பாதிக்கப்பட்ட சமூகமாகச் சித்தரிப்பதன் மூலம் ஃபலஸ்தீனர்கள் எதிர்கொள்ளும் வன்முறையானது பாதுகாப்புக்கான அவசியமான நடவடிக்கையாக மாற்றப்படுகிறது. பூர்வகுடி மக்களின் எதிர்ப்பு முதலில் அச்சுறுத்தலாகச் சித்தரிக்கப்படுவதுடன், அரசின் வன்முறை இயல்பாக்கம் செய்யப்படுகிறது; பின்னர் அந்த வன்முறையைத் தொடர்ந்து விரிவாக்கத்திற்கான புதிய நியாயங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுவே குடியேற்றக் காலனித்துவம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் அரசியல் சுழற்சி.

இங்கு பாசிசத்தை ஒரு குறிப்பிட்ட தலைவரின் தனிப்பட்ட குணமாகவோ, தீவிர வலதுசாரிக் கட்சிகளின் தனித்தன்மையாகவோ மட்டும் புரிந்துகொள்ள முடியாது. ஒரு சமூகத்தின் அரசியல் நிறுவனங்கள், தேர்தல் நடைமுறைகள், ஊடக விவாதங்கள் ஆகியவை பூர்வகுடி மக்களின் உரிமை மறுப்பையும் அவர்களுக்கு எதிரான வன்முறையையும் இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும்போது, பாசிச அரசியல் பரந்த சமூக ஒப்புதலைப் பெறுவதற்கான நிலை உருவாகிறது. தாராளவாத ஜனநாயக நிறுவனங்கள் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, இஸ்ரேலியத் தேர்தல்களை ஜனநாயகத்தின் வெற்றியாக மதிப்பிடுவதற்கு முன்பு, அந்தத் தேர்தல்களால் பாதுகாக்கப்படும் ஜனநாயக ஒழுங்கைக் கேள்விக்குட்படுத்த வேண்டும்.

ஆகவே, நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதால் மட்டும் ஃபலஸ்தீனர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை முடிவுக்கு வந்துவிடாது. அவரை உருவாக்கிய அரசியல் சூழலும், அவருக்கு எதிராக நிற்கும் கட்சிகளின் அரசியல் அமைப்பாக்கங்களும், ஃபலஸ்தீனர்களின் வாழும் உரிமையை மறுக்கும் இஸ்ரேலிய அரசமைப்பும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் மாறினாலும், ஃபலஸ்தீனர்களின் நிலத்தையும் உரிமைகளையும் மறுக்கும் அதிகார உறவுகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டால், அந்த மாற்றத்தால் அவர்களின் வாழ்வில் என்ன அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுவிடப்போகிறது?!

ஜனநாயகம் என்பது தேர்தலில் ஒருவரைத் தோற்கடித்து இன்னொருவரை ஆட்சிக்குக் கொண்டுவருவதோடு முடிந்துவிடுவதில்லை. யாருடைய உரிமைகள் அங்கீகரிக்கப்படுகின்றன, யாருடைய குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன, யாருடைய உயிர்கள் அரசியல் கணக்கீட்டில் பொருட்படுத்தப்படாமல் விடப்படுகின்றன என்பதையும் அது தீர்மானிக்கிறது. ஃபலஸ்தீனர்களின் இருப்பையும் வாழ்வுரிமையையும் மறுக்கும் காலனித்துவ இனவாத பாசிச ஒழுங்கு தொடர்ந்து நீடிக்கும்போது, தேர்தல்கள் அந்த ஒழுங்கை ஜனநாயகமானதாக மாற்றிவிட முடியாது. எனவே, இஸ்ரேலிய அரசியலில் உண்மையான மாற்றம் என்பது நெதன்யாகுவுக்குப் பதிலாக வேறொருவரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல; ஃபலஸ்தீனர்களைத் தொடர்ந்து ஒடுக்குவதற்கும் அவர்களின் உரிமைகளை மறுப்பதற்கும் வழிவகுக்கும் குடியேற்றக் காலனித்துவ அரசமைப்பையும் அதனைப் பாதுகாக்கும் லிபரல் ஜனநாயகத்தையும் கேள்விக்குட்படுத்துவதாகவே இருக்க வேண்டும்.

இஸ்ரேலியக் குடியேற்றக் காலனிய நாட்டை ஒழித்து ஃபலஸ்தீன நாட்டை உருவாக்கி, அங்கு இருக்கும் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், யூதர்கள், மதமற்றவர்கள், ஏனைய ஒடுக்கப்பட்ட தரப்பினர் ஆகிய அனைவருக்கும் சம உரிமையை வழங்குவதன் மூலமே ஃபலஸ்தீன மக்களுக்கு எதிரான காலனிய ஆக்கிரமிப்பை அகற்ற முடியும். இதையே ஃபலஸ்தீன விடுதலை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. ஆனால் லிபரல் ஸியோனிச அமைப்புகளும் சிந்தனையாளர்களும் லிபரல் ஜனநாயகத்தினுள் அனைவரையும் உள்வாங்குதல் என்ற போலியான கதையைச் சொல்லி இஸ்ரேலியக் குடியேற்றக் காலனிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முனைகிறார்கள்.

Related posts

Leave a Comment