தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (6)
பாகுபாடு
இஸ்லாம் பாலின ரீதியாகவும், சமய நம்பிக்கை சார்ந்தும் பாகுபாடு கற்பிப்பதாகக் குற்றம்சாட்டப்படுவதுண்டு. இவை குறித்து முந்தைய பாடங்களில் நாம் விவாதித்துள்ளோம். பொதுவாக, மனிதர்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதே அதனளவில் பிரச்னைக்குரியதோ எதிர்மறையானதோ அல்ல. அது அநீதியானதாக இருக்கக்கூடாது என்பதுதான் முக்கியம். இஸ்லாம் எல்லா விதமான பாகுபாட்டையும் நிராகரிப்பதில்லை. எவ்விதத்திலும் பாகுபாடு கூடாது என்று தாராளவாதிகள் சவடால் விடலாம். ஆனால், யதார்த்தத்தில் பல விஷயங்களில் நவீனத்துவ சிந்தனைச் சட்டகம் பாகுபாட்டை ஆதரிக்கிறது.
உதாரணத்துக்கு, அறிவு சார்ந்த பாகுபாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். பிறப்பிலேயே ஒவ்வொருவரின் ஐ.க்யூ. அளவு போன்ற அறிவுசார் திறனில் மாறுபாடு இருக்கும். என்றாலும், பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் செயல்திறனுக்குத் தக்க பிரித்து அணுகும் வழக்கம் இருக்கிறது. கல்லூரியைத் தெரிவு செய்யும்போதும் பள்ளியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பாரபட்சம் இருக்கும். அது வேலைக்குச் செல்லும்போதும் தாக்கம் செலுத்தும்.
அதுபோல, ஒரு நாட்டில் குடியுரிமை பெற்றவருக்கும் பெறாதவருக்கும் பாரபட்சமான அணுகுமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது. கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ வசதி, பயணம் செய்வதற்கான வாய்ப்பு, சட்டம் என அனைத்திலும் இவர்களுக்கு மத்தியில் வேறுபாடு இருக்கும். இதையெல்லாம் தாராளவாதிகள் ஆதரித்துக்கொண்டே மறுபக்கம் எவ்விதப் பாகுபாடும் கூடாது என்று கூறுவது தர்க்கப் பிழை.
மனிதர்களின் தோற்றம், உயரம், எடை முதலானவற்றைப் பொருத்து பல துறைகளில் பாரபட்ச அணுகுமுறை இருந்து வருவதைப் பார்க்கிறோம். இந்த அம்சங்களெல்லாம் பிறப்பிலேயே வரக்கூடியவைதாம். திருமணத்துக்கு வரன் தேடும்போதுகூட தோற்றமும் உயரமும் கணக்கிலெடுக்கப்படுகின்றன. இவ்வழக்கத்தைத் தவறென்றும், சமத்துவத்துக்கு எதிரான கண்ணோட்டம் என்றும் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வது மனித இயல்பையும் யதார்த்தத்தையும் புறக்கணிப்பதாக ஆகிவிடும். ஆனால், தாராளவாதிகள் இப்படியான எல்லாவற்றையும் செயற்கையான சமூகக் கட்டுமானம் என்றும், மாற்றியமைக்கப்பட வேண்டியவை என்றும் வாதாடுவதுண்டு. இது ஒரு பிரச்னைக்குரிய வாதம்.
ஜனநாயகமும் சுய அதிகாரமும்
வாக்குகளின் அடிப்படையில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை வழங்குவது சிறந்த நடைமுறையாக இன்று கொள்ளப்படுகிறது. நவீன அரசியல் சிந்தனையாளர்களான ஜான் லாக், ரூஸோ போன்றோர் சமூக ஒப்பந்தம் எனும் கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்தனர். அதன்படி, மக்களின் பெரும்பான்மை ஒப்புதலின் அடிப்படையில் சட்டங்களை இயற்றி அதையே பொதுவானதாக ஏற்பது எனும் நிலைப்பாடு முன்வைக்கப்பட்டது.
எல்லாச் சட்டங்களுக்கும் உரைகல்லாக ஒரு சிந்தனைச் சட்டகம் இருப்பதைத் தவிர்க்க முடியாது எனும்போது, இந்த நிலைப்பாடு குளறுபடியானது என்பதில் சந்தேகமில்லை. மக்களுக்கு எது சிறந்தது என்பதை பெரும்பான்மை வாக்குகளின் மூலம் தெரிவு செய்வது சிக்கலானது. நடைமுறையில் குழப்பத்தையும் நிலைத்தன்மையற்ற சூழலையும் தோற்றுவிக்கக்கூடியது.
கல்லூரியில் ப்ராஜக்ட் செய்யும்படி ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகக் கொள்வோம். வகுப்பில் இருக்கும் திறமையான மாணவர்களின் பங்களிப்பைக் கொண்டே அது சாத்தியப்படுமே தவிர, திறன் குறைந்த மாணவர்கள் உட்பட எல்லாரிடமும் கருத்துகளைப் பெற்று, அனைத்துக்கும் சம அளவு முக்கியத்துவம் தந்து, அதனடிப்படையில் ப்ராஜக்டை நிறைவு செய்தால் அது நிச்சயம் சிறந்ததாக இருக்காது.
அப்படியிருக்க, மனித வாழ்வைத் தீர்மானிக்கும் இடத்தில் பெரும்பான்மை வாக்குகளை வைப்பது எப்படி சரியாகும்? சொல்லப்போனால், தற்காலத்தில் உண்மையான ஜனநாயகம் என்ற ஒன்று இல்லவே இல்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை எடுத்துக்கொண்டால், அதில் எவ்வளவு குளறுபடிகள் இருக்கின்றன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. லாபி, லஞ்சம் எனப் பலவும் இந்த அமைப்புமுறையின் தவிர்க்க முடியாத பகுதிகளாக ஆகியிருப்பதைக் காண்கிறோம்.
ஒருவேளை உண்மையிலேயே மக்களின் கருத்துகள் அடிப்படையில் முடிவுகள் வருவதாக இருந்தாலும், வெகுஜன ஊடகத்தின் மூலம் மக்களிடம் கருத்துத் திணிப்பு நடந்தேறும். நடைமுறையில் அதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நோம் சோம்ஸ்கியும், எட்வர்ட் ஹெர்மனும் இணைந்து எழுதிய Manufacturing Consent புத்தகம் இதுகுறித்து விலாவாரியாக விவாதிக்கிறது.
இங்கு சுட்டிக்காட்ட வருவது, வாழ்வைத் தீர்மானிப்பதற்கு வாக்குகளையோ அறிவியலாளர்களையோ அரசியல்வாதிகளையோ சார்ந்திருப்பதைக் காட்டிலும் படைத்தவனைச் சார்ந்திருப்பது மேலானது, சிறந்தது என்பதையே.
மனிதனுக்கு சுய அதிகாரம் (Autonomy) வழங்க வேண்டும் என்ற வாதம் குறித்தும் நாம் இங்கு விவாதிக்க வேண்டியுள்ளது. மனிதன் தன் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளும் முழு அதிகாரத்தைப் பெற்றிருப்பது ஆரோக்கியமானதா என்று யோசியுங்கள்.
சுய தெரிவுக்கு இஸ்லாம் அனுமதியளிக்கிறதா என்றால், ஆம் என்பதே பதில். பல விவகாரங்களில் ஷரீஆ மனிதனுக்கு சுய அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால், அதற்கு வரம்புகள் விதிக்கிறது. போதைப் பொருளை உட்கொள்வதோ விற்பதோ ஒருவரின் விருப்பம் என்றால் அதை இஸ்லாம் ஏற்காது அல்லவா?
இஸ்லாம் மட்டுமின்றி, எல்லாக் கொள்கைகளும் சுய தெரிவுக்கு வரம்பை நிர்ணயிக்கவே செய்கின்றன. கட்டற்ற சுதந்திரத்தை எந்தக் கொள்கையும் வழங்குவதில்லை. ஒரு மதச்சார்பற்ற அரசின் கீழ் வசிப்போர் பல்வேறு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இருக்க முடியும். சொல்லப்போனால், இஸ்லாம் விதிக்கும் வரம்புகளைவிட நவீன அரசு விதிக்கும் வரம்புகள் அதிகம். தொழுகை, ஹஜ், திருமணம், வியாபாரம் எனப் பல விவகாரங்களுக்கான சட்டதிட்டங்களை ஒரே ஒரு கனமான ஃபிக்ஹு நூலில் நீங்கள் உள்ளடக்க முடியும். ஆனால், மதச்சார்பற்ற சமூகங்களில் வகுக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை அறிய ஒரு நூலகத்தையே நீங்கள் அணுக வேண்டியிருக்கும். வரி, சொத்து, குற்றவியல் விவகாரங்கள் தொட்டு போக்குவரத்துவரை சகலத்துக்கும் தனித்தனிச் சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் தேர்ச்சிபெற உங்களுக்கு ஓர் ஆயுள் போதாது.
முன்னர் சுட்டிக்காட்டியதுபோல, உரிமைகள் பொறுப்புகளைத் தோற்றுவிக்கக்கூடியவை. ஒவ்வொரு உரிமைக்கும் ஒரு விலை இருக்கிறது. எனவே, மனிதர்களுக்கு வரைமுறை இல்லாமல் முழு சுய அதிகாரம் வழங்குவது சாத்தியமற்ற ஒன்று.
தொடரும்…
(தொகுப்பும் தமிழாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)