கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (5)

சுதந்திரமும் மனித உரிமைகளும்

பல இஸ்லாமியவாத இயக்கங்கள் சுதந்திரத்துக்காக வாதிடுவோராகத் தங்களை அடையாளப்படுத்துவதுண்டு. எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சிக்குக்கூட சுதந்திரம் மற்றும் நீதிக் கட்சி என்றுதான் பெயர். ஈரானியப் புரட்சியின்போது கொமைனீ போன்றோர் ஆஸாதி (சுதந்திரம்) என்பதைத் தம் பிரதான முழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இஸ்லாமியவாதிகள் மதச்சார்பற்றோராகவோ தாராளவாதியாகவோ இல்லையென்றாலும், சுதந்திரம் எனும் சொல்லாடலை அவர்கள் ஒரு மதிப்பீடாக முன்வைத்தார்கள். உண்மையில் அந்தச் சொல்லை நாம் விரும்பியவாறு பொருள் கொள்ள முடியும்.

சமகாலத்தில் சுதந்திரமும் மனித உரிமைகளும் எப்படி அர்த்தப்படுத்தப்படுகிறது என்பது விவாதத்துக்குரியவை. இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஐநா சபையால் கொண்டுவரப்பட்டது. உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் அந்த மனித உரிமைகளைப் பேண வலியுறுத்தப்பட்டன.

இங்கு எழும் கேள்வி என்னவென்றால், அந்த உரிமைகளெல்லாம் எதை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன? தனிப்பட்ட அளவிலும், கூட்டு ரீதியாகவும் மனிதர்களுக்கு எவை நன்மை பயக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு மனித உரிமைகள் வரையறுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியானால், எவையெல்லாம் நன்மை பயக்கும் என்பதை எப்படி தீர்மானிப்பது?

இந்த இடத்தில்தான் சிந்தனைச் சட்டகம் வருகிறது. முன்னர் சுட்டிக்காட்டிய மற்ற விஷயங்களைப் போன்று இவ்விஷயத்திலும் நவீன சிந்தனைச் சட்டகத்துக்கும், இஸ்லாமிய சிந்தனைச் சட்டகத்துக்கும் வேறுபாடு இருக்கிறது.

ஒரு மனிதன் தன் பாலியல் இச்சைகளை தான் விரும்பியவாறு தீர்த்துக்கொள்ளும் சுதந்திரத்தைப் பெற்றிருப்பது ஆரோக்கியமானது, நல்லது என்பார்கள் நவீனத்துவர்கள். சம்பந்தப்பட்டவரின் சம்மதம், பிறருக்குத் தீங்கு ஏற்படாதிருத்தல் முதலானவற்றை மட்டும் விதிமுறைகளாகச் சொல்வார்கள். பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்துவது உளவியல் ரீதியான சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும், அது ஆரோக்கியமற்றது என்றும் அவர்கள் வாதாடுவார்கள். சொல்லப்போனால், கட்டுப்பாட்டுடன் இருப்பது ஏதோ மனம் சார்ந்த பிரச்னையாக இவர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரு முஸ்லிம் திருமணமாகும்வரை கட்டுப்பாட்டுடன்தான் வாழ்கிறான். இஸ்லாமிய வாழ்வொழுங்கு அதை அவனுக்குக் கற்பித்திருக்கிறது.

கவர்ச்சியான ஆடை அணிவதை எடுத்துக்கொண்டால், நவயுகத்தில் அது நேர்மறையாக அணுகப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் அவ்வாறு ஆடை அணிவதும், அதை ஆரோக்கியமான வெளிப்பாடாகக் கருதுவதும் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு அடிப்படையாக விளங்குவதும் அவர்களது சிந்தனைச் சட்டகம்தான்.

இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, மனித இயல்பு, மானுடத்தின் நலன்கள் குறித்த பார்வைகள் ஒவ்வொரு சிந்தனைச் சட்டகத்துக்கும் தகுந்தாற்போல் மாறுபடும். அவற்றைக் கருத்தில் கொண்டே சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்டவற்றை வரையறுக்க முடியும். இவ்விரு எண்ணக்கருக்களையும் இஸ்லாமிய சிந்தனைச் சட்டகத்தைக் கொண்டும் வரையறுக்கலாம். ஆனால், இவற்றுக்கு நவீனத்துவம் கொடுத்துள்ள வரையறைதான் இன்று பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. அதை ஏற்றுக்கொள்ளும்படி எல்லா நாடுகளும் கட்டாயப்படுத்தப்படுகின்றன. சிலபோது அதற்காக பலவந்தமும் பிரயோகிக்கப்படுகிறது. ஆக, சுதந்திரம், மனித உரிமைகள் போன்ற நேர்மறையான சொல்லாடல்களின் வழியாக நவீன சிந்தனைச் சட்டகம் நம் அனைவரின் மீதும் தந்திரமாகத் திணிக்கப்படுவதையே இது காட்டுகிறது.

தற்காலத்தில் மனித உரிமைகள் எனும் கருத்தாக்கத்தை நவீனத்துவர்கள் தங்களின் தனியுடமை போல எடுத்துக்கொள்வதைக் காண்கிறோம். மானுட நலன் என்பது மனித உரிமைகளுக்கான அடிப்படையாக இருக்கும் எனும்போது, இஸ்லாம்தான் அதைத் தீர்மானிக்க வல்ல ஒரே சித்தாந்தமாக இருக்க முடியும்.

தாராளவாதிகள் உருவாக்கும் உலகில் மானுட நலன் பாதுகாக்கப்படுமா? நிச்சயமாக இல்லை. பாதுகாப்பான சூழலில் குழந்தைகள் வளர வேண்டும் என்றால் இஸ்லாமியக் குடும்பவியல் சட்டங்கள் அவசியம். இன்றைக்கு குடும்ப அமைப்பு சீரழிந்து, குழந்தைகளும் அவர்களின் உரிமைகளும் பாதிப்புக்குள்ளாகக் காரணம் சரியான குடும்பவியல் வழிகாட்டுதல் இல்லாததுதான். சமூகத்தில் இருபாலருக்கும் மத்தியில் உரிய இடைவெளி, ஆடைக் கட்டுப்பாடுகள், நாணம் போன்றவை முறையாகப் பேணப்படாததன் விளைவாகவே பல பிரச்னைகள் உருப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மேற்குலகில் பாலியல் சுதந்திரத்தின் பெயரால் உருவாகும் திருமணத்துக்கு அப்பாலான உறவு எப்படி குடும்பங்களை சின்னாபின்னமாக்குகிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அது மனிதனுக்குப் பெரும் தீங்கையே விளைவித்திருக்கிறது. எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை.

உரிமைகளும் பொறுப்புகளும்

எல்லா விதமான உரிமைகளும் பொறுப்புகளைத் தோற்றுவிக்கக்கூடியவை என்பது ஒரு பொது உண்மை. இதையே வேறு வார்த்தையில் சொல்வதானால், ஒவ்வொரு உரிமைக்கும் ஒரு விலை இருக்கிறது. கல்வி உரிமையை எடுத்துக்கொண்டால், அதற்கு கல்விக்கூடங்கள், அதற்குரிய கட்டமைப்புகள், ஆசிரியர்கள் தேவை. அதிக பொருளாதாரம் இருந்தால்தான் அது சாத்தியம். இந்தப் பின்னணியில், மக்களிடம் வரி விதிப்பதன் வழியாகவே ஓர் அரசால் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்ய முடியும். கருத்துரிமையை அல்லது ஆயுதம் வைத்துக்கொள்வதற்கான உரிமையை எடுத்துக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட உரிமைகளைக் காப்பதற்குரிய காவல்துறை போன்ற கட்டமைப்புகள் தேவைப்படும். அதற்கும் பணத்தையும் பிற வளங்களையும் செலவிட வேண்டியிருக்கும். பொது மக்களே அதற்கும் பொறுப்பேற்க வேண்டும்.

அதுபோல, ஒரு நாடு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறி, அவர்களின் அந்தரங்க உரிமையை விலையாக எடுத்துக்கொள்வதை நாம் பார்க்கலாம். உதாரணத்துக்கு, 9/11க்குப் பிறகு ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று அறிவித்த அமெரிக்க அரசு, தீவிரவாதிகளிடமிருந்து குடிமக்களைக் காக்க அனைவரையும் தன் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதாகக் கூறியது. அதனடிப்படையில், தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதில் மக்களின் அந்தரங்க உரிமை பலிகடாவாக்கப்பட்டது. அரசு தன் அதிகாரத்தைக் குவிக்கவும், மக்களைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் அது வழிவகை செய்தது. இதுதவிர, மக்களின் தரவுகளை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தந்துதவவும் அது பயன்பட்டது எனலாம்.

ஆக, எதுவும் நமக்கு இனாமாகக் கிடைக்கவில்லை. அரசாங்கங்கள் கட்டற்ற உரிமைகளைப் பரிந்துரைப்பதன் வழியாக கட்டற்ற கடமைகளையும் பொறுப்புகளையும் பொது மக்கள் மீது சுமத்துகின்றன. இதுவெல்லாம் ஒருவிதத்தில் அரசின் குயுக்தியே அன்றி வேறில்லை.

தொடரும்..

(தொகுப்பும் தமிழாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment