கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (7)

அறியாமைத் திரை

தாராளவாதக் கல்வியாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஒரு கருத்தாக்கம் தத்துவவியலாளர் ஜான் ரால்ஸ் முன்வைத்த அறியாமைத் திரை (Veil of Ignorance). அவரின் கருத்துகள் கல்விப்புலத்தில் பலத்த செல்வாக்கு செலுத்தக்கூடியவை. ஒரு நீதிமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கான சட்டங்களை நாம் எப்படி வகுப்பது எனும் கேள்விக்கு விடையாக அறியாமைத் திரை என்ற கருத்தாக்கத்தை அவர் பரிந்துரைத்தார். அது ஒரு சிந்தனைப் பரிசோதனையாக அவரால் முன்னெடுக்கப்பட்டது. நவீனத்துவத்துக்கும் மதச்சார்பின்மைமயமாக்கலுக்கும் முன்பு வாழ்ந்தோரிடம் இதே கேள்வியைக் கேட்டால், இறைவனையும் வேதங்களையும் நாங்கள் அணுகுவோம் என்பார்கள்.

அறியாமைத் திரை கோட்பாட்டின் அடிப்படை என்னவென்றால், இனம், சமூக அந்தஸ்து, பாலினம், நம்பிக்கைகள் உள்ளிட்டவை குறித்த அறியாமையுடன் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பது. அப்போதுதான் பக்கச்சார்பற்ற முறையில் அந்தச் செயல்பாடு அமையும் என்பது ஜான் ரால்ஸின் வாதம். அது மக்கள் அனைவருக்கும் நீதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சட்டதிட்டங்களை உருவாக்குவதன் நோக்கம் சமூகத்தில் ஒழுங்கையும் நிலைத்தன்மையையும் மகிழ்வையும் நன்மையையும் ஏற்படுத்துவதே. அறியாமை எனும் நிலையில் இருப்பவர், மனிதன் யார், மனிதனுக்கு எது நல்லது/ கெட்டது என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்? அவரிடம்தான் எந்த உரைகல்லும் இல்லையே! சிந்தனைச் சட்டகமே இல்லாமல் எப்படி நீதியையும் சமத்துவத்தையும் பற்றிப் பேச முடியும்?

அறியாமைத் திரை கோட்பாட்டின் அடிப்படையில், பாலின ரீதியான பாரபட்சத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக வைத்துக்கொள்வோம். ஆண், பெண் என்ற பாலினத்தைத் தாண்டி இன்று ஏகப்பட்ட பாலின அடையாளங்களை உருவாக்கியிருக்கிறார்களே அவை குறித்து பரிச்சயமில்லாதவர்கள் அனைத்து தரப்புக்கும் பொருந்தும் வகையில் அது சார்ந்த சட்டத்தை இயற்றிவிட முடியுமா? ஜான் ரால்ஸ் இன்று இருந்திருந்தால் அவருக்கே பாலினம் சார்ந்த சமகால விவாதங்கள் தெரியாதே!

ஆக, அறியாமைத் திரை கருத்தாக்கம் அர்த்தமற்ற கற்பனாவாதம். இதை முன்வைத்த ஜான் ரால்ஸ் அது சாத்தியமானால் மிகச் சிறந்த முறையாக இருக்கும் என்கிற ரீதியில்தான் அதைப் பரிந்துரைக்கிறார். ஆனால், அது சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம்.

இறுதியாக..

தாராளவாதத்தின் சில முதன்மையான கருத்தாக்கங்களையே நாம் இதுவரை பார்த்தோம். முன்னர் நவீனத்துவ கோட்பாடுகள், மதிப்பீடுகள் மீது நம்மில் பலர் கொண்டுள்ள மயக்கம் நீங்கியிருக்கும் என்று நம்புகிறேன். பொன்விதி, மதச் சுதந்திரம், சமத்துவம், தீங்குக் கொள்கை, மனித உரிமைகள் போன்ற சொல்லாடல்களின் சிக்கல்களையும் சார்புநிலையையும் நாம் விவாதித்திருக்கிறோம். இந்த நவயுக குழப்பங்கள் குறித்த விழிப்புணர்வு இந்தப் பாடநெறியின் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

இனி, தாராளவாதத்தை அதன் முழுப் பரிமாணத்துடன் நாம் விளங்கிக்கொண்டு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏனெனில், சமூக அரசியல் மட்டங்களில் பலத்த செல்வாக்கு செலுத்தும் ஆதிக்கக் கருத்தியல் அது. மக்களின் வாழ்வில் அது பெரும் பாதிப்பையும் நாசத்தையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, தாராளவாதச் செயல்திட்டங்களையும், அதன் வரலாற்றையும் நாம் இன்னும் விரிவாகக் கற்றறிய வேண்டியுள்ளது.

அர்த்தமற்ற, உள்ளடக்கமற்ற கோட்பாடுகள் பல இன்றைக்கு ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகின்றன. இஸ்லாம் இறைவனிடமிருந்து வந்த மார்க்கம். அதன் மீதான பிடிப்பையும் காதலையும் இறைவன் நம்மிடம் அதிகப்படுத்த வேண்டும். இந்த வாழ்க்கைநெறியை நமக்கு வழங்கிய இறைவனுக்கும், அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாமிய அறிவு மரபைப் பாதுகாப்பதற்காக உழைத்த அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

வஸ்ஸலாம்.

(முற்றும்.)

(தொகுப்பும், தமிழாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment