ஃபலஸ்தீன விடுதலை கீதம் வாசிக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை!
ஃபிஃபா கால்பந்தாட்டப் போட்டியில் மொரோக்கோ வெற்றிபெறும் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் அந்நாட்டு வீரர்களும் ரசிகர்களும் ஃபலஸ்தீனக் கொடியை, ஆதரவு முழக்கங்களை உயர்த்திப்பிடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்தச் சம்பவங்கள் விளையாட்டு உலகைத் தாண்டி உலக அரசியலை, குறிப்பாக இஸ்ரேலைப் பெரிதும் சலனப்படுத்தியிருப்பது தெரிகிறது.
போட்டி நடக்கும் மைதானங்கள் உட்பட கத்தார் முழுவதும் ஏராளமான ஃபலஸ்தீனக் கொடிகளைப் பார்க்கும்போதும், ஃபலஸ்தீன அடையாளங்கள் பொறித்த ஆடை, ஆபரணங்களைக் காணும்போதும், “சுதந்திர ஃபலஸ்தீன” முழக்கங்களைக் கேட்கும்போதும் போட்டியில் கலந்துகொண்டுள்ள 32 நாடுகளில் ஃபலஸ்தீனும் ஒன்று எனப் புதிதாக அவதானிக்கும் ஒருவர் நினைக்கக்கூடும்.
உண்மையில், போட்டியில் “33வது நாடு” ஃபலஸ்தீன் என்று சில லத்தீன் அமெரிக்க ஊடகங்கள் எழுதியுள்ளன. ஃபலஸ்தீன ஆதரவாளர்களுக்காக மைதானங்களில் சிறப்பு வசதிகள் செய்துத் தந்திருக்கிறது கத்தார் அரசு. பிற அறபு நாடுகளின் ரசிகர்களும் தங்கள் நாட்டுக் கொடிகள், தாங்கள் ஆதரிக்கும் அணிகளின் கொடிகளுடன் ஃபலஸ்தீனக் கொடியையும் சேர்த்து, செல்லுமிடங்களில் எல்லாம் ஃபலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
1948ம் ஆண்டு ஃபலஸ்தீனத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதை உணர்த்தும்விதமாக சில போட்டிகளின் நடுவில், சரியாக 48வது நிமிடத்தில், ஃபலஸ்தீனக் கொடிகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. அறபு நாடுகளைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி, பல நாட்டைச் சார்ந்த ரசிகர்களும் சுதந்திர ஃபலஸ்தீன முழக்கங்களை எழுப்புகின்றனர். பிரேசில் ரசிகர்கள் கேமரூனுக்கு எதிராகத் தங்கள் அணி ஆடும் ஆட்டத்தைக் காணச் செல்கையில் “சுதந்திர ஃபலஸ்தீனம், சுதந்திர ஃபலஸ்தீனம்” என்று மெட்ரோ நிலையங்களில் முழக்கம் எழுப்பியிருக்கின்றனர்.
போர்ச்சுகலுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மொரோக்கோ வெற்றிபெற்ற பிறகு, ஒரு பாடலை மைதானத்திலிருந்த ரசிகர்கள் இசைத்துள்ளனர். மொரோக்கோ அணி வீரர் ஒருவர் ஃபலஸ்தீனக் கொடியுடன் “விடுதலை” என்ற வாசகத்துடனான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மொரோக்கோ ரசிகர்கள் பின்வரும் பாடலை மைதானங்களில் பாடுகின்றனர்:
எங்கள் இதயம் உனக்காக கவலை கொண்டிருக்கின்றது
எங்கள் கண்கள் பல்லாண்டுகளாக உனக்காகக் கண்ணீர் சிந்துகின்றது
ஓ அன்பான ஃபலஸ்தீனம்!
அறபியர்கள் எங்கே, அவர்கள் தூங்குகிறார்கள்
நாடுகளிலேயே மிகவும் அழகான தேசமே! எதிர்த்திரு
இறைவன் உங்களைப் பாதுகாக்கட்டும்!
மொரோக்கோ உள்ளிட்ட பல்வேறு அறபு நாடுகளின் அரசுகள் இஸ்ரேலை அங்கீகரித்து, தூதரகத் தொடர்புகள், வர்த்தகம் ஆகியவற்றை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தாலும், அவை மக்களுடைய ஒப்புதலுடன் நடைபெறவில்லை. மக்கள் எண்ணம் வேறாகத்தான் இருக்கின்றது.
கெய்ரோவிலிருக்கும் அமெரிக்கன் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியரும், மத்தியக் கிழக்கு ஆய்வாளருமான அம்ரோ அலீ, “இந்த உலகக் கோப்பையில் வெற்றிபெற்றது ஃபலஸ்தீனம்தான்” என்கிறார். மிடில் ஈஸ்ட் ஐக்கு அவர் அளித்த பேட்டியில், “அறபு அரசாங்கங்கள் இஸ்ரேலுடன் ஒத்துப்போகலாம். ஆனால், மக்கள்தான் இறுதி முடிவெடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கத்தாரில் செய்தி சேகரிக்கச் சென்ற இஸ்ரேலியப் பத்திரிகையாளர்களும், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ரசிகர்களும் எங்கெங்கும் நிறைந்து காணப்பட்ட ஃபலஸ்தீன ஆதரவு முழக்கங்களையும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாடல்களையும் கண்டு தர்மசங்கடத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். ஏற்கனவே கத்தாருக்கு வருவதற்காக அவர்கள் இஸ்ரேல் என்பதற்கு பதில் ஃபலஸ்தீன் என்பதையே தன் இருப்பிடமாகத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மைதானங்களுக்கு வெளியே ரசிகர்கள் இஸ்ரேலியப் பத்திரிகையாளர்களுக்குக் கடினமான நேரங்களைத் தந்துகொண்டிருக்கின்றனர். இஸ்ரேலியப் பத்திரிகையாளர்களுக்கு ரசிகர்கள் பேட்டி தர மறுக்கும் பல்வேறு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
கார்டியன் பத்திரிகையாளர் மைக்கேல் ஸாபி இதுகுறித்துக் கூறுகிறார்: “மைதானங்களிலும், சந்தைகளிலிலும், தெருக்களிலும் நான் பார்த்தபோது மக்கள் எல்லா இடங்களிலும் ஃபலஸ்தீனக் கொடிகளை ஏந்தியிருக்கின்றனர். இதன் முக்கியத்துவம் பெரும்பாலானவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளதுடன், அறபுலகைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியை நமக்குத் தருகின்றது.
சில வருடங்களுக்கு முன்பு அநேக அறபு அரசுகள் இஸ்ரேலுடன் இணக்கமாகப் போகும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் இஸ்ரேலுடைய இருப்பை அங்கீகரிப்பதுடன், தூதரகங்கள் அமைக்கவும், வியாபாரம் செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இந்த நாடுகளில் எதுவுமே ஜனநாயக அரசுகளைக் கொண்டிருக்கவில்லை. 50 ஆண்டுகளாக ஃபலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருக்கும் ஒரு நாட்டுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள இந்த நாடுகளின் மக்களுடன் எவ்வித கருத்துப் பரிமாற்றமும் நடைபெறவில்லை.
தற்போதுவரையிலும் அறபுலக மக்கள் இந்த ஒப்பந்தங்களைக் குறித்து என்ன சிந்திக்கின்றனர் என்பது பற்றி எவ்வித கருத்தும் நம்மிடமில்லை. என்னதான் அவர்களது நாடுகள் இஸ்ரேலுடன் சுமூக உறவைக் கொண்டிருந்தாலும், நாட்டிலுள்ள அனைவரும் அதே சிந்தனையைக் கொண்டிருக்கவில்லை என்ற செய்தியை ரசிகர்களும் அணிகளும் இந்த உலகக் கோப்பை மூலம் உரக்கச் சொல்லியிருக்கின்றனர்.”
அதேவேளையில், மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம், கஸ்ஸாவில் வசிக்கும் ஃபலஸ்தீனர்கள் மொரோக்கோவின் வெற்றியை வீதிகளில் இறங்கிக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த உலகக் கோப்பை ஃபலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கித் தரப்போவதில்லை. ஆனாலும், இந்த உலகக் கோப்பையில் பொங்கிப் பெருகியிருக்கும் ஃபலஸ்தீன விடுதலை ஆரவாரம் அம்மக்களுக்கு அவர்கள் தனித்து விடப்படவில்லை என்ற செய்தியையும், உலகுக்கு ஃபலஸ்தீன விடுதலை வேட்கை உயிர்ப்புடன் இருக்கிறது என்ற செய்தியையும் பறைசாற்றியிருக்கின்றது. அதே நேரத்தில், இஸ்ரேல் என்னதான் அறபுலக அரசுகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு தனது இருப்பை அங்கீகரிக்கச் செய்தாலும், மக்களைப் பொறுத்தமட்டில் அது என்றுமே ஒரு நாடாக அங்கீகாரம் பெற முடியாது, அருவருப்பான ஆக்கிரமிப்புக் கூட்டம் என்றே நிலைத்திருக்கும் என்ற செய்தி பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தப்பட்டிருக்கின்றது.
அம்ரோ அலி சொன்னதுபோல, “இந்த உலகக் கோப்பையில் வெற்றி பெற்றது ஃபலஸ்தீனம்தான்”. விரைவில் அது தம் சுதந்திரப் போராட்டத்திலும் வெற்றியடையட்டும்!
(தகவல் உதவி: இஸ்ரேல் நேஷனல் நியூஸ், அல்ஜஸீரா, மிடில் ஈஸ்ட் மானிட்டர்)