கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அபாயத்தில் ஓர் தமிழ் அகதி!

Loading

தமிழ்நாட்டில் தமிழ் அகதிகளின் துயரங்கள் சொல்லி மாளாதவை. அதில் ஒன்று திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளின் நிலை. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் அகதியின் கதையும் அத்துணை துயரம் நிறைந்தது. அவற்றையெல்லாம் பதிவுசெய்ய வேண்டும். அவர்களின் பிரச்சனைகள் தொடர்ந்து பேசப்பட வேண்டும். தற்போது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக, இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் பாஸ்கரன் (எ) மயூரன் என்பவரின் நிலையை எடுத்துச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இக்கட்டுரை வாட்ஸ்அப் செயலி வழியாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. தோழர் ஜெயபாதுரி ஆங்கில இணைய ஊடகமான Caravanக்கு கட்டுரை எழுத இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதோடு, அவரின் வழக்கறிஞர்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களும் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாஸ்கரன் (எ) மயூரன் ஈழத்தில் முல்லைத் தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். விடுதலைப் புலிகள் அமைப்பில் 1993 முதல் செயல்பட்ட இவர் 1995ல் காயம்பட்டுவிடுகிறார். இந்நிலையில் 2006ம் ஆண்டு இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானார். பின்னர் அதே வருடம் தனது குடும்பத்தோடு படகு மூலம் இந்தியாவுக்குத் தஞ்சம் புகுந்தார். மண்டபம் அகதிகள் முகாமில் அகதியாகப் பதிவுசெய்து, திருநெல்வேலி சமூகரங்கபுரம் அகதிகள் முகாமில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஈழப்போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது. இறுதிப் போரில் பாஸ்கரனின் தந்தை, அண்ணா, அண்ணி, அவர்களது மகள் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்த காலத்தில் வெடிவிபத்தால் இவரது கண் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே 2010ம் ஆண்டு இவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிப்பதிவு எடுத்து வேலூரில் தங்கியுள்ளார். பின்னர் அவரின் இரு குழந்தைகளின் பராமரிப்புச் சிக்கல் காரணமாக இலங்கைக்குக் கொண்டுசென்று, தனது குடும்பத்தினரிடம் விட்டுள்ளார். இலங்கையில் ’முன்னாள் புலி’ என்ற காரணத்தால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவியது. அதனால் அவர் மீண்டும் இந்தியாவிற்கு வந்துள்ளார்.

அதன் பின், பாஸ்கரன் 2016ம் ஆண்டு சட்ட விரோதமாக வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சித்த வழக்கில் கியூ பிராஞ்ச் உளவுத் துறையால் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் சப் ஜெயிலில் மே மாதத்திலிருந்து நவம்பர் மாதம்வரை அவரைத் தனியாக அடைத்துவைத்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். பின்னர் பல போராட்டங்களுக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். தான் சட்ட விரோதமாக வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சிக்கவில்லை என்றும், கியூ பிராஞ்ச் பொய் வழக்கில் தன்னைக் கைது செய்துள்ளதாகவும் பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 2018ம் ஆண்டு இறுதியில் கியூ பிராஞ்ச் தொடர்ந்த வழக்கானது அவர்களின் பதவி உயர்வுக்காகப் போடப்பட்டது எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செய்யாத குற்றத்திற்காக மூன்றாண்டுகள் புழல் சிறையில் இருந்த பாஸ்கரன் பின் 2018ல் விடுவிக்கப்பட்டார். ஆனால், அத்துடன் பிரச்சனை முடிந்தபாடில்லை. வெளிநாட்டினர் சட்டம் 32(e) சட்டப்பிரிவின் கீழ் பாஸ்கரனைத் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் கியூ பிராஞ்ச் போலீசார் தடுத்து வைத்தனர். அன்றிலிருந்து இன்றுவரை சிறப்பு முகாமிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் எந்தவிதக் குற்றப் பின்னணி இல்லாதபோதும், இந்தியாவில் அவர் மீது எந்த வழக்கும் இல்லாதபோதும் அவர் தொடர்ந்து சிறப்பு முகாமில் தடுத்து வைக்கபட்டுள்ளார். அதுமட்டுமல்ல சிறப்பு முகாமிலிருந்து அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளும் நடந்துகொண்டு இருக்கின்றன எனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், பாஸ்கரன் புதுதில்லியில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் வழியாக சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோரி இருந்தார். அவர்களும் அவரை நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். ஆனால், அவர் நேர்காணலுக்குச் செல்லும் அனுமதி இல்லாமல் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அபாயத்தில் உள்ளதாக அறியமுடிகிறது.

இது குறித்து பாஸ்கரன், “நான் 2018ம் ஆண்டிலிருந்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்துவருகிறேன், இன்றுவரை என்மீது சட்டரீதியாக எந்த வழக்கும் இல்லை. ஆனால் இலங்கை அரசு ‘விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம்’ அதாவது ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பி இலங்கை அரசுக்கு எதிராகச் செயல்படுவது’ என்ற பொய்க் குற்றச்சாட்டின் பெயரில் வழக்குகள் தொடுத்துள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று கூறுகிறார். அதன் அடிப்படையில்தான் நாடுகடத்தும் இந்தச் செயல்பாடுகள் நடைபெறுவதாகவும் பாஸ்கரன் கூறுகிறார்.

கடந்த ஆண்டு (2020) பாஸ்கரனை இந்திய உளவுப்பிரிவு (RAW),இலங்கையில் விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கத்தில் ஈடுபடுவதாகக் கூறி விசாரணை செய்துள்ளது. அதன் பின்னரே அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்கான ஆணை வந்திருக்கின்றது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன், வேலுமணி அமர்வு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. அந்த வழக்கில் பாஸ்கரன் தரப்புக் கோரியது என்னவென்றால்: இறுதிப் போரில் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு அவருக்கு இலங்கையில் அரச படையினரால் உயிராபத்தும் இருக்கிறது. எனவே, அவரை இலங்கைக்கு நாடுகடத்தக் கூடாது. அதோடு, புதுதில்லியில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு நேர்காணலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதே ஆகும். அந்த வழக்கு அதன் பிறகு நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் பொங்கியப்பன் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த அமர்வு, இறுதிப் போரில் கொல்லப்பட்ட பாஸ்கரனின் குடும்பத்தினர் மற்றும் பாஸ்கரன் உயிருக்கு ஆபத்து என்பது தொடர்பாக வவுனியா நீதிபதி வழங்கிய ஆவணத்தின் உண்மைத் தன்மையைச் சந்தேகிப்பதாகக் கூறி அந்த ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு பாஸ்கரன் இலங்கைக்குச் சென்று வந்ததினால் அவர் அகதி அந்தஸ்தை இழந்துவிட்டார் எனக் கூறி நாடுகடத்தப்படுவதற்கான ஆணையைத் தடை செய்ய முடியாது எனக் குறிப்பிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதோடு, சிறப்பு முகாம் சிறையல்ல என்றும்; அதில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்களுக்குத் தேவையான சுதந்திரமும் சட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தற்போது பாஸ்கரன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முயற்சித்தபோது சிறப்பு முகாம் அதிகாரிகள் அதற்கு அனுமதி அளிக்காமல் இருக்கின்றனர். இதனால் பாஸ்கரனால் நாடுகடத்தப்படும் ஆணைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. அவர் எந்நேரமும் நாடுகடத்தப்படும் சூழலில் இருக்கிறார்.

பாஸ்கரன் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் என்பது இரண்டுதான். அதாவது அவர் தமிழ்நாட்டில் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அவர் விரும்பும் நாட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அகதிக் கோரிக்கைகான நேர்காணலுக்காகப் புதுதில்லியில் உள்ள சுவிஸ் தூதரகம் பாஸ்கரனை அழைத்துள்ள போதும் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமல் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கியூ பிராஞ்ச் போலீசார் தமது பதவி உயர்வுக்காகப் போட்ட வழக்கில் அவர் மூன்றாண்டு காலம் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இன்றளவும் வேறு எவ்வித வழக்கும் இல்லாமல்லேயே அவர் கடந்த மூன்றாண்டுகளாகச் சிறப்பு முகாமில் தடுக்கப்பட்டிருக்கிறார். இவை அனைத்தும் சட்ட மீறல் இல்லையா? குழந்தைகளை விடுவதற்குச் சென்று, அங்கு உயிர் ஆபத்து நிலவியதால் தப்பித்து இந்தியாவிற்கு வந்தது பெரும் குற்றமா? விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் என்பது உண்மையில் நடைபெறாத ஒன்று. இது எல்லோரும் அறிந்ததே. இன்னும் எத்தனை காலத்திற்கு விடுதலைப் புலிகளின் பெயரில் தமிழ் அகதிகள் வதைப்படுவதை அனுமதிப்பது? அகதிகளாக இருப்பவர்கள் என்றால், அடிப்படை மனித உரிமைகள்கூட மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாஸ்கரனது உயிருக்கு இலங்கை அரசால் ஆபத்து இருப்பதாகக் கடிதம் வழங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று. அனைத்துக் காரணங்களும் இங்கு புறக்கணிக்கப்படுகிறது.

பாஸ்கரனது சூழ்நிலையைக் கருத்தில்கொள்ளாமல், அவர் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு மட்டும் நாடுகடத்த முனைவது எந்தவிதத்தில் சரியாக இருக்கும்? ஒன்று இந்தியாவில் அவருக்குத் தஞ்சம் அளிக்க வேண்டும். இந்தியாவில் இருக்க அவருக்கு அனுமதி இல்லை என்றால், எந்த நாடு அவருக்குத் தஞ்சம் அளிக்கிறதோ அங்கு செல்ல அவரை அனுமதிக்க வேண்டும். இதுதான் அவரது நிலைக்கு எடுக்கப்படும் சரியான முடிவாக இருக்க முடியும். அதை விடுத்து, அவரை இலங்கைக்கு நாடுகடத்துதல் எந்தச் சட்ட அடிப்படையில் நியாயமாக இருக்கும்?

“இலங்கை அரசின் அழுத்தத்தினாலே, இந்திய அரசு என்னை இலங்கைக்குச் செல்ல வற்புறுத்தி வருகிறது. என்னுடன் சிறப்பு முகாமில் இருந்த ரமேஷ் என்ற ஈழ அகதி 2019ம் ஆண்டு இலங்கைக்குச் சென்ற பின், அவர் ‘விடுதலை புலிகளின் மீள் உருவாக்கம்’ என்ற புகாரில் இலங்கை ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார். இப்போது ரமேஷ் உடன் இணைத்து என் மீதும் அதே குற்றச்சாட்டை இலங்கை அரசு கூறி வருகிறது. இந்தப் பொய் வழக்கை நம்பி, இந்திய அரசு என்னை இலங்கைக்கு அனுப்பக் கூடாது” என்று பாஸ்கரன் கூறுகிறார்.

ரமேஷ் கைது செய்யப்படும்போது அவரது மனைவி ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இன்றளவும் ரமேஷ் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. காணாமல் ஆக்கப்படும் நடவடிக்கையும் நின்றபாடில்லை. அதனால் காணாமல் ஆக்கப்படுவதற்காக ஒரு தமிழரை அனுப்புவது நியாய உணர்ச்சியும் மனிதநேய உணர்ச்சியும் இல்லாத நடவடிக்கையன்றி வேறில்லை.

“இதே திருச்சி சிறப்பு முகாமில் ஒரு ஈழ அகதி தன்னை விடுதலை செய்யுமாறு கேட்டபோது, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அந்த உரிமை தமிழக அரசாங்கத்திற்கு இல்லை என்றும், மத்திய அரசாங்கத்திற்குதான் உள்ளது என்றும் கூறிவிட்டனர். ஆனால், என்னை நாடு கடத்தும் உரிமை மட்டும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு எப்படி வந்தது?” என்று பாஸ்கரன் கேள்வி எழுப்புகிறார். தான் எந்த நேரத்திலும் நாடுகடத்தப்படும் சூழ்நிலையில் இருப்பதாகவும், தன்னுடன் ஆனந்தராஜ் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட, முன்னாள் விடுதலை புலி உறுப்பினரையும் இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அச்சம் தெரிவிக்கிறார்.

தற்போது செப்டம்பர் மாதம் மீண்டும் அவரை நேர்காணலுக்கு வரச்சொல்லி சுவிஸ் தூதரகம் அழைத்துள்ளது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடுகடத்தப்படும் அபாயத்தில் இருக்கிறார் பாஸ்கரன்.

எனவே, இதுகுறித்து தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம் இதில் தலையிட்டு வாழ்வா, சாவா என்ற நிலையிலிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உரிய நியாயத்தை வழங்க வேண்டும். பாஸ்கர் தமிழ்நாட்டில் இருக்கவேண்டும்; அல்லது அவர் விரும்பும் நாட்டிற்குச் செல்ல அனுமதியளிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு அவருக்கு வாழ்வுரிமை வழங்கவேண்டும்.

தமிழ்நாடு அரசாங்கம் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க உறுதியான நடவடிக்கை எடுத்தல், அதற்கு முன்பாக அனைத்து உரிமைகளையும் வழங்குதல் முதலான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே தமிழ் அகதிகளின் வாழ்நிலை மாற முடியும். குறிப்பாக முகாம், சிறப்பு முகாம், நாடுகடத்தப்படும் அபாயம் முதலான நிலைமைகள் நீங்கிய நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.

Related posts

Leave a Comment