நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதன் விளைவு என்னவாக இருக்கும்? – பேரா. அசோக் ஸ்வைன் நேர்காணல்

Loading

அசோக் ஸ்வைன் ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் Peace and Conflict ஆய்வுத்துறை பேராசிரியராக இருக்கிறார். ஐக்கிய அறபு அமீரகத்திலிருந்து வெளிவரும் முன்னணி ஆங்கில நாளேடான கல்ஃப் நியூஸில் தொடர்ந்து எழுதி வருபவர். 1991ல் ஜே.என்.யூ. பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, போர் தொடர்பாக நிறைய எழுதியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் பிரச்னை பற்றி ஆழமான, கூர்மையான பார்வைகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் தெஹ்றான் டைம்ஸ் தளத்துக்கு எம்.ஏ. சகி எனும் பத்திரிகையாளர் மேற்கொண்ட நேர்காணலை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளோம்.

கேள்வி: ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதன் விளைவு என்னவாக இருக்கும்?

பதில்: 2001ல் அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானுக்குப் படையெடுத்திருக்கக் கூடாது. அப்படிச் செய்திருந்தாலும் 2002ல் அது தாலிபானை வீழ்த்திய பிறகு உடனேயே அங்கிருந்து வெளியேறியிருக்க வேண்டும். தாலிபான்கள் ஊக்கமிழந்து, ராஜாங்க ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அந்நேரம்தான் அமைதி உடன்பாடு செய்துகொள்வதற்குத் தோதுவான தருணமாய் இருந்திருக்கக்கூடும். ஆனால், அன்றைக்கு அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் பல்வேறு ஆரவாரமான குறிக்கோள்களுடன் ’தேச நிர்மாண திட்டம்’ (Nation-Building Project) என்ற பெயரில் களமிறங்கியது.

எதார்த்தத்தில் அது காபூலில் வழிநடத்திய அரசானது பல யுத்தப் பிரபுக்களையும் பழங்குடியினத் தலைவர்களையும் கொண்ட ஒன்றுதான். அது ஜனநாயகபூர்வமாகவும் இல்லை, மக்கள் நல அரசாங்கமாகவும் இல்லை. அரசாங்கத்தின் இமாலய ஊழலாலும், இன முரண்பாடுகளாலும் ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போனது. அத்துடன், அது தாலிபான்களுக்கு ஆஃப்கான் மக்களிடையே செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. ஜோ பைடன் தன் படைகளைத் திரும்பப் பெறுவதாக எடுத்த முடிவு ஆஃப்கன் அரசு உடனடியாகக் குலைவதற்கு வழிவகுத்தது. பொம்மை அரசும், அதன் ராணுவமும் முற்றிலுமாகச் சரணாகதியடைந்திருப்பது அமெரிக்கா தன் தேச நிர்மாண திட்டத்தில் பரிதாபகரமாகத் தோற்றுப் போயிருப்பதையே காட்டுகிறது.

எதிர்காலத்தில் பிற நாடுகளுக்குச் சென்று ராணுவ சாகசத்தில் ஈடுபடக்கூடாது என்பதை ஆஃப்கான் தோல்வி அமெரிக்காவுக்கு உணர்த்தக்கூடும். அமெரிக்காவின் படுதோல்வியும், தாலிபானின் பெருவெற்றியும் சீனாவின் முக்கியத்துவத்தை அந்தப் பிராந்தியத்தில் கூட்டுவதுடன், அங்கே அதிகாரத்தின் சமநிலையை சீனாவுக்குச் சாதமாகத் திருப்பும். சீன எல்லையில் ஆயுதக் குழுக்களுக்கு உதவ மாட்டோம் என்று சீனாவிடம் தாலிபான் உறுதியளித்துள்ளது. தாலிபான் தன் வாக்குறுதிக்குத்தக்க நடந்துகொண்டால், அதற்குத் தேவையான முதலீடுகளை சீனா வழங்கும். வரலாற்று ரீதியாகவே பாகிஸ்தானோடு சீனாவுக்கு வலுவான உறவிருக்கிறது. இரானுடன் அது கொண்டுள்ள உறவும் ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அத்துடன் ஆஃப்கானையும் தன் கூட்டாளியாக இணைத்துக்கொள்ளும்போது சீனாதான் அந்தப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும்.

கே: வல்லரசுகளின், சக்திவாய்ந்த நாடுகளின் கல்லறை என்று ஆஃப்கானிஸ்தான் கருதப்படுவதை ஏற்கிறீர்களா?

ப: அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நீண்டகால யுத்தங்களைச் செய்து சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் ஆஃப்கானியர்களின் கரங்களால் படுமோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. ஆஃப்கானியர்களைப் பணிய வைக்க 19ம் நூற்றாண்டில் பலமுறை அவர்களுடன் மோதி பிரிட்டன் தோற்றிருக்கிறது. ஆஃப்கானிஸ்தானில் வீழ்ந்தததைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் தகர்ந்ததைப் பார்த்தும்கூட அமெரிக்கா பாடம் பெறத் தயாரில்லை. சோவியத் ஒன்றியம் இருந்ததைவிட அமெரிக்கா ஒரு தேசமாக மிகவும் வலுவானது. அமெரிக்கா கடந்த காலத்தில் இப்படியான படுதோல்வியை வியட்நாமில் சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. வல்லரசுகளின் இந்தத் தோல்விகள் நமக்குப் புலப்படுத்துவது என்னவென்றால், ஒரு தேசம் பணிந்து செல்வதற்கு மறுத்தால், இப்பூமியிலுள்ள எந்தச் சக்தியாலும் எப்போதும் அதை ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதுதான். ஆஃப்கானிலிருந்து அமெரிக்கா ஏதேனும் கற்றுக்கொள்ள நினைத்தால், அது பிற நாடுகளிலுள்ள அரசுகளைத் தன் பலத்தைப் பிரயோகித்து அது மாற்ற முனையக் கூடாது.

கே: தோல்வியடைந்த அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்துக்கொண்டிருக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் பைடன் வாதிடுகிறார். ஏன் ஆஃப்கான் அரசும் ராணுவமும் தாலிபானை எதிர்கொள்ள இயலாமல் போனது?

ப: முன்னதாக நான் சுட்டிக்காட்டியதுபோல, ஆஃப்கான் அரசாங்கத்துக்கு மக்களிடையே போதிய அங்கீகாரம் இல்லை. ஏனெனில், அந்த அரசாங்கம் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆஃப்கானியர்கள் கருதவில்லை என்பதுடன், அமெரிக்காவின் பொம்மை ஆட்சியாகவே அதைப் பார்த்தார்கள். உட்பூசலும், மலிந்துக் கிடந்த ஊழலும் ஆஃப்கான் அரசாங்கத்தின் நிலைமையை இன்னும் சீர்குலைத்தன. ஆஃப்கான் அரசாங்கம் தோற்றுபோய்விட்டது என்று சொல்ல பைடனுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அது தோல்யுற முதன்மைக் காரணம் ஆஃப்கான் அரசைவிட அமெரிக்காதான்.

தான் உருவாக்கிய, பயிற்சியளித்த, பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவழித்து ஆயுதம் கொடுத்த ஆஃப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படையான ANDSF, தாலிபான்கள் மேலெழுவதைச் சில காலம் தடுத்து நிறுத்தும் என்று நம்பியது அமெரிக்கா. ஆனால், தீவிர மதப் பிடிப்புள்ள, போரில் கைதேர்ந்த தாலிபான்களுக்கு முன்னால் ANDSF ஒன்றுமில்லாமல் கரைந்துபோய்விட்டது. ஆஃப்கான் சிறப்புப் படைக்கு அமெரிக்கா நன்கு பயிற்சி கொடுத்தது. ஆனால், வட்டார இனக்குழுத் தலைவர்களே நிலையான 3,00,000 துருப்புகளைத் தெரிவு செய்தனர். முன்களத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்களில் பலர் வெகுசில நாள்கள் மட்டுமே பயிற்சி பெற்றிருந்தனர். பல சந்தர்ப்பங்களில், துருப்புகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை எடுத்துக்கொள்ளும் நோக்கில், வெறும் காகிதத்திலேயே ஆட்சேர்ப்பு நடந்திருந்தது. பெருத்த ஊழல், சிதைந்துபோன இன விஸ்வாசம், சித்தாந்தப் பிடிப்போ தேச நலன் சார்ந்த ஊக்கமோ ஏதுமில்லாமல் இருந்தது ஆகிய அனைத்தும் சேர்ந்து ANDSFன் பிரமாண்டத் தோல்விக்கு வழியமைத்தன.

கே: 2001ல் ஆஃப்கானிஸ்தானுக்குப் படையெடுத்த அமெரிக்காவுக்கு என்ன குறிக்கோள் இருந்தது?

ப: அமெரிக்கா 2001ல் ஆஃப்கானுக்குப் படையெடுத்தது. அச்சமயத்தில் தீவிரவாதத்துக்கும், அதன் ஆதரவு வலைப்பின்னல்களுக்கும் எதிராகச் சண்டையிடுவது ஆகியவையே முதல்கட்ட நோக்கமாகச் சொல்லப்பட்டது. எனினும், 2002ம் ஆண்டு தொடக்கத்திலேயே தாலிபான்களை முற்றிலுமாக வீழ்த்திவிட்ட பிறகும் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறவில்லை. மாறாக, தேச நிர்மாணம் என்ற பெயரில் அங்கேயே இருந்துவிட்டது. மேலும், சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும் வகையிலான நவீன ஜனநாயக ஆஃப்கானிஸ்தானை உருவாக்குவது என்பதுபோன்ற ஆரவாரமான வாக்குறுதியையெல்லாம் தந்தது அமெரிக்கா. ஆக, அமெரிக்கா சொல்வது ஒருவிதத்தில் சரி; தேச நிர்மாணம் என்பது ஆஃப்கான் ஆக்கிரமிக்கப்பட்ட தொடக்க காலங்களில் குறிக்கோளாகச் சொல்லப்படவில்லைதான். ஆனால், குறைந்தபட்சம் கடந்த 19 ஆண்டுகாலமாக அதுதான் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

கே: ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையிலான வேறுபாடுகள் யாவை?

ப: ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தையும் ஒபாமா நிர்வாகத்தையும் ஒப்பிட்டால், ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் தாலிபானுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியதுடன், அதன் முன்னணித் தலைவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. மேலும், தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கை செய்துகொண்டு, பன்னாட்டுப் படைகளை ஆஃப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற நாள் குறித்தது. என்றாலும், பைடன் நிர்வாகத்திடம் இந்தக் கடினமான பணியை ஒப்படைத்துவிட்டது. இவ்விஷயத்தில் பைடன் தன் தலைமைத்துவப் பண்பைக் காட்டியிருக்கிறார். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியின் தீவிர விமர்சனங்களுக்கிடையேதாம் துருப்புகள் திரும்பப்பெறப்படுகின்றன.

அமெரிக்காவுக்கு இது வெற்றிபெற இயலாத போர்தான். அமெரிக்காவின் தோல்வியை ஒப்புக்கொண்டு போரை நிறுத்தியிருப்பது பைடன் செய்த சரியான காரியம் என்றே சொல்வேன்.

மூலம்: Tehran Times

தமிழில்: நாகூர் ரிஸ்வான்

Related posts

Leave a Comment