ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடங்கள்
சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சி வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியையும், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சிறிது சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க., மத்தியப் பிரதேசத்தில் தன் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றபோதும் 2020இல் பா.ஜ.க.வின் வழக்கமான குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியைப் பறிகொடுத்தது. அதற்குப் பழிதீர்க்கும் வகையில் தற்போது அங்கு அக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்ற தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரின் நம்பிக்கைகள் தகர்ந்துப் போயுள்ளன.
முழுமையான விரக்தியில் இருந்து காங்கிரஸ் கட்சியினரை தெலுங்கானா வெற்றி பாதுகாத்துள்ளது. பத்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி) கட்சியைத் தோற்கடித்து பெரும் வெற்றியை அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. தெலுங்கானா மாநில உருவாக்கம் காங்கிரஸ் கட்சி ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டபோதும் அக்கட்சியால் அங்கு வெற்றியை ஈட்ட முடியவில்லை. வலுவான மாநிலக் கட்சியைத் தோற்கடித்து ஆட்சியைத் தக்கவைத்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் ஓரளவு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1967இல் தமிழ்நாடு, 1989இல் உத்திரப் பிரதேசம், 1990இல் பீகார், 2000இல் ஒடிஸா என்று மாநில கட்சிகளிடம் இதற்கு முன் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சியால் மீண்டும் இந்த மாநிலங்களில் தனித்து ஆட்சியை அமைக்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிசோரம் மாநிலத்தில் புதிதாக, மாநிலக் கட்சியான ஸோரோம் பீப்பிள்ஸ் மூவ்மண்ட் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளும் கட்சியான மிசோ நேஷனல் ஃப்ரண்ட் தோல்வியைத் தழுவியுள்ளது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முறையே இரண்டு மற்றும் ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க.வின் வடகிழக்கு கூட்டணியில் மிசோ நேஷனல் ஃப்ரண்ட் அங்கம் வகித்தபோதும் இருவரும் தனித்தனியாகப் போட்டியிட்டதுடன் கடுமையாகச் சேற்றையும் வாரி வீசிக்கொண்டனர். வடகிழக்கு மாநிலங்கள் ஒன்றிய அரசை பெரும்பாலும் சார்ந்திருப்பதால் பா.ஜ.க.வுடன் அந்தப் புதிய கட்சி கூட்டணி வைத்துக்கொண்டாலும் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை. புதிய முதலமைச்சர் லால்துஹோமா, காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி தற்போது மற்றொரு கட்சியின் முதலமைச்சராக இருக்கும் ஒன்பதாவது முதலமைச்சர் இவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
தேர்தல் முடிவுகள்குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால் அதனை அதன் இறுதி அரசியல் அத்தியாயமாகக் கொண்டாடுவதும், பா.ஜ.க. வெற்றிபெற்றால் அதனை அதன் நிரந்தர வெற்றியாக அங்கலாய்ப்பதும் எதிர்த் தரப்பில் இப்போதும் தொடர்கிறது. பா.ஜ.க.வின் வெற்றியை ஒட்டுமொத்த வட இந்தியாவும் இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டதைபோல் சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. அப்படியென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் இதே மாநிலங்களில் காங்கிரஸ் எப்படி வெற்றி பெற்றது?
ஐந்து வருடங்களில்தான் எல்லாம் மாறிவிட்டது என்றால் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த மாநிலங்களில் பா.ஜ.க. அடைந்த வெற்றியை என்னவென்று சொல்வது? ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்துவிட்டு பின்னர் திரும்புகின்றனர் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை வழங்கிய இம்மாநில மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு மிகப்பெரும் தோல்வியை ஏன் வழங்கினர்?
அதே சமயம், பா.ஜ.க. வெற்றிபெற்றால் அதனை நரேந்திர மோடியின் வெற்றியாகச் சித்தரித்து சட்டமன்றத் தேர்தலை அரையிறுதி என்று சுட்டுவதும், பா.ஜ.க. தோல்வியடைந்தால் மாநிலத் தலைமைமீது குற்றத்தைச் சுமத்தி அரையிறுதியும் கிடையாது கால் இறுதியும் கிடையாது என்று உதறித் தள்ளும் போக்கும் சில ஊடகங்களிடம் எப்போதும் இருக்கின்றன. தேர்தல் வெற்றியை ஹாட்ரிக் வெற்றி என்று வர்ணித்த பிரதமர் மோடி, நாடாளுமன்றத் தேர்தலிலும் ஹாட்ரிக் வெற்றி தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மூன்று முறை அடையும் வெற்றியைத்தான் ஹாட்ரிக் வெற்றி என்று குறிப்பிடுவார்களே அல்லாமல் ஒரே சமயத்தில் அடையும் வெற்றியை யாரும் அவ்வாறு வர்ணிப்பதில்லை. ஆனால், பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி கேட்டால் தேசத் துரோக குற்றமாகிவிடும் என்பதால் பத்திரிகையாளர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு வகுப்புவாதம் தான் முக்கியக் காரணம் என்று முன்னாள் முதலமைச்சர் அசோக் கேலாட் தெரிவித்துள்ளார். இந்துத்துவமும், மோடியின் ஆளுமையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றாலும் அதனை மட்டுமே தேர்தல் அளவுகோலாக வைக்க முடியாது.
வழக்கம்போல் எதிர்கட்சிகளின் வாக்குகள் சிதறியது பா.ஜ.க.வின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி தங்களின் உண்மை முகத்தை மீண்டும் நிரூபித்தனர். மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைப்பதை முற்றிலுமாக எதிர்த்தார் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத். அதே போன்று பாரத் ஆதிவாசி பார்ட்டி போன்ற சிறு கட்சிகளையும் காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் அரசியலில் விட்டுக்கொடுப்புகள் அவசியம் என்பதை காங்கிரஸ் கட்சி இனியேனும் உணர வேண்டும்.
வலுவான மாநிலத் தலைமை அவசியம்தான் என்றாலும் தலைமையை மதிக்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் தலைவர்களும் இத்தோல்விக்கு முக்கியக் காரணமாவர். உட்கட்சிச் சண்டையை வெளிப்படையாகவே போட்டுக் கொண்டனர் கமல்நாத், திக்விஜய் சிங் போன்ற மூத்த தலைவர்கள். ராஜஸ்தானில் அசோக் கேலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே சண்டையைத் தீர்த்துவைப்பதே கட்சித் தலைமைக்கு முக்கிய வேலையாகிவிட்டது. மோடி இதனை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். ‘தந்தையை அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி தற்போது மகன் சச்சின் பைலட்டையும் அவமானப்டுத்துகிறது’ என்று சச்சின் மீது பாசத்தைப் பொழிந்தார். சத்தீஸ்கரிலும் இதுதான் நிலை.
ஆனால், மறுபுறம் மாநிலத் தலைவர்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு மோடி மற்றும் அமித் ஷா இணைத் தேர்தல் வேலைகளை நேரடியாகவே மேற்கொண்டனர். ‘முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் திராணி எதிர்கட்சிகளுக்கு இருக்கிறதா?’ என்று பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன் வீரவசனம் பேசியது பா.ஜ.க. ஆனால், இப்போது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காதது மட்டுமல்ல, முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதிலும் அக்கட்சி திணறி வருகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவார காலத்திற்குப் பின்னரே சத்தீஸ்கர் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் முதலமைச்சர்களை அறிவித்துள்ளனர். அன்று பா.ஜ.க.வின் அறிவிப்பைப் பெரும் சவாலாக வர்ணித்த ஊடகங்கள் இன்று அதன் நிலைப்பாட்டைக் கண்டுகொள்வதே இல்லை. இதனைப் பிரச்சாரம் செய்யும் தந்திரமும் காங்கிரஸ் கட்சிக்கு தெரியவில்லை.
ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது ஆகியவையும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணங்களாக அமைந்தன. முஸ்லிம்கள் மீதான கும்பல் தாக்குதல்கள் காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்தன. முந்தையத் தாக்குதல்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. பா.ஜ.க. பூச்சாண்டியைக் காட்டி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற அதீத நம்பிக்கை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் இருக்கின்றன.
நலத்திட்டங்களை முன்வைத்து மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்தபோதும் காங்கிரஸ் கட்சியால் அதனை ராஜஸ்தானில் நிறைவேற்ற இயலவில்லை. கட்சி உட்கட்டமைப்பு, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் ஆகியவை இங்கு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. கட்சியின் சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டுசெல்வதில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சி இதே தவறைச் செய்தது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். டிஜிட்டல் பிரச்சாரத்தில் இரு கட்சியினருக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது.
தோல்விகளில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தேர்தல் களம் ஒன்றும் அப்படியே பா.ஜ.க.விற்கு சாதகமாக இல்லை. 2013இல் தோல்வியைத் தழுவியபோது ராஜஸ்தானில் வெறும் 21 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடிந்தது. ஆனால், தற்போது 69 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை.
‘சித்தாந்தங்களின் போராட்டம் தொடரும்’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆனால் பசு, ராமர் கோயில், அயோத்தியா இலவச பயணம் என்று பேசும் தலைவர்களை வைத்துக்கொண்டு எப்படி இந்தப் போராட்டத்தை நடத்தப் போகிறார்? கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல் தற்போதும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவர்கள் தனியாக விடப் போகிறார்களா? மென்மையான இந்துத்துவம் தேர்தல் வெற்றியை கொடுக்கும் என்ற பகல் கனவு காங்கிரஸ் தலைவர்களிடம் இன்னும் இருக்கிறது. இதனைப் போக்காமல் எந்த சித்தாந்தப் போராட்டமும் நடத்த முடியாது, தேர்தல் வெற்றியையும் பெற முடியாது.
மேலும், பா.ஜ.க.வின் தோல்விகளையும், முரண்பாடுகளையும் முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ‘வித்தியாசமான கட்சி’ என்று அறிமுகமான பா.ஜ.க. இன்று மோடி – அமித் ஷாவின் கம்பெனியாக மாறிவிட்டது. பலமுறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் போன்றவர்கள் கூட மோடி புராணம் பாட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங்கை சபாநாயகராக அமர வைத்துள்ளது பா.ஜ.க. தலைமை. சிவராஜின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை. அத்வானி, முரளி மனோகர் ஜோஷியுடன் மார்க தர்ஷக் மண்டலுக்கு இவரும் அனுப்பப்படலாம். இருவர் கூட்டணி முன் ஆர்.எஸ். எஸ். அமைப்பே அடங்கி நிற்கும்போது இவர்களின் நிலை என்ன?
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சித்தாந்தத் தெளிவுடன், தேர்தல் வியூகங்களை அமைத்தால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் வெற்றிபெற இயலும். 2003இல் இதே மூன்று மாநிலச் சட்டமன்றங்களில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தது. பா.ஜ.க.வின் ஊழல், தோல்வியடைந்த திட்டங்கள், எதிர்கட்சிகள் அமைத்த கூட்டணி ஆகியவை அந்த வெற்றியைச் சாத்தியமாக்கின என்பதைக் காங்கிரஸ் கட்சியினர் அறிந்துகொள்ளட்டும்.