babri masjid, gyanvapi masjidகாணொளிகள் குறும்பதிவுகள் 

அன்று பாபர் மசூதி, இன்று ஞானவாபி மசூதி, நாளை..?

Loading

இன்று உத்தரப் பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப் ஞானவாபி மசூதியைக் கட்டினார் என்று சொல்லி, அதற்கெதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்குக்கு எதிரான ஞானவாபி பள்ளிவாசல் நிர்வாகத்தின் மனுதான் நாளை விசாரணைக்கு வருகிறது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான 450 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 அன்று இந்துத்துவ பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. சரியாக 27 ஆண்டுகள் கழித்து, 2019 நவம்பர் 9ஆம் தேதி மசூதியைத் தகர்த்த அந்த இந்துத்துவ வன்முறை கும்பலிடமே மசூதி அமைந்திருந்த நிலம் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் பாஜக அரசை அறக்கட்டளை அமைத்து கோவில் கட்டிக்கொள்ளுங்கள் என்று ஒரு அநீதியான தீர்ப்பை வழங்கியது. 5 ஏக்கரில் முஸ்லிம்களுக்கு வேறொரு நிலம் ஒதுக்கப்பட்டது. கொடுமை என்னவென்றால், மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம் என்று அந்தத் தீர்ப்பிலேயே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், சட்ட விரோதமாக கட்டடம் தகர்க்கப்படக் காரணமானவர்கள், அப்போது வன்முறைகளிலும் படுகொலைகளிலும் ஈடுபட்டவர்கள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்பது நாட்டுக்கே அவமானகரமான ஒரு விஷயம்.

பாபர் மசூதியைத் தகர்த்துவிட்டு அங்கே ஒரு பிரம்மாண்ட ராமர் கோவில் எழுப்புகிறோம் என்று ஆரவாரமாக ஆர்ப்பரிக்கின்ற இந்துத்துவ சக்திகள் இத்தோடு நிறுத்திக்கொள்வார்களா? இல்லை, அவர்கள் சொல்கிறார்கள்: “அயோத்தியா தோ சிர்ஃப் ஜான்கி ஹே, காசி மதுரா பாக்கி ஹே” (அயோத்தியா ஒரு ட்ரைலர்தான், காசியும் மதுராவும் பாக்கி இருக்கிறது). அடுத்து, உத்தரப் பிரதேசத்திலுள்ள ஞானவாபி மசூதி, தாஜ்மஹால், ஷாஹி ஈத்காஹ், மத்தியப் பிரதேசத்திலுள்ள கமால் மௌலா பள்ளிவாசல், டெல்லியிலுள்ள குவ்வத்துல் இஸ்லாம் மசூதி, நவாப் அலீ மசூதி என ஒரு பெரும் பட்டியல் அவர்களிடம் இருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பைத் தடுக்காத காங்கிரஸ் அரசு 1991ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, பாபர் மசூதி தவிர்த்து இனி எல்லா வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15ல் எப்படி இருந்ததோ அதே நிலையிலேயே தொடர வேண்டும். அதில் எந்த உரிமை மாற்றத்தையும் யாரும் கோர முடியாது என்று உறுதிப்படுத்தியது. இப்போது இந்தச் சட்டத்தை எதிர்த்து இந்துத்துவ அமைப்பினர் உச்ச நீதிமன்றம்வரை சென்றிருக்கின்றனர்.

கோவில் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டதாகக் கூறி நாட்டில் குழப்பத்தை, வன்முறையை ஏற்படுத்த முனைகின்ற சங் பரிவாரத்தினர் சிலவற்றை வசதியாக மறந்துவிடுகிறார்கள். இன்றுள்ள பல கோவில்கள் சமண/புத்த கோவில்களை இடித்துக் கட்டப்பட்டவை என்பது வரலாறு. ராஜராஜ சோழ மன்னன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை பகுதிகளிலிருந்த புத்தக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கி அந்த ஊர்களுக்கு ‘ஜனநாத மங்கலம்’ என்று பெயர் சூட்டினார். அதுபோல, சுபதாவர்மன் என்ற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோவில்களைக் கொள்ளை அடித்தார். இன்னும், தஞ்சை பெரிய கோவில், காஞ்சி காமாட்சி கோவில் போன்றவைகூட புத்த, சமணக் கோவில்களை இடித்துத்தான் கட்டப்பட்டன என சுரேஷ் பிள்ளை, மயிலை சீனிவேங்கடசாமி போன்றோர் நிறுவியிருக்கிறார்கள். திருவாரூர் கோவில் திருக்குளத்தை விரிவு செய்ய அங்கிருந்த சமணக் குடியிருப்பு அழிக்கப்பட்டதற்கு பெரிய புராணத்திலேயே சான்றுகள் உள்ளதாக தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்துத்துவவாதிகளிடம் நாம் கேட்க விரும்புவது, சமண/புத்த கோவில்களை இடித்துக் கட்டிய கோவில்களையெல்லாம் கண்டறிந்து அனைத்தையும் அதன் பழைய நிலைக்கே மாற்றலாமா? ஒப்புக்கொள்வீர்களா?

பாபர் மசூதியைக் கைப்பற்றிவிட்டதாக இவர்கள் ஆட்டம் போடுகிறார்கள். 88 ஆண்டுகள் ஜெருசலேமையும் பைத்துல் முகத்திஸையும் கைப்பற்றியிருந்த சிலுவை யுத்தக்காரர்களிடமிருந்து அதை மீட்டெடுத்தார் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி. துருக்கி இஸ்தான்புல்லில் 550 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலாக இருந்த ஹேகியா சோஃபியாவை 1934ல் முஸ்தஃபா கமால் மியூசியமாக மாற்றினார். அது மூன்றாண்டுகளுக்கு முன், 2020ல் தான் மீண்டும் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது. ஆக, இறைவன் நாடினால் எதுவும் சாத்தியம்.

பாபர் மசூதி விஷயத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி. மீண்டும் அதே இடத்தில் மசூதியைக் கட்டுவதுதான் நீதி. அதற்கான குரலை நீதியுணர்வுள்ள அனைவரும் எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

Related posts

One Thought to “அன்று பாபர் மசூதி, இன்று ஞானவாபி மசூதி, நாளை..?”

  1. Radjagobal R

    நீதியுள்ள அனைத்து இஸ்லாமிய நல்லோர்களுபம், இதுபோன்ற தீவிரவாத தன்மையை உணர்ந்து இராமர் கோயிலின் பிரதிஷ்டைக்கு தங்களால் இயன்ற பொருள் உதவியை செய்து மத நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும். ராமபிரானின் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் அன்று அனைவரும் வந்து எல்லா மதத்தினரும் சேர்ந்து கொண்டு, மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்த இந்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு தனி நாடு கொடுக்கப்பட்ட பிறகும் இங்கேயே வாழ்ந்து கொள்ளுங்கள் என்று உரைத்த இந்து சகோதரர்களுக்காக,, இதுபோன்று எங்கெங்கு கோயில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் ஆக்கப்பட்டதோ அந்த நிலத்தை எல்லாம் கோயில்கள் கட்டுவதற்கு இந்துக்களிடமே திரும்ப ஒப்படைத்து மதநல்லினக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது மாத்திரமில்லாமல் தாய் மதம் திரும்புவதையும் இஸ்லாமிய கிறிஸ்தவர்களிடமும் ஊக்குவிக்க வேண்டும்.

Leave a Comment