மானுட வாழ்வின் சுழற்சி: சூறத்துல் ளுஹாவின் ஒளியில்
முஹம்மது நபிக்கு (ஸல்) இறைவன் புறத்திலிருந்து கிடைத்த வஹீயானது இரு முறைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. இதற்கான முக்கியக் காரணமாக திருக்குர்ஆன் விரிவுரை அறிஞர்களும் புத்திஜீவிகளும், “ஆரம்பமாக இறக்கப்பட்ட அத்தியாயங்கள், வசனங்களின் கருத்துகளை ஆழ்ந்து புரிந்துகொண்டு அதற்கேற்ப அழைப்புப்பணியில் ஈடுபட நபிக்கு வாய்ப்பளிப்பதற்கும், வஹீயின் சுமையைத் தாங்கிக்கொண்டு அதைப் பரீட்சயப்படுத்திக்கொள்ள நபிக்கு அவகாசமளிக்கவுமாகும்” எனக் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு இரண்டாவது முறையாக வஹீ அறிவிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டபோது நபியைச் சுற்றியிருந்த இறைநிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும், “முஹம்மதை அவரது இறைவன் கைவிட்டுவிட்டான் போலும்” என ஏளனமாகக் குத்திக்காட்டி நபிகளாரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினர். அவர்களின் சீண்டல்கள் எதற்கும் நபிகளார் மனம் தளறவில்லை; எனினும், அதனால் சற்று வேதனையடைந்தார்கள். ஆகவே இறைநிராகரிப்பாளர்களும், இணைவைப்பாளர்களும் குறிப்பிட்டதுபோல் இறைவன் அவரை கைவிடவில்லை என அறிவிக்கவே இந்த அத்தியாயமான அல்ளுஹா இறக்கப்பட்டது.
சூறாவின் ஆரம்பம் (وَالضُّحَى وَ اللَّيْلِ إِذَا سَجَى) “முற்பகலின் மீதும், பொழுதுசாயும் வேளையின் மீதும் சத்தியமாக” என முற்பகல், இரவின் ஆரம்பம் என்ற இரண்டின் மீதும் சத்தியமிட்டு தொடங்குகின்றது. இதற்கு பலவாறான விளக்கங்கள் கூறப்பட்டாலும் நமது தலைப்போடு இரண்டரக்கலந்த பின்வரும் ஒரு விளக்கத்தையும் தர முடியும்.
மனித வாழ்வின் ஒரு நாள் என்பது இரவு-பகல் என்ற இரண்டின் கூட்டிணைவு. இரவு மட்டுமே நீடித்த நாளொன்று இல்லை; பகல் மட்டும் நீளும் நாளும் இல்லை. இரவும் பகலும் மாறிமாறிச் சுழன்றுகொண்டே இருக்கும். இந்த பௌதீகப் புலக்காட்சியை ஒரு பிம்பமாகச் சித்தரித்து மனித வாழ்வின் இயக்கம் உட்பட எல்லா பொருட்களும் இருப்பு (Existence) மற்றும் அதன் மறைவு அல்லது இழப்பு (Extinction) ஆகிய இரு நிலைகளின் தொடரியக்கமாக இருப்பதை இந்த வசனத்தொகுதி அழகாகக் கற்றுத்தருகிறது.
கவலை மட்டுமோ அல்லது மகிழ்ச்சி மட்டுமோ சூழ்ந்த வாழ்க்கை என எதுவும் இங்கு இல்லை. மாறாக கவலையும் மகிழ்ச்சியும் மாறிமாறி இடம்பெறும் சுழற்சி முறையிலேயே நமது வாழ்க்கை நகர்கின்றது. எதுவும் நிலைக்கப்போவதில்லை; மாறாக வாழ்க்கை ஒரு சோதனை என்ற திருக்குர்ஆனிய கருப்பொருளின் அடிப்படையில் சுழற்சி முறையில் நம்மை மாறிமாறி சோதித்துக்கொண்டுள்ளன. சிலருக்கு செல்வம் சோதனையாகத் தென்படும், சிலருக்கு வறுமை சோதனையாகத் தென்படும். ஆனால் செல்வத்திலும், வறுமையிலும் அதன் இருப்பையும், மறைவையும் நாம் எந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் காண்கிறோம் என்பதில்தான் நமது ஈருலக ஈடேற்றம் உள்ளது. செல்வத்தை அதிகாரத்துக்கும் ஆணவத்துக்குமான கருவியாகக் காண்கிறோமா? வறுமையை பொறுமை இழப்பதற்கும், இறைநிந்தனைக்குமான கருவியாகக் காண்கிறோமா? அல்லது செல்வத்தை இறையருளாகக் கண்டு அவன் வழியிலே செலவுசெய்ய முனைகிறோமா? வறுமையை இறைநாட்டம் என பொருந்தி இறைவனே வாழ்வாதாரம் அளிப்பவன் என இறைசார்பை (தவக்குல்) ஏற்கிறோமா என்பனவே இங்குகவனம் பெறவேண்டிய விசயங்களாகும்.
கவலையோ-ஆனந்தமோ, செல்வமோ-வறுமையோ, ஆரோக்கியமோ-நோய்களோ எந்நிலையாயினும் இறைவனின் பக்கம் நமது பார்வை எப்படி மீள்கிறது என்பது மற்றொரு விசயமாகும். அதாவது (مَاوَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى) “உமது இரட்சகன் உம்மை கைவிட்டு, வெறுத்து ஒதுக்கிவிடவில்லை” என்ற சூறத்துல் ளுஹாவின் 3வது வசனம் மேற்படி குறிப்பிட்டதுபோல் எந்த விதமான சூழ்நிலைகளிலும், சந்தர்ப்பங்களிலும் “இறைவன் எனக்கு ஒத்தாசையாக இருக்கின்றான்” என்ற பிரக்ஞையில் (awareness/conscious) நாம் நிலைகொள்ள வேண்டும்.
ஒருவன் தான் ஈட்டிய சொத்துசெல்வங்களை ஏகபோகபாய் அனுபவித்து வாழ முடிந்தபோதும் அதனை இறைவழியில் செலவிடுகின்றான், மறுபுறம் ஏழ்மையும் வறுமையும் வாட்டிவதைத்து கொலை, கொள்ளை, திருட்டு, வறுமையின் கோரப்பிடி காரணமாக தன்னுயிரை தானே மாய்த்துக்கொள்ளல் போன்ற அனைத்திற்கும் வழிகள் திறந்துகொடுக்கப்பட்டும் பொறுமையாய் இறைவன்மீது பொறுப்பு சாட்டி, கடினமாக இருந்தாலும் தியாகங்கள் பலசெய்து உழைத்து வாழ்கின்றான். எவ்வாறாயினும் இந்த இரு நிலைகளிலும் அவனுக்கு நஷ்டமும் கஷ்டமும் தானே மிஞ்சுகின்றது எனும் கேள்வி நமக்குள் சுழன்றுகொண்டிருப்பின் சடவாதம் நம்மை ஆட்கொண்டுவிட்டது என்பதே அதன் பொருள். இந்த அற்ப உலகையும் அதன் சுகபோகங்களையும் மாத்திரமே எண்ணிவாழ்வோருக்கு இவ்வாறான குறுகிய பார்வையே இருக்கும். ஆனால், சூறத்துல் ளுஹா (وَلَلآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الأُوْلَى) “இம்மை வாழ்வை விட உமக்கு மறுமையே நலவுமிக்கது” என்ற வசனத்தின் மூலம் மனித வாழ்வை இம்மையோடு குறுகிய ஒன்றாகச் சித்தரிப்பதைத் தவிர்த்து மறுமைவரை விரிவடையும் அப்பயணத்தைப் படம்பிடித்துக் காட்டி மனித மனங்களில் தோன்றும் சடவாதக் கேள்விகளுக்கு பதில்கொடுக்க முனைகிறது. செல்வத்தை இறைவழியில் செலவு செய்பவனும், வறுமையில் பொறுமை காத்து உழைத்து உண்பவனும், மனித வாழ்வை இம்மையோடு மட்டும் சுருக்கி குறுகிய கண்ணோட்டத்தில் நோக்கியிருப்பின் இதற்கு மாற்றமாகவே அவர்கள் நடந்துகொண்டிருப்பர். மாறாக இம்மையில் தமக்குக் கிடைத்தவற்றை அணுகும்முறைதான் தமது மறுமை வாழ்வையும் தீர்மானிக்கப்போகின்றன எனும் கண்ணோட்டமே அவர்களது நடத்தைகள் இறைவனை சார்ந்து அமைய வழிகோலுகிறது.
இதனோடு இணைந்த சடவாதச் சிந்தனையாளர்களிடம் காணமுடியாத மற்றுமொரு நிலைப்பாடுபற்றிதான் இதற்கடுத்து இடம்பெறும் (وَ لَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضَى) “மேலும் உமது இரட்சகன் உமக்கு வாரி வழங்குவான், நீங்கள் அதனை பொருந்தி ஏற்பீர்கள்” என்ற வசனம் பேசுகின்றது. அதாவது சடவாதிகளிடம் எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்ற மனநிலை ஆட்கொண்டிருக்கும். சொல்லபோனால், தன்னிடம் இருப்பதை விடுத்து இல்லாத ஒன்றுக்கு அல்லது இருப்பதைவிடவும் அளவிலும் செறிவிலும் பருமனிலும் அதிகமானதாக, பெரியதாக இருக்கும் மற்றொன்றை நாடுதல் எனும் பேராசையின் வடிவமே அது. ஆனால் வாழ்வாதாரமும், சொத்துசெல்வங்களும் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்றன என்ற சிந்தனைமிக்க அடியான் தனக்குக் கிடைத்த அருளின் சொற்ப அளவையும் மெச்சுதலோடு அனுபவிப்பதோடு அதனை ஏக மனதாய் ஏற்று அதன் மூலம் தன் இறைவன் மீதான சார்பை மென்மேலும் வலுப்படுத்திக்கொள்ளக்கூடியவனாய் இருப்பான். இதற்கான பிரதிபலனாக இறைவனும் அவனுக்கு அளவின்றி அவன் அறியாத புறத்திலிருந்து வாழ்வாதாரத்தை வழங்குவான் என்பது இந்த சூறா நமக்குக் கற்றுத்தரும் வாழ்வியல் யதார்த்தம் மாத்திரமின்றி, இது ஓர் இறை வாக்கும் ஆகும்.
மேற்கூறியது போல மனித வாழ்வில் சில விசயங்களின் இருப்பும் (Existence), அவற்றின் இழப்பு அல்லது மறைவும் (Extinction) சுழற்சி முறையில் மனித வாழ்வை எப்படி நெறிப்படுத்துகின்றது? அதன் போது ஓர் அடியானின் மனநிலையும், நடத்தையும் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் போன்ற விசயங்களை கோட்பாடுகளாகச் சித்தரித்துவிட்டு, மறுபக்கமாக நபிகளாரின் வாழ்க்கைச் சரிதையின் ஓட்டத்தில் இந்தச் சுழற்சி முறை வாழ்வியல் யதார்த்தம் எப்படி பங்காற்றியது என்பதை நடைமுறை உதாரணமாக எடுத்துக்காட்டுவது இந்த சூறாவின் அடுத்த கட்ட நகர்வாக அமைகின்றது.
(أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى)
“உம்மை ஓர் அநாதையாக கண்டு நாம் அவன் உமக்கு அபயமளிதிடவில்லையா!?”
(وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى)
“உம்மை தடுமாற்றம் மிக்கவராய் கண்டு உமக்கு அவன் நேர்வழிகாட்டவில்லையா!?”
(وَوَجَدَكَ عَائِلا فَأَغْنَى)
“உம்மை (பொருளாதாரரீதியில்) தேவையுடையவராய் கண்டு உமது தேவைகளை அவன் நிறைவுசெய்திடவில்லையா!?”
போன்ற மூன்று வசனங்களும் நபித்துவம் வழங்கப்படும் முன்பு கூட நபிகளாரின் வாழ்க்கையை இறைவன் எப்படி இந்தச் சுழற்சி முறை பிரபஞ்ச விதியினுள் உட்பட்ட விதத்தில் நெறிப்படுத்தியுள்ளான் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது, தாய்-தந்தையை இழந்து அநாதை என்ற வாழ்க்கையின் ஒரு கட்டத்தை (Phase) அனுபவித்திருந்த நபிகளாரை அவரது பாட்டனார் அப்துல் முத்தலிபு மற்றும் சிறிய தந்தை அபூதாலிபு ஆகியோரின் அரவணைப்பின் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் மிக்க ஒரு கட்டத்திற்கு இறைவன் மாற்றினான். அதுபோல சமூகத்தவர்களின் வழிபிறழ்வையும், தீயகுணங்களையும் கண்டு மனமுடைந்து ஒரு சமூகப் பிரக்ஞைமிக்கத் தலைவராக நின்று அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது என்ற தடுமாற்றத்தில் வாழ்வின் ஒரு பகுதியை கடத்திய நபிகளாருக்கு ‘நுபுவ்வத்’ எனும் நபித்துவத்தை வழங்கி இம்மை-மறுமை ஆகிய ஈருலக வாழ்வின் வழிகாட்டியாக இறைவன் மாற்றினான். அதுபோல இளமை வயதில் பொருளாதாரரீதியிலும், தன் குணத்திற்கும் நடத்தைக்கும் ஏற்ற வாழ்க்கைத்துணை ஒன்றை தேடும் விசயத்திலும் அன்னை ஃகதீஜாவை (ரழி) திருமணம் செய்துவைத்தன் மூலம் இறைவன் துணைபுரிந்தான். ஆக அநாதை, சமூகம்குறித்த தடுமாற்றமிக்கச் சமூக ஆர்வலர், சமூகத் தேவையைப் பூர்த்திசெய்ய நாடும் ஒரு இளைஞன் ஆகிய வாழ்வின் பகுதிகளை (Phases) அனுபவித்த நபிகளாரை தனது நாட்டத்தின் பிரகாரம் சமூக அந்தஸ்துமிக்க ஒரு பரம்பரையைச் சேர்ந்தவராகவும், ஈருலக வழிகாட்டியாகவும், சகல விதத்திலும் கௌரவமிக்க ஒரு சமூக அங்கத்தவராகவும் மாற்றியமைத்ததன் மூலம் அல்லாஹ் அவரது வாழ்வை நெறிப்படுத்தினான். இங்கு இந்தப் பின்னணியை நினைவுபடுத்தியதன் நோக்கம், எப்படி அல்லாஹ் நபித்துவத்திற்கு முன்னராக நபிகளாரின் வாழ்க்கையைப் பிரபஞ்ச நியதிகளினூடாக தன் நாட்டத்தின் பிரகாரம் நெறிப்படுத்தி அவர்களைச் சிறந்த நிலைக்கு கொண்டுவர வழியமைத்தானோ அப்படியே நபித்துவத்திற்குப் பின்னரும் அவர்களது வாழ்வை நெறிப்படுத்துவான். மாறாக இணைவைப்பாளர்களும், இறைநிராகரிப்போரும் கூறுவதுபோல இறைவன் நபிகளாரைக் கைவிட்டுவிடமாட்டான் என்பதை உணர்த்துவதே ஆகும். தற்காலிகமாக வஹீ இடைநிறுத்தப்பட்டமை இறைவன் நபிகளாரைக் கைவிட்டுவிட்டான் என்பதைக் குறிக்காது. மாறாக முன்பே சுட்டிக்காட்டியதுபோல அதன் பின்னணியில் இறைவனின் நுட்பமும், ஞானமும் தொழிற்பட்டுள்ளன. ஆகவே இப்படியொரு வாழ்வியல் யதார்த்தத்தைக் குறிப்பிட்டுக்காட்டி நபிகளாரை இறைவன் ஆசுவாப்படுத்தி மீளவும் தன் சமூகத்தாருக்கு அழைப்புவிடுக்க புதுப்பொழிவுடன் முன்நிறுத்த இறைவன் இந்த சூறா மூலம் புத்துணர்வூட்டி ஆர்வமூட்டுகிறான்.
(فَأَمَّا الْيَتِيمَ فَلا تَقْهَرْ)
“ஆகையால் அநாதைகளைக் கடிந்துகொள்ள வேண்டாம்”
(وَأَمَّا السَّائِلَ فَلا تَنْهَرْ)
“இன்னும், யாசித்து வருவோரை விரட்ட வேண்டாம்”
மேலுள்ள வசனங்கள் இதற்கு முந்தைய வசனத்தொகுதியில் குறிப்பிட்டதுபோல நபிகளாரின் சரிதையோடு இணைந்த விதத்தில் கருத்துரைக்கின்றன. தாய்-தந்தையை இழந்து அநாதையாக இருந்த நபிகளாரை அவரது பாட்டனார் அப்துல் முத்தலிபு, சிறிய தந்தை அபூதாலிபு ஆகியோரின் அரவணைப்பைப் பெற்றுக்கொடுத்து அநாதை என்ற ‘இழப்பு’ நிலையை உற்றார்-உறவினரின் அரவணைப்பு எனும் ‘இருப்பு’ நிலையாக மாற்றியமைத்தான். ஆகவே இந்த இறையருளை நினைவுகூரும் பொருட்டு சமூகத்தில் எந்தவொரு அநாதையையும் கடிந்து, வெறுத்தொதுக்காமல் அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை வழங்குவதோடு அவர்களுக்கு இந்த அத்தியாத்தின் ஒளியில் வாழ்வின் யதார்த்தம்பற்றி தெளிவுபடுத்துவது நபிகளாரின் பொறுப்பு என்பதை உணர்த்துகின்றன.
இதுபோலவே இவ்வசனத்தொகுதியின் அடுத்த வசனம் பொருளாதாரம், குடும்பம் போன்ற சமூகத் தேவையைப் பூர்த்திசெய்ய நாடும் ஒரு இளைஞன் என்ற நபிகளாரின் நிலையை அன்னை ஃகதீஜாவுடனான (ரழி) திருமணத்தின் மூலம் மாற்றியமைத்தான். ஆகவே, சமூகத்தில் எந்த மட்டத்திலும் உள்ள தேவையுடைய மக்கள் அவர்களாக தங்கள் தேவையை கேட்கும்பட்சத்தில் அந்த உரிமைகளை மறுக்காது, முடியுமான அத்துனை வழிமுறைகளிலும் முயன்று அதன் சிறுபகுதியையாவது நிறைவேற்றித் தருவது நபிகளாரின் மற்றுமொரு பொறுப்பு என்பதைச் சுட்டி நிற்கின்றது.
இவற்றையெல்லாம் செய்யவேண்டியதன் அவசியத்தை (وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ) “மேலும், உமது இறைவன் உமக்களித்துள்ள அருட்கொடைகளை நினைவுகூர்ந்து மக்களுக்கு எடுத்துரையுங்கள்” என்ற இறுதி வசனம் சாராம்சமாக சொல்லிக்காட்டுகின்றது. தமது வாழ்வின் சுழற்சிமிக்க அமைப்பை புரிந்துகொண்டு அதன் யதார்த்தத்தை உணர்ந்து இறைவனின் அருளின் புறத்தே தங்களை இணைத்துக்கொண்ட மனிதர்கள், இதனை உணராது சடவாத உலகில் தங்களது இம்மையோடு குறுகிய கண்ணோட்டத்தினூடே இவ்வுலக வாழ்வைக் கடிந்துகொண்டு, வேண்டா வெறுப்பாய் வாழ்ந்துகொண்டுள்ள மக்களுக்கு இந்த சூறா உணர்த்தும் வாழ்வின் சுழற்சிமிக்க போக்கு பற்றியும், அதில் ஓர் உண்மை அடியான் கொண்டிருக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். அது அவர்களின் தார்மீகப் பொறுப்பு என்று கூறுகின்றது. மேலும், ஏதோ ஒரு அருளின் அல்லது பல அருள்களின் இருப்பை (Existence) அனுபவிப்பவர்கள், அவற்றின் இழப்பினால் (Extinction) துயர்கொள்ளும் மக்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் சித்தரித்துக் காட்டுகின்றது.
ஆக வாழ்வில் எந்தவொன்றின் இருப்பு (Existence) குறித்தும் நாம் பெருமிதம் கொண்டு நம்மையும், நம் அரைகுறை ஆற்றலையும், குறை அறிவையும் நாமே மெச்சிக்கொள்ள வேண்டியதில்லை. அதுபோலவே எந்தவொன்றின் இழப்பு (Extinction) குறித்தும் நம்மை நாமே நொந்துகொண்டு நம்பிக்கை இழக்க வேண்டியதும் இல்லை. இருப்பிலும் இழப்பிலும் படிப்பினைகொண்டு அதனதன் யதார்த்தத்தை உணர்ந்து இறைவனின் புறம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதும், இத்தகைய புரிதலை சக மனிதனோடு பகிர்ந்து மனிதத்தை சடவாதப் பிடியிலிருந்து மீட்பதுமே ஈருலக வாழ்வின் ஈடேற்றமாக அமையும்.