காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சவூதி அறபியா ஃபலஸ்தீனுக்கு முழு ஆதரவு வழங்காதது ஏன்?

Loading

ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றொழிக்கும்போது அண்டை நாடுகள் கண்டன அறிக்கைகள் விடுவதைத் தாண்டி, இஸ்ரேலின் இன அழிப்பு நடவடிக்கையைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் பலருக்கும் இருக்கிறது.

அறபு நாடுகள் நேரடியாக, ராணுவ ரீதியான தலையீட்டைச் செய்திருக்க வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். உண்மை என்னவென்றால், தங்களுடைய ராணுவத்தை அங்கே போய் இறக்கித்தான் இஸ்ரேலைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதில்லை. தனக்கு இருக்கும் வேறு சில பலத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலை பணிய வைத்திருக்க முடியும்.

குறிப்பாக, மத்தியக் கிழக்கில் மிக பலமாக இருக்கின்ற சவூதி அறபியா ஏன் போதிய எதிர்வினைகூட ஆற்றவில்லை? அந்த நாட்டால் என்ன செய்திருக்க முடியும்? முடியும் என்றால் ஏன் செய்யவில்லை? இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைக்கு வரலாற்றில் ஏதேனும் முன்னுதாரணம் இருக்கிறதா? என்றெல்லாம்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

கஸ்ஸா போரையொட்டி, பல நாடுகள் இஸ்ரேலோடு தனது தூதரக உறவை, வணிக உறவை முறித்துக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் சவூதி அறபியா அப்படி எந்தப் பெரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் சவூதியின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், “இஸ்ரேலுக்கு பிற நாடுகள் ஆயுத ஏற்றுமதி செய்யக் கூடாது” என்று அறிக்கை விடுத்தார். இதுதான் தற்போதைய ஃபலஸ்தீன இஸ்ரேல் விவகாரத்தில் அவர் மேற்கொண்ட கடும் நடவடிக்கை!

இதற்கு எதிர்வினையாக, 2030ல் நடைபெறவுள்ள Expo சவூதியில் நடைபெறுவதை ஆதரித்துவந்த இஸ்ரேல் பின்வாங்கியது. இத்தாலிக்கு தன் ஆதரவை வழங்கியது. ஆனால், முந்தாநாள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்த Expo சவூதியில் நடப்பதற்கே பெரும்பாலான நாடுகள் வாக்களித்துள்ளன. போட்டியானது சவூதி, தென் கொரியா, இத்தாலி ஆகியவற்றுக்கு மத்தியில் நிலவியது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட முஹம்மது பின் சல்மானின் (MBS) அறிக்கையேகூட ஆச்சரியமளிக்கும் ஒன்றுதான். ஏனென்றால் சவூதி இஸ்ரேலுடன் நாளுக்கு நாள் நெருக்கமாகிக் கொண்டே இருப்பதாக ஃபாக்ஸ் நியூஸுக்கு MBS அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இந்த நவம்பரில் ஆப்ரஹாம் ஒப்பந்தம் செய்துகொண்டு இஸ்ரேலுடன் தூதரக உறவை, வணிக உறவை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அவரது மிகப் பெரும் ஆவலாக இருந்தது. ஆனால், தற்போதைய ஃபலஸ்தீனர்களின் போராட்டம், அதற்கு அறபு மக்களிடமுள்ள ஆதரவு, இஸ்ரேல் மீதான எதிர்ப்புணர்வு ஆகியவை அவருக்கு முட்டுக்கட்டையாக ஆகியுள்ளன.

MBS ஃபாக்ஸ் நியூஸுக்கு பேட்டி அளித்து ஓரிரு தினங்கள் கழித்து ஐநா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்ஹு தன் தூரநோக்கை அறிவிக்கும் பொருட்டு புதிய மத்திய கிழக்கு வரைபடத்தைக் காட்டினார். அதில் ஃபலஸ்தீன் என்ற நாடே இல்லை! இதுபோக, இஸ்ரேல் ஆப்ரஹாம் ஒப்பந்தம் வழியாக முஸ்லிம் நாடுகளான பஹ்ரைன், UAE, சூடான், மொரோக்கோ போன்ற நாடுகளுடன் எப்படி தன் தொடர்புகளை பலப்படுத்தியிருக்கிறது என்று பெருமிதத்தோடு சொன்னார். ஹமாஸ் தாக்குதல் தொடுத்த பின்னணியில் இன்று இவையெல்லாம் தற்காலிகமாகவேனும் முறிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஃபலஸ்தீனில் 15,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேலின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை சவூதி அரசால் தடுத்திருக்க முடியுமா என்ற ஒரு முக்கியமான கேள்வி நம் முன்பு இருக்கிறது. 1973ல் அறபு-இஸ்ரேல் போர் நடந்தபோது சவூதியை ஆட்சிபுரிந்த மன்னர் ஃபைசல் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தார். அது அவர்களுக்கு பொருளாதார ரீதியான அடியைக் கொடுத்தது. உலக அரங்கில் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தியது. இதுபோல் ஒரு சரியான, தாக்ககரமான நடவடிக்கையை MBS எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

முன்னதாக, சவூதியில் நடைபெறக்கூடிய மனித உரிமை மீறலை கனடா தூதுவர் விமர்சித்தார் என்பதால் அவர் கனடாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். கனடா உடனான ஆயுத ஒப்பந்தம் உள்ளிட்ட வணிக உறவை முறிக்கப்படுவதாக சவூதி கூறியது. இதைத் தொடர்ந்து கனடா சவூதியிடம் பணிந்தது. இதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர் கசோகி கொலை உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி சவூதியை தனிமைப்படுத்துவதாகச் சொன்னார். Paraiah state என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இதன் காரணமாக எண்ணெய் விலையை உயர்த்தியது சவூதி. இது அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்தது.

MBS தனது ஆட்சியின் மீது களங்கம் ஏற்படுவதை ஏற்பதாக இல்லை. அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பதை நான் மேலே குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளும் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், இதேபோல் ஃபலஸ்தீனுக்காக, கஸ்ஸா மக்களுக்காக MBS தன் பலத்தைப் பிரயோகித்தாரா என்றால் இல்லை. அவருக்கு அவையெல்லாம் முக்கியமே அல்ல என்பதைத்தான் அவருடைய தொடர் செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன.

Related posts

Leave a Comment