Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீன்-இஸ்ரேல் தற்காலிகப் போர் நிறுத்தம்: விளைவுகள் என்ன?

Loading

49 நாட்களுக்குப் பிறகு ஃபலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு நவம்பர் 24முதல் அமலுக்கு வந்துள்ளது. நான்கு நாட்கள் இந்தச் சண்டை நிறுத்தம் நடைமுறையில் இருக்கும்; இரு பிரிவினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அது நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாடானது இந்த ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றியது.

ஹமாஸ் தங்கள் வசமுள்ள பிணைக் கைதிகளில் 50 நபர்களை விடுதலை செய்ய வேண்டும்; இஸ்ரேல் தனது சிறைகளில் அடைத்துள்ள ஃபலஸ்தீனியர்களில் 150 நபர்களை விடுதலை செய்ய வேண்டும், நிவாரண உதவிகளை வழங்கும் 200 வாகனங்கள் தினமும் காஸாவிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும், காஸாவின் தென் பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை முழுமையாக நிறுத்த வேண்டும், வடக்கு காஸாவில் பகல் நேரங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தக் கூடாது என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபலஸ்தீன பூமியில் ஒரு மிகப்பெரும் இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம் ஃபலஸ்தீன மக்களுக்கு சிறிது ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலும் மிகப்பெரும் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டிய இந்தச் சண்டை நிறுத்தத்தை இஸ்ரேல் தேவையின்றி காலதாமதப்படுத்தியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அக்டோபர் மாதம் இறுதியிலேயே தொடங்கிய பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் மற்றும் ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதலின் காரணமாக பின்னடைவைச் சந்தித்தது. பிணைக் கைதிகளை எப்படியும் மீட்டுவிடலாம் என்ற அபார நம்பிக்கை இஸ்ரேலுக்கு இருந்துள்ளது. 2006இல் ஹமாஸ் இயக்கத்தால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்ட கிலாத் ஷாலித் என்ற ஒரு இராணுவ வீரனை மீட்க முடியாமல் 2011இல் 1024 ஃபலஸ்தீனியர்களை விடுதலை செய்ததை இஸ்ரேலியர்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.

‘பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம், பிணைக் கைதிகளை நாங்களே மீட்டுக்கொள்வோம்’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்த இஸ்ரேல் தற்போது சமாதானத்தின் பக்கம் இழுத்து வரப்பட்டுள்ளது என்பதே உண்மை. ‘வாய்ச்சொல் வீரர்’ பெஞ்சமின் நெதன்யாகு ஃபலஸ்தீனியர்களிடம் குறிப்பாக ஹமாஸ் அமைப்பிடம் அவமானப்படுவது இது ஒன்றும் முதன்முறை அல்ல. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சில பிணைக் கைதிகளும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது.

இந்தத் தற்காலிகச் சண்டை நிறுத்தம் ஏற்படுவதற்கு முன் 14,854 ஃபலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் நாற்பது சதவிகிதம் குழந்தைகள். ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காஸாவின் பல குடும்பங்களில் ஒரு நபர்கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். காஸாவில் உள்ள வசிப்பிடங்களில் ஐம்பது சதவிகிதம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

உணவு, மின்சாரம், மருத்துவ வசதிகள் போன்றன காஸாவில் முற்றிலுமாக இல்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘காஸா வாழ்வதற்கு தகுதியற்ற இடம்’ என்று இந்தத் தாக்குதலுக்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக முதலில் அறிவித்த இஸ்ரேல் பின்னர் 1200 என்று எண்ணிக்கையை குறைத்துக்கொண்டது. கொல்லப்பட்டவர்களின் விவரங்களை இதுவரை இஸ்ரேல் முழுமையாக வழங்கவில்லை. ஆனால், இஸ்ரேலால் படுகொலைச் செய்யப்பட்ட அனைத்து நபர்களின் பெயர்களையும் ஃபலஸ்தீனியர்கள் வெளியிட்டனர்.

காஸா மீதான தாக்குதலின் போது கொல்லப்பட்ட தனது இராணுவத்தினர் குறித்த விவரங்களையும் இஸ்ரேல் முழுமையாக வெளியிடவில்லை. ஏராளமான இராணுவ வாகனங்களையும் இஸ்ரேல் இழந்துள்ளது. வெறும் 367 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சிறு பகுதியில் வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தியபோதும் தனது இலக்குகளை இஸ்ரேல் அடையவில்லை.

இழப்புகளை இனியும் தாங்க முடியாது என்ற நிலையில்தான் போர் நிறுத்தத்தின் பக்கம் இஸ்ரேல் ஓடி வந்துள்ளது. பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் தரும் நெருக்கடிகளும் அரசியல்வாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே எழுந்துள்ள கருத்து மோதல்களும் இஸ்ரேலின் முடிவுக்குக் காரணமாகும். மிக முக்கியமாக, உலக நாடுகளில் ஃபலஸ்தீனிற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இதில் முக்கியப் பங்காற்றியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

நீதிக்காக எழுந்த மக்களின் குரலானது ஆட்சியாளர்களின் நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஃபலஸ்தீன் மீதான தாக்குதல் தொடங்கிய சில நாட்களிலேயே இஸ்ரேலுக்கு நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவித்தார் ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன். ஃபலஸ்தீனிற்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று கட்டுப்பாடுகளையும் விதித்தது ஃபிரான்ஸ். ஆனால் இவை அனைத்தையும் கடந்து அங்கு மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதன் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலை கண்டித்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது ஃபிரான்ஸ்.

உலகை ஏமாற்றுவதற்காகப் பல கீழ்த்தரமான வேலைகளிலும் இஸ்ரேல் இறங்கியது. ‘பொம்மைகளை வைத்துக் கொண்டு குழந்தைகள் இறந்ததாக ஃபலஸ்தீனியர்கள் நாடகமாடுகிறார்கள்’ என்று மனிதாபிமானமில்லாமல் பொய் சொன்னது தொடங்கி, ‘காஸாவின் மருத்துவமனைகளை ஹமாஸ் படையினர் தங்களின் தளமாக பயன்படுத்துகிறார்கள்’ என்பதுவரை பல பொய்களை கட்டவிழ்த்தனர். ஆனால் இவை அனைத்தையும் ஃபலஸ்தீனியர்களும், ஊடகவியலாளர்களும் உடைத்தெறிந்தனர்.

இந்தத் தாக்குதல் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதைக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூற இது ஒன்றும் கிரிக்கெட் போட்டி அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இஸ்ரேல் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே உண்மை. அக்டோபர் 7 தாக்குதலே இஸ்ரேலுக்கு மிகப்பெரும் பேரிடியாக இறங்கியது. உலகின் தலைசிறந்த உளவுப் பிரிவு, அதிநவீன கண்காணிப்புக் கருவிகள், வலிமையான இராணுவம் என்று பெருமையடித்துக் கொண்டிருந்த இஸ்ரேலுக்கு பலத்த அடியை அன்றைய தினம் ஃபலஸ்தீனியர்கள் கொடுத்தனர்.

‘வெல்ல முடியாதவர்கள் இஸ்ரேலியர்கள்’ என்று கடினப்பட்டுக் கட்டிய இஸ்ரேலின் பிம்பம் மீண்டும் ஒருமுறை தகர்க்கப்பட்டுள்ளது. காஸாவின் அனைத்து தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்டபோதும் இப்படியொரு தாக்குதல் நடைபெறுவதைக் கண்டுபிடிக்க இயலாத இஸ்ரேல், இனி எவ்வாறு கண்காணிப்பு மென்பொருட்களை உலகச் சந்தையில் விற்பனை செய்யப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அக்டோபர் 7 தாக்குதலுக்கு பதிலடி என்ற பெயரில் அக்கிரமத்தைக் கட்டவிழ்த்த இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தை அழிப்பது, பிணைக் கைதிகளை விடுவிப்பது ஆகியவற்றை தனது பிரதான இலக்காகக் கூறியது. ஆனால் பெண்களையும் குழந்தைகளையும் படுகொலைச் செய்ததை தவிர வேறொன்றையும் இஸ்ரேல் சாதிக்கவில்லை. இதற்கு முன்னர் நடத்தப்பட்டத் தாக்குதல்களின் போதும் ‘காஸாவில் இருந்து வரும் ராக்கெட்களை நிறுத்துவதே எங்களின் முக்கிய நோக்கம்’ என்று கூறித்தான் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது. ஆனால் ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னரும் ஹமாஸ் அமைப்பு முன்னேறியே உள்ளது. அதிகமான இழப்புகளானது ஹமாஸ் இயக்கம்மீது ஃபலஸ்தீனியர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்ற இஸ்ரேலின் கனவு அன்றும் நிறைவேறவில்லை, இன்றும் நிறைவேறவில்லை.

ஆனால், இம்முறை தாக்குதலை நடத்துவதுடன் ஃபலஸ்தீனின் காஸாவின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் திட்டமும் இஸ்ரேலிடம் இருந்ததை அதன் அணுகுமுறை உணர்த்தியது. காஸாவின் வட பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அங்கிருந்து மக்களை வெளியேற்றியது. தற்போது சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் வடக்கு பகுதிக்கு ஃபலஸ்தீனியர்கள் திரும்புவதை தடுக்கும் வகையில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சினையை ஃபலஸ்தீனியர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஹமாஸ் இயக்கத்தை அப்புறப்படுத்திவிட்டு காஸாவில் ஃபத்தாஹ் இயக்கத்தைக் கொண்டுவரும் முயற்சியில் சில அறபு நாடுகள் இறங்கியுள்ளனர். எகிப்தில் ஜனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளிய அப்துல் ஃபத்தாஹ் சிசி, இதில் முக்கியப் பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபலஸ்தீன மக்களின் எழுச்சி, குறிப்பாக ஹமாஸ் இயக்கத்தின் வளர்ச்சி, எங்கே மீண்டும் ஒரு அறபுலக வசந்தத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் அறபுலக சர்வாதிகாரிகளுக்கு அதிகமாகவே இருக்கிறது. இதற்காக இஸ்ரேலுடன் கைகோர்ப்பதற்கும் இவர்கள் தயங்குவதில்லை.

ஆனால், இந்நாடுகளில் அதிகரித்துள்ள ஃபலஸ்தீன ஆதரவானது ஆட்சியளர்களை சற்று ஆட்டம் காணச் செய்துள்ளது. ஐக்கிய அறபு அமீரகம், பஹ்ரைன், மொரோக்கோ, சூடான் என்று அடுத்தடுத்து அறபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தின. சஊதி அறபியாவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. இனி யாரும் ஃபலஸ்தீனைக் குறித்து பேச முற்படமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய நெதன்யாகு, ‘புதிய மத்தியக் கிழக்கு’ என்ற வரைபடத்தை தனது கைகளில் உயர்த்திக் காட்டியபோது அதில் ‘ஃபலஸ்தீனம்’ முற்றிலுமாக அகற்றப்பட்டிருந்தது. அறபுலகில் இருந்தும் ஃபலஸ்தீன விவகாரம் அகற்றப்பட்டு இஸ்ரேல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஹமாஸ் தாக்குதலை நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தது. இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை தொடங்கிய பஹ்ரைன் தற்போது தனது தூதரைத் திரும்ப அழைத்துள்ளது. அறபுலகில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் ஃபலஸ்தீன் முக்கிய இடத்தை தற்போது பிடித்துள்ளது.

21ஆம் நூற்றாண்டிலும் ஆக்கிரமிப்புத் தேசமாக இஸ்ரேல் தொடர்ந்து அடாவடிகளை நிகழ்த்திவரும் நிலையில் தற்போது ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது. ‘மத்தியக் கிழக்கின் ஒரே ஜனநாயக நாடு’ எனக் கூறிக்கொண்டே தடைச் செய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளும், மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும்கூட அதன் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. இந்நிலையில் வெறும் கண்டனங்களை மட்டும் வெளியிடும் ஐக்கிய நாடுகள் சபை இனியும் தேவையா என்ற முக்கியமான கேள்வியையும் ஃபலஸ்தீன விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

‘இது தற்காலிகச் சண்டை நிறுத்தம் தானே தவிர, போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை’ என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார். ‘இஸ்ரேல் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்கும்வரை நாங்களும் கடைபிடிப்போம்’ என்று ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியா கூறியுள்ளார். பிணைக் கைதிகளை மீட்ட பிறகு தாக்குதலை தொடரும் எண்ணம் இஸ்ரேலுக்கு இருக்கலாம். ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இழப்புகள் அதிகமாக இருக்கும்போதுதான் உலகம் அதனைக் கண்டு கொள்கிறது. அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தாக்குதல்களை நிறுத்த இயலாது.

  • சுதந்திர ஃபலஸ்தீன தேசத்தை உருவாக்க வேண்டும்.
  • இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும்.
  • காஸா மீதான தடைகளை நீக்க வேண்டும்.
  • இஸ்ரேலிய சிறைகளில் உள்ள ஃபலஸ்தீனியர்களை விடுதலை செய்ய வேண்டும்.
  • அகதிகளாக உள்ள ஃபலஸ்தீனியர்கள் நாடு திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இவைதான் ஃபலஸ்தீன மக்களின் நியாயமான கோரிக்கைகள். இவற்றிற்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகம் முன்வந்தால்தான் இந்தப் போர் நிறுத்தம் நிரந்தரமானதாக இருக்கும்.

Related posts

Leave a Comment