கவிதைகள் முக்கியப் பதிவுகள் 

போராடும் ஃபலஸ்தீன மக்களுக்காக ஐந்து கவிதைகள் — பீட்டர்

Loading

1.

“யுத்தம் நிறுத்து!” என்ற
பாப் மார்லியின் ‘ஒருநாள்’ பாடல்
உலகமுழுதும் பரவுகிறது இப்போது;
அதில் உண்மையின் கூறு உண்டு.
ஆனால், இந்த நாட்டில் யார் தொடங்கியது போரை?
எத்தனை ஆண்டுகள், எதற்காக?
யார் நிறுத்துவது?
வெறிகொண்ட சண்டைகளை போர் என்று
பெயர் இட்டு ஊதிவிட்டது யார் ?
அமெரிக்காவின் இசுரேலைத்தான் கேட்க வேண்டும்.
இதோ, ஏவுகணை வீச்சில்
ஆஸ்பத்திரியை அழித்து
ஐந்நூறு பேரைக் கொல்லுது
இனவெறி இசுரேல்.
எரிந்துபோன பெண்கள்
பீதியூட்டும் யுத்தக் காட்சி ;
மண்ணை முத்தமிட்டு மரிக்கும் குழந்தைகள்
பாசிசத்தின் யுத்த சாட்சி!

2.

மண் எரிந்தாலும்
நாட்டைவிட்டு ஓடமாட்டார் காஸா மக்கள்.
இத்தனைக் காலமும் ஆதரவாய்
அரபு மக்கள் நிற்பது எத்தனை உண்மையோ
அரபு ஆட்சி அதிகாரம் கேட்காது என்பதும்
பச்சை உண்மை.
இனிமேலும் இது கையறுந்த திகைப்பல்ல,
“எங்களைக் கொல்ல
உங்களால் முடியாது!” என்ற
என் தாயின் கைதிறந்த சாபம்!

3.

”இனி இது தொடரக்கூடாது”
சிறுவர்களின் எதிர்காலம் கேட்கிறது.
2000-ல் சிறுவன் முஹம்மது அத்துரானி கொலை தொடங்கி
“ஏவுகணையில் நாங்கள் சிக்குவது நிச்சயம்.
எனது பொருளெல்லாம் நண்பர்களுக்கு” என்று தீட்டிவைத்த
நேர்மை என்ற பொருள் கொண்ட ஹயா வரை
பதிவுசெய்த காலம் சொல்லும்:
” பலரை இழக்கிறோம்,
ஆனால் எல்லோரையும் அல்ல . “
நெடுநாளாய்ப் ஃபலஸ்தீன எரிமலை
குமுறுவது கேட்கிறதா,
அது சீறாமல் போகாது,
சீறாமல் தீராது!

4.

அமெரிக்க ஜால்ராக்கள் முதல்
‘அகண்ட பாரத மன்னர்’ மோடி வரை
ஸியோனிச இசுரேலுடன் கைகுலுக்குகிறார்கள்.
இவர்களின் பொது அடையாளம் என்ன?
கொத்துக்கொத்தாய் ஏவுகணைகளின்,
பாஸ்பரஸ் குண்டுகளின் கட்டியமும்
பின்னாலேயே நீளும்
ரத்தக்கறை படிந்த கைகளும்தான்!

5.

கத்தும் கடலும்
எரியும் நிலமும் வானமுமே சாட்சி,
கவனிப்போம்.
என்றோ, ஏதோ ஒருநாளில் அல்ல,
இன்றே நெஞ்சின் வெஞ்சினம் வெல்லும்,
பிறக்கும் இன்னொரு அறைகூவல்,
இது வேரிலிருந்து பிறக்கும் உயிர்க்கூவல்!

— பீட்டர்

(18.10.2023 முதல் 23.10.2023 வரை பதிந்தவை)

Related posts

One Thought to “போராடும் ஃபலஸ்தீன மக்களுக்காக ஐந்து கவிதைகள் — பீட்டர்”

  1. தமிழ்

    வரலாற்று உண்மைகளோடு, நாட்டின் நிலைய உயிர்கூவலாய் விளித்துள்ள தோழருக்கு வாழ்த்துக்கள்✨

Leave a Comment