‘கவிதையின் சமன்’ – மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023
“வெளிச்சம்
துக்கமாணுண்ணி
தமஸ்ஸல்லோ
சுகப்பிரதம்”
(வெளிச்சம்
துயரம்
இருள்
சுகமானது)
உடனே கூடுதல் ஒளிவெள்ள விளக்குள் அணைக்கப்பட்டன. ஒளிவெள்ளம் மட்டுப்பட்டது. இருளும் ஒளியும் சமப் பங்காளிகளான ஒரு கவிதா முகூர்த்தத்தில் மலபார் இலக்கியத் திருவிழா தொடங்கியது.
மலபார் இலக்கியத் திருவிழாவின் தொடக்க உரைக்காக மேடைப்பீடத்தின் முன்வந்து நின்ற கேரள முஸ்லிம் லீக் தலைவரான சாதிக் அலீ ஷிஹாப் தங்ஙள், வெள்ள விளக்குகளின் ஒளிர்வும், சூடும் பொறுக்கவியலாமல் சொன்ன மலையாளக் கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரியின் கவிதைதான் இது.
நான்கு நாட்கள்; எழுபத்தொன்றுக்கும் மேற்பட்ட அரங்குகள்; ஒரே நேரத்தில் மூன்று அமர்வுகள். இரவில் கஸல், கவ்வாலி இசையரங்குகள், சந்திப்புகள் என நதி தன் ஓட்டத்தைத் தொடங்கியது.
இரண்டாம் நாளில் கொஞ்சம் அமர்வுகள்; நிறைய காணுதல்கள். மூன்றாம் நாளில் எனக்கான இரு அமர்வுகள் முடிந்தபிறகு பத்து நாள் உழைப்பின் அயர்ச்சி அதன் மொத்த பாரத்துடன் உடலையும் மனத்தையும் ஒருங்கே அழுத்திட எங்கேயாவது உட்கார வேண்டுமெனத் தோன்றியது. நிலத்தையும் கதிரவனையும் ஒன்றுபோல தொட்டுக்கொண்டு சிறு வரவும் போக்கும் கொண்ட கோழிக்கோட்டின் அலைவாய்க்கரையில் அமர்ந்தேன். விழா அரங்கிலிருந்து சில அடிகள் தொலைவே கடல். அந்தியின் மங்கல மங்கல். கடற்கரை மண் என்பது உயிர்வளியின் பரு வடிவம். முத்தொடுதலில் ஆயாசங்கள் கரைந்தழிந்தன. வீட்டின் முற்றத்தில் வெறுந்தேயிலை குடிக்கும் அணுக்க நினைவு. கடற்கரை மணலை உதறிவிட்டு எழும்போது ஊர் கடற்கரையிலிருந்து வீடு திரும்பும் பொழுதைத் தவிர இன்னொரு நிலத்தின் அந்நியத்தன்மை அனுபவப்படவேயில்லை. கிழக்குக் கடற்கரையும் மேற்குக் கடற்கரையும் தங்கள் திசைகளை நழுவவிட்ட நேரம்.
மலையாளத்தின் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவரான பி.ஆர். நாதன் சொல்வார், “உங்களது வீட்டிற்குள் ஒரு நீர் நிலையின் இருப்பை உணர வேண்டுமெனில் சிறிய பாத்திரமொன்றில் நீரை இட்டு நிரப்பி அதை உங்கள் மேசையில் வையுங்கள்”.
ஒவ்வொரு வருடமும் பெய்யும் பருவ மழையின் நீரை ஒரு குப்பியில் அடைத்து பேழையின் மீது வைப்பதுண்டு. கூடவே என் படுக்கையறையில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஒழுகும் பச்சையாறு, சிறுவாணியாறு, தலையணையருவியின் மலைப் பிஞ்சுகளுடன் எங்களூர் மன்னார் வளைகுடாவில் கரை ஒதுங்கும் வடிவான கடற்பொருட்களும் உண்டு. அடுக்கப்பட்ட இவைகளுக்கு மேல் அமர்த்தப்பட்ட ஓரடி நீள மர வள்ளமும் சேர்ந்து எப்போதும் ஒரு மிதத்தல் நினைவை உண்டுபண்ணிக் கொண்டேயிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின் ஹள்றமவ்த்திலிருந்து பசிபிக் பெருங்கடலின் நீர்த்திறப்பான மலாக்கா நீரிணை வரையுள்ள பெரும் வரலாற்றிலிருந்து அள்ளப்பட்ட ஒற்றைத் துணிக்கை.
தமிழ்நாட்டு, கேரள முஸ்லிம்களின் வேர்களானது கண்டங்கள் கடந்தவை என வரலாற்றை முன்னிறுத்தி சொல்லிடும்போது, “முஸ்லிம்கள் அந்நியர்கள் என்ற இந்துத்துவ நாஜிக்களின் பரப்புரைக்கு நீங்கள் வலு சேர்க்கிறீர்கள்” என சில நண்பர்கள் பதறுகிறார்கள்.
அந்நிய இறக்குமதி கருத்துருவான தேசத்தையும், தேசியத்தையும் தெய்வமாகத் தொழும் தேசபக்தி என்பது செயற்கையானது; இயல்புக்கு எதிரானது. காலங்காலமாய் ஒன்றாய் வாழ்ந்திருந்த மக்களை வெட்டிப்பிளந்த மனிதகுல பகைக் கருத்தாக்கமது. அதற்கு எதிராக நிற்பதும் மக்களை வேறுபாடுகள் கடந்து ஒருங்கிணைப்பதும்தான் இன்றைய காலத்தின் முதல் தேவை.

மலபார் இலக்கியத் திருவிழாத் திடலின் தலைவாயிலில் பாய்மரக் கப்பலொன்று பளபளத்தவாறு நிறுத்தப்பட்டிருந்தது. அது மலபார் இலக்கியத் திருவிழாவின் மையப்பொருளான கடலினைச் சுட்டிடும் படிமம். திரை, துறை, தீரம் என மூன்று உட் தலைப்புகள். இன்றைய இருள் பரவும் அரசியல் சூழலில் மக்களை ஒருங்கிணைக்கும் கருப்பொருளைத் தேர்ந்தெடுத்த மலபார் இலக்கியத் திருவிழா ஏற்பாட்டாளர்களின் தெளிவையும், கூர்நோக்கையும் பாராட்ட வேண்டும்.
யுனெஸ்கோவின் படைப்பூக்க நகரங்களின் பட்டியலில் இலக்கியத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் கோழிக்கோடு என்ற பெருமையைப் பெற்ற பிறகு கோழிக்கோடு நகரம் காணும் முதல் இலக்கியத் திருவிழா இது.
மூன்று மாதங்களுக்கு முன்பு மலபார் இலக்கியத் திருவிழாவின் அறிவிப்பு வந்தவுடனேயே போக-வர என தொடர்வண்டிக்கான முன்பதிவை செய்துவிட்டேன். இலங்கை கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்றை சேர்ந்த நண்பரும், கவிஞரும், பதிப்பாளருமான சிராஜ் மஷ்ஹூரும் பின்னர் பயணத்தில் இணைந்துக் கொண்டார். அத்தனை வேலைப் பளுவிற்கிடையில் தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து வரவேற்று, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தந்தார் இலக்கியத் திருவிழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ஃபாரூக் பாவா.

அறபுத்தமிழ் — சோழமண்டலக் கரையின் பண்பாட்டு முத்திரைகள், மஅபரும்—மலபாரும் என எங்களுக்கு இரு அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மலையாளத்தின் வேர் தமிழ் என்பதைப் போல அறபுமலையாளத்தின் மூலமும் அர்வி எனப்படும் அறபுத்தமிழ்தான். சோழமண்டலக் கடற்கரையோர முஸ்லிம்களின் வரலாற்றுப் பெட்டகமே அர்வி மொழி இலக்கியங்கள்தான். அர்வியின் அன்றாடத் தேவை இன்றில்லாவிட்டாலும் அது சுமந்திருக்கும் வரலாற்று கனிமங்களுக்காக, ஆயிரமாண்டு காலமாக நாகரிகங்கள் செய்துவந்த வரவு-செலவிற்காகவேணும் அது பாதுகாக்கப்பட வேண்டும். இன்றைய மலபார் என்றறியப்படும் வட கேரளத்திற்கு மட்டுமில்லை, தென் கேரளத்திற்கும் தமிழ்நாட்டு கரைகளுக்குமான உறவு பழையதும் ஆழமானதும் கூட. தென் கேரளத்தில் ஹனஃபி மத்ஹபைச்( சிந்தனைப்பள்ளி) சேர்ந்த தமிழ்நாட்டு இராவுத்தர்களின் பங்களிப்பு மகத்தானது. மலபார்—மஅபர் கரைகளுக்கிடையே உள்ள ஸூஃபி முரீது மரபுகள் செழிப்பானவை.
நாங்கள் தமிழிலேயே உரையாட ஏற்பாட்டாளர்கள் இசைந்தபோதிலும் பார்வையாளர்களின் தாய்மொழி மலையாளம் என்பதால் உடைந்த மலையாளத்தில் சொல்லி முடித்துவிட்டேன். நேரப் பற்றாக்குறைவினால் எல்லாவற்றையும் சொல்லிட இயலவில்லை. எனினும், சகப் பங்கேற்பாளர்களின் பங்களிப்புடன் எல்லாம் குறைவற நடந்தேறின. அல்ஹம்துலில்லாஹ். பொதுவாகவே இலக்கியத் திருவிழாவிலிருந்து கவனத்தைச் சிதறடிக்கும் எதையும் நான் செய்யாததினால் எதுவும் விட்டுப்போன உணர்வில்லை.
இலக்கியத் திருவிழாவின் நிகழ்ச்சிநிரல் முழுக்க மலையாளத்தில் இருந்தது. நான் ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி வாசிப்பதற்குள் கிழக்கு வெளுத்துவிடும். எனவே, உள்ளூர் நண்பரொருவரைக் கூப்பிட்டு ஒவ்வொரு நிகழ்வாக வாசிக்கச் சொன்னேன். போக வேண்டும் எனத் தீர்மானித்தவைகளுக்கு நேரே குறியிட்டுக் கொண்டேன். மாப்பிளாப் பாட்டு, இலட்சத்தீவு, பயணம், இலக்கியம், காலனிய நீக்கம், புதிய வகைமை என வரிசைப்படுத்திக் கொண்டேன்.
பிஸ்மி சொல்லி போய் அமர்ந்தது மாப்பிளா இலக்கியத்தில் நுழைபுலம் கொண்ட மறைந்த ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வள்ளிக்குன்னு நினைவரங்கம்.
‘பக்தியினதும் எதிர்ப்பினதும் கலவை மாப்பிளாப் பாட்டு. அறபு, இஸ்லாமியம், திராவிடம், கேரளியம், ஸூஃபியம் என ஐந்தும் கொண்டதுதான் மாப்பிளாப் பாட்டு. அது ஓர் ‘எதிர்ப்பின் மொழி’ என இதற்கு மேல் அழுத்தினால் சொல் உடைந்து போய் விடக்கூடிய பளிச்சென்ற மலையாள உச்சரிப்பில் பேரா. சக்கீர் ஹூஸைன் உரைத்தார். ‘படைப்புகளில் கப்பல்’ பற்றிய அரங்கில் ‘அறபுமலையாளம் என்பது கப்பலின் உருவகம் ‘ என இலட்சத்தீவின் முதல் நாவலாசிரியர் இஸ்மத் ஹூசைன் ஜசரி மொழி கலந்த மலையாளத்தில் பாந்தமாகச் சொன்னார்.
எழுத்தாளர் இஸ்மத் ஹுசைனை கடந்த மூன்று வருடங்களாக தொலைபேசியில் மட்டுமே அறிந்திருக்கிறேன். ஏழு கடல்களுக்கப்பால் வாழும் பவளத்தீவுக் கூட்ட மனிதர்கள் இவர்கள். முயன்றாலும் சந்திப்புக்கான வாய்ப்பு குறைவான இவரையும், இவருடன் இலட்சத்தீவிலிருந்து வந்திருந்தவர்களையும் சந்திக்கும் அரிய தருணத்தை மலபார் இலக்கியத் திருவிழா வழங்கியது. இவருடன் வந்திருந்தவர்கள் வலுவான அணியினர். முன்னா, சலாஹுத்தீன் என்ற இலட்சத்தீவின் பண்பாட்டுத் தூதுவர்கள். பெரு நிலத்துக்காரர்கள் இலட்சத்தீவை அறியும் வகையிலும், இரு நிலங்களுக்கும் இடையே நெருக்கத்தையும் புரிதலையும் ஏற்படுத்தும் வகையில் வலையொலியினூடாக (பாட்காஸ்ட்) தொடர்களை ஒலிபரப்பி வருகின்றனர். பத்மஸ்ரீ அலீ மனிக்ஃபான் அவர்களையும் விழா அரங்கில் காண நேர்ந்தது ஒரு பேறுதான். கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு இலட்சத்தீவிலிருந்து நான் சந்தித்த தங்ஙள் அல்லாத முதல் ஆள் அவர். இயற்கை அறிவியலாளர். எண்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டிருந்தார். வயது ஆளை நன்கு தளர்த்தியிருந்தது. அறிதலின் நவீன வரையறையை கலைத்தவர். கண்டுபிடிப்புக்களின் மனிதர். வெளிப்படுத்திக் கொள்ளாத ஸூஃபி.
இலட்சத்தீவிற்காகப் பல அரங்குகள் ஒதுக்கப்பட்டிரு ந்தன. அதில் ஒரு அரங்கில் பங்கேற்பாளர்களுடன் நெறியாளுநரும் இலட்சத்தீவுக்காரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை இலக்கியத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர். அவர்களின் பிரச்சினையை புற நிலத்தினர் புரிந்துகொள்வதிலுள்ள குறைபாட்டை மனத்தில் கொண்டதோடு இலட்சத்தீவின் குரல் சேதாரமின்றி முழுமையாக ஒலிக்க வேண்டும் என அவர்கள் விரும்பியதும் ஒரு காரணம்.
அது, “ இலட்சத்தீவுக்காரர்களுக்கும் கேரளத்துக்கும் மொழி,பண்பாடு என பல வகைகளில் பெரும் ஒற்றுமைகளும் நெருக்கங்களும் இருக்கிறது. இதைக் காரணமாக வைத்து கேரளியருக்கு வகுக்கப்பட்ட பாடத்திட்டத்தை இலட்சத்தீவிலும் அறிமுகப்படுத்திவிட்டனர். ஆனால், நாங்கள் கேரளியரில்லை. இந்தப் பாடத்திட்டத்தினால் நாங்கள் கடலைப்பற்றிய, எங்கள் நிலத்தைப்பற்றிய, எங்களின் சூழலைப்பற்றிய, எங்கள் ஜசரி மொழியைப்பற்றிய அறிவை தவற விட்டுவிட்டோம்.” எனக் குறைவற வெளிப்படுத்தப்பட்டது. சரம் அட்டியின்றி பொழிந்தது. முழுவதையும் வலையொளியில்தான் கேட்க வேண்டும்.
நான்கு நாட்களும் கருத்துப்பரிமாற்றங்களுடன் புதிய உறவுகள், அறிமுகங்கள், இலக்கியம், இசை, நாட்டார் மரபு, எதிர்ப்பிலக்கிய வடிவங்கள், தென் கிழக்காசிய உறவு, வைக்கம் முஹம்மது பஷீர், தவறாக மேற்கோள் காட்டப்படும் மௌலானா ரூமி, பயணம், எழுத்தணி, அச்சுப்பண்பாடு, வரலாறு, திரைப்படம், ஹிஜாபு, அரசியல் சட்டம், சாமானியரின் புத்தக வாசிப்பு, இருண்ட சுற்றுலா, கீழைத்தேயம், கவிதை, நாடகம், ஃபலஸ்தீன், காலனிய நீக்கம், காலனியத்துக்கு முந்திய மலபார் பொருளாதாரம், உடல் நலம், அறபுமலையாளம் என கிளர்த்திடும் அமர்வுகள், தமிழ் மலையாளக் கரைகளின் இணைப்பு, தரீக்காக்களையும் இடங்களையும் ஓசைகளையும் ஆய்ந்திட முனையும் இளம் ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆசிரியர் மூலம் தமிழ் கற்கும் நண்பர், அரிய மனிதர்கள், சராசரி வேடத்திற்குள் கலந்து வாழும் ஞானாசிரியன்கள் என ஒரு மனிதனால் ஒரு வருட நேரத்தால் அள்ளி முடிந்திட இயலாத அளவிற்கு கனிக்குவைகள் அவை.

எழுத்தாளர்கள் டி.டி. இராமகிருஷ்ணன், பி.கே. பாரக்கடவு, ஜமால் கொச்சங்காடி, அப்துர் ரஹ்மான் மங்காடு உள்ளிட்ட பல மூத்த முத்திரை எழுத்தாளர்களின் வரவால் கனம் இன்னும் கூடிற்று. பாலின் மேல் படியும் திரட்டாக நண்பர்கள் அப்துல் மஜீத் நத்வி, அஷ்ரஃப் மக்கட, அஃபீஃப், பாஸில் இஸ்லாம், ஷஹீதா காத்தூன், உவைஸ் அஹ்மது, தமிழர் ராக் சாலிஹ், மன்சூர் நெய்னா, சுமய்யா முஸ்தஃபா, சுல்தான் பாகவி, கோம்பை அன்வர், மிடாலம் அன்சார், செய்தாலீ, ஷாஹுல் ஹமீது , அஃப்ழல், சேவுசைன், அனஸ் பாபு, முஹம்மது அர்ஷத் என ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தனர்.
இலக்கியத் திருவிழாவின் தாரகை பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த தொல் திருமாவளவன், கனிமொழி ஆகிய இருவருமே வரவில்லை; காரணங்கள் விளங்கவில்லை. இவர்களை அழைத்தது நல்லதொரு தேர்வு. வாசிப்பும், ஆழமும், தெளிவும் உள்ள தலைவர்கள். வந்திருந்தால் விழாவின் அரசியல் பரிமாணத்தில் கூடுதல் மினுக்கம் சேர்ந்திருக்கக்கூடும்.
பொதுவாக நான் பார்க்கும் இலக்கியப் பெருங்கூடல்களும், இலக்கியப்பீடங்களில் நடக்கும் உரைகளும், அளிக்கப்படும் விருதுகளும் ஆட்சியாளர்களைக் குளிர்விக்கும் பஜனைகள், அரசியல் நீக்கம் செய்யப்பட்ட படைப்புகள், படைப்பாளிகளை விதந்தோதுதல், தூக்கிப்பிடித்தல் எனப் பலவாறாக சீரழிகின்றன. சிறிய அளவில் நடக்கும் இலக்கியக் கூடல்கள் பெரும்பாலும் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றன. ஆனால், மலபார் இலக்கியத் திருவிழா அந்த பெரும்போக்கின் எதிர்த் திசைப் பயணியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.
மலபார் இலக்கியத் திருவிழாவின் அமர்வுகளில் பெரும்பாலானவை அரசியலாலும், பண்பாட்டாலும், புதுமையாலும் மனத்திற்கு நெருக்கமாக நம்மோடு உடன் நிற்பவை. அருகமையிலிருக்கும் கடலின் உப்புக் காற்றுக்குள் கதிரவனின் வெப்பம் ஏறும்போது ஒன்றுஞ் செய்யாமலேயே உடல் சோர்வடைகிறது. அமர்வுகளுக்குள் மனம் சேர மாட்டேனென்கிறது. இந்தக் கடல் தீரத்தைவிட்டால் இதைவிட கூடுதல் பொருத்தமுள்ள இடம் கிடைப்பதென்பதும் சாத்தியமில்லை. என்ன செய்யட்டும் கடலில்லாமல் சுந்தரன்களும் சுந்தரிகளுமில்லையே.
இத்திருவிழாக்களில் பங்கெடுக்க தொலைவிலிருந்து வருபவர்களுக்கு தங்குமிடமும் எல்லோருக்கும் உணவும் குறைந்த விலையில் ஏற்பாடு செய்தால் தயக்கமில்லாமல் முழு நிகழ்வுகளிலும் பங்கேற்கவியலும். உணவிற்கென அருகமையில் மலிவு விலைக் கடைகள் இல்லை. அங்கிருந்த ஒரே ஒரு கடையில் சிறுகடியுடன் தேநீர் மட்டுமே கிடைத்தது.
முப்பது வருட காலமாக வந்துபோகும் ஊரென்றாலும் வேகவைத்த வாழைப்பழத்தைப் பிசைந்து மாவில் முக்கி பொறித்தெடுக்கப்படும் உண்ணக்காய், முழு வாழைப்பழத்தை வேக வைத்துக்கீறி அதற்குள் தேங்காய்ப்பூ, வெல்லம், அவல் அடைத்து பொரித்தெடுக்கப்படும் ‘பழம் நிறச்சது’ என்ற இரண்டு பழப் பலகாரங்கள் முதன்முறையாக இப்போதுதான் உண்ணக் கிடைத்தது. கட்டஞ்சாயா அல்லது பால் சாயாவுடன் சிறு துண்டங்களாக நறுக்கப்பட்ட இப்பழக்கடிகளை யாருடனும் ஒற்றைச்சொல் கூட உதிர்க்காமல் வேறு முகமெதுவும் பார்க்காமல் கடலே நீ மட்டும்தான் என்ற உச்சாடனத்தைச் சொல்லி சன்னஞ்சன்னமாக உள்ளே இறக்கினால் மட்டுமே அந்தச் சுவைக்கு நிலை பேறுண்டு.

இலக்கியத் திருவிழாவிற்கென போதிய அளவிலான பயிற்றுவிக்கப்பட்ட மாணவத் தொண்டர்கள், நல்ல திட்டமிடல் என முதல் முயற்சி மின்னியது. தொப்பி, தலைப்பாகை, முழு நீள ஜிப்பா என இளம் மார்க்க அறிஞர்கள், மாணவர்கள், புர்கா அணிந்த பெண்டிர் என எல்லா இடங்களிலும் தென்பட்டுக் கொண்டேயிருந்தனர். இவர்கள் வெறும் பார்வையாளர்களில்லை. மலபார் இலக்கியத் திருவிழாவின் பங்கேற்பாளர்களும், பங்களிப்பாளர்களும் கூடத்தான். இந்தியாவின் ஏனைய நிலப்பரப்பினர் இதை எட்டுவதற்கு இன்னும் பல பத்தாண்டுகளாவது செல்லும் போல.
ஒவ்வொரு சமூகத்தினரும் சாதி, மத அடிப்படையில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினால் மட்டுமே தங்கள் சமூக மாணவர்களுக்கு போதிய இடங்கிடைக்கிறது என்ற பருண்மை இலக்கிய நிகழ்வுகளுக்குள்ளும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுவது வேதனையளிக்கும் விசயம்தான். மலபார் இலக்கியத் திருவிழாவுமே நீண்ட ஒதுக்கலினால், சமூகம் தனக்குத்தானே கண்டெடுத்த விடைதானே. ‘எங்கள் இலக்கிய முதுசொங்களை இறக்கி வைப்பதற்கும், புதியதாய் சுட்ட பணியாரங்களைக் கடை விரிப்பதற்கும் ஈரடி இடந்தாருங்கள் எஜமானே!’ என்ற மன்றாட்டுகளிலிருந்து விடுதலை. இது நம்ம இடம் என்ற உணர்வு அளிக்கும் விசாலமும் தன்னுணர்வும் மகத்தானது.
இலக்கியத் திருவிழாவில் சில சமரசங்கள், கொஞ்சம் விட்டுக் கொடுப்புகள் என மாற்று அணியில் உள்ளோரிடமிருந்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சன நெருப்பு பறந்தது. தன் விமர்சன ஏற்பு, தனக்குத்தானே பழுது நீக்கிக்கொள்ளும் பொறியமைப்பு என எல்லாவற்றையும் செவ்வனே கடக்கும் முதிர்வு வாய்க்கப்பெற்றவர்கள் இவர்கள். எனவே இறை நாட்டத்தால் எல்லாம் செவ்வனே தாண்டிப் போகும்.
இறுதி தினமான நான்காம் நாள், டிசம்பர் 03 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு நிறைவு நிகழ்வு. பிரிவின் சாட்சியாக இருப்பதைவிட துயர் மிக்கது எது?
எல்லாம் நிறைந்திருக்க விழாத் திடலிலிருந்து விடை சொல்லிவிட்டுக் கிளம்பும்போது என் நண்பரும் மலபார் இலக்கியத் திருவிழாவின் தலையாய ஆலோசகர்களில் ஒருவருமான எம். நவ்ஷாதிடம், ” நவ்ஷாதே! கோழிக்கோட்டின விட்டுப்போகான் மனசில்லப்பா” என்றவுடன் “பஷீர்க்கா இங்கே ஒரு மனைவியைக் கட்டிக் கொள்” என்றார் அவர். இரண்டு படகுகளில் கால் வைக்கலாம்தான். ஆனால் படகுகளும் கடலும் மட்டும்தானே மிஞ்சும். பரவாயில்லையா?
கடைசி பத்தியில் இருக்கு பஞ்ச்!
மிக அற்புதமான பதிவு.நேரில் அனுபவித்தையும், கவனிக்க தவறியதையும் தனக்கே உண்டான பாணியில் கவித்துவமாக பதிவு செய்து உள்ளார் எழுத்தாளர் சாளை பஷீர்.
தகவல் தெரியவில்லை அடுத்தமுறை கலந்து கொள்ள வேண்டும் நிச்சயமாக…!